17 Jul 2021

சுத்தமா இருக்குறதுல இருக்குற சுகம்

சுத்தமா இருக்குறதுல இருக்குற சுகம்

            உடம்புக்குச் சுத்தமும் சாப்பாடும் முக்கியமான அம்சம்ங்றது சொல்லித் தெரிய வேண்டியதில்ல. காலையில எழும்புனதும் மல, ஜலத்தைக் கழிச்சிட்டுத்தாம் மறுவேல பாக்கணும்ன்னு சொல்லாத கிராமத்துப் பெரிசுங்களப் பாக்க முடியாது. மலம் கழிக்கிறதுக்குக் காலைக்கடன்னு பேரு வெச்சிருக்கிறதிலேந்தே அந்தக் கடனை மொதல்ல முடிச்சிடுறது முக்கியம்ன்னும் புரிஞ்சிக்கிடலாம். அப்படியில்லன்னா காலையில செய்ய வேண்டிய முக்கியமான கடமையில அது ஒண்ணுன்னும் புரிஞ்சிக்கிட்டு அதெ மொதல்ல முடிச்சிடலாம். எப்படிப் புரிஞ்சிக்கிட்டாலும் காலையில எழும்புனதும் செய்ய வேண்டிய மொத வேலை அதுதாம்.

            மல, ஜலம் கழிக்கிறப்போ மொதல்ல மலமும் அடுத்ததா ஜலமும் வரணுங்றது ஒரு ஆரோக்கியமான விதின்னு சொல்லுவாங்க. அப்போத்தாம் உடம்பு ஆரோக்கியமாக இருக்குறதா அர்த்தம்ன்னும் சொல்லுவாங்க. நமக்கு எல்லாம் எதிராத்தாம் நடக்கும் இல்லையா. அதாவது மொதல்ல ஜலம், பெறவு மலம்ன்னும் வரும். அப்போ ஆரோக்கியத்துல இன்னும் கொஞ்சம் மேம்படணும்ன்னு நாம்ம புரிஞ்சிக்கிடணும்.

            உடம்புலேந்து மலமும், ஜலமும் மொறையா வெளியேறுற காலம் வரைக்கும் மனுஷனுக்கு எந்தப் பிரச்சனையும் கெடையாது. உடம்புல பிரச்சனைன்னா அதுலத்தாம் பிரச்சனை ஆரம்பிக்கும். மனுஷன்கிட்டேயிருந்து கழிவு ஒழுங்கா வெளியேறிக்கிட்டே இருந்தா எந்தப் பிரச்சனையும் இருக்காது. நம்ம வீட்டையே எடுத்துக்குங்க, குப்பைகளையும் கழிவுகளையும் சேர்த்து உள்ளார வெச்சிக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்? அதை மொறையா அப்புறப்படுத்துனாத்தானே வீடு வீடா இருக்கும். உடம்பும் கிட்டதட்ட அப்படித்தாம்.

            உடம்போட கழிவுங்றப்போ மலத்தையும் ஜலத்தையும் மட்டும் நெனைச்சிடப்புடக் கூடாது. அதாம் நாம்ம பண்ணுற தப்பு. வியர்வைன்னு இன்னொரு கழிவு இருக்கு. அதுவும் ஒடம்புலேந்து நெதமும் வெளியேறிக்கிட்டே இருக்கணும். மல, ஜல கழிவுகளை வெளியேத்துறவங்கக் கூட நெதமும் ஒடம்பு வியர்க்கணும்ங்ற ஒரு விசயத்தெ விட்டுடுவாங்க. அதெ விட்டுடாம சரியா புடிச்சிக்கிட்டா மனுஷனுக்கு எந்த வியாதியும் வரப் போறதில்ல.

