8 Jun 2021

ஜான் பீட்டரின் ‘செவ்வியல் இலக்கியங்களில் தமிழர் வாழ்வியல்’ நூலறிமுகம்

பேரா. முனைவர் அ. ஜான் பீட்டரின்

‘செவ்வியல் இலக்கியங்களில் தமிழர் வாழ்வியல்’

நூலறிமுகம்

            சங்க இலக்கிய வாசிப்புக்கும் ஆய்வுக்கும் வழிகாட்டு நூலாகக் கொள்ளத்தக்க வகையில் அமைந்துள்ளது பேராசிரியர், முனைவர் அ. ஜான் பீட்டர் எழுதியுள்ள ‘செவ்வியல் இலக்கியங்களில் தமிழர் வாழ்வியல்’ எனும் இக்கட்டுரை நூல். மற்றொரு வகையில் சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள வியத்தகு செய்திகளைப் பட்டியலிடும் களஞ்சியமாகவும் அமைந்துள்ளது.

            சங்க இலக்கியத்துக்கும் தனக்குமான பிணைப்போடு முன்னுரைத்து நூலைத் தொடங்கும் ஜான் பீட்டர் நூலை வாசிக்க வாசிக்க வாசிப்போருக்கும் சங்க இலக்கியத்துக்குமான வலுவான பிணைப்பை உண்டாக்குகிறார். அவருக்கு அவர்தம் பேராசிரியர் சௌ. மதார் மைதீன் சங்க இலக்கியத்தின் பால் பேரார்வத்தை எப்படி விதைத்தாரோ அதே நுட்பத்தை உள்வாங்கிக் கொண்டு வாசிக்கும் நமக்கும் சங்க இலக்கியத்தோடு பேரார்வத்தை உருவாக்கி விடுகிறார்.

            தமிழ்ச் செவ்வியல் இலக்கிய பட்டியலுள் அடங்கும் சங்க இலக்கியம், சங்க மருவிய காலத்து இலக்கியம், முத்தொள்ளாயிரம், தொல்காப்பியம் குறித்த ஆய்வுணர்வையும் ஆவலுணர்வையும் தூண்டும் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் தலைப்போடு உட்தலைப்பாக இலக்கிய வரிகளைப் பொருத்தமாகச் சூடியிருப்பது பூவையர் பூவைச் சூடியிருப்பதைப் போன்ற பேரழகைத் தருகிறது.

            ஒவ்வொரு கட்டுரையிலும் கட்டுரையோடு தொடர்புடைய நூல் குறித்து ஆய்வு நடைக்கு உரிய சுருங்க சொல்லி விளங்க வைக்கும் உத்தியோடு செறிவாகவும் சுவாரசியமாகவும் அறிமுகம் செய்கிறார். அரிதில் விளங்கக் கூடிய இலக்கண இலக்கிய குறிப்புகளைக் கட்டுரையின் போக்கில் நுட்பமாகப் பொருத்தி விளக்கும் போது ஆற்றோட்டத்தின் போக்கில் எளிமையாக நீந்துவதைப் போல எளிமையாக உணர வைத்து விடுகிறார். ஒவ்வொரு ஆய்வுக்கட்டுரைக்கும் தாம் பரந்து விரிந்த அளவில் வாசித்த நூல்களின் பட்டியலையும் தருகிறார்.

            பாணர்களைப் பாணர்கள் ஆற்றுப்படுத்துவது போல பாணர்களைப் பற்றிய முதல் கட்டுரையும் பத்தாம் கட்டுரையும் படிப்போரைச் சங்க இலக்கியத்தை நோக்கி ஆற்றுப்படுத்துகின்றன எனலாம். தமிழ்ச் சமூகத்தின் தொல்குடிகள் பாணர்கள் என்பதை

                        “துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று

                        இந்நான் கல்லது குடியும் இல்லை”[1]

என புறநானூற்று வரிகளைச் சான்று காட்டிச் செம்மாந்த வாழ்வு வாழ வேண்டிய பாணர்கள் பழம்பெருமை இழந்து பின்தங்கியதை ஆய்வுப் பொருண்மையோடு சுட்டிக் காட்டுகிறார்.

            தமிழ் மண்ணின் தொல்குடிகள் பாணர்கள் என்ற கட்டுரையைத் தொடர்ந்து தமிழ் மண்ணின் தொல்கடவுள் முருகன் என்பதை நிறுவி கி.மு. 2000 க்கு முன்பிலிருந்து முருக வழிபாடு இருந்ததைச் சான்றாதரங்களோடு நிறுவுகிறார்.

