13 Jun 2021

கொரோனா கூப்பிட்டுப் போன சுதா

கொரோனா கூப்பிட்டுப் போன சுதா

            சுதாங்ற பேர்ர கேட்டதும் பொம்பளை புள்ளைன்னு நெனைச்சிடாதீங்க. ஆம்பளைப் புள்ளை. முழு பேரு சுதாகரு. அதெ சுருக்கிக் கூப்புட்டதுல சுதாகரு சுதா ஆயிட்டாப்புல. வயசு இருபத்து ரண்டுலேந்து இருபத்து அஞ்சுக்குள்ள இருக்கும்.

            சின்ன புள்ளையா இருக்கிறதிலேந்து இப்போ பெரிய புள்ளையா ஆயிட்ட வரைக்கும் சுதான்னா சுறுசுறுப்பு. சுறுசுறுப்புன்னா சுதா. காலு ஓரிடத்துல நிக்காது. சக்கரத்தெ போல ஓடிட்டே இருக்கணும். அதாலேயே சுதாவெ எல்லாருக்கும் பிடிக்கும்.

            சுதாவ வீடடங்கி உக்காந்துப் பாக்க முடியாது. சொந்த வீட்டுல இருந்ததெ விட பிறத்தியாரு வீட்டுல இருந்ததுததாம் அதிகம். இத்தனைக்கும் சுதா வீட்டுக்கு ஒரே ஆம்பளெப் புள்ளெ. அந்த வீட்டுக்கு ஒத்தப் புள்ளெ. சுதாவோட அம்மா பொலம்பிக்கிட்டே இருக்கும், “ஒத்தப் புள்ளையெ பெத்துக்கிட்டு அந்தப் புள்ளைக்கும் ஒரு வாயிச் சோறு ஊட்டி விட கொடுப்பனை இல்லையே!”ன்னு.

            தெருவுல யாரு வீட்டுலயாவது டிவிப்பொட்டி ஓடலையா, உடனே கூப்புடு சுதாவன்னுத்தாம் மொத கொரலு உண்டாவும். சுதா வந்துப் பார்த்தா ஓடாத டிவிப் பொட்டி ஓடும். பேன், மிக்ஸி, கிரைண்டரு, பிரிட்ஜ் எது ஓடலைன்னாலும் சுதா வந்துப் பாத்தா ஓடும். ஒருவேள சுதாவால சரி பண்ணிட முடியலன்னாலும் மெக்கானிக்கெ கொண்டு வந்து சரி பண்ண வெச்சிட்டுத்தாம் மறுவேல பாக்கும். எப்படிப் பாத்தாலும் சுதா வந்துப் பாத்துட்டா காரியம் ஆயிடும்.

            ஆத்திர அவசரத்துக்குக் கிராமத்துலேந்து ஓடி ஓடியார சுதா ரொம்ப தொணை. சமைச்சிக்கிட்டு இருக்குறப்ப எள்ளு இல்லையா, சுதான்னு ஒரு கொரலு கொடுத்தா போதும் சுதா எண்ணெய்யா வந்து நிக்கும். ஊருல யாருக்கும் ஒடம்புக்கு முடியலையா சுதா அழைச்சிட்டுப் போயி காட்டிட்டு வந்துடும்.

            சுதா பத்தாவது முடிக்கிற வரைக்கும் ஊருல எந்தக் கொறையும் யாருக்கும் இல்ல. பத்தாவது முடிச்சிட்டு பாலிடெக்னிக் படிக்க மூணு வருஷம் ஈசனூரு போனப்பத்தாம் கிராமத்துல ரொம்ப செருமமா போயிடுச்சு. கைப்புள்ள கணக்கா அங்கயும் இங்கயும் ஓடிட்டு இருந்த ஆளு இல்லாமப் போயி பல பேத்துக்குக் கையி ஒடைஞ்சாப்புல ஆயிடுச்சு. சுதாவுக்கும் அப்படித்தாம் இருந்திருக்கணும் போல. மூணு வருஷம் படிப்ப முடிஞ்ச கையோட ஊருக்கு வந்தது அப்பிடியே ஹால்ட் ஆயி கெடந்துச்சு.

