2 Aug 2021

சுந்தர ராமசாமியின் ‘கவிமணி நினைவோடை’ – ஓர் எளிய அறிமுகம்

சுந்தர ராமசாமியின் ‘கவிமணி நினைவோடை’ – ஓர் எளிய அறிமுகம்

            நான் பள்ளி படித்த காலத்தில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையைத் தெரியாமல் யாரும் பள்ளிப் பிராயத்தைத் தாண்டியிருக்க முடியாது.

                        “தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு – அங்கே

                        துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி

                        அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன்

                        அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி”

என்ற பாடலைக் கடந்து அந்தப் பாடலைப் பாடிக் கொண்டு வீடு வந்து சேர்ந்த நாட்கள் அவை. இந்தக் கவிமணியின் பாடல் அப்போது மனதுக்குள் மொய்த்துக் கொண்டிருக்கும். தினசரி வகுப்புகள் இந்தப் பாடலைப் பாடியபடிதான் அப்போது துவங்கும். அது நன்றாக ஞாபகம் இருக்கிறது.

            தொடக்கப் பள்ளியின் முதல் வகுப்பு தொடங்கி அடுத்தடுத்த வகுப்புகளைக் கடக்கும் போது

                        “காலை மாலை நிதம்

                                    காற்று வாங்கி வருவோரின்

                        காலைத் தொட்டுக் கும்பிட்டுக்

                                    காலன் ஓடிப் போவானே?”

என்ற கவிமணியின் வரிகள் அறிமுகமாக அதைப் பாடிக் கொண்டு ஓடுவது மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது.

                        “உடலில் உறுதி உடையவரே

                                    உலகில் நிறைய உடையவராம்

                        இடமும் பொருளும் நோயாளிக்கு

                                    இனிய வாழ்வு தந்திடுமோ?”

எனத் தொடங்கும் அப்பாடலின் வரிகள் பள்ளி வயதைக் கடந்தும் மனதில் நிலைத்த வரிகள். எளிமையான வரிகளில் எவ்வளவு வலிமையான கருத்துகள் என்று இப்போதும் நினைத்து நினைத்து ஆச்சரியம் தளும்புகின்ற வரிகள் அவை. இப்படிப்பட்ட கவிதாளுமையை

“அவருக்கு எக்ஸிமா நோய். பார்க்க வருகிறவர்களுக்குக் கஷ்டமாக இருக்கக் கூடாது என்பதற்காக கைகள் உட்பட உடம்பு முழுமையாகப் போர்த்தி வைத்திருந்தார்கள்”[1]

என சுந்தர ராமசாமியின் கவிமணி குறித்த நினைவோடை நூலில் படித்த போது அதிர்ச்சியாக இருந்தது.

“எத்தனை நாட்களுக்குத்தான் நான் இப்படிக் கிடந்து கஷ்டப்படப் போகிறேனோ?... இன்னும் அழைப்பு வரவில்லை… போய் வாருங்கள்”[2]

என்று சுந்தர ராமசாமி குறிப்பிடும் இடமும் நோயின் உக்கிரம் குறித்த கவிமணியின் சிரமத்தைக் காட்டக் கூடியதாகும்.

            கவிமணியின் இளமை மற்றும் மத்திம காலங்கள் சாதாரணமாக இருந்ததும் அதற்குப் பின் அவர் புகழ் பெற்றதையும்

“நாற்பத்தைந்து, ஐம்பது வயது வரை பெரிய அளவுக்கு பேர் ஒன்றும் உருவாகவில்லை. அதன்பின் உள்ள பதினைந்து வருட வாழ்க்கை தலைகீழாக மாறி விட்டது. இப்படி கடைசி காலத்தில் புகழ் பெற்ற கவிஞர் அபூர்வமாகத்தான் இருந்திருப்பார்கள்.”[3]

என்று சுந்தர ராமசாமி சுட்டிக் காட்டுகிறார்.

            கவிமணியைக் கௌரவப்படுத்திப் பிரபலப்படுத்தியவர் ரசிகமணி எனப் புகழப்பட்ட டி.கே.சி. எனப்படும் டி.கே. சிதம்பரநாத முதலியார். டி.கே.சி. பலரிடமும் பல இடங்களிலும் கவிமணியைச் சிலாகித்தும் ரசித்தும் பேசிய பின்னர் கவிமணி நாஞ்சில் நாட்டைத் தாண்டி தமிழ்நாடு முழுவதும் பெற்ற புகழ் அதிகம். அது நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கத்துக்குக் கிடைத்திருக்க வேண்டிய புகழினும் அதிகம் என்றும் சுந்தர ராமசாமி நினைவோடையில் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

            கவிமணியின் காலத்தில் அனைத்து அரசியல் மற்றும் இலக்கிய ஆளுமைகளும் அவரை வீடு தேடிச் சென்று சந்தித்திருக்கிறார்கள். அவருடன் அளவளாவியிருக்கிறார்கள். தமிழகத்தின் காமராசர், ராஜாஜியிலிருந்து கேரளத்தின் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் வரை மிகப் பெரிய அரசியல் ஆளுமைகள் அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். திரை ஆளுமைகளான சிவாஜி, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோரும் கவிமணியைச் சந்தித்து அவர் மேல் தனித்த அபிமானம் கொண்டிருந்திருக்கிறார்கள். இதில் என்.எஸ்.கே.யுடனான கவிமணியின் உறவைப் பற்றி இந்நூலில் சுந்தர ராமசாமி பேசியிருக்கிறார்.

