சத்யனின் ‘மழையைப் போலத்தான் நீயும்’ – ஓர் எளிய நூலறிமுகம்
காதலை வெளிப்படுத்த இயலாத காதலர்களுக்கான தொகுப்பாக ‘மழையைப்
போலத்தான் நீயும்’ என ‘உம்’மையில் உறுதிப்படுத்தி ‘உச்’ கொட்ட வைத்திருக்கும் சத்யனின்
இரண்டாவது கவிதைத் தொகுப்பு இந்நூல்.
‘எழுத மறந்த கவிதை’ என்ற சத்யனின் முதல் தொகுப்பின் சில கவிதைகள்
இத்தொகுப்பில் உள்ளதற்கு முதல் தொகுப்பின் தலைப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மழைக்கு ஒதுங்கிய பின்னும் மழையில் நனைவதாக நூலின் தொடக்கத்தில்
முன்னுரைக்கிறார் சத்யன். கவிதை அப்படித்தான் இத்தொகுப்பு முழுவதும் மழையைப் போலப்
பொழிந்து கொண்டிருக்கிறது சத்யனுக்கு. மழை ஓய்ந்த போதும் மழைக்கான கனங்களைக் கவிதைகளாய்க்
கொண்டு வந்து கொண்டிருக்கிறது அவருக்கு.
குழந்தைகளும் கவிஞர்களும்
அபூர்வமாய் ஒரு சில மனிதர்களும் நனைய விரும்பும் மழையில் பெரும்பாலோனோர் குடை பிடித்துச்
செல்வர். மழையைத் தோழமையோடு ஏற்று நனைவதற்கு ஒரு குழந்தைமை அல்லது கவிதைமை அல்லது அபூர்வ
ரசனைத் தன்மை வேண்டியிருக்கிறது. இந்த மூன்றும் கலந்த கலவையாகச் சத்யன் இருப்பது அவரது
கவிதைத் தொகுப்பில் புலப்படுகிறது.
வயது கடந்த பின்னும் சத்யன் இன்னும் குழந்தையாக நீடித்துக் கொண்டு
இருப்பது
“இருள்
சூழ்ந்த
கருவேலங்காட்டில்
ராட்சச
வேகத்தில் விரட்டிய
தலையில்லா
உருவத்திடம்
தப்பிய
அதே பயத்தில்தான்
வியர்த்து
கண்விழித்தெழுந்தேன்
…
… …”[1]
எனும்படியான கொடுங்கனவில்
விழித்தெழுந்த போது தாயிடம் பேச வேண்டும் என்ற அவரது துடிதுடிப்பில் தெரிகிறது.
மகள் எனும் கவிதையைப் பெற்ற கவிதைமை ஊடிய கவிதைத் தகப்பனாக இருப்பதை
“மகளின்
இமைகளைப் போல்
படபடத்து
பயம்
தோய்ந்து
தூரத்துச்
செம்பருத்தியின்
நுனி
மொட்டில் அமர்ந்தது வண்ணத்துப்பூச்சி.”[2]
என்ற கவித்துவமான வரிகளில்
கண்டறிய முடிகிறது.
மற்றும் ஒரு வகைமையில் சத்யன் அபூர்வமான ரசனைக்கான சொந்தக்காரராக
இருப்பதை
“ஐநூறு
ரூவா கொடு
இல்லாட்டி
முப்பத்து
அஞ்சு ரூவா கொடு
என்று
அம்மாவிடம்
அழுது அடம் பிடிக்கும்
கணக்கு
தெரியாத
குழந்தை
போலத்தானிருக்கிறது
உன்
பேச்சும்…”[3]
என்று விளம்புமிடத்தில் விளங்கிக்
கொள்ள இயலுகிறது.
எங்கு எப்படி குழந்தைமையாகவோ, கவிதைமையாகவோ, ரசனைப் பிரியராகவோ
எவ்விதம் சுழன்றாலும் உறவுகளையும் நட்புகளையும் மைய அச்சாகக் கொண்டு சத்யன் தன் முதல்
தொகுப்பைப் படைத்தது போல இரண்டாவது கவிதைத் தொகுப்பின் இருப்பையும் கட்டமைத்துக் கொள்கிறார்.
