2 Jul 2021

அடித்து நொறுக்கப்பட்ட நம்பிக்கைகள்

அடித்து நொறுக்கப்பட்ட நம்பிக்கைகள்

            திரையரங்கங்கள் கோயில்களாக இருந்த காலம் ஒன்றுண்டு. இப்போதும் சில சமயம் அப்படி இருப்பதுண்டு. பெரிய நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வரும் போது திரையரங்கங்கள் கோயில்களாக மாறி விடுகின்றன. பக்திப் படங்கள் வரும் போது திரையரங்கங்கள் மெய்யான கோயில்களாக உருமாறி விடுவதும் நடப்பதுண்டு.

            கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்குக் குறைவில்லாமல் திரையரங்கங்களின் திரைத் திருவிழாக்களைக் குறிப்பிடலாம். கோயில்களுக்குக் கூட வருடாந்திரமாகத்தான் திருவிழாக்கள் வருகின்றன. திரையரங்கங்களுக்குத் தினம் தினம் திருவிழாதான். ஒரு கோயிலுக்குச் சராசரியாக வருபவர்களை விட திரையரங்கங்களுக்கு ஒவ்வொரு நாளும் வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். அந்த வகையில் தமிழ் மக்கள் திரை நட்சத்திரங்களிடம் கடவுளைக் காண்கிறார்கள் என்று சொன்னால் அதில் அதிகபட்ச மிகையேதும் இல்லை.

            எனது இளம்பிராயத்தில் நகரத்திற்குச் செல்லும் போதெல்லாம் மக்களால் எப்படி பகல் நேரத்தில் உட்கார்ந்து திரைப்படம் பார்க்க முடிகிறது என்ற கேள்வி எழுந்து கொண்டிருந்தது. கிராமப்புற திரையரங்கங்களில் இரவு நேரக் காட்சிகள்தான். மாலை 6 மணி வாக்கில் துவங்கும் ஒரு காட்சியும், இரவு பத்து மணிக்குத் துவங்கும் மற்றொரு காட்சியும் என்று இரண்டு இருண்டு காட்சிகள்தான். நகரத்துத் திரையரங்கங்கள் இதற்கு மாறாக நான்குக் காட்சிகளோடு பகலும் இரவுமாக இயங்கியது வியப்பாக இருந்தது. இந்த வியப்புக்குக் கிராமப்புற மனநிலையும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். கிராமப்புறத்தில் “வேலை நேரத்துல எவம்டா படம் பார்ப்பான்? வேலைய முடிச்சோமா ராத்திரி கூத்துப் பாத்தோமா இல்ல படம் பாத்தோமான்னு இருக்கணும்!” என்பார்கள். அவர்களின் கருத்தின்படி பார்த்தால் உழைப்பவர்கள் யாரும் பகலில் படம் பார்க்க மாட்டார்கள், சோம்பேறிகள்தான் பகலில் படம் பார்ப்பார்கள் என்பதுதான் அதன் சாராம்சம்.

            கிராமப்புற மனநிலையில் பார்த்த போது எத்தனை பேரின் உழைக்கிற நேரத்தை இந்தத் திரையரங்கங்கள் உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன என்று நினைத்தேன். பொழுதுபோக்குக்காக உழைக்கின்ற பகல் நேரத்தை வீணாக்கக் கூடாது என்று சொல்லிக் கொண்டிருந்த பெரியவர்கள் அப்போது கிராமத்தில் நிறைய பேர் இருந்தார்கள். வியர்வை வழிய வழிய உழைப்பதில் அவர்களுக்கு அலாதியான மகிழ்ச்சி. கோயில் திருவிழாக்களிலும் பகல் நேர உழைப்புக்கு வழி விட்டு இரவு நேர நிகழ்ச்சிகள்தான் அதிகம் இருக்கும். தீச்சட்டி ஏந்தி எடுக்கப்படும் கப்பரை அதிகாலையிலேயே ஒவ்வொரு வீடாகப் போய் ஊரைச் சுற்றி வந்து விடும். நீர்க்குடத்தைச் சுமந்து வரும் கரகம் இரவு நேரங்களில்தான் வரும். சாமி புறப்பாடும் இரவு நேரத்தில்தான் இருக்கும். காவடி எடுப்பதும், பால்குடம் எடுப்பதும் மட்டும் பகல் நேரத்தில் இருக்கும். மாவிளக்குப் போடுவதும் இரவு நேரத்தில்தான். நாடகங்களோ, கூத்துகளோ, பட்டிமன்றங்களோ பகலில் நடந்ததாக ஞாபகம் இல்லை. எல்லாம் இரவு நேரத்தில்தான். விடிய விடிய திருவிழாவுக்காக விழித்திருந்தாலும் அவர்களின் பகல் உழைப்புக்கு எந்தக் குறைபாடும் வந்ததில்லை.

