23 Jul 2021

சத்யனின் ‘எழுத மறந்த கவிதை’ – ஓர் எளிய நூலறிமுகம்

சத்யனின் ‘எழுத மறந்த கவிதை’ – ஓர் எளிய நூலறிமுகம்

            பெயரெச்சமாய் அமைந்த தலைப்பில் ‘கவிஞர்’ என்ற பெயரை எழுத முயன்றிருக்கும் ஆர். சத்தியனின் முதல் கவிதைத் தொகுப்பாக அமைகிறது ‘எழுத மறந்த கவிதை’

            ஓவியங்களும் கவிதைகளுமாய் அமைந்துள்ள வித்தியாசமான இக்கவிதைத் தொகுப்பு நாட்டுப் பண்டம் போன்றது. சத்யனின் குடும்பம் சேர்ந்து தயாரித்த ஒரு தொகுப்பு. கிராமத்துக் கூட்டுக் குடும்ப வாழ்வைக் காட்டும் முதல் அத்தியாயம்.

            பெரும்பாலான கவிஞர்களுக்குக் கிடைக்காத ஒரு நல்லூழ் சத்யனுக்குக் கிடைத்திருக்கிறது. மகனின் கவிதைக்கு ஓவியம் வரையும் தந்தை, தொகுப்பை வெளியிடும் தாய், இக்கவிஞரையும் அவர் எழுதும் கவிதைகளையும் கொண்டாடும் குடும்பம், உறவுகள், நட்புகள் என வாழ்ந்து வரும் சத்யனுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் பெரும்பாலான கவிஞர்களுக்குக் கிடைக்காத ஒன்று என்று சொல்லலாம். குறிப்பாக மகனின் எழுத்தைக் கொண்டாடும் தந்தை கிடைப்பது அபூர்வம் என்று நினைக்கிறேன். அதனால் கூட “சான்றோன் எனக்கேட்ட தாய்”[1] என்று வள்ளுவர் கூறியிருக்கலாம்.

            இத்தொகுப்புக்கு எழுத்தாளர்கள் பட்டுக்கோட்டை பிரபாகரும், சுபாவும் அணிந்துரை வழங்கியிருக்கிறார்கள். தமிழ்கூறு நல்லுலகுக்குக் கிடைத்திருக்கும் வளமையான கவிஞர் சத்யன் என்பதாக அவர்களது அணிந்துரை கட்டியம் கூறுகிறது.

            முதல் கவிதைத் தொகுப்புக்கான வழமையான ஒரு வடிவம் இருக்கிறது. இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது, மனதுக்குள் மென்று முழுங்க முயற்சித்துக் கொண்டிருக்கும் காதலைக் காட்டுவது, அந்நியமாகிக் போய்க் கொண்டிருக்கும் மனிதர்கள் மீதான வெறுப்பைப் பாடுவது, சமூக அவலங்களைச் சாடுவது, கவிதைகளின் கடைசி வரியில் ஓர் அதிர்வலையைக் கொண்டு வருவது, தன் வியப்பை முன்னிருத்துவது, வார்த்தைகளாலும் உணர்ச்சிகளால் மேம்பட்ட மனோ உலகத்தை எழுப்ப முயல்வது, அன்று போல் இன்றில்லை எனும்படியான ஒப்பீட்டுச் சோகங்களைக் காட்சிப்படுத்துவது, ஒரு சில சமயங்களில் எழுதும் எழுத்துக்கு எதிராகப் புலம்பலை வெளிப்படுத்துவது என்று சொல்லிக் கொண்டு போகலாம்.

            சத்யனின் முதல் கவிதைத் தொகுப்பும் வழமையான வடிவங்களோடு பொருந்திப் போகிறது என்றாலும் அவர் தன் கவிதைகளால் வித்தியாசப்பட முயற்சிப்பதும் அதற்கான எழுத்து வினைகளைத் தன் கவிதைகளில் முயற்சித்துப் பார்ப்பதும் தொகுப்பில் தெரிகிறது.

