கிணற்றைத் தாண்டி முடிப்போம்!
செய்யு - 712
திருச்சி, தஞ்சாவூரு, கும்பகோணம்ன்னு
நின்னா அங்கல்லாம் கொண்டுப் போயி வெச்சி ஒரு பொம்பளப் புள்ளைக்கி எப்பிடி பாதுகாப்பக்
கொடுக்குறதுங்ற யோசனெயில ஒண்ணும் சொல்ல முடியாம உக்காந்திருந்தாரு சுப்பு வாத்தியாரு
வாயில்ல வெச்ச சோத்த மெல்லுறதா துப்புறதாங்றது புரியாததெப் போல. கலியாணம் ஆவாத பொம்பளப்
புள்ளன்னாலும் ஒரு ஆஸ்டல்ல சேத்து வுட்டு படிக்குதுன்னு சொல்லிடலாம், கலியாணம் ஆயி
வாழ முடியாம வந்து நிக்குற பொண்ண ஆஸ்டல்ல படிக்க வுடுறேன்னு வுட்டு அத்து நாளைக்கு
ஒரு சொல்லுக்கு எடமாயிடக் கூடாதுங்ற தவிப்பு சுப்பு வாத்தியாரு மனசு முழுக்க நெறைஞ்சிருந்துச்சு.
ஏற்கனவே கும்பகோணத்துக்குப் பக்கத்துல கோவில்பெருமாள்ல நாது மாமா வூட்டுல வுட்டு
உண்டானப் பெரச்சனையால மனசு ரணம் ஆயிருந்தது அவருக்கு மனசுல இன்னும் ஆறாமத்தாம் இருந்துச்சு.
பட்டப் புண்ணுலயே பட்டுக்கிட்டு இருந்தா அத்து குழிப்புண்ணால்லா ஆயிடுமேங்ற பயம் அவருக்கு.
இப்பிடி நெனைச்சா தஞ்சாவூரு, கும்பகோணம்ன்னு
நின்னா அதெ எப்பிடி சமாளிக்கிறதுங்ற சிந்தனையில ரொம்ப பெலமா ஆழ்ந்துப் போனாரு அவரு.
இதெ வேணாம்ன்னும் தடுக்க முடியாம, வேணும்ன்னும் சொல்லி நெருங்கவும் முடியாத அலமலப்பு
மனசு பூரா இருந்துச்சு. அதெ வுடவும் முக்கியமா நாம்ம இவ்ளோ பக்க பலமா இருக்குறப்பவே
பாலாமணி கண்ணுல வெரல வுட்டு ஆட்டுறாம். இதுல பக்கத்துல வேற யில்லாமப் போயிட்டா அந்த
நெலமைய எப்பிடிச் சமாளிக்கிறதுங்றது அவருக்குப் பெரிய மண்டெ கொடைச்சலா இருந்துச்சு.
பாலாமணியோட சேந்துகிட்டு இனுமே செருப்படி பட்ட வக்கீல் கங்காதரனும் பெரச்சனெ கொடுக்க
ஆரம்பிச்சிடுவாம் அடிபட்ட பாம்பு கடிக்காம வுடாதுங்றாப்புல. இப்பிடி ஆபத்துப் புரியாம
மகெ சிந்திக்குறாங்ற கடுப்பு வேற அவரா பாடா படுத்துனுச்சு நெருப்புல சுட்டதெ எடுத்து
எண்ணெயிலயும் போட்டுக் கொதிக்க வுடுறாப்புல.