            அரிதாக வருடத்தில் சில நாட்கள் தேர்த் திருவிழா பார்ப்பதற்கு பகலில் சென்று வருவதுண்டு. கலியாணம் காட்சிகளுக்கு மட்டும் பகல் நேரத்தில் அனுமதி உண்டு. மற்றபடி முகூர்த்தோலை, குழந்தை பிறப்புக்கு பதினாறு கொண்டாடுவது, மஞ்சள் நீராட்டு என்று பல விழாக்களையும் இரவு நேரத்தில் வைத்து முடித்ததுதான் அதிகம். திரையரங்குக்குப் படம் பார்ப்பதென்றாலும் சைக்கிளை எடுத்துக் கொண்டு பெண்களை அழைத்துச் செல்வதென்றால் ஆறு மணிக் காட்சிக்கும், ஆண்கள் மட்டும் செல்வதென்றால் பத்து மணிக் காட்சிக்கும்தான் செல்வார்கள்.

            எனக்குத் தெரிந்தவரை 1995 வரை எனது கிராமம் இப்படி இருந்ததாகத்தான் நினைக்கிறேன். அதற்குப் பிறகுக் கிராமத்து வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் நிகழத் துவங்கியது. கேபிள் இணைப்புகள் ஊருக்குள் நுழையத் துவங்கிய காலகட்டம் அதுதான். அதுவரை தூர்தர்ஷன் ஒளிபரப்பை இரவில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவர்கள் கேபிள் இணைப்புகள் வரத் துவங்கியதும் இரவில் மட்டும் பார்த்து வந்த தொலைக்காட்சி அனுபவத்தைப் படிப்படியாகப் பகலுக்கும் நீட்டிக்கத் துவங்கினார்கள். ஆரம்ப காலத்தில் பெரிசுகள் இதற்கு மாபெரும் கண்டனத்தைத் தெரிவிப்பவர்களாக இருந்தார்கள். “இப்பிடி டிவிப்பொட்டி எந்நேரத்துக்கும் ஓடிட்டும் அதெ பாத்துக்கிட்டும் இருந்தா வீடு உருப்படுமா? ஆமைப் பூந்த வீடு மட்டுமல்ல, டிவிப்பொட்டி பூந்த வீடும் உருப்படாது போலருக்கு!” என்று வசைபாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் கொடுமை என்னவென்றால் காலப்போக்கில் அவர்களும் சீரியல்களுக்கு அடிமையாகிப் பகல் பொழுதிலும் டிவிப் பார்ப்பதில் வீழ்ந்து போனார்கள்.

            கிராமப்புறம் பகல் பொழுது உழைப்பைத் தூக்கி எறிந்து விட்டு பகலிலும் டிவிப்பொட்டியின் முன் உட்கார ஆரம்பித்தது. டிவிப்பொட்டியை வாங்கி வைப்பது ஒவ்வொரு வீட்டின் அந்தஸ்த்தைக் காட்டுவதாக மாறிப் போனது. கலியாண டௌரி விசயங்களில் டிவிப்பொட்டி முக்கியமான பொருளாக ஆரம்பித்தது. உறவினர்கள் யாராவது வந்தால் அவர்களையும் டிவிப்பொட்டி முன் உட்கார வைத்து அவர்களுக்கும் படம் காட்ட ஆரம்பித்தது. அதற்கு முன் நிலைமை அப்படி இருந்ததில்லை. தோட்ட வேலை, வயல் வேலை, வீட்டு வேலை என்று நடந்து கொண்டிருக்கின்ற வேலைகளில் அவர்களும் பங்கெடுத்துக் கொண்டு துணை நிற்பார்கள். வேலையையும் பார்த்துக் கொண்டு குடும்ப விசயங்களையும் பேசிக் கொண்டிருப்பார்கள். இரவில் சாப்பிட்டு முடித்து விட்டு நெடுநெரம் வரை பல்வேறு விசயங்களையும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

