3 Jul 2021

சினிமாவுக்கு இல்லாத பணமா?

சினிமாவுக்கு இல்லாத பணமா?

            வீட்டிற்கு இரண்டு ரூபாய் வசூலித்ததாகத்தான் ஞாபகம். வசதியுள்ளவர்கள் ஐந்து ரூபாய் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டார்கள். இப்படி வசூலித்து ஒரு முறை எங்கள் தெருவில் டி.வி. மற்றும் டெக் எடுத்து படம் போட்டார்கள். பக்கத்துப் பக்கத்துக் கிராமங்களில் இது மாதிரியான முன்னெடுப்புகள் நிறைய நடுக்க நாம் மட்டும் மட்டமா என்ற எண்ணப்பாட்டில் நிகழ்ந்த சம்பவம் இது.

            எந்தக் கிராமத்தில் டிவி, டெக் எடுத்து படம் போட்டார்களோ அந்தக் கிராமத்துப் பிள்ளைகள் அந்த வாரத்தில் பள்ளிகளில் ஹீரோக்கள் போல ஆகி விடுவார்கள். அவர்களிடம் கதை கேட்க அத்தனை பிள்ளைகளும் குவிந்து விடுவார்கள்.

            ரிக்சாவில் டிவியும் டெக்கும் வந்து இறங்கியதிலிருந்து அதற்குப் பக்கத்தில் இருக்கும் ஒருவர் வீட்டிலிருந்து கரண்டு எடுத்து படம் துவங்கியது வரையுள்ள சம்பவங்களை ஒரு படமாக ஓட்டித் தள்ளி விடுவார்கள். அதற்குப் பிறகு பார்த்த படங்களை டிஷ்யூம் டிஷ்யூம் சத்தத்தோடு ரத்தின சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுவார்கள். படத்தின் கதைகளை விட படத்தில் இடம்பெறம் சண்டைகளைக் கதைகளாகப் பிரதானமாக்கிப் படத்தைப் பற்றிச் சொல்வார்கள். பிறகு அந்தச் சண்டைக்காட்சிகளை நடித்துக் காட்டுவது ரொம்ப முக்கியமாகப் போய் விடும். சண்டைக்காட்சிகளின் போதும் இடம்பெறும் இசையைச் சற்றேறக்குறைய அப்படியே வாய்வழியே எழுப்பிய படிதான் சண்டைக்காட்சியை நிகழ்த்திக் காட்டுவார்கள்.

            இந்தப் பிள்ளைகளின் தொந்தரவு தாங்காமல்தான் டிவியையும் டெக்கையும் எடுத்து சினிமா காட்டினார்களா என்று மயங்கும் அளவுக்கு அனைத்துப் பிள்ளைகளும் அப்போது சினிமா பைத்தியங்களாகத்தான் இருந்தார்கள். பிள்ளைகளை விட பெண்கள் மிகவும் இந்தச் சினிமா பைத்தியத்தை விரும்பியதாகத்தான் நினைக்கிறேன். பிள்ளைகளாவது அப்போதைக்கப்போது பேசி அதை மறந்து விட்டு விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். பெண்கள் எந்நேரமும் சினிமாவைப் பேசிப் பேசித் திளைத்திருக்கிறார்கள். அடுத்த படத்தைப் பார்க்கும் வரை பார்த்த படத்தைப் பேசிப் பேசித் திளைத்திருக்கிறார்கள். ஒரே பேச்சுத்தான். ஒருமுறை கேட்டு விட்டால் நாளை எப்படிப் பேசுவார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி விடலாம். அதை மீண்டும் மீண்டும் பேசுவதில் அவர்களுக்கு அளவிட முடியாத சந்தோஷம் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். வேலை பார்க்க வேண்டியிருந்தாலும் வேலை பாட்டுக்கு வேலை, சினிமா பேச்சு பாட்டுக்குச் சினிமா பேச்சு இரண்டும் இணைந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். அதிலும் காதல் காட்சிகளை ரொம்ப உருக்கமாகப் பேசுவார்கள். அண்ணன் தங்கச்சி உணர்ச்சி காட்சிகளைப் பேசிப் பரவசப்படுவார்கள். பிள்ளைகளைப் போல சண்டைக்காட்சிகளைப் பெரிதுபடுத்திப் பேசிக் கேட்டதில்லை.

