17 Jun 2021

கொரோனா சாவுக்குக் கூடுன கூட்டம்

கொரோனா சாவுக்குக் கூடுன கூட்டம்

            ஊரு சனம் முழிச்சிக்கிற நேரம் இன்னும் வரல. ‘ஓஓஓ’ன்னு ஒரு சத்தம். அந்தச் சத்தத்தெ கேட்டு ஒவ்வொரு வீட்டுக் கேட்டும் கதவும் படபடன்னு தொறக்க ஆரம்பிக்குது. கதவத் தொறந்த சனமெல்லாம் என்னவோ ஏதோன்னு கொரலு வந்த தெசயெ நோக்கி ஓடுது.

            அஞ்சு நிமிஷத்துக்கு ஒண்ணும் புரியல. பெறவு விசயம் வெளியில வரப்போ பொண்டுக எல்லாம் அழுதுகிட்டெ சொல்றதுல சட்டுன்னு விசயம் வௌங்க மாட்டேங்குது. கொரலு தழும்ப தழும்ப திக்கித் தெணறி சொல்றதுல தெரியுது சௌந்தரு செத்த சேதி.

            பத்து நாளோ, பதினைஞ்சு நாளோ இருக்கும் வயக்காட்டுல நல்லா பாத்த சௌந்தரா செத்துட்டாம்? நம்ப முடியாத சேதியா இருக்கு.

            இப்போ நான் சொல்ற சம்பவம் நடந்து ஏழெட்டு வருஷம் இருக்கும்ன்னு நெனைக்கிறேம். மூர்த்தியப்பரு கோயிலுக்குப் பின்னாடி கருவக்காட்டுல யாருக்கும் தெரியாம நின்னுகிட்டு சிகரெட்டு இழுத்துட்டு இருந்தவனெ நான் பாக்கவுமில்ல ஒண்ணுமில்ல. நான் பாட்டுக்கு நடந்துப் போயிக்கிட்டு இருந்த என்னெ, நான் பாத்துட்டதா அவனா நெனைச்சிக்கிட்டவேம் வேக வேகமா தம் மொகத்துக்கு முன்னாடி பொகை இருக்குறதா நெனைச்சிக்கிட்டுக் கையால அதெ தள்ளி விடுறாப்புல ஒடியாந்தவேம் கிட்ட நெருங்குனதும் எங் கையெ பிடிச்சிக்கிட்டு, “யண்ணே! யண்ணே! இந்த விசயத்தெ வீட்டுல சொல்லிப் புடாதீங்க!”ன்னு கெஞ்சுறாம்.

            எந்த விசயம், ஏது விசயத்தெ சொல்றாம்ன்னு புரியாம நான் திருதிருன்னு முழிக்கிறேம். “சொல்லிப்புட மாட்டீங்கன்னு மூர்த்தியப்பரு மேல வெச்சுச் சத்தியம் பண்ணிக் கொடுங்க!”ங்றாம் சௌந்தரு.

            “யப்பாடா! எதெ சத்தியமா சொல்லக் கூடாதுன்னு சொல்றேன்னு சத்தியமா வௌங்களடா!”ங்றேம் நான்.

            “யப்போ நாம்ம சீரெட்டு இழுத்தது ஒங்களுக்குத் தெரியாதுல்ல. ஒங்களுக்குத் தெரியாத விசயத்தெ நீங்க எப்படி சொல்ல முடியும்ங்றேம்? நல்ல வேள நாம்ம வேற பயந்துட்டேம். மூர்த்தியப்பரு நம்மள காப்பாத்திட்டாரு!”ன்னு பிடிச்சிருந்த எங் கையெ ஒதறிட்டு ரகசியத்தையும் போட்டு ஒடைச்சிட்டு ரகசியத்தெ காப்பாத்திட்டதா நெனைச்சு ஓடிப் போன பயெதாம் சௌந்தரு.

            சிகரெட்டு இழுக்குறது வீட்டுக்குத் தெரியக் கூடாதுன்னு நெனைச்ச சௌந்தருதாம் அதுக்குப் பெறவு ரெண்டு மூணு வருஷத்துல ஊரு ஒலகம் தெரிஞ்ச குடிகாரனா ஆனாங்றது நம்ப முடியாம இருக்கலாம். வீட்டுல சொல்லி கண்டிக்கிற நெலமையத் தாண்டி தோளுக்கு மேல வளந்திருந்தாம். அத்தோட வீட்டு வேலைகள,வய வேலைகள எடுத்துக் கட்டி செய்யுற அளவுக்கு தெறமையா மாறியிருந்தாம்.