"எப்பிடிப் பாத்தாலும் தஞ்சாவூருங்றது
இனுமே நமக்குப் பாதுகாப்பு யில்லாத ஊரு. லாலு வாத்தியும் அஞ்ஞத்தாம் இருக்காம். அவ்வேம்
ஒருத்தம் பத்தாதுன்னு வக்கீல் கங்காதரனும் அஞ்ஞத்தாம் இருக்காம். ஒரு ஆபத்து பத்தாதுன்னு
ரண்டு ஆபத்தா ஆயிடுச்சு. இஞ்ஞல்லாம் நாம்மல்லாம் இருக்குறப்பவே போலீசெ வுட்டு இப்பிடில்லாம்
பண்ணுறவேம், தஞ்சாவூர்ல இருக்கேங்ற சங்கதித் தெரிஞ்சா போதும் நம்மட கொடல உருவி வெளியிலப்
போட்டுப்புடுவாம். எதிரியோட கோட்டைக்குள்ள நாமளே வலியப் போயி மாட்டிக்கிறது போலத்தாம்
தஞ்சாவூரு போறதுங்றது. அதுக்குக் கும்பகோணம் பரவால்லன்னா அஞ்ங யார்ர பாக்குறது? யாரு
தொணையோட இருக்குறதுங்றதுன்னு ஒண்ணுமேல்ல புரிய மாட்டேங்குது. எஞ்ஞ யப்பாரே அதாங்
ஒந் தாத்தன்னே கும்பகோணம் ஒத்து வாராதுன்னு விருத்தியூர்ல வந்து ஜாகையா தங்குன ஆளு.
நம்ம வமிசத்துக்கே கும்பகோணம் ஒத்து வாராதுங்றது அஞ்ஞ மவளெக் கொண்டுப் போயி வெச்சும்
ருதுவாயிடுச்சு. திரும்பவும் அஞ்ஞப் போறதுன்னா நமக்கு என்னத்தெ சொல்றதுன்னே புரியலடாம்பீ!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு விகடுவெப் பாத்து எங்கப் போனாலும் குட்டிச் சொவத்துல முட்டிக்கிறாப்புல
இருக்குங்றாப்புல.
ஊரே வுட்டெ, வூட்டெ வுட்டெ எஞ்ஞயும் போவக்
கூடாதுங்ற மாதிரிக்கி மொறைச்சுக்கிட்டுப் பேசுன சுப்பு வாத்தியாரு, யிப்போ அடங்குனாப்புல
நெலமயெ புரிஞ்சிக்கிட்டாப்புல பேசுனது வெங்குவுக்கு ஆச்சரியமா இருந்துச்சு. பாவம் அவருந்தாம்
என்னத்தெ பண்ணுவாரு, வயசான காலத்துல அவர்ரப் போட்டு ன்னா பாடு படுத்துன்னான்னு அது
நெனைச்சிக்கிட்டுது. "எப்பிடியோ பரவால்ல! கும்பகோணம்ன்னா கூட பரவால்ல!"ன்னுச்சு
வெங்கு கொட்டாவி வுடுற நேரத்துல வாயிக்குள்ள போயிடுற கொசுவப் போல.
அவர்ரா பேசுனப்போ சாந்தமா பேசிட்டு இருந்த
சுப்பு வாத்தியாரு வெங்கு அதெப் பத்திச் சொன்னதும் எரிஞ்சி வுழுந்தாப்புல, "ஆமாம்மா
கும்பகோணம் பரவால்ல. போயி பொண்ண அழைச்சிக்கிட்டு தங்கிப்புடு. பேசுறா பாரு பேச்ச?"ன்னாரு
அடங்குனது போல இருக்குற கொள்ளி எப்ப வாணாலும் பத்திக்கிடும்ங்றாப்புல.
"இத்து ஏம்டாம்பீ! நாம்மப் பேசுனா
மட்டும் எரிஞ்சி வுழுறாரு ஒஞ்ஞ யப்பாரு?"ன்னு வெங்கு விகடுகிட்டெ கொறை பட்டுச்சு
கொசவன் தட்டுறப்ப ஒடையாத பானை நாம்ம தட்டுறப்ப மட்டும் ஒடையுதேங்றாப்புல.
"இந்தப் பேச்ச யிப்பிடியே நிப்பாட்டிடுவேம்.
