16 Jun 2021

கொரோனா வெளியில் கொண்டு வந்த சொல்ல மறந்த கதை

கொரோனா வெளியில் கொண்டு வந்த சொல்ல மறந்த கதை

            எல்லாரையும் போல சேது சாமியாருக்கும் நாகு பெரிம்மாவுக்கும் உண்டான எதிர்ப்புங்றது வைத்தியத்தால உண்டானதுங்றதுதாம் ரொம்ப நாளா நெனைச்சிக்கிட்டிருந்தது. அதுக்குப் பின்னாடி ஒரு சொல்ல மறந்த பெருங்கதையே இருந்துச்சு. அது இந்தக் காலத்து எளவட்டங்களுக்கு எப்பிடித் தெரியும்? ஆன்னா ஊருல இருக்குற கெழடு கட்டைகளுக்கு எப்படி மறந்துப் போவும்?

            சேது சாமியாரும் நாகு பெரிம்மாவும் ஒருத்தருக்கொருத்தொரு கலியாணம் கட்டிக்கிற மொறை உள்ளவங்க. அந்த மொறையில அப்போ இருந்த காலத்துல சேது வீட்டுலேந்து போயி நாகு பெரிம்மாவப் பொண்ணு கேட்டிருக்காங்க. நாகுவோட அப்பாவுக்குக் கொடுக்க இஷ்டமில்ல. அதெ வெளிப்படையாச் சொல்லாம பாக்கலாம் போங்கன்னு சொல்லிட்டு நாகு பெரிம்மாவுக்கு ரகசியமா பையனப் பாத்துக் கட்டி வைக்க ஏற்பாடு பண்ணிட்டாரு.

            இந்த விசயம் வெளியில தெரிஞ்சப்போ மனசு ஒடைஞ்சுப் போயி சாமியாராப் போயிட்டுச் சேது. சாமியாரா போனதோட விடாம நாகு பெரிம்மாவுக்கு ஓலை எழுதப் போன அன்னிக்கு சேது ஏதோ மந்திர தந்திரம் பண்ணி அவுங்க போன மாட்டு வண்டிகளெ எல்லாம் சாய்ச்சு வுட்டுப்புட்டதாவும் கேள்வி. அப்பயே சகுனத் தடை ஆயிருக்குன்னு சனங்க பேசிருக்கு. இருந்தாலும் நாகு பெரிம்மாவோட அப்பா அதெயெல்லாம் பெரிசு பண்ணாம தெகிரியமா போயி ஓலைய எழுதிட்டு வந்து அதுக்கு அடுத்த மாசத்துலயே கலியாணத்தெ முடிச்சு வெச்சாரு.

            கலியாணம் முடிஞ்ச சேதி தெரிஞ்சதும் சாமியாரா ஆயிருந்த சேது கேரளாவுக்குப் போயி ஏதோ மாந்திரீகம் பண்ணதாவும் அந்த மாந்திரீகத்தாலத்தாம் நாகு பெரிம்மாவுக்குக் கட்டி வெச்ச மாப்ள மூணே மாசத்துல இறந்துப் போனதாவும் ஊருல இப்போ கதெ பேசிக்கிட்டாங்க. பெத்தப் பொண்ணு மூளியா வந்த நின்னதெப் பாத்து நாகு பெரிம்மாவோட அப்பா படுத்த படுக்கையாப் போயி எறந்துப் போனாரு. அடுத்த சில வருஷங்கள்ல நாகு பெரிம்மாவோட அம்மாவும் எறந்துப் போவ நாகு பெரிம்மா அனாதியாடுச்சு.

            இந்த நேரத்துல சேது சாமியாரா ஆயி மந்திரம் பண்ணுறது, தந்திரம் பண்ணுறது, வைத்தியம் பாக்குறதுன்னு பெரிய ஆளா ஆயிடுச்சு. தன்னோட இந்த நெலைக்கு எல்லாம் காரணம் சேது சாமியாருன்னு நெனைச்ச நாகு பெரிம்மா அதுக்குப் போட்டியா மந்திர தந்திரம் கத்துக்க முடியலன்னாலும் இங்கிலீஷ் வைத்தியத்தெ கத்துக்கிடுச்சு.

