15 Jun 2021

கொரோனாவுல செத்த சேதி தெரியாம வந்துப் போற ஆளுங்க!

கொரோனாவுல செத்த சேதி தெரியாம வந்துப் போற ஆளுங்க!

            ஊருல ரெண்டு பேரு எதிரெதிரா இருக்குறது சகஜம். அப்படி எதிரெதிர் துருவங்களா இருக்குற ரெண்டு பேருதாம் நாகு பெரிம்மாவும் சேது சாமியாரும். இவுங்க ரெண்டு பேத்துக்கும் வந்த எதிர்ப்பு எப்படின்னா வைத்திய பண்ணுற மொறையால வந்த எதிர்ப்பு.

            நாகு பெரிம்மா எம்பிபியெஸ் படிக்கல. இங்கிலீஷ் வைத்தியம் பண்ணும். சேது சாமியாரு நாட்டு வைத்தியம் பண்ணுற ஆளு. வைத்தியத்துக்குன்னு காசு பணம் செலவு பண்ண முடியாத ஆளுங்களுக்குக் கிராமத்துல தட்டு முட்டு வைத்தியங்கள பண்ணுறது இவுங்க ரெண்டு பேருதாம். இவுங்க ரெண்டு பேத்தப் பத்தியும் ஒரே நாள்ல சொல்றது கஷ்டங்றதால, இன்னிக்கு நாகு பெரிம்மாவப் பத்திப் பாத்துட்டு நாளைக்கு சேது சாமியாரப் பாக்கலாம்.

            நாகு பெரிம்மா அந்தக் காலத்துல எட்டாவது வரைக்கும் படிச்சது. இங்கிலீஷ்ல எதைக் கொடுத்தாலும் படிக்கும். பெட்ரண்ட் ரஸ்ஸல்லோட இங்கிலீஷ் புத்தகத்தெ தூக்கிக் கொடுத்தாலும் அதெ படிச்சு அதுக்கு விளக்கம் சொல்ல அதால முடியும்.

அதோட ஞாபவ சக்தி ரொம்ப அபாரமானது. அது காலத்துல ரெண்டாவது, மூணாவதுல படிச்ச பாட்டெல்லாம் இப்போ ஞாபவம் வெச்சிக்கிட்டுச் சொல்லும். ஒங்கள ஒரு மொறைப் பாத்துட்டா மறுமுறை பாக்குறப்போ நீங்க பேசுன வார்த்தைகளெ அட்சரம் பெசகாம ஒப்பிக்கும். நீங்க எப்படி உக்காந்து இருந்தீங்க, எப்படி நின்னீங்கங்ற வரைக்கும் அபிநயம் பிடிச்சுக் காட்டும். எப்பிடிடா இப்பிடி ஒரு ஞாபவச் சக்தின்னு அதெ பாத்து வியக்காத ஆளுங்களப் பாக்க முடியாது.

            நாகு பெரிம்மா அடிக்கடி ஒரு வாசகம் சொல்லும். “ரொம்ப தெறமையா இருக்குறவங்களுக்கு வாழ்க்கெ நல்லா இருக்காது!”ன்னு அது சொல்றது அதோட வாழ்க்கையெப் பாத்து அனுமானிச்சிக்கிட்டு அதோட அனுபவத்துல சொல்ற வாசகமாத்தாம் இருக்கணும். நாகு பெரிம்மாவக் கட்டிக் கொடுத்த எடத்துல மூணே மாசத்துல மூளியாகி ஊருக்கு வந்திடுச்சு. அதுலேந்து திட்டை கிராமத்து வாசந்தாம். போன எடத்துல புருஷனோட வாழ கொடுத்து வைக்காத ஏக்கம் அதுக்கு கடைசி வரைக்கும் இருந்துச்சு.

            நாகு பெரிம்மாவோட மனசு நெறைஞ்ச மனசு. ஊருல யாருக்காச்சும் ஒடம்புக்கு முடியலன்னா நாகு பெரிம்மாத்தாம் தொணைக்குப் போவும். அந்த அனுபவத்துல டாக்கடருமாருக எழுதிக் கொடுக்குற மருந்து மாத்திரைகளப் பாத்து அதெ ஞாபவம் வெச்சிக்கிட்டு எந்த வியாதிக்கு எந்த மருந்துங்றதெ சரியா சொல்லும். அப்பிடித்தாம் அந்த அனுபவத்துல நாகு பெரிம்மா உள்ளூர்ல இங்கிலீஷ் வைத்தியரானது.

