9 Jun 2021

கொரோனா வைத்தியங்கள்

கொரோனா வைத்தியங்கள்

            கொரோனாவின் முதல் அலை கிராமங்களை எட்டிப் பார்க்கவில்லை. தொலைக்காட்சி அலைவரிசையில் பார்த்ததோடு சரி. நகரங்களை விட்டு நகராமல் அப்படியே நின்று கொண்டது.

            கொரோனாவில் இரண்டாம் அலையில் ஒவ்வொரு கிராமமும் குறைந்தபட்சம் நான்கைந்து மரணங்களையாவது சந்தித்திருக்கிறது. குறைந்தபட்சம் பத்திலிருந்து இருபது பேர் வரை பாதிக்கப்பட்டவர்களைக் கண்டிருக்கிறது.

            கொரோனாவின் மூன்றாவது அலை எப்படி இருக்குமோ என்பதை கணிக்க முடியவில்லை.

            இதென்ன முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்றால் எண்களின் வரிசையில் வரிசையாக இந்தக் கொரோனா அலை அடித்துக் கொண்டிருக்குமா என்ற அச்சம் ஒவ்வொருவரையும் பீடித்துக் கொண்டிருக்கிறது.

            கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் தீவிரத்தோடு விஞ்ஞானிகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில் விஞ்ஞானிகளின் முயற்சிக்கு சற்றும் சளைக்காத வகையில் ஒவ்வொரு குடிமகனும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். குறிப்பாக வாட்ஸப்பில் இருக்கும் குடிமகன்களின் முயற்சி இதில் அதிகம். ஒரு நாளைக்கு எப்படியும் நான்கைந்து கொரோனா மருத்துவ முறைகளை அனுப்பி விடுகிறார்கள். அந்த மருத்துவ முறைகளை எப்படி பரிசோதனை செய்வது? யாரைக் கொண்டு பரிசோதனை செய்வது என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. குறைந்தபட்சம் அந்த மருத்துவ முறையை அனுப்பியவராவது பரிசோதித்து இருப்பாரா என்பதெல்லாம் விடை தேடும் வினாக்கள்.

முகநூலும் இதற்கு விதிவிலக்கில்லாமல் நிறைய மருத்துவ முறைகளைக் கொட்டுகிறது. இவ்வளவு மருத்துவ முறைகள் இருந்தும் எப்படி கொரோனா கொத்துக் கொத்தாக மனிதர்களைக் காவு வாங்குகிறது என்பது புரியாத புதிராக இருக்கிறது.

கோரோனாவில் மருத்துவ முறைகளின் போக்குகளைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.

சித்த மருத்துவர்கள் நாடி பிடித்துப் பார்க்காமல் வைத்தியம் செய்யக் கூடாது என்று அடித்துச் சொல்கிறார்கள். அதாகப்பட்டது கொரோனா நோயாளியாக இருந்தாலும் நாடி பிடித்துப் பார்த்துதான் வைத்தியம் பார்க்க வேண்டும் என்கிறார்கள். இதை ஆங்கில மருத்துவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். கொரோனா கிருமி வந்து ஒட்டிக் கொள்ளும் என்பார்கள். ஆனால் சித்த மருத்துவர்கள் தாங்கள் சொன்னதை முகக்கவசம் இன்றி கையுறை இன்றி வைத்தியம் பார்த்து நிரூபிக்கிறார்கள்.

ஓமியோபதி மருத்துவர்களும் நோயாளியை அருகில் இருத்தி அமர வைத்து உற்று நோக்கி அவரது நோயனுபவத்தை நன்குக் கேட்டுதான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிறார்கள். எனக்குத் தெரிந்த வகையில் ஓர் ஓமியோ மருத்துவர் அப்படித்தான் கொரோனா நோயாளிகள் உட்பட அனைவருக்கும் எவ்வித அச்சமின்றி நோயாளியிடம் நெருங்கி முகக்கவசம், கையுறை எதுவுமில்லாமல் சிகிச்சை அளிக்கிறார். குணப்பாடும் செய்து விடுகிறார்.