            ‘உங்களுக்காவது…’[2] என்ற தலைப்பிலான கவிதையில் ஒரு பிஞ்சுமனதுக்கும் ஆசிரியர் மேல் கொள்ளும் மயக்கத்துக்குமான சிறுகதைக்கான பேசுபொருளை எளிமையான மொழியில் வெளிப்படுத்தும் போது அது அற்புதமான கவிதைத் தோற்றத்தைத் தருகிறது. கவிதையின் முடிவிலிருந்து மீண்டும் கவிதையை முதலிலிருந்து படிக்கும் போது பல பொருள்கள் விளங்குவதை அக்கவிதையில் காண முடியும்.

            கிராமங்களில் உடம்புக்குச் சுகமில்லாமல் போகும் சந்தர்ப்பங்களில் மாந்திரீகத்திலிருந்து மருத்துவத்தை நோக்கிச் செல்லும் சம்பவங்கள் நடக்கும். இதற்கு மாறாக மருத்துவத்திலிருந்து மாந்திரீகத்தை நோக்கிச் செல்லும் அனுபவத்தை ‘அம்மச்சிக் கிழவியும் அவஸ்தைகளும்…’ என்ற கவிதையில் பதிவு செய்யும் சத்யன் அம்மச்சிக் கிழவியின் அவஸ்தையை விட கோடங்கியின் அவஸ்தையைக் கடைசியாகப் பதிவு செய்யுமிடத்துக் கிராமங்களில் ஒளிந்திருக்கும் அறியப்படாத நுட்பமான வாழ்வியலைப் பதிவு செய்கிறார்.

            சத்யனின் தந்தையான ஓவியர் ஆழி ஐயாவிடம் ஒரு பழக்கமுண்டு. ஒரு கொட்டாங்கச்சியை அடுப்பெரிக்கப் போடுவதென்றாலும் அதைத் தரையில் தட்டி விட்டுப் போடுவார். கொட்டாங்கச்சியின் எஞ்சியிருக்கும் தேங்காய் வாடைக்கு எறும்புகள் அதனுள் இருக்குமென்பதால் அப்படியே தூக்கி அடுப்பெரிக்கப் போட்டால் அதிலிருக்கும் எறும்புகள் வெந்து சாகும் என்ற உயிர்நேயம்தான் அதற்குக் காரணம். அந்த உயிர்நேயத்தின் தொடர்ச்சியாக அமைவது போல

                        “எதிலும்

                        லயிக்கவில்லை மனசு…!

                        நேற்று

                        எரியும் மெழுகுவர்த்தியில்

                        விழுந்து

                        துடிதுடித்து

                        விருந்தாகிப்போன

                        விட்டில் பூச்சியை

                        கவனித்ததிலிருந்து…”[3]

என்ற கவிதையைச் சத்யன் அமைப்பதாகக் கருத இடம் இருப்பதாக நினைக்கிறேன்.

            நாட்குறிப்பைக் கவிதை மொழியில் பதிவு செய்தால் எப்படி இருக்கும் என்ற யோசனைக்குப் பதில் சொல்வது போன்ற கவிதைகளும் இத்தொகுப்பில் இருக்கின்றன. அவற்றைக் கவிதைக்கான கச்சாப் பொருளாய் ஆக்கியதில் சத்யன் தனித்துத் தெரிவதும் அக்கவிதைகளில் அவதானிக்க முடிகின்ற ஒன்று.

                        “நடந்த திருமணத்தால்

                        வட்டிக் கடைக்காரரும்

                        துணிக்கடைக்காரரும்

                        நகை வியாபாரியும் கூட

                        புது உறவுகளானார்கள்

                        மாப்பிள்ளை மட்டும்

                        வெகு தொலைவில்…”

என்ற கவிதையில் குடும்ப உறவுகளையும் சமூக உறவுகளையும் ஓர் உரையாடல் களத்துக்குள் கொண்டு வந்து காட்சிப்படுத்துகிறார். பொருளாதாரத்தால் அந்நியமாகும் குடும்ப உறவுகளும், அதே போருளாதாரத்தால் நெருங்கி வரும் சமூக உறவுகளும் சம காலத்தில் ஒரு மாறுபட்ட நகை முரணாக அமைவதை மேற்காணும் கவிதையில் வெகு நுட்பமாக சத்யன் பதிவு செய்கிறார்.

