10 Jul 2021

மீண்டும் களிமண் சாலைகள்

மீண்டும் களிமண் சாலைகள்

ஆண்டுக்காண்டு குழந்தைகள் போல் வளரும் சாலைகளைத் தற்போது பார்க்க முடிகிறது. பிள்ளைகள் வளர வளர பெற்றோர்கள் உயரத்தில் சிறிதானால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது சாலைகள் உயர வீட்டின் தரைமட்டம். சாலைகளின் ஓரங்களும் அதள பாதாளத்துக்குப் போய் விடுகிறது. இது ஓரங்கட்டிச் செல்வோருக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடியது. சாலையின் விளிம்பும் ஓரமும் மேடும் பள்ளமாய் இருந்து விபத்தைச் சந்தித்தவர்கள் ஏராளம். இந்த மேடு பள்ளத்தைச் சமமாக்க சிவப்பு அரளைகளைக் கொட்டிச் சமன் செய்வர். இந்த வேலையை உடனடியாகச் செய்ய மாட்டார்கள். குழந்தை பிறந்து ஆறெழு மாதங்களுக்குப் பிறகு பெயர் வைப்பது போல் ஆறெழு மாதங்கள் கழித்துச் செய்வர்.

மாவூரிலிருந்து கூத்தாநல்லூர் வரையிலிருக்கும் சாலைக்குத் திடீரென அதிர்ஷ்டம் வந்து இப்படித்தான் உயரமாக்கப்பட்டிருக்கிறது. சாலையின் விளிம்புக்கும் ஓரத்துக்கும் சில இடங்களில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள உயரத்தைப் பார்க்கும் வாய்ப்பு அதனால் உண்டாகிறது.

ஓரத்தையும் விளிம்பையும் சமன் செய்யும் சிவப்பு அரளைகளுக்குப் பதிலாகக் களிமண்ணைக் கொட்டலாம் என்ற புதுமையான யோசனை அந்த ஒப்பந்த பணியை எடுத்த ஒப்பந்ததாரருக்குத் தோன்றியது பாருங்கள். அவர் பாட்டுக்கு ஊரில் இருந்த குளம் குட்டைகளிலிருந்து களிமண்மைப் பெயர்த்து எடுத்து சாலைகளின் ஓரங்களில் சகட்டு மேனிக்குக் கொட்டி விட்டார்.

இப்போது மழை பெய்கிறது. ஓரத்தில் கொட்டியிருந்த களிமண் அரித்துக் கொண்டு சாலையில் களி போல கிடக்கிறது. இந்த களிமண்ணில் ஸ்கேட்டிங் போகலாம். வாகனங்கள் போக முடியாது. போனால் வழுக்கிக் கொண்டு போகும். வழுக்கிக் கொண்டே போய் நிலைதடுமாறி எங்கேயாவதோ யார் மீதோ மோதி நிற்கும். இந்தப் பகுதியே களிமண்ணுக்குப் பெயர் போன கடைமடைப் பகுதி. இந்தப் பகுதியில் இருந்த மனிதர்கள் எல்லாம் பல காலமாக நல்ல சாலைகளின்றி களிமண்ணில் காலூன்றி களிமண்ணில் பூட்ஸ் கால்களோடு நடந்தவர்கள். அவர்களுக்குத் தார் சாலை மூலம் ஒரு விடிமோட்சம் கிடைக்கும் என்றால் அதற்கு வாய்ப்பு இருக்காது போல. தார்சாலையின் ஓரத்தில் கொட்டியிருக்கும் களிமண்ணால் தார்சாலை களிமண் சாலையாக மாறிக் கொண்டிருக்கிறது. இதனால் தார்சாலைக்கு இன்னொரு சிக்கலும் இருக்கிறது. கொஞ்சம் வெயிலடித்து களிமண் காய்ந்தால் தாரைப் பெயர்த்தெடுத்து விடும். தார் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி விடும்.

