22 Jul 2021

இயற்கையை விரும்புதலும் இயற்கைக்குத் திரும்புதலும்

இயற்கையை விரும்புதலும் இயற்கைக்குத் திரும்புதலும்

            இயற்கைங்றது இயல்பா என்ன இருக்கோ அதுதாம். அதுக்கு மேல வேற ஒண்ணுமில்ல. மனித வாழ்க்கைங்றது முயற்சிகள் நிரம்புனது. மனித முயற்சியால இயற்கையைச் செயற்கையா மாத்த முடியுது. இயற்கைக்கு மேலயும் ஒரு வாழ்க்கைய நிர்மாணிச்சிக்க முடியுது.

            காங்கிரீட்டால ஆன பல அடுக்கு வீட்டை உங்களோட முயற்சியால உருவாக்கிக்க முடியும். ஆனா அதே முயற்சியால நீங்க உருவாக்குன காங்கிரீட்டை இயற்கையான மண்ணா மாத்த முடியாது. நம்மோட முயற்சியோட அளவு அவ்வளவுதாம்.

            நம்மோட முயற்சியால ரசாயனங்கள எரிச்சி எங்கெங்கயோ போக முடியும். எரியுற ரசாயனத்தால உண்டாவுற நச்சை நம்மோட முயற்சியால சுத்தப்படுத்த முடியாது. அதெ சுத்தப்படுத்துறேம்ன்னு ஒரு கருவிய கண்டுபிடிச்சாலும் அந்தக் கருவி உண்டாக்குற கழிவெ சுத்தப்படுத்துறேன்னு அதுக்கு ஒரு கருவிய கண்டுபிடிச்சு அது முடிவில்லாத தொடர்ச்சியா போயிட்டே இருக்கும்.

            மனித முயற்சியால ஓர் அணுகுண்டை ரொம்ப சுலுவா இப்போ தயாரிச்சிட முடியுது. ஆனா அது வெடிச்சப்புறம் உண்டாவுற கதிரியக்கம் சூழ்ந்த எடத்தெ திரும்ப பழையபடிக்குக் கொண்டு வர்றது மனித முயற்சியால ஆவுற காரியம் இல்ல.

            நல்ல தண்ணிய கழிவுகக் கலந்த தண்ணியா, சாயங்க கலந்த தண்ணியா ரொம்ப சுலுவா நம்மோட முயற்சி மாத்திப்புடும். அதெ திரும்பு மனுஷன் குடிக்குற தண்ணியா மாத்துறது மனுஷனோட முயற்சிக்கு அவ்வளவு சுலுவில்ல.

            இப்படி நிலத்தை, காத்தை, தண்ணிய ரொம்ப சுலுவா நம்மாள என்ன வேணாலும் பண்ணிட முடியலாம். அதெ திரும்ப பழைய நிலைக்குக் கொண்டு வர்றதுங்றது சுலுவான காரியம் இல்ல.

            நான் மனித முயற்சியைக் குறைவா மதிப்பிடுறதாவோ, எதிர்மறையா காட்டுறதாவோ தயவுபண்ணி நினைச்சிப்புடாதீங்க. நம்மோட முயற்சிக்கும் இயற்கைக்குக் கட்டுப்பட்ட ஓர் எல்லை இருக்குங்றதுக்காகத்தாம் இதையெல்லாம் சொல்றேம்.

            உடம்புக்கு முடியலன்னா அதெ சரி பண்ணிக்கிறது இப்போ ரொம்ப சுலுவா இருக்கு. ஆனா ஆரோக்கியமா வாழ்றதுதாம் கஷ்டமா இருக்கு. காரணம் நாம்ம இயற்கையப் போட்டு அந்த அளவுக்கு இம்சைப் பண்ணிக்கிட்டு இருக்கோம். அந்த இம்சைக்கு பிரதிவினையாத்தாம் ஆரோக்கியமற்ற அமைதியற்ற ஒரு வாழ்க்கைய வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

            நமக்கு ஆரோக்கியமும் அமைதியும் வேணும்ன்னா அதுக்கான வாழ்க்கை முறைங்றது வேற. சொகுசும் வசதியும் வேணும்ன்னா அதுக்கான வாழ்க்கை முறைங்றது வேற.

            இயற்கையோட வாழணும்ன்னா அதுக்கு நீங்க பெரிசா எதையும் முயற்சி பண்ணாம இருந்தாலே போதும். இயற்கை எப்படி இருக்கோ அதெ புரிஞ்சிக்கிட்டு அதுப்படி இருந்தா போதும். அதுக்கு எவ்வளவு தேவையோ அதுல நிறைவடையுற ஒரு மனசு மட்டும் வேணும்.

            சொகுசுக்கும் வசதிக்கும் நிறைவில்லாத மனசு இருந்தாத்தாம் சாத்தியம். அப்போத்தாம் இன்னும் வேணும், இன்னும் வேணும்ன்னு உங்க மனசெ தூண்டிக்கிட்டு உங்களால இயங்கிக்க முடியும்.

