செய்தித் தொலைக்காட்சி குறித்த அவதானிப்புகள்
கவியரங்கங்களில் கவிதை வரிகளை இருமுறைச் சொல்வதைக் கேட்டிருக்கலாம்.
குழந்தைகள் படிக்கும் போது மனப்பாடம் செய்வதற்காக பலமுறைத் திரும்ப திரும்ப சொல்வதையும்
கேட்டிருக்கலாம். தற்போது இந்தப் பழக்கம் செய்தித் தொலைக்காட்சிகளை ஒட்டிக் கொண்டு
விட்டது. Breaking News என்றும் Big Breaking என்றும் எத்தனை முறை சொன்னதையே திருப்பித்
திருப்பிச் சொல்கிறார்கள் என்கிறீர்கள். என்னால் கணக்கு வைத்துக் கொள்ள முடியவில்லை.
அது போன்ற நேரங்களில் தொலைக்காட்சி முன் உட்கார்ந்திருந்தால் சத்தியமாகச் சோர்ந்து
போய் விடுவீர்கள் அல்லது வெறுத்துப் போய் விடுவீர்கள்.
தொடர்ச்சியாக நீங்கள் செய்தித் தொலைக்காட்சிகளைப் பார்க்கும்
பழக்கம் உள்ளவராக இருந்தால் உங்களால் எது Breaking News என்று தீர்மானிக்க முடியாத
அளவுக்கு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கொட்டாம்பட்டியில் காற்று வீசியதையும், மாமண்டூரில்
மழை பெய்ததையும், வெட்டுக்கட்டியில் வெயில் அடித்ததையும் Breaking ஆக்குகிறார்கள்.
தொடர்ந்து செய்தித் தொலைக்காட்சிகளைப் பார்ப்பவர்கள் பாவப்பட்டவர்கள். அரை மணி நேரத்திற்கு
ஒரு முறை இந்த Breaking News அடவாடித்தனத்தை அனுபவித்தாக வேண்டும்.
ஒரு Breaking News வந்தால்
அதை வைத்து அரை மணி நேரத்தை அசலாட்டாக செய்தித் தொலைக்காட்சிகள் ஓட்டி விடுகின்றன.
இப்படி ஒரு நாளைக்கு 48 வகையான Breaking News கிடைப்பது செய்தித் தொலைக்காட்சிகளுக்கு
ஒன்றும் பெரிய வஸ்தில்லை. அல்லது இப்படிப்பட்ட Breaking Newsஐ உருவாக்குவதும் அவர்களுக்குப்
பெரிய சமாச்சாரமில்லை. 48 வகையான Breaking கிடைத்தால் ஒரு நாள் முடிந்து விட்டது. ஒரு
நாளை ஓட்டுவதற்கு 48 Breaking News போதுமானது.
தமிழர்களைப் பொருத்த வரையில்
இசையும் வாழ்க்கையும் இணைந்தது என்பார்கள். பிறந்தால் தாலாட்டு, விழா என்றால் குலவை,
திருமணம் என்றால் நாதஸ்வரம், இறந்தால் ஒப்பாரி என்று இசையில்லா தமிழர்களின் வாழ்வைக்
கற்பனை செய்து பார்ப்பது அரிது. Breaking Newsற்கும் அப்படி ஒரு குணம் இருக்கிறது.
இசையில்லாத Breaking Newsஐ நீங்கள் கேட்க முடியாது. யானை வரும் பின்னே மணியோசை வரும்
முன்னே என்று யானைக்கு இங்கு ஒரு இசைக்குறிப்பு இருப்பதைப் போல Breaking News வரும்
பின்னே அதற்கான இசை வரும் முன்னே என்று ஒவ்வொரு செய்தித் தோலைக்காட்சிக்கும் தனிப்பட்ட
இசைக்குறிப்பு ஒன்று இருக்கிறது.
ஒரு சில செய்தித் தொலைக்காட்சிகளில்
விளம்பரங்களோடு வரும் Breaking News இருக்கின்றன. அந்த Breaking என்பது செய்திக்கானதா,
விளம்பரத்துக்கானதா என்பது சம்பந்தப்பட்ட பார்வையாளர்களுக்கே வெளிச்சம்.
செய்தித் தொலைக்காட்சிகளின்
பிரபல்யத்தைப் பொருத்து ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் என்று கால இடைவெளி வைத்திருக்கிறார்கள்.
அந்த இடைவெளியில் அநேக விளம்பரங்களைப் போட்டுத் தாக்கி விடுகிறார்கள். அவர்களுக்கான
வருமானம் அதில் அடங்கியிருக்கிறது. ஆனால் காண்போருக்கான ஓர்மை போய் விடுகிறது. சில
நேரங்களில் நீளும் விளம்பரங்களால் செய்திகளைப் பெறுவதில் சலிப்புநிலை உண்டாகி விடுகிறது.
செய்தி உச்சரிப்பு செய்தித்
தொலைக்காட்சிகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது. ஒவ்வொரு செய்தித் தொலைக்காட்சியும் தங்கள்
தொலைக்காட்சிக்கென்று பிரத்யேசமான செய்தி உச்சரிப்பை வைத்திருப்பதை ஆழ்ந்து கேட்டால்
உங்களுக்கே புரியும். குறிலை நெடிலுக்கான மாத்திரையிலும் நெடிலை அளபெடை அளவுக்கு உயர்த்தி
உச்சரிக்கும் உச்சரிப்பு வேடிக்கைகள் அனைத்தையும் செய்தித்தொலைக்காட்சிகள் செய்கின்றன.
பார்வையாளர்களின் கவனத்தைக்
கவர வேண்டும் என்பதற்காகச் செய்தித் தொலைக்காட்சிகள் செய்யும் பம்மாத்துகளால் செய்தியைப்
பெறுவதில் உள்ள கோர்வையும் ஓர்மையும் சிதறுகின்றன என்று சொன்னால் அதை நீங்கள் ஒப்புக்
கொள்வீர்களா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
*****
No comments:
Post a Comment