            டிப்ளமா இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடிச்சிட்டு வந்ததுல ஊருல கெடந்த ஓடாத இன்ஜினு, வண்டிய எல்லாம் ஓடி விட்டுச்சு சுதா. சுதாவுக்கு இன்ஜின்னு, மோட்டார் வண்டின்னா அலாதிப் பிரியம். அக்குவேறா ஆணி வேறா பிரிச்சி மாட்டிடும். அதெ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க வெச்சா கேக்கவா வேணும். படிச்சப்போ காலேஜ்ல அப்படி ஒரு பேரு. சுதாவுக்கு மாசத்துக்கு ரண்டு எடத்துலேந்து இன்டர்வியூ கார்டு வந்துக்கிட்டு இருக்கும். எல்லாம் மெட்ராஸ், ஓசூரு, பெங்களூரு இப்படித்தாம். அது படிச்ச காலேஜ்லேந்து இதெப் பத்தி கேள்விப்பட்டு வந்த இன்டர்வியூ கார்டுங்க அதெல்லாம்.

            சுதாவுக்கு எங்கயும் போக விருப்பம் இல்ல. ஒத்தப் புள்ளைய வெச்சுக்கிட்டு அதே ஏம் மெட்ராசுக்கும், பெங்களூருக்கும் அனுப்பிச்சிட்டுக் கெடக்கணும்ன்னு அதோட அம்மா, அப்பாவும் வேலைக்கு அனுப்பல. சுதாவுக்கு ரொம்ப கொண்டாட்டமா போயிடுச்சு. தெருவுல வீடு வீடா மெக்கானிக் வேலை பாக்கறதும், தோட்டம் தொரவு வயலுகள்ல பம்புசெட்டு ரிப்பேரு ஆனா அது சரி பண்ணுறதும்ன்னு வீடு தங்காம அலைஞ்சதுல சுதாவோட அம்மா வெறுத்துப் போயிடுச்சு.

கோயில் திருவிழான்னா கோயில்லயே கெடந்து சவுண்ட் சர்வீஸ் வேலையில கூடுதலா கவனத்தெ ஈர்க்குறாப்புல எதாச்சும் செய்யும். வேலை வாங்குற சனங்கத்தாம் எதாச்சும் கொடுக்குமான்னா சல்லிக் காசெ எடுத்து வைக்க கணக்குப் பாக்கும்ங்க. சம்பாதிச்சுக் காசு சேக்க வேண்டிய வயசுல இப்பிடி வெட்டியா சுத்துறானேன்னு சுதாவோட அப்பாவுக்கும் வருந்தம்தாம்.

            சுதாவோட நெலைமை இப்பிடியே போனாக்கா கலியாணம் காட்சிய எப்படி பண்ணி வைக்குறதுன்னு யோசனைப் பண்ணப்பத்தாம், “இந்தப் பயெ ஊருல கெடந்து சீரழியறதுக்குப் பட்டணத்துக்குப் போயாச்சும் வேல பாத்துட்டுக் கெடக்கட்டும்!”ன்னு சுதாவ மெட்ராசுக்குக் கௌப்பி வுட்டாரு அப்பங்காரரு.

            மெட்ராஸ் போன அன்னைக்கு சின்ன புள்ளெ கணக்கா போவ மாட்டேன்னு அழுகாச்சி வெச்சி அடம் பண்ணிச்சு சுதா. ஊரு சனமே தெரண்டு வந்து ஆறுதல் பண்ணி வடவாதி பஸ் ஸ்டாண்டுக்குக் கொண்டு போயி எட்டு மணிக்கு வர்ற ரண்டாம் நம்பரு பஸ்ல ஏத்தி விட்டுட்டு வந்துச்சுக்குங்க.

