11 Jun 2021

கொரோனா வைத்திய அண்ணாச்சி!

கொரோனா வைத்திய அண்ணாச்சி!

            நல்லா ஓங்கு தாங்கலான உருவம் கிட்டு அண்ணாச்சிக்கு. டவுன்ல மொத்த விலைக கடையிலேந்து பொடவெ, பாவாடெ, நைட்டி, வேட்டி, சட்டெ, கைலி, பனியன், ஜட்டி, துண்டுன்னு துணி வகையறாவ எடுத்தாந்து சில்லரை யேவாரத்துக்கு விக்குறதுதாம் கிட்டு அண்ணாச்சியோடு வேல.

கிராமத்துல அவசரத்துக்கு ஒரு துண்டு, துணி எடுக்கணும்ன்னா கிட்டு அண்ணாச்சி வூட்டுக்குப் போறது. கிட்டு அண்ணாச்சி யேவாரத்துக்குப் போயிருந்தாலும் அதோட பொண்டாட்டி சரளா அக்கா சமைச்சுக்கிட்டு இருக்குற வேலையப் போட்டுட்டு ஓடியாந்து வேண்டியப்பட்ட துணி மணிகளக் காட்டும். சில சமயங்கள்ல ரொம்ப சல்லிசு ரேட்டுக்குப் பொடவெ இருக்குன்னு தெரிஞ்சா போதும் தெரு சனங்க நான் நீயின்னு போட்டிப் போட்டுட்டு வாங்குறதுல இருபது முப்பது பொடவைகள சரளா அக்கா வித்துத் தள்ளிடும்.

இது தவிர சரளா அக்காக்கிட்டெ துணி மணிகள தவணை மொறையிலயும் வாங்கிக்கிடலாம். ஐநூத்து ரூவா போடவயெ வாங்கிட்டு மாசா மாசம் நூறு நூறு ரூவாயா கொடுத்துக் கழிச்சிக்கிடலாம். அது ஒரு சௌகரியம்.

கிட்டு அண்ணாச்சி அலைஞ்சு யேவாரம் பாக்குறதும், சரளா அக்கா வீடு தேடி வர்ற உள்ளூர் சனங்ககிட்டெ வூட்டுல வெச்சு யேவாரம் பாக்குறதுமா ரெண்டு பேத்துக்கும் பொழைப்பு ஓடிட்டு இருந்துச்சு. ஆண்டாண்டு காலமா யேவாரம் பாத்தும் சொந்தமா ஒரு கடெ வெச்ச பாடில்ல. கலியாணம் ஆயி ரெண்டு பேத்துக்கும் பதினைஞ்சு இருவது வருஷத்துக்கு மேல இருக்கும். புள்ள குட்டியும் இல்ல.

“புள்ள குட்டின்னு ஒண்ணு இருந்தா நெறைய சம்பாதிக்கணும், கடைய ஆரம்பிக்கணும், யேவாரத்தெ பெருக்கணும்ங்ற எண்ணம் இருக்கும். ரண்டு பேத்துக்கு என்னத்தெ சம்பாதிச்சு, என்னத்தெ சொத்துச் சேத்துன்னு அது பாட்டுக்குக் கெடக்குதுங்க போலருக்கு!”ன்னு ஊருல கிட்டு அண்ணாச்சி பத்தியும் சரளா அக்கா பத்தியும் பேச்சு உண்டு. அதெ பத்தியெல்லாம் ரெண்டு பேத்துமே அலட்டிக்கிறது கெடையாது. அவுங்க உண்டு, யேவாரத்தெப் பாக்குறது, மிஞ்சுன நேரத்துல சோத்த ஆக்கிச் சமைச்சுச் சாப்புட்டு தூங்குறதுன்னு அவுங்க பொழைப்பு சந்தோஷமாத்தாம் ஓடிக்கிட்டு இருந்துச்சு.

இந்தச் சந்தோஷமெல்லாம் கொரோனா ஊரடங்கு வர்ற வரைக்கும். ஊரடங்குப் போட்டதுக்குப் பெறவு கையில இருந்த துணி மணிகளெ வூடு தேடி வர்ற ஆளுங்களுக்கு வித்துட்டுக் கெடைச்ச காசுல கொஞ்ச நாளைக்குப் பாரம் தெரியாம நாளுங்க ஓடிட்டு இருந்துச்சு. அதுக்குப் பெறவு மொதலுக்கு வெச்சிருந்த காசுல நாளுங்கள ஓட்டிக்கிட்டு இருந்துச்சுங்க.

