10 Feb 2021

ஒண்ணுக்கு ரெண்டா விசாரி!


 ஒண்ணுக்கு ரெண்டா விசாரி!

செய்யு - 713

            கும்பகோணத்துல இல்லன்னாலும் தாராசுரத்துல தங்களோட உறவுக இருக்குறதா சொன்னாரு கைப்புள்ள. "இஞ்ஞத்தாம் நம்ம சாதிக்கார ஒறவுக்கார ஆளுக கம்மி. நீடாமங்கலத்தெ தாண்டுனா வரிசையா நம்ம ஆளுகத்தானே. அப்பிடியே வெசாரிச்சிட்டுப் போனா அப்பிடியே ஏதோ ஒரு வழியில சொந்தம் கூட வரும். அந்த அளவுக்கு நம்மட ஆளுங்க எல்லாம் பெலமா அஞ்ஞ இருக்காங்க. பெறவு ஏம் நீஞ்ஞ பொண்ணு ஆசப்படறாப்புல கொண்டு போயி வைக்குறதுல பயந்துக்கிட்டுக் கெடக்கணும்ங்றேம்?"ன்னாரு கைப்புள்ள எங்க போனாலும் கையும் காலும் தொணைக்கு வர்றாப்புல போற எடத்துல நம்ம ஆளுங்க யாராச்சும் தொணை இருப்பாங்கங்றாப்புல.

            "ஒரு பெரச்சனெ, சிக்கல்ன்னா நம்ம எடத்துலேந்து சமாளிக்கிறதுக்கும், பெற எடத்துலேந்து சமாளிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குல்லா! பல நேரங்கள்லப் பாத்தா இஞ்ஞக் கெடந்து சமாளிக்கிறதெ மீசெயில மண்ணல ஒட்டலங்றாப்புல சமாளிக்க தகிடுதித்தம் போட வேண்டியதா இருக்கு. நல்ல நெலையில இருக்குற பொண்ணுன்னா எஞ்ங வேணும்ன்னாலும் கொண்டுப் போயி வைக்கலாம். இதுவே கோர்ட்டு கேஸூன்னு பெரச்சனையில இருக்குற பொண்ணு. இதெ கொண்டுப் போயி வைக்குறப்போ பாதுகாப்பெ பாக்க வேண்டியா இருக்குல்லா. இஞ்ஞ போலீஸ்காரவோ வந்து நின்னாப்புல அஞ்ஞப் போயி தெரியாத எடத்துல நின்னா ஏம் ஏதுன்னு கேள்வி கேக்க கூட ஆளுங்க இல்லே பாருங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கஞ்சிக்கு வக்கில்லாதவேந்தாம் கிடாவெ வெட்டி விருந்தெப் போடப் போறானாங்றாப்புல.

            "ஒண்ணு தெரிஞ்சிக்கோங்க. இஞ்ஞத்தாம் நமக்குப் பாதுகாப்பில்ல. அஞ்ஞ நம்மள அப்பிடில்லாம் வுட்டுப்புட மாட்டாங்க. நாம்ம சொல்ற எடத்துலல்லாம், பெறத்தியாரு நொழையுறான்னா உசுர்ர வெறுத்துட்டுத்தாம் நொழையணும். சங்க அறுத்துப்புட்டு வுட்டுப்புடுவானுவோ. நம்ம ஊர்லன்னா நம்ம மேல பொறாமெ புடிச்ச நாலு பேரு யிருப்பாம், பொச்சரிப்பு பிடிச்ச நாலு பேரு யிருப்பாம். அவ்வேம் ச்சும்மா இருக்க மாட்டாம். அவனே கோத்து வுடுவாம். நமக்கு எதுனாச்சும் கெட்டதா நடந்தா நல்லா நடக்கட்டுன்னும் நிப்பாம். அஞ்ஞ அப்பிடில்லா. நம்ம ஒறவுக்காரப் பயலுவோன்னு வுட்டுக் கொடுத்துட மாட்டானுவோ. உசுரையே கொடுப்பானுவோ பாத்துக்குங்க!"ன்னாரு கைப்புள்ள நம்மட கண்ணால நம்மடத்தாம் நேருக்கு நேரா பாத்திக்கிட முடியாதுன்னாலும் எதிர்ல நிக்குறவங்கள நல்லாவே பாத்துக்கிட முடியும்ங்றாப்புல.

            "அந்த அளவுக்கா நம்ம ஆளுங்க இருக்காங்க?"ன்னு ஆச்சரியப்பட்டாப்புல பேசுனாரு சுப்பு வாத்தியாரு கஞ்சப் பயெ வூட்டுப் பாயாசத்துல முந்திரிப் பருப்பெல்லாம் கெடக்குமாங்றாப்புல.

