21 Jul 2021

ஆரோக்கியத்துக்கு இன்னொரு பேரு இருக்கு!

ஆரோக்கியத்துக்கு இன்னொரு பேரு இருக்கு!

            சௌக்கியங்களான்னு நாம்ம ஆரோக்கியத்தப் பத்தி பேச ஆரம்பிச்சு சரியான எடத்தெ நோக்கி வந்துட்டோம். அந்த சரியான இடம்ங்றது இயற்கையோடு இயற்கையா இயற்கையோட ஓர் அங்கமா நாம்ம இருக்குறதுதாம். ஆன்னா துரதிர்ஷ்டவசமா நாம்ம இயற்கையோட இயற்கையாவும் இல்ல, இயற்கையோட ஓர் அங்கமாவும் இல்ல. ரொம்ப செயற்கையா இருக்கோம், இயற்கைக்குப் பங்கமாவும் இருக்கோம். எல்லா விதத்திலேயும் இயற்கையிலிருந்து விலகியே இருக்கோம். அதுக்கு நாம்ம கொடுக்குற விலைதாம் ஆரோக்கியத்துக்காக நாம்ம செலவழிக்கிற அத்தனை காசும்.

            இயற்கையே சொகுசுங்றது ஒரு மாபெரும் உண்மை. ஆனா நாம்ம தேடிக்கிற சொகுசு நம்மள இயற்கையிலேந்து விலகிப் போக வைக்குது. இயற்கை தர்ற குளிர்ச்சியைச் செயற்கை தந்துட முடியாது. அப்படியே தந்தாலும் அதுக்கு ஒரு விலையை நீங்க கொடுக்க வேண்டியிருக்கும். உங்களோட வீட்டைச் சுத்தி நாலு மரங்க நின்னா போதும் வீடும் எடமும் அம்புட்டுக் குளிர்ச்சியா இருக்கும். அதை விட்டுட்டு உங்க வீட்டுக்குள்ள ஏதோ ஓர் அறைக்குள்ள ஏசியை வைக்குறப்போ அந்த எடம் குளிரும். மித்த அத்தனை எடமும் வெக்கையா மாறும். ஏம் இந்தப் பூமியையே வெக்கையா மாறுறதுக்கான வேதிக்காத்தையும் அது அனுப்பிக்கிட்டெ இருக்கும். உங்க ஒருத்தரு உடம்பும் உங்க குடும்பத்தாரு உடம்பும் குளிர்ச்சியா இருக்கணும்ன்னு உலகத்தைச் சூடு பண்ணுற வேலை அது.

            இந்த உலகத்துல மரமும் மழையும் தர்ற குளிர்ச்சி மனுஷனுக்குப் போதுமானது. அது கெடுதல பண்ணாது. ஏசி தர்ற குளிர்ச்சி உங்களுக்குக் கெடுதலத்தாம் பண்ணும். இயற்கை வெக்கையா இருக்குறப்போ அந்த வெக்கைய உடம்பு ஏத்துக்கிறதுதாம் நல்லது. ஏன்னா வெக்கையா இருக்குற இயற்கை எப்பவும் வெக்கையாவே இருக்கிறதில்ல. அது வெக்கையா இருக்குறது சீக்கிரமே குளுந்து போகத்தாம்.

இயற்கைய நாம்ம மாத்துறப்போ இயற்கையும் நம்மள தனக்குத் தொடர்புல்லாத ஆளுன்னு நெனைச்சு நம்மள மாத்திக்கிட்டெ இருக்குறாப்புல செஞ்சுடும். நாமளும் மாறிக்கிட்டெ இருப்போம். ஒரு கட்டத்துக்கு மேல மாத்தங்களோட அளவெ உடம்பால ஏத்துக்க முடியாது. ஏன்னா அதாம் உடம்போட இயற்கை. அது சண்டை பிடிக்க ஆரம்பிச்சிடும். அந்த சண்டைத்தாம் நோய்ங்றது.

நோய் சொல்ற பாடம் இதுலேந்து என்னான்னா போதும் இதுக்கு மேல மாத்தாதே, திரும்பவும் இயற்கையா இருந்த எடத்துல என்னைக் கொண்டு போயி விட்டுடுங்றதுதாம். அந்த இயற்கைய திரும்ப கொடுத்துட்டா திரும்ப உடம்பும் பழைய நெலைக்குத் திரும்பிடும். ஆக ஆரோக்கியத்துக்கு இன்னொரு பேரு இருக்கு. அந்த பேருதாம் இயற்கைங்றது.

வியாதிக்காரவுகளப் பாக்க போறப்ப பழங்களத்தாம் வாங்கிப் போறோம். நம்மள அறியாமலேயே நாம்ம அறிஞ்சு வெச்சுருக்கிற ஒரு நல்ல விசயம் அதுதாம். செயற்கையான ஆகாரத்தெ தின்னுத் தின்னுத்தாம் நோய்வாய்ப் பட்டுட்டே, இனிமேலாவது உடம்புக்கு இயற்கையான ஆகாரத்தெ தின்னும் உடம்பு பழைய நிலைக்குத் திரும்பட்டுங்றதுதாம் பழங்கள வாங்கிட்டுப் போறதுக்குப் பின்னாடி இருக்குற ரகசியம். ஆமாம் பழங்களப் போல இயற்கையான உணவு உடம்புக்கு ஏதும் கிடையாது.