“இப்படியேவா போயிடப் போவுது நாளு?”ன்னு நம்பிக்கையா சரளா அக்கா பேசிட்டு இருந்தப்பத்தாம் கிட்டு அண்ணாச்சிக்கு ஒடம்ப அடுப்புல போட்டு எடுத்தாப்புல கொதிக்க ஆரம்பிச்சது. ரெண்டு மூணு நாளா கொதிப்பு அடங்கல. ஒடம்புல ஒரு பாத்திரத்த வெச்சு தண்ணிய ஊத்தி அரிசிய அள்ளிப் போட்டா சோறா வெந்துடும்ங்ற அளவுக்குக் காய்ச்சலு.

சரளா அக்கா அக்கம் பக்கத்து வீடுகள்ல இருந்த காய்ச்சல் மாத்திரை, ஒடம்பு வலி மாத்திரைய வாங்கிக் கொடுத்துப் பாத்துச்சு. காய்ச்சல் நிக்குறாப்புல இல்ல. கிட்டு அண்ணாச்சி கருப்புக் கலரு கம்பளிப் போர்வையப் போத்திக்கிட்டு மொக மூடிக் கொள்ளைக்காரனெப் போல காத்தாலயும் சாயுங்காலத்துலயும் தெருவுல அங்கயும் இங்கயும் அலைஞ்சுக்கிட்டுக் கெடந்துச்சு.

“காய்ச்சல்ங்றாம். ஓரிடத்துல அடங்கி ஒடங்கி உக்கார்ன்னா பாரு?”ன்னு சனங்க ஆளாளுக்கு சலம்பித் தள்ளுன்னுச்சு. அடிக்கிற வெக்கையில் அவனவனும் போட்டுட்டு இருந்த பனியனெ கழட்டிட்டு இடுப்புல ஒரு கைலியோட மட்டும் இருந்தவங்களுக்கு கிட்டு அண்ணாச்சி ஒடம்பு முழுக்க கம்பளிப் போர்வையப் போட்டுட்டு அலைஞ்சது திகிலா இருந்துச்சு.

காய்ச்சல்லேயே ஒரு வார காலம் ஓடுனுச்சு. அதுக்குள்ள ஓங்கு தாங்கலா இருந்த கிட்டு அண்ணாச்சி ஒட்டடெக் குச்சியப் போல ஆயிடுச்சு. அடுத்து வந்ததுதாங் வெனெ. அது பாட்டுக்கு இரும ஆரம்பிச்சது. ஊருக்குள்ள சந்தேகம் பரவ ஆரம்பிச்சது. கிட்டுவுக்கு வந்திருக்கிறது கொரோனான்னு ஆளாளுக்குத் தம்பட்டம் அடிக்க ஆரம்பிச்சாங்க.

இருமல்ன்னா இருமல் ராவும் பகலுமா அது பாட்டுக்கு எப்பிடித்தாம் மிஷினு மாதிரி இருமுதுன்னு அது ஒரு ஒலக அதிசயந்தாம். கிட்டு அண்ணாச்சி வூட்டுலேந்து எந்நேரத்துக்கும் லொக் லொக்குன்னு அக்கு அக்குன்னு வெத வெதமா இருமுறு சத்தமா கேட்டுக்கிட்டு இருந்துச்சு. கிட்டு அண்ணாச்சி கம்பளிப் போர்வையெ தூக்கி அந்தாண்டப் போட்டுட்டு இப்போ இருமுற வேலைய மட்டும் பாத்துக்கிட்டு இருந்துச்சு. ஆகாரமும் பெரிசா உள்ள போகல. சரளா அக்கா நெதமும் கஞ்சித் தண்ணியத்தாம் வெச்சிக் கொடுத்துக்கிட்டு இருந்ததா சொன்னுச்சு.