            "நீஞ்ஞ நம்ம ஊர்ல கெடக்குறப் பயலுவோளப் பாத்துப் பாத்து அலுத்துப் போயி சலிச்சிப் போயிப் பேசுதீயே! அப்பிடில்லா! இந்த ஊரையே கணக்குலச் சேக்காதீயே! இத்து ஊரே கெடையாது. இஞ்ஞ இருக்குறவனும் மனுஷப் பயலுவோளே கெடையாது. எல்லாரும் மிருகங்க. அஞ்ஞல்லாம் நமக்கொண்ணுன்னா வுட்டுப்புட்டு வேடிக்க பாக்க மாட்டானுவோ. அதாலத்தாம் அஞ்ஞ யிருக்குறவேம் மின்னேறுறானுவோ, இஞ்ஞ கெடக்குறப் பயலுவோ உருப்படாமப் போறானுவோ. இஞ்ஞ ஊர்ல இருக்குறதெ வுட அஞ்ஞ ஒஞ்ஞளுக்கு பத்தடுக்குப் பாதுகாப்பெ உறுதிப் பண்ணித் தர்றேம். பணங்காசித்தாம் வாடவென்னு கொஞ்சம் கூட ஆவும். வேற ஒண்ணும் அதுல செருமமில்ல!"ன்னாரு கைப்புள்ள உள்ளூரு வாத்தியக்காரனுக்கு எப்பவும் உள்ளூர்ல மருவாதி இருக்காதுங்றாப்புல.

            "அஞ்ஞப் போறதுன்னு முடிவான பெற்பாடு வாடவெ பணத்தெப் பாத்து அதுல மிச்சம் பண்ணி ஆவப் போறது ஒண்ணுமில்ல. பாதுகாப்புத்தாம் முக்கியம். அதுக்குத் தோதான எடமா பாருங்க. அதுல எந்த சமரசமும் பண்ணிக்கிட முடியாது."ன்னாரு சுப்பு வாத்தியாரு பூட்டு வாங்குற காசியப் பாத்து வூட்டுல இருக்குறதெ காபந்து பண்ண முடியாதுங்றாப்புல.

            "கும்பகோணத்துலப் பாக்குறதெ வுட தாராசுரத்துல பாக்குறது நமக்கு தோதானது. ஏம்ன்னு கேட்டீயள்ன்னா நமக்குத் தெரிஞ்ச நம்ம ஆளுங்களோட வகையறா அஞ்ஞத்தாம் அதிகெம். அத்தோட கும்பகோணம்ன்னு எடத்தெ பாத்தா வாடவையும் கூட, நமக்குப் பாதுகாப்பும் கம்மி. தாராசுரம் அப்பிடில்லா வாடவெயிலயும் கொஞ்சம் கம்மி, நம்ம ஆளுங்களோட பாதுக்காப்பும் அஞ்ஞ அதிகம். அத்தோட தாராசுரங்றது கெராமத்துக்குக் கெரமமாவும் போவும், டவுனுக்கு டவுனாவும் போவும். அப்பிடி யிப்பிடின்னு அஞ்ஞ ஏகப்பட்ட மினி பஸ்ஸூங்க ஓடுது. அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பஸ்ஸூ. கையக் காட்டுனா வூட்டுப் பக்கத்துலயே பஸ்ஸ ஏறி கும்பகோணத்துப் பஸ் ஸ்டாண்டுலப் போயி ஜரூரா எறங்கிப் புடலாம். பஸ்ஸூக்கு நிக்கப் புடிக்கலையா ஒரு ஆட்டோக்காரனெ வாடிக்கெ பிடிச்சி வெச்சுக்கிட்டா கம்மி ரேட்டுக்குப் போவ வேண்டிய எடத்துக்குப் போயிட்டு வந்துப்புடலாம். அதால தாராசுரம்ன்னா சொல்லுங்க, நாளைக்கே வூட்டெ ஏற்பாடு பண்ணித் தந்துப்புடுறேம். கும்பகோணம்ன்னாலும் ஏற்பாட்ட பண்ணிடலாம். கொஞ்சம் ரண்டு மூணு நாளாச்சும் ஆவும்!"ன்னாரு கைப்புள்ள திருவிழா நடக்குற எடத்துல சனங்க தலைக்கா பஞ்சம் இருக்குமாங்றாப்புல.

            "அப்பிடின்னா தாராசுரத்துலயேப் பாத்துப்புடுங்க! அஞ்ஞயே வெச்சிப் பாத்துப்பேம். நீஞ்ஞ சொல்றதுதாம் செரி. ஏம் டவுன்லப் போயி ஓட்டிக்கிட்டுக் கெடக்கணுங்றேம்? டவுனுக்கு ஒட்டுனாப்புல யிப்படி இருக்குறதுதாங் செரி! அஞ்ஞயே நல்ல எடமா, நமக்குத் தோதா பாத்துப்புட்டுச் சொல்லுங்க!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பிடிக்கிறதுன்னு முடிவான பின்னால நல்லா புளியம் கம்பாவேப் பாத்து பிடிச்சிப்புடுங்கங்றாப்புல.

