4 Jul 2021

படம் பார்க்காமல் இருக்க முடியுமோ?

படம் பார்க்காமல் இருக்க முடியுமோ?

            பொதுவெளியில் திரைப்படம் போடுவதென்றால் அதற்கு ஒரு மரபார்ந்த வடிவம் வைத்திருந்தார்கள். கோயில் திருவிழாக்கள் ‘திருவிளையாடல்’ திரைப்படத்துடன்தான் துவங்கும். பெரிசுகள் அந்தப் படத்தைப் பார்க்க அலைமோதும். அதைத் தொடர்ந்து ரஜினியின் படம் ஒன்றும் விஜயகாந்தின் படம் ஒன்றும் கட்டாயம் இருக்கும். என்னவோ தெரியவில்லை இந்தப் பகுதி திருவிழாக்களில் கமலின் படங்களைத் தவிர்த்து வந்தார்கள். பிள்ளைகளும் ரஜினிக்கோ, விஜயகாந்துக்கோ ரசிகர்களாக இருந்தார்கள். கமலுக்கு ரசிகர்களாக இருப்பதைத் தவிர்த்தார்கள்.

            அப்போது பொங்கல் வாழ்த்து அனுப்புவது பிரபல்யம். டிசம்பர் மாதத்தின் பாதியிலிருந்து பெட்டிக் கடைகள் முதற்கொண்டு அனைத்துக் கடைகளிலும் பொங்கல் வாழ்த்துகளைக் காட்சிப்படுத்தி விடுவார்கள். பொங்கல் வாழ்த்துகளில் ரஜினிக்கும் விஜயகாந்துக்கும் அதிக இடம் இருக்கும். அதற்கடுத்து அப்போது பிரபல்யமாக இருந்த நடிகைகளுக்கு அதிகப்படியான பொங்கல் வாழ்த்து அட்டைகள் இருக்கும்.

            திருவிழாக்களில் ரஜினி படம் என்றால் பெரும்பாலும் அப்போது ‘தர்மதுரை’ படமாகத்தான் இருக்கும். விஜயகாந்தின் படம் என்றால் ‘கேப்டன் பிரபாகரன்’ அல்லது ‘புலன் விசாரணை’யாகவோ இருக்கும். இந்த இரண்டு படங்களையும் பலமுறை பல இடங்களில் பார்த்ததாக ஞாபகம். எத்தனை முறை பார்த்தாலும் மக்கள் தர்மதுரை படத்தில் ரஜினி வீறு கொண்டு எழும் காட்சியில் கைதட்டுவார்கள். விஜயகாந்த் புரட்சிகரமாக வசனம் பேசும் இடங்களிலும் அதே போல் கைதட்டுவார்கள், ஆர்ப்பரிப்பார்கள். இன்ன இடத்தில் கைதட்டுவார்கள், விசில் அடிப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி விடலாம். மக்களுக்கு அப்படி ஒரு ஒட்டுறவு அந்தப் படங்களோடு இருந்தது. அந்தப் படங்களைப் பற்றிப் பேசும் போது தங்கள் வாழ்க்கையில் நடந்ததைப் போல தாங்கள் அதை நேரில் கண்டதைப் போல அப்படிப் பேசுவார்கள். தர்மதுரை போல இனியொரு படத்தில் ரஜினி நடிக்க முடியாது என்றும் கூட பேசுவார்கள். விஜயகாந்தும் கேப்டன் பிரபாகரன் படத்தைப் போல இனியொரு படத்தில் நடித்து விட முடியாது என்றும் பேசுவார்கள். அப்படி ஒரு மயக்கமும் ஒன்றுதலும் மக்களுக்கு அப்படங்கள் மீது இருந்தன.

            படங்களைப் பார்க்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். என்னுடைய பார்வை விஜயகாந்தின் புலன் விசாரணை படம் குறித்தும் கேப்டன் பிரபாகரன் படம் குறித்தும் பின்வருமாறு நிலைகுத்தி நின்றது. புலன் விசாரணைப் படத்தில் சரத்குமார் விஜயகாந்துக்கு வில்லனாக வருவார். கேப்டன் பிரபாகரன் படத்தில் சரத்குமார் விஜயகாந்துக்கு நண்பராக வருவார். அதெப்படி ஒரு படத்தில் வில்லனாக வரும் ஒருவர் இன்னொரு படத்தில் நண்பராக வர முடியும் என்று. புலன் விசாரணை படத்திலும் சரத்குமார் விஜயகாந்துக்கு நண்பராக இருந்திருக்கலாமே என்றும் நினைத்ததுண்டு. இந்தப் பார்வையை என்னோடு வைத்துக் கொள்ளாமல் இது சம்பந்தமாக என்னை விட வயதில் மூத்த அண்ணன்மார்களோடு பேசியிருக்கிறேன். அவர்கள் பதில் கூறியிருக்கிறார்கள். அதாவது இப்படி. அந்தக் கதை அப்படி. இந்தக் கதை இப்படி. அந்தக் கதைப்படி சரத்குமார் அதில் வில்லனாகத்தான் வர வேண்டும். இந்தக் கதைப்படி சரத்குமார் நண்பராக வர வேண்டும் என்பதாக.