            மெட்ராஸ் போயி ரண்டு மூணு மாசத்துக்கு கிராமத்துல இருந்த அத்தனெ பேருக்கும் போன் மேல போன் அடிச்சிப் பேசிக்கிட்டுப் பொலம்பிட்டுக் கெடந்துச்சு சுதா. அப்புறம் அதுக்கு மெட்ராஸ் செட்டாயி பிடிச்சிப் போயிடுச்சுன்னு நெனைக்கிறேம். அதுக்குப் பெறவு அதிகமா போன் பண்ணுறதில்ல.

            போர்ட்டு காரு கம்பெனியில வேலைக்குச் சேந்ததாவும் ரண்டே வருஷத்துல அதுலேந்து வெளியில வந்து வேற ஒரு காரு கம்பெனியில வேலைக்குச் சேந்து பெரிய அளவுல சம்பளம் வாங்குறதாவும் சுதாவப் பத்திப் பேசிட்டுக் கெடந்தாங்க. பெறவு அதுலேந்தும் வெளியில வந்து சொந்தமா காரு ரிப்பேரு பண்ணுற தொழில ஆரம்பிச்சிட்டாத கேள்வி. சுதாவோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ரொம்ப பெருமெ.

            ஊரு திருவிழா, யாருக்காச்சும் கலியாணம்ன்னா சுதா ஊருக்கு வரும். ஊருக்கு வந்தா நிமிஷ நேரம் சும்மா இருக்காது. வேலைகள எடுத்துப் போட்டுக்கிட்டு செய்ய ஆரம்பிச்சிடும். சுதா இருந்ததாத்தாம் கிராமம் கிராமமா இருக்குன்னு ஊருல சொல்லாத ஆளு பாக்கி இருக்காது.

            கொரோனா முதல் அலை பரவுனப்போ ஊரடங்குன்னு கிராமத்துக்கு வந்தது திரும்ப ரெண்டாவது அலை பரவுனப்போ ஊரடங்குன்னு கிராமத்துக்கு வந்துச்சு. நல்லாத்தாம் வந்துச்சு. அது வந்த நாள்லேந்து ஊரு சுடுகாடு ஓய்வில்லாம கெடந்துச்சு. அது வந்த அன்னைக்கு அன்னம்மா கெழவி தூக்கு மாட்டிக்கிட்டுச் செத்துப் போனதுல அதெ கொண்டுப் போயி எரிச்சாங்க.

            மறுநாளு படுத்த படுக்கையா கெடந்த தெட்சிணாமூர்த்தி தாத்தா சரளை இழுத்துக்கிட்டுப் போயிச் சேர்ந்தாரு. மூணாவது நாளு கொரோனா தடுப்பூசி போட்டுக்கிட்டு வந்த சோமு தாத்தா மாரடைப்பு வந்துப் போயிச் சேர்ந்தாரு. அடுத்தடுத்த நாள்களயும் அக்கம் பக்கத்துத் தெருவுலேயும் சாவுகளா இருந்துச்சு. சாவு முடிஞ்சு கருமாதிகளா இருந்துச்சு. எல்லா எடத்துலயும் சுதா இழுத்துப் போட்டுக்கிட்டு பாடை கட்டுறது, பந்தி பரிமாறதுன்னு வேலைகள செஞ்சுக்கிட்டு இருந்துச்சு. “என்னடா இத்து ஊரு சுடுகாடு இப்பிடி ஓயாம எரிஞ்சுக்கிட்டும் ஆளுகளப் பொதைச்சுக்கிட்டும் இருக்குதே!”ன்னே பொலம்பிக்கிட்டு இருந்துச்சு.