ஒண்ணுத்தெப் பத்தி வெசாரிக்கணும்ன்னா ஒண்ணுக்கு மூணா வெசாரிக்கணுங்றது கெராமத்து வழக்கம். மூணுக்கு முடியாட்டியும் ரண்டு பேத்துக்கிட்டயாவது வெசாரிச்சுப் பாக்கணுங்ம்பாங்க. வெசாரிக்கிறது ரண்டோ மூணோ எல்லாம் ஒத்தபடிக்கு இருந்தா வெசாரிச்சது சரின்னும் ஒண்ணுக்கொண்ணு முரணா போனா வெசாரிச்சு அறியிறதுல வில்லங்கம் இருக்குன்னும் அர்த்தம். அந்தப் படிக்குக் கைப்புள்ளைய வெசாரிச்சிக்கிட்டு அப்படியே மூலங்கட்டளே போயி கோவிந்துகிட்டயும் ஒண்ணுக்கு ரண்டா வெசாரிச்சா போச்சுன்னு இதெப் பத்தி பேசி ஆனுச்சு.

            கும்பகோணமோ, தஞ்சாவூரோ போவணும்ன்னு செய்யு நிக்குற நெலையச் சொன்னதும், கோவிந்து கும்பம் கோணிட்டு இருந்தாலும் தாஞ் செத்த தஞ்சாவூர்ர வுட கும்பகோணமே பரவால்லன்னாரு. "எஞ்ஞளோட கட்சிக்காரவுங்க தாய்மண் முன்னேற்றக் கழகத்து ஆளுங்களோட கோட்டெ கும்பகோணந்தாம். அஞ்ஞ நமக்கு ஆளுங்களும் அதிகெம். அஞ்ஞ கொண்டுப் போயி வைக்கலாம் செய்யுவ. அப்பிடியே நாம்ம ஒன்றியத் தலைவரு, செயலாளாருன்னு ஆளுங்களப் பாத்து சொல்லி விட்டுடுவேம். அவுங்க அப்பிடியே நீஞ்ஞ எஞ்ஞ குடியிருக்கப் போறீயளோ அந்த ஏரியா கிளை செயலாளர், தலைவர்களுக்குத் தகவலெ கொடுத்தாங்கன்னா அந்த ஏரியாவுல அவுங்களுக்குத் தெரியாம ஒரு புழு பூச்சிக் கூட உள்ளாரப் போயி வெளியில வர்ற முடியாது. செமத்தியா பாதுகாப்ப கொடுத்துப்புடுவாங்க. அத்தோட நம்ம ஆளுங்கன்னா எவனும் கைய வைக்க யோசிப்பானுங்க. இருக்குற கட்சிக்காரவுங்கள்ளயே ரொம்ப மொரட்டுத்தமானவங்க, அடிதடியில அதிகமா எறங்குறவுங்க, ஸ்டேசன் கோர்ட்டுல பெரச்சனெ அதிகமா உள்ள ஆளுங்கன்னா அத்து நம்ம கட்சி ஆளுங்கத்தாம். அதால நம்ம கட்சிக்கார ஆளுங்களோட சரவுண்டிங்ல இருக்காங்ற சேதி தெரிஞ்சா போதும் ஒரு பயெ நம்மள ஏறெடுத்தப் பாக்க யோசிப்பாம்!"ன்னாப்புல கோவிந்து சிங்கத்தோட குகைன்னு தெரிஞ்சா சிறுநரிங்க சில்மிஷங்க பண்ணிட்டு நிக்காதுங்றாப்புல.

            "அதுக்குத்தாம்பி ஒஞ்ஞகிட்டெயும் ஒரு வார்த்தெ கலந்துக்கிட்டுப் போயிடணும்ன்னு வந்தேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நாலு ஊரு தண்ணிக் குடிச்சவேம்கிட்டேதாம் நல்லது கெட்டதெ ந்நல்லா வெசாரிச்சுக்கணும்ங்றாப்புல.

            "நாமளும் நம்மட மாமா இருக்குல்ல. அதாங் மாணிக்கவிநாயகம். அதுக்கு அன்னிக்குப் போன பண்ணுறப்ப சங்கதியச் சொன்னேம். ஊருக்கு வர்றப்போ வந்தப் பாக்குறதா சொல்லிருக்கு. அத்து ஆர்குடிக்குப் போனதுக்குப் பெறவு ஊர்ல நடக்குற சங்கதிக மின்ன மாதிரி தெரியுறதில்லா. அதால அத்து நாம்ம சொன்ன சேதி கேட்டு ரொம்ப சங்கடப்பட்டுச்சு."ன்னாப்புல கோவிந்து மாமங்கார்ரேம் தொணையிருந்தா மச்சு வூடு கட்டலாம், மச்சாங்கார்ரேம் தொணையிருந்தா மலையையே பேக்கலாம்ங்றாப்புல.

            "தம்பீ மாணிக்கவிநாயகம் எப்டி இருக்கு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு பெருமாள்ன்னு பேர்ர சொல்றப்பத்தாம் நம்ம காக்கவும் சாமியிருக்குங்ற நெனைப்பு வர்றதுங்றாப்புல.

