16 Jul 2021

சௌக்கியங்களா?

சௌக்கியங்களா?

            யாரைப் பாத்தாலும் “சௌக்கியங்களா?”ன்னு விசாரிக்கிறது நம்மோட மரபா இருக்குறதோட உள்ளர்த்தம் காலம் போகப் போகத்தான் வௌங்குது. ரொம்ப காலமா அது ஒரு சம்பிரதாயம்ன்னு நெனைச்சதுண்டு. அப்படியில்ல அதுக்குள்ள ஆயிரமாயிரம் விசயங்க உள்ளடக்கமா இருக்குதுங்றது இப்போத்தாம் தோணுது.

            மனுஷங்க ஆரோக்கியமாக வாழ்ந்த ஒரு கால கட்டத்துல அது சம்பிரதாய சடங்கான வாசகமா இருந்திருக்கலாம். இப்போ யாரைப் பாத்தாலும் உடம்புல ஒரு கொறை இருக்குறதைச் சொல்றாங்க. கலியாணம், கருமாதின்னு போயிப் பாருங்க. சாப்புட்டு முடிச்சவுடனே சுகரு மாத்திரை, பீப்பீ மாத்திரை, கொழுப்பு மாத்திரைன்னு போடுறவங்க அதிகமா இருக்காங்க. இதுக்கும் சௌக்கியமான்னு விசாரிக்கிறதுக்கும் எவ்ளோ சம்பந்தம் இருக்குங்றீங்க. சுகரு மாத்திரையப் போடுறவரு கிட்டதட்ட அரை வைத்தியரா மாறி இருக்காரு. அவருகிட்ட சௌக்கியமான்னு ஒரு வாத்தைய விட்டாக்கா போதும், எங்கங்க சௌக்கியம்ன்னு ஆரம்பிச்சு, சுகரு வந்தா எந்த மாத்திரையப் போடணும், அதெ எந்த பவர்ல போடணுங்ற வரைக்கும் புட்டுப்புட்டு வைக்கிறாரு. எந்த டாக்கடர்ரப் பாக்கணும், எந்த ஆஸ்பத்திரியில எந்தெந்த வியாதிக்கு வைத்தியம் நல்லா பண்ணுறாங்கங்ற விவரம் வரைக்கும் டாண் டாண்ணு எடுத்து வைக்குறாரு. சௌக்கியமா இருக்கீங்களான்னு விசாரிக்கப் போயி இப்படி பல விசயங்க அதுக்குள்ள உருண்டு ஓடியாந்திடுது.

            எனக்குத் தெரிஞ்சு சின்ன வயசுல கிராமங்கள்ல மருந்து கடையே கிடையாது. டாக்டருங்களும் கிராமங்கள எட்டிப் பாத்தது கிடையாது. கம்பௌண்டருங்கத்தாம் யாராவது வைத்தியம் பாத்துட்டு இருப்பாங்க. யாருக்காச்சம் ஒடம்புக்கு முடியலன்னா டவுனுக்குத்தாம் அழைச்சிக்கிட்டுப் போவணும். அங்கங்த்தாம் டாக்டருங்க இருந்தாங்க, மருந்து கடைங்களும் இருந்துச்சு. பெரும்பாலான வியாதிங்க கை வைத்தியத்தாலயே கொணம் கண்டுடும். உழைப்புன்னு பாத்தீங்கன்னா வியர்வை வழிஞ்சு ஓடுற அளவுக்கு கடுமையான உடல் உழைப்பு இருக்கும் அப்போ கிராமத்துல. அந்த உழைப்புக்கு ஒரு வியாதி முன்னாடி நிக்காது.

இப்போ எங்க கிராமத்துல பாத்தீங்கன்னா மூணு மெடிக்கல் ஷாப்புங்க இருக்கு. டவுன்லேந்து ரெண்டு டாக்டருங்க வந்துட்டுப் போறாங்க. டாக்டருங்களப் பாக்குறப்போ போன தடவெ எழுதிக் கொடுத்த பவரு வேலை செய்யல, எக்ஸ்ட்ரா பவர்ல மாத்திரை எழுதிக் கொடுங்கன்னு நம்ம ஆளுங்க கேக்குற அளவுக்கு மருந்து தேடுற வியாதியஸ்தர்களா நம்ம மக்கா மாறிக்கிட்டு இருக்குதுங்க.