            அதற்குப் பின் வந்த 2000 வது ஆண்டு எல்லாவற்றையும் அப்படியே திசை திருப்பிப் போட்டு விட்டது. மிக்ஸி, கிரைண்டர், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் என்று எந்திர வரவுகள் ஒவ்வொன்றாகக் கிராமத்து வீடுகளிலும் நுழைய ஆரம்பித்தன. ஏற்கனவே விவசாயத்தில் இருந்த குபேட்டா, டிராக்டர்களோடு, நடவு எந்திரம், அறுவடை எந்திரம் என்று பல்வேறு எந்திரங்களும் ஒவ்வொன்றாக நுழைய ஆரம்பித்தன. நேரம் மிச்சமாகத் தொடங்க மக்களுக்கு டிவிப்பொட்டியின் முன் உட்கார நேரம் அதிகமாகக் கிடைத்தது. முன்பு போல் ஆடு, மாடுகளைக் கிட்ட இருந்து மேய்ப்பதும் குறைந்து போய் அது அக்கம் பக்கத்து வயல்களிலும், தோட்டங்களிலும் சகட்டு மேனிக்கு மேய ஆரம்பித்ததும் அதற்குப் பின்தான் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக வயல்களுக்கு வேலி அடைக்கும் வேலை படிப்படியாகத் தொடங்கி விட்டது. இப்போது வேலியில்லாத கிராமத்து வயல்களைப் பார்ப்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. வேலியில்லாத கிராமத்து வயல்களின் வரப்புகளின் வழியாக குறுக்காக நடந்து செல்வது மாறிப் போய் இப்போது எல்லாரும் சாலை வழியாகத்தான் போகிறார்கள். அதாவது குறுக்கு வழிக்கு வழியில்லாமல் ஆக்கி விட்டார்கள்.

            கடின உழைப்புக்கான தேவை குறைந்து போன போது ஆடு, மாடுகளை வைத்துப் பராமரிப்பது எந்நேரத்துக்குமான வேலையாக இருந்த காரணத்தால் பெரும்பாலான வீடுகளில் ஆடு, மாடுகளும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தன. அதற்கேற்ப பால் பாக்கெட்டுகள் வீடு தேடி வர ஆரம்பித்தன. தயிரும் பாக்கெட்டுகளில் அடைப்பட்டு கெட்டியாக விலாசம் கேட்டு வீட்டில் வந்து விழுந்தது. எந்நேரத்துக்கும் பாலும், தயிரும் வாங்கலாம் எனும்படி கிராமத்துப் பெட்டிக்கடைகள் பிரிட்ஜ்களோடு இயங்க ஆரம்பித்தன.

            மிச்சமான நேரத்தில் மக்கள் படிப்பதிலோ வேறு ஆக்கப் பூர்வமான பணிகளிலோ ஈடுபட்டிருக்கலாம். மக்கள் அதுவரை படித்துக் கொண்டிருந்த வாராந்திர ராணி, குமுதம், ஆனந்த விகடனையும் கூட தூக்கி எறிந்து விட்டு முழுநேரமாக டிவிப்பொட்டியின் உட்கார்ந்ததுதான் நிகழ்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாகச் சேனல்கள் விரிவாகி செய்திச் சேனல்கள் உருவான பின் தினகரன், தினத்தந்தி, தினமணி என்று நாளிதழ்கள் வாங்குவதையும் நிறுத்தி விட்டனர். “அதாம் டிவிப்பொட்டியிலேயே எல்லாம் சொல்றாம்ல. பெறவென்ன பேப்பர்ர வாங்கிப் படிச்சுக் கிழச்சாவுது? அதுக்கு வேற தண்டக்காசியா?” என்று சிக்கனம் பேசுவது போலப் பேசி நாளிதழ் வாங்கிப் படிப்பது குறித்து அலுத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

            கிராமத்தில் எல்லாம் பகலில் திரைப்படம் பார்க்க மாட்டார்கள் என்று எனக்கு ஒரு காலத்தில் நம்பிக்கையையும், இப்போது டிவிப்பொட்டியைத் திறந்தபடி விடியும் கிராமத்தின் பொழுதுகளின் நிதர்சனத்தையும் நினைக்கும் போது கால் நூற்றாண்டு காலத்திற்குள் கிராமமானது தான் உருவாக்கி வைத்திருந்த நம்பிக்கைகளைத் தானே அடித்து நொறுக்கி விட்டது என்றுதான் தோன்றுகிறது.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...