            தமிழ் நாகரிகத்தின் மலர்ச்சியைக் காந்தள் மலர் குறித்த கட்டுரையில் விளக்கும் நூலாசிரியர் செங்காந்தள் மலர் முகை நிலையில் கவிழ்ந்தும் மலர் நிலையில் நிமிர்ந்தும் இருக்கும் என்ற அவதானிப்பைச் சுட்டுவதோடு Malabar Glory Lily என்ற அதன் ஆங்கிலப்பெயர், Gloriosa Superba என்ற அதன் தாவரவியல் பெயர் ஆகியவற்றையும் சுட்டி விரிவான ஆய்வுப் புலத்தை நோக்கி நகரும் வகையில் கட்டுரையைக் கட்டமைக்கிறார்.

            ஆய்வுக்கோவையாக நூலின் கட்டுரைகள் ஒவ்வொன்றையும் அமைத்துள்ள நூலாசிரியர் ஆசாரக்கோவைப் பற்றிக் குறிப்பிடுமிடத்து அந்நூலில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகள் இடம் பெற்றிருப்பதையும், விலங்கினும் தாழ்வாய் மனிதர் கருத்தப்பட்ட அக்கால வழக்கம் பதிவாகியிருப்பதையும் நுட்பமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

            தமிழர் வரலாற்றை அறியும் ‘வரலாறு பேசும் நூல்’ என புறநானூற்றைப் பற்றி அறிந்திருப்பர் பலர். அதற்கு மாறாக அகநானூற்றிலும் வரலாற்றுச் செய்திகள் உவமைகளாகப் பதிவாகியிருப்பதை ‘அகநானூற்றுப் பாடல்களின் வரலாற்றுச் செய்திகள்’ என்ற கட்டுரையில் ஆய்வு செய்து விளக்குகிறார். யவனர் பொன்னோடு வந்து மிளகோடு திரும்பிய வரலாற்றுச் செய்தி அகநானூற்றில் பதிவாகியிருப்பதை

                        “பொன்னொடு வந்து கறியொடு பெயரும்”[2]

அகநானூற்று வரிகளைச் சான்று காட்டி நிறுவுகிறார்.

            சங்க கால இலக்கியங்கள் வீரயுக காலத்தின் தொடர்ச்சியை ஒட்டிய இலக்கியங்களாக அமைந்திருப்பதைக் கைலாசபதியின் வீரயுகப் பண்பு குறித்த ஆய்வின் பின்னணியில் விளக்கும் நூலாசிரியர் ஆணின் புற வீரத்துக்கு இணையாக பெண்ணின் அக வீரம் திகழ்ந்ததை

                        “ஒரு மகன் இல்லது இல்லோள்

                        செருமுகம் நோக்கிச் செல்கென”[3]

புறநானூற்றிலிருந்து தேடிக் கண்டறிந்து சங்க கால வீரயுகக் கோட்பாடு குறித்த கட்டுரையில் சான்று காட்டி விளக்குகிறார்.

            திருக்குறளின் சூழலியல் சிந்தனைகளை விளக்கும் கட்டுரையில் திருவள்ளுவர் எத்தனை வகை விலங்குகள், மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவற்றைத் திருக்குறளில் பயன்படுத்துகிறார் என்பதை வகை பிரித்து பட்டியலிடும் இடத்தில் உண்டாகும் வியப்பை வார்த்தைகளில் விளக்குவதை விட இந்நூலை வாசித்து அறிந்து உணர்வது சரியாக இருக்கும். உலகில் உள்ளதும் உலகைச் சூழ்ந்ததும் ஆகிய நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ, நிலவு, விண்மீன் என அனைத்தையும் திருவள்ளுவர் திருக்குறளில் கொண்டு வந்துள்ளதைச் சான்று காட்டி திருவள்ளுவரின் சூழலியல் சிந்தனை பல்லுயிர் காக்கும் பகுத்துண்ணும் கோட்பாட்டை சூழலியல் அறத்தோடு முன்வைப்பதைக் நூலாசிரியர் நுணுக்கமாகக் காட்டுகிறார்.

            சங்க இலக்கியத்தின் அறவியல் வளர்ச்சி சங்க மருவிய காலத்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பேணப்பட்டதை முதுமொழிக்காஞ்சி நூலை முன் வைத்து நிறுவும் கட்டுரையும், பெண்ணின் நுட்பமான மன உணர்வுகளைப் பெண்ணிய நோக்கில் குறிஞ்சித்திணைப் பாடல்களைக் கொண்டு ஆய்வு செய்யும் கட்டுரையும் கோட்பாட்டு நோக்கிலான புதிய ஆய்வுப் பாதைகளைத் திறந்து விடுகின்றன.