            ஒரு வருஷம் நடைபெற்ற கோயில் திருவிழாவில் கரகாட்டம், நாடகம், பட்டிமன்றங்களை நிறுத்தி விட்டு டிவி, டெக்கெடுத்து சினிமா படம் காட்டினார்கள். அந்த வருடம் திருவிழா செலவு டிவி, டெக்கின் புண்ணியத்தால் கணிசமாகக் குறைந்ததாகப் பேசிக் கொண்டார்கள். வருடா வருடம் இது போல செய்து கொள்வோம் என்று பேசிக் கொண்டார்கள். என்னவோ அதற்கடுத்த வருடம் கரகாட்டத்தைத்தான் ஏற்பாடு செய்தார்கள். வார்த்தைத் தவறி விட்டதன் மர்மம் எனக்கு விளங்க பல ஆண்டு காலம் ஆனது. கரகாட்டம் ஆடும் பெண்களின் கலையார்வத்தைப் பாராட்டி அவர்களின் உடை மேல் பணத்தைப் பேட்ச் போல குண்டூசியால் குத்தும் கலை ஆர்வலர்கள் அப்போது நிறைய பேர் எங்கள் கிராமத்தில் இருந்தார்கள். அவர்களின் கலையார்வத்தை டிவி, டெக் எடுத்துப் படம் போட்டதால் வெளிப்படுத்த வாய்ப்பில்லாமல் போய் விட்டதாக மனத்தாங்கல் எழுந்ததன் விளைவாகக் கரகாட்டம் இல்லாமல் இனி திருவிழா கிடையாது என முடிவெடுக்கப்பட்டதாக அறிந்தேன்.  

            டிவி, டெக் எல்லாம் ரிக்சாவில் ஏழு மணி வாக்கில் வந்து விடும். கூத்தாநல்லூரில் என்று நினைக்கிறேன். இதற்கென்றே ஒரு பாய் இருந்தார். இந்தப் பகுதியில் எங்கு டிவி, டெக் எடுத்துப் படம் போடுவதென்றாலும் அவர்தான் வருவார். அவர் வந்ததும் முதல் வேலையாகத் தெருவைக் கண்களால் அளவெடுத்து டிவியும் டெக்கும் வைக்க வேண்டிய இடம் குறிக்கப்பட்டு ஓடுவதற்குத் தயாராக நிறுவப்பட்டு விடும். அதற்கு முன்பாகத் தெருவில் யார் வீட்டில் மேசை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து அது டிவி, டெக் வைப்பதற்கு வசதியாக வந்து காத்திருக்கும். மேசை கொடுத்தவர்களுக்குச் சலுகையாக டிவிப் பெட்டிக்கும் அருகில் அவர்கள் குடும்பத்தினர் உட்காருவதற்கு இடத்தை ஏற்பாடு செய்து தந்து விடுவார்கள். இரண்டு ரூபாயை விட கூடுதலாக ஐந்து ரூபாய் கொடுத்தவர்களுக்கும் சிறப்பு முன்னுரிமை கொடுத்து டிவி பொட்டிக்கு அருகில் உட்கார ஏற்பாடு செய்து தருவார்கள். அதற்கு அடுத்தபடியாக ஒவ்வாரு வீட்டு பிள்ளைகளுக்கும் குஞ்சு குலுப்பான்களுக்கும் இடம் பிடித்து வைப்பது முக்கியமான வேலை. வீட்டில் கிடக்கும் பழைய பாய்கள், கிழிந்த போர்வையை எடுத்துக் கொண்டு போய் இடம் பிடித்தாகி விடும். டிவிப் பொட்டிக்குப் பக்கத்தில் இடம் பிடித்து வைக்காத பிள்ளைகளை அவர்கள் வீட்டுப் பெண்டுகள் சாமர்த்தியம் போதவில்லை என்று திட்டித் தீர்த்து விடுவார்கள்.

            பிள்ளைகள் டிவிப் பொட்டி நிறுவப்பட்ட ஏழு ஏழரை மணிக்கே இடம் பிடித்து வைத்து விட்டாலும் படம் போட ஒன்பது பத்து மணியாகி விடும். அத்தனை சனங்களும் இரவு சாப்பாட்டை முடித்து விட்டு வந்து உட்கார்ந்த பின்தான் படம் ஆரம்பமாகும். விடிவதற்குள் எப்படியும் மூன்று படங்களைக் காட்டி விடுவார் பாய். காலையில் பொழுது விடிந்த பிறகு நான்காவது படத்தையும் காட்டியிருக்கிறார். இதற்கெனப் பெரும்பாலும் வெள்ளி அல்லது சனி இரவுகள்தான் தேர்வு செய்யப்படும். படம் பார்த்து விட்டு மறுநாள் விடுமுறையில் தூங்குவதற்கு வசதியாக இருக்கும் என்று. அதற்குள் இவ்வளவு திட்டமிடல்கள் இருந்தது. ஒரு நாற்பது பக்க நோட்டில் பணம் வசூலித்த விவரத்தையும் மாதக்கூட்டம் நடைபெறும் போது கணக்குக் காட்டுவார்கள்.

