ஆகாரத்தில் அடங்கியிருக்கும் ஆயிரத்தெட்டு செய்தி
ஆகாரம் இல்லாம மனுஷனால வாழ முடியாது. ஆதி மனுஷனோட முதல் வேட்டையே
ஆகாரத்துக்காகத் தொடங்குனதுதாம். அங்க இங்கன்னு அலைஞ்சு திரிஞ்சு வேட்டையாடுன மனுஷன்
நிலையா வாழத் தொடங்குனது பயிர்த்தொழில் செய்ய ஆரம்பிச்சப்பத்தாம். அந்தப் பயிர்த்தொழில்ங்றது
ஆகாரத்துக்காகத்தாம். ஓரிடத்துல நிலையா வாழத் தொடங்குன மனுஷன் தொழில் பண்ணி சம்பாதிக்க
ஆரம்பிச்சதும் ஆகாரத்துக்குத்தாம். ஒரு மனுஷன் பட்டினியா இருக்குறத பாக்க முடியாமத்தாம்
அந்தக் காலத்துல தானத்துல சிறந்ததுன்னு அன்னதானத்தைச் சொன்னாங்க. ஆகாரம் இல்லாம கஷ்டப்படுற
மனுஷனப் பாக்க பொறுக்காமத்தாமத்தாம் மீசைக்கார கவி பாரதி தனியொரு மனுஷனுக்கு உணவில்லன்னா
ஜகத்தையே அழிச்சிடுவோம்ன்னு ரொம்ப கோவமா சொல்றாரு.
நாட்டுல உண்டாவுற அத்தனை பிரச்சனைகளுக்கும் அடிப்படையாவுறது
ஆகாரப் பிரச்சனைத்தாம். ஒரு படி நெல்லு கூட கேட்டதுக்காக உண்டாவுற வர்க்கப் போராட்டம்
கூட ஆகாரத்தை அடிப்படையாகக் கொண்டதுதானே. இப்போ இந்தக் கொரானாவுக்கு இன்னும் மருந்து
கண்டுபிடிக்கலன்னாலும் அதுக்கான மருந்து ஆகாரத்துல இருக்குங்றதாலத்தாம் சத்தான ஆகாரத்தைச்
சாப்புடுன்னு சொல்றாங்க. இதனால என்ன தெரியுதுன்னா மனுஷனோட அத்தனைப் பிரச்சனைக்குமான
தீர்வு அவ்வேம் சாப்புடுற ஆகாரத்துல இருக்குங்றதுதாம். அந்த ஆகாரம் நல்ல வெதமா இருந்தா
மனுஷனும் நல்ல வெதமா இருப்பாம். அதுல கோளாறு உண்டாயிடுச்சுன்னா மனுஷனும் கோளாறு பிடிச்சவனத்தாம்
இருப்பாம்.
நம்ம கிராமத்துல ரெண்டு பெரிசுங்க இருந்தாங்க. ஒருத்தரு நரம்பு
தாத்தா. இன்னொருத்தரு குண்டு தாத்தா. ரெண்டு பேருக்கும் வெவ்வேறான உடம்பு வாகுங்றதெ
அவுங்களுக்கு வெச்சிருக்கிற பேரை வெச்செ தெரிஞ்சிருப்பீங்க. அவுங்களுக்கு அவுங்க அப்பா
அம்மா வெச்ச பேரு வேறன்னாலும் இந்தப் பேருதாம் குஞ்சு குளுப்பான்லேந்து பெரியவங்க வரைக்கும்
சட்டுன்னு வாயில வர்ற பேருங்க. இந்த ரெண்டு பேருமே எண்பத்தைஞ்சு வருஷத்துக்கு வரைக்கும்
வாழ்ந்தவங்க. வாழ்ந்த வரைக்கும் நல்லா ஆரோக்கியமா இருந்தவங்க. ரெண்டு பேருமே ஆகாரத்துல
ரொம்ப சரியா இருக்குற அசாமிங்க. இதுல நரம்பு தாத்தா பாத்தீங்கன்னா ‘வைத்தியனுக்குக்
கொடுக்குறதெ வானியனுக்குக் கொடு’ன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருப்பாரு. சொன்னதோட
இல்லாம அப்படி இருந்தவரும் கூட. ஆகாரத்துக்கான காசை மிச்சம் பண்ணி நோப்பாடு வந்து வைத்தியருக்குக்
கொடுக்குறதெ விட நல்ல வெதமா காசைச் செலவு பண்ண நல்ல வெதமான ஆகார வகைகளுக்கான பொருட்களை
யேவாரிக்கிட்டெந்து வாங்கிச் சாப்புடணும்ங்றது நரம்பு தாத்தாவோட கொள்கை.