ஆந்திராவில் ஆயுர்வேத லேகியத்தை கொரோனாவுக்கு உரிய மருந்தாக அங்கீகரித்த செய்திகளைத் தொலைக்காட்சியில் காண முடிகிறது.

ஆங்கில மருத்துவப் பரிசோதனை, மருந்துகள், ஆங்கில மருத்துவத்துக்கான உள்கட்டமைப்புகள் என்று பார்த்தால் கோரோனா சிகிச்சைக்கான செலவினங்கள் அதிகம். சித்தா, ஆயுர்வேதம், ஓமியோ மருத்துவங்களில் அவ்வளவு செலவினம் இல்லை. மலிவான எளிமையான அணுகக் கூடிய மருத்துவமாக இருக்கிறது.

கொரோனாவுக்கான சிகிச்சை முறையில் ஆங்கில மருத்துவம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பொருத்துச் சிகிச்சை முறையில் முன்னேற்றம் இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறது. சித்த, ஆயுர்வேத, ஓமியோ மருந்துகள் அடிப்படையில் நோய் எதிர்ப்புச் சக்தியோடு தொடர்புடையவை,

ஆங்கில மருத்துவத்தால் கோரோனாவுக்கான மருந்து இதுவெனத் துல்லியமாக இன்னும் ஒரு மருந்தைச் சுட்டிக் காட்ட முடியாத நிலை இருக்கிறது. சித்தா கபசுர குடிநீரைக் காட்டுகிறது. ஓமியோ ஆர்சனிக் ஆல்பத்தைத் தடுப்பு மருந்தாகக் கொள்ளலாம் என்கிறது. கொரோனாவின் அடுத்தடுத்த தீவிர நிலைகளுக்கு ஏற்ப மருந்துகள் இருப்பதை சித்தா, ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவத் துறையைச் சார்ந்த மருத்துவர்களும், ஓமியோ மருத்துவர்களும் குறிப்பிடுகிறார்கள்.

இப்போது இக்கருத்துகளைத் தொகுத்தால் கொரோனாவுக்கு எச்சிகிச்சை முறையை நாடுவது என்ற குழப்பத்திற்குள் நாம் வந்து நிற்கலாம். ஏன் கொரானாவுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை முறையை நாடக் கூடாது? இந்திய மருத்துவ முறை மருத்துவர்களும், ஓமியோ மருத்துவர்களும், ஆங்கில மருத்துவர்களும் இணைந்து ஒருங்கிணைந்த முறையில் சிகிச்சை அளிப்பதை முன்னெடுத்தால் கொரோனா மருத்துவத்தில் அது முக்கிய மைல்கல்லாக அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மருத்துவத்துக்காக மனிதர்கள் இல்லை. மனிதர்களுக்காகவே மருத்துவம் என்பதால் அனைத்து விதமான மருத்துவ முறைகளும் தங்களுக்குள் இருக்கும் தன்முனைப்பை மறந்து விட்டு ஒருங்கிணைந்து செயல்பட முயற்சிப்பது நல்லதொரு மாற்றத்தை விளைவிக்கும். ஒவ்வொரு மருத்துவ முறையின் அடிப்படைகளும் கோட்பாடுகளும் மாறுபடலாம். ஆனால் மருத்துவத்தின் இறுதி நோக்கம் மனிதரைக் குணப்படுத்துவது என்ற நோக்கத்தில் அனைத்து முறைகளும் ஒன்றுபடும் என்பதால் தேவைக்கேற்ப அனைத்துத் துறை மருத்துவர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதை முன்னெடுப்பது மகத்தான மனிதரை நோக்கிய மருத்துவத்தைச் சாத்தியப்படுத்தும் என்று நினைக்கிறேன். இது குறித்து உங்களுக்கும் கருத்துகள் இருக்கும். ஒருங்கிணைந்து விவாதித்தால் ஒருங்கிணைந்த மாற்றங்கள் உண்டாகாமலா போய் விடப் போகிறது?

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...