5 Jul 2021

மெல்ல விலகும் திரை மோகம்

மெல்ல விலகும் திரை மோகம்

            வீட்டுக்கு வீடு கேபிள் டிவி இணைப்பு வந்த பிறகு இனிமேல் எந்த பய புள்ளைக படிக்கப் போவுது என்று எல்லாரும் பேசிக் கொண்டார்கள். கேபிள் டிவி இணைப்புகள் எந்நேரத்துக்கும் படம் பார்ப்பதற்கும், படப்பாடல்கள் பார்ப்பதற்கும் வாய்ப்பினை அள்ளி வழங்கியன. பிள்ளைகளின் படிப்பை அது ஒன்றும் பாதித்தாகத் தெரியவில்லை. அதற்குப் பின்புதான் எங்கள் ஊரில் பத்தாம் வகுப்பில் பெயில் ஆகுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. அநேகமாக யாரும் பெயிலாகவில்லை. பத்தாம் வகுப்பில் நானூறு மதிப்பெண், நானூற்று ஐம்பது மதிப்பெண் என்று சர்வ சாதாரணமாக வாங்க ஆரம்பித்தார்கள். ஒருவேளை சினிமா பார்ப்பது படிக்கும் விசயங்களை நன்கு உட்கிரகிக்க காரணமாக இருந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை.

            கேபிள் டிவிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகத் தொடங்கிய பிறகு பெண்களின் உலகத்தில் மிகப்பெரிய மாற்றம் உருவாகத் தொடங்கியது. அதற்கு முன்பு சாயுங்காலம் ஆகி விட்டால் தெருவுக்குத் தெரு ஒன்றிரண்டு பெண்கள் சண்டையாவது நடக்கும். எல்லாம் வாய்ச் சண்டைதான். பெண்களின் வாய்ச் சண்டையில்லாத நாட்கள் அநேகமாக இருந்ததில்லை. கேபிள் டிவி வந்த பிறகு அதில் மாற்றம் வந்து விட்டது. சீரியல் பார்ப்பதற்கு அவர்களின் நேரம் தேவைப்பட்டதால் சண்டையிடுவதற்கான நேரத்தைக் குறைத்துக் கொண்டு ஒரு கட்டத்தில் சண்டை போடுவதற்கு நேரமில்லாத நிலையை அடைந்து விட்டார்கள்.

            பெண்களின் உலகத்தில் அப்படி ஒரு தாக்கம் என்றால் ஆடவர் உலகில் வேறொரு தாக்கம் உண்டாகி விட்டது. மதுவாங்கட்டையில் உட்கார்ந்து பேசுபவர்களின் எண்ணிக்கை குறைந்து போனது. வீட்டுக்கு வீடு ஒரு டிவி இருந்த நிலை மாறி இரண்டு மூன்று டிவிக்கள் வரத் துவங்கியது. அத்தனை டிவிக்கும் ஒரே கேபிள் இணைப்பில் ஒண்டி கனெக்சன் அடித்து அவரவர் விருப்பத்திற்கேற்ப பார்க்கத் துவங்கினார்கள். பெரிசுகளும் பெண்களும் சீரியல் பார்த்து விட்டுத் தூங்கிய பிறகு வாலிபர்கள் நடுராத்திரி வரை டிவி பார்க்கத் தொடங்கினார்கள்.

            கொஞ்சம் கொஞ்சமாக விசிடி பிளேயர்கள் வாங்கத் துவங்கித் திரைக்கு வரும் புதுப்படங்களைத் திருட்டு விசிடியில் சுட சுட சுட்டுப் பார்க்கத் துவங்கும் பழக்கம் வளரத் துவங்கிய போது திரையரங்கம் பக்கம் போகும் பழக்கமும் வெகுவாகக் குறையத் துவங்கியது. ஊரில் இருக்கும் ரசிகர் மன்ற வாலிபர்கள்தான் அடாசு பண்ணிக் கொண்டு திரையரங்கில் நின்று படம் பார்த்து வந்தார்கள். “அதானே டிவிப் பொட்டியிலயே எல்லாம் காட்டுறானே. பெறவென்னடா காசுக்குத் தண்டமா? செலவு பண்ணிக்கிட்டு தியேட்டர்ல போயி நின்னுக்கிட்டு வாரீயளே?”ன்னு வீட்டுக்கு வீடு சத்தம் விட்டுப் பார்த்தார்கள். என்னவோ அந்தச் சத்தம் அவர்களின் காதுகளில் விழவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட நாட்கள் என அவற்றைச் சொல்லலாம். திரையங்கத்திற்கான மதிப்பை ரசிகர்கள் மட்டும் உண்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