இன்னிக்கு ராத்திரி ஓடட்டும். தூங்கி எழும்புன்னா நல்ல யோசனெ எதாச்சும் தோணும். அதுப்படி
பண்ணிக்கிடலாம்! நேரந்தாம் ஆயிட்டெ இருக்குது. ஒண்ணுத்துக்கும் பிரயோசனமில்லாம பேச்சுப்
போவுதே தவுர ஒரு தீர்வெ நோக்கியே போவ மாட்டேங்குது!"ன்னாம் விகடு போற தெசெ
தெரியாம கண்ட தெசையிலும் போயிப் பாக்க வேண்டாம்ங்றாப்புல.
"செரிடப்பா! நீயும் நேரத்தோட யப்பார்ர
அழைச்சிட்டுக் கெளம்பு. மழெ வர்ற ராத்திரி நேரத்துல எஞ்ஞயாச்சும் வண்டியோ உருட்டித்
தள்ளிட்டுப் போயிக் கெடக்காதே!"ன்னுச்சு வெங்கு எப்பயோ திருடி மாட்டிக்கிட்டவேம்தாம்
எப்பவும் திருடுவாம்ங்றாப்புல.
"யண்ணே! நாம்ம ஆஸ்பிட்டல்ல வுட்டு
வந்தா நம்ம ஊருப்பக்கமோ, வூட்டுப் பக்கமோ வர்ற மாட்டேம். பாத்துக்கோ. அதுக்குத்
தகுந்தாப்புல எதாச்சும் பண்ண முடிஞ்சா பண்ணு. யில்லன்னா டிஸ்சார்ஜ் ஆவுற அன்னிக்கு
நம்மள ஆஸ்பிட்டல்ல எதிர்பாக்காதே. யாருகிட்டெயும் சொல்லிக்கிடாம நாம்ம பாட்டுக்கு
எஞ்ஞயாச்சும் போயிட்டெ யிருப்பேம். நீஞ்ஞ தேடுனாலும் கெடைக்க மாட்டேம்!"ன்னா
செய்யு அழுவுற புள்ளே ஆத்திரத்துல பேசுறதா நெனைச்சுகிட்டு அலட்சியமா இருந்துப்புடாதேங்றாப்புல.
"ஏம்டி யிப்பிடி வூட்டுக்குக் கெளம்புற
நேரத்துல அவனெ பயமுறுத்துறாப்புல பேசுறே? அவனே பாவம். எவ்வளவுத்தாம் தாங்குவாம். இந்த
நெனைப்புலயே வண்டியெ கொண்டுப் போயி எஞ்ஞயாச்சும் வுட்டா என்னத்தடி பண்ணுவே? அறிவு
கெட்டவளே? படிச்சிட்டா புத்திப் போயிடுமா?"ன்னு செய்யுவத் திட்டுன்னுச்சு வெங்கு
வெளியில கௌம்புற நேரத்துல மனசுல வேகத்தெ உண்டு பண்ணிடக் கூடாதுங்றாப்புல. அவளெ அப்பிடித்
திட்டிப்புட்டு, "யப்பாடி யய்யா நீயி ஒண்ணுத்தையும் மனசுல நெனைக்காம போயிட்டு
வாய்யா. நாம்ம இவ்வே கூடத்தாம்ன்னே இருக்கிறேம். இவளெ எஞ்ஞ வுட்டுப்புட போறேம். பாத்துக்கிடுறேம்.
ஒன்னய வுட்டுப்புட்டு ஒந் தங்காச்சிய எஞ்ஙயும் போயிட மாட்டாய்யா. மனசுல சஞ்சலம் யில்லாம
ஒறுப்பா ஒரு நெனைப்பா போய்யா. நீயி சொல்றப்படி விடிஞ்சா மனசு மாறிடும். அது வரைக்கும்
யிப்பிடித்தாம் யிருக்கும். இருட்டு ன்னா அப்பிடியேவா யிருந்துடப் போவுது? விடிஞ்சிடும்யா!
விடிஞ்சித்தாம் ஆவணும்யா!"ன்னுச்சு வெங்கு ஒரு நாள்ல பாதி நேரந்தாம் இருட்டு மிச்ச
நேரமெல்லாம் வெளிச்சந்தாம்ங்றாப்புல. இந்தப் பேச்சுக்குப் பெறவுத்தாம் விகடுவும், சுப்பு
வாத்தியாரும் ஆஸ்பிட்டல்ல வுட்டுக் கெளம்புனாங்க, பேசுறதுக்கு வாழ்க்கெ முழுக்க இருக்கு,
ஆன்னா நேரந்தாம் கொஞ்சமா இருக்குங்றாப்புல.
