காலத் தேர்ச்சி கொள்!
(எதைப் படித்தால் வருங்காலம் சிறப்பாக இருக்கும்?)
நீட், ஜெ.இ.இ. எனப் படிக்க வைக்க பிள்ளைகளைப் போட்டு கொடுமைப்படுத்துபவர்கள்
ஏன் ஜோதிடத்தைப் படிக்க வைக்க யோசிக்கிறார்கள் என்று நான் யோசித்ததுண்டு.
படித்து வருமானம் பார்ப்பதுதான் நோக்கம் என்றால் தற்போதைய கால
கட்டத்தில் ஜோதிடத்தைப் படிப்பதுதான் சிறந்தது. ஜோதிடத்தைப் படிப்பது என்று முடிவெடுத்து
விட்டால் படித்து முடித்து வருங்காலத்தில் வேலை கிடைக்குமா? வருமானம் பார்க்க முடியுமா?
என்றெல்லாம் அதற்கு ஜோதிடம் பார்க்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை. வேலை உத்திரவாதம்.
வருமானத்து இரு மடங்கு உத்திரவாதம்.
ஒரு எம்.பி.பி.எஸ். மருத்துவரை விட ஜோதிடம் படித்தவர் மிக அதிகமாகச்
சம்பாதிக்க முடியும். அதற்கான வாய்ப்பு ஆயிரம் வோல்ட் பல்பை விட பிரகாசமாக இருக்கிறது.
நான் பார்த்த வகையில் ஒரு எம்.பி.பி.எஸ். மருத்துவர் ஐந்திலிருந்து பத்து நிமிடம் வரை
ஒரு நோயாளியைப் பரிசோதித்து நூறிலிருந்து இருநூறு வரை வாங்குகிறார். கட்டாயம் ஒரு ஊசி
போட்டாக வேண்டும். சோதிடர் சோதிடத்தைப் பார்த்து இரண்டு நிமிடம் சொல்கிறார். இருநூறிலிருந்து
ஐநூறு வரை தட்சணை ஆளாளுக்கு வேறுபடும். ஏதேனும் கூடுதல் கேள்விகள் இருந்தால் அதற்கேற்ப
கூடுதல் கட்டணம்.
என்ன இவர் இப்படிக் கேட்கிறார்
என்று மனதுக்குள் நினைத்தால் அதைத் தன் சோதிட அறிவால் எப்படியோ கண்டுபிடித்து விடும்
சோதிடர் இது என் ஐம்பது வருட ஆராய்ச்சி, அறுபது வருட ஆராய்ச்சி என அளந்து விடுகிறார்.
அவர் வயது அதிகபட்சமாக முப்பைந்திலிருந்து நாற்பதுக்குள்தான் இருக்கும். தொக்கி நிற்கும்
வயதிற்கு முற்பிறவியில் சோதிடத்தை ஆராய்ச்சி செய்திருப்பாரோ என்னவோ?
சோதிடம் படித்துச் சோதிடராவதில்
பல சௌகரியங்கள் இருக்கின்றன. அதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சோதிடத்தில்
பிரபலமாகிக் கொண்டு போனால் செய்தித்தாளுக்குத் தினசரி, வார, மாதாந்திர, புத்தாண்டு
ராசிப்பலன்கள் எழுதிக் கொடுத்து அதில் ஒரு வருமானம் பார்க்கலாம். அப்படியே தொலைக்காட்சிக்குப்
போய் மேலும் பிரபலமடைந்து கூடுதல் வருமானம் பார்க்கவும் வாய்ப்பிருக்கிறது. தொலைக்காட்சியில்
தோன்றி விட்டால் டிவிபுகழ் எனப் போட்டு போர்டு வைத்து விட்டால் தட்சணை அளவுக்கு அளவில்லை.
வருமானத்துக்கு வருமானம், பேருக்குப் பேர், புகழுக்குப் புகழ். பிற வேலைவாய்ப்புகளில்
இவ்வித ஒருங்கிணைந்த பம்பருக்கான வாய்ப்புகள் குறைவுதான் என்பதை நான் குறிப்பிட்டுச்
சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.
