8 Feb 2021

பிறந்த ஊர் எனும் நரகம்!

பிறந்த ஊர் எனும் நரகம்!

செய்யு - 711

            கேஸ் கட்டுகள வாங்கியாந்தப் பெறவு வேற ஒரு பெரச்சனெ ஆரம்பமாவும்ன்னு சுப்பு வாத்தியாரு எதிர்பாக்கல. அவரோட நெனைப்பு இந்தக் கட்டுகள அப்பிடியே கொண்டுப் போயி சிவபாதத்துகிட்டெ கோவிந்த வெச்சுக் கொடுத்துடறதுங்றது. அப்பிடியே அவரு கேக்குற காசியையும் எப்பிடியாச்சும் தயாரு பண்ணிக் கொடுத்துடுறதுங்றதுதாம். அதுல ரண்டு பெரச்சனெ ரண்டு வெதமா உண்டாச்சுது. மொத பெரச்சனையா சிவபாதம் செய்யுவோட வழக்கெ எடுக்குறதில்லன்னு முடிவு பண்ணிருக்கிறாங்ற சேதி. ஆர்குடி பார் கெளன்சில்ல ஒரு வக்கீல செருப்பால அடிச்சதால செய்யுவோட வழக்கெ யாரும் எடுத்துக்கக் கூடாதுன்னு நெருக்கடி கொடுக்குறதா சிவபாதத்தெ சந்திக்கிறதுக்கு மின்னாடியே அவருகிட்டெயிருந்து சேதி வந்துச்சு. ரண்டாவது பெரச்சனெ செய்யு ஆஸ்பிட்டல்லேந்து வூட்டுக்கு வர முடியாதுன்னு அடம் பிடிச்சது. இந்த ரண்டு பெரச்சனையில சுப்பு வாத்தியாருக்கும், விகடுவுக்கும் ஆர்குடியில எந்த வக்கீலும் செய்யுவோட வழக்குக் கட்டுகள எடுத்துக்க மாட்டாங்ற பெரச்சனெ பெரிசா தெரியல. ஆன்னா செய்யு ஆஸ்பிட்டல்லேந்து வூட்டுக்கு வர மாட்டேன்னு சொன்னது பெரும் பெரச்சனையா இருந்துச்சு.

            ஒம்போது நாளுக்குப் பெறவு ஆஸ்பிட்டலேந்து டிஸ்சார்ஜ் ஆயிடலாம்ன்னு சொன்ன நாளுக்கு மின்னாடியே செய்யு இனுமே நம்மாள ஊருப்பக்கம் தலெ வெச்சுப் பாக்க முடியாதுன்னுட்டா. ஏம்ன்னு கேட்டதுக்கு போலீஸ் வந்து அரெஸ்ட் பண்ணாப்புல அழைச்சாந்தப் பெறவு கிராமத்துல நம்மள எல்லாரும் ஒரு மாதிரியாப் பாப்பாங்கன்னும், அதெ தன்னால ஏத்துக்கவோ தாங்கிக்கவோ முடியாதுன்னும் சொன்னா. அதெ கேட்டதும் சுப்பு வாத்தியாருக்குக் கோவம் வந்துடுச்சு.

            "நாஞ்ஞல்லாம் ஊருல இருக்காம காட்டுலயா கெடக்கேம். நெதமும் அந்த ஊருக்குப் போயிட்டு வந்துட்டுத்தானே இருக்கேம்! அதெல்லாம் பாத்தா எந்த ஊர்லயும் குடியிருக்க முடியாது. வூட்டுக்கு வூடு வாசப்படிங்ற மாதிரிக்கி எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர்ல எதாச்சும் ஒரு பெரச்சனெ உண்டாயிட்டேத்தாம் இருக்கும். அப்பிடி பெரச்சனெ உண்டாவுதுன்னு சொல்லி ஊரு வுட்டு ஊரு போயிட்டெ இருந்தா இந்த ஒலகத்துல ஒரு ஊர்லயும் இருக்க மிடியாது. நீயி சொல்றபடி கொஞ்ச நாளைக்கு அதெப் பத்தியே பேசிட்டு இருப்பாங்றது உண்மெத்தாம். இல்லன்னு சொல்லல. அதுவும் மின்ன மாதிரி காலமும் யில்ல யிப்போ. மின்னத்தாம் சனங்களுக்குப் பொழுது போவாம இதெயே பேசிக்கிட்டுக் கெடக்குறாப்புல இருந்துச்சு. யிப்போ இருக்குற சனங்களுக்கு டிவிப் பொட்டியில படம் பாக்கவே நேரம் போதல. அததுவும் டிவிப் பொட்டியே கதியின்னு கெடக்குது. யிப்போ யெல்லாம் டிவிப்பொட்டியில வர்ற கதெயத்தாம் பேசிக்கிட்டுக் கெடக்குதுங்க. நம்ம கதெயெல்லாம் பேசுறதுக்கு அதுகளுக்கு நேரமும் கெடையாது, பொழுதும் கெடையாது. டிவிப்பொட்டியில வர்ற கதைக மாதிரிக்கி நம்ம கதெயில ன்னா சுவாரசியம் இருக்குது? ஸ்டேசனுக்குப் போறதும், வர்றதும், கோர்ட்டுக்கு வர்றதும், போறதும் அதானே நடந்துகிட்டு இருக்குது. இதுக்குப் போயி ஏம் அலட்டிக்கிட்டுக் கெடக்குறே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு அதது இருக்குற எடத்துல இருக்குறதுதாம் அததுக்குப் பாதுகாப்புங்றாப்புல.