            சும்மா கெடந்த வயல்ல போர்ர குத்தி பருத்திப் போட்டாம். சரிபாதி வயல கொளமா வெட்டி மீனு வளக்க ஆரம்பிச்சாம். அவ்வேம் கையி வெச்ச நேரமோ என்னவோ, காசு பொரள ஆரம்பிச்சிட்டுது. அக்கம் பக்கத்து வயல்களயும் வெலை பேசி வாங்க ஆரம்பிச்சாம். சம்பாதிக்க தெரிஞ்சவேம் குடிக்க ஆரம்பிச்சா அதெ யாரு தட்டிக் கேட்க முடியுது? சௌந்தரு கிராமத்துல பெருஞ்சம்பாத்தியக்காரனா ஆவ ஆரம்பிச்சாம்.

            கிராமத்துல சௌந்தருக்குன்னா ஆளுங்க வேலை செய்யுறதுக்கு மொதல்ல நின்னுச்சு. அதாச்சி, யாரு வேலை கெடந்தாலும் போட்டுட்டுச் சௌந்தருக்கு வேலை செய்ய ஆளுங்க அலை மோதுனுச்சுங்க. சௌந்தரு பாதிச் சம்பளம் கொடுத்தாலும் வாங்கிட்டு வேலை செய்யுற அளவுக்கு ஆளுங்க மாறுனுச்சுன்னா நம்புறதுக்குக் கஷ்டமாத்தாம் இருக்கும்.

            குடி உயர சௌந்தரு உசந்தாம்ன்னுத்தாம் சொல்லணும். குடி குடியைக் கெடுக்குங்றதெ மாத்தி சௌந்தரு எழுதுனது புதுசான அத்தியாயம்ன்னும் சொல்லலாம். இதென்னடா எந்த ஊர்லயும் கேக்காத புதுக்கதெயா இருக்குன்னா இந்தப் புதுக்கதெயை நீங்க தெரிஞ்சிக்கத்தான் வேணும்.

            சௌந்தரு வேலைய ஆரம்பிக்கிறதே குடியோடத்தாம். வய வேலைங்க செய்யுற அத்தனெ ஆளுகளும் குடிக்க ஆரம்பிச்ச பெறவு அவுங்க போயி நிக்குற எடம் சௌந்தரோட போர்செட்டுக் கொட்டகைக்குத்தாம். போயி நிக்குற அத்தனெ பேருக்கும் காலையில கருக்கல்லயே வரிசையா பாட்டிலு தயாரு நெலையில வரிசை கட்டி இருக்கும். அதே வாங்கிக் குடிச்சிட்டு வய வேலைகளப் பாக்க ஆரம்பிக்க வேண்டியதுதாம்.

            மித்த வயக்காரவுங்க வேலை ஒம்போது பத்து மணிக்கு ஆளுங்க வந்து வேலை ஆரம்பமாவும்ன்னா சௌந்தரு வீட்டு வய வேலைங்க ஆறெழு மணிக்கெல்லாம் ஆரம்பமாயிடும். கால கருக்கல்ல டீயெ வாங்கிக் கொடுத்து வேலைய ஆரம்பிக்கிறாப்புல சௌந்தரு குவார்ட்டரை வாங்கிக் கொடுத்து வேலைய ஆரம்பிக்க வெச்சது. மத்தியானச் சாப்பாடா குஸ்காவோ, பரோட்டாவோ ஆளுங்க கேக்குறதெ வாங்கிக் கொடுக்கும். பத்து நாளு தொடர்ச்சியா வய வேலை அமைஞ்சுப் போச்சுன்னா கோழி பிரியாணி போட்டுடும்.