நேற்று மாலை நேரம் அந்த களிமண் மண்டிய தார்சாலையில் நடந்து சென்ற போது ஏன் நடந்து சென்றோம் என்று ஆகி விட்டது. காலை வைத்தால் வழுக்கும் அளவுக்கு ஆங்காங்கே களிமண் சகதி. ரொம்ப கவனமாக நடக்க வேண்டியிருந்தது. இந்தச் சாலை நிச்சயம் விபத்தை உருவாக்கும் என்பதால் இந்தச் சாலையில் நடப்பதைத் தவிர்ப்பது நல்லது என்று நினைத்து முடிப்பதற்குள் இரு சக்கர வாகனத்தில் மனைவி, பிள்ளையோடு வந்த ஒருவர் வழுக்கிக் கொண்டு விழுந்தார். வாகனம் விழுந்ததும் எழுந்த வலியின் ஓலம் இருக்கிறதே. ரொம்ப வேதனையாக இருக்கிறது இப்போது நினைக்கும் போதும். அந்த ஓலத்திற்கு ஏதேனும் சக்தி இருக்குமானால் இந்தக் காரியத்தைச் செய்த அத்தனை பேரையும் எரித்து விடும். ஏழைகளின் ஓலத்திற்கு எங்கே சக்தியிருக்கிறது. அது பாட்டுக்கு அடங்கிப் போய் விட்டது.

சில நாட்களுக்கு முன்பு இந்த களிமண்ணைக் கொட்டுவதற்காக டிராக்டர்கள் டிரக்குகளுடன் சென்ற வேகம் இருக்கிறதே. நிச்சயம் ஏதேனும் விபத்து நடந்து விடும் என்பது போலத்தான் இருந்தது. நல்லவேளை யார் செய்த புண்ணியமோ நடக்கவில்லை. சில தருணங்களில் நடப்பது அபத்தம் என்று தெரிகிறது. ஆபத்து விளையும் என்றும் தெரிகிறது. தெரிந்தும் அதை அவ்வளவு அலட்சியமாகச் செய்கிறார்கள். இது சம்பந்தமான அச்சத்தையோ, அசம்பாவிதம் நடந்து விடும் பின்விளைவையோ சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவித்தால் மிரட்டுகிறார்கள். ஆள் வைத்து அடிப்பதற்கும் யோசிக்க மாட்டார்கள் போலிருக்கிறது.

மனிதர்களுக்குக் காசு ரொம்ப முக்கியமாகிப் போய் விட்டது. அதற்காகச் சக மனிதர்கள் அடிபடுவதோ, சாவதோ அவர்களுக்குப் பெரிதில்லை. சண்டை என்று வந்தால் நான்கு பேர் அடிபடத்தான் செய்வார்கள், போர் என்று வந்தால் பத்து பேர் சாகத்தான் செய்வார்கள் என்பது போல காசு சம்பாத்தியம் என்று வந்தால் சுற்றி இருப்பவர்கள் ஆயிரம் பேர் கஷ்டத்தை அனுபவிக்கத்தான் வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள்.

காசுக்காக நாட்டில் நடப்பதைப் பார்த்தால் அதுவும் ஒரு சில ஒப்பந்தகாரர்கள் செய்யும் அநியாயத்தைப் பார்த்தால்

            “அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே

            செல்வத்தைத் தேய்க்கும் படை.”             (555)

என்ற வள்ளுவர் வாக்குப் பொய்யாகி விடுமோ என்று அச்சமாக இருக்கிறது. சில விசயங்கள் தவறு என்றும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர்களுக்கு நன்றாகவே தெரிகிறது. அப்படிச் செய்தால்தான் காசு வரும் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே புரிகிறது. காசுக்காக எதையும் துணிந்து செய்யும் தைரியமும் அதற்கேற்ப நிர்வாக எந்திரங்களை வளைக்கும் சாமர்த்தியமும் அவர்களுக்கு வந்து விடுகிறது. அவர்கள் ஆடி அடங்கும் வரை எல்லாரும் தள்ளாடிக் கொண்டு கிடக்க வேண்டியதுதான். அவர்கள் ஆடி அடங்கினால் விடிமோட்சம் கிடைத்து விடுமா என்றால் அந்த இடத்தில் வர இன்னொரு ஆள் தயாராக இருப்பார். அந்த ஆள் வேறு யாரும் இல்லை. நம்மில் ஒருவராகத்தான் இருப்பார். ஆக இதற்கு விடிமோட்சமே கிடையாது. இப்படிப்பட்ட ஒரு நாட்டில் பாவ புண்ணியம் பற்றிய கருத்தாக்கம் இருப்பதில் ஆச்சரியம் ஒன்றில்லை. அதாவது ஆபத்தையும் விபத்தையும் உண்டாக்கும் ஒரு சாலையில் ஒருவர் உயிரோடு வீடு திரும்பினால் அது அவர் செய்த புண்ணியம். அடிபட்டுப் போனால் அது அவர் செய்த பாவம். மற்றபடி இது ஒப்பந்தக்காரரோ, கண்காணிக்க வேண்டிய நிர்வாக அமைப்புகளோ செய்த தவறாகாது இல்லையா?!

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...