சௌக்கியத்தைப் பத்தியும், மருந்து மாத்திரைகளப் பத்தியும் பேசிக்கிட்டு இருக்குற நேரத்துல ஒடம்போட ஒரு அற்புதத்தெ சொல்லணும். ஒடம்பு இருக்கே ஒடம்பு அது ஓர் அதிசயம்ன்னு சொல்லணும். மருந்து மாத்திரை இல்லாமலே கொணம் பண்ணிக்குற ஆற்றல் அதுக்கு இருக்கு. திருவள்ளுவரு கூட

            “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

            அற்றது போற்றி உணின்.”                         (குறள். 942)

அப்படின்னு சொல்வார்ன்னா பாத்துக்குங்களேன். ஒடம்புக்கு மருந்தே வேண்டாங்றதுதாம் வள்ளுவரோட வாக்கு. அதுக்கு அவரு சொல்ற விசயந்தாம் முக்கியம். முன்னாடி சாப்புட்டது செரிச்சு மறுபடி பசியெடுத்தாக்கா பசிச்சு சாப்புடுங்றதுதாம் அந்த விசயம். பசிச்சு சாப்புடுறதுங்றது சாதாரண விசயமா என்ன?

            நாமல்லாம் பசிச்சா சாப்புடுறோம்மான்னா அது ஒரு சந்தேகந்தாம். மூணு வேளையும் சாப்புட்டுப் பழக்கப்பட்டுட்டோம். அந்தப் பழக்கத்துல சாப்புடுறோம்ங்றதுதாம் உண்மெ. நல்லா பசிக்கிறப்போ சாப்பாட்டோட ருசி கூட பெரிசா தெரியாது. பசியைப் போக்கிக்கிறதுதாம் மொதலாவதா இருக்கும். நம்மள்ல பல பேருக்கு சாப்போட்டோ ருசி பிடிக்கலன்னா சாப்பாடே பிடிக்க மாட்டேங்குதுன்னா பசிச்சு சாப்புடலன்னுத்தாம் அர்த்தம். மூணு வேளை சாப்பாட்டுக்கே இப்படி ஒரு விதி இருக்குன்னா அதுக்கு இடை இடையில சிற்றுண்டின்னு சாப்புடுற கணக்கெல்லாம் எடுத்துக்கிட்டா ஒரு நாளைக்கு ஆறு வேளை சாப்புடுறவங்க எல்லாம் இருக்குங்க. அதோட நாலு வேளை டீத்தண்ணியோ, காப்பித் தண்ணியோ குடிக்கிற கணக்கெல்லாம் எடுத்துக்கிட்டா வாயிக்கும் வயித்துக்கு இடைவெளியே இல்லாம இருக்குறவங்க எல்லாம் இருக்காங்கன்னுத்தாம் சொல்லணும்.

            மிகையான உணவு உடம்புக்கு எப்போதும் ஒரு கேடுதாம். வாழ்க்கையில பொருளாதாரத்துக்கு மட்டுமில்ல, உணவும் எவ்வளவு தேவையோ அவ்வளவோட நிப்பாட்டிக்கிறதுதாம் நல்லது. பள்ளிக்கூட வயசுல ஒரு பாட்டு கேட்டிருப்போமே, ஒரு எலி கெடைச்சதையெல்லாம் தானே தின்னுச்சாம், அதால வயித்து வலி வந்து அவதிப்பட்டுச்சாம்ன்னு. அதே கதைத்தாம் இப்போ நடக்குது. இப்போ வயித்து வலி மட்டுமில்ல, சுகரு, பீப்பி, கொலஸ்ட்ரால்ன்னு என்னென்னவோ வந்துத் தொலையுது. ஆனா விசயம் ஒண்ணுத்தாம், தேவைக்கதிகமாக திங்குற உணவு வியாதியை உருவாக்குதுங்றதுதாம். எவ்வளவு தேவையோ அவ்வளவு சாப்புடுறது வியாதியைத் தணிக்குறதுக்கான முறை. எவ்வளவு தேவையோ அதை விட குறைவா சாப்புடுறது வியாதியைத் துரத்தி விடுறதுக்கான முறை. வாரத்துல சில வேளைங்க சாப்புடாம தண்ணிய மட்டும் குடிச்சிக்கிட்டுப் பட்டினி  கெடக்குறது இருக்குப் பாருங்க அது வியாதியையே அண்ட விடாம பண்ணுறதுக்கான முறை. இது போல இன்னும் சில விசயங்க நம்ம கிராமத்து மக்கள்கிட்டெ இருக்கு. அதையெல்லாம் நம்மளோட மக்கள்கிட்டெ பேசுறப்போ ஒவ்வொண்ணா தெரிஞ்சிக்கிறது. அப்படி தெரிஞ்சதெ ஒங்களோட மனசுக்குள்ள போட்டு வைக்குறது நல்லதுதானே. அப்படிச் சொல்றதுக்கு இன்னும் கொஞ்சம் விசயங்க இருக்கு. அதெ நாளைக்குப் பாப்போம்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...