இந்த வயசுலயும் ஊசின்னா அதுக்குப் பயங்றதால ஊசி மட்டும் போடாது. ஆனா டாக்டருங்க போடுற ஊசியோட பேரைச் சரியா சொல்லும். கண்ணு நொடிக்குற நேரத்துல ஒண்ணுத்தெ பாத்துட்டாலும் அதெ அப்படியே ஞாபவம் வெச்சிக்கிறதால டாக்டருங்க ஊசியில மருந்து எடுக்குறப்ப அதோட பேர்ர படிச்சு ஞாபவத்துல வெச்சிக்கும் போல.

கொரோனாவுக்கு என்னென்ன மருந்துன்னு கேட்டாலும் ரெம்டெசிவர் வரைக்கும் மருந்து மாத்திரைகளோட பேர்ர அது பாட்டுக்கு ஒப்புவிக்கும். டிவிப் பொட்டியில சொல்ற ஒவ்வொரு மருந்து மாத்திரைப் பேரைக் கேட்டு அதால உண்டான பால பாடம் அது.

இப்படியா வந்த அனுபவ வைத்தியத்துல உள்ளூர்ல யாருக்கு நோய் நொடின்னாலும் மருந்து மாத்திரைகள அது பாட்டுக்குச் சீட்டுல எழுதி கொடுக்கும். எழுத்து பாக்குறதுக்கு அம்சமா கல்வெட்டுல செதுக்குனாப்புல இருக்கும். அந்தக் காலத்துக் கர்சிவ் ரைட்டிங்ல எழுதும். அதெப் பாத்தா வெள்ளைக்கார்ரேம் தோத்தாம் போங்க அப்படி இருக்கும் எழுத்து.

வியாதின்னு வந்தவங்க விருப்பப்பட்டுக் கொடுக்குற இருவதையோ முப்பதையோ வாங்கிக்கும். அதுதாம் அதுக்கு வருமானம். இவ்வளவுதான்னு கேட்டுல்லாம் வாங்காது. காசில்லன்னாலும் ஒண்ணும் சொல்லாது. ஒரு நாளைக்கு எப்படியும் பத்து பதினைஞ்சு பேரு வரைக்கும் வருவாங்க. ஒரு நாளைக்கு இருநூறு முந்நூறு வரைக்கும் சம்பாதிக்கும்.

இது போவ வய வேலைங்க இருக்குற நாள்ல வய வேலைக்குப் போவும். நூறு நாளு வேலை இருக்குற நாள்ல நூறு நாளு வேலைக்குப் போவும். கௌரவம்லாம் பாக்காது. ஆத்திர அவசரம்ன்னு யாராச்சும் உதவிக்குக் கேட்டா தொணைக்குப் போவும். அவுங்களா மனசு வந்துக் கொடுக்குற காசை வாங்கிக்கும். இப்படிச் சேத்த காச வெச்சு மூணு காசுக்கு வட்டிக்கு விடும். இப்படியே குருவி சேக்குறாப்புல காசெ சேத்து குருவி கட்டுனாப்புல இருந்த கூரை வீட்டெ மாடி வீடா எடுத்துக் கட்டிடுச்சு.

எல்லாருக்கும் எல்லா காலத்துலயும் வைத்தியம் பாத்தாலும், “இந்தக் கொரோனா காலத்துல கண்ட கண்டபடி இருமிக்கிட்டு அவஸ்தெ படுற ஆளுங்க எல்லாம் கிராமத்துக்குள்ள வர்றாம். நீயி கொஞ்ச காலத்துக்கு வைத்தியம் பாக்குறதெ நிப்பாட்டேம்!”ன்னு ஊர்ல சொல்லிப் பாத்தாங்க.

“ஆம்மா இத்தனெ நாளு வர்றாத கொரோனா இனுமேத்தாம் வர்றப் போவுதாம். இனுமே கொரோனா வந்து இருந்தா என்னா? செத்தா என்னா? வாழுற வயசு வாழ்ந்தாச்சு. வியாதின்னு வர்றவங்களுக்கு ஒத்தாசெ ஒதவி பண்ணாம இருக்க முடியுமா?”ன்னுச்சு நாகு பெரிம்மா மொத அலையில பரவாத கொரோனாவ நெனைப்புல வெச்சிக்கிட்டு.