            "படுறவங்க பாடு வேற. அதெ வெளியிலேந்து பாக்குறவங்க பாடு வேற. இதெல்லாம் ஒஞ்ஞளுக்குப் புரியாதுப்பா!"ன்னா செய்யு கோவமா தலெ வலியும் காலு வலியும் தனக்கு வந்தாத்தாம் தெரியும்ங்றாப்புல.

            "ஆம்மாம்டி பொண்ணு! நமக்கும் வூட்டுல நடந்ததுக்கும் சம்பந்தமே யில்ல பாரு. நடந்த பஞ்சாயத்துல எந்தப் பஞ்சாயத்துக்கு ஒன்னயக் கொண்டுப் போயி நிறுத்துனேம் சொல்லு? எல்லாத்தையும் நாம்மத்தானே தாங்கி நின்னு பஞ்சாயத்துல நின்னேம். அவ்வேம் வைஞ்சாலும் செரி, அடிச்சாலும் செரின்னு நின்னது நாம்மத்தானே. ஊர்ல அவனவனும் பொண்ணக் கட்டிக் கொடுத்துப்புட்டு பேரப் புள்ளைய மடியில போட்டு கொஞ்சிக்கிட்டுக் கெடக்குற கால கட்டத்துல நாம்மத்தானே ஒம்ம இன்னும் புள்ளய தோள்ல போட்டுச் சொமக்கறாப்புல சொமந்துகிட்டுக் கோர்ட்டுக்கும், ஸ்டேசனுக்கும், ஆஸ்பிட்டலுக்குன்னும் அலைஞ்சிக்கிட்டு இருக்கேம். இந்த வயசுல நம்மாள இப்பிடியில்லாம் அலைய முடியுமா? அதுக்காக எந்த ‍அலைச்சல கொறைச்சிக்கிட்டேம்? பெத்த மவளே போலீஸ்காரவுகிட்டெ வுட்டுப்புட்டு அடிவாங்க பாத்துட்டு நிக்குறெ கொடுமெ இருக்கே, அதெ பொண்ண பெத்த தகப்பனா யிருந்து அனுபவிச்சத்தாம் தெரியும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பெத்த புள்ளைங்க அடிபடுறப்போ புள்ளைங்களுக்கு உண்டாவுற வலிய வுட பெத்தவங்களுக்கு உண்டாவுற வலித்தாம் அதிகம்ங்றாப்புல.

            "தயவுபண்ணி நீஞ்ஞ நம்மளோட மனநெலையில யிருந்து பாருங்கப்பா. எப்பிடிப்பா நாம்ம இனுமே வூட்டுக்கு வந்து அக்கம் பக்கத்துல இருக்குறவங்க மொகத்துல முழிப்பேம்?"ன்னா செய்யு முன்னாடி தெரியுறதுதாம் காட்சின்னும் கண்ணாடியில தெரியுறதெல்லாம் காட்சி இல்லங்றாப்புல.

            "ஒமக்கென்ன வேற வேல யில்லையா ன்னா? ஒவ்வொருத்தரு மொகமா பாத்துப் போயி முழிச்சிக்கிட்டுக் கெடக்குறதுக்கு? அதெல்லாம் காலம் மாறி ரொம்ப நாளாயிடுச்சு. சனங்களும் அவுங்களோட வேலயுண்டு, வித்துண்டுன்னு இருக்க ஆரம்பிச்சிச்சிடுங்க. நீயி நெனைக்குற மாதிரில்லாம் நாலு பேரு நம்மளப் பாத்துட்டு ஒண்ணும் கெடக்கல. நாம்மத்தாம் மனசுக்குள்ள எந்நேரமும் நாலு பேத்து நம்மளப் பாத்துக்கிட்டெ கெடக்குறதா நெனைச்சிக்கிட்டுக் கெடக்குறேம். யாரோட வாழ்க்கையில கஷ்டகாலம் வாரல? அதெப் பாத்துட்டு இனுமே யாரோட மொகத்துலயும் முழிக்க மாட்டேன்னா, ஒலகத்துல யாரோட மொகத்துலயும் முழிக்கவே முடியாது. மொகத்துல சட்டிப் பானைய மாட்டிக்கிட்டு அலைய வேண்டியத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு திங்குறவேம் பேளத்தாம் செய்வாங்ற மாதிரிக்கு வாயி இருக்குறவேம் பட்டதையெல்லாம் பேசத்தாம் செய்வாம்ங்றாப்புல.

