கொரோனாவை எதிர்கொள்ளும் உலகம்
கொரோனாவை ஒட்டு மொத்த உலகமும்,
உலகத்தில் அடங்கியுள்ள நாடுகளும், நாடுகளில் வாழும் மக்களும் எதிர்கொண்டதிலிருந்து
நிறைய விசயங்கள் அறிய வருகின்றன. ஒரு சில விசயங்களைத் தொகுத்துப் பார்த்தால் பேரிடரை
உலகமும், நாடுகளும், மக்களும் எவ்வளவு அசட்டையாக எதிர்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து
கொள்ளலாம். சான்றாக இந்த மூன்று விசயங்களை எடுத்துக் கொள்ளலாம்.
1. கொரோனாவின் முதல் அலை
தீவிரமாக இருந்த போது இந்திய எல்லையில் படைகளைக் குவித்த சீனா
2. இரண்டாம் அலை தீவிரமாகத்
தாக்கத் தொடங்கிய போது அதை விட கொடூரமாகத் தாக்கிக் கொண்ட இஸ்ரேல் – ஹமாஸ்
3. இரண்டு அலைகளிலும் எதைப்
பற்றியும் கவலை இல்லாமல் கூட்டம் சேர்த்து திருமணம், காதணி விழாக்களைக் கொண்டாடிய தனி
மனிதர்கள்
இந்த மூன்று விசயங்களுக்கு
எந்த விதத்திலும் சளைத்ததில்லை எனும் வகையில் டீக்கடைகளைத் திறப்பதற்கு முன் டாஸ்மாக்
கடைகளைத் திறந்த அரச நிர்வாக எந்திரம்.
விசயம் இத்தோடு முடிந்து
விடவில்லை. தன்னிடம் தடுப்பு மருந்தில்லை என்பதை ஒப்புக் கொள்ள முடியாத ஆங்கில மருத்துவம்
அங்கீகாரத்தோடு மருத்துவம் செய்கிறது. வருமுன் காப்பதற்கான தடுப்பு மருந்துகளைக் கொண்டுள்ள
சித்தா, ஆயுர்வேதம் போன்ற இந்திய மருத்துவ முறைகள் உரிய அங்கீகாரம் வழங்கப்படாமல் பின்னுக்குத்
தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாரம்பரிய மருத்துவத்தின் தடுப்பு மருந்துகள் உதாசீனம்
செய்யப்படுவதைப் பல சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள் வேதனையோடு குறிப்பிடுகின்றனர்.
ஆறு மாத கால முடக்கத்தின்
மூலம் முதல் அலையை வெற்றிகரமாக எதிர்கொண்டதாக இந்தியா கூறினாலும் இந்தியாவின் பக்கத்து
நாடான பாகிஸ்தான் எவ்வித முடக்கத்தையும் கைக்கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
கொரோனா தடுப்பு முறைகள் குறித்து
உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடும் அத்தனை முறைகளும் நமது பாரம்பரிய முறைகள் என்பது
இந்திய மருத்துவத் தத்துவத்தை ஆய்ந்தால் புலப்படும். இந்திய மருத்துவத் தத்துவம் நோய்
வராமல் முன் கூட்டியே தடுப்பதில் அதிகம் கவனம் செலுத்தும். ஒருவேளை நோய் வந்தால் நோய்க்கேற்ப
குணமடைவதற்கான தகவமைப்பு முறைகளைப் பத்தியம் போன்ற பல வடிவில் வழங்கும். தனிமனித இடைவெளி,
முகக்கவசம் போன்றவை அவ்வகை தகவமைப்பு முறைகள் என்றால் இளகம், லேகியம் போன்றவற்றைக்
குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுத்துக் கொள்வது வருமுன் காத்துக் கொள்ளும் தடுப்பு
முறைகளில் அடங்கும்.
நோய் சார்ந்த அறிவார்ந்த
அணுகுமுறை பாரம்பரிய மருத்துவத்தில் இருக்கிறது. ஒரு முறை நோய் கண்டு பாரம்பரிய மருத்துவத்தில்
குணமானவர்கள் அதன் தடுப்பு முறைகளில் விழிப்போடு இருக்கும் வகையில் அரை வைத்தியர்களாக
ஆகி விடுகிவார்கள்.
நோய்க்கான மருந்து, நோய்
குணமாக உருமாற்றிக் கொள்ள வேண்டிய பழக்க வழக்கங்கள் குறித்த கூரிய அறிவைப் பாரம்பரிய
மருத்துவத்தில் வெளிப்படையாக அறிந்து கொள்ளலாம். ஆங்கில மருத்துவத்தில் அதற்கான வாய்ப்புகள்
இல்லை. அங்கு மருத்துவர் கடவுளாகி விடுகிறார். நோயாளி தரிசனத்துக்காக ஏங்கும் பக்தராகளாகி
விடுகிறார்கள். தரிசனத்துக்காக ஏங்கும் எல்லாருக்குமா கடவுள் காட்சி அளித்து விடுகிறார்?
காசிருப்பவர்களுக்குக் கட்டண தரிசனம் தருவதைப் போன்ற நிலைகளும் ஆங்கில மருத்துவத்தில்
நிலவுகிறது.
உணவுப் பழக்க வழக்கங்களையும்
வாழ்வியல் முறைகளையும் நோய்க்கேற்ப மாற்றிக் கொண்டால் அதை எதிர்கொள்ள முடியும் என்பதை
ஒவ்வொரு நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளும் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கின்றன.
சத்தான ஆகாரமும் தனி மனித
இடைவெளியும் கொரோனாவைத் தடுக்கும் என்றால் அதைத்தானே நோய்க்கான தகவமைப்பாகப் பாரம்பரிய
மருத்துவம் ஆண்டாண்டு காலமாகக் கூறிக் கொண்டிருக்கிறது. அதை முன்னெடுத்துச் செல்வதற்குத்
தடையாக ஆங்கில ஆதிக்க மருத்துவம் இருப்பதோடு அதில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு
உலகுக்கும் பல விசயங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு சில விசயங்களைத்தான் மேலே நாம்
பார்த்தது. விரிவாகப் பட்டியலிட்டால் நிறையப் பட்டியலிட முடியும். பட்டியலிட பட்டியலிட
சிரித்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு கோமாளித்தனங்கள் நிறைந்ததாக இருக்கிறது உலகின்
விசயங்கள்.
*****
No comments:
Post a Comment