19 Aug 2021

தொ. பரமசிவன் நேர்காணல்கள் – ஓர் எளிய அறிமுகம்

தொ. பரமசிவன் நேர்காணல்கள் – ஓர் எளிய அறிமுகம்

            தொ.ப.வின் நூல்களை அண்மைக் காலமாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். தொ.ப. புலமை சான்ற பேராசிரியர். மிக நேர்மையான ஆய்வாளரும் கூட. கல்விப் புலத்திலிருந்து வெளிப்பட்ட ஒரு முற்போக்கான ஆய்வாளுமை அவர்.

            கல்வி என்பது முற்போக்கிற்கான ஆயுதம். ஆனால் சமீப காலமாகக் கல்விப் புலத்தினின்று புறப்படுபவைகள் பிற்போக்குத்தனமாக இருக்கின்றன என்றால் அதில் பெரும் குற்றம் இருப்பதாகக் குறிப்பிட்டு விட முடியாது.

கல்விக் கொள்கைகள் கூட அதிக விவாதங்கள் மற்றும் ஆய்வுகள் இன்றி நிறைவேறுகின்றன. இப்படிப்பட்ட சூழலில் தொ.ப.வின் அணுகுமுறைகளும் எழுத்துகளும் தனி முக்கியத்துவம் பெறுபவையாக இருக்கின்றன எனலாம்.

‘தொ.பரமசிவன் நேர்காணல்கள்’ என்ற இப்புத்தகத்தில் திராவிடம் என்பதற்கான முக்கிய அம்சங்களை தொ.ப. விளக்கும் அழகே தனி. அவர் மூன்று முக்கிய தனித்த கூறுகளைக் குறிப்பிடுகிறார்.

1. தாய் மாமன் உறவில் இருக்கும் மதிப்பு,

2. இறந்த உடலுக்குச் செய்யப்படும் மரியாதை,

3. பொது வெளியில் பெண்ணுக்குத் தரப்படும் மதிப்பு.

இம்மூன்று கூறுகளும் தனித்த திராவிடத் தன்மையாய்ப் பேதமில்லாமல் திராவிட நிலம் முழுவதும் திகழ்வதைத் தொ.ப. சுட்டிக் காட்டுகிறார்.

சிறு தெய்வங்கள் மனிதரோடு மனிதராக மனிதருக்குச் சமமாக மதிக்கப்படுவதைப் பற்றிப் பேசுகிறார். அத்துடன் பெரும் தெய்வங்கள் அனைத்தும் அதிகார பீடங்களாய் மனிதரை அடிமைப்படுத்தும் அந்நியப்படுத்தும் ஆதிக்க சக்திகளாக இருப்பதையும் நுட்பமாய்ப் புலப்படுத்துகிறார்.

தாம் குறிப்பிடும் ஒவ்வொரு கருத்தின் பின்னணியில் இருக்கும் பண்பாட்டு அசைவுகளை நாட்டார் மொழியின் வலிமையோடு ஆழமான இலக்கிய சான்றுகளோடு நிறுவுகிறார். இது சாதாரணமாக அனைவருக்கும் வாய்த்து விடாத திறன் எனலாம். இதை தொ.ப.வின் பாணி என்றும் குறிப்பிடலாம்.

தொ.ப.வின் முனைவர் பட்ட ஆய்வான அழகர்கோயில் பற்றிய ஆய்வை ஆய்வுலகில்  புத்தொளி பரப்பிய ஆய்வாகக் குறிப்பிடுவார்கள். அவர் ஆய்வு செய்த மதுரைப் பல்கலைக்கழகமே முனைந்தும் உவந்தும் புத்தகமாக வெளியிட்டு இரு பதிப்புகள் கொண்டு ஆய்வேடு அது.

ஆய்வுலகில் புத்தொளி பாய்ச்சிய அவரது ஆய்வேடு போலவே இந்நூலும் திராவிட கருத்தியல் சார்ந்தும், பெரியார் சார்ந்தும், வழிபாடு எனும் பண்பாடு சார்ந்தும் நுண்ணிய பார்வையில் திண்ணிய புத்தொளி பாய்ச்சுவதாக உள்ளது என்பது எனது கருத்து.

நூல் குறிப்பு

நூலாசிரியர்

தொ. பரமசிவன்

நூல் பெயர்

தொ. பரமசிவன் நேர்காணல்கள்

பதிப்பும் ஆண்டும்

மூன்றாம் பதிப்பு, 2021

பக்கங்கள்

160

விலை

ரூ. 75/-

நூல் வெளியீடு

காலச்சுவடு பதிப்பகம்,

669, கே.பி. சாலை,

நாகர்கோயில் – 629 001

publisher@kalachuvadu.com

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...