            "வூட்டுக்கு வர்றது மாதிரி யிருக்கும்ன்னா நாம்ம இஞ்ஞயே கெடந்துக்கிறேம்ப்பா!"ன்னா செய்யு காத்துல பறக்குற எலைய வுட வேர்ல நெலகுத்தி இருக்குற மரத்தெ போல இருந்துக்கிறேம்ங்றாப்புல.

            "எத்தனெ நாளு வெச்சிருப்பாங்க, இஞ்ஞயே கெடக்குறதுக்கு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு நாத்து வளந்தா பறிச்சி வேற எடுத்துலத்தாம் வைக்கணும்ங்றாப்புல.

            "எத்தனெ நாளு வெச்சிருக்காங்களோ அத்தனெ நாளு இருக்குறேம்!"ன்னா செய்யு நட்ட கல்லு பிடுங்கி வீசுற வரைக்கும் நட்ட எடத்துலயே இருக்கும்ங்றாப்புல.

            "அதுக்குப் பெறவு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஓரமா கெடக்குற கல்லுக்குக் கூட நாட்டுல பாதுகாப்பு இல்லங்றாப்புல.

            "எஞ்ஞயோ போறேம். ஆன்னா வூட்டுப்பக்கம் மட்டும் எட்டிப் பாக்க மாட்டேம்!"ன்னா செய்யு பொட்டுன்னு கல்ல தூக்கித் தலையில போடுறாப்புல சொல்லத் தூக்கி. சுப்பு வாத்தியாருக்கு அதெ கேட்டதும் நெஞ்சடைச்சது போல இருந்துச்சு. வறட்டு இருமலா வந்து இருமுனாரு. யப்பாவோட தலையில தட்டி வுடுடான்னு சொல்லிட்டு வெங்கு டக்குன்னு தம்பளர்ல தண்ணியப் பிடிச்சாந்து கொண்டாந்துச்சு. அதெ குடிச்சதுக்குப் பெறவுத்தாம் சுப்பு வாத்தியாரோட இருமலு மட்டுப் பட்டுச்சு.

            வெங்குவுக்கும் கோவம் வந்து மவளெப் பாத்துத் திட்ட ஆரம்பிச்சிது. "ஏம்டி வயசான காலத்துல யப்பாவப் போட்டு யிப்பிடி செருமம் பண்ணுறே? வூட்டுக்கு வர மாட்டேன்னா யப்பா என்னாடி பண்ணும்? நாம்ம ஜமீன்தாரு பரம்பரையா? நாலு ஊர்ல நாலு வெதமா வூடு கட்டிக் கெடக்கறதுக்கு? நாட்டுல அவனவனும் வூடு யில்லாம கெடக்குறப்போ நமக்குன்னு சுருட்டிக்கிட்டுப் படுத்துகிறதுக்கு ஒரு வூடு இருக்கேன்னு நெனைக்காம, இருக்குற வூட்டுக்குள்ளார வர மாட்டேம்ன்னா ன்னாடி அர்த்தம்? இந்த நேரத்துலப் போயி திடுதிப்புன்னு வூடுன்னுப் போயி அலைஞ்சு எஞ்ஞத் தேடிப் பிடிக்க முடியும் சொல்லு? ஒரு வூடு பிடிக்கிறதுன்னாலும் கொறைச்சலா பத்து நாளுக்கு மேல ஆவாதா? யிப்பிடி திடுதிப்புன்னு ரண்டு நாளுல்ல டிஸ்ஸார்ஜ் ஆயிடலாம்ன்னு இருக்குறப்போ தலையில குண்டெ தூக்கிப் போடுறாப்புல சொன்னா என்னத்தாம் பண்ணுறது? நம்ம குடும்ப நெலமெ தெரிஞ்சித்தாம் பேசுதீயா? யில்ல மனம் போன போக்குல எதாச்சும் பேசுவேம்ன்னு நெனைச்சிப் பேசிட்டு இருக்கீயா?"ன்னுச்சு வெங்கு ஓம் மனசு முக்கியம்ங்றதுக்காக மித்தவங்க மனசெ ஏறி மிதிச்சிப்புடாதேங்றாப்புல.