            "ஆர்குடிக்குப் போனதுதாம் அதுக்கு மின்னேத்தமே. அஞ்ஞ வூட்ட பங்களாப் போல கட்டிக்கிட்டு நல்லா இருக்கு அது. அஞ்ஞ கட்சிக்கார ஆளுங்களோட நல்ல பழக்கம் உண்டாயி யிப்போ பாலம் கான்ட்ராக்ட் வரைக்கும் எடுத்துப் பண்ணுது. காசி செமத்தியாப் பொரளுது. கார்லாம் கூட வாங்கிட்டு. யிப்போ கார்லத்தாம் வர்றது போறது எல்லாம். ஒஞ்ஞளப் பத்தியெல்லாம் அடிக்கடிச் சொல்லும். ஏகப்பட்ட கான்ட்ராக்ட்ட எடுத்துப் போட்டுக்கிட்டு அதெ பாக்குறதுக்கே நேரமில்லாம அலையுற காரணத்தால அதுக்கு ஊருக்கு வந்தாலும் யாரயும் பாத்துட்டுப் போவவோ, பேசுறதுக்கோ நேரமில்லாமப் போயிடுது. ஏதாச்சும் சாவு சங்கதி, கலியாண விஷேசம், காது குத்தி, சடங்குன்னா வர்றததுதாம். அதுக்கு வந்துட்டுப் போறதுக்கே நேரம் போறதில்ல அதுக்கு!"ன்னாப்புல கோவிந்து அரசியல்ல இருக்குற ஆளுகளுக்கு அலையுறதுக்கே நேரம் பத்தாதுங்றாப்புல.

            "எப்பிடியோ நல்ல வெதமா யிருந்தா செரித்தாம். ஆர்குடி போனா நாமளே போயி பாக்குறேம். எந்த எடத்துல இருக்குறாப்புல?"ன்னாரு சுப்பு வாத்தியாரு தெய்வத்தெப் பாக்கணும்ன்னா அத்து இருக்குற கோயில நோக்கி நாம்ம போவணுமே தவுர நாம்ம இருக்குற எடத்துக்கு அத்து வாரணம்ன்னு பெட்டிஷனப் போட கூடாதுங்றாப்புல.

            "அதெப் பத்தி நீஞ்ஞ எதெயும் நெனைக்க வேணாம். ஆர்குடிக்கு ஒரு நாளு நாம்மளே ஒஞ்ஞள எல்லாத்தையும் அழைச்சிக்கிட்டுப் போறேம்! அதெ அப்புறம் பாத்துக்கிடலாம். செய்யு வேற இந்த மாதிரிக்கிச் சொல்றதுங்றீயளே! மொதல்ல அதுக்குப் பிடிச்சாப்புல ஒரு எடத்தெப் பாத்துப்புட்டுப் போனப் போடுங்க. நேர்லல்லாம் வந்துகிட்டு செருமப்பட்டுக் கெடக்க வாணாம். எந்த எடம்ன்னு மட்டும் போன்ல சொல்லிப்புட்டீயன்னா போதும். நாம்ம நம்ம கட்சிக்கார ஆளுங்ககிட்டெ போன அடிச்சிச் சொல்லிப்புடுறேம். வாடவெக்குப் பாக்குற எடத்தெ சொன்னா கூட நம்ம ஆளுங்கப் போயிப் பேசுனா வாடவையில ஆயிரம், ஐநூத்துன்னு கொறைச்சிப்புடுவாங்க!"ன்னாப்புல கோவிந்து எளைச்சவேம் கேட்டா எம்பது காசு, கொழுத்தவேம் கேட்டா நாப்பது காசுங்றாப்புல.

            "அதெல்லாம் வாணாம். கேக்குற வாடவெயக் கொடுத்துப்புடுவேம். அவுங்க நம்ம பொண்ணுக்குப் பாதுகாப்பா யிருந்தா போதும். வேற எதெயும் எதிர்பாத்து அவுங்ககிட்டெ தொல்ல கொடுக்கக் கூடாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒத்த போன்ல ரெட்டெ சிம்மெ போட்டுத் தொந்தரவு கொடுக்கக் கூடாதுங்றாப்புல.

            "இதுல என்னத்தெ செருமம் யிருக்கு? நாம்ம சொன்னா செய்யப் போறாங்க. அதெ போல அவுங்களுக்கு எதாச்சும் நம்ம ஏரியாவுல ஒதவின்னு கேட்டா நாம்ம செய்யப் போறேம்! அவ்வளவுதாம். இதெ செய்யுவுக்கு நம்ம கட்சியில ஒரு உறுப்பினரு கார்ட்டு போட்டுட்டா போதும் உசுரையே கொடுக்குறேம்ன்னு வூட்டு வாசல்ல வந்துப் படுத்துப்புடுவானுவோ. அப்பிடிப்பட்ட பாசக்காரப் பயலுவோ. ன்னா கொஞ்சம் மொரடனுங்களே தவுர, பாசத்துக்காக செத்துப் போன்னு சொன்னாலும் கழுத்தறுத்துக்கிட்டுச் செத்துப் போவானுவோ!"ன்னாப்புல கோவிந்து கட்சின்னா சொன்னா உசுர்ரத் தூக்கி உள்ளங்கையில கொடுத்துப்புடுவாங்கங்றாப்புல.