            அதற்குப் பின் வந்து கால கட்டங்களில் கிட்டதட்ட கிராமங்களிலிருந்து நகரத்திற்குப் போய் சினிமா பார்க்கும் பழக்கமே ஒழிந்து போனது என்று சொல்லலாம். அதற்குப் பதிலாக நகரத்திற்குப் போய் திருட்டு டிவிடிக்கள் வாங்கி வந்தார்கள். ஒரு டிவிடி வாங்கி வந்து அது கதறித் கதறித் தேயும் அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் கைமாத்து வாங்கிப் போட்டுப் பார்த்தார்கள். டிவிடிக்கள் தேய்ந்து ஓய்ந்து போன பிறகு அதை அழகு சாதன பொருள் போல் வீட்டின் முன் டிசைன் டிசைனாக கட்டித் தொங்க விட்டார்கள். விரும்பிய படத்தை விரும்பிய நேரத்தில் பார்க்கலாம் என்ற நிலை வந்த பிறகு திரையரங்கம் போயி பார்க்கும் சினிமாவின் மீதிருந்த ஆர்வம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போய்க் கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

            கைகளில் தொடுதிரை வசதியோடு அலைபேசிகள் வந்த பிறகு திருட்டு டிவிடி கடைகளையும் இழுத்து மூடும் அளவுக்குச் செய்து விட்டார்கள் தமிழ்ச் சினிமா ஆர்வலர்கள். வீட்டில் கிடக்கும் விசிடி, டிவிடி பிளேயர்கள் இப்போது பரிதாபமாகக் கிடக்கிறது. இதெல்லாம் என்ன தண்டச் சாமான்கள் என்று கேட்கும் சிறுவர்கள் இப்போது உருவாகி விட்டார்கள். சின்ன குழந்தைகள் கூட புதிதாக வந்திருக்கும் படத்தை எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதை எப்படிப் பார்க்க வேண்டும் என்று சொல்லித் தருகிறது. பத்தாததுக்கு ஓடிடி தளம் இருக்கிறதா. டெலிகிராம் ஆப் வேறு இருக்கிறதா. அவரவர் வசதிக்கேற்பவும் விருப்பத்துக்கு ஏற்பவும் படத்தைப்பார்க்கிறார்கள். கிடைத்த நேரத்தில் படம் பார்க்கிறார்கள்.

            இரண்டு மணி நேரமோ, இரண்டரை மணி நேரமோ உட்கார்ந்து சினிமா பார்ப்பது அலுத்துப் போகும் செயலாகி விட்டது. தவணை முறையில் பணம் செலுத்துவதைப் போல தவணை முறையில் அரை மணி நேரம், கால் மணி நேரம் என்று நேரம் கிடைக்கும் போதேல்லாம் பார்க்கும் பழக்கத்தில்தான் பெரும்பாலான சினிமா பிரியர்கள் இருக்கிறார்கள்.

            சினிமாவைத் தாண்டியும் களிப்பூட்ட யூடியூப் இருக்கிறது. டிக்டாக் போன்ற செயலிகள் வந்துப் போய்க் கொண்டிருக்கிறன. பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவை படங்கள், விவாதங்கள், காட்சிகள் என அனைத்தையும் பார்க்கவும் பகிரவும் வசதியாக இருப்பதால் சினிமாவின் மீதான கவனம் பல்வேறு விதமாகச் சிதறி சினிமா பிரியர்களாக இருந்தவர்கள் இப்போது இணைய பிரியர்களாகி விட்டார்கள்.

            சிறுவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. பெரியவர்கள் புரிந்து கொள்ள முடியாத மொபைல் விளையாட்டுகளில் பரவசமாகிக் கொண்டிருக்கிறார்கள். பெரியவர்களும் சிறுவர்கள் என்ற பாகுபாடு பார்க்காமல் அவர்களிடம் மொபைல் விளையாட்டுகளைக் கற்றுக் கொண்டு ஆடத் துவங்கிக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவின் பிடியை விட்டு அலைபேசிகள் உருவாக்கித் தரும் உலகில் மூழ்கவும் ஆழ்ந்து போகவும் தொடங்க ஆரம்பித்து விட்டார்கள் தமிழர்கள். டிவிப் பெட்டியோடு கொஞ்சம் நஞ்சம் ஒட்டுதலாக இருப்பதைப் பார்த்து சினிமா நட்சத்திரங்கள் பலரும் டிவி நிகழ்ச்சிகளில் தலைகாட்டுகிறார்கள். இதுவும் ரொம்ப நாளைக்கு நீடிக்காது என்பது அவர்களுக்குத் தெரிவதாலோ என்னவோ ஓடிடி பக்கமும் தலையைக் காட்டி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

            வருங்காலத்தில் தமிழர்களின் வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த திரைப்படங்கள் ஒரு பொழுதுபோக்கும் அம்சம் மட்டுமே என்ற நிலையை அடையும் என்று எதிர்பார்க்கலாம். தமிழர்களின் சிந்தனையைக் கூர்மையாக்க சினிமா மட்டுமல்லாது பல்வேறு விசயங்களைத் தகவல் தொழில்நுட்பம் அள்ளிக் கொண்டு வந்து கொட்டிய வண்ணம் உள்ளது. அதில் நிலைகொள்ளவும் அதில் சினிமாவையும் ஒரு பாகமாகச் சேர்த்துக் கொள்ளவும் தமிழர்கள் தயாராகி விட்டார்கள் என்று சொல்லலாம். முன்பிருந்த நிலை அப்படியில்லை. முழுமையாகத் தமிழர்கள் திரைப்படங்களுக்குத் தங்களைத் தாரை வார்த்திருந்தார்கள் என்பதைச் சொல்ல தேவையில்லை.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...