            பாலை பாடிய பெருங்கடுங்கோ குறித்த ஆய்வுக் கட்டுரையில் சங்க காலத்திலிருந்து நிலவிய காமன் விழா, கார்த்திகை தீப விழா, இடது கண் துடித்தால் நன்மை எனக் கொள்ளும் மக்களின் நம்பிக்கை, மகாபாரதத்தின் இதிகாசத் தாக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறார் நூலாசிரியர். இது போன்ற மேலும் பல அரிதின் அறியக் கூடிய செய்திகளை முத்தொள்ளாயிரத்தில் உத்திகள் குறித்த கட்டுரையிலும் தொல்காப்பியம் விளக்கும் அகத்திணைக் கூற்றுகள் குறித்த கட்டுரையிலும் தொகுத்துரைக்கிறார்.

            பேராசிரியர், முனைவர் மு. அருணகிரி அவர்கள் குறிப்பிடுவது போல அரிய துறையாகிய இடப்பெயர் ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர் ஜான்பீட்டர். அவர்தம் இடப்பெயர் ஆய்வின் புலமையைக் காட்டும் வண்ணம் சோழநாட்டு இடப்பெயர்கள் குறித்த கட்டுரையாய்வு இந்நூலில் அமைந்துள்ளது. சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள 240 இடப்பெயர்களுள் 40 சோழ நாட்டு இடப்பெயர்கள் அமைந்துள்ளதை ஆய்வு நோக்கோடு புலப்படுத்துகிறார் ஜான் பீட்டர். சங்க காலத்தில் குடந்தை என்றும் குடவாயில் என்றும் வழங்கப்பட்டது இன்றைய குடவாசல் என்ற செய்தியை ஆய்ந்து கூறும் நூலாசிரியர் பிரபந்த தேவார காலத்தில் குடந்தை என்பது கும்பகோணத்தைக் குறிக்கும் சொல்லாக வழங்கப்பட்டதை வெளிப்படுத்துகிறார்.

            தம் பேராசிரியர் சௌ. மதார் மைதீனிடமிருந்து பெற்ற சங்க இலக்கிய பேரார்வத்தை பேராசிரியர், முனைவர் ஜான் பீட்டர் அவர்கள் தொடர்ந்து அவர்தம் மாணவர்களிடமும் கடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை எதையும் ஆய்வு மனப்பாங்கோடு எதிர்நோக்கும் இந்நூலாசிரியன் நூல் அறிமுகம் குறித்த கட்டுரையில் ஆதாரம் இல்லாமல் குறிப்பிட்டு விட முடியாது அல்லவா! பேராசிரியர், முனைவர் அ. ஜான்பீட்டர் அவர்களால் சங்க இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட மாணவர்களுள் நானும் ஒருவன் என்பதை இதனால் பணிவோடு இவ்விடம் தெரிவித்துக் கொள்ள விழைகிறேன்.

நூல் குறிப்பு

நூலாசிரியர்

பேரா., முனைவர் அ. ஜான்பீட்டர்

தொடர்பு எண் : 94438 64205

நூல் பெயர்

செவ்வியல் இலக்கியங்களில் தமிழர் வாழ்வியல்

பதிப்பும் ஆண்டும்

முதல் பதிப்பு, 2020

பக்கங்கள்

120

விலை

ரூ. 120/-

நூல் வெளியீடு

அய்யா நிலையம்,

மனை எண். 10, ஆரோக்கிய நகர் முதல் தெரு,

E.B. காலனி, நாஞ்சிக்கோட்டைச் சாலை,

தஞ்சாவூர் – 613 0006

தொடர்பு எண் : 94430 07623

 



[1] புறநானூறு, 335 : 7, 8

[2] அகநானூறு, 149 : 10

[3] புறநானூறு, 279 : 10, 11

7 comments:

  1. மிகவும் மகிழ்ச்சி.முழுமையாகப் படித்து தாங்கள் வழங்கிய பாராட்டுரைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஐயாவின் அன்புக்கும் அரவணைப்புக்கும் என்றென்றும் நன்றிகள்!

      Delete
  2. மிக்க மகிழ்ச்சி sir..வாழ்த்துக்கள் பல

    ReplyDelete
    Replies
    1. அன்பின் நன்றிகள் ஐயா!

      Delete
  3. வணக்கம்.அருமையான திறனாய்வு.பாராட்டி வாழ்த்துகின்றேன்.இவண் முத்து அருணகிரி

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி ஐயா! என் பேராசிரியரின் வாழ்த்துதலுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

      Delete
  4. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் வாசிப்பும் பகிர்வும்...

    ReplyDelete

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...