            வைத்தியம் பாக்க வர்றவங்க சாமியாருகிட்டெ பாத்துக் கொணமாவலன்னா அடுத்து வர்றது நாகு பெரிம்மாகிட்டத்தாம். நாகு பெரிம்மா மருந்து மாத்திரை எழுதிக் கொடுத்துக் கொணம் பண்ணிடும். இதுல ரெண்டு பேத்துக்குமான எதிர்ப்பு நாளுக்கு நாளு அதிகமாயிடுச்சு. இருந்தாலும் இதால ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தொரு பேசிக்கிடாம பனிப்போரு போல சண்டெயெ வெச்சிக்கிட்டாங்களே தவுர நேருக்கு நேரு வாய்ச் சண்டெ பேசியோ, அடிதடி சண்டெயோ வெச்சிக்கிட்டதில்ல.

            “அந்தச் சாமியாரு பயெ செத்து அதெ பாத்துட்டுத்தாம் நாஞ் சாவேம் பாரு. எங் குடும்பத்தெயே அழிச்சாம் இல்ல. அதாலத்தாம் அவனும் குடும்பம் ஆவாம சாமியாராப் போயி அழிவாம் பாரு!”ன்னு நாகு பெரிம்மா சொல்லும்.

            இதெ கேள்விப்படுறப்போ சேது சாமியாரு, “யாரு சாவப் பாத்துட்டு யாரு சாவப் போறாங்கன்னு பாக்கலாங்றேம். அவ்வே சாவே பாத்துட்டுத்தாம் நாம்ம சாவேம். இது சத்தியம். சாமியாரு வாக்குப் போய்க்காதுடி!”ன்னு தரையில அடிச்சு சத்தியம் பண்ணும். சத்தியத்தெ பண்ணிட்டு, “இப்போ என்னத்தெ வாழ்ந்து கிழிக்குதாம். உம்முன்னு ஒரு வார்த்தெ சொன்னா கூட்டிக்கிட்டு வந்து வெச்சு ராணி மாதிரி பாத்துக்குவேம். ஆன்னா திமிரெடுத்தவெ. அழுத்தம் சாஸ்தி. தேவையில்லாம்ம எதுக்கறா. சம்மந்தமே இல்லாம அவ்வே வாழ்க்கையில நடந்ததுக்கு நம்மள காரணங்றா. அவ்வே கெடைக்கலுன்னு வெறுத்துப் போயிச் சாமியாரு ஆனதுல்லாம் உண்மெதாம். ஆன்னா அந்தளவுக்கு நமக்கு மந்திரமும் தெரியாது, தந்திரமும் தெரியாது. கட்டுன காவி வேட்டிய ஏம் அவுக்கணும்ன்னு நெனைச்சிக்கிட்டுக் கட்டிக்கிட்டதுதாம். இப்போ வந்தாலும் அதெ அவுத்து எறிஞ்சிட்டு அவளோட இருக்க சம்மந்தம்தாம்.”ன்னு பாவமா சொல்லும் சேது சாமியாரு.

            மேக்கண்ட சங்கதியெ கேக்குறவங்க அதெ கொண்டுப் போயி நாகு பெரிம்மாகிட்டெ சொன்னா போதும், “சாமியாருப் பயலுக்கு ஆசெ ஒண்ணுத்தாம் கொறைச்சலு. இந்த ஆசெயெ வெச்சிக்கிட்டுத்தானே என்னயெ கட்டிக் கொடுத்த எடத்துல வாழ முடியாம செஞ்சாம். அதெ போல அவ்வேம் என்னையெ நெனைச்சு என்னோட வாழ முடியாம அழியணும். அதெ எங் கண்ணால நெதம் நெதம் பாத்து பூரிச்சாவணும்.”ன்னு என்னமோ சினிமா படத்துல வர்ற வசனத்தெப் போல நாகு பெரிம்மா பேசும்.

            இந்தச் சங்கதியெ கேட்டுக்கிட்டு அதெ சேது சாமியாரு காதுல போட்டா, “ஆம்மா பெரிய கிளியோபாத்ரா. இவுளுக்கு ஏங்கிக் கெடக்குறாங்க பாரு. நாம்ம மந்திரம் போட்டேம்ன்னா நூறு பொண்ண பின்னாடி ஏங்கிச் சுத்துறாப்புல பண்ணுவேம். அவளும் ஒண்டிக்கட்டெ. நாமளும் ஒண்டிக்கட்டெ. ஒருத்தருக்கொருத்தரு ஒண்டிக்கிட்டா ஒரு தொணைக்கு ஆவும்ன்னு கேட்டாக்கா ரொம்பத்தாம் ராங்கிப் பண்ணுறாளாக்கும். அவளெ பாக்குறப்போ சொல்லுங்க இந்தச் சாமியாரு என்னிக்கும் சாமியாருத்தாம். அவ்வே என்னிக்கும் தாலியறுத்த மூளித்தான்னு.” அது கோவத்துல எகிறும்.