குண்டு தாத்தாவும் சாப்பாட்டுல கெட்டியான ஆளு. வீட்டுல இருக்குறதெ
வெச்சி சமைச்சு வெச்சாலும் நறுவிசா சமைச்சு வைக்கணும். எதெதெ போட்டு எப்படி சமைச்சு
வைக்கணுங்றதெ டைம் டேபிள் போட்டு சொல்லிட்டுப் போற ஆளு. ஆகாரத்துல சுவையான சமாச்சாரங்க
இல்லன்னாலும் ரொம்ப ரசிச்சு ருசிச்சு சாப்படுவாரு. காத்தால குண்டான் பழைய சோறுன்னாலும்
அதுக்குன்னு வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் அம்சமா அரிஞ்சு கொண்டாந்து வைக்கணும்
அவருக்கு. என்னவோ பெரிய விருந்தெ சாப்புடுறதெப் போல அம்மாம் கொண்டாட்டமா சாப்புடுவாரு.
‘இன்னொரு பொறப்பா பொறக்கப் போறோம்? சாப்புடுறப்போ நல்ல வெதமா சந்தோஷமா சாப்புடணும்.’ன்னு
அடிக்கடி சொல்வாரு.
இவுங்க ரெண்டு பேரும் எங்கிட்டெ பேசுறப்போல்லாம் எதெ பேசுனாலும்
சரித்தாம் கடைசியில ஆகாரத்துல வந்து நின்னுடுவாங்க. அதெ நான் நல்லாவே கவனிச்சிருக்கேம்.
‘ஒழுங்கா ஆகாரத்தெ சாப்புட்டா வைத்தியம்கிட்டே போகாம அலுங்காம கொள்ளாம காலத்தை ஓட்டிப்புடலாம்வே’ன்னு
ரெண்டு பேருமே சொல்லியிருக்காங்க. அப்படியே காலத்தையும் ஓட்டிப்புட்டாங்க. கடைசி காலத்துல
உசுரு பிரியப் போற நேரத்துல டாக்கடருமாருகள கொண்டாந்து வெச்சிப் பாத்ததுதாம். அப்பவும்
நம்ம உடம்பு டாக்கடரு வந்து என்னத்தெ பாக்குறதுன்னு ஒரே இழுப்பா சரளை இழுத்துக்கிட்டுச்
சட்டுன்னு போயிச் சேந்துட்டாங்க.
இப்போ நெனைச்சுப் பாக்குறப்போ அவுங்க அளவுக்கு ஆகாரத்தை ஏகாந்தமா
நெனைச்சுச் சாப்புட்டவங்கள நான் பாத்ததில்ல. எல்லாரும் ஏதோ அவசரமா, அள்ளித் தெளிச்ச
கோலமாத்தாம் சாப்புடுறாங்க. ஒரு டம்ளரு டீத்தண்ணிய கொடுத்தாலும் அவுங்க ரசிச்சு சாப்புடுற
அழகே தனிதாம். எப்படியும் நூறு அல்லது நூத்தம்பது மில்லி டீத்தண்ணிய குடிச்சி முடிக்க
அவுங்களுக்கு பத்து நிமிஷமாச்சும் ஆகும். வீட்டுல செஞ்சதுன்னு ஒரு பலவாரத்தைக் கொண்டு
போயி கொடுத்தாலும் ரொம்ப நேரத்துக்கு என்னவோ பலவாரத்தையே பாக்காதது போலத்தாம் சாப்புடுவாங்க.