வண்டிய ரொம்ப மெதுவாத்தாம் ஓட்டிட்டு
வந்தாம் விகடு. "அட ன்னடாம்பீ! வழக்குக் கட்டுகள நாம்ம யாருகிட்டெ கொடுக்குறதுன்னு
தவிச்சிக்கிட்டு நின்னா, ஒந் தங்காச்சி அத்துப் புரியாம வேற ஒரு தவிப்ப மனசுக்குள்ள
வெதைச்சிட்டுப் போறாளேடா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு நெல்லுக்கு ஊடால பருத்திய
வெதைக்க முடியுமாங்றாப்புல.
"கொஞ்ச நாளுக்கு நாம்ம ஒண்ணும் பண்ண
முடியாதுப்பா. அத்து மனசு போற போக்குலப் போயித்தாம் சரி பண்ணியாவணும். வேற வழி நமக்கு
ன்னப்பா யிருக்கு? ஒரு நாளு அதுவாவே உணர்ந்துப் பாக்கும். அது வரைக்கும் அமைதியாத்தாம்
இருந்தாவணும்!"ன்னாம் விகடு பொழுது விடியுறதுக்கும் பொழுது மசங்குறதுக்கும் மனுஷன்
என்னா பண்ண முடியும்ங்றாப்புல.
"நீயி ன்னடா தொண்ணூறு வயசு கெழட்டுப்
பயலாட்டம் பேசுறே? காசிக்கு எஞ்ஞடா போவே? நாம்ம டவுனுக்கு வந்தா ஒரு டீத்தண்ணியக்
குடிக்காம வூடுப் போயி சேர்றேம்டா, அதுல ஒரு ஏழு ரூவா மிச்சமாவாதான்னு? யிப்பிடில்லாம்
ஒடம்ப வருத்தி, வாயக் கட்டி, வவுத்தக் கட்டி மிச்சம் பண்ணி எஞ்ஞயோ கொண்டுப் போயி
வுடணும்ன்னு என்னடாம்பீக் கெடக்கு? நமக்கு ஒரு வூடு யில்லன்னா சொல்லு, அந்த மாதிரிக்கி
வாடவைக்குப் போயித் தங்குறது ஞாயம். எல்லாம் இருக்குடாம்பீ. இதெ வெச்சிக்கிட்டு வேற
ஒண்ணும் பண்ணாம கெடந்தாலேயே காலம் ஓடும். இதுல ஒண்ணு கெடக்க ஒண்ணுப் பண்ணா வெச்சுக்கோ
பொருளாதாரத்தச் சமாளிக்க முடியாதுடாம்பீ! நெறைய குடும்பங்க பொருளாதாரம் நொடிச்சதாலயே
நெலமைய சமாளிக்க முடியாம நெலைகொழைஞ்சு போயிருக்குடாம்பீ. நாம்ம அனுபவப்பட்டவேம். நீயி
தங்காச்சி மேல பாசத்துல அதெ புரிஞ்சிக்கிடாம எப்படியாச்சும் சமாளிச்சிப்புடலாங்ற துடிப்புல
பேசிட்டு யிருக்கே. எள ரத்தம்ங்றதெ காட்டுறே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு மனுஷன்
சமாளிக்கிறதுக்கும் ஒரு எல்லை இருக்குங்றது போல மலைய முடிஞ்சு தலையிலயா வெச்சுக்க முடியுமாங்றாப்புல.
"என்னப்பா நீஞ்ஞளே முன்னுக்கு மொரணா
பேசுதீயே?"ன்னாம் விகடு குடிக்குற எடத்துலயே ஒண்ணுக்கு அடிக்க முடியுமாங்றாப்புல.