            சுதா ஊருக்கு வந்து பத்து நாளு இருக்கும். சுதாவுக்கு ஒடம்பெல்லாம் காய்ச்சல் அடிக்க ஆரம்பிச்சது. பசி எடுக்காம போனுச்சு. ரண்டே நாள்ல ஆளு அப்பிடியே துரும்பா எளைச்சாப்புல ஆனுச்சு. கோரோனாவா இருக்குமோங்ற சந்தேகம். சுதாவோட அப்பா வண்டியில பின்னாடி வெச்சு அழைச்சிட்டுப் போனாரு. ஊரு சனமே சுதா வண்டியில போறதெ வெளியில வந்து விசாரிக்காம வீட்டுக்குள்ள இருந்தே வேடிக்கைப் பாத்துச்சுங்க. சுதாவுக்குக் கோரோனா உறுதி ஆனுச்சு.

திருவாரூ சென்ட்ரல் யுனிவர்ச்சிட்டியில வெச்சிருக்கிறதா சொன்னாங்க. நாளு நாள்ல வீடு திரும்புனதெ திரும்ப மூச்சு விட முடியலன்னு திருவாரூ மெடிக்கல் காலேஜூக்குக் கொண்டு போறாப்புல ஆயிடுச்சு.

மூணாவது நாளு சுதா செத்துப் போயிட்டதாவும் பொணத்தை அங்கேயே அடக்கம் பண்ணிடணும்ன்னு சொல்லுறதாவும் சேதி வந்துச்சு. சுதாவோட அப்பா பெரசிடென்டுக்குப் போன போட்டு, பெரசிடென்டு யாரு யாருக்கோ போனப் போட்டு உள்ளூரு கொண்டாந்து சுடுகாட்டுல அடக்கம் பண்ணுறதா ஏற்பாடு ஆனுச்சு.

            சுதா பொணமா சுடுகாட்டுக்கு வந்துச்சு. வீட்டுக்குக் கொண்டு வர்ற அனுமதி இல்லன்னுட்டாங்க. சுதாவ பொட்டணமா கட்டியிருந்தாங்க. அதோட மொகத்தப் பாக்கக் கூட அனுமதி இல்ல. அடக்கத்துக்கு இருவது சனம் வரைக்கும் அனுமதி இருந்தும் கிராமத்துலேந்து ஒரு சனம் போகல.

சுதாவோட அம்மா, அப்பா, பெரசிடென்டு, பொக்லைன்ல இருந்த ரண்டு பேரு, அடக்கம் பண்ண கவச உடையோட வந்த நாலு பேரு அவ்வளவுதாம் சுடுகாட்டுல இருந்தவங்க. பொக்லைன் குழிய வெட்டுனதாவும் சுதாவ குழிக்குள்ள எறக்கி மண்ணள்ளிப் போட்டு பொக்லைன் மூடுனதாவும் கேள்வி.

மறு நாளு அந்தச் சுடுகாட்டுப் பக்கமா போனப்போ எட்டிப் பாத்தா சுதாவெ மண்ணு போட்டு மூடியிருந்த மேட்டுக்கு மேல ஒரு மாலை கூட இல்ல. ஊருக்கே உதவி பண்ணுன சுதா சாவுறப்போ ஊருல ஒத்த ஆளு இல்லாமப் போயிச் சேந்துடுச்சு.

ஊருக்கே சுதாவோட உதவி தேவைப்பட்டாப்புல கொரோனாவுக்கும் சுதாவோட தேவைப்பட்டிருக்கும் போல. அதாங் கொரோனா சுதாவெ அழைச்சிக்கிட்டுப் போயிடுச்சு. யாரு உதவி கேட்டாலுந்தாம் சுதா ஓடிப் போயி உதவி பண்ணுவாப்புல சுதா. அதாங் கொரோனா கூப்புட்டதும் வர்ற மாட்டேன்னு சொல்லாம ஓடிப் போயிட்டாப்புல போலருக்கு!

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...