14 Jun 2021

கொரோனாவில் வெடித்த பட்டாசு

கொரோனாவில் வெடித்த பட்டாசு

            கலியாணசுந்தரம் என்று கேட்டால் அவுங்க வீட்டுலயே யாருக்கும் தெரியாது. பட்டாசுன்னு எந்த வீட்டுல நின்னு கேட்டாலும் கலியாணசுந்தரத்தெ அடையாளம் காட்டுவாங்க. இத்தனைக்கும் படபடன்னு கூட பேச மாட்டாரு. ரொம்ப மெல்லிசா பேசுவாரு. ஆளு ரொம்ப கமுக்கமா இருப்பாரு. அந்த கமுக்கத்தோட ரகசியம் அவரு பண்ணிருக்கிற செய்வினையில வெடிக்கிறப்பத்தாம் தெரியும்.

            பள்ளியோடம் படிக்கிற காலத்துலயே பட்டாசோட வேலை ஆரம்பிச்சிடுச்சு. பீயிட்டிப் பீரியட்டுல வரிசையா நிக்க வெச்சு டிரில் கொடுத்தா நல்ல பிள்ளையாட்டம் நின்னுத்தாம் செய்வாராம். செஞ்சிக்கிட்டே யாருக்கும் தெரியாம பக்கத்துல நிக்குறவனோட தலையில தட்டிப் புடுவாரு, இல்லாட்டி கிள்ளிப் புடுவாரு. இவருத்தாம் செஞ்சாருங்றதெ தெரியாத அளவுக்கு மொகத்தெ அப்பாவியா வெச்சிக்கிட்டு நிப்பாரு. அடிப்பட்டவேம், கிள்ளுப்பட்டவேம் சும்மாவா இருப்பாம். வலியில ஐயோன்னோ அம்மான்னோ பட்டாசு வெடிக்கிறாப்புல கத்திப்புடுவாம். அடிபட்டவனெ அடிச்சதெ யாருங்றதெ கண்டுபிடிக்கிறதுல அன்னைய பீயிட்டிப் பீரியட்டு முடிஞ்சிடுமாம்.

            காலேஜ்ல படிக்கப் போறப்பயும் ரொம்ப அமளி துமளி பண்ணிருக்காரு. ஆணும் பொண்ணும் யாரு யாரு நெருங்கிப் பழகுறான்னு மனசுக்குள்ளயே கணக்கு வெச்சிக்கிட்டு ஆணுக்குப் பொண்ணு எழுதுற மாதிரி, பொண்ணுக்கு ஆணு எழுதுற மாதிரி அச்சு அசலா அவுங்கவங்க கையெழுத்துல காதல் கடிதாசி எழுதிக் கொடுத்துடுவாரு. அங்கங்க இருக்குற சுவத்துல ஆணு, பொண்ணுன்னு ரண்டு பேரையும் எழுதி வெச்சிடுவாரு. இதையெல்லாம் தாந்தாம் செஞ்சோமாங்ற மாதிரி மொகத்தெ அவ்வளவு பவ்வியமா வெச்சிப்பாரு. இவரு பண்ணி வைக்கிற வேலையில காதலிக்கிற ரண்டு பேரும் ஓடிப் போறப்பத்தாம் காலேஜ்ல பட்டாசு வெடிக்கும். ஓடிப் போற ரெண்டும் ரெண்டு வெதமான ஜாதியா இருக்கும். காலேஜ்ல இதெ வெச்செ ஜாதிப் பிரச்சனெ உண்டாயிடும். ரெண்டு சாதிக்காரெ பயலுகளும் போட்டி மேல போட்டிப் போட்டு பண்ணுற ஸ்ரைக்குல பல நாளு காலேஜ் நடக்காமப் போயிடும். நம்ம பட்டாசு அதெ வேடிக்கெப் பாக்குறதுக்குன்னே காலேஜ் போயிட்டு படிச்சுக் களைச்சாப்புல மூஞ்செ வெச்சுகிக்டடு ஹாயா வந்துட்டு இருப்பாரு.

            அந்தக் காலத்துல காலேஜ்ல படிச்சும் பட்டாசு வேலைக்குப் போகல. அதுக்குப் பெரிசா காரணம் ஒண்ணும் இல்ல. அவரால கடைசி வரைக்கும் அரியர்ஸ் முடிக்க முடியாமப் போச்சு. அதெப் பத்தி பட்டாசும் கவலைப்படல. தாம் அரியர்ஸ்ஸ முடிக்கலங்ற ரகசியத்தெ வெளியில சொல்லாமலேயே “என்னடா கவர்மெண்ட்டு? படிச்சவனுக்கு வேல இல்ல. இவனுவோ பாட்டுக்கு பள்ளியோடத்தையும் காலேஜையும் கட்டிட்டு அவனவனையும் படி படின்னா எவம்டா படிப்பாம்?”ன்னு ஊருல ஞாயம் வெச்சிட்டு நிப்பாரு.