            "யாருக்குமே நம்மளோட மனநெல முக்கியமில்ல யில்ல?"ன்னு சத்தம் போட்டா செய்யு கூண்டுல சிக்குன மானோடெ பரிதவிப்பு அதுக்குத்தாம் தெரியும்ங்றாப்புல.

            "ஆஸ்பிட்டல்டி! இஞ்ஞ ஏம்டி சத்தம் போடுறே? சுத்தி இருக்குறவங்க நம்மளயே பாக்குறாங்க பாருடி!"ன்னுச்சு வெங்கு மைக்கப் போட்டு முழுங்குனவளெப் போல கத்தாதேங்றாப்புல.

            "யிப்பிடித்தாம் வூட்டுக்கு வந்தாலும் எதாச்சும் சத்தம் போடுவேம். அக்கம் பக்கத்துல இருக்குறவங்க ன்னா ஏதுன்னு கேக்கத்தாம் செய்வாங்க. யப்போ அத்து அசிங்கமாவதுன்னா தாரளமா அழைச்சிட்டுப் போங்க. ஆன்னா வூட்டுல நாம்ம நிம்மதியா சந்தோஷமா இருந்துடுவேம்ன்னு மட்டும் நெனைச்சிப்புடாதீயே! நம்மள நீஞ்ஞ அந்த கண்ணபிரான் டாக்கடர்கிட்டெ அழைச்சிட்டுப் போயி தொடந்தாப்புல காட்டுற மாதிரிக்கித்தாம் இருக்கும். பொண்ணுன்னா ஒண்ணு புருஷம் வூட்டுல இருக்கணும். அப்பிடி யிருக்க முடியலன்னா சத்தியமா பொறந்த வூட்டுல மட்டும் இருக்க முடியாதும்மா! அப்பிடி யிருந்தா ஊர்ல நாலு வெதமா பேசுவாங்கம்மா! அந்த வூட்டுல அந்த ஊர்ல இருந்துகிட்டு ஒரு நல்லது கெட்டதுன்னா நம்மாள போவ முடியுதா? வெளியில தல காட்ட முடியுதா? நாம்ம ஒரு மனுஷியா சொதந்திரமா நடமாட முடியுதா சொல்லு. பெறவு அந்த ஊர்ல எதுக்கு இருக்கணும்ங்றே?"ன்னா செய்யு சாவகாசமா நடக்க முடியாத ஊர்ல சகவாசம் எதுக்குங்றாப்புல.

            "வெளியிலன்னா ஒன்னய எஞ்ஞ வைக்கிறது? யாரு தொணெ இருக்குறது சொல்லு? அதுல நெறைய செருமம் இருக்குடியம்மா!"ன்னுச்சு வெங்கு ஊருக்கு வெளியில தன்னந் தனியா இருக்குற ஐயனாரு சாமியப் போல பெத்த பொண்ண வுட்டுப்புட முடியுமாங்றாப்புல.

            "யாரும் நம்மளுக்குத தொணெ இருக்க வாணாம். நாம்மப் பாட்டுக்கு தனியா இருந்துக்கிறேம். ஆன்னா நம்ம ஊர்ல மட்டும் இருக்க மாட்டேம். வேற எந்த ஊர்லன்னாலும் பரவாயில்ல இருக்குறேம்."ன்னா செய்யு முட்டைய வுட்டு ஒடைச்சிட்டு வர்ற குஞ்சு திரும்ப முட்டைக்குள்ளயா இருக்குங்றாப்புல.

            "நம்ம ஊர்ல யிருக்கிறப்பவே போலீஸ்காரவோ வந்துப் பிடிக்கிறாவோ, ஒதைக்குறாவோ, எம் பொண்ணோட நாம்ம பெத்த மாணிக்கத்தோட முதுகெ ஒடைச்சிருக்காவோ. ஆளுகளெ வெச்சிப் பஞ்சாயத்துப் பண்ணித் திரிச்சி வுடுறாவோ. வெளியில ஒரு ஊர்லன்னா நமக்குத் தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க யாரு யிருக்கா? நாம்ம எப்பிடிச் சமாளிக்க முடியும் சொல்லு? தெரியாத பிடாரிக்கு தெரிஞ்ச பிசாசு எவ்வளவோ தேவல!"ன்னுச்சு வெங்கு பக்கத்துல இருக்குறப்பவே பக்காவா காப்பாத்த முடியலங்றப்போ திக்குத் தெரியாத எடத்துல தெய்வம் கூட தொணையிருக்காதுங்றாப்புல.