காய்கறிகளப் பச்சையா சாப்புடுறதப் போலயும் உடம்புக்கு இயற்கையான ஆகாரம் எதுவும் கிடையாது. அதுக்காகக் கடையில விக்குற கறிகாய்கள வாங்கியாந்து பச்சையா சாப்புட்டுடாதீங்க. அது அத்தனையும் காய்கறிங்க பேர்ல வர்ற ரசாயனம். அதெ மஞ்சளும் மிளகும் சேர்ற குழம்புல போட்டு கொதிக்க வெச்சு சாப்புடுங்க. அதுதாம் நல்லது. அப்போ காய்கறிகள எப்படிப் பச்சையா சாப்புடுறதுன்னா நீங்களே உங்க கையால விதைப் போட்டு ரசாயனம் இல்லாம உங்க கண் பார்க்க விளைவிச்சுச் சாப்புடுங்க.

இப்போ விசயத்துக்கு வந்துட்டோம் பாத்தீங்களா. நம்ம கண் பார்க்க விளையுறதெ தவிர வேறெதையும் ரசாயனம் இல்லாத இயற்கையான பண்டம்ன்னு நம்பாதீங்க. இப்போ இது ஒரு டிரெண்டாயி ரசாயனத்துல வெளைவிச்சதையும் இயற்கையா வெளைவிச்சதா குதிரை காசு, யானை காசு வெச்ச வித்துக்கிட்டு இருக்காங்க.

ரசாயனத்துல விளைவிக்குறதெ விட இயற்கையா விளைவிக்குறப்போ காசு கம்மியாத்தாம் செலவு ஆவும். அது மனநிறைவுக்காகச் செய்யுற ஒண்ணு. யேவாரத்துக்காகச் செய்யுறதில்ல. இயற்கையில விளைவிக்குறப்போ அது நிறைய ஆளு கூலிகளுக்கான செலவைத்தாம் கேக்கும். அந்த வெதத்துல நெறைய ஆளுங்களுக்கு அது வேலையும் கொடுக்கும். மனுஷனுக்குக் கொடுக்க வேண்டிய உடல் உழைப்பையும் கொடுத்துடும்.

இயற்கையில விளைவிக்குறப்போ ஆளு கூலிக்கான செலவு அதிகம்ங்றதால வேணும்ன்னா அதுக்காக அதிகபட்சமா முப்பது சதவீதம் வரைக்கும் விலை கூடுதலா கொடுக்கலாமேயொழிய அதுக்கு மேல கொடுக்க வேண்டியதில்ல. ஆன்னா சந்தையில பாத்தீங்கனா இயற்கையான விளைபொருள்ன்னு நூறு சதவீதம், எரநூறு சதவீதம் வரைக்கும் கூடுதலா விலை வெச்சு விக்குறாங்க. இந்த விலையைத் தாண்டி அந்தப் பொருளு இயற்கையா விளைவிக்கப்பட்டதாங்றதெ உங்க மனசார தெரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டம்.

இந்தக் கஷ்டத்தெ போக்கிக்கிறதுக்கு எளிமையான வழியும் இருக்கு. நம்மள சுத்தி இருக்குறவங்கள இயற்கையான முறைக்கு மாத்தி நாமளும் இயற்கையான முறைக்கு மாறிட்டா பெறவு நமக்குக் கிடைக்குறதெல்லாம் இயற்கையாத்தாம் இருக்கும்.

இந்த இயற்கையான வாழ்க்கையில பயத்துக்குக் கொஞ்சமும் எடமுமில்ல. இதைச் சாப்புடுறமோ, இப்படிப் பண்ணுறோமே இதால என்ன ஆயிடுமோன்னு எதுக்கும் பயப்பட வேண்டியதில்ல. அதே போல எந்தப் பேராசைக்கும் இடமில்ல. நீங்க பேராசைப்பட்டீங்கன்னா அது இயற்கையான வாழ்வா இல்லாமப் போயிடும். இயற்கையான உணவுலயும் வாழ்க்கையிலயும் என்ன சுகம் கிடைக்கணுமோ அது அவ்வளவுதாம். அதுக்கு மேல கிடையாது. அதுக்கு மேல ஆசைப்படுறப்போ அது இயற்கையான உணவாவோ, வாழ்க்கையாவவோ இல்லாமப் போயிடும். இதுல எனக்கு ஓர் அனுபவம் உண்டு. அதை நாளைக்குச் சொல்றேம்.

*****

No comments:

Post a Comment

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு…

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு… எந்தத் தொந்தரவும் வேண்டாம் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் எந்தச் சிக்கலும் வேண்டாம் எந்த இம்ச...