நாளாவ நாளாவ கிட்டு அண்ணாச்சியோட இருமலு எங்க தெருவத் தாண்டியும் நாலு தெருவுக்குக் கேக்க ஆரம்பிச்சது. “கன்பார்ம் கொரோனத்தாம்!”ன்னு முடிவெடுத்த சனங்க மொத மொதலா தெருவுக்குள்ள முகக்கவசம் போட்டு நடக்க ஆரம்பிச்சதுங்க. அதுக்கு மின்னாடியெல்லாம் மெயின் ரோட்ட தாண்டி வண்டியில போறதுன்னா மட்டும்தாம் முகக்கவசம். உள்ளூருக்குள்ள போறதுக்கு, வடவாதியில சாமான் வாங்கப் போறதுக்குல்லாம் முகக்கவசம் போடுறது கெடையாது.

“எத்தனெ நாளுத்தாம் கிட்டுவெ இப்பிடியே வெச்சிக்கிறது. ஆஸ்பத்திரிக்குப் போயித் தொலைஞ்சான்னாவது தேவல!”ன்னு ஊருப் பெரிசுங்க பேச ஆரம்பிச்சதுங்க. யாருக்கும் நெருங்கிப் போயிச் சொல்ல தெகிரியமும் இல்ல.

சாயுங்காலம் ஆன்னாக்கா ப்ளாஸ்டிக் நாற்காலிய தெரு ஓரத்துலப் போட்டுக்கிட்டு கிட்டு அண்ணாச்சி இரும ஆரம்பிச்சதுல சனங்க தெரு பக்கம் நடமாட்டத்தெ கொறைச்சிடுச்சுங்க.

அக்கம் பக்கத்துல புள்ளயெ குட்டிகளெ வெச்சிக்கிட்டு இந்த செருமத்தெ எத்தனெ நாளு சகிக்கிச்சிக்கிறதுன்னு ரேணு அக்காத்தாம் தெகிரியமா ஆம்பளெ கணக்கா முகக்கவசத்தெ மாட்டிக்கிட்டு கிட்டு அண்ணாச்சியெப் பாத்து, “யண்ணே! ஒங்களுக்கு வந்திருக்கிறது கொரோனா மாதிரிக்குத் தெரியுது. திருவாரூ மெடிக்கல் காலேஜ்ல போனீயன்னா நாளு நாள்ல கொணம் பண்ணி வுட்டுப்புடுவாங்க. நம்ம சுபா அத்தாச்சியெல்லாம் கொணமாயி வாரலைய்யா? போயிட்டு வாங்கண்ணே. ஒங்க மூலமா தெரு முழுக்க பரவுனா தகரம் போட்டுத் தெருவ அடைச்சிப்புடுவானுங்க!”ன்னுச்சு.

கிட்டு அண்ணாச்சிக்குக் கோவம் வந்துடுச்சு. “ஒமக்குத் தெரியுமா? எமக்குக் கொரோனான்னு ஒமக்குத் தெரியுமா? நீயி டெஸ்ட் எடுத்துப் பாத்தியாக்கும்? வேர்வ சளிப் பிடிச்சு காய்ச்சல் கண்டு வறட்டு இருமலா இருமிக்கிட்டு இருக்கேம். இதுக்குப் போயி ஆஸ்ப்பிட்டல் போயி உக்காந்தன்னா எங் குடும்பத்துக்கு யாரு தொணெ இருக்குறது? அப்பிடியே கொரோனான்னாலும் அதெ கொணம் பண்ணிக்க நமக்குத் தெரியும். நீயி ஒம் வேலயப் பாத்துட்டுப் போ. எலே எடுபட்ட சுபாசு போட்டச்சியாட்டம் வூட்டுல உக்காந்துக்கிட்டு ஒம்மட வூட்டுப் போட்டச்சியெ விட்டு பேச அனுப்பியிருக்கியா?”ன்னு சத்தம் போட்டதுல ரேணு அக்கா புருஷன் வீட்டை விட்டு வெளியில வந்துச்சு.

“ஏம்டி ஒமக்குத் தேவையில்லாத வேல? ஊருல யாருக்கும் இல்லாத அக்கறெ ஒமக்கு? நீயி ஏம் போயி சொல்றே? ஒரு போனெ போட்டுச் சொன்னா ஆம்புலன்ஸ்ல வந்து இந்தப் படுபாவியத் தூக்கிட்டுப் போறாம்!”ன்னு சொல்லிப் போன போட பாத்துச்சு சுபாசு அண்ணன்.