            "தங்காச்சிய ஒண்ணும் சொல்லதம்மா! அதொட மனசு ரொம்பப் பாதிச்சுப் போயிருக்கு. கொஞ்சம் மனசு ஆறுனாத்தாம் செரிபட்டு வரும்!"ன்னாம் விகடு மனசுக்குள்ள கெடந்து ஒழல்றவங்ககிட்டெ ஒலகத்தெ பாருன்னு சொல்ல முடியாதுங்றாப்புல.

            "அதுக்குத்தாம்டா சொன்னேம்! இந்த வழக்கு வாணாம். அவ்வேம் கொடுக்குற காசி பணமும் வாணாம். வெட்டி வுட்டுப்புட்டு வந்துப்புடுங்கன்னு. என்னவோ நீஞ்ஞப் பாட்டுக்கு வழக்கு நடத்துறேம், வழக்கு நடத்துறேம்ன்னு நடத்திக்கிட்டு இருக்கீயே? எத்தனெ வருஷம்டா நடத்துவீயே? அவளுக்கும் வயசு ஆயிட்டே போவுதுல்லா! எந்த வயசுல மறுக்கா கலியாணத்தெ பண்ணிக் கொடுப்பீயே சொல்லு? நம்ம காசியா யிருந்தாலும் செரித்தாம், அவனுவோ கையிக்குப் போயி இனுமே அத்து நம்ம கைக்கு வார வாணாம்!"ன்னுச்சு வெங்கு கன்னுக்குட்டியோட தும்பெ வுட்டுப்புட்டு வாலை பிடிக்கிறீங்களேங்றாப்புல.

            "ஆம்மா அவனுவோ ஒழைச்சுச் சம்பாதிச்சக் காசிய நாம்ம கொடுன்னு கேக்குறேம் பாரு! எம்மாம் கடன்பட்டுச் சேத்துக் கொடுத்த காசி? அதெ வாங்குறதுக்குக் கூட யோசிச்சா, அவனுவோ யிப்பிடித்தாம்டா பேசுவானுவோடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வெங்கு சொன்னதெ கேட்டு நாம்மளே திருட்டுப் பயெகிட்டெ வூட்டுச் சாவிய எடுத்துக் கொடுத்துப்புட கூடாதுங்றாப்புல.

            "அவனுவோ கொடுத்தாலும் எதாச்சும் மந்திர தந்திரம் பண்ணித்தாம் கொடுப்பானுவோ. அத்து ஏம்டாம்பீ நமக்கு?"ன்னுச்சு வெங்கு பில்லி சூன்யத்தெ ஆசெயா கொடுக்குறாம்ங்றதுக்காக அதெ வாங்கிக்கிட முடியுமாங்றாப்புல.

            "மந்திர தந்திரம் பண்ணி யித்தனெ நாளு நடந்துகிட்டு யிருக்குற கேஸ்ஸ அவனுவோ முடிச்சிக்கிட வேண்டித்தானே? பேசுறா பாரு பேச்ச? வாங்கி வெச்சிருக்கிற கடனுக்கு வட்டிக் கட்ட முடியாம முழிப் பிதுங்கிப் போயிக் கெடக்குது. அதெ நெனைக்குறாள ஒஞ்ஞ யம்மா? இதெல்லாம் சுத்த மொறகெட்ட பேச்சுடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு எதிரி வந்து அடிக்கிறதுக்கு மின்னாடி நாம்மளே நம்மள அடிச்சிக்கிட கூடாதுங்றாப்புல. நூலறந்த பட்டத்தெ போல பேச்சு எங்கயோ ஆரம்பிச்சி எங்கயோ சுத்திக்கிட்டுப் போறது தெரிஞ்சது விகடுவுக்கு.

            "அதெப் பத்தி பெறவு பேசிக்கிடலாம்ப்பா! யிப்போ தங்காச்சிய அழைச்சிக்கிட்டுப் போறதெப் பத்தித்தாம் ஒரு முடிவுக்கு வந்தவாணும்!"ன்னாம் விகடு தெச தெரியாம போயிட்டு இருக்குற கப்பலுக்குத் தெசைய காட்டி வுடுறாப்புல.