            பட்டாசுக்கு இருந்த விஷேச குணம் யாரப் பாத்தாலும் அவர்ர சட்டுன்னு எடை போட்டுடுவாரு. யாரோட கையெழுத்தப் பார்த்தாலும் அதெ அப்படியே செராக்ஸ் எடுத்தாப்புல எழுதுவாரு. இதெ வெச்சித்தாம் ஊருல பல வில்லங்கமான வேலைகளைப் பாத்துட்டு இருந்தாரு பட்டாசு. ஊருல ஒருத்தருக்கொருத்தரு பிடிச்சிக்காத ரெண்டு பேரு யாருன்னு எடை போட்டுப் பாத்துட்டு இருப்பாரு. அது தெரிஞ்சா போதும் இவரு மேல அவரு மொட்டெ கடிதாசி எழுதுறாப்புலயும் அவரு மேல இவரு மொட்டெ கடுதாசி எழுதுறாப்புலயும் எழுதிப் போட்டுட்டு என்னத்தாம் நடக்குதுன்னு கமுக்கமா பாத்துட்டு இருப்பாரு. அவரு நெனைச்சாப்புல பட்டாசு வெடிக்கிறப்ப இவருத்தாம் போயி நின்னு மத்திசம் பண்ணுவாரு. இப்படி மத்திசம் பண்ணிப் பண்ணியே ஊருல பெரிய பஞ்சாயத்தாரு ஆயிட்டாரு பட்டாசு.

            ஊருல எந்தப் பஞ்சாயத்துன்னாலும் பட்டாசுத்தாம் ஞாயம் பண்ணியாவனுங்ற நெலைய உண்டாக்குனதுல ஊரோட முக்கியஸ்தர்ல அவரும் ஒருத்தரு. இப்போல்லாம் ஊர்ல எப்ப பிரச்சனை பட்டாசெ போல வெடிச்சாலும் அதெ அவருதாம் தீத்து வுடணும்ன்னு ஆயிடுச்சு. அந்தப் பட்டாசெ வெடிக்க வெச்சதே அவருதாங்றதெ கண்டுபிடிக்கிறதுக்குள்ள நாளு ஆயிடும். அதுக்குள்ள இன்னொரு பட்டாசெ வெடிக்க வெச்சு கவனத்தெ தெசை திருப்பிடுவாரு.

            கவர்மெண்டுலேந்து ஊருல விலையில்லா டிவிப்பொட்டி கொடுத்தப்போ மொத ஆளா அவருத்தாம் நின்னு வாங்குனாரு. விலையில்லா மிக்ஸி, கிரைண்டரு கொடுத்தப்பவும் அவருத்தாம் வாங்குனதுல மொத ஆளு. புயலு, வெள்ளம்ன்னு வயலுக்கு நிவாரணம், இன்ஷ்யூரன்ஸ் கொடுத்தாலும் பட்டாசுத்தாம் மொத ஆளா நின்னு வாங்குவாரு. அவர்ர ரண்டாவது ஆளா வாங்க வுட்டுப்புட்டா மொட்டெ கடுதாசியப் போட்டு விட்டு எதாச்சும் பட்டாசெ வெடிக்க விட்டுப்புடுவாருங்றதால வரிசைக்குப் பட்டாசு வந்துட்டாலேயே முன்னாடி நிக்குறவங்க பின்னாடி தள்ளி நின்னுகிட்டு அவருக்கு எடத்தெ விட்டுப்புடுவாங்க. இது மட்டுமில்ல ரேஷன் கடையில அந்தந்த மாசத்துக்கு மொத மொதலா சாமான் வாங்குறது, தேர்தல்ல மொத ஆளா ஓட்டுப் போடுறதுன்னு எல்லாத்துலயும் அவருதாம் மொத ஆளு.

            பட்டாசு பல எடங்கள்ல போயி ஞாயம் பண்ணதுல அங்கங்க நெல புலன்கள வில்லங்கமா வசம் பண்ணி வெச்சிருந்தாரு. ஒரு நேரத்துல அங்கங்க வாங்கிப் போட்டிருந்த நெல புலன்கள சல்லிசுக் காசுல வித்ததுல சனங்களுக்கு அவரு மேல அலாதியான மதிப்பு உண்டாயிடுச்சு. சொந்தக் காசெ போட்டு வாங்கியிருந்தா அப்படி வித்திருக்க மாட்டாரு. ஓசியில வில்லங்கத்தெ வெச்சு வளைச்சுப் போட்டதெ பத்துக் காசுக்கு வித்தாலும் லாபந்தானே. அப்படித்தாம் வித்துத் தீத்தாரு பட்டாசு.