            "அப்பிடின்னா கட்சியில ஒரு கார்டெ மவளுக்குப் போட்டு வுட்டுப்புடுங்களேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வேலிய போடாம வெள்ளாமையப் பண்ண முடியாதுங்றாப்புல.

            "நமக்கு மின்னேயே யோஜனெத்தாம். யிருந்தாலும் ஒஞ்ஞள ஒரு வார்ததெ கேக்காம பண்ணிப்புடக் கூடாதுப் பாருங்க. நம்ம கட்சியிலயும் முட்டாப் பயலுங்களும், படிக்காதப் பயலுங்களுமா கெடக்குறானுவோ. செய்யுவப் போல ஒரு படிச்சப் பொண்ணு உறுப்பின்னார யிருந்தா அத்து எங்களுக்கு ஒரு சந்தோஷந்தானே, பெருமெதானே!"ன்னாப்புல கோவிந்து படிச்சவங்களுக்குப் போற எடமெல்லாம் பெருமதான்னு வள்ளுவரு சொல்றதுப் போல கட்சியிலயும் படிச்சவங்களுக்குக் கிராக்கித்தாம்ங்றாப்புல.

            "நமக்கு ஒரு ஆபத்துங்றப்போ தொணைக்கு வந்து நின்னவோ நீஞ்ஞ! அட்மிஷன் போட முடியாதுன்னு சொன்ன ஆஸ்பிட்டல்ல அட்மிஷன் போட்டு ஆஸ்பத்திரிச் சிலவெ யில்லாம வைத்தியம் பாத்து வுட்டவுங்க நீஞ்ஞ. பெறவென்னா இனுமே ஒஞ்ஞ கட்சியில அவ்வே ஒரு ஆளா இருக்குறதுல ஒண்ணும் தப்பில்ல!"ன்னாரு சுப்பு வாத்தியாரு உப்பிட்டவங்கள உசுரு உள்ள வரைக்கும் நெனைக்கணும்ங்றாப்புல.

            "விசாகன் அண்ணாச்சியும் வந்துப்புடட்டும். அண்ணாச்சிய ஒரு நாளு நேர்லப் போயிப் பாத்து ஒரு சால்வெயப் போத்திப்புட்டு அண்ணாச்சிக் கையாலயே ஒரு உறுப்பினரு கார்டெ போட்டு வுடுவேம்!"ன்னாப்புல கோவிந்து தம் கையால வெங்கல கிண்ணத்தெ தர்றதெ வுட தலைவரு கையால தங்கப் பதக்கமே வாங்கித் தந்துப்புடறேம்ங்றாப்புல.

            "தாராளமா போட்டு வுட்டுப்புடுங்க. இனுமே ஒஞ்ஞ பாதுகாப்புல வெச்சுக்கோங்க. எஞ்ஞளால அந்தப் பொறுக்கிப் பயலுவோ பண்ணுற அழிச்சாட்டியத்துலேந்து பாதுகாப்பக் கொடுக்க முடியாது!"ன்னாரு சுப்பு வாத்தியாரு உசுரு போனா மசுரு போச்சுன்னு நெனைக்குறவங்களாலத்தாம் உசுர்ரக் கொடுத்துக் காப்பாத்த முடியும்ங்றாப்புல.

            "அவனுவோ கெடக்குறானுவோ சுண்டெக்காயி பயலுவோ! ஆர்குடிக்கு வாரட்டும். நம்ம ஆளுங்கள வெச்சி எப்பிடி மெரட்டி வுடுறேம் பாருங்க!"ன்னாப்புல கோவிந்து கொரைக்குற நாயி கல்ல வுட்டெறிஞ்சாத்தாம் அடங்கும்ங்றாப்புல.

அவ்ளவுதாம், சுப்பு வாத்தியாரு கையெடுத்துக் கும்புட்டுக் கண்ணு கலங்க நன்றியச் சொல்லிட்டு வந்தாரு.

தாராசுரத்துல பாத்த வீடு!

            ஒரு வழியா கைப்புள்ளகிட்டெயும், கோவிந்துகிட்டெயும் பேசுனதெ வெச்சி சுப்பு வாத்தியாரு தாராசுரத்துல கொண்டுப் போயி மவளெ குடிவெச்சித் தொணைக்குத் தானும் கூட இருக்கலாங்ற முடிவுக்கு வந்திருந்தாரு. தாராசுரமும் கும்பகோணத்துக்குப் பக்கத்துலதானே அதால அங்க தங்க விருப்பமான்னு மவளுகிட்டெ கேட்டு முடிவெ பண்ணலாம்ன்னு விகடுகிட்டெ சொன்னாரு சுப்பு வாத்தியாரு. இதெப் பத்தி தங்காச்சிக்கிட்டெ நீயே கேட்டு என்னா ஏதுங்ற வெவரத்தெ சொல்லுன்னும் வெவகாரம் முழுசையும் விகடுகிட்டெ விட்டாரு. விகடு இதெ அப்பிடியே செய்யுகிட்டெ கேட்டப்போ அவளும் செரி பரவால்லன்னா. அப்பிடித்தாம் தாராசுரத்துல வூடு பாக்குற வேலையில எறங்குனது. கைப்புள்ளத்தாம் மின்னாடி நின்னு அவுங்களோட ஒறவுக்காரவங்களோடு கலந்துகிட்டு, அவுங்க நெறைய ஆட்கள் நெறைய இருக்குற எடமா தாராசுரத்துல ஒரு எடத்தப் பாத்து போன்லயே ஒரு வீட்டைப் பிடிச்சி மறுநாளே விகடுவையும், சுப்பு வாத்தியாரையும் கெளப்பிக்கிட்டுப் போனாரு.