"நாம்ம ன்னடா அப்பிடிப் பேசுனேம்?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு மின்னாடி போயிட்டு இருக்குற காலு எப்போ பின்னாடி வந்ததுங்றாப்புல.
"பெறவென்னப்பா தொண்ணூத்து வயசு கெழவம்
போல பேசுறதா ஆரம்பத்துல சொல்லுதீயே! கடெசீயில எள ரத்தம்ங்றதால அப்பிடிப் பேசாதீயங்றீயளே?"ன்னாம்
விகடு பேசுறப்ப உவமெ காட்டிப் பேசுறதுங்றது தங் காலே தானே வாரி வுட்டுக்கிடுறாப்புலத்தாம்ங்றாப்புல.
"எதுலயும் தும்ப வுட்டுப்புட்டு வாலப்
பிடிக்கக் கூடாதுடாம்பீ! அதாங் மின்கூட்டியே சொல்றேம். இதெ பேசிக்கிறதால ஒண்ணும் தப்புயில்ல.
பேசாம எதாச்சும் செஞ்சிப் புடுறதுதாங் தப்பு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பசியால
செத்தவனுக்குப் பத்தாம் நாளு படையல் போட்டு என்னா புண்ணியம்ங்றாப்புல.
"பேசுறதெப் பத்தி குத்தம் சொல்லலப்பா!
ஆன்னா நமக்கு வேற வழியில்லப்பா! அவ்வே தங்காச்சியக் காப்பாத்தணுங்றதுக்காகத்தாம் இம்மாம்
செஞ்சது. பாதிக் கெணறு தாண்டியாச்சு. யின்னும் பாதிக் கெணறு தாண்டிட்டு இருக்கிறப்ப
வேணாம்ன்னும் வுட்டுடவும் முடியாது, முடியலன்னு நின்னுடவும் முடியாது. தாண்டித்தாம்
ஆவணும். இதுவரைக்கும் பண்ணது பெரிசில்ல. இனுமே பண்ணப் போறதுதாம் பெரிசு. சம்பாதிச்சி
என்னப்பா பண்ணப் போறேம்? சிலவுத்தாம் பண்ணப் போறேம். அதெ எப்போ பண்ணுனா ன்னா?"ன்னாம்
விகடு சண்டையின்னு வந்தப் பெறவு மண்டை ஒடையுதுன்னு பாக்க முடியுமா, யில்ல ரத்தம் வடியுதுன்னு
பாக்க முடியுமாங்றாப்புல.
"அதுக்கு மேம்மேல கடனெ வாங்கிட்டெ
இருப்பீயா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு சொமக்குறவேம் சொமக்குறாம்ங்றதுக்காக கோயிலு
கோபுரத்தெ தூக்கியா தலையில வைக்க முடியுமாங்றாப்புல.
"கடனெ வாங்குனா அந்தக் காசி செல்லாத
காசியாயிடுமாப்பா? யில்ல அதெ கொடுத்தா யாரும் வாங்கிக்கிட மாட்டாவோளா?"ன்னாம்
விகடு காசுக்கென்ன சாதி, மத பேதம் இருக்காங்றாப்புல.
"எலேம்பீ! நீயி யிப்பிடில்லாம் பேசுற
ஆளு கெடையாதுடாம்பீ! கடனெ வாங்க கூடாதுன்னு நெலையா நிக்குற ஆளு. ஒன்னயப் பத்தித் தெரியும்.
ஏம்டாம்பீ யிப்பிடிப் பேசுறே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு சோகமா, டீத்தண்ணிய கூட
குடிக்காத பயெ கள்ளுக்கடையில நிக்குறானேங்றாப்புல.
"ஒண்ணும் சோகப்படுறதுக்கு இதுல எதுவுமில்லப்பா.
யிப்பிடித்தாம் நெலமெ சில சமயங்கப் போவும். இதெ இந்நேரத்துக்கு சமாளிச்சித்தாம் ஆவணும்.