            "இந்தாருடாம்பீ! நம்மாளல்லாம் வேற ஊருல வூட்டுலக் கொண்டுப் போயி வெச்சிப் பாக்க முடியாது. ரிட்டையர்டு ஆயி பென்ஷன் காசியில யிப்போ இருக்குற நெலமையில எப்பிடிடா காலத்தெ ஓட்டுறதுன்னு நின்னுகிட்டு இருக்கேம். ஒமக்கு ஒரு குடும்பம் ஆயி பொம்பளப் புள்ளையப் பெத்து வெச்சிருக்கே. நீயும் எம்மாம்டா சிலவே பண்ணுவே? இன்னொரு வூடுன்னு பாத்தா அதுக்கு வாடவே யில்லாம ஓசிக்கா போயி குடி வைப்பே? அந்த வூட்டுக்குன்னு சமையலு கேஸூ, மளிகெ சாமாஞ், தட்டுமுட்டுச் சிலவுன்னு ஆவுமா யில்லியா? யிப்போ யிருக்குற நெலமைக்கு எப்பிடா அதெல்லாம் சமாளிப்பே? இதுல வழக்குக் கட்டுக வேற கையில வந்துக் கெடக்கு. அதெ இன்னொரு வக்கீல்கிட்டெ கொண்டுப் போயிக் கொடுக்கலாம்ன்னு பாத்தா ஆர்குடியில ஒரு வக்கீலு எடுக்க மாட்டேங்றாவோ! அதுக்கு வேற வக்கீலப் பாத்துக் கெஞ்சிக் கூத்தாடி அவ்வேம் கேக்குற காசியக் கொடுத்து வழக்க நடத்தியாவணும். கெளரவத்தெ வுடுறாப்புல பாதியிலயே வுட்டுப்புட்டு நிக்க முடியாது. எதெ சமாளிப்பே சொல்லு? பொண்ணுன்னா அதெல்லாம் உணர்ந்துப் பாக்குற பொண்ணா இருக்கணும்டாம்பீ! பணம் ஒண்ணும் மரத்துல காய்ச்சிடல. நாம்மளும் ஒண்ணும் பரம்பரெ பணக்காரணுமில்ல. முட்டிப் போட்டு தட்டித் தப்பி எழுந்து நிக்கலாம்ன்னு பாத்தா மறுக்க மறுக்கா தாட்டி வுட்டா என்னத்தெ பண்ணுறது?"ன்னாரு சுப்பு வாத்தியாரு எழுந்து நிக்குறப்பல்லாம் கால வாரி வுடக் கூடாதுங்றாப்புல.

            "நம்மளப் பத்தி யாரும் கவலெப்பட வாணாம்ண்ணே! நம்மள எம்பில்லு வரைக்கும் படிக்க வெச்சிட்டீயே. அதெ வெச்சி நாம்ம எஞ்ஞயாச்சும் ஒரு வேலயப் பாத்து எஞ்ஞயாயும் எப்பிடியாச்சும் இருந்துடுவேம். நம்மளப் பத்தி யாரும் கவலப்பட வாணாம். ஆஸ்பிட்டல்ல நாளானைக்கு டிஸ்சார்ஜ் ஆவுறப்போ நம்மள யாரும் வந்துப் பாக்க வாணாம். நாம்மளா நாம்ம நெனைச்ச எடத்துக்குப் போயிக்கிறேம். யாருக்கும் நாம்ம பாரமாவும் யிருக்க விரும்பல. நமக்குப் பிடிக்காத எடத்துல வந்து இருக்கவும் நம்மாள முடியல! நம்மளப் போட்டு வதைக்காம நம்மப் போக்குல வுட்டுப்புடுங்க!"ன்னு கையெடுத்துக் கும்புட்டு அழுவ ஆரம்பிச்சிட்டா செய்யு போற உசுரே காப்பாத்த நெனைக்காம போவ வுட்டுப்புடுங்கங்றாப்புல.

            விகடுவுக்கு மனசு என்னவோ போல ஆயிடுச்சு. "இஞ்ஞ ஆர்குடியில ஒரு வூட்டெப் பாத்து வாடவைக்கு ஒன்னயும் யம்மாவையும் வைக்கிறேம். யிருக்குறீயா?"ன்னாம் விகடு ஒலகத்துல ஊருக்கா கொறைச்சல்ங்றாப்புல.

            "ம்ஹூம்! இஞ்ஞத்தானேன்னா செருப்ப கழட்டி அடிச்சி பெரச்சனெ நடந்திருக்கு. நம்மளப் பத்தி இஞ்ஞ எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்ண்ணே!"ன்னா செய்யு நாடோடியாப் போறவேம் அறிஞ்ச ஊருப் பக்கம் போவ மாட்டாம்ங்றாப்புல.

            "செரி வுடு! அப்பிடி ஆர்குடி பிடிக்காட்டி திருவாரூர்ல ஒரு வூட்டுப் பாத்து வாடவைக்கு வெச்சா யிருப்பீயா?"ன்னாம் விகடு அக்கரையில மேயப் பிடிக்காத மாட்டுக்கு இக்கரை இருக்குங்றாப்புல.