            ஒரு மத்திம அளவுள்ள ‘பசி’ எனும் தலைப்பிலான கவிதையின் கடைசி மூன்று வரிகளாக

                        “தீர்க்க முடிகிறது

                        அவனது உடல்பசிக்காக

                        அவளது வயிற்றுப் பசியை.”[4]

என அமையும் வரிகளில் ஹைக்கூவின் தெறிப்பைக் காட்டுகிறார் சத்யன். நூலின் நிறைவாக சில ஹைக்கூ கவிதைகளையும் சேர்த்திருக்கிறார் சத்யன்.

                        “விரைவாக வா இரவே!

                        ஆடையில்லாத

                        எங்கள் குழந்தை.”[5]

என்ற ஹைக்கூவில் அதீதமும் இயல்பும் கலந்த கலவையில் ஏதோ ஒரு மன வாதையை உருவாக்கி விடுகிறார் சத்யன்.

            ‘சொல்லி விடு’[6] என்ற தலைப்பிலான கவிதையில் ஓர் ஆணின் வேதனையைக் கவிஞனாய்ச் சத்யன் பதிவு செய்ய, முகம் தெரியாத ஒரு பெண்ணின் வேதனையைப் பெண்ணின் பக்கம் நின்று ஓவியர் ஆழி ஓவியக்கவிதையாய்ப் பதிவு செய்யுமிடத்து மகனை விஞ்சி விடுகிறார் தந்தை என்று தோன்றுகிறது. இவ்வாதமானது ‘தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்’ என்று கிராமத்துச் சொலவத்துக்கு எதிராக அமைந்தாலும் கவியும் ஓவியமும் அற்புதமாய் கலந்துள்ள அந்த அற்புத பக்கத்தைத் தரிசிக்கவேணும் இத்தொகுப்பைக் கண்ணார கண்டு நெஞ்சார வாசிக்க வேண்டும்.

நூல் குறிப்பு

நூலாசிரியர்

ஆர். சத்யன்

தொடர்பு எண் : 94433 82614

நூல் பெயர்

எழுத மறந்த கவிதை

பதிப்பும் ஆண்டும்

முதல் பதிப்பு, 2003

பக்கங்கள்

80

விலை

ரூ. 30/-

நூல் வெளியீடு

சித்ரகலா பதிப்பகம்,

அகரக்கடம்பனூர்,

கீழ்வேளூர் – 611 104,

நாகப்பட்டினம் மாவட்டம்.

தொடர்பு எண் : 94433 82614

 



[1] திருக்குறள், 69

[2] ஆர். சத்யன், எழுத மறந்த கவிதை, ப. 19

            உங்களுக்காவது

            “மூணாங்கிளாசுல

            நான்தான் பர்ஸ்ட் ரேங்கு.

            எனக்கு ரேகா டீச்சர்ன்னா உசுரு.

            ஏதோ பேப்பர்ல எழுதி வெச்சிக்கிட்டு

            அதை

            டீச்சர் கொடுக்கச் சொல்லுவாங்க,

            நாலாங்கிளாசு குமார் சாருக்கு..!

            அப்பல்லாம் எனக்கு

            முட்டாயும் முத்தமும் கிடைக்கும்!

            நான் தப்பா எழுதிப்புட்டாலும்

            நிறைய மார்க்கு போடுவாங்க.

            திடீர்ன்னு

            ரெண்டு பேரும்

            காணாமப் போயிட்டாங்க…

            அம்மாகிட்டே கேட்டேன்.

            சரியா பதில் சொல்லலை!

            பாபு கிட்டே கேட்டேன்.

            அவனும் உதடு பிதுக்கிட்டான்.

            ரேகா டீச்சர் மாதிரியே

            வேற டீச்சர்

            வருவாங்களான்னு தெரியலை.

            உங்க யாருக்காச்சும்

            தெரியுமா?”

[3] ஆர். சத்யன், எழுத மறந்த கவிதை, ப. 27

[4] ஆர். சத்யன், எழுத மறந்த கவிதை, ப. 63

[5] ஆர். சத்யன், எழுத மறந்த கவிதை, ப. 79

[6] ஆர். சத்யன், எழுத மறந்த கவிதை, ப. 36

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...