வேற வழியில்லப்பா! கும்பகோணத்துலயே கொண்டுப் போயி குடிய வெக்கிறோம்ன்னு வெச்சிக்குங்களேம்!"ன்னாம்
விகடு பனைமரத்துக்குக் கீழே நிக்குற சூழ்நெல வந்துப்புட்டதுங்றதால பனங்கள்ள குடிச்சிட்டதா
அர்த்தமில்லங்றாப்புல.
"முடிவே பண்ணிட்டியாடாம்பீ! வாடவெ
வூடுன்னா அட்வான்ஸ் கொடுத்தாவணும், மாச வாடவே கொடுத்தாவணும். இதுல இந்த வழக்குக்
கட்டுகள வேற ஒரு வக்கீலாப் பாத்துக் கொடுத்தாவணும். அவ்வேம் எம்மாம் கேப்பான்னுன்னு
நமக்குத் தெரியல. நாம்ம யிப்போ யிருக்குற நெலையில கேக்கறதெ கொடுத்துத்தாம் ஆவணும்.
பேரம்லாம் உக்காந்துப் பேச முடியாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஏசி வெச்ச கடையிலல்லாம்
போயி பேரம் பேச முடியாதுங்றாப்புல.
"தெரியுதுப்பா!"ன்னாம் விகடு
இப்பிடித்தாம் நடக்கணும்ன்னு இருக்குறதெ எப்பிடி மாத்த முடியும்ங்றாப்புல.
"எப்பிடியும் அம்பதாயிரத்துக்குக்
கொறைஞ்சி எதையும் செய்ய முடியாதுடாம்பீ! யிப்போ ஒந் தங்காச்சி மட்டும் வூட்டப் பாக்க
வந்தா இந்தப் பெரச்சனைய பத்தாயிரத்துலயோ, இருவதாயிரத்துலயோ முடிச்சிட்டு கொஞ்சம்
அப்பிடியே எளைப்பாறிக்கிடலாம்டாம்பீ! ரொம்ப ஓடிட்டதா நெனைக்குறேம்டாம்பீ. மனசும் ஒடம்பும்
சோந்துப் போச்சடாம்பீ. கொஞ்சம் நேரம் நிக்கணும்டாம்பீ. நம்மால ஓட முடியல. மூச்செல்லாம்
எரைக்குது. ஒடம்பெல்லாம் நடுங்குது. மனசெல்லாம் தடதடன்னு ஆவுது. நாம்ம இத்தனெ நாளும்
இதெ வெளியில சொல்லல. யிப்போ ஒங்கிட்டெ சொல்றேம்டாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு
ஒத்தக்காலு இல்லாதவேம் மல்லுக்கட்டி ஓட்டப் போட்டியில கலந்துக்கிட்டாப்புல.
"நமக்குப் புரியுதுப்பா!"ன்னாம்
விகடு புலியொண்ணு தொரத்துறப்போ காலு இருக்கா இல்லையான்னு எல்லாம் பாக்க முடியாதுங்றாப்புல.
"புரிஞ்சும்மா கும்பகோணத்துலக் கொண்டுப்
போயி குடிய வைக்கலாம்ன்னு பேசுதே? கஷ்டம்டா! ந்நல்லா யோஜனையப் பண்ணு! காத்தால ஒரு
தவா தங்காச்சிக்கிட்டெப் பேசிப் பாருடாம்பீ மனசெ மாத்த முடியுமான்னு?"ன்னாரு சுப்பு
வாத்தியாரு மனசெ சுலுவா மாத்திக்கிறதெ வுட்டுப்புட்டு ஒலகத்தெ கஷ்டப்பட்டு மாத்தாதேங்றாப்புல.