            அந்த வூட்டப் பாக்குறதுக்காகவே விகடுவும், சுப்பு வாத்தியாரும் டிவியெஸ் பிப்டியிலயும், கைப்புள்ள அவரோட டிவியெஸ் எக்செல்லயும் தாராசுரம் வரைக்கும் வண்டியிலயே போனாங்க. அவரு பாத்த வூடு மாடியில இருக்குற வூடு. மாச வாடகெ மூவாயிரத்து அறுநூத்துன்னும் முப்பதாயிரத்தெ முன்பணமா கொடுத்துப்புடணும்ன்னும் வூட்டுக்காரரு சொன்னாரு. அந்த வூட்டுக்காரரும் ஒரு வெதத்துல கைப்புள்ளைக்குத் தெரிஞ்ச ஆளாவே இருந்தாரு. அவரோட அத்தனெ வெதமான விசேசங்களுக்கும் கைப்புள்ளத்தாம் மின்னாடிப் போயி நின்னு செஞ்சிக் கொடுத்தாரு. அந்தப் பழக்கம் வேற இருந்ததால அந்த எடத்துலயேப் பாத்துத் தங்குறதுன்னு முடிவாச்சு.

            அந்த எடம் பூராவும் தாராசுரம் வூட்டுக்காரரோடதுதாம். வரிசையா காலனி வூடுகளப் போல இருவது வூடுக இருந்துச்சு. அந்த வூடுகளோட கடைசியா இருந்த வூட்டுல வூட்டுக்காரு இருந்தாரு. வூட்டுக்கு மின்னாடி கீழே ஆறு வூடும், மாடியில ஆறு வூடும் கட்டியிருந்தாரு. அதுக்கு எதுத்தாப்புல ஆறு ஓட்டு வூடுக. அத்தோட வூட்டுக்காரரு மாடியில ஒரு வூட்டை ஒரு வாடவைக்கு வுட்டுருந்தாரு. காலனி வூடு போல இருக்குற மாடி வூட்டுக்கு வாடவெ மூவாயிரத்து அறுநூத்துன்னும், ஓட்டு வூட்டுக்கு வாடவெ ரண்டாயிரத்து நானூத்துன்னும், அவரோட வூட்டுக்கு மேல இருக்குற மாடி வூட்டுக்கு வாடவெ நாலாயிரத்து ஐநூத்துன்னும் அவரு நிர்ணயம் பண்ணியிருந்தாரு. வாடவெ வூடுகளச் சுத்திப் பக்காவா காம்பெளண்ட்டு பண்ணியிருந்தாரு. வாடவெ வூட்டுக்காரங்கள தவுர வேற யாரும் உள்ளார வர முடியாத அளவுக்கு அவரே வாட்ச்மேனப் போல வூடுகளுக்கு மின்னாடி சதா நின்னுகிட்டும் நடந்துகிட்டும் இருந்தாரு.

            அந்த வூடுகளுக்கு உள்ளாரப் போயி வர்ற இருந்த வழிங்றது சின்ன சந்தப் போலத்தாம் இருந்துச்சு. ஒருத்தரு போனா எதுத்தாப்புல வர்ற இன்னொருத்தரு ஒருக்களிச்சிக்கிட்டுத்தாம் வழியக் கொடுக்குறாப்புல வெச்சிருந்தாரு. அந்த அளவுக்கு எடத்தெ சிக்கனம் பண்ணி சந்துக்கு ரண்டு பக்கமும் மாடி வூடாவும், ஓட்டு வூடாவும் கட்டி வெச்சிருந்தாரு. அந்த சந்து வழியே உள்ளார வர்றப் போற மனுஷருக்குப் பெரியச் சங்கட்டந்தாம். போயிப் பழகியிருந்தாத்தாம் அந்த வழி சுலுவான வழியா இருக்கும். புதுசா நோழையுற ஆளுகளுக்கு அந்த வழிங்றது ரகசிய வழியிலப் போயி பொதையல கண்டுபிடிக்கிறது போலத்தாம். மாடி வூடும் உள்ளார ஐநூத்து அல்லது அறுநூத்து சதுர அடிக்குள்ளாரத்தாம் இருந்துச்சு. அதுக்குள்ளாரயே கச்சிதமா ஒரு கூடம், ஒரு அறை, ஒரு சமையல்கட்டு, டாய்லெட்டு, பாத்ரூம்ன்னு இருந்துச்சு. திண்ணைன்னுப் பாத்தா பொதுவா வராந்தாத்தாம். அதுக்கு மின்னாடி ஒரு கைப்பிடிச் சொவத்தெ கட்டி அந்தாண்டத்தாம் சந்து வழி இருந்துச்சு. ஒரு வரைபடம் போடுறதுன்னா தாராசுரத்துல பாத்த வூட்டுக்கு இப்பிடித்தாம் வரைபடம் போட முடியும்.