            வட்டார மொழி வழக்கில் கவிமணி படைத்தளித்த ‘மருமக்கள் வழி மான்மியம்’ என்று நூலைச் சுந்தர ராமசாமி ‘கவிதை நாவல்’ என்று அறுதியிடுகிறார். கவிமணியின் இந்நூலுக்கும் புதுமைப்பித்தனின் எழுத்துக்கும் ஒத்துப் போகக் கூடிய அம்சங்கள் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

            கவிமணியின் கவிதையும் புகழும் தமிழ்நாடெங்கம் பரவிய அளவிற்கு அவரது வெளியுலகத் தொடர்புகள் அமையவில்லை. அவரது வெளியுலகத் தொடர்பு பலஹீனமானது என்று இது குறித்து சுந்தர ராமசாமி மதிப்பிடுகிறார். இது குறித்து அவர் குறிப்பிடும் போது

“அவரைப் போய் ஆட்கள் பார்ப்பார்களே தவிர, அவர் யாரையும் போய் பார்த்ததில்லை.”[4]

என்கிறார். கவிமணிக்குப் பொதுவான குணமாக எவரையும் உயர்த்திப் பார்க்கும் மற்றும் உயர்த்திப் பேசும் குணப்பாடு இருந்திருக்கிறது. எல்லாரையும் உயர்வாகப் பார்த்தாலும் அவருக்குள்ளும் திட்டவட்டமான விமர்சனங்கள் இருந்தன என்றும் அதைப் பற்றி அதிகம் பேசாமல் மனதுக்குள் வைத்திருந்தார் என்றும் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். மேலும் ஓரிடத்தில் கவிமணியைப் பற்றிக் குறிப்பிடும் போது

“ஓரளவு சின்னக் குழந்தை போல்தான் வாழ்ந்திருக்கிறார்.”[5]

என்கிறார். என்ற போதிலும் கவிமணி மிகச் சிறந்த தமிழாய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். மிகச் சிறந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளராகத் திகழும் அளவுக்குப் புலமையோடு இருந்திருக்கிறார். குழந்தைகளுக்கான பாடலை அவரளவுக்கு எளிமையாக வேறு யாரும் எழுதியதில்லை எனும்படியான புகழுக்குச் சொந்தக்காரராக இருந்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டில் சென்னை மாகாண ஏழாம் தமிழ் மாநாட்டில் ‘கவிமணி’ என்ற பட்டத்தைத் தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார் வழங்க அது முதல் ‘சி. தேசிய விநாயகம் பிள்ளை’ என வழங்கப்பட்ட அவர் அதற்குப் பின்பு ‘கவிமணி’ என்று வழங்கப்பட்டிருக்கிறார். நாஞ்சில் நாடு முழுவதும் ‘பாட்டா’ என்று உரிமை கலந்த அன்பில் மிகப் பெரியவராக அவர் போற்றப்பட்டிருக்கிறார். நவீனத் தமிழ் ஆளுமையான சுந்தர ராமசாமி நினைவோடையில் கவிமணியைப் பற்றிப் பகிர நேரில் அவரைத் தரிசிக்கும் சித்திரம் இந்நூலின் மூலம் மனதுக்குள் உருவாகச் செய்கிறது.

நூல் குறிப்பு

நூலாசிரியர்

சுந்தர ராமசாமி

நூல் பெயர்

கவிமணி நினைவோடை

பதிப்பும் ஆண்டும்

முதல் பதிப்பு, 2019

பக்கங்கள்

80

விலை

ரூ. 100/-

நூல் வெளியீடு

காலச்சுவடு பதிப்பகம்,

669, கே.பி. சாலை,

நாகர்கோயில் – 629 001

publisher@kalachuvadu.com

 



[1] சுந்தர ராமசாமி, கவிமணி நினைவோடை, ப. 10

[2] சுந்தர ராமசாமி, கவிமணி நினைவோடை, ப. 70

[3] சுந்தர ராமசாமி, கவிமணி நினைவோடை, பக். 53, 54

[4] சுந்தர ராமசாமி, கவிமணி நினைவோடை, ப. 47

[5] சுந்தர ராமசாமி, கவிமணி நினைவோடை, ப. 47

No comments:

Post a Comment

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு…

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு… எந்தத் தொந்தரவும் வேண்டாம் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் எந்தச் சிக்கலும் வேண்டாம் எந்த இம்ச...