“போடுறா பாப்பேம் போன? ஆம்புலன்ஸ் வாரதுக்குள்ள ஊருல இருக்குற அத்தனெ பேரு வூட்டுக்கும் போயி கட்டிப்பிடிச்சு ஊரையே கொரானாவ்வா ஆக்கிப் புடுவேம் பாத்துக்கோ!”ன்னு சொன்னுச்சுப் பாருங்க கிட்டு அண்ணாச்சி, சுபாசு அண்ணன் கப்சிப் ஆயிடுச்சு.

“வீட்டுக்குள்ள வந்துத் தொலைடி. இவ்வெ ஒருத்தித் தேவையில்லாம ஊரு வம்ப வெலைக்கு வாங்கிட்டு வந்துக்கிட்டு. எவ்வேம் எக்கேடு கேட்டுப் போனா நமக்கென்னா? கொரோனாவுல சாவட்டும் கிட்டான். அப்பத்தாம் சுடுகாட்டுலப் போயி அடங்குவாம்.”ன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள வேகமாப் போயிக் கதவெ படாருன்னு அடிச்சுச் சாத்துனுச்சு சுபாசு அண்ணன்.

“வெளியில இருக்குற மனுஷி வீட்டுக்குள்ள வார்றது எப்படின்னு யோசிக்காம கதவெ அடிச்சுச் சாத்துனா எப்பிடி?”ன்னு சத்தத்தெ வெச்சிக்கிட்டெ வீட்டை நோக்கி ஓடுனுச்சு ரேணு அக்கா.

சுபாசு அண்ணனெப் பாத்து தெகிரியமா சத்தம் விட்டாலும் கிட்டு அண்ணாச்சிக்குப் பயம் வந்திருக்கணும், தனக்கு வந்திருக்கிறது கொரோனாதாங்ற மாதிரிக்கு. மறுநாள்லேந்து மாடியில ஏறி கொளுத்துற வெயில்ல படுத்துக் கெடக்க ஆரம்பிச்சது. சரளா அக்கா மாடியில ஏறி, “உங்களுக்கு என்னா பைத்தியமா? உள்ளார வந்து படுங்க!”ன்னுச்சு.

“ஒமக்கு ஒண்ணும் தெரியாது போடி. வந்திருக்கிறது கொரோனா மாதிரிதாம் இருக்குது. அதெ வெயில்ல படுத்தெ கொணம் பண்ணிக் காட்டுறேம்!”ன்னு டாக்டர்ரப் போலப் பேசுனுச்சு கிட்டு அண்ணாச்சி. சரளா அக்கா தலையில அடிச்சிக்கிட்டு மாடிய விட்டு எறங்கி வந்துச்சு.

மாடியிலேந்து இருமுற சத்தம் ஒரு வார காலத்துக்குக் கேட்டுக்கிட்டுஇருந்துச்சு. கிட்டு அண்ணாச்சிக்குச் சாப்பாடு, படுக்கை, தூக்கம் எல்லாம் மொட்டை மாடியிலத்தாம். “பொழைச்சா மாடியிலேந்து எறங்கி வருவேம். இல்ல இப்பிடியே மேல போயிடுறேம்!”ன்னு கிட்டு அண்ணாச்சி சொன்னதெ கேட்டு சரளா அக்கா மூசு மூசுன்னு அழுதுகிட்டெ இருந்துச்சு. அதெ நெருங்கி ஆறுதலெச் சொல்லவும் சனங்க யாரும் போகல.

ஆனா வாழ்க்கெங்றது புரிஞ்சிக்க முடியாத திருப்பங்கள கொண்டது இல்லீங்களா?

இப்போ பாத்தீங்கன்னா கிட்டு அண்ணாச்சி மாடிய விட்டு எறங்கி வந்திடுச்சு. ஆளுத்தாம் பாக்க எளைச்சாப்புல இருக்கு. காய்ஞ்சுப் போயி பொறுக்கா வெடிச்சிக் கெடக்குற கொளத்துக்குள்ள வெடலைப் பசங்களோட சேந்துகிட்டுக் கிரிக்கெட் வெளையாடிக்கிட்டுக் கெடக்குது எங்க திட்டை கிராமத்துல மொத மொதலா தனக்குத் தானே கொரோனாவுக்கு வைத்தியம் பாத்துக் கொணமாயிக்கிட்ட கிட்டு அண்ணாச்சி.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...