கலா சித்திக்கு எப்படி வந்துச்சுக் கொரோனா?
மூர்த்தி சித்தப்பா தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருக்கக் கூடிய
ஆளு. ஊர்ல ஒரு வம்பு தும்புக்குப் போவாது. அநாவசியமா யாருகிட்டெயும் ஒத்த வார்த்தெ
பேசாது. அது பெத்த புள்ள ஊருவம்புகள வளைச்சிக்கிட்டு வந்தப்பவும் மல்லுக்கு நின்னதில்ல.
புள்ளையையும் கண்டிச்சதில்ல. பொண்ணுங்க மூணுக்கும் கலியாணத்தெ முடிச்சிட்டு முப்பத்தெட்டு
வயசுலத்தாம் மவனுக்குக் கலியாணத்தெ முடிச்சு வெச்சது. கலியாணம் முடிஞ்ச கையோட மவன்
பொண்டாட்டிய அழைச்சிக்கிட்டு மாமனாரு வீட்டுக்கு வீட்டோட மாப்புள்ளையா போனதுக்கும்
பெரிசா கவலைப்பட்டுக்கில்ல. அதெ பத்தி ஊருல ஒரு வார்த்தை முணுமுணுத்துக்கல.
மூர்த்தி சித்தப்பா வீட்டுல இப்போ அதுவும் கலா சித்தியும்ன்னு
ரெண்டு பேருதாம். விவசாய நெலம் ரெண்டரை ஏக்கரா இருக்கு. சர்க்கரை ஆலையில வேலை பாத்த
வகையில பென்ஷன் கொஞ்சம் வருது. அதெ வெச்சிக்கிட்டு வாழ்க்கைய ஓட்டிக்கிட்டு இருக்கு.
வேலை பார்த்த காலத்துலயே
மாடி வீட்டெ ஒண்ணு கட்டிடுச்சு. கொல்லெ பெருங் கொல்லை. செடி கொடிகளப் போட்டு வெச்சிருக்கு.
ஆடுக பத்து பதினைஞ்சுக்கு
மேல இருக்கும். அதெ மேய்ச்சலுக்கு ஓட்டிட்டுப் போயிட்டுக் கொண்டாந்து கட்டும்.
மாடுக மூணு இருக்கு. அதுகள
வெளியில அவுத்துட்டுப் போயி மேய்ச்சலுக்கு விடாது. மாட்டுக்குப் போடன்னு பெரிய வைக்கப்
போரைப் போட்டு வெச்சிருக்கு. வயக்காட்டப் பாக்கப் போறப்பெ டிவியெஸ் எக்செல் சூப்பர்ல
புல்லு கட்டோடத்தாம் திரும்பும். மாடு கறக்கிறப்போ அது ஒரு வருமானம் அதுக்கு. மித்தபடி
ரொம்ப கட்டு செட்டா வாழுற ஆளு மூர்த்தி சித்தப்பா. வார்த்தைய கூட அளந்துதாம் பேசும்.
அப்போ காசப் பத்திச் சொல்ல வேண்டியதில்ல.
கலா சித்திக்கு வீட்டெ விட்டு
ரெண்டடி அந்தாண்ட போறதுன்னா அலர்ஜி. பொலம்பித் தள்ளிடும். சரியான வீட்டுப் பூச்சி.
சமைச்சிப் போடுறதும் டிவிப் போட்டியில நாடவத்தெப் பாத்துட்டுக் கெடக்குறதுதாம் அதுக்கு
வேல. கொட்டகையில கட்டியிருக்குற மாட்டெ கூட அந்தாண்ட இந்தாண்ட அவுத்துக் கட்டாது. எல்லாம்
மூர்த்தி சித்தப்பாத்தாம் பாத்தாவணும். பால் கறவை காலத்துலயும் மூர்த்தி சித்தப்பாத்தாம்
போயிப் பால கறந்தாவணும். அதெ கறந்துக் கொண்டாந்து கொடுத்தா கலா சித்தி காப்பியப் போட்டாந்து
கொடுக்கும். இவ்வளவுதாம் தன்னோட வேலங்றதுல கலா சித்தி கறாரா டெர்ரரா இருக்கும். அதெத் தாண்டி வேல பாக்கச் சொன்னா புருஷன்னு கூட பாக்காது.
ருத்ர தாண்டவம் ஆடிடும்.
மூர்த்தி சித்தப்பாவ நாளுக்கு
ரெண்டு தடவெ அல்லது மூணு தடவெ தெருவுல பாத்துடலாம். வயலுக்கு வண்டியில போயிட்டு வர்றது,
ஆடுகள ஓட்டிட்டுப் போயிட்டு வர்றதுன்னு கண்ணுல பட்டுடும். கலா சித்தியப் பாக்கணும்ன்னா
வீட்டுக்குத்தாம் போயாவணும். அப்படி அந்தாண்ட இந்தாண்ட நவுராத கலா சித்திக்குக் கொரானான்னா
எப்படி இருக்கும்?