            உடம்பு வியர்க்கணும்ன்னா உடல் உழைப்புத்தாம் வழி. உடற்பயிற்சிங்றது மற்றொரு வழி. விளையாட்டுங்ற வழியும் இருக்கு. ஆக மூணு வழிகளில்ல உடம்பை வியர்க்க வைக்க வாய்ப்பு இருக்கு. இந்த மூணு வழிகள்ல ஏதோ ஒரு வழியிலி உடம்பை வியர்க்க வெச்சிடுறது நல்லது. உடல் உழைப்பு, உடற்பயிற்சி, விளையாட்டுன்னு மூணு வழியும் இல்லங்றவங்க அதுக்காக உடம்புலேந்து வியர்வைய வெளியேத்திடாம இருந்துடக் கூடாது. அவுங்க நடக்குறது மூலமா அதெ செய்யலாம். எங்க நடக்குறதுக்கு நேரம் இருக்குன்னு சொல்லிடக் கூடாது. வெளியில போறப்போ மோட்டார் வண்டியையோ, காரையோ எடுக்காம இருந்தா போதும், நடக்குறதுக்கான வாய்ப்பு தானா உண்டாயிடும். ரெண்டு தெரு தள்ளியிருக்குற கடைக்கு, கோயிலுக்கு, நண்பர்களோட வீட்டுக்கு, அலுவலகத்துக்கு எல்லாம் நடந்தே போயிடலாம். காலையிலயோ, மாலையிலயோ அல்லது ரெண்டு வேளையுமோ நடைபயிற்சி செய்யலாம். நடைபயிற்சி செய்யுறப்போ வெறும் நடைபயிற்சியோட மட்டும் இல்லாம மெல்லோட்டமா அப்பைக்கப்போ ஓடிட்டே நடக்குறது இருக்கு பாருங்க, அது ஒடம்புக்கு ரொம்ப நல்லது. ஒடம்பு குப்புன்னு வியர்த்துடும். நடக்குறோம்ங்ற பேருல ஒரு பத்து நிமிஷ நேரம் நடந்துட்டு வந்து உட்கார்ந்துடக் கூடாது. அதுல உடம்பு வியர்க்குறதுக்கான வாய்ப்பு ரொம்ப குறைவு. கொறைஞ்சது நாப்பது நிமிஷ நேரமாவது நடக்கணும். அப்படி நடந்துட்டு வந்து உக்காந்துப் பாத்தீங்கன்னா தெரியும் உங்களோட இதயம் துடிக்கிற துடிப்பும், நுரையீரல் வாங்குற மூச்சும். உடம்புல அரும்பியிருக்கிற வியர்வைய அப்போ நீங்க நல்லா உணரலாம்.

            வியர்க்குறதுக்கான வழிய சொல்லியாச்சு. நல்லா மல, ஜலம் கழிக்கிறதுக்கும் வழிமுறைக சிலது இருக்கு. நல்லா நீர் பிரியுறதுக்கும் மலம் கழியுறதுக்கும் தண்ணிதாம் சரியான வழி. போதுமான அளவு தண்ணிய குடிச்சா போதும். அது ரெண்டும் சுகமா பிரியும். அப்போ நாம்ம சரியா தண்ணி குடிக்குறது இல்லையான்னு கேட்டாக்கா அப்படியும் இருக்கலாம். அதெ நீங்க சோதனை பண்ணியே பாத்துடலாம். நாலு தண்ணி பாட்டில வாங்கி வெச்சு அதுல தண்ணிய நெரப்பி வெச்சு ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணி குடிக்கிறீங்கன்னு பாருங்க. நாலு பாட்டிலையும் காலி பண்ணியிருந்தா தண்ணி குடிக்கிற விசயத்துல நீங்க சரியா இருக்கீங்க. ரெண்டு பாட்டிலை மட்டும் குடிச்சி ரெண்டு பாட்டில தண்ணி குடிக்காம இருந்தா மல, ஜல பிரச்சனை அதுலேந்துத்தாம் ஆரம்பிக்குதுங்றதெ தெரிஞ்சிக்கிடலாம். நாலு தண்ணி பாட்டிலுன்னு சொன்னதால சின்னதா 100 மில்லி பாட்டிலு நாலு பாட்டில வாங்கி வெச்சிட்டுச் சோதனை பண்ணிப் பாத்துடாதீங்க. முக்கா லிட்டரு பாட்டிலோ ஒரு லிட்டரோ பாட்டிலோ வாங்கி வெச்சிக்கிட்டு இந்தச் சோதனைப் பண்ணிப் பாத்துடணும்.

            காலையில வெறும் வயித்துல கொறைச்சலா நூறு மில்லி தண்ணியாச்சும் குடிக்கணும். அதெ விட்டுப்புட்டு வெறும் வயித்துல காப்பித் தண்ணியையோ, டீத்தண்ணியையோ ஊத்தக் கூடாது. வெறும் வயித்துல தண்ணிய குடிச்சு இருவது நிமிஷம் கழிச்சுத்தாம் பிற ஆகாரங்களை எடுத்துக்கிறதா இருந்தா எடுத்துக்கணும்.

