20 Jun 2021

கொரோனா காலப் பொருளாதார அதிசயங்கள்

கொரோனா காலப் பொருளாதார அதிசயங்கள்

            கொரோனா காலத்தில் பொருளாதாரத்தில் நிறைய அதிசயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. கிலோ இருபது ரூபாய்க்கு விற்ற தக்காளி எண்பது ரூபாய்க்குப் போனதும், கிலோ முப்பது ரூபாய்க்கு விற்ற வெங்காயம் எழுபது ரூபாய்க்கு விற்றதும் ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னும் பின்னும் நடந்த சாமானியர்களின் பொருளாதாரத்தோடு நடந்த பொருளாதார அதிசயங்கள். ஆனால் நிறைய பொருளாதார அதிசயங்கள் இந்தக் கொரோனா காலத்தில் நடந்திருக்கின்றன.

முதல் பொருளாதார அதிசயம்

            பொருளாதாரத்துக்குக் கொரோனா தடுப்பூசி இருந்தால் உடனடியாகப் போட்டு விடலாம். ஏனென்றால், கொரோனாவின் முதல் அலையில் தங்கத்தின் விலை ஏகத்துக்கும் எகிறியது. நாடே போது முடக்கத்தில் இருக்க, கடைகள் எல்லாம் மூடப்பட்டு இருக்க, வாங்குபவர்கள் யாருமில்லாமல் தங்கத்தின் விலை உயர்ந்தது ஒரு பொருளாதார அதிசயம் என்று சொல்ல வேண்டும்.

இரண்டாவது பொருளாதார அதிசயம்

            முதல் அலையில் தங்கம் என்றால் இரண்டாம் அலையில் பெட்ரோலும் டீசலும் விலை உயர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இரண்டாவது அலையில் பெரும்பான்மையான மாநிலங்கள் பொது முடக்கத்தை அறிவித்திருக்கின்றன. பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டு இருக்கிறது. தனிநபர் வாகனப் போக்குவரத்தும் இணையப் பதிவுகளின் அடிப்படையில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் தேவை நாடு தழுவிய அளவில் குறைந்திருக்கும் நிலையிலும் அதன் விலை ஏறிக் கொண்டு இருக்கிறது. இது ஓர் இரண்டாவது பொருளாதார அதிசயம்.

மூன்றாவது பொருளாதார அதியம்

            ‘வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தைப் பண்ணிப் பார்’ என்பது பொது வெளியில் புழங்கும் சாமானியனின் பொருளாதார இயலாமையைக் காட்டும் சொலவம். இந்தக் கொரோனா காலத்தில் கல்யாணத்தைப் பண்ணிப் பார்ப்பது எளிதாகி விட்டது. ஆனால் வீட்டைக் கட்டிப் பார்ப்பது கடினமாகி விட்டது. வீட்டுக் கட்டுமானப் பொருட்களின் விலை ஐம்பது விழுக்காட்டுக்கு மேல் உயர்ந்து விட்டது. சிமெண்டின் விலை, மணலின் விலை, கம்பிகளின் விலை ஒவ்வொன்றும் தங்கத்தோடும் பெட்ரோலியத்தோடும் போட்டிப் போட்டுக் கொண்டு உயர்ந்திருக்கின்றன. கொரோனா காலத்தில் நிகழ்ந்த மூன்றாவது பொருளாதார அதிசயம் இது.

மற்றும் பல அதிசயங்கள்

            இந்தக் கொரோனா இன்னும் பல பொருளாதார அதிசயங்களை நிகழ்த்த காத்திருக்கிறது. அதை எதிர்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இனி எதற்கெல்லாம் வங்கிகள் கடன் கொடுக்க போகின்றன என்று கேட்டால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். கொரோனா சிகிச்சைக்கென குறைந்த வட்டியில் கடன் வழங்க வங்கிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஒரு சில வங்கிகள் அது பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டிருக்கின்றன. பிறகெதற்கு மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ் என்றெல்லாம் கேள்விக் கேட்க முடியாது. அது பாட்டுக்கு அது. இது பாட்டுக்கு இது.

            2022 ஜனவரியிலிருந்து ஏடிஎம் பயன்பாட்டுக்கான கட்டணத்தை உயர்த்த வங்கிகள் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. வங்கியில் பணம் எடுத்துக் கொண்டிருந்த மக்களை ஏடிஎம்மில் பணம் எடுங்கள் என்று பழக்கப்படுத்தி அவர்கள் அந்தப் பழக்கத்திற்கு ஆளானதும் அதற்கு ஒரு கட்டணம் நிர்ணயித்து இப்போது கட்டணத்தை உயர்த்தும் விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது.

            ஏடிஎம் கட்டணம் உயர்கிறது என்றால் கூகுள் பே, பேடிஎம் உபயோகியுங்கள் என்கிறார்கள். கொஞ்சம் காலம் இலவசமாகக் கொடுத்து அதற்கு எப்போது கட்டணம் நிர்ணயிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இலவசமாக ஒன்றைக் கொடுத்து மக்களைப் பழக்கப்படுத்தி அதற்குக் கட்டணம் நிர்ணயித்துக் கட்டாய வசூல் செய்யும் போக்கு சமீப காலமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வாடிக்கையாய்க் கூட ஒரு கேள்வி கேட்பதற்கு வழியில்லை.

            இவை அனைத்தும் மக்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் இந்தக் கொரோனா காலத்தில் நடக்கிறது என்பதை அதிசயம் என்று சொல்வதைத் தவிர வேறெப்படிச் சொல்வது?

            நீங்களே பாருங்கள். ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கும் போதெல்லாம் டாஸ்மாக் திறப்பு முதலாவதாகவும் டீக்கடை திறப்பு இரண்டாவதாகவும் வருகிறது. மக்கள் அந்த அளவுக்கு டீயை விட சரக்கை முக்கியமாகக் கருதுகிறார்கள் என்பது அதற்கு ஒரு காரணம் என்றாலும் வருவாய்க்கான பொருளாதாரம் மற்றொரு முக்கிய காரணமாக இருக்கிறது. பொதுமக்களுக்கும் வருவாய்க்கான பொருளாதாரம் முக்கியம். அதற்கான வாய்ப்பை வழங்கி விட்டு விலையேற்றினால் அதைச் சமாளிக்கலாம். அதற்கான வாய்ப்பு இல்லாமல் பொருட்களின் விலை ஏறிக் கொண்டு போவதும், சேவைக்கட்டணம் அதிகரித்துக் கொண்டு போவதும் கொரோனா காலத்தில் மட்டும் நடக்கும் பொருளாதார அதிசயங்கள் என்றுதான் வருங்கால வரலாறு வியப்புடன் பார்க்கும்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...