            இப்படியெல்லாம் பேச்சு வார்த்தெ இருந்தாலும் நாகு பெரிம்மாவோட சாவு சங்கதியெ கேள்விப்பட்டு நேர்ல போயி அழுத ஆளுகள்ல அதுவும் ஒண்ணுங்றது ஒங்களுக்குத் தெரிஞ்ச சங்கதித்தாம்.

            நாகு பெரிம்மா சாவுக்குப் போயிட்டு வந்த எட்டாம் நாளு சேது சாமியாருக்கும் கொரோனாவோட அறிகுறிங்க தெரிய ஆரம்பிச்சது. ஊர்ல கொரோனாவால பாதிக்கப்படுறவங்க அதிகமாவ இப்போ சுகாதாரத் துறையிலேந்து ஆளுங்க வர்றதும் கணக்கெடுக்குறதும் ஆரம்பிச்சிடுச்சு. எங்கெ தன்னெ சோதனெ பண்ணி மெடிக்கல் காலேஜூக்கு அனுப்பிடுவாங்களோங்ற பயத்துல சேது சாமியாரு வீட்டை முன்னாடி பூட்டுப் போட்டுப் பூட்டிக்கிட்டு கொல்லைப் பக்க கதவு வழியா வீட்டுக்குள்ள போறது வர்றதெ வெச்சிக்கிட்டு.

            சுகாதாரத் துறையிலேந்து ஆளுங்க வர்றப்பல்லாம் வீட்டுக்கதவு பூட்டியிருந்தா அவுங்க என்னத்தெ நெனைச்சிப்பாங்க. சரித்தாம் வீட்டுல யாரும் இல்லன்னுத்தானே நெனைச்சிப்பாங்க. அப்பிடி நெனைச்சிக்கிட்டுத்தாம் போனாங்க. ஆன்னா சாமியாரு வீட்டுக்குள்ளத்தாம் இருந்துச்சு.   

            சாமியாருக்கு ஒடம்புக்கு ரொம்ப முடியலன்னு ஊருக்குள்ள பேச்சு. மூச்சு வுட முடியலன்னும் பேசிக்கிட்டாங்க. ஊருல பெரிசுகளேந்து பெரசிடெண்டு வரைக்கும் வந்துப் பேசிப் பாத்தாலும் பூட்டுன்ன கதவெ தொறக்கல. கொல்லே கதவெ தொறக்க முடியாதபடிக்கு அதெயும் பூட்டிக்கிட்டு வீட்டுக்குள்ளாரயே அடக்கமாயிடுச்சு.

            “நாகு மேல ரொம்ப ஆசெ வெச்சிருப்பாம் போலருக்கு. அது செத்ததுல ரொம்ப மனசொடைஞ்சுப் போயிட்டாம். நாகுவோட போயிச் சேந்தாத்தாம் அடங்குவாம் போலருக்கு. அத்துச் செரி இவ்வேம் பாட்டுக்குக் கொரானாவுல செத்துப் போனான்னா எவ்வேம் தூக்கி அடக்கம் பண்டுறது? கவர்மெண்டுல ஏம் ஆஸ்பத்திரியில சேக்கலன்னு சொன்னா எவ்வேம் மாட்டுறது? போன்ன பண்டுங்கடா நூத்தி எட்டுக்கு!”ன்னாரு ஊரு நாட்டாமெக்காரு செகவீரப் பாண்டியரு.

            “ஏம் ஒங்க போன்லேந்து பண்டுறது? உள்ளார உக்காந்து சாமியாரு கேட்டுக்கிட்டு இருக்கு. நாம் போன்ன பண்ணி எதாச்சும் எங் குடும்பத்துக்கு மந்திரத்தெ பண்ணி வைக்கட்டும். ஏம் எங் குடும்பம் நாசமாவவா? இருந்தா பொழைச்சு வாரட்டும். இல்லாட்டி உள்ளாரயே செத்து நாறட்டும். அப்போ தகவலு கொடுத்து கதவெ ஒடைச்சி கவர்மெண்டுக்கார்ரேம் வெளியில கொண்டு வாரட்டும். அவ்வேம் பாட்டுக்கு வீட்டைப் பூட்டிக்கிட்டு உள்ளார கெடக்காம். அவனெப் போயி தொந்தரவு பண்ணிக்கிட்டு.”ன்னு நாட்டாமேகாரரு சொன்னதெ கேட்டவங்க பதிலு சொல்ல அத்தோட நின்னுப் போச்சு சாமியார்ரப் பத்தினப் பேச்சு.