பட்டாசு ஏம் இப்படி பண்ணுறாருன்னு கேட்டதுக்கு, “இவனுங்ககிட்டெ வெச்சு நெல புலத்தெ, சொத்தெ வரவு செலவு பண்ண முடியல. அதாங் வித்துப்புட்டு காசைக் கொண்டுப் போய் பாங்குல போட்டுட்டு வட்டிய வாங்கிச் சாப்புட்டுட்டு நிம்மதியா இருக்கலாம்ன்னு நெனைக்கிறேம்!”ன்னு சொன்னாரு பட்டாசு. அதெ கேட்டு ஊரே உச்சுக் கொட்டிச்சு. இது நடந்தது இருவது வருஷத்துக்கு முன்னாடி.

இப்போ அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவரு வித்த நெலத்தையே அதிகப்படியான காசு கொடுத்து வாங்குனாரு. காரணமில்லாம வெடிக்க மாட்டான்னே பட்டாசுன்னு ஊரே யோசிச்சுக்கிட்டு இருக்குறப்போ வாங்கிப் போட்ட நெலத்தையெல்லாம் வீட்டுமனையாப் போட்டு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நல்லா காசுப் பாத்தாரு. அந்தக் காசுல வீடு கட்ட ஆரம்பிச்சு தடபுடலா குடி போனாரு. வீடுன்னா வீடு பங்களா மாதிரி கட்டி முடிச்சிருந்தாரு.

ஊருல ஒரு நண்டு சுண்டு பாக்கியில்லாம அவரு குடி போன வீட்டுக்குப் போயிச் சாப்புட்டு வந்துச்சு. அவ்வளவு பிரமாண்டமா ஊரடச்சு பத்திரிகெ வெச்சு பிரமாதம் பண்ணாரு. வீடு குடி போனதுக்குப் பெறவும் வீட்டுக்குள்ளார அலங்கார வேலைகள ஆட்கள வெச்சிப் பாத்துட்டு வந்தாரு.

“ஏம்யா பட்டாசு! கவர்மெண்ட்டுல கொரோனா ரொம்ப பரவுதுங்றாம். கடை கண்ணிய வேற ரொம்ப நேரத்துக்கு வெச்சிக்கக் கூடாதுன்னு அடைக்கச் சொல்றாம். ரண்டாவது அலை தீவிரமா இருக்குதுங்றாம். நீயி என்னான்னா இப்படி வீட்டுக்குள்ளார பட்டாசு வெடிச்சி தீவாளி கொண்டாடிட்டு இருக்கீயே?”ன்னே கிராமத்துப் பெரிசுங்க கேட்டுப் பாத்துச்சுங்க.

“அட போங்கய்யா கெழடுகளா! காலம் போன காலத்துல வந்து நின்னுகிட்டு வேல மெனக்கெட்டுப் பேசிக்கிட்டு. எங்க இருக்குங்றேம் கொரோனா? அதெல்லாம் டவுனுப் பக்கம், மெட்ராஸ் பக்கம், டெல்லிப் பக்கம் இருக்குங்றேம். இங்கென்ன கிராமத்துல. ஒரு வீடு இங்க இருக்குன்னா இன்னொரு வீடு அங்க இருக்கு. இப்பிடித்தாம் போன வருஷம் சொன்னானுவோ. கொரோனா வந்துச்சா?”ன்னாரு பட்டாசு.

“என்னமோப்பா டிவிப் பொட்டியில சொல்றதெ சொல்றோம். நீயி வேற வெளியிலேந்து ஆளுகள வீட்டுக்குள்ள கொண்டாந்து வெச்சு வேலப் பாக்குறே. சாக்கிரதையா இருப்பா. வீடு கட்டி குடி போனா திருஷ்டி உண்டாவும்பாவோ. நீயி வேற ஊருக்கே பெரிசா வீட்டெ கட்டி வெச்சிருக்கே. ஒரு வருஷ காலத்துக்கு உஷாரா இருந்துக்கணும்ப்பா.”ன்னுச்சுங்க பட்டாசுகிட்டெ பேச்சுக் கொடுத்த பெரிசுங்க.

“அட விசயம் புரியாத தண்டங்களா! இந்த மாதிரி காலத்துலத்தாம் ஆளுங்க சல்லிசு கூலிக்குக் கெடைப்பானுங்க. இதெ பயன்படுத்திக்கணும். கவர்மெண்ட்ல ஊரடங்குப் போட்டாம். கொத்தனாரு, தச்சனுங்க, கம்பி கட்டுறவேம், பெயிண்டனுங்கன்னு வேல இல்லாம நின்னானுங்க. பிடிச்சிப் போட்டு வேலை கொடுத்து சல்லிசு காசுல எட்டே மாசத்துல வேலைய முடிச்சேனா, குடி போனேன்னா!”ன்னாரு பட்டாசு.

