நான் ஏன் கவிஞன் ஆனேன்?
சமீப நாட்களாக
ஏன் கவிதையாய் எழுதித் தள்ளுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். அதற்குப் பிரத்யேகமான காரணம்
என்று எதுவுமில்லை. எழுதுவது எளிமையாக இருக்கிறது. அதுவும் தவறுதான். தட்டச்சு செய்வது
எளியைமாக இருக்கிறது என்று சொல்வதுதான் சரி. எழுதுகோல் பிடித்துக் கவிதை எழுதி நாளாகி
விட்டது.
கட்டுரை அல்லது
சிறுகதை எழுதுவதன் அசௌகரியம் என்னவென்றால் ஒரு வரி எழுதுவதென்றால் முழுமையாக ஒரு வரியையும்
எழுதியாக வேண்டும். கவிதையில் இந்த அசௌகரியங்கள் இல்லை. ஒரு வரியில் பாதி எழுதினாலும்
அது கவிதையின் வரிதான். கால்வாசி எழுதினாலும் அது கவிதையின் வரிதான். ஏன் ஒரு வார்த்தை
எழுதினாலும் அந்த ஒற்றை வார்த்தையும் கவிதையின் வரிதான்.
புதுக்கவிதை
நிறைய சௌகரியங்களைச் செய்து கொடுத்து விட்டதால் கவிதை எழுத வேண்டும் என்று நினைத்து
விட்டால் தோன்றும் சந்தோஷம் தனிதான். வெண்பா, ஆசிரியப்பா, விருத்தம் என்றால் சிரமம்தான்.
ஒவ்வொரு அடிக்கும் இத்தனை சீர்கள் என்ற கணக்கு இருக்கிறது. வார்த்தைகள் கணக்கில் சொன்னால்
ஒரு வரிக்கு நான்காவது தேவைப்படும்.
ஒரு தவம்
போல் கவிதை எழுதும் கவிஞர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். நான் தினந்தோறும் யோகா
செய்வதால் கவிதையைத் தவம் போல் செய்தெல்லாம் எழுதுவதில்லை. தவம் போல் செய்ய யோகாவில்
ஆசனம், பிரணாயாமம், தியானம் எல்லாம் இருக்கிறது. கவிதையில் செய்ய என்ன இருக்கிறது?
கொஞ்சம் சோம்பலாய் உட்கார்ந்து உடம்பை நெட்டி முறித்தால் கோட்டாவியாய்க் கவிதையின்
ஒரு வரி வந்து விடுகிறது. கொஞ்சம் தூங்கி எழுந்தால் கனவில் நான்கைந்து வரிகள் தயாராகி
விடுகின்றன. மிச்ச சொச்ச வரிகளுக்கு அங்கே இங்கே பார்த்து பூனை ஓடுகிறது, நாய் குரைக்கிறது,
வெயில் மண்டையைப் பிளக்கிறது, நான் என்ன செய்ய என்று முடித்தால் கவிதை சுடச்சுட தயாராகி
விடுகிறது.
முன்பு போலெல்லாம்
பத்திரிகைகளில் உங்கள் கவிதைகளைப் பார்க்க முடியவில்லை என்ற விமர்சனத்தை என்னைப் பார்க்கும்
பலர் முன் வைக்கிறார்கள். என்ன செய்வது?
பத்திரிகைகளுக்கு
அனுப்பி அது எப்போது பிரசுரம் ஆகுமென்று தேவுடு காக்க வேண்டியதாக இருக்கிறது. எப்போதாவது
அத்திப் பூத்தாற் போல் அது ஒரு துணுக்கைப் போல ஓர் ஓரத்தில் வந்திருப்பதாகத் தகவல்
தெரியும் போது அந்தப் பத்திரிகையை வாங்க ஒரு லிட்டர் பெட்ரோலைக் குடிகாரன் வாயில் ஊற்றுவது
போல வண்டிக்கு ஊற்றி நகரத்துக்கு ஓட வேண்டியதாக இருக்கிறது. நகரத்திற்குப் போய் சேர்வதற்குள்
அந்தப் பத்திரிகையின் பத்துப் பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. அவசரமாக வருகிறது
என்று ஓடியவனுக்குக் கழிவறையின் கதவு மூடப்பட்டிருக்கும் நிலைதான்.
வெளிவந்த
கவிதைக்கு இருபதோ, முப்பதோ நான்கைந்து மாதம் கழித்து அனுப்புகிறார்கள். அது ஓட்டலில்
ஒருவேளை மத்தியானச் சாப்பாட்டுக்குக் கூட பத்தாது. பிள்ளைகள் கிண்டர்ஜாய் கேட்டு வாங்கிக்
கொடுக்கவும் அந்தப் பணம் போதுமானதாக இருப்பதில்லை.
Blog பத்திரிகைகளைப்
போலில்லை. எவ்வளவு வேண்டுமானாலும் பிரசுரிக்க முடிகிறது. சின்ன கவிதைகள், பெரிய கவிதைகள்
என்ற எந்தப் பிரச்சனையும் இல்லை. நூறு பக்கத்தில் கவிதை எழுதினாலும் ஏன்டா இவ்வளவு
பெரிதாக எழுதினாய் என்று எந்த ஆட்சேபனையும் செய்யாமல் பிரசுரிக்க அனுமதிக்கிறது.
மற்றபடி கவிதை
எழுதுவதைப் பற்றி நிறைய பேர் ஆலோசனை கேட்கிறார்கள். நேரடியாக அது பற்றிக் கேட்பவர்களுக்கு
நான் எதுவும் சொல்வதில்லை. Blog இன் Comment Box இல் கேட்டால் சொல்லலாம் என்று இருக்கிறேன்.
எனக்குப் பேச்சு எப்போதும் ஒத்து வராது. பேசினால் உளறல் என்பார்கள். அதையே எழுதிக்
கொட்டலாம். கவிதை என்று சிலாகிப்பார்கள். இதுதான் நான் கவிதை எழுதுவதன் சூட்சமம் என்று
சொன்னால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். மனிதனுக்கு எப்போதும் ஆழ்மனதின் உளறல்கள் உண்டு.
அதைப் பலபேர் கண்டு கொள்வதில்லை. அதை எழுதிப் பார்ப்பதுமில்லை. நான் பொழுது போகாமல்
அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். நான் ஏன் கவிஞன் ஆனேன் என்பதின் சுருக்கமான
வரலாறு இதுதான். மேலதிக விவரம் வேண்டுவோர் கேள்விகளைக் கருத்துப்பெட்டியில் பதிவிடலாம்.
*****
No comments:
Post a Comment