வேலை முடியுறப்போ வேலை செஞ்சவங்களோட வியர்வை உலர்றதுக்குள்ள காச கொடுக்குதோ இல்லியோ கையில குவார்ட்டரு பாட்டில கொடுத்துடும். சௌந்தரு வேலைன்னா குவார்ட்டர்ல தொடங்கி குவார்ட்டர்ல முடியுங்றது ஆளுங்களுக்குத் தெரிஞ்சதால வேலை இருந்தாலும் சரி இல்லாட்டியும் சரி சௌந்தர சுத்தி ஆளுங்க கூட்டம் இருந்துகிட்டெ இருக்கும்.

இப்போ, சௌந்தரு வாயி கொப்புளிக்கிறது, தாவத்துக்குக் குடிக்கிறது எல்லாம் குடின்னு ஆகிப் போச்சு. எவ்வளவு குடிச்சாலும் நெதானம் மட்டும் தவறாது. இருவத்தஞ்சு வயசுத்தாம் ஆவும். அதுக்குள்ள சௌந்தரு எழுபத்தைஞ்சு வயசு வாழ்றவேம் நெதமும் குடிச்சா எவ்வளவு குடிப்பானோ அவ்வளவு குடிச்சி முடிச்சிருந்துச்சு.

சௌந்தரு போர் கொட்டாய்ல பாத்தீங்கன்னா வாரத்துக்கு ரெண்டு மூணு மூட்டை பாட்டில அள்ளிட்டுப் போவும் சனங்க. சௌந்தர ஒடம்புல ஓடுறது ரத்தமா பிராந்தியாங்ற அளவுக்கு எல்லாருக்கும் சந்தேகந்தாம். இவ்வளவு குடிச்சும் எப்பிடிடா அவ்வேம் கொடலும் வயறும் தாங்குதுன்னு அதுவும் ஒரு சந்தேகந்தாம்.

சௌந்தர்ட்டே வேறெந்த கெட்டப் பழக்கமும் கெடையாது. சீரெட்டு குடியுந்தாம். அப்புறம் புல்லட்டு வண்டிய எடுத்தா கொறைச்சலா எம்பது கிலோ மீட்டரு வேகத்துக்கு மேலத்தாம் போவும். மித்தபடி சௌந்தர்ட்டெ எந்தக் கொறையும் காண முடியாது. ஊரு திருவிழான்னா காசெ அள்ளிக் கொடுக்கும். ஒதவின்னுப் போயி நின்னு காசுன்னு கேக்குறதுக்கு மின்னாடி ஐநூத்து ரூவா நோட்டெ எடுத்து பாக்கெட்டுல திணிச்சி விடும்.

இந்தக் கொரோனாவோட ரெண்டாவது அலையில ஊரடங்கு போட்டப் பெறவு டாஸ்மாக்கெ மூடிட்டாங்க. ஆன்னா சௌந்தரோட போர் கொட்டகைக்குப் போனா அதுகிட்டெ இருக்குற சரக்கெ வெச்சு டாஸ்மாக்குக் கடையை வைக்கலாம்.

குடியும் வேலையுமா இருந்த சௌந்தருக்குக் கொரோனான்னு திடுதிப்புன்னு சேதி வந்தா எப்பிடி இருக்கும்? “அந்தப் பயெ எங்க அடங்குனாம்? ஊருல இருக்குற காவாளிப் பயலுங்கள சேத்து வெச்சிக்கிட்டுக் குடிச்சிக்கிட்டும் உருண்டு பெரண்டுக்கிட்டும் கெடந்தா கொரோனா வராம என்னத்தெ பண்ணும்?”ன்னு சௌந்தரால வய வேலைங்க பாதிக்கப்பட்டுப் போனவங்க பேசுனாங்க. அதென்னவோ சௌந்தரோட கட்டிப் பொரண்ட யாருக்கும் கொரோனா வர்றாம சௌந்தருக்கு மட்டும் வந்திருச்சு.

ஒய்யெம்சி ஆஸ்பிட்டலுக்குக் காலையில பத்து மணிக்குப் போன சௌந்தருக்கு சாயுங்காலம் அஞ்சு மணிக்கு மேலத்தாம் பெட்டுக் கெடைச்சிருக்கு. அதுவும் பெரசிடெண்டுக்குச் சௌந்தரு போனடிச்சு, பெரசிடெண்டு அவுங்க கட்சியோட வட்டம், மாவட்டத்துக்கு எல்லாம் போனடிச்சு ஏகப்பட்ட சிபாரிசுக்குப் பெறவு கெடைச்சிருக்கு.

