வேளாண்மையும் மழையும்
ஆற்றுப்பாசனம்,
ஏரிப்பாசனம், கிணற்றுப் பாசனம், பம்புசெட் பாசனம் என எந்த வகையில் பாசனம் செய்தாலும்
வேளாண்மையை மழை ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது. மானாவாரி நிலங்களுக்கு மழையே ஆதாரமாக
அமைகிறது. திருவள்ளுவரின் பார்வையில் “நீரின்று
அமையாது உலகு”[1]
ஆகிறது.
எனக்குத்
தெரிந்த வரை வேளாண்மைக்கும் மழைக்கும் இருக்கும் தொடர்பை நம் கிராமத்து மனிதர்கள்
“பெய்ஞ்சு கெடுக்கும், இல்லன்னா பெய்யாம கெடுக்கும்” என எதிர்மறையாகச் சொல்லிக் கேள்விப்பட்டதுதான்
அதிகம். இத்தனைக்கும் அவர்கள் மழைத் தெய்வமாய் மாரியம்மனை வழிபடுபவர்கள்.
அண்மைக்
காலமாக மழைக்கும் வேளாண்மைக்கும் இருக்கும் தொடர்பை இணக்கமாகப் பார்க்க முடியவில்லை.
வேளாண்மைக்குத் தேவையில்லாத நேரங்களில் பொழிகிறது, தேவையான நேரங்களில் பொழிய மறுக்கிறது.
திருவள்ளுவர் குறிப்பிடுவது போல “கெடுப்பதூஉம்
கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே”[2] பொழிந்தது குறைவுதான்.
2020 –
2021 ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் விளைந்த நெல்லை மழையில் நனைய விடாமல் அறுவடை செய்தவர்கள்
அரிதாக இருப்பார்கள். மழையாமல் நனையாமல் அறுவடை செய்தவர்கள் இருப்பார்களானால் அவர்கள்
வியாபாரியிடமோ அரசிடமோ விற்பதற்குள் மழையில் நெல்லை நனைய விட்டிருப்பார்கள். நெல்லை
விளைவித்ததில் பட்ட பாட்டினும் மழையில் நனைந்த நெல்லைக் காய வைப்பத்தில் பட்ட பாடு
அதிகம். விவசாயிகள் விளைவித்த நெல்லைக் கொள்முதல் செய்வதில் மாபெரும் அலட்சியம் நிலவுகிறது.
விளைவித்த நெல்லை விற்று முடிப்பது விவசாயிகளுக்கு மாபெரும் கனவாக மாறிக் கொண்டிருக்கிறது.
துல்லியமாக
விற்றுமுதல் பார்க்கும் எந்த வியாபாரியும் விவசாயத்தை ஏற்று நடத்த முன்வர மாட்டார்.
தினசரி வருவாயை எதிர்பார்க்கும் எந்தத் தொழிலாளியும் விவசாயத்தை நம்பி இருக்க மாட்டார்.
முதலீடு செய்து பணம் பார்க்கும் எந்த முதலீட்டாளரும் விவசாயத்தில் முதலீடு செய்ய மாட்டார்.
ஆனால் விவசாயிக்கு விளைபொருளை விற்பதில் போட்டிப் போட்டுக் கொண்டு வியாபாரிகள் ஈடுபடுவார்கள்.
விவசாயி விளைவித்த விளைபொருளை வைத்து ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் ஈடுபடுவார்கள்.
விவசாய விளைபொருளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை அரசாங்கம்
நிர்ணயம் செய்து முடிப்பதற்குள் அடமானம் வைத்ததை மீட்பதற்காக விவசாயி தன் விளைபொருளை
விற்று முடித்திருப்பார். ஒவ்வொரு விளைச்சலின் முடிவிலும் பாட விவசாயிடம் பஞ்சப்பாட்டு
தயாராக இருக்கிறது. எந்த நம்பிக்கையில் ஒவ்வொரு வருட விளைச்சலுக்கான தொடக்கத்தில் விவசாயி
நம்பிக்கையோடு விவசாயத்தில் ஈடுபடுகிறார் என்பது விடை காண முடியாத ஒன்று.
“மண்ணுல போடுறது வீணா போவாதுடாம்பீ! மண்ணுல போடுறதெல்லாம் பொன்னுதாம்டாம்பீ!”
என்று விளைச்சலைத் தொடங்குகிற ஒவ்வொரு நேரத்திலும் எப்படியோ ஒரு நம்பிக்கை விவசாயிகளுக்கு
வந்து விடுகிறது. சொரி புண்ணை வைத்துக் கொண்டு சொரியாமல் இருக்க முடியாது என்பது போலத்தான்
நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயிகளால் சும்மா இருக்க முடியாது.
அரிதாக ஒரு சில வருடங்களைத் தவிர ஒவ்வொரு வருடமும் மழையும்
விவசாயமும் அவர்களுக்கு மோசமான பாடங்களைக் கற்றுக் கொடுத்தாலும் அவர்களின் தன்னம்பிக்கைக்
குறைந்து நான் பார்த்ததில்லை. மழை எவ்வளவு ஏமாற்று வித்தைகளைக் காட்டினாலும் விவசாயிகளின்
தன்னம்பிக்கை முன் வருடா வருடம் தோற்றுப் போகிறது. மழையையும் சூரியனையும் மனிதர்களையும்
நம்பிக்கையோடு கும்பிட்டு விவசாயத்தைத் தொடங்குகிறார்கள்.
மனிதர்கள் விவசாயியை ஏமாற்றுவது மற்றும் வஞ்சிப்பதுக் குறித்து
வருத்தப்பட முடியாது. அவர்கள் விவசாயியின் வயிற்றில் அடித்துப் பழக்கப்பட்டவர்கள்.
அவர்களின் பழக்கத்தை மாற்ற முடியாது. விவசாயியின் வயிற்றில் அடித்து விளையாடுவது சக
மனிதர்களுக்கு மகிழ்ச்சிகரமான விளையாட்டு. அவர்களின் விளையாட்டு மகிழ்ச்சிக்காகவேனும்
விவசாயிகள் வயிற்றில் அடியை வாங்கிக் கொண்டு வலிக்கவில்லை என்று சொல்லி சிரித்துக்
காட்டத்தான் வேண்டும். விவசாயியைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் அப்படித்தான். ஆனால்
மழை? மழை அப்படிச் செய்யக் கூடாது. பாவம் மழைதான் என்ன செய்யும்? அது “எல்லார்க்கும் பெய்யும் மழை”[3] ஆக இருக்க வேண்டியதாக
இருக்கிறது. விவசாயியை மட்டும் கவனித்துப் பெய்ய முடியாது. நிவாரணம் கொடுப்பதில் சம்பாதிப்பவர்கள்
வளமை பெற அவர்களுக்கும் சேர்த்து வெள்ளமாய்ப் பெய்ய வேண்டியிருக்கிறது அல்லது பெய்யாமல்
வறட்சியை உருவாக்க வேண்டியிருக்கிறது.
No comments:
Post a Comment