அடுத்தடுத்த படங்களில் சரத்குமார் விஜயகாந்துக்கு வில்லனாக வந்து விடக் கூடாது என்ற பதைப்பு கூட எனக்கு இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு சரத்குமார் தனியொரு நாயகனாக வில்லன்களை அடித்துத் துவம்சம் செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டார். அவர் நடித்து நாட்டாமை எனும் திரைப்படம் வெளிவந்து அதைப் பார்த்து அதில் ஒன்றி மூழ்கிப் போன எங்கள் ஊர்க்காரர் ஒருத்தர் தன் மகனுக்கு நாட்டாமை எனப் பெயரே வைத்து விட்டார். பள்ளியில் சேர்க்கும் போது கூட நாட்டாமை எனும் பெயரில் சேர்க்க வேண்டும் என்று அடாவடிப் பண்ணி விட்டார். அவரது மனைவி அதற்கு எதிராக அடாசு பண்ணி இயல்பான வேறொரு பெயரில் சேர்க்குமாறு பண்ணி விட்டார். இப்போது அந்தப் பையனுக்கு இருவேறு பெயராகி விட்டது. ஊரில் கூப்பிடுவது நாட்டாமைதான்.

காலச்சக்கரம் சுழன்ற போது ஒவ்வொரு வீட்டிற்கும் டிவிப்போட்டி வர ஆரம்பித்தது. ஊர் ஊராக டிவிப்பொட்டியையும் டெக்கையும் கொண்டு போய் படம் காட்டிய கூத்தாநல்லூர் பாய் அதற்குப் பிறகு என்னவானார் என்று தெரியவில்லை. அதன் பிறகு டெக்கை வாடகைக்கு எடுத்துப் படம் பார்க்கும் வழக்கம் வந்திருந்தது. என் அம்மை வழித் தாத்தா வீட்டில் டெக் எடுத்து படம் போடும் போதெல்லாம் சாயுங்காலம் வந்து என்னை அழைத்துப் போயிருக்கிறார்கள். அங்கேயும் முதல்படம் திருவிளையாடல்தான். அந்த ஒரு படத்தை மட்டும்தான் என் தாத்தா உட்கார்ந்து பார்ப்பார். அதற்காக டிவிப்பொட்டியின் முன் ஒரு நாற்காலி போடப்பட்டிருக்கும். மற்ற எல்லாரும் தரையில்தான் உட்கார்ந்திருப்போம். திருவிளையாடல் படம் முடியும் வரை ரொம்ப உன்னிப்பாகக் கவனித்துப் பார்ப்பார் என்னவோ ஆசிரியர் பாடம் எடுப்பதைக் கவனிக்கும் மாணவரைப் போல. பல இடங்களில் ரசித்துச் சிரிப்பார். சிவாஜியினி வசன உச்சரிப்பு உச்சம் பெறும் இடங்களில் பலே பலே என்று சத்தமாகச் சொல்வார். திருவிளையாடல் படம் முடிந்ததும் எழுந்துப் போய் விடுவார். அவ்வளவுதான் அவருக்குத் திரைப்படம். அவருக்காகத்தான் வேறு வழியில்லாமல் வீட்டில் இருந்த அனைவரும் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருப்போம். அந்தப் படத்தை ஏற்கனவே பார்த்ததுதான் என்று பார்க்காமல் தவிர்த்து விட முடியாது. குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அந்தப் படத்தைப் பார்க்கிறார்களா என்று தாத்தா அவ்வபோது கண்களை ஓட்டிப் பார்ப்பார். இன்னும் சொல்லப் போனால் அது ஒன்றுதான் அவருக்குத் திரைப்படம். அந்த ஒரு படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். வேறெதையும் அவர் திரைப்படமாக ஏற்றதில்லை. அந்த ஒரு படத்தைப் பார்த்தால் போதும் வாழ்க்கையில் மனுஷன் எல்லாத்தையும் கற்றுக் கொள்ளலாம் என்பார். பிற படங்களைப் பார்ப்பதைப் பாவமாகப் பார்த்தார்.