“இதென்னடா நோயீ? ஊரு சுத்துற
ஆம்பளப் பயலுக்கு வர்ற மாட்டேங்குது. வீடடங்கிக் கெடக்குற பொம்மனாட்டிக்கு வருது! அந்தக்
கிருமியெப் பாதேன்னா வெச்சுக்கோ செருப்பாலயே அடிச்சிச் சவட்டுவேம் பாத்துக்கோ!”ன்னு
சேதியக் கேள்விப்பட்டு ராசு தாத்தா கோவப்பட்டுச்சு.
“நாம் மட்டும் ச்சும்மா இருப்பேன்னு
நெனைச்சீங்களா? கண்ணுல மட்டும் பட்டுச்சு அதெ வௌக்கமாத்தாலேயே அடிச்சி கரும்புள்ளி
செம்புள்ளி குத்தி கழுதெ மேல ஏத்தி வுட்டு அவமானப்படுத்தித்தாம் அனுப்புவேம்!”ன்னுச்சு
அம்சு ஆத்தா என்னவோ கொரோனா கிருமி இதுக கண்ணுக்கு முன்னாடி வந்து நின்னு நான்தாம் கொரோனாங்ற
மாதிரிக்குக் கண்ணுல அம்புட்டுப்புடும்ங்றாப்புல.
மூர்த்தி சித்தப்பா போர்வெயெப்
போத்திகிட்டுக் காய்ச்சல்ல இருந்த கலா சித்தியெ டிவியெஸ் எக்செல்ல வெச்செ திருவாரூ
மெடிக்கல் காலேஜூக்கு அழைச்சிட்டுப் போனுச்சு.
டெஸ்ட் பண்ணிப் பாத்துட்டு ரண்டே நாள்ல கொரோனான்னு உறுதி பண்ணிப்புட்டாங்க. கலா சித்திய
மெடிக்கல் காலேஜூல சேத்துப்புட்டு இது மட்டும் ஆடு, மாடுகளெப் பாக்கணும்ன்னு வந்துட்டுப்
போயிட்டும் கெடந்துச்சு. காலம் கடந்த காலத்துல புள்ள, பொண்ணு தொணையில்லாம இப்படிக்
கெடக்கணும்ன்னு இருக்கேன்னு ஊருல இருந்த சனம் பூரா மூர்த்தி சித்தப்பாவுக்காக பச்சாதாபம்
பட்டுக்கிடுச்சுங்க.
மூர்த்தி சித்தப்பாவுக்கும் கலா சித்திக்கும் நல்ல
நேரந்தாம்.
ஒரு வாரத்துல மருந்து மாத்திரைகளெ கொடுத்து வீட்டுல
வெச்சுப் பாத்துக்கிடுங்கன்னு அனுப்பிச்சிட்டாங்க. வீட்டுத் தனிமையில இருக்கணும்ன்னு
சொல்லிப்புட்டதால மூர்த்தி சித்தப்பா யாருகிட்டெயும் பேசுறதில்ல. வெளிகேட்டை உள்ளுக்குள்ள
பூட்டெ போட்டுக்கிட்டு வீட்டுக்குள்ளயே மூர்த்தி சித்தப்பாவும் கலா சித்தியுமா இருந்துச்சுங்க.
கலா சித்தி படுத்தே கெடந்துச்சு. சமையல்லேந்து சாமாஞ்
செட்டுகள கழுவுறது வரைக்கும் மூர்த்தி சித்தப்பாத்தாம். ஏதோ அதால முடிஞ்சதெ அது சமைச்சுப்
போட்டா அதுல ஒரைப்பு இல்ல, உப்பு இல்லன்னு கலா சித்தி தட்டோட தூக்கி வெளியில வீசுனுச்சு.
“பேதியில போறவளெ! நேத்திக்கு ஒரைப்பு பத்தலன்னு
மௌகாய அள்ளிப் போட்டதுல ஒரைப்பு தாங்காம நமக்குப் பேதியா போவுது. இவளுக்கு ஒரைப்பு
பத்தலையாம்ல. ஒமக்கு எதுக்குடி ஒரைப்பில்லாம உப்பில்லாம சமைச்சுப் போடுறேம்ன்னு நமக்குக்
கெட்டப் பேரு. மொளவா தூளு டப்பாவும் உப்பு சாடியும் இருக்கு. அதையே எடுத்துத் தின்னுட்டுக்
கெட.”ன்னு மூர்த்தி சித்தப்பா சத்தம் போட்டுச்சு. அப்படியெல்லாம் வார்த்தைய வுடுற ஆளு
கெடையாது அது. அதோட நெலமெ சத்தம் போடுறாப்புல ஆயிடுச்சு.