            இயற்கையா வாழுறப்போ இயற்கை உங்கள ஓர் அங்கமா தனக்குள்ள இணைச்சுக்கும். உங்களுக்கு அதால தர்ற முடிஞ்ச ஒரு விசயம்ன்னா அது மனதிருப்தி ஒண்ணுத்தாம். அதெ தவிர இயற்கை உங்களுக்குத் தர்றதுக்கு அதுகிட்டெ வேற விசயம் எதுவுமில்ல.

            அதால இதால சொல்ற விசயம் ஒண்ணுத்தாம். எவ்வளவு தேவையோ அதுக்கு மேல வாழ முயற்சிக்காதீங்கறதுதாம். உங்களுக்கு எவ்வளவு வீடு தேவையோ அதுக்கு மேலே காங்கிரீட்டைக் கொட்டி நல்லா இருக்குற மண்ணைக் கெடுக்காதீங்க.

            உங்களுக்கு எவ்வளவு தேவையோ அதுக்கு மேல எரிபொருள நிரப்பிக்கிட்டுப் பிரயாணம் பண்ணாதீங்க. மிதிவண்டியில போறது, நடந்து போறதுன்னு எவ்வளவோ விசயங்க இருக்கு. அதுல ஒண்ணுத்தெ கொஞ்சமாச்சம் மாத்திக்க முடியுமான்னு யோசனை பண்ணுங்க.

            தேவைக்கதிகமா பொருள்களை வாங்கி வீட்டுல குமிச்சிக்க நினைக்காதீங்க. நீங்க நினைக்குறாப்புல நீங்க வாங்குற அத்தனையையும் பயன்படுத்திக்கிட்டு இருக்க மாட்டீங்க. அதுல பெரும்பாலனது உங்க வீட்டுல மூலையில குப்பையப் போலத்தாம் குமிஞ்சு கெடக்கும்.

            உங்ககிட்டெ தேவைக்கதிமாக இருக்குறதெ இல்லாதவங்களுக்கு எந்த விதமான நன்றியையோ, பிரதிபலனையோ எதிர்பாக்காம கொடுக்கப் பழகுங்க. ஏன்னா இயற்கை நமக்கு அப்படித்தாம் கொடுக்குது. அது நம்மகிட்டெயிருந்து எந்த நன்றியையோட பிரதிபலனையோ எதிர்பார்க்கிறதில்ல. நாமளும் இயற்கைக்கு எந்த விதமான நன்றியையோ பிரதிபலனையோ செலுத்த வேண்டியதில்ல. ஆனா நன்றிகெட்ட தனமா நடந்துக்காம இருக்கலாம்.

            அப்புறம் இதுல எனக்கு ஓர் அனுபவம் இருக்குன்னு சொல்லிட்டு அதெ சொல்லாம விட்டுடக் கூடாது பாருங்க. இயற்கை தர்ற புரிதல்தாம் அந்த அனுபவம். முடிஞ்ச வரைக்கும் எளிமையா இருக்குறது, இயற்கையோட இயற்கையா இருக்குறதுன்னு நிறைய விசயங்க அதைப் பின்தொடர்ந்து வர்றதெ நீங்க அந்தப் புரிதலின் மூலமா உணர ஆரம்பிக்கலாம்.

அதுல உங்களை அறியாமலே வாழ்க்கை குறித்த சரியான பார்வையும் தெளிவும் கிடைக்குது பாருங்க. அதெ இயற்கை தர்ற பொக்கிஷம்ன்னு சொல்லுலாம். எல்லாத்தையும் விட்டுட்டு இயற்கையைப் புரிஞ்சிக்க முயலுறவங்களுக்குத்தாம் இயற்கை அந்தப் பொக்கிஷத்தைத் தருது. அது ரொம்ப அலாதியான அனுபவம்ன்னும் சொல்லலாம்.

அந்த அனுபவத்துக்குப் பெறவு நாம்ம ரொம்ப இயற்கைய இம்ஷிக்க மாட்டோம். ஏன்னா அதுக்குப் பெறவு உண்மையான சுகங்றது என்னான்னு தெரிஞ்சிடும். அந்தச் சுகம்ங்றது இயற்கையோட இயற்கையா இருக்குறதுதாம். அப்படி இருக்க முயற்சிக்கிறது கூட கிடையாது.

அந்த அனுபவம் உள்ளுக்குள்ள நிகழ்ந்துட்டா மனசு தானா ஒரு ஒடுக்கத்துக்கும் ஓர்மைக்கும் வந்துடும். அதுக்குப் பெறவு இயற்கையில நீங்க ஓர் அங்கம். அதுவரைக்கும் இயற்கைக்கு எதிரான ஒரு போர்க்களத்தெ உருவாக்குற மனுஷங்களத்தாம் நாம்ம இருக்கிறோம்ங்றதெ மறுக்க முடியாது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...