10 Jun 2021

கொரோனாவக் கண்டுகிட்டு வந்த அத்தாச்சி

கொரோனாவக் கண்டுகிட்டு வந்த அத்தாச்சி

            சுபா அத்தாச்சிக்கு மூச்சு இழுத்து வுட முடியலன்னு தெரிஞ்சதும் ஆளாளுக்குப் பயம் வந்துடுச்சு. ரண்டு மூணு நாளா ஒடம்புக்கு முடியலன்னு படுத்துக் கெடந்துச்சு. ஒடம்பெல்லாம் வலி தாங்கலன்னு பெனாத்திக்கிட்டுக் கெடந்துச்சு. ஆகாரம் சரியா சாப்புடல. ஒடம்புக்கு ஏது பண்ணாலும் ஆகாரத்தெ மட்டும் மல்லுக்கட்டி சாப்புட்டுத் தொலைன்னு ஆளாளுக்கு அறிவுரை சொல்லிப் பாத்தாங்க.

“அட ஙொக்க மாக்கா சாப்புட முடிஞ்சா சாப்புட்டுத் தொலைய மாட்டானா? ஏம் இப்பிடி மனுசரப் போட்டுப் படுத்துறீங்க?”ன்னு அதெ கேட்டுப் பதிலுக்குக் காட்டுக் கத்தல் வெச்சுச்சு சுபா அத்தாச்சி. அதெ கேட்டு மெரண்டு வந்தவங்களுக்கு இப்போ சுபா அத்தாச்சியால மூச்சு வுட முடியாம செருமமா இருக்குன்னு கேள்விப்பட்டா எப்பிடி இருக்கும்?

            கேள்விப்பட்ட ஒரு சனம் கூட சுபா அத்தாச்சிப் பக்கத்துல அண்டல. “எடுபட்ட எளவெடுத்தவெ எங்கிட்டுப் போயி கொரோனாவெக் கட்டிக்கிட்டு வந்தாளோ? யிப்போ தெருவ சுத்தி தகரம் அடைக்கப் போறாம் கவர்மெண்டுக்கார்ரேம்!”ன்னு சனங்க ஆளாளுக்குச் சுபா அத்தாச்சியெப் போட்டு வையுதுங்க. ஊருல எந்தச் சனம் செத்தாலும் தொட்டுத் தூக்கி, குளிப்பாட்டி, அலங்காரம் பண்ணி சுடுகாட்டுக்கு அனுப்பி வைக்குற சனமா இப்பிடி சுபா அத்தாச்சியெ கண்டா ஒதுங்குதுன்னு மனசுக்குள்ள ஆச்சரியம்ன்னாலும் விசயம் கொரோனா சம்பந்தமாச்சுதே.

சேதி தெரிஞ்ச சனங்க எல்லாம் என்னா ஏதுன்னு விசாரிக்கப் போறதெ விட்டுப்புட்டு ஒரு சனமும் சேகரு வூட்டுக்குப் போயிடாதீங்கன்னு உஷாரு பண்ணுறதுல கவனமா இருக்குதுங்க. சேகரு சுபா அத்தாச்சியோடு புருஷன். சொகவாசி. இந்தாண்ட கெடக்குறதெ அந்தாண்ட எடுத்துப் போடுறதுன்னா நாலு ஊரு எரிச்சலு எரிஞ்சி வுழுற ஆளு.

ஊருல எந்தச் சனதுக்குச் சின்ன தலைவலின்னாலும் அதுவாச்சும் இதுவாச்சும்ன்னு அடிச்சுப் பிடிச்சு ஓடியாந்து ஆயிரத்தெடுட்டு வைத்தியத்தெச் சொல்லி அதெ பண்ணணும், இதெ பண்ணணும்ன்னுக் கொழப்பி விட்டுப்புட்டுப் போறா சனமா இப்படி ஆயிடுச்சுன்னு அதெ நெனைச்சா அது வேற ஒரு பக்கத்துல ஆச்சரியமா இருக்குச்சு.