            ஒரு தெருவில் டிவி, டெக்கெடுத்து சினிமா படம் போடுகிறார்கள் என்றால் அக்கம் பக்கத்துக் கிராமங்களில் இருந்தெல்லாம் பிள்ளைகள் திரண்டு வந்து விடுவார்கள். தெருவே கூட்டமாகத் திருவிழாக் கோலம் பூண்டபடி இருக்கும். இப்படி டிவி, டெக் எடுத்து சினிமா படம் காட்டுவதென்றால் தாமாக முன்வந்து எப்படியாவது பணத்தைக் கொடுத்து விடுபவர்கள் ஊருக்குப் பொதுவாகப் புத்தகங்களை வாங்கி வைத்துப் படிப்போம் என்றால் முனுக்கென்று கோபப்பட்டு விடுவார்கள். “படிக்கின்ற பாடப்புஸ்தகங்க எவ்ளோ இருக்கு. அதையெல்லாம் முழுசா படிச்சிட்டீயாக்கும்? அதெ மொதல்ல படி. பெறவு காசுக்கு வாங்கிப் படிக்கலாம். படிக்கிற வயசுல கண்ட கண்ட புஸ்தகங்களையெல்லாம் வாங்கிப் படிச்சுக் கெட்டுப் போவக் கூடாது. பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி பள்ளியோடத்துல வைக்குறப்போ அதுல கலந்துகிட்டீன்னா பரிசா நல்ல புஸ்தகமா தருவாங்க. அதுல பரிசு வாங்கிப் படிச்சுக்கோ. காசைக் கொண்டுப் போயிக் கொட்டி புஸ்தகம் வாங்கிப் படிக்கணுமாம்ல. காலம் ரொம்பத்தான் கெட்டுப் போயிக் கெடக்கு. பத்துக் காசு இருந்தா கடுகெ வாங்கித் தாளிச்சுப் போடுவனோ? இதுகளுக்குப் புத்தகத்தெ வாங்கிக் கொடுப்பேனா?” என்று சர்வ அலட்சியமாகப் பேசுவார்கள். இப்படிப் பேசுவர்கள் சினிமா என்று சொன்னால் பெருங்காய டப்பா, அரிசிப் பானை என்று சேர்த்து வைத்த இடங்களில் இருந்தெல்லாம் காசைத் திரட்டிக் கொண்டு வந்து கொடுத்துதான் மறுவேலை பார்ப்பார்கள். தமிழ்நாட்டில் புத்தக வியாபாரத்தை விட சினிமா வியாபாரம் நன்றாக நடப்பதற்கு மக்களின் இத்தகைய மனோபாவம் ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம். அப்புறம் புத்தகம் படித்து உருப்படாமல் போகும் விசயத்தை எடுத்துக் கொண்டால் சினிமா பார்த்து உருப்படாமல் போனவர்களை விட புத்தகம் படித்து உருப்படாமல் போனவர்களின் பட்டியலை அவசியம் கண்டுபிடித்தாக வேண்டும்.

            ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்திலும் சினிமாவுக்கென்று தம்மை அறியாமல் பணம் ஒதுக்கிச் செலவழிக்கும் குணப்பாடு இயல்பாக இருக்கிறது. வேறெந்த நற்காரியத்துக்கோ, புத்தகம் வாங்குவதற்கோ என்று தலைகீழாக நின்று கேட்டாலும் ரொம்ப சாமர்த்தியமாகப் பேசி தராமல் இழுத்தடித்து நழுவி விடுவார்கள். அந்த வகையில் பார்த்தால் தமிழர்களுக்கு சினிமா என்பது ரத்ததில் கலந்தது என்று சொல்வதை விட ரத்தத்தில் ஊறியது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். செலவென்ன செலவு? செலவழித்தால் சம்பாதித்துக் கொள்ள முடியும். உயிரையும் கொடுக்கும் அளவுக்கு சினிமா அவர்களை மயக்கி வைத்திருந்ததோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழர்கள் சினிமாவுக்குக் கொடுத்து முக்கியத்துவம் அதிகம் என்று சொல்வதா? அவர்களின் இயல்பே அதுதான் என்று சொல்வதா?

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...