கொரோனாவை விட மோசமான மனிதக் கிருமிகள்
கொரோனாவின் மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்களா
என்ற வினா எழுந்த வண்ணம் உள்ளது. அதற்கான விடை பல்வேறு தரப்பிலிருந்தும் பல்வேறு விதமாக
வந்த வண்ணமும் உள்ளது.
கொரோனா காலத்தில் கொரோனாவினால் மட்டுமல்லாது பல்வேறு காரணிகளால்
குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. பள்ளிகளை மூடியதன் மூலமாகக்
குழந்தைகள் கொரோனாவிலிருந்து பாதுகாப்பாக இருப்பதாக அரசாங்கங்கள் நினைக்கின்றன. பள்ளிகள்
இல்லையென்றால் வீட்டில் குழந்தைகள் பாதுகாப்பாகத்தானே இருக்க வேண்டும் என்று பலரும்
நினைக்கலாம். ஆனால் குழந்தைகள் வீட்டில் பாதுகாப்பாக இல்லை. வீடு அவர்களுக்குப் பாதுகாப்பானதாக
இல்லை. வீட்டின் பொருளாதார நிலைக்காக அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறியிருக்கிறார்கள்.
மெக்கானிக் கடை, டீக்கடை, மளிகைக்கடை, வணிக வளாகங்கள் எனப் பலவற்றில் குழந்தைத் தொழிலாளர்கள்
நிறைந்திருக்கிறார்கள். இன்னும் பல எடுபிடி வேலைகளிலும் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
பாதுகாப்பான வீடுகளில் இருக்கும் குழந்தைகளில் பாலியல் வன்கொடுமைகளுக்கு
ஆளான குழந்தைகள் இருக்கிறார்கள். தாய்களாகி விட்ட பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
கொரோனாவின் உள்ளடங்கிய சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நிறைய குழந்தை
திருமணங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.
டாஸ்மாக்கிற்குக் குழந்தையோடு செல்லும் தகப்பன்சாமிகள் உருவாகி
இருக்கிறார்கள். இதை நீங்கள் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்திருக்கலாம். குழந்தைகள்
முன் குடிப்பதற்கோ, சண்டையிடுவதற்கோ பெரும்பாலான பெற்றோர்கள் வெட்கப்படுவதாகவோ வேதனைப்படுவதாகவோ
தெரியவில்லை.
கொரோனாவைக் காரணம் காட்டி குழந்தைகளின் கல்வியைத் தள்ளி வைக்க
அவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றன. கொரோனா
காலத்திலும் குழந்தைகளுக்கு ஆன்லைன் வழியாகக் கற்பிக்கிறோம் என்று நீங்கள் கோடிட்டுக்
காட்டலாம். அங்கும் ஆபாச ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுக் காட்ட
தேவையில்லாத அளவுக்கு ஆசிரியர்களின் மேல் பாய்ந்துள்ள போக்சோ வழக்குகள் நடந்த வண்ணம்
இருக்கின்றன.
அண்மைக் காலத்தில் குழந்தைகளுக்கு எதிராக அதிகமாகிக் கொண்டிருக்கும்
பாலியல் குற்றங்கள், வன்கொடுமைகள், குழந்தைத் தொழிலாளர் பிரச்சனைகள், குழந்தைத் திருமணங்கள்,
குழந்தைத் தாய்மார்கள் போன்ற பிரச்சனைகளுக்குக் கல்வி நல்லதொரு தீர்வைத் தரும் விழிப்புணர்வு
முயற்சியாக அமைவதால் கல்வியை நீண்ட காலத்துக்குத் தள்ளி வைப்பது குழந்தைகளைப் பொருத்த
வரையில் ஆரோக்கியமாக அமையாது. மேலும் மேலும் கொரோனாவைக் காரணம் காட்டி கல்வியைத் தள்ளி
வைத்துக் கொண்டு செல்வது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் சிக்கல்களும் அதிகரிக்க
காரணமாகி விடும். குழந்தைகள் சக குழந்தைகளோடு பழகி ஒரு சமூகமாகக் கல்வி கற்கும் வாய்ப்பில்லாத
இடங்களில் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.
கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் நீண்ட தூரம் பயணித்துக் கல்வி
கற்பதில் குழந்தைகளுக்கு இடர்பாடுகள் இருக்கிறது. ஆனால் அண்மைப் பள்ளிகளில் கல்வி பயில்வதற்குரிய
சாத்தியங்கள் இருக்கின்றன. குழந்தைகளின் வசிப்பிடங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்குள் அண்மைப்
பள்ளிகளை அமைப்பது குறித்தும், கொரோனா பேரிடர் முடிவுக்கு வரும் வரையில் அங்குதான்
குழந்தைகள் கல்வி பயில வேண்டும் என்பதையும் பரிசீலிக்கலாம். ஒருவேளை இந்த வழிமுறையும்
ஏற்புடையது இல்லையென்றால் ஏதாவது ஒரு வகையில் குழந்தைகளுக்குச் சமூகக் கல்வி அளிப்பதை
இனியும் தாமதமின்றித் தொடர்வது குறித்துப் பரிசீலித்துதான் ஆக வேண்டும். குழந்தைகளையும்
சமூகக் கல்வியையும் நீண்ட கால அளவில் ஒன்றுசேர விடாமல் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்க
முடியாது. ஏனென்றால் கொரோனாவை விட மோசமான மனிதக் கிருமிகள் குழந்தைகளைச் சுற்றி வீட்டிலும்
சமூகத்திலும் நிறைந்துள்ளன.
*****
No comments:
Post a Comment