            சேகரு அத்தான் பாத்துச்சு. நடக்குறதெப் பாக்குறப்பல்லாம் அதுக்கு மனசு வருத்தம்தாம். அதெ காட்டிக்கிடாம செல்போன எடுத்து 108க்குப் போட்டு விசயத்தெ சொன்னுச்சு. நாலு மணி நேரம் இருக்கும். 108 ஆம்புலன்ஸ் வந்து வீட்டு முன்னாடி நின்னுச்சு. சுபா அத்தாச்சியெ தொட்டுத் தூக்கி விட கூட ஒத்த ஆளு கிட்ட நெருங்கல. பொணமா செத்தா நான் தூக்குறேம், நீ தூக்குன்னு போட்டிப் போட்டுட்டு நிக்குற சனமெல்லாம் நாடு கடத்துனதுல நாம்ம எங்கேயோ போயிட்டேம்ங்ற மாதிரிக்குக் கதவடைச்சுக்கிட்டு வீட்டுக்குள்ளார கமுக்கமா உக்காந்துகிட்டு என்னா நடக்கப் போவுதோன்னு பீதியோட இருக்குதுங்க.

            சுபா அத்தாச்சியோட போண்ணு மலருதாம் அத்தாச்சியெத் தொட்டுத் தூக்கிக் கொண்டு போயி ஆம்புலன்ஸ்ல ஏத்தி வுட்டுச்சு. அதெ ஊருல மலரு பொண்ணுன்னு கூப்புடுறது வழக்கம். பொண்ணுன்னு சொன்னாலும் அதுக்கு வயசு இருவதுக்கு மேல ஆயிருச்சு. அப்படியே கூப்புட்டுப் பழக்கமாயிடுச்சு. நாலு பேரு பாக்க பொண்டாட்டியே எப்பிடித் தொட்டுத் தூக்கி ஏத்தி வுடுறதுன்னு சேகரு அத்தான் துண்டால வாயப் பொத்திக்கிட்டு வேடிக்கைப் பாத்துட்டு நிக்குது. சுபா அத்தாச்சிப் பக்கம் நெருங்கி ஒத்தாசெ ஒதவி எதையும் பண்ணல.

            யார்ர தொணைக்கு அனுப்புறது சுபா அத்தாச்சியோட? பொண்ணைத் தொணைக்கு அனுப்பலாம்ன்னா வூட்டுல இருக்குற நாலு மாட்டையும், ஒம்போது ஆட்டையும் யாரு பாக்குறது? அதுக்கு மேல சாணியள்ளி கொட்டகெயப் பெருக்கி வேலையெல்லாம் முடிச்சுச் சேகரு அத்தானுக்கு யாரு சோறு சமைச்சுப் போடுறது? கொரோனா வந்து வீடுங்றதால தெருவுல ஒரு பய இனுமே சுபா அத்தாச்சி வுட்டோ அன்னம் தண்ணிப் பொழங்க மாட்டாம். வேற யாரையாவது தெருவுல தொணைக்கு அனுப்பலாம்ன்னாலும் போன்னா ஒட்டுவாரு ஒட்டிக்கிட்டு வர்ற நோயாச்சே.

மலரு பொண்ணு அம்மா கையில போனக் கொடுத்து, “கையில வெச்சுக்கோ. போன்லேந்து சத்தம் வந்தாக்கா பச்செ பட்டனெ அழுத்திக்கிட்டுக் காதுல வெச்சுக்க. நாங்கப் பேசுறது கேக்கும்.”ங்குது சுபா அத்தாச்சிக்கிட்டெ. கரட்டுப் புரட்டுன்னு மூச்செ இழுத்துக்குட்டுக் கேட்டது பாதியும் கேக்காதது பாதியுமா, புரிஞ்சது பாதி புரியாதது பாதியுமா தலைய ஆட்டுது சுபா அத்தாச்சி.