            "வாணாம்ண்ணே! இந்த ஆர்குடியும் வாணாம். திருவாரூரும் வாணாம். ரண்டு ஊருமே நாம்ம படிச்ச ஊரு. நம்மளோட படிச்ச யாராச்சும் சந்திக்கிறாப்புல ஆயிடும். அப்பிடி சந்திக்கிறப்ப நம்மளப் பத்தி, கலியாணத்தப் பத்தி, கொழந்த குட்டியப் பத்தி யாராச்சும் கேக்குறப்ப சங்கடமா இருக்கும்ண்ணே! அன்னிக்குப் பூரா மன உளைச்சலா இருக்கும். தூக்கமே வர்ராது. அத்து சரியாவுறதுக்கு ரண்டு மூணு நாளாச்சும் ஆவுது. அதெ கடந்து வந்து படிக்க ஆரம்பிச்சா திரும்ப யாராச்சும் சந்திக்குறாப்புல ஆயிடுது! வாண்டாம்ண்ணே இந்த ஏரியாவே வேண்டாம்ண்ணே! நாம்ம பியெச்டிக்கு என்ட்ரன்ஸூக்குப் படிச்சி செலக்ட் ஆனாத்தாம் நம்மட மனசெ அதெ காட்டி சரி பண்ண முடியும். அதுக்குப் படிக்கிறாப்புல அமைதியான நம்மளப் பத்தி யாருக்கும் எதுவும் தெரியாம ஒரு எடமா இருக்கணும்ண்ணே! சத்தியமா சொல்றேம்ண்ணே இஞ்ஞ யிருந்தா நம்மாள படிக்கவும் முடியாது, நிம்மதியாவும் யிருக்க முடியாது. நாம்ம சத்தியமா பைத்தியக்காரியச்சியா ஆயிடுவேம். நெசமா சொல்றேம்ண்ணே ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துப் பொழைக்குறாப்புலத்தாம் இருக்கும். இந்த ஊர்ல இருக்குறதெ வுட செத்துப் போயி நரகத்துக்குப் போறது மேல்ண்ணே!"ன்னு அழுதுகிட்டெ சொன்னா செய்யு மனுஷ வாடைப் படாத ஊரு ஒண்ணு ஒலகத்துல இருக்குமாங்றாப்புல.

            "நம்ம நெலமைக்கு யிப்போ இதுவே செருமம். இதுல இஞ்ஞ ஆர்குடியில யிருக்க மாட்டேம், திருவாரூர்ல யிருக்க மாட்டேம்ன்னா ன்னா பண்ணுறது? கண்காணாத தூரத்துல வுட்டுப்புட்டு ஒரு அவ்சரம்ன்னா எப்பிடி வந்துப் பாக்குறது? ன்னடாம்பீ இத்து ஒரு புரியாதப் பொண்ணா யிருக்கு? இத்துச் சொல்லுதுன்னு நீயும் அத்துச் சொல்றப்படி ஆடிட்டு இருக்கே? கொஞ்சம் கூட பொதுஅறிவே ஒமக்கும் கெடையாதா? ஒந் தங்காச்சிக்கும் கெடையாதா? இதெல்லாம் ஊர்ல ஒரு நாலு பேத்துக்கிட்டெ சொல்லிப் பாரு, சூத்தாலத்தாம் சிரிப்பாம். செரி கெராமத்துல நாலு பேத்து இதெப் பத்தி பேசுவாங்றதெ கூட ஞாயம்ன்னாலும். இஞ்ஞ ஆர்குடி டவுன்ல, திருவாரூரு டவுன்ல பக்கத்துல இருக்குறவேம்ல்லாம் எப்பிடிப் பேசுவாம். இவ்வோளுக்கு பக்கத்துலு இருக்குறதே யாருன்னேத் தெரியாதுங்றப்போ எவ்வேம்டா இவ்வே சொல்றதப் பத்திப் பேசுவாம்? அப்பியென்னடாம்பீ நம்ம நெலமயேப் புரிஞ்சிக்கிட்டு மனசெ ஒரு நெல பண்ணிக்க முடியாத படிப்பு? அப்பிடி ஒரு படிப்பெ படிச்சித்தாம் என்னத்த ஆவப் போவுது? படிப்புங்றது நமக்கா? யில்ல அந்தப் படிப்புக்காக நாம்மளா? கேக்குறேம் சொல்லு! எல்லாம் மனசுதாம்டாம்பீ! அதெ செரி பண்ணிக்கிட்டா எஞ்ஞ யிருந்தாலும் இருக்கலாம், படிக்கலாம், எதெ வாணாலும் சாதிக்கலாம். நாட்டுல எத்தனயோ பேரு பாரு யிருக்க எடமில்லாம, ரோட்டோரமா இருந்துகிட்டெல்லாம் வைராக்கியமா சாதிக்கல! அவனுவோல்லாம் வாழல?"ன்னாரு சுப்பு வாத்தியாரு மனசெ சரிபண்ணிக்கிட்டா மயானத்துல கூட குடி இருக்கலாம்ங்றாப்புல.

