18 Jul 2021

உணவால வாழுற மனுஷன்

உணவால வாழுற மனுஷன்

            வாகனத்துக்கு எரிபொருள் மாதிரி உடம்புக்கு ஆகாரம். உயிருக்கும் கூட ஆகாரம்தான் எரிபொருள் மாதிரி. நம்மோட ஆகாரம் பெரும்பாலும் தானியம்தாம். தென்னாட்டுல அரிசின்னா வடநாட்டுல கோதுமை. இதாம் பிரதான ஆகாரம். இதுலத்தாம் பெரும்பாலான மக்களோட உடம்பும் உசுரும் ஓடிட்டு இருக்குது.

இதோட பருப்பு வகைகள், கொட்டை வகைகள், கறிகாய்கள், பழங்கள சேத்துக்கிறவங்களோட எண்ணிக்கை குறைவுதாம். அதையும் கலந்து சேத்துக்கிட்டா அதெ சரியான ஆகாரம்ன்னு சொல்லலாம். இதுவே ஆகாரத்துக்குப் போதும்ன்னாலும் மீன், முட்டை, ஆட்டுக்கறி, கோழி கறி சாப்புடுறதுங்றது அவங்களோட விருப்பத்தெப் பொருத்து அளவா ஆகாரத்துல சேத்துக்கிடலாம்.

இந்த அளவுங்ற வார்த்தைய நீங்க கவனிச்சிக்கணும். கறி சாப்பாட்டு மேல உள்ள ஆர்வத்துலயோ ருசியிலயோ அளவுக்கதிகமா கறிய வாங்கிச் சாப்புடுறது உடம்புக்கு ஏத்ததில்ல. அந்தத் தப்பைத்தாம் நம்ம மக்கள்ல பெரும்பாலான பேரு செஞ்சுகிட்டு இருக்காங்க. கேட்டாக்கா உடம்புக்கு பலம் வேணாமான்னு கேப்பாங்க. பலம்ங்றது அதிகமாக சாப்புடுறதால வர்றது இல்ல. அளவா சாப்புடுறதால வர்றது.

அதெப்படின்னு கேட்டா அளவா சாப்புட்டாத்தாம் நோயில்லாம இருக்கலாம். அளவறியாமா சாப்புட்டா நோய் விலாசம் கேட்டுக்கிட்டு வந்துடும். நோய் வந்த பெறவு மனுஷன் எங்க பலமா இருக்குறது? இதெ திருவள்ளுவரும் சொல்றாரு இப்படி,

                        “இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

                        கழிபே ரிரையான்கண் நோய்.”                  (குறள். 946)

            அளவா சாப்புட்டுத்தாம் அதாவது அளவை விட குறைவா சாப்புட்டாத்தாம் உடம்புக்கு அது இன்பம்ன்னும், அளவைத் தாண்டுனா அது உடம்புக்குத் துன்பம் அதாவது நோய்ன்னும் திருவள்ளுவரு சொல்றாரு. இது மனசுல குறிச்சிக்க வேண்டிய முக்கியமான பாய்ன்டு.

எப்படின்னா ஒரு நாளைக்கு மூணு வேளை சாப்புடுறவனெ விட ரெண்டு வேளை சாப்புடுறவம் ஆரோக்கியமாக இருப்பாம். இதெ அனுபவத்துல நானே நல்லா உணர்ந்திருக்கேம். நான் அப்படி இரண்டு மூணு வருஷங்க ரெண்டு வேளை மட்டும் சாப்பிட்டு இருந்திருக்கேம். உடம்பு நல்லா தெளிவாவும் சின்ன நோப்பாடு இல்லாமலும் ரொம்ப சுறுசுறுப்பாவும் அப்போ இருந்திருக்கேம். அப்போ உடம்பு காத்துல மெதக்குறாப்புல இருந்துச்சு. நடக்குறதா, ஓடுறதான்னு எதெ பண்ணாலும் உடம்பு கொஞ்சம் கூட சுமையா தெரிஞ்சதில்ல.

அப்புறம் ஏம் அதெ விட்டீங்கன்னு கேக்குறீங்கதானே? உடம்பு துரும்பா எளைச்சு பிட்டு சதையில்லாம கரவு செரவா ஆயிட்டுங்களா! அது எனக்குப் பிடிச்சிருந்துச்சு. வீட்டுல இருக்குற பாசக்கார சனங்களுக்குப் பிடிக்கல. அதுகளுக்குக் உடம்பு கொஞ்சம் சதை பூசுனாப்புல இருந்தாத்தாம் உடம்புங்ற மாதிரி ஒரு உள்மனசுல ஒரு நெனைப்பு.