அப்படி போனதுதாம் சுபா அத்தாச்சி. இடையில ஒரு நாளு தன்னோட டிவியெஸ் சாம்புல ஆஸ்பத்திரியில எட்ட நின்னு வெளியில நின்னுகிட்டு சேதி கேட்டுட்டு வந்துச்சு சேகரு அத்தான். நாலாவது நாளு சுபா அத்தாச்சிக்கு கோரோனா பாசிட்வ்ன்னு ரிசல்ட் வந்துடுச்சுன்னு மலரு பொண்ணு அழுகாச்சிய வெச்சிட்டுக் கெடந்துச்சு. பச்செ சட்டெ போட்டுக்கிட்டுச் சுகாதாரப் பணியாளர்கள் சுபா அத்தாச்சியோட வீட்டச் சுத்தி கிருமி நாசினிய தெளிச்சாங்க.

கோரோனா வந்தவளெ தொட்டுத் தூக்கி ஏத்தி விட்டவளாச்சேன்னு கேள்விப்பட்டெ சேதிய விசாரிக்க ஒரு சனம் கூட மலரு பொண்ண பாக்கப் போகல. அதனால் என்ன? ஆம்புலன்ஸ்ல போன சுபா அத்தாச்சி கொணமாயிப் பத்து நாள்ல நல்லா தெடகாத்திரமா ச்சும்மா கிண்ணுன்னு ஆம்புலன்ஸ்லேந்து வந்து எறங்குனுச்சு.

            வந்துட்டியாடி ஆயிங்ற மாதிரிக்கு ஆச்சரியப் பார்வே பாத்துச்சுங்க சனங்க. ஒண்ணும் நெருங்கிப் போயி வெசாரிக்கல. “ம்க்கூம்” ங்ற மாதிரிக்கு ஒரு சலிப்பு சலிச்சுக்கிட்டெ சேகரு அத்தான் காதுலயும் தெரு சனங்க காதுலயும் நல்லா கேக்குற மாதிரி சுபா அத்தாச்சி சொன்னிச்சு, “இன்னும் கொஞ்ச நாளு கொரோனாவுல இருந்திருந்தா சௌரியமா இருந்திருக்கும். நல்லா வெதமா சாப்பாடு, நல்ல வெதமா கவனப்பு, நல்ல வெதமா ஓஞ்சுக் கெடந்தேம். இனுமே இங்க வந்து ஆட்டு மாட்டெப் பாத்து வூட்டெப் பாத்து சாணியள்ளி சகதிய அள்ளி இனுமே ஒரே பாடுதாம் போ! எல்லாம் ஏம் நேரம்!”

            சேகரு அத்தான் ஒண்ணும் சொல்லல. தலைய மட்டும் குனிஞ்சுக்கிடுச்சு. பொண்டாட்டி இல்லாம போண்ண வெச்சு பத்து நாளைக்கு மேலா அது ஆட்டையும் மாட்டையும் பாத்து அலுத்துப் போயிருந்துச்சு. இனுமே அது சொகமா எதெப் பத்தின கவலையும் இல்லாம கொளத்தாங்கரெ அரசமரத்தடியில சோக்காளிகளோட பணத்தெ கட்டிச் சீட்டு வெளையாட்டு வெளையாண்டுக்கிட்டு இருக்கலாம்ல.

            இதுதாம் கொரோனாவோட ரெண்டாவது அலையில எங்க திட்டை கிராமத்துல கண்டறிஞ்ச மொதெ கொரோனா கேசு. மொத அலையில கொரேனா பரவுனப்ப யாருக்கும் எங்க கிராமத்துல கொரோனா வந்துடல. ஆன்னா ரெண்டாவது அலையில மொத ஆளா சுபா அத்தாச்சி சிக்கிக்கிடுச்சு.

            நாளைக்கு கிட்டு அண்ணாச்சிக்குக் கோரோனா வந்து அது தன்னைத் தானே எப்படிக் குணம் பண்ணிக்கிட்டுங்ற கதெயெ எழுதுறேன்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...