ஒரு வடைய கொண்டு போயிக் கொடுத்தா அதெ சாப்புட்டு முடிக்க பதினைஞ்சு நிமிஷமாச்சும் ஆவும்.
ரவ ரவையா கிள்ளி கிள்ளித்தாம் சாப்புடுவாங்க. இப்படி ஒரு மனுஷன் சாப்புடுறாம்ன்னா எவ்வளவு
ரசிச்சுச் சாப்புடுறாம்ங்றது மட்டுமில்ல இதுல உள்ள விசயம், அப்படி சாப்படுறப்போ வாயில
இருக்குற எச்சில்ல முழுசா கலக்காம எந்த ஆகாரமும் தொண்டைக்குள்ள எறங்காதுதாங்றதுதாம்
அதுல உள்ள முக்கியமான விசயம்.
இப்போ நீங்க விசயத்தைப் புரிஞ்சிப்பீங்க. அதாவது ரெண்டு விசயம்.
ஒண்ணு சாப்புடுறது எதுவா இருந்தாலும் அதெ ரசிச்சுச் சாப்புடணும். ரெண்டாவது அது வாயில
சுரக்குற உமிழ்நீருல கலந்துத்தாம் உள்ள போவணும். இப்படி செஞ்சா உள்ளுக்குள்ள இருக்கற
செரிமான சுரப்புக அத்தனையும் சாப்புடுற சாப்பாட்டைச் சுலுவா செரிக்கிறதுக்கான சமாச்சாரங்கள
தயார் பண்ணிடும். அதால செரிமானம் சம்பந்தமான பிரச்சனைக எதுவும் உண்டாவாது. மனுஷனுக்குச்
செரிமான தொடர்பான பிரச்சனைக உண்டாவலன்னா நோப்பாடுக்கு வேலை ஏது சொல்லுங்க?
வாந்தி, வயித்துப் போக்கு,
சர்க்கரை நோயின்னு எந்த நோய எடுத்துக்கிட்டாலும் அதுக்கும் செரிமானத்துக்கும் நெருங்குன
சம்பந்தம் இருக்கும். உங்களால பசியெடுத்து நல்லா சாப்பாடு முடிஞ்சு செரிக்க முடிஞ்சதுன்னா
உங்களுக்கு எந்த நோயும் இல்லங்றதுதாம் அர்த்தம்.
ரொம்ப குறிப்பா சொல்லணும்ன்னா
நீங்க சாப்புட்டு முடிஞ்சா நெஞ்செரிச்சல், நெஞ்சு கரிப்பு, வயித்து உப்புசம், வாயு
பிரச்சனை, வயித்துப் பெரட்டலு, சாப்பாடு அப்படியே நெஞ்சுக்குள்ளயே இருக்குங்ற மாதிரி
இப்படி ஏதுவும் உண்டாவக் கூடாது. சாப்புட்டா ஒரு நெறைவும் சொகமும் வரணும். அதுதாம்
சரியா ஆகாரத்தை எடுத்துக்குற மொறை.
இந்தக் கொரோனாவையே எடுத்துக்குங்க.
அவுங்க சொல்ற முக்கியமான பிரச்சனைகள்ல ஒண்ணு பசியெடுக்க மாட்டேங்கறதுதானே. .எல்லா வியாதியையும்
இப்படித்தாம் கடைசியில பசியெடுக்குறதுல பிரச்சனை பண்ணும். பசிங்கறது ஆகாரத்தோட தொடர்புள்ள
பிரச்சனைதானே. இப்போ உங்களுக்கு ஒரு விசயம் புரிஞ்சிருக்கும். ஆகாரத்துல ஆயிரத்தெட்டு
விசயங்க மட்டுமில்ல, அதுக்கும் மேலான லட்சபோ லட்சம் விசயங்களும் கோடி கோடியான விசயங்களும்
இருக்குன்னு. இந்த ஆகாரத்தை எப்படி எளிமையா உடம்புக்கு ஏத்த விதமா அமைச்சுக்கலாங்றதுலயும்
ஒரு சில விசயங்க இருக்கத்தாம் செய்யுது. அதெ பத்தி நாளைக்குப் பாப்போமே!
*****
No comments:
Post a Comment