"அம்பதாயிரம் காசி இதுல பிரயோஜனமெ
யில்லாமப் போனாலும் இதெ எப்பிடியாச்சும் சம்பாதிச்சிக்க முடியும்ப்பா! ஆன்னா தங்காச்சி
அவ்வே பாட்டுக்கு எங்காச்சிம் போயிட்டா அவளெ தேடிக் கண்டுபிடிக்குற தெம்பு கூட நமக்கு
மனசில யில்லப்பா! காசிப் போனா போயிட்டுப் போவுதுப்பா. நமக்கு நம்மட தங்காச்சித்தாம்
முக்கியம்ப்பா! எம்மாமோ காசியத் தண்டமா சிலவே பண்ணியாச்சு. இதுல மிச்சம் பண்ணப் பாத்துதாம்
ஆவப் போவுது போங்கப்பா! போனா போயிட்டுப் போவுதுப்பா. வட்டிக்குக் காசியக் கொடுக்க
நாட்டுல மனுஷனுங்க ஆயிரம் பேத்து இருக்காங்கப்பா! தங்காச்சியக் கொடுக்க யாருப்பா இருக்கா?
சில விசயங்கள எழந்துட்டா திரும்ப மீட்க முடியாதுப்பா!"ன்னாம் விகடு மூச்செ வுட்டா
வுட்டதுதாம்ங்றாப்புல.
சுப்பு வாத்தியாரு வண்டியில உக்காந்தபடியே
அழுவ ஆரம்பிச்சிட்டாரு. "ஏம்டாம்பீ! ஒன்னயப் பெத்து யிப்பிடி ஒரு செருமத்துல வுட்டுப்புட்டேனடாம்பீ!
சரியாத்தாம்டாம்பீப் பேசுதே! சரியாத்தாம்டாம்பீப் பேசுதே! ஒங் குடும்பத்தெயும் பாத்தாவணும்.
ஒந் தங்காச்சியயும் பாத்தாவணும்டாம்பீ! என்னத்தெ யிருந்தாலும் மருமவ்வே ஒம் சம்பாத்தியத்துல
கடம்பட்டு நெறைய செஞ்சிக்கிட்டுக் கெடக்குறதா நாளைக்கி எதாச்சும் சொல்லி ஒரு சொல்லுக்கு
எடமாயிடக் கூடாது பாருடாம்பீ! அதுக்குத்தாம் யோஜனெ பண்ணி பண்ணி நாம்மப் பேசிட்டு இருக்கிறேம்.
நீயி பாட்டுக்கு தங்காச்சிக்காக சிலவெ பண்ணிட்டு நிக்குறேன்னு ஒரு வார்த்தெ ஒன்னய கட்டுனவ்வே
ஒன்னய கேட்டுப்புட்டா அதெ நம்மாள தாங்கிக்கிட முடியாதுடாம்பீ. அதெ நெனைச்சித்தாம்டாம்பீ
நாம்ம பேசுனது. மித்தபடி பொண்ணுங்ற மவ்வேங்ற நெனைப்புல்லாம் பாசம்ல்லாம் யில்லாம யில்ல!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு கோதாவுல எறங்குறவேம் நாலு பக்கமும் பாத்தபடிக்குத்தாம் எறங்கணும்ஙறாப்புல.
"எல்லாம் ஒரு குடும்பந்தாம்ப்பா!
ஒருத்தருக்கு ஒண்ணுன்னா அவுங்களத்தாம் இதுல மொதல்ல பாக்க முடியும். அதுக்காக கூட கொறைச்சிக்
காசியச் சிலவெ பண்ணுறதப் பத்தியெல்லாம் யோஜனெ பண்ணிட்டு இருக்க முடியாது. ஆயி ஒண்ணும்
நீஞ்ஞ நெனைக்கிறபடியெல்லாம் கேக்கவும் மாட்டாப்பா!"ன்னாம் விகடு உசுர காப்பாத்திக்க
ஓடுறவேம் கால்ல படுற அடியெ எல்லாம் பாத்துக்கிட்டு நின்னுப்புட முடியாதுங்றாப்புல.
"கேக்காதுதாம். யிருந்தாலும் நாம்ம
ஒரு பெரிய மனுஷனா குடும்பத்துல இருந்துகிட்டு யிப்படி போவ வுடுறேம்ன்னு நம்ம மனசாட்சியே
நம்மள குத்துமா யில்லையா ன்னா?"ன்னாரு சுப்பு வத்தியாரு மீனைத் திங்குறவேம் முள்ள
குத்திக்கிடாம அதெ திங்கணும்ங்றாப்புல.
