தமிழ்ப்படுத்தும் முயற்சிகள் – ஒரு பார்வை
நாட்டில் தமிழ் ஆர்வம் பெருகிக் கொண்டு இருக்கிறது. தமிழார்வம்
என்ற பெயரில் ஒருவரைச் சந்தித்த போது நான் இதை உறுதிப்படுத்திக் கொண்டேன். பேச்சு தூய்மையான
தமிழாக மாற நாள் பிடிக்கும். அதில் இப்போதைக்கு அவசரம் காட்ட முடியாது. எழுத்தில் தமிழைக்
கொண்டு வருவதற்கான முயற்சிகள் அங்கங்கே நடைபெற்று வருகின்றன. ஒரு சில பகுதிகளில் வணிக
நிறுவனங்கள் பெயர்ப்பலகைகளைத் தமிழில் வைத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
ஆங்கிலம், இந்தி இவற்றுக்கு முதன்மை கொடுத்து பெயர்ப்பலகையை
வைக்கும் பாரத மாநில வங்கியில் (State Bank of India / ஞா. தேவநேயப் பாவாணர் இதனை இந்திய
நாட்டு வைப்பகம் என்பார். இது குறித்து இவ்வலைப்பூவில் ஒரு பத்தி எழுதியிருக்கிறேன்.)
தமிழில் இப்படி ஒரு அறிவிப்புப் பலகையைக் கண்டதும் ஆச்சரியப்பட்டு போனேன்.
‘முகமுடி
இல்லாமல் உள்ளை அனுமதி இல்லை’ என்று எழுதியிருக்கிறார்களே. இதன் மூலம் என்ன சொல்ல
வருகிறார்கள் என்று யோசித்துப் பாருங்களேன்.
‘முகமுடி’ என்றால் முகத்தில் உள்ள
முடி எனப் பொருள் கொண்டால் முகச்சவரம் செய்து கொண்டு முடி இல்லாதவர்கள் உள்ளே வராதீர்கள்
என்கிறார்களா? அதாவது முகத்தில் நிறைய முடியை வைத்துக் கொண்டு உள்ளே வாருங்கள் என்கிறார்களா?
‘உள்ளை’ என்ற சொல்லால் எதைச் சொல்ல
வருகிறார்கள்? ‘உள்ளை’ என்ற சொல் தமிழில் இருக்கிறதா என்று அகராதியில் தேடிப் பார்த்தேன்.
என்னிடம் இருக்கும் நா. கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதி, ஆ. சிங்காரவேலு முதலியாரின்
அபிதான சிந்தாமணி, க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வரைத் தேடிப் பார்த்து விட்டேன்.
அப்படி ஒரு சொல் அகப்படவில்லை. சங்க இலக்கியத்திலும் அப்படி ஒரு சொல் பயன்படுத்தப்படவில்லை
என்பதை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சங்க இலக்கியப் பொருட்களஞ்சியத்தில்
தேடிப் பார்த்து தெரிந்து கொண்டேன். இதைப் படிக்கும் யாரேனும் அவர்களிடம் இருக்கும்
அகராதியில் அப்படி ஒரு சொல் அகப்பட்டால் அது குறித்து அவசியம் தகவல் தெரிவிக்க பணிந்து
வேண்டுகிறேன்.
பாரத மாநில வங்கி போன்ற மிகப் பெரிய வங்கிகளில் பணம் எடுப்பதற்காக
உள்ளே சென்றால் அரை நாள் ஆகும், மேலாளரைச் சந்தித்துப் பேசுவதென்றால் ஒரு நாள் ஆகும்
என்பதால் மேற்படி வாக்கியத்தின் பொருளை மேலாளரைச் சந்தித்து அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல்
வந்து விட்டேன்.
இப்போது மேற்படி அறிவிப்புப் பலகையில் தமிழ், இந்தியைத் தொடர்ந்து
ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ‘NO MASK – NO ENTRY’ என்பதைப் படித்தால் ‘முகமுடி’ என்பது
முகமூடி என்பதாக இருக்கும் என்று அனுமானிக்கலாம். ‘உள்ளை’ என்பது உள்ளே என்பதாகவும்
இருக்கலாம் என அனுமானிக்கலாம். ‘முகமூடி இல்லாமல் உள்ளே அனுமதி இல்லை’ என்பதைத்தான்
அந்த அறிவிப்புப் பலகைச் சொல்ல வருகிறது என்று நினைக்கிறேன்.
‘முகக்கவசம்’ என்ற சொல் வழக்கில் வந்து பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படும்
போது இவர்கள் மட்டும் ஏன் ‘முகமூடி’ என்ற சொல்லைப் பயன்படுத்த விழைகிறார்கள்? ‘முகமூடி
இல்லாமல் உள்ளே வராமல் அனுமதி இல்லை’ என்றால் அது முகமூடிக் கொள்ளையர்கள் வருவதற்கு
அனுமதி கொடுப்பது போலாக அல்லவா ஒரு தோற்றம் உண்டாகிறது.
நீங்கள் பாரத மாநில வங்கிக்கு ஏதேனும் கடிதம் எழுத வேண்டி இருந்தால்
பெறுநர் பகுதியில் ‘மேலாளர், பாரத மாநில வங்கி’ என்று எழுதிப் பாருங்கள், “ஸ்டேம் பாங்க்
ஆப் இந்தியா என்பதை இப்படியெல்லாம் தமிழ்ப்படுத்திக் கொல்லாதீங்க சார்!” என்பார்கள்.
ஆனால் அவர்கள் ‘MASK’ என்பதைத் தமிழ்ப்படுத்தி மேலே செய்திருப்பது என்னவோ அது யாருக்குத்
தெரியும் சொல்லுங்கள்!
*****
No comments:
Post a Comment