அதென்னவோ கிராமத்துல பெரியவங்க சொன்னது போல சரியா நடந்திடுச்சு. ஆளாளுக்கு வந்து நாகு பெரிம்மாகிட்டெ வைத்தியம் கேட்டுட்டுப் போனதுல மொதெ அலையில வராத கொரோனா ரெண்டாவது அலையில வந்துடுச்சு. ஒடம்பு வலி முறிச்சு எடுக்குதுன்னு செருமப்பட்டுக் கெடந்துச்சு. அதுக்குத் தெரியாத வைத்தியமா? அதுவா மெடிக்கல் கடைக்குப் போயி மருந்து மாத்திரைகள வாங்கிப் போட்டுச்சு. எதுக்கும் நிக்கல.

“சுத்தமா பசிக் கொடுக்க மாட்டேங்குது. நடு முதுவுலேந்து பின் மண்டெ வரைக்கும் வலின்னா வலி தாங்க முடியல!”ன்னு பொலம்பிக்கிட்டெ பத்து நாளுக்கு மேல தனக்குத் தானே வைத்தியம் பாத்துக்கிட்டும் வர்றவங்களுக்கும் வைத்தியம் பாத்துக்கிட்டு இருந்த நாகு பெரிம்மா ஒரு கட்டத்துக்கு மேல முடியாம அதுவா கௌம்பி அதுக்கிட்டெ அன்னிக்கு வைத்தியம் பாக்க வந்த டாட்டா ஏஸ் ஓட்டுற ஆளோட டாட்டா ஏஸ்ல பின்னால ஏறிக்கிட்டு திருவாரூரு மெடிக்கலுக்குப் போனுச்சு.

போறப்ப நாகு பெரிம்மா சொன்னதா அந்த ஆளு சொன்ன வாசகந்தாம் இப்போ நெனைச்சாலும் மறக்க முடியல. “நாமளே போயிப் பாத்தாதாம்டா நேர்ல கொரோனாவுக்கு என்னென்ன மருந்து மாத்திரைகளெ கொடுக்குறாங்கன்னு தெரிஞ்சிக்க முடியும். போயிப் பாத்துட்டு வந்துட்டேன்னா அதெ வெச்சு ஊருக்கே வைத்தியம் பண்ணி முடிச்சிடுவேம்ல. அரசாங்கம் படுற செருமத்தெ கொறைச்சிப்புடுவேம். சல்லிசு காசுல வைத்தியம் பண்ணி சகல சனத்தையும் காப்பாத்திப் புடுவேம்!” இப்படிச் சொல்லிட்டுத்தாம் நாகு பெரிம்மா மெடிக்கல் காலேஜூக்குப் போயிருக்கு. அதெ இப்போ நெனைச்சாலும் கண்ணுல ரெண்டு சொட்டு தண்ணி வரத்தாம் செய்யுது.

போன எடத்துல ஒழுங்கா இருந்து சிகிச்சை எடுத்திருந்தா பெரிம்மா கொணமாகிக் கூட இருக்கும் போல. அங்க வந்து இருக்குறவங்களுக்கு தொட்டுத் தொலங்கி ஏகப்பட்ட உபகாரங்களப் பண்ணிருக்கு நாகு பெரிம்மா. அதென்ன பண்ணும்? ஊருல யாருக்காச்சும் ஒடம்புக்கு முடியலன்னா அப்படிப் போயி ஒத்தாசெ பண்ண ஆளாச்சே. மித்தவங்க செருமப்படுறதெ பாத்தா அதால பொறுத்துக்கு முடியாது. தன்னோட கஷ்ட நஷ்டத்தெ பொருட்படுத்தாம ஒதவிகளப் பண்ணிருக்கு.

ஒரு கட்டத்துல மூச்சு வுட முடியாம ஆக்ஸிஜன் படுக்கையில வெச்சப்பவும் நாகு பெரிம்மாவுக்குச் சந்தோஷம் தாங்க முடியலையாம். “ஆண்டவன் புண்ணியத்துல இதெயும் கத்துக்கிட்டுக் கிராமத்துக்குப் போனேன்னா ஒரு சனத்தெ இங்க அண்ட விட மாட்டேம். வீட்டுலயே இது மாதிரிக்கு இன்னின்ன சாமானுங்க வாங்கியாங்கடான்னு சொல்லி கொணம் பண்ணிப்புட மாட்டேம்!”ன்னு மெல்லுசா மொணகிக்கிட்டெ சொல்லிக்கிட்டேத்தாம்  போயிருக்குன்னு நாகு பெரிம்மா அடக்கத்துக்குப் போயிட்டு வந்த பெரசிடெண்டும் வார்டு மெம்பரும் கேள்விப்பட்டுட்டு வந்துச் சொன்னாங்க.