அதுக்கு மேல பட்டாசுகிட்டெ என்னத்தெ பேசுறதுன்னும் பட்டாசு எதெ செஞ்சாலும் அதுல ஒரு சாமர்த்தியம் இருக்கும்ன்னும் பெரிசுங்க விட்டுடுச்சுங்க. கொரோனாவோட ரெண்டாவது அலை ரொம்ப தீவிரமா இருக்குறதாவும் ஊரடங்குப் போடப் போறாங்கன்னும் அப்பைக்கப்போ அப்போ சேதி வந்துக்கிட்டு இருந்துச்சு. பட்டாசு வேலைய நிறுத்தாம தொடர்ந்துகிட்டு இருந்தாரு. “வீட்டுக்குள்ள யாரு வந்துப் பாக்கப் போறாம்? நீங்க பாட்டுக்கு வேலையப் பாத்துட்டு இருங்கடா!”ன்னு வேலையாளுங்ககிட்டெச் சொல்லிட்டு வேலையத் தொடர்ந்துக்கிட்டு இருந்தாரு.

அதே நேரத்துல பட்டாசு வீட்டுக்கு வர்ற ஆளுங்க இருமிக்கிட்டும் காய்ச்சலோடும் இருக்குறதா ஊருல பேசிக்கிட்டாங்க. அப்பயும் பட்டாசு வேலைய நிப்பாட்டல. “என்னடா பெரிய கொரோனா? கிராமத்துல அதெல்லாம் வாராது. மாத்திரையப் போட்டுட்டு வேலையப் பாருங்கடா!”ன்னு வேலையப் பாக்க சொன்னாரு. வந்துக்கிட்டு இருந்த தொழிலாளிங்களுக்கும் வேல கெடைக்குற நெனைப்புல அவுங்க பாட்டுக்கு வேலையப் பாத்துக்கிட்டு இருந்தாங்க.

கொஞ்ச நாள்ல பட்டாசுக்குக் காய்ச்சல் வந்துச்சு. அவரும் சளி பிடிச்சாப்புல இரும ஆரம்பிச்சாரு. பட்டாசுக்கு அப்பத்தாம் பயம் வந்து வேலைய நிப்பாட்டிட்டு அவராவே திருவாரூ மெடிக்கல் காலேஜ்ல  போயிச் சேந்துக்கிட்டாரு. “ரொம்ப உஷாரான ஆளுத்தாம்!”ன்னு ஊருக்குள்ள பேசிக்கிட்டாங்க.

ஊருல மொத கொரோனா சாவா சுதா செத்த மறுநாளு பட்டாசும் செத்துட்டதா சேதி பரவுனுச்சு. ஊருக்குக் கொண்டு வரணுமா, அங்கேயே பொதைச்சுடலமான்னு கேட்டதுக்கு பட்டாசு வீட்டுல இருந்தவங்க அங்கேயே பொதைச்சிட சொல்லிட்டாங்க.

“அடப்பாவி! ஊரு சுடுகாட்டுல கூட வந்த அடங்க முடியாமப் போயிட்டானே பட்டாசு. இம்மாம் பெரிய வீட்டக் கட்சி வெச்ச என்னத்தெ புண்ணியம். செத்தப் பெறவு அந்த வீட்டுல சித்தெ நேரம் அடங்க கொடுத்து வைக்காம போயிட்டானே பட்டாசு.”ன்னு கிராமத்துக் கெழவிங்க அதுங்களுக்குள்ளயே ஒப்பாரி வெச்சதுங்க.

“ஊருல எதுன்னாலும் மொத ஆளா நிப்பாம். கொரேனா வந்துச் சாவுறதுல மட்டும் எப்படி சுதாவ மொத ஆளா சாவ வுட்டுப்புட்டு இவ்வேம் ரண்டாவது ஆளா போனாம்? ஆன்னா ஒண்ணுப்பா இந்த ஊருல பொறந்து, இந்த ஊருல வாழ்ந்து, இந்த ஊர்ல இருந்து, சொந்த ஊருல அடக்கமாவாம வெளியூருலப் போயி அடக்கமான மொத ஆளு அவந்தாம்ப்பா!”ன்னு ஊருல பட்டாசெ பிடிக்காத ஆளுங்க பேசிக்கிட்டாங்க.

“கொரோனாவுல பட்டாசு வெடிப்பானுன்னு கொஞ்சம் கூட நெனைக்கலையேப்பா!”ன்னு கிராமத்துக் கெழடுங்க பேசிக்கிட்டுங்க.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...