செல்வம் சேர்க்கலாமா? வேண்டாமா?
“பணமிருந்தா போதுமாய்யா? போதுங்ற மனசு வேணும்யா!” என்று பலர்
சொல்ல கேட்டிருக்கிறேன். இதை என்னிடம் சொன்னவர்களைப் பற்றி யோசித்துப் பார்த்த போது
அவர்கள் பலரும் ஏழ்மையோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதை அறிந்த போது ஆச்சரியமாக
இருந்தது. அவர்களுக்குத்தான் அப்படி ஒரு மனது வரும் போலிருக்கிறது.
நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த யாரும் எனக்குத் தெரிந்து இப்படி
ஒரு வாசகத்தைச் சொல்லிக் கேட்டதில்லை. அதை விட முக்கியமாக நான் பழகும் பணக்காரர்கள்
யாரும் இந்த வாசகத்தைச் சொன்னதே இல்லை. அவர்கள் அனைவரும் பணம் போதவில்லை என்ற பஞ்சப்
பாட்டைத்தான் இந்தப் பத்தியை எழுதும் இப்போது வரை பாடிக் கொண்டிருக்கிறார்கள். ஏன்
‘இப்போது வரை’ என்று எழுதுகிறேன் என்றால் இதைப் படிக்கும் என் பணக்கார நண்பர்கள் இதைப்
படித்து விட்டு இனி என்னிடம் விழிப்பாக பஞ்சப்பாட்டைப் பாடாமல் இருக்கலாம் என்பதற்காகச்
சொல்கிறேன்.
அது சரி! பணமில்லாமல் இந்த உலகில் வாழ்வதெப்படி? சங்க இலக்கியத்தில்
பாலைத் திணைப் பாடல்களில் பொருள் தேடிச் செல்லும் தலைவனைப் பார்க்கலாம். திருக்குறளில்
“பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு”[1]
என்ற வரியைப் பார்க்கலாம். அத்துடன்
“பொருள்அல்
லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள்அல்லது
இல்லை பொருள்.”[2]
என்ற திருக்குறளில் சொற்பொருள்
பின்வரு நிலையணியில் புகுந்து விளையாடியிருப்பார் திருவள்ளுவர்.
பணத்தோடு இருப்பதா? போதும் என்கிற மனதோடு இருப்பதா? என்று யாராவது
கேட்டால் என்ன சொல்வது? சாமர்த்தியமாகப் ‘போதும் என்கிற அளவுக்குப் பணத்தோடு இருப்பது
நல்லது’ என்பதா? இந்தப் பிரச்சனைக் குறித்து தமிழ் இலக்கியங்கள் அதிகம் ஆராய்ந்துள்ளன.
“அதனால் அறனும் பொருளும் இன்பமும்
மூன்றும்
ஆற்றும்
பெருமநின் செல்வம்” [3]
என்ற புறநானூற்று வரிகளில்
செல்வம் குறித்த ஆய்வியல் முடிவைக் காணலாம். செல்வம் என்பது அறம், பொருள், இன்பம் ஆகிய
இம்மூன்றையும் ஆற்ற கடமைப்பட்டிருப்பதாகச் சங்க இலக்கியம் ஒரு முடிவு காண்கிறது.
மிகுதியான செல்வத்தை வைத்துக்
கொண்டு எதைச் செய்ய வேண்டும் என்பதற்குத் திருவள்ளுவர் ஒப்புரவாற்ற வேண்டும் என்பார்.
இந்த ஒப்புரவு என்ற சொல்லைப் பெரும்பாலான அறவியல் அறிஞர்களில் திருவள்ளுவர் சிறப்பாகப்
பயன்படுத்துகிறார் என்பார் க.ப. அறவாணன். திருவள்ளுவர்
ஒப்புரவை விரித்துச் சொன்ன அளவிற்கு ஏனையோர் விரித்துச் சொல்லவில்லை[4]
என்பார் அவர். இதை நிரூபிக்கும் வகையில் திருவள்ளுவர் ஒப்புரவிற்கென ஒரு அதிகாரத்தையேப்
படைத்திருப்பார். அவ்வதிகாரத்தில்
“பயன்மரம்
உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை
யான்கண் படின்.”[5]
என்பார். ஒப்புரவாற்றும்
நல்லோரிடம் சேரும் செல்வம் ஊர் நடுவே பழுத்து நின்று மரமொன்று பயன் தருவதைப் போலப்
பயன்தரும் என்று மேற்படி குறட்பா மூலமாகக் குறிப்பிடும் திருவள்ளுவர் ஒப்புரவாற்றாத
நல்லோர் அல்லாதோரிடம் செல்வம் நச்சு மரமாவதை
“நச்சப்
படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு
மரம்பழுத் தற்று.”[6]
என்ற குறட்பாவில் குறிப்பார்.
மனித குலத்துக்குப் பயன்படும் செல்வத்தை பயன்தரும் மரத்தின் கனியாகவும், மனித குலத்துக்குப்
பயன்படாத செல்வத்தை நச்சு மரத்தின் கனியாகவும் திருவள்ளுவர் காட்டுவதிலிருந்து செல்வம்
சேர்ப்பது அவசியம் என்பதும் அச்செல்வம் மனிதகுலத்துக்குப் பயனுள்ளதாக அமைய வேண்டுவது
அவசியம் என்பதும் அறியத்தக்க முடிவாகிறது எனலாம்.
[1] திருக்குறள், 247
[2] திருக்குறள், 751
[3] புறநானூறு, 28 : 15,
16
[4] க.ப. அறவாணன், அற இலக்கியக்
களஞ்சியம், ப. 468
[5] திருக்குறள், 216
[6] திருக்குறள், 1008
நூலடங்கல்
அறவாணன், க.ப. அற இலக்கியக் களஞ்சியம். சென்னை: தமிழ்க்கோட்டம்,
2008.
இராமலிங்கனார், வெ. திருக்குறள் நாமக்கல்
கவிஞர் உரை. சென்னை: பூம்புகார் பதிப்பகம், 2010.
No comments:
Post a Comment