சொந்த பந்த சனத்துக்கும் உடம்பு எளைச்சா வேற பேச்சு வேணாம். போற எடம், பாக்குற எடம்ன்னு எல்லாத்துலயும் நம்மளப் போட்டுத் தாக்க வீட்டுச் சனங்க ரொம்பவே மெரண்டு போச்சுக்குங்க. அதுகளுக்கு நம்மள சரியா கவனிக்கலங்ற மாதிரி உறவுக்கார சனங்க பொரணி பரப்புறதா ஒரு நெனைப்பு உண்டாயிடுச்சு. அநாவசியமா அதுகளுக்கு நாம்ம கெட்ட பேரை வாங்கிக் கொடுக்குறதா வேற எண்ணம். நம்மகிட்டெ ரொம்ப சண்டை பிடிச்சு பிடிவாதம் பண்ணி மூணு வேளையும் சாப்புடுற மாதிரிப் பண்ணிப்புட்டுங்க.

வீட்டுல உள்ள சனங்கள்கிட்டெ எத்தனெ நாளு சண்டைய வெச்சிக்கிட்டு, மொறைச்சுக்கிட்டுப் பிடிவாதம் பண்ணிக்கிட்டுன்னு மூணு வேளை சாப்பாட்டுக்கு மாறுறாப்புல ஆயிடுச்சு. அப்படி மாறுறப்போ ஒரு கண்டிஷன் வெச்சுத்தாம் மாறுனேம். இந்த மூணு வேளைச் சாப்பாட்டெ தவிர அநாவசியமா பலவாரம் செஞ்சிருக்கேம், டீத்தண்ணி போட்டிருக்கேம்ன்னு சொல்லி வேற எதையும் செஞ்சிக் கொடுத்து அதெ சாப்புடணும்ன்னு கட்டாயம் பண்ணக் கூடாதுன்னு. அப்படித்தாம் இப்பவும் ஓடிட்டு இருக்குது. மூணு வேளைச் சாப்பாடு, தவிச்சா இடையில தண்ணி, இதெ தவிர வேற எதையும் சாப்படுறதில்ல. சாயுங்காலம் மட்டும் ஒரு டம்ப்ளரு பாலு.

ரெண்டு வேளை ஆகாரம்ன்னா காலையில ஒம்போது மணிக்குள்ள ஒரு சாப்பாடு. ராவுல ஏழு மணி வாக்குல ஒரு சாப்பாடு. இது போதும். இடையில பசி எடுக்குறாப்புல இருந்தா பழத்துண்டுகள நறுக்கி ஒரு டப்பாவுல வெச்சிக்கிட்டுச் சாப்புடலாம். இதால பழம் சாப்புடுற பழக்கம் உண்டாயிடும். ஏன்னா பெரும்பாலான மக்களுக்குப் பழம் சாப்புடுறதுங்ற பழக்கமே இல்லாம இருக்குறதை நீங்க பாக்கலாம். அப்படிச் சாப்புட்டாலும் சாப்புடுற சாப்பாட்டோட சேத்து வெச்சு முன்னாடியோ பின்னாடியோ சாப்புடுவாங்க. அது பழம் சாப்புடுறதுக்கான மொறை கெடையாது.

இப்படி பசிக்கிறப்போ பழத்தை மட்டும் தனியா எடுத்துக்குறதுதாம் சரியான பழம் சாப்புடுற மொறை. பழம் சாப்புட்டதுக்கு முன்னாடி பின்னாடி ஒரு அரை மணி நேரத்துக்கு வேற எதையும் சாப்புடாம இருந்தோம்ன்னா சாப்புட்ட பழத்தோட அத்தனை உயிர்ச்சத்தும் கனிமச் சத்தும் உடம்புக்கு அப்படியே போய் சேரும். எதைச் சாப்புட்டாலும் சாப்புடுறதோட சத்து முழுசா உடம்புக்குக் கிடைக்குற மாதிரி சாப்புடுறததாம் சரியான சாப்பாட்டு மொறை.