கால மாற்றத்திற்கேற்ப இப்போது
ஆன்லைனில் ஜாதகம் பார்த்து அனுப்பும் ஜோதிடர்களும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் எனும்
போது கால மாற்றத்திற்கேற்ப வருமானம் பார்க்கக் கூடிய தொழிலாக ஜாதகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
இதில் உங்களுக்கு ஏதேனும் மாற்றுக் கருத்து இருக்காது என்று நினைக்கிறேன். இருப்பின்
அது குறித்து தெரிவிக்க வேண்டுகிறேன்.
இந்த ஜோதிடமெல்லாம் உண்மையா?
பொய்யா? என்ற சந்தேகம் என பல நேரங்களில் வந்ததுண்டு. என்னுடைய ஜாதகக் கணிப்பானில் நான்
என்ஜினியர் ஆவேன் என்று எனக்கு ஜாதகம் பார்த்தவர் கணித்திருந்தார். இதனால் என்னை சிறுவயதிலிருந்து
என்ஜினியர் எனக் கூப்பிட்டுப் படுத்தி எடுத்து விட்டார்கள். பிறகு நான் வளர்ந்து படித்து
வேலைக்குப் போன பின் நான் என்ஜினியர் ஆகவில்லை என்பது சோகக்கதை. அது மட்டுமில்லாது
என்ஜினியரிங் தொடர்புடைய எதுவோடும் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லாமல் போய் விட்டது.
ஏன் என் ஜாதகம் இப்படி ஆனதென்று அதற்கு ஒரு ஜோதிடம் பார்க்க வேண்டும்.
எனக்குப் பெரிதாக ஜாதகத்தில்
நம்பிக்கையில்லை. என் அப்பா ஜாதகப் பித்தர். எங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுக்கெல்லாம்
ஜாதகம் பார்க்கிறேன் என்று பல ஆயிரங்களை அழித்திருப்பார். கூட்டிக் கழித்துப் பார்த்தால்
லட்சத்தையும் தொடலாம். கலியாணம் தொடர்பாக ஜாதகம் பார்க்க வேண்டும் என்றால் ஊன், உறக்கம்
மறந்து அதுவே அதாகப்பட்டது ஜாதகமே பலியெனக் கிடப்பார். அதிகாலையில் கிளம்பினால் ஜாதகம்
பார்த்து முடிக்க நள்ளிரவு ஆனாலும் ஜாகையாக அங்கேயே இருப்பார். பார்த்து விட்டுத்தான்
மறுவேலை பார்ப்பார். நான் எந்த ஊரில் எந்த ஜோதிடரிடம் இருக்கிறார் என்பதைக் கேட்டுக்
கொண்டு மதியான சாப்பாட்டை எடுத்துக் கொண்டு போய் கொடுத்து விட்டு வருவேன். வேறென்ன
செய்வது? நான்தான் முன்பே சொன்னேனே, ஜாதகம் பார்க்க கிளம்பினால் என் அப்பாவுக்கு சாப்பாடு,
உறக்கம் எல்லாம் மறந்து விடும் என்று.
மேற்படி மனிதர்கள் இருக்கும்
உலகில் ஜாதகம் பார்ப்பதற்கு என்ன பஞ்சம் வந்து விடப் போகிறது என நினைக்கிறீர்கள்? தாராளமாக
ஓர் ஆறு மாதம் ஜோதிடம் படிக்க வைத்தால் அமோகமாக வருமானம் பார்க்கலாம். அப்படியே பரிகாரம்,
தோஷ நிவர்த்தி என்று ஆரம்பித்தால் தனி டிராக்கில் வருமானம் எகிறும். படிக்கிற காலமும்
கம்பி, வருமானமும் மிகுதி என்பதால் பெற்றோர்கள் இந்தத் திக்கில் தங்கள் பிள்ளைகளைச்
செலுத்தலாமா என்பது குறிந்து ஆலோசனை குழு அமைத்து உடனடியாக ஒரு முடிவெடுத்துக் கொள்ளுமாறு
வேண்டிக் கொள்கிறேன்.
*****
No comments:
Post a Comment