எனக்கு இப்போது நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கும், வாழ்க்கையில் ஒரு மனிதர் ஒரு திரைப்படத்தோடு திருப்தியடைந்து விடுவது என்பது எவ்வளவு பெரிய விசயம் என்று. அதே படத்தைப் பலமுறைப் போட்டாலும் உட்கார்ந்து பார்ப்பார். வேறு படத்தைப் போட்டால் எழுந்து போய் விடுவார். வீட்டில் எல்லாருக்கும் அவர் அந்த ஒரு படத்தை ஆர்வமாக அமர்ந்து பார்ப்பது கூட ஆச்சரியமாகத்தான் இருக்கும். திரைப்படங்களின் மோசமான எதிரியைப் போல அவர் இருந்ததுதான் அதற்குக் காரணம். கல்யாணம் ஆகாத பெண்கள் திரைப்படம் பார்க்கக் கூடாது என்று கருத்தில் அவர் மிக உறுதியாக இருந்தார்.

தாத்தா வீட்டின் மேற்கில் நான்கு பர்லாங் தூரம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு திரையரங்கம் இருந்தது. டென்ட் கொட்டகை போன்ற திரையரங்கம். அந்தத் திரையரங்கில் என் சித்திகள் தாத்தாவுக்குத் தெரியாமல் போய் திரைப்படம் பார்த்து வந்திருக்கிறார்கள். அவருக்குத் தெரியாமல் போய்தான் திரைப்படம் பார்க்க முடியும். என் சித்திகள் யாரேனும் திரைப்படம் பார்த்தது அவருக்குத் தெரிந்தது என்றால் தெருவே வீட்டின் முன் கூடும் அளவிற்குக் காரியம் செய்து விடுவார். வீட்டின் முன் மேலண்டை வேலியோரத்தில் ஒரு பூவரசு மரம் இருந்தது. வயதுக்கு வந்த பெண் பிள்ளை என்று கூட பார்க்க மாட்டார். திரைப்படம பார்க்கப் போன சித்தியை அந்த மரத்தில் கட்டி வைத்து அடிப்பார். தெருவே திரண்டு அவரிடம் தெண்டனிட வேண்டியிருக்கும். “யோவ் வைத்தி! விட்டுடுய்யா! வயசுக்கு வந்த புள்ளையப் போட்டு இப்படி கட்டி வெச்சு அடிக்காதய்யா!” என்று கெஞ்ச வேண்டியிருக்கும். யார் பேச்சுக்கும் மசிய மாட்டார். விளாசுகிற விளாசலில் மயக்கம் வந்து தலை தொங்கிப் போகிற நிலை வரைக்கும் அடிப்பார். என் ஆத்தா காலில் விழுந்து கெஞ்சும். “ஐயோ! எம் பொண்ணப் போட்டு இப்பிடி அடிக்கிறாரே. உசுரே போயிடும் போலருக்கு. அங்காளம்மா, பொன்னியம்மா வந்துக் காப்பாத்து.”என்று அது அழுவதைப் பார்க்கும் போது சுற்றி நிற்கும் அத்தனை பேருக்கும் அழுகை வந்து விடும். என் தாத்தா கண்ணில் சொட்டுக் கண்ணீர் வராது. விளாசித் தள்ளி விட்டு உள்ளே போன பிறகு திரண்டிருந்த அத்தனை சனங்களும் கூடி அடிபட்ட சித்தியை அவிழ்த்து வீட்டுக்குள் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லும். என்னவோ தனக்குச் சம்பந்தமில்லாத ஒன்று வீட்டில் நடப்பது போல அதைக் கண்டும் காணாதது போல தாத்தா உட்கார்ந்திருப்பார்.

வீட்டுக்குள் போனதும் சித்தியை எல்லாரும் பரிதாபமாகப் பார்ப்பார்கள். அதுவோ எதுவும் தனக்கு நடக்காதது போல ஒரு நமுட்டுச் சிரிப்பு சிரிக்கும். அதற்கான காரணம் ஒரு மாதம் கழித்துதான் தெரியும். மீண்டும் ஒரு மாதம் கழித்து திரையரங்கிற்குத் திரைப்படம் பார்க்க போய் தாத்தாவிடம் திரும்ப அடி வாங்கும். இந்த முறை அடிப்பட்ட சித்தியை உள்ளே கொண்டு வரும் போது ஆத்தா சொல்லும், “ஆம்மா போ! இவளுக்குப் படம் பாக்கப் போறதும் புதிசில்ல. அவருக்கு அடிக்கிறதும் புதிசில்ல!”

*****

No comments:

Post a Comment

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா? தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் கூட்டண...