            வூடுப் பாத்த எடத்தப் பத்திக் கோவிந்துகிட்டெ சொன்னதும் அவரு கட்சி ஆளுங்களுக்குப் போனப் போட்டுத் தகவலச் சொல்லிட்டாரு எள்ளெ எடுத்த பின்னால ஏம் எண்ணெய்யா ஆட்டாம இருக்கறம்ங்றாப்புல. சங்கதி தெரிஞ்சதும் அவுங்க தாராசுரத்துல அவுங்களாவே வெசாரிச்சிக்கிட்டு அந்த எடத்துக்கு வந்துப்புட்டாங்க காட்டுல இருக்குற சீவனுக்குக் காட்டு வழிய காட்டியா வுடணும்ங்றாப்புல.

            ஆர்குடி ஆஸ்பிட்டல்லேந்து டிஸ்சார்ஜ் பண்ணி நேரா செய்யுவெ தாராசுரத்து வூட்டுக்குத்தாம் அழைச்சிட்டுப் போனது வூட்டுக்கு வர வேண்டிய நெல்ல யேவாரிக்கிட்டெ கொண்டுட்டுப் போறாப்புல. பத்தாயத்துல வெச்சிப் பத்திரமா பாத்து அரிசியாக்குறது போயி யேவாரிக்கிட்டெ வித்தா அவனெ அரிசியா விக்குறாப்போ வாங்கிக்கிடலாம்ங்றதெ போலத்தாம் ஒரு வெதத்துல இருந்துச்சு அன்னிக்கு இருந்த அந்த நெலமெ. அத்துச் செரி பத்தாயத்துல நெல்ல போட்டு வெச்சுக்க யாருத்தாம் விரும்புற இப்போ?

அன்னிக்கு ஆயியயும், பவ்வுப் பாப்பாவையும் அழைச்சிக்கிட்டு விகடு ஆர்குடி ஆஸ்பத்திரிக்குப் போயி அப்பிடியே செய்யுவையும் வெங்குவையும் பஸ்ல கூப்புட்டுக்கிட்டுத் தாராசுரத்துப் போயி எறங்குனாம். சுப்பு வாத்தியாரு அங்க குடியிருக்கிறதுக்குத் தோதா இங்க வூட்டுல கெடந்த சாமாஞ் செட்டுகளயும், சமைச்சிச் சாப்புட கொள்ள வசதியா ஒரு சிலிண்டர்ரயும் தூக்கிப் போட்டுக்கிட்டு, அத்தோட ரண்டு நாற்காலிங்க, ஒரு மேசெ, ஒரு பீரோவையும், துணிமணிக, பெட்டிப் படுக்கைகளையும் எடுத்துக்கிட்டு ஒரு டாட்டா ஏஸ்ல நேரா தாராசுரத்துக்கு வந்துச் சேந்தாரு.

            அந்தச் சாமாஞ் செட்டுக அத்தனையையும் ஆளுங்க யாரையும் வுடாம மாடி வரைக்கும் அந்தச் சந்து வழியில ரொம்ப கஷ்டப்பட்டுத் தூக்கியாந்து மேல வெச்சது எல்லாம் கோவிந்து சொல்லி வுட்ட கட்சிக்காரங்க ஆளுங்கத்தாம் கட்சின்னு சொல்லிப்புட்டா நத்தெ கூட்டெ சொமக்குறாப்புல சொமப்பேம்ங்றாப்புல. அவுங்களுக்கு என்னத்தெ பண்ணுறது, எப்பிடி நன்றியச் சொல்றதுன்னு தவிச்சிட்டு இருந்தாப்போ அவுங்களே அதெ புரிஞ்சிக்கிட்டாப்புல, "யிப்போ ஸ்ட்ராங்க ஒரு டீய மட்டும் எல்லாத்துக்கும் போட்டுக் கொடுங்க. ஒரு ஞாயித்துக் கெழமெயில கறிச்சோறு ஆக்கிப் போடுங்க! பாப்பா வேற நம்ம கட்சிக்கார ஆளாப் போயிடுச்சு. கோவிந்து அண்ணன் கூட சொன்னாப்புல ஆர்குடி ஒன்றியத்து மகளிரணி பொறுப்புல இருக்குறதா. அதாங் பாப்பா நம்ம ஏரியாவுக்கு வந்துட்டப் பெறவு அது எப்பிடி ஆர்குடி பொறுப்புல இருக்குறது, நம்ம கும்பகோணத்துப் பொறுப்புலத்தாம் இருக்கணும்ன்னு நாம்ம சண்டெ போட்டுக்கிட்டு இருக்கிறேம்!"ன்னு சிரிச்ச்சிகிட்டெ சொன்னாங்க கலியாணம் பண்டுன பொண்ணுக்கு புகுந்த வூடுதாம் அதோட சொந்த வூடுங்றாப்புல.