            நீர் பிரியுறதுல யாருக்கும் பிரச்சனை இருக்காது. மலம் பிரியுறதுல நெறைய பேருக்குப் பிரச்சனை இருக்கலாம். அதுக்கு மொத காரணம் சரியானபடிக்கு தண்ணி குடிக்காதது ஒரு காரணம். இன்னொரு காரணம் எழும்புன உடனே கழிவறைக்குப் போயி உக்காந்து பழக்கப்படாதது. காலையில எழும்புன உடனே கழிவறையில போயி உக்காந்துட்டா உடம்பு பழக்கப்பட்டுப் போயிடும். எழும்புனா மலத்தைக் கழிக்காம நம்மள சும்மா விட மாட்டாம்ன்னு உடம்பு புரிஞ்சிக்கிட்டுன்னா காலையில எழும்புன உடனே உங்களைக் கேக்காமலே உங்களைக் கொண்டு போயி கழிவறையில உக்கார வெச்சி உங்க உடம்புலேந்து மலம் பிரிஞ்சிடும். இது பழக்கத்துல வர்றதுதாம். மத்தபடி ஒரு சிலருக்குக் காப்பிய குடிச்சா மலம் கழிக்கணும்ன்னு தோணுறதும், சிகரெட்ட புகைச்சா மலம் கழிக்கணும்ன்னு தோணுறதும் பழக்கத்துல வர்றதுதாம். நாம்ம எந்தப் பழக்கத்தெ கடைபிடிக்கணுங்றதெ நாம்மத்தாம் முடிவு பண்ணிக்கணும்.

            அடுத்ததா பல்லோட சுத்தம் ரொம்ப முக்கியம். பல்லைத் துலக்காம வயித்துக்குள்ள எதுவும் போயிடாமப் பாத்துக்குறது ரொம்ப முக்கியம். பல பேரு நெனைச்சிக்கிட்டு இருக்குறது போல காலையில பல்லைத் துலக்குறதெ விட ராவுல படுக்க போறதுக்கு முன்னாடி பல்ல துலக்குறது ரொம்ப முக்கியம். ராவுல படுக்க போறதுக்கு முன்னாடி பல்லைத் துலக்குனாத்தாம் வாய்ய நாம்ம சுத்தமா வெச்சிக்கிறதா அர்த்தம். பகல்ல வாயில் உருவாகிற கிருமிகளெ விட ராவுல நாம்ம தூங்குறப்போ வாயில உருவாகிற கிருமிங்கத்தாம் அதிகம். எழும்புன உடனே வாயில அடிக்கிற நாத்தம் ஒண்ணு போதும் அதெ உங்களுக்கு வௌங்க வைக்க.

            இதுக்கு அப்புறம் குளிக்கிறது முக்கியம்ன்னு நீங்களே சொல்லிடுவீங்க. கால்லேந்து தண்ணிய ஊத்த ஆரம்பிச்சு தலைய நோக்கிக் குளிக்கணும்ன்னு சொல்லுவாங்க. ஆத்துலயோ குளத்துலயோ குளிக்கப் போனீங்கன்னா நீங்க ஆத்துல குளத்துல இறங்கிக் குளிக்க போறப்போ உடம்பு அப்படித்தாம் நனையும். வீட்டுல குளியலறையில குளிக்குறப்போ தலையிலேந்து எடுத்து ஊத்தி குளிக்க ஆரம்பிச்சிடுவோம்ங்றதால கால்லேந்து தலைய நோக்கி ஊத்திக் குளிக்கிறதுல கொஞ்சம் கவனம் வெச்சிக்கிடலாம். அதுக்குப் பெறவு வேணும்ன்னா ஷவர்ரப் போட்டு விட்டு குளிக்கலாம். குளிச்ச உடனே சிலருக்கு தலைபாரம் உண்டாவாம, ஜலதோஷம் பிடிச்சிடாம இருக்குறதுக்கு இது ஒரு முறை. தவுரவும் ஒடம்ப குளிக்கிறப்போ அப்படித்தாம் கால்லேந்து தலைய நோக்கித்தாம் குளிர்விக்கணும்ன்னு சொல்றாங்க.

            இதெல்லாம் தெரிஞ்ச விசயம்தான்னு சொல்றீங்களா? ஆமாம். ஆன்னா தெரிஞ்ச விசயங்கள்லத்தாம் மனுஷங்க நெறைய பேரு தெரியாத்தனமா தப்பு பண்ணுறாங்க. நம்ம முன்னோருங்கத்தாம் இதெ பத்தி அப்போவே தெளிவா சொல்லி வெச்சிட்டாங்களே, “கூழானாலும் குளித்துக் குடி. கந்தையானாலும் கசக்கிக் கட்டு”ன்னு. சுத்தத்தெ பத்தி பேச ஆரம்பிச்சு, சாப்பாட்டு விசயத்தெ விட்டாச்சு பாருங்க. அதெ நாளைக்குப் பேசுவோம்.

*****

No comments:

Post a Comment

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு…

எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைக்கு… எந்தத் தொந்தரவும் வேண்டாம் எந்தப் பிரச்சனையும் வேண்டாம் எந்தச் சிக்கலும் வேண்டாம் எந்த இம்ச...