"அதெப் பத்தில்லாம் யிப்போ நெனைச்சா
ஆவாதுப்பா! அதெ தூக்கி அந்தாண்டப் போடுங்க. சில நேரங்கள்ல யிப்பிடித்தாம் சிலது தேவ
யில்லன்னு தெரிஞ்சாலும் அதுப்படி போயித்தாம் ஆவ வேண்டிக் கெடக்கு. யிப்போ அப்பிடித்தாம்
போயி ஆவணும். நமக்கு வேற பாதெ யில்ல. இந்தப் பாதையில நாம்ம பயணத்தெ கடந்துதாம் ஆவணும்.
கெணறு தாண்டுறாப்புலத்தாம். தாண்டுறதுக்கு மின்னாடி எவ்ளோ வாணாலும் யோஜிக்கிலாம்.
நாம்ம பாதிக் கெணத்த தாண்டிட்டு யிருக்கிறப்போ எதெயும் யோஜிக்க முடியாதுப்பா! தாண்டுறதெ
தவுற எதையும் நெனைச்சிக் கூடப் பாக்க முடியாது. யிப்போ இதெ தாண்டுவேம். தாண்டி முடிச்சிப்
பெறவு எதுவா யிருந்தாலும் நெனைச்சிப் பாத்துக்கிடலாம்!"ன்னாம் விகடு சண்டெயில
எறங்கிப்புட்டு சட்டுன்னுல்லாம் சமாதானம் பேச முடியாதுங்றாப்புல.
"செரி ஒம்மட யோஜனெப்படி பண்ணு!"ன்னாரு
சுப்பு வாத்தியாரு கௌம்பிட்ட சாமி போறப்பாட்ட நடுவழியில நிறுத்திப்புட முடியாதுங்றாப்புல.
"இதுல யோஜனெ எதுவுமில்லப்பா! இப்பிடித்தாம்
இந்த நேரத்துல போயி ஆவ வேண்டிக் கெடக்கு!"ன்னாம் விகடு அடிக்குற காத்துக்கு நாணல்
வளைஞ்சிக் கொடுக்குறாப்புல வளைஞ்சிக் கொடுத்துத்தாம் ஆவணும்ங்றாப்புல.
"கும்பகோணம்ன்னா கைப்புள்ளக்கித்
தெரிஞ்சி அவரோட வகையறா கொஞ்சம் அஞ்ஞ யிருக்கு. அவருகிட்டெ பேசிப் பாக்கலாம். ஏன்னா
கொண்டுப் போயிக் குடிய வைக்குற எடத்துல நமக்குத் தெரிஞ்ச ஆளுங்க யில்லாட்டியும்,
நமக்குத் தெரிஞ்ச ஆளுங்களுக்குத் தெரிஞ்ச ஆளுங்களாவது இருக்கணுமில்லையா?"ன்னாரு
சுப்பு வாத்தியாரு பாதாளத்துக்குப் போறதுன்னு முடிவாயிட்டுங்றதால பாக்காம பாதத்தெ வைக்கப்புடாதுங்றாப்புல.
"மூலங்கட்டளெ கோவிந்து அண்ணனையும்
கேட்டுப் பாக்கலாம்ப்பா!"ன்னாம் விகடு நாலு தெசையிலயும் நாலு மனுஷங்களாவது இருப்பாங்கங்றாப்புல.
"செரி விடியட்டும்! விடியலு எப்பிடி
யிருக்கும்ன்னு பாக்கலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வெளிச்சம் வந்தாத்தாம் எதிர்ல
நிக்குறது பேயா, பிசாசுங்றது தெரியும்ங்றாப்புல. ரண்டு பேரும் யிப்படி வண்டியில வந்துகிட்டெ
பேசிக்கிட்டு வந்து, வூடு வந்து சேந்தும் இதெப் பத்தி ரொம்ப நேரத்துக்குப் பேசிக்கிட்டு
இருந்தாங்க அலையடிச்சு எந்தக் காலத்துல ஓஞ்சுதுங்றாப்புல.
*****
No comments:
Post a Comment