"அதுக்கென்ன கறிச்சோறுதான்னே பண்ணிட்டா போவுது! பெறவு ரொம்ப பெரிய பொறுப்புல்லாம் மவளுக்கு வாணாம்!"ன்னு சுப்பு வாத்தியாரும் சிரிச்சிக்கிட்டெ சொன்னாரு ஏழைக்கேத்தாப்புல எள்ளுருண்டைய ஒண்ணுத்தெ தந்தாப் போதும்ங்றாப்புல.

            அன்னிக்கு அந்த தாராசுரம் வூட்டுல பால்ல காய்ச்சி அங்க செய்யுவோட வெங்குவையும், சுப்பு வாத்தியாரையும் தங்க வெச்சிட்டு திரும்பி வந்த டாட்டா ஏஸ்ல விகடுவும், செய்யுவும், பவ்வு பாப்பாவும் ஊருக்கு வந்துச் சேந்தாங்க. 

            அதுலேந்து வாரத்துக்கு ஒரு மொறையோ, ரண்டு வாரத்துக்கு ஒரு மொறையோ சுப்பு வாத்தியாரு தாராசுரத்துலேந்து திட்டைக்கு வந்துட்டுப் போயிட்டு இருந்தாரு. விகடுவும் அவரு வர்றாத வாரத்துல குடும்பத்தெ அழைச்சிக்கிட்டு அங்க தாராசுரத்துக்குப் போயிட்டு வந்தாம் டவுனுக்கும் கெராமத்துக்கும் ஓடிட்டுக் கெடக்குற டவுனு பஸ்ஸப் போல.

தாராசுரத்துல மளிகெ சாமாஞ் செட்டுக எல்லாம் வெலை கம்மியா யிருந்ததால அங்க போறப்பே மாசத்துக்கான மளிகெ சாமானுங்கள அங்கேயே வாங்கிட்டு வருவாம் விகடு. அத்தோட காய்கறிகளும் வெல ரொம்ப கம்மியா இருந்ததால அதெயும் வாங்கிட்டு வரது. சுப்பு வாத்தியாரு திட்டைக்கு வர்றப்பவும் மளிகெ சாமானுங்க, காய்கறிகள வாங்கிட்டு வர்றாம இருக்க மாட்டாரு.

            "தாராசுரம் போனதுலயும் ஒரு நல்லது இருக்கத்தாம் செய்யுது. மலிவா சாமாஞ் செட்டுக, கறிகாய்கள வாங்கிட்டு வர்ற முடியுது. சிலவும் நல்லாவே மிச்சமாவுது!"ன்னாம் ஒரு தவா விகடு போற எடமெல்லாம் சோத்துக்குச் சத்திரம் இருந்தா சந்தோஷந்தாம்ங்றாப்புல.

செருமத்தெ நெனைச்சிக்கிட்டெ கெடைக்குற சின்ன சின்ன சந்தோஷத்தெ அனுபவிக்கிறதெ வுட்டுப்புடக் கூடாதுன்னு ஒரு வெதத்துல குதுகலிப்புத்தாம் தாராசுரம் போயிட்டு வாரதுல விகடுவோட மனசுல இருந்துச்சு. வூட்டெ வுட்டா பள்ளியோடம், பள்ளியோடத்தெ வுட்டா வூடுன்னு தண்டவளாத்துக்குள்ளயே ஓடிட்டு இருக்குற ரயிலப் போல யில்லாம ஊரு ஊராப் பறந்து போற குயிலப் போயிட்டு வர்றதுல மனசுலயும் ஒரு லேசுப்பாடு உண்டாவுறதாவும் நெனைச்சிக்கிட்டாம் விகடு. இந்த நெனைப்பும் குதுகலிப்பும்தாம் அவனெ அப்பிடி சொல்ல வெச்சது. அதெ கேட்டுச் சுப்பு வாத்தியாரு அதெ பத்தி வேற வெதமா சொன்னாரு.

            "அடப் போடா! ஒந் தங்காச்சி ஊர்லயே தங்கியிருந்தா அதெ வுட காசி யின்னும் மிச்சமாவும்டா! பூசணிக்காயி போறது தெரியாதாம், கடுகு போறதெ வர்றதெ ஆராய்ச்சிப் பண்ணிட்டுக் கெடந்தானாம் ஒருத்தெம். அந்தக் கதெயால்ல இருக்கு ஒம் பேச்சு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கொல்லையில வெளையாத கத்திரிக்காயா சந்தையில கெடைக்கப் போவுதுங்றாப்புல.

அவருக்குத் தாராசுரம் போனதுல கொஞ்சம் கூட விருப்பமேயில்ல. ஆன்னா மவளோட மனநெலைக்காகவும், சூழ்நெலைய மேலும் சிக்கலாக்கிப்புடக் கூடாதுங்றதுக்காவும் வேற வழியில்லாம ஒத்து வந்ததெ அவரோட சலிப்பான பேச்சே காட்டுனுச்சு உள்ளூரு ஆத்துல தலை முழுகாதவேம் காசியிலப் போயி தலைய முழுவுனக் கதெதாம்ங்றாப்புல.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...