11 Jul 2021

செங்காந்தள் அறிவுத்திருவிழா - 13

செங்காந்தள் அறிவுத்திருவிழா - 13

            கொரோனா கொன்று குவித்த மனிதர்கள் கணக்கில் அடங்காதது. கொரோனா காலத்தில் சக மனிதர்களுக்கு உதவியவர்களின் எண்ணிக்கையும் கணக்கில் அடங்காது. எத்தனையோ மனிதர்கள் தங்களால் இயன்ற சிறு சிறு உதவிகள் முதல் தங்கள் சக்தியை மீறிய பெரிய உதவிகளைச் செய்வதைப் பார்க்கும் போது

                        “உண்டா லம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத்

தமியர் உண்டலும் இலரே … … …

… … …

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே”             (புறநானூறு. 182)

என்ற புறநானூற்று வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது. ஆசை ஆசையாய் சேமித்த உண்டியலை உடைத்து முதலமைச்சர் நிவாரண உதவிக்கு அனுப்பிய சிறார்களை நினைக்கும் போது தன்னை அறியாமல் உதவுவது தமிழ் மண்ணுக்கே உரிய பாரம்பரியம் போல என்ற உணர்வு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

            எங்கள் இனிய நண்பர் சித்தார்த்தும் செந்தில்வேலனும் சக மனிதர்கள் பாதிக்கப்படும் போது அதற்கான உதவிக்கரங்களை நீட்டுவதில் முனைந்து நிற்பவர்கள். கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்த போது பள்ளிக்கூட பிள்ளைகளை முன்வைத்து அவர்கள் தங்கள் உதவிக்கரங்களை நீட்டியது மறக்க முடியாதது.

            இந்தக் கொரோனா காலத்திலும் அவர்கள் பள்ளிக்கூட பிள்ளைகளை நினைத்து உதவிக்கரங்களை நீட்ட முனைந்தார்கள். எப்படி உதவலாம் என்பதற்கான கருத்துருவையும் அவர்கள் எங்களிடம் கேட்டது எங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு என்று சொல்ல வேண்டும்.

            கல்வியாளரான பெஞ்சமின் ப்ளூம் வகைப்படுத்தும் அறிவு சார் கூறு, உணர்வு சார் கூறு, உடலியக்க சார் கூறு ஆகிய கல்வியியல் கூறுகளின் அடிப்படையில் பள்ளிப் பிள்ளைகளுக்கான பொருட்களை வழங்குவது எனத் தீர்மானித்தோம்.

            அறிவுசார் கூறின் அடிப்படையில் அவர்களின் அறிவை வளர்க்கும் வகையில் ஆளுக்கொரு புத்தகம், உடலியக்கசார் கூற்றை வளர்க்கும் வகையில் பேனா, பென்சில், அழிப்பான், கரிக்கோல், சீவுக்கருவி ஆகியவற்றோடு அவர்களின் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் குளியல் சோப்பு, துணி துவைக்கும் சோப்பு, பற்பசை, பல்துலக்கி ஆகியவற்றை வழங்குவது எனவும், உணர்வு சார் கூற்றில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் மாச்சில் (ரொட்டி), கடலை மிட்டாய், சர்க்கரை கால் கிலோ, தேநீர்த் தூள் பொட்டலம் ஆகியவற்றை 62 பிள்ளைகளுக்கு வழங்குவது எனவும் கருத்துருவைத் தீர்மானித்து சித்தார்த்துக்கும் செந்தில்வேலனுக்கும் அனுப்பி வைத்தோம். அதை அவர்கள் மனமுவந்து ஏற்றுக் கொண்டு செயல்படுத்த அனுமதித்தார்கள். அதற்கான மதிப்பீட்டுத் தொகை ரூ. 10,000/- ஐயும் உடன் அனுப்பி வைத்தார்கள்.

            பொருட்களை வாங்கி பங்கீடு செய்து கிராமத்து இளைஞர்களின் துணையோடு ஒவ்வொரு பிள்ளையின் வீடு வீடாகச் சென்று கொடுத்து முடித்த போது ஏற்பட்ட நிறைவையும் திருப்தியையும் வார்த்தையில் சொல்ல இயலாது. இத்துடன் கல்வித்தொலைக்காட்சி ஒளிபரப்பு அட்டவணையையும் மாணவர்கள் பயிலும் வகுப்புக்கேற்றவாறு அச்சிட்ட துண்டு சீட்டில் கொண்டு சேர்த்தோம். சித்தார்த்துக்கும் செந்தில்வேலனுக்கும் இதுவரை நீட்டிய உதவிக்கரங்களில் அவர்களை மிகவும் திருப்திபடுத்திய உதவிக்கர நிகழ்வாக இது அமைந்தது. இதில் எங்களுக்கு அமைந்த மிகவும் மகிழ்ச்சிதரக்கூடிய அம்சம் என்னவென்றால் 62 பிள்ளைகளிடம் 62 புத்தகங்களைக் கொண்டு போய் சேர்க்க முடிந்ததுதான். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக செங்காந்தள் அறிவுத் திருவிழாவைக் கடைசியாக நடத்தியது 02.03.2000 அன்று. அதற்குப் பிறகு 62 புத்தகங்களை வீடு வீடாக கொரோனா உதவித் தொகுப்புப் பொருட்களோடு கொண்டு சேர்த்ததைக் காலத்திற்கேற்ற அறிவுத்திருவிழாவாகவே கருதுகிறோம். ஒரு லட்சம் புத்தகங்களைப் பிள்ளைகளிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்ற இலக்கில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு 62 புத்தகங்களைக் கொண்டு சேர்த்திருக்கிறோம் என்பது ஒரு நிறைவைத் தருகிறது. இதனை நிறைவேற்ற வாய்ப்பும் வழிவகையும் செய்த சித்தார்த்துக்கும் செந்தில்வேலனுக்கும் செங்காந்தள் அறிவித்திருவிழாவின் வாயிலாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஒவ்வொரு முறையும் புத்தக இலக்குக் குறித்த விவரத்தை குறிப்பிடுவோம்.

அறிவுத் திருவிழாவின் இலக்கு

ஒரு லட்சம் புத்தகங்கள்

12 வது அறிவுத் திருவிழா வரை அடையப்பட்ட இலக்கு

3222 புத்தகங்கள்

13 வது அறிவுத் திருவிழாவில் அடையப்பட்ட இலக்கு

62 புத்தகங்கள்

13 அறிவுத் திருவிழா வரை

அடையப்பட்ட இலக்கு

3284 புத்தகங்கள்

அடைய வேண்டிய இலக்கு

96716 புத்தகங்கள்

சித்தார்த்தும் செந்தில்வேலனும் தொடங்கி வைத்த இம்முயற்சியால் வீடு வீடாகப் புத்தகங்களைக் கொண்டு சேர்க்கலாம் என்ற புதிய வழிவகையைக் கண்டடைந்துள்ளோம் என்று சொல்லலாம். புத்தகங்களைப் பிஞ்சுக் கரங்களில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆசையைத் தணித்துக் கொண்டிருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கும் சேர்த்து நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

*****

2 comments:

  1. தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அம்மா!

      Delete

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா?

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமா? தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் கூட்டண...