ஆஸ்பிட்டல்ல சேந்தும் சௌந்தரு அடங்கலன்னு பேசிக்கிட்டாங்க. மாஸ்க் போடறதில்லையாம். எந்நேரத்துக்கும் செல்லையே நோண்டிக்கிட்டு அங்க இங்கன்னு நின்னு அலம்பல் பண்ணிட்டு இருந்துச்சாம். அதுக்கு மூச்சுத் திணறல் வந்து ஆக்ஸிஜன் பெட்டுல வைக்குற வரைக்கும் ஆஸ்பத்திரியில சௌந்தர வெச்சு சமாளிக்க படாதபாடு பட்டிருக்காங்க.

சௌந்தரால எதையும் சாப்புட முடியல. நல்ல நாள்லயே அது சாப்புட்டது கெடையாது. மூணு வேளையும் குடிதாம். இப்போ சுத்தமா சாப்புட முடியாம, குடிக்கவும் முடியாம போனதால ஒடம்பு துரும்பா போயிருக்கு.

ஆஸ்பத்திரியில சேந்ததிலேந்து மொத அஞ்சு நாள்ல மூணரை லட்ச ரூவாயி பணத்தெ சௌந்தரோட அப்பா கொண்டுப் போயி கட்டிட்டு வந்தாரு. அடுத்த அஞ்சு நாள்ல நாலு லட்ச ரூவாயி கட்டுனதா பேசிக்கிட்டாங்க. இவ்ளோ செலவு பண்ணுறப்போ சௌந்தரு பொழைச்சி வந்துடுவாப்புலத்தான்னு திட்டை கிராமமே நெனைச்சது. சௌந்தரு செத்துட்டாப்புல.

அதெப்படி ஏழெட்டு லட்சத்துக்கு மேல செலவு பண்ணியும் வாலிபமான வயசுல இருக்குற சௌந்தரு சாவ முடியும்ங்ற கேள்வி கிராமத்துல எல்லாருக்கும் இருக்குத்தாம். “அதுக்கென்ன பண்ண முடியும், அவ்வேம் குடிச்ச குடிக்கு கொடலு போயிருந்துச்சோ, ஈரலு போயிருந்துச்சோ? அம்மாம் குடிச்சா போடுற மருந்து எப்பிடிவே வேலெ செய்யும்?”ன்னு தாம் எழுப்புன்ன சந்தேவத்துக்குப் பலவெதமா கிராமத்துச் சனங்களே பல வெதமா பதிலையும் கேள்வியா சொல்லிக்கிடுச்சுங்க.

கொரோனாவுல யாரு செத்ததுக்கும் தெரளாத கிராமத்துல சௌந்தரு சாவுக்கு குடிகாரனுங்க அத்தனெ பேரும் தெரண்டுட்டாங்க. பொட்டணமா கட்டிக் கொண்டாந்த சௌந்தரு மொகத்தெ தொறந்து காட்டுனப்போ சாவுக்குப் போன அத்தனெ பேரும் முண்டியடிச்சுக்கிட்டுப் பாக்க நின்னாங்க. சௌந்தரு அப்பாவுக்குக் கொரோனா இருக்கலாம்ங்றதால தனியா நின்ன அவர்ரப் போயி வேற கட்டிப்பிடிச்சிட்டு ஆளாளுக்கு அழ ஆரம்பிச்சிட்டாங்க.

ஜேசிப்பி வெட்டுன்ன குழியில சௌந்தர்ர பொதைச்சு மூடுன பெறவு அவ்ளோ மாலைங்க. அந்தப் பொதை மேட்டைச் சுத்திப் பத்து பதினைஞ்சு பேரு அணைச்சுக்கிட்டு அழுத அழுகெ இருக்கே. சௌந்தரு சாவுக்குப் போனா கொரோனா வந்துடுமேங்ற பயம் யாருட்டேயும் இருக்குற மாதிரி தெரியலன்னுத்தாம் சொல்லணும். ஆன்னா சௌந்தரு இல்லாம இனுமே எப்படி குடிக்கிறதுங்ற பயம் சௌந்தரு சாவுக்கு கூட்டமா வந்து நின்ன அத்தனெ பேரு மொகத்துலயும் நல்லா தெரிஞ்சது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...