“எத்தனெ வருஷம் ருசியா சமைச்சிப் போட்டிருப்பேம்.
இப்போ ஒடம்புக்கு முடியாம கெடக்குறவங்களுக்கு நாலு நாளைக்கு ருசியா சமைச்சிப் போடத்
தெரியுதா? பேச்சு மட்டும் பெரிசா வேண்டிக் கெடக்கு. மௌவா தூளையும் உப்பையும் அள்ளித்
திங்கணுமாம்ல. இதுக்குத்தாம் எங்கப்பனும் எங்காயியும் ஒமக்குக் கட்டிக் கொடுத்தாங்களோ?
ஒழுங்கா சமைச்சிப் போடுறதுன்னா சொல்லு. இல்லன்னா எங்கண்ணேம் வீடு, ஏந் தம்பி வூடு தூரத்துலயா
இருக்கு. அஞ்சு கெராமம் தள்ளித்தான் இருக்கு. இப்பப் போனாலும் ராணி மாதிரி வெச்சித்
தாங்குவானுங்க. ஒம்மட மாதிரி சொம்பட போல அலுத்துக்க மாட்டாங்க.”ன்னு சலம்புனுச்சு கலா
சித்தி.
“ஆமாம்டி ஒமக்கு வந்தது பத்தாதுன்னு ஓம் அண்ணன்,
தம்பி வீட்டுக்குல்லாம் போயி நோயெ பரப்பி வுட்டுப்புட்டு வா! பேசுறா பாரு பேச்சு. கொரோனா
கொழுப்பு வெச்சிப் போயிடுச்சிடி ஒமக்கு!”ன்னு சரிக்குச் சரியா நின்னு மூர்த்தி சித்தப்பாவும்
பேசுனுச்சு. அது இப்படியில்லாம் பதிலுக்குப் பதிலு பேசுற ஆளா மூர்த்தி சித்தப்பா? சமைச்சுப்
போட்ட சாப்பாட்டு பிடிக்கலன்னு கலா சித்தி பண்ணுன லந்துல நொந்துப் போயிப் பேச ஆரம்பிச்சிட்டு.
ஊருல இருக்குறது தெரியாம இருக்குற ஆளுங்களா இப்பிடி
தெருவுல போறவங்களுக்குக் கேக்குற அளவுக்கு சத்தம் போடுதுன்னு சனங்க ஒவ்வொண்ணும் அதெப்
பத்திப் பேசிக்கிட்டுக் கெடந்துச்சுங்க.
போன வாரத்துல ஒரு நாளு அங்கன்வாடியில வேல பாக்குறவங்க
வீடு வீடா வந்து துப்பாக்கி மாதிரி ஒண்ணுத்தெ வெச்சிக்கிட்டு ஒடம்போட வெப்பநிலைய சோதனெ
பண்ணாங்க. கிளிப்பு மாதிரி ஒண்ணுத்தெ வெரல்ல வெச்சி பிடிச்சிக்கிட்டு பிராண வாயு எம்மாம்
இருக்குன்னு பாத்தாங்க. வீடு வீடா பாத்துட்டு வந்தவங்க மூர்த்தி சித்தப்பா வீட்டுக்கும்
போனாங்க. மூர்த்தி சித்தப்பா வீடுதாம் வெளிகேட்டு உள்ளார பூட்டியிருக்கே. குரலு கொடுத்துப்
பாத்தாங்க.
“என்னா சங்கதி?”ன்னு கேட்டுக்குப் பக்கத்துல வர்றாம
திண்ணையில நின்னுகிட்டே சத்தம் கொடுத்துச்சு மூர்த்தி சித்தப்பா.
“கொரோனா செக்கிங். டெம்ப்ரச்சர், ஆக்சிசன் பாக்கணும்.”ன்னாங்க
அங்கன்வாடி பணியாளுங்க.
“எங்களுக்குக் கொரோனா கன்பார்ம் ஆயிடுச்சு. நீங்கப்
போயிட்டு வர்லாம்!”ன்னு சொல்லிட்டு அவுங்களோட பதிலெ எதிர்பார்க்காம வீட்டுக்குள்ள போயிடுச்சு
மூர்த்தி சித்தப்பா.
“இந்தச் சாப்பாட்ட மனுஷி சாப்புடுவளா?”ங்ற சத்தத்தோட
சோத்துப் பருக்கையோட திண்ணைக்கு வெளியில வந்துச்சு வீட்டுக்குள்ளார இருந்து கலா சித்தி
வீசி எறிஞ்ச தட்டு. அவ்வளவுதாம் அங்கன்வாடி பணியாளுங்க அடுத்த வீட்டப் பாப்போம்ன்னு
விருட்டுன்னு நடைய கட்ட ஆரம்பிச்சிட்டாங்க.
*****
No comments:
Post a Comment