“முகநூலில் அமர்ந்து
அறிமுகமில்லாதவருக்கு
சமையல்
குறிப்பிற்காக
‘அருமை
அருமை’யென
எழுதும்
போது
மனைவியின்
சமையலை
என்றுமே பாராட்டாத
கணவனாக
என்னில்
குட்டிக் கொள்கிறேன்…”
என்று காதலைச் சொல்லாத காதலிக்காக
வனையப்பட்ட தொகுப்பில் மனைவிக்கும் ஓர் இடம் தருகிறார். இதைக் காதலைச் சொல்லி விட முடியாத
எங்கோ இருக்கும் காதலியின் மீது வைத்திருக்கும் அளவிட முடியாத பிரியத்தில் அளவிடக்
கூடிய அளவிற்கு ஒரு மில்லியையாவது அருகில் இருக்கும் மனைவிக்குத் தந்து விட வேண்டும்
என்ற ஏக்கத்தின் வெளிப்பாடாகக் கொள்ளலாம்.
‘மழையைப் போலத்தான் நீயும்’ என்று மனதோடு மென்மையாய்க் குளுமையைப்
படர விடும் நூலில்
“வதைப்பின்
வலியுணர்வதில்
அப்படியொரு
திருப்தி
நம்மில்
பலருக்கு...”[4]
எனும் வெம்மையைக் கக்கும்
வரிகளும் உண்டு. தலைப்பில் அகம் சார்ந்த தொகுப்பு போன்ற தோற்றம் தரும் இந்நூலில் புறம்
சார்ந்த சமூகக் கவிதைகளும் ஊடாடி நிற்கின்றன.
“நாளைக்கு வழக்கம் போல
அய்யனார்
சிலையை
போலீஸ்
பாதுகாப்போட
கவர்மெண்டுக்கு
ஒப்படைக்கணும்னு
பஞ்சாயத்து
சார்புல கேட்டுக்கிறேன்…!”[5]
என்ற கவிஞர் சத்யனின் அனுபவம்
தற்கால வழிபாட்டுப் பதிவாகவும் நிகழ்கால சமூகத்தின் வேறு பல நிகழ்வுக்கான குறியீடாகவும்
கொள்ளத்தக்கது எனலாம். ஊருக்குக் காவல் தரும் தெய்வத்துக்குப் போலீஸ் காவல் தேவைப்படும்
நிலையை நோக்கி மனிதர்கள் ஒரு காலத்தில் தெய்வத்திற்குக் கட்டுபட்டவர்களாக இருந்து தற்போது
போலீசுக்குக் கட்டுப்படுபவர்களாக மாறியிருக்கிறார்கள் என்ற தன் கிராமியப் பார்வையைப்
பதிவு செய்கிறார் சத்யன்.
ஆகச் சுருக்கமாகச் சொல்வதென்றால் அகக்காதல், சமூக மோதல், ஆழ்மன
உக்கிரம் என கதம்பமாகத் தன் இரண்டாவது தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார் சத்யன் எனலாம்.
நூல் குறிப்பு
நூலாசிரியர் |
ஆர். சத்யன் தொடர்பு
எண் : 94433 82614 |
நூல்
பெயர் |
மழையைப் போலத்தான் நீயும் |
பதிப்பும்
ஆண்டும் |
முதல்
பதிப்பு, 2014 |
பக்கங்கள் |
80 |
விலை |
ரூ.
80/- |
நூல்
வெளியீடு |
சித்ரகலா பதிப்பகம், அகரக்கடம்பனூர், கீழ்வேளூர்
– 611 104, நாகப்பட்டினம்
மாவட்டம். தொடர்பு
எண் : 94433 82614 |
[1] ஆர். சத்யன், மழையைப் போலத்தான் நீயும், ப. 11
[2] ஆர். சத்யன், மழையைப் போலத்தான் நீயும், ப. 19
[3] ஆர். சத்யன், மழையைப் போலத்தான் நீயும், ப. 65
[4] ஆர். சத்யன், மழையைப் போலத்தான் நீயும், ப. 41
[5] ஆர். சத்யன், மழையைப் போலத்தான் நீயும், ப. 67
No comments:
Post a Comment