            "யண்ணே வேணாம்ண்ணே! வுட்டுடுண்ணே! நாம்ம நம்ம வாழ்க்கயப் பாத்துட்டுப் போயிட்டே இருக்கேம். யப்பாவுக்கு விருப்பமில்லன்னா அதால ஒண்ணும் தப்புல்ல. அவுங்க கருத்து அவுங்களுக்கு. அவுங்க மனசு அவுங்களுக்கு. அதே போல நம்மட கருத்து நமக்கு. நம்மட மனசு நமக்கு. நம்மாள யாருக்கும் எந்தத் தொந்தரவும் வாணாம். எந்தப் பெரச்சனயும் வாணாம். நம்மள நம்மப் போக்குக்கு வுட்டப்புடுங்க. இம்மாம் காலம் நல்லபடியா வெச்சுப் பாத்துக்கிட்டீங்க. ரொம்ப நன்றி. அதுவே போதும்ண்ணே!"ன்னா செய்யு கண்ணு கலங்கி முறிஞ்சிட்டு வுழுவ நெனைக்குற கெளைய ஒட்ட வைக்க நெனைக்காதேங்றாப்புல.

            "பாத்தியாடாம்பீ எம் பொண்ண? எப்பிடிப் பேசுறாப் பாரு!"ன்னு வெங்கு ஆஸ்பிட்டல்ன்னும் பாக்காம ஒடைஞ்சி அழுவ ஆரம்பிச்சிது அழுகாச்சியப் பாத்தா அழுகெ வரும், சிரிப்பாணியப் பாத்தா சிரிப்பு வாரும்ங்றாப்புல.

            "இஞ்ஞ யில்லன்னா வேற எஞ்ஞத்தாம் இருப்பேன்னாவது சொல்லேம்!"ன்னாம் விகடுவும் ஒடைஞ்சிப் போன கொரல்ல செய்யுவப் பாத்து வேத்துக் கிரகத்துல இருக்குறதுன்னாலும் சொல்லு, அங்க ஒரு எடத்தெப் பாத்துத் தர்றேம்ங்றாப்புல.

            "திருச்சின்னா பரவாயில்ல!"ன்னா செய்யு தயார் நிலையில இருக்குறவேம் துப்பாக்கிய எடுத்துப் பொசுக்குன்னு சுட்டுப்புடறாப்புல. பலநாளா பேஞ்ச மலையில பாசி பிடிச்சுப் போயிருக்குற எடத்தெ போல இதெப் பத்தி பல நாளா யோசிச்சு வந்திருப்பா போல செய்யு.

            "அம்மாம் தூரத்துல வுட்டுப்புட்டு ஒன்னய யாரு வந்துப் பாத்துக்கிறது? வாரத்துக்கு ஒரு தவா வாராட்டியும் மாசத்துக்கு ஒரு தவாவது வந்துப் பாக்கணுமில்லா! ஏந் தங்காச்சி யிப்பிடிப் பேசுறே?"ன்னாம் விகடு நெனைச்ச நேரத்துல நெனைச்ச எடத்துக்குப் போவுற மாதிரிக்கு, அதாச்சி கூடு வுட்டு கூடு பாயுறதெ போல எடம் விட்டு எடம் போக இங்க யாருக்கு என்னத்தெ தெரியும்ங்றாப்புல.

            "அப்பிடியில்லன்னா தஞ்சாரூ யில்ல கும்பகோணம் பக்கமா யிருந்தா பரவாயில்ல!"ன்னா செய்யு என்னவோ தஞ்சாவூரும் கும்பகோணமும் திட்டை கெராமத்துலேந்து கூப்புடு தூரத்துல இருக்குங்றாப்புல.

            சுப்பு வாத்தியாரு கைய ஊனிக்கிட்டு ஆஸ்பிட்டலு கட்டில்ல உக்காந்திருந்தவரு, கைய எடுத்து நெஞ்சுக்குக் குறுக்கா கட்டிக்கிட்டு நிமுந்தாப்புல வெறிச்சிப் பாத்தாரு செய்யுவ. என்னவோ புதுசா பொறந்தவேம் ஒலகத்தையே பாக்காதவேம் போல பாக்குறாப்புல எல்லாத்தையும் ஒரு பார்வெ பாத்தாரு.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...