ஆமா! நீங்க நெனைக்கிறது ரொம்ப சரித்தாம். ஊருலேந்து கொரோனான்னு போயி நாளு நாள்லயும் எட்டு நாள்லயும் திரும்புன ஆளுங்க போல நாகு பெரிம்மா திரும்பல. இருவது நாளு வரைக்கும் நாகு பெரிம்மா அங்கேயே இருந்து இறந்துப் போச்சுது.

நாகு பெரிம்மா இறந்துப் போனது அங்க இருந்த அத்தனெ பேருக்கும் வருத்தத்தெ உண்டாக்கிடுச்சு. நாகு பெரிம்மா செத்த சேதி ஊருக்குத் தெரிஞ்சப்போ யாரும் மெடிக்கல் காலேஜ் பக்கம் எட்டிப் பாக்கல. ஊரு பிரசிடெண்டும், தெரு வார்டு கவுன்சிலரு, சேது சாமியாருன்னு மூணு பேருந்தாம் மெடிக்கல் காலேஜ் பக்கம் போனது. “பொணத்தெ ஊருக்குக் கொண்டு வர்ற வாணாம். அதுக்குன்னு அங்க ரத்த பந்தம் யாருமில்ல. நீங்க பொதைக்கணும்ன்னு நெனைக்குற எடத்துலயே பொதைச்சிடுங்க!”ன்னு பிரசிடெண்டு டக்குன்னு சொன்னதுல சேது சாமியாருக்கு விக்கித்துப் போயிட்டதா கேள்வி. அது ஏன்னு தெரியல. சேது சாமியாரு கண்ணுலேந்து தண்ணி தண்ணியா வழிஞ்சிருக்கு. ஒரு வார்த்தெ அதெப் பத்திச் சொல்லாம இன்னிய வரைக்கும் யாருகிட்டெயும் பேசாம வெறும் சாமியாரா இருந்த அது இப்போ மௌன சாமியாரா இருக்கு. இப்படியா நாகு பெரிம்மா ஊருக்கு வராமலேயே அங்கேயே அடக்கமாயி அப்படியே போயிடுச்சு.

இப்பவும் பாருங்க கையில இருபதையும் முப்பதையும் வெச்சிக்கிட்டு நாகு பெரிம்மா செத்த சேதி தெரியாம நாலு சனம் அது வீட்டுப் பக்கம் வந்துட்டுப் போவுது. இங்கிலீசு வைத்தியம் படிச்சவங்க எல்லாம் ஒசத்தியா வைத்தியம் பாத்தப்போ அதெ படிக்காட்டியும் அனுபத்துலயும் கேள்வியிலயும் தெரிஞ்சதெ வெச்சு சல்லிசா வைத்தியம் பாத்தது நாகு பெரிம்மாத்தாம்.

அதோட காலத்துல அதெ படிக்க வெச்சிருந்தா அது பெரிய டாக்கடரம்மாவா ஆயிருக்கும். எங்க அந்தக் காலத்துல பொம்பளெ புள்ளைங்கள படிச்ச வெச்சாங்க? இது எட்டாவது வரைக்கும் படிச்சதெ பெரிசும்பாங்க.

ரெண்டாவதா ஒரு கலியாணத்தெ பண்ணி வெச்சிருந்தா புள்ளெ குட்டிகளெப் பெத்துட்டு நல்ல வெதமா குடும்பத்தெ நிர்வாகம் பண்ணிருக்கும். சாஸ்திரம், சம்பிரதாயம்ன்னு சொல்லி அதெயும் பண்ணி வைக்காம விட்டுட்டாங்க. சாவுறப்போ அனாதையா செத்துட்டுன்னு சொல்றாப்புல ஆயிடுச்சு. நாகு பெரிம்மாவ மட்டுமா இந்தக் கொரோனா பல பேத்தையும் அப்பிடித்தானே சாவடிச்சிட்டு இருக்குது.

நாகு பெரிம்மா மட்டும் கொணம் கண்டு வந்திருச்சுன்னா அந்த அனுபவத்துல பல பேத்தோட கொரோனாவ மருந்தெ கொடுத்தே சாவடிச்சிருக்கும். அதெ தெரிஞ்சிக்கிட்டுத்தானோ என்னவோ கொரோனா நாகு பெரிம்மாவ சாவடிச்சிடுச்சு.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...