12 Aug 2021

யாருக்கு வேண்டும் ஒலிம்பிக் தங்கம்?

யாருக்கு வேண்டும் ஒலிம்பிக் தங்கம்?

            தங்கம் வாங்குவது இங்கு பெரிய விசயமில்லை. வெள்ளி வாங்குவதும் பெரிதில்லை. பித்தளை வாங்குவதும் அப்படியே. அவற்றிற்கான கடைகள் நம் நாட்டில் அதிகம். அத்துடன் அவற்றிற்கான அடகு கடைகளும் ஏராளமாக இருக்கின்றன.

            நாம் ஒலிம்பிக் மற்றும் இன்ன பிற சர்வதேசப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை விரும்பாமல் இருப்பதற்கு நாம் அவற்றை கடைகளில் வெகு எளிதாக வாங்க முடிவது ஒரு காரணம்.

            உலக அளவில் ஒரு சர்வே எடுத்தால் நம் நாட்டில் தங்க கடைகள் அதிகமாக இருக்கும். ஆகவே அதை ஒலிம்பிக் சென்றுதான் வாங்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதை நாம் மலபார்  கோல்ட், ஜிஆர்டி தங்க மாளிகை, லலிதா ஜூவல்லரி, டாட்டா கோல்ட் ப்ளஸ், ஜோஸ் ஆலுகாஸ், குமரன் தங்க மாளிகை போன்ற கடைகளில் வாங்கிக் கொள்ள முடியும்.

மேற்படி பட்டியலில் ஏதேனும் நகைக்கடைகளின் பெயர்கள் விடுபட்டிருந்தால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எனக்குத் தெரிந்த வகையில் எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் எம்ஆர்எஸ் ஜூவல்லரி, தங்கமகள் நகைக்கடை, சொர்ணமயில் நகை மாளிகை என்று எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் பத்தாது.

            பல பேருக்கும் ‘தங்கம்’ என்ற பெயர் இருக்கிறது. தங்கம் என்பதனோடு பின்னொட்டாக தங்கமுத்து, தங்கையன், தங்கசாமி, தங்கவேலு, தங்கமணி, தங்கப்பழம், தங்கசெல்வம் என்ற பெயருள்ளவர்கள் அநேகம். முன்னொட்டாக ஞானத்தங்கம், சொக்கத்தங்கம் போன்ற பெயர்களும் இருக்கின்றன. இப்படி பெயரிலே தங்கம் இருப்பதாலும் போட்டிகளில் தங்கம் நமக்குத் தேவையில்லை.

            ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் தங்கத்தைத் தொகுத்தால் ஆயிரமாயிரம் ஒலிம்பிக் போட்டிகளை நம்மால் நடத்தி விட முடியும். ஆக இதற்காக மெனக்கெட்டு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுதான் வாங்க வேண்டும் என்ற அவசியம் நமக்கு இல்லை.

            நம் கனவு வெறுங்கனவாகப் போய் விட முடியாது என்பதற்காகத்தான் நம் பெண்டிர், ஆடவர் எல்லாம் கழுத்தில் சங்கிலி, கையில் மோதிரம், பிரெஸ்லெட், காதில் கடுக்கன், தோடு என்று தங்க நகைகளோடு திரிகிறார்கள். தாதாக்கள் இதில் ஸ்பெஷல் ரகமாய் எருமை மாட்டுக்குப் போடுவது போல அம்மாம் பெரிய தங்கச் சங்கிலியோடு அலைகிறார்கள்.

            ஆக தங்கம் இல்லாத தங்க நகைக்கடைகள் இல்லாத நாடுகள் வேண்டுமானால் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு தங்கம் வாங்கிக் கொள்ளட்டும். நம்மிடம் நிறைவாகத் தங்கம் இருக்கும் போது அதை நாம் ஒலிம்பிக்கில் சென்றுதான் வாங்க வேண்டும் என்று அவசியமா என்ன?!

*****

4 comments:

  1. உலோக மதிப்புக் கருதி யாரும் ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பங்குகொள்ள மாட்டார்கள். மேலும் இந்தப் போட்டிகளின் பயிற்சிக்காக பயணத்திற்காக நிறுவனங்கள் நடத்துவதற்காக ஆகும் செலவுகளைக் கணக்கிட்டால் இந்தச் செலவுகள் உலோக மதிப்பிற்கும் அதிகம்.

    இங்குச் சாதனைகள், சாதனை முறியடிப்புகள் அது சார்ந்த பெருமிதங்கள் இவைதாம் நோக்கம்.

    தங்கள் பதிவு ஏற்கத்தக்கதல்ல. மன்னிக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா! ஒலிம்பிக் பதக்கங்களுக்காக வறுமை, விளையாட்டில் நிலவும் அரசியல், வாழ்க்கைப் போராட்டங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு போராடி வாகை சூடுபவர்கள் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள். அவர்களால் தேசம் பெருமிதம் அடைவது வணக்கத்திற்குரியது. நம் தேசத்தில் அதிகம் உள்ள தங்க மோகம்தான் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் நாம் பின்னடைவதற்குக் காரணமோ என்ற ஆதங்கத்தை நேரடியாகக் காட்டாமல் பகடி நோக்கில் காட்டும் வகையில் எழுதப்பட்ட இப்பத்தி தவறான கருத்தை வெளிப்படுத்தியதற்காக வருந்துகிறேன் ஐயா! இனி வரும் காலங்களில் பத்தி புலப்படுத்தும் கருத்துகள் குறித்துக் கூடுதல் கவனம் கொள்கிறேன் ஐயா! என்னை என்றென்றும் வழிநடத்தும் தங்களின் மேலான வழிகாட்டுதலுக்கு நன்றிகள் ஐயா!

      Delete
  2. முதலில் விளையாட்டிலுள்ள அரசியல், சாதி, பணபலம் அல்லது வறுமை இவற்றை நீக்கிவிட்டு வாருங்கள் பதக்கம் பற்றி பேசலாம்.....

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் அம்மா. நேரடி அரசியலை விட மோசமாக இருக்கும் விளையாட்டு அரசியலில் வெற்றி பெறுவது விளையாட்டில் வெற்றி பெறுவதை விட கடினமானதாகும்.

      Delete

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா? தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் கூட்டண...