தின்பண்டம்ன்னு சாப்புட ஆசை வந்தா நிலக்கடலையோ, பட்டாணிக் கடலையோ, உப்புக் கடலையோ சாப்புடலாம். வேற பலவாரத்தைப் பத்தி நினைக்காம இருந்தா உடம்புக்கு நல்லது. பலவாரம் செய்யுறதுக்குன்னு மெனக்கெட வேண்டிய அவசியமும் இல்ல. கடைக்குப் போயி வாங்கித் தின்னு காசு செலவழிக்க வேண்டியதுமில்ல.

இதுல உண்டாவுற ஒரு நன்மையைப் பத்தி உங்களுக்குச் சொல்லணுமே. பல நாளு சளி கண்டு தீராத ஆளுங்க நம்மகிட்டெ இருக்காங்க. எவ்வளவோ வைத்தியம் பாப்பாங்க. வைத்தியம் பாக்குறப்போ சளி போவும். பெறவு சனியனப் போல வந்து ஒட்டிக்கும். மறுக்கா வைத்தியம் பாத்தாத்தாம் போவும். அப்படி இருக்குறவங்க இந்தப் பழக்கத்தை ஒட்டி வந்துட்டா சளிக்கு வைத்தியம் பண்ணுறதப் பத்தி நெனைச்சுக் கூட பாக்க வேணாம்.

உடம்புல இருக்குற அத்தனை சளியையும் இந்த பழ உணவும், கடலை தின்பண்டமும் இழுத்து வெளியில தள்ளிடும். உடம்புக்குத் தேவையான உயிர்ச்சத்தும் கனிமச் சத்தும் புரதச் சத்தும் கெடைச்சிட்டா உடம்புல எந்த வியாதியும் இருக்க முடியாதுங்றது வியாதி தடுப்புக்கான முக்கியமான விதி.

எண்ணெய் பலவாரத்தெ வேண்டாம்டா சாமின்னு ஒதுக்கி வெச்சிட்டீங்கன்னா சளி உடம்புல உண்டாவுறதுக்கு வாய்ப்பே கெடையாது. எண்ணெய் பலவாரத்துக்கும் சளிக்கும் அப்படி ஒரு தொடர்பு இருக்கு. இந்தத் தொடர்பு எண்ணெயில பொறிச்சு சாப்புடுற பூரி வரைக்கும் உண்டு.

இது நெசமான்னு கேட்டா நெசந்தாம். இதுக்கும் நானே உதாரணம். எனக்கு இந்த உணவு முறைக்கு முன்னாடி இருந்த சளி பிரச்சனை இந்த உணவு முறைக்கு மாறுன பிற்பாடு இல்லாம போச்சு. ஆகாரத்த மாத்துனா இவ்வளவு நன்மைங்க இருக்கான்னா கேட்டா, ஆமாம் நிச்சயமா, அதுல சந்தேகமா வேணாம். நானே சாட்சியா இருந்து அனுபவப்பட்டுச் சொல்றேம்.

இது மட்டுந்தாம் நன்மைன்னு நெனைச்சிடாதீங்க. ஒட்டுமொத்த குடும்பமே ரெண்டு வேளை ஆகாரம்ன்னு ஒத்துக்கிட்டு அதெ கடைபிடிக்க ஆரம்பிச்சிட்டா உணவு சமைக்கிறதுக்கான நேரம் மிச்சமாயிடும். சமைக்குறதுக்கு ஆவுற எரிபொருள் மிச்சமாயிடும். சமைக்குற சூட்டுக்குப் பக்கத்துல ரொம்ப நேரம் நிக்குற அவத்தையும் இல்லாம போயிடும். அந்த ரெண்டு வேளை உணவையும் அப்பைக்கப்போ சமைச்சு சாப்புட்டீங்கன்னா அது ரொம்ப நல்லது. இது சமையல்ல உண்டாவுற மாத்தம் இல்லையா. அது மட்டுமில்ல, ஒட்டுமொத்த சமையலையும் ஆகாரத்துக்குத் தகுந்தாப்புல எளிமையா மாத்துறப்போ இன்னும் நெறைய மாத்தங்க உண்டாவும். அதெ பத்தி நாளைக்குப் பேசுவோம்.

*****

No comments:

Post a Comment

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு…

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு… எந்தத் தொந்தரவும் வேண்டாம் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் எந்தச் சிக்கலும் வேண்டாம் எந்த இம்ச...