            அப்பைக்கப்போ சாமியாரு வீட்டுப் பக்கம் போறப்ப வர்றப்போ வீட்ட எட்டிப் பாக்குறது. ஆளு நடமாட்டத்துக்கான அறிகுறிங்க எதுவும் தெரியல. அநேகமாக ஆளுப்போயி சேந்திடும்ன்னுத்தாம் ஊரு சனங்க நெனைச்சது.

            ஒரு வாரம் கழிச்சு உருட்டுக் கட்டையாட்டம் சாமியாரு ஊருக்குள்ள நடமாட ஆரம்பிச்சிது. மொகத்துல முன்னய விட ஒரு தேஜஸ் தெரியுது இப்போ. ரொம்ப நாளா பேசாம இருந்த மௌன சாமியாரு இப்போ பேச ஆரம்பிக்குது.

            “ஆஸ்பத்திரிப் போயிச் செத்துத் தொலையாதீங்கடா. வூட்டுக்குள்ளயே கெடந்து காலையில வெறு வயித்துல கைப்பிடி துளசியத் தின்னுத் தொலைங்கடா. காலையில டீக்காப்பிய குடிக்கிறதெ நிப்பட்டிட்டு ஆடாதொடய காய்ச்சிக் குடிங்கடா. மூணு வேளைச் சாப்பாட்ட முடிச்சதும் சித்தரத்தையெ வாயில வெச்சு பப்பிள்கம் மாதிரி கடிச்சித் தின்னுங்கடா. இஞ்சி, பூண்டு, மிளகு, திப்பிலி, கருப்பட்டி எல்லாத்தையும் ஒண்ணா சேத்து மைய அரைச்சு சாப்புடுறதுக்கு அரை மணி நேரத்துக்கு மின்னாடி தின்னுங்கடா. சாப்புட்டு அரை மணி நேரம் கழிச்சு ஒரு வெத்தலையில நாலு மிளகு, நாலு கிராம்ப வெச்சு மடிச்சுத் தின்னுங்கடா. எல்லாம் சரியாப் போயிடும். வெளியில போயிட்டு வந்தா நாலு நல்ல மிளகெ கடிச்சுத் தின்னு ஒரு தம்ப்ளரு தண்ணியக் குடிங்கடா. கொரோனா கிருமியெப் பாத்துன்னா மிளகெ மாதிரித்தாம் இருக்கும். மிளகெப் பாத்தீன்னா கொரோன கிருமியெ மாதிரித்தாம் இருக்கும். இதெப் பண்ணித் தொலைஞ்சு இதுக்கு மேலயும் சரியாப் போவலன்னா எங்கிட்டெ வாங்கடா சாவுறதுக்குன்னுப் போறவங்களே. நாம் கொணம் பண்ணி விடுறேம். இந்த நோய்க்கு இங்கிலீஷ் மருந்தெ எடுக்க நெனைச்சீங்க செத்துத் தொலைவீங்கடா. அப்பிடித்தாம் ஒருத்திச் செத்துத் தொலைஞ்சா. தானா மருத்துவம் பாக்குறேம்ன்னு பாதிச் செத்தா. ஆஸ்பத்திரியில சேந்தா கொணமாயிடலாம்ன்னு அங்கப் போயி மீதிச் செத்தா. நீங்களும் அப்படிச் செத்துத் தொலையாதீங்கடா.”ன்னு பைத்தியம் பிடிச்சாப்புல கத்திக்கிட்டுப் போனுச்சு சேது சாமியாரு.

            என்னடா செத்துப் போயிடுவான்னு நெனைச்சவேம் தெட காத்திரமா ஊருக்குள்ள நடமாடுறானேன்னு ஊரு சனம் சேது சாமியார ஆச்சரியமாப் பாக்குது. தெருவுல இப்போ ஒவ்வொரு வீட்டுலயும் காலையில ஆடாதொடா இலைங்க மண் கலயத்துல கொதிக்குது. அவ்வேம் அவ்வேம் ஆடாதொடை இலைய போட்டிப் போட்டுப் பறிக்குறதுல வேலியோரம் இருக்குற அத்தனெ ஆடாதொடையும் இப்போ இலையில்லாம கம்ப நீட்டிக்கிட்டு நிக்குது.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...