3 Feb 2021

பொண்ணப் பெத்ததுல வந்து சேர்ந்த சிரமம்!

பொண்ணப் பெத்ததுல வந்து சேர்ந்த சிரமம்!

செய்யு - 706

            வக்கீல் சிவபாதத்தோட பேசி முடிச்சிருந்தப்போ மழெ ஒரு பாட்டம் அடிச்சி முடிச்சிருந்துச்சு. கெளம்பிப் போயிட்டு இருந்தப்போ சட்டுன்னு கரண்டு நின்னு எடமெல்லாம் இருண்டுப் போச்சுது. மழெ பேஞ்சி ஓஞ்கிருந்த ரோட்டோட ரண்டு பக்கமும் தவளைகளோட சத்தம் கர்ட்டு கர்ட்டுன்னுக் கேட்டுக்கிட்டு இருந்துச்சுது. இருட்டு இன்னும் கருப்ப நல்லா அள்ளிப் பூசுனாப்புல இருந்துச்சு. டிவியெஸ் பிப்டியோட வெளிச்சமும் மங்கலாத்தாம் மின்னாடி வுழுந்துச்சு. அதெப் பாத்துட்டு பாத்து மெதுவா போவணும்ன்னாரு பின்னாடி உக்காந்திருந்த சுப்பு வாத்தியாரு. மழெ அப்பைக்கப்போ திடீர் திடீர்ன்னு தூவானம் போடுறதும், நிறுத்துறதுமா இருந்துச்சு.

            "ரொம்பச் செருமம்டாம்பீ இந்தப் பொண்ண பெத்து நமக்கு!"ன்னு மொத மொறையா விரக்தியா பேச ஆரம்பிச்சாரு சுப்பு வாத்தியாரு பொண்ணப் பெத்துப் புண்பட்டுப் போய்ட்டேம்ங்றாப்புல.

            "ஏம்ப்பா யிப்பிடிப் பேசுதீயே?"ன்னாம் விகடு வயசு தளர அடிச்சாலும் மனசு தளர வுடக் கூடாதுங்றாப்புல.

            "பெறவென்னடாம்பீ! அத்து பாட்டுக்குச் செருப்பக் கழட்டி அடிச்சி இப்போ ன்னா பண்ணுறதுன்னே புரிய மாட்டேங்குது. மின்னாடியே கொடுக்குறதெ வாங்கிட்டு எதெயோ எப்பிடியோ முடிச்சிட்டுப் போவ வேண்டியதெ பிடிவாதமா நின்னு தடுத்து, யிப்போ ஒண்ணும் ல்லங்ற நெலமெக்கு வந்து நிக்க வேண்டியதா இருக்கு. இதுக்கா இம்மாம் அசிங்கப்பட்டு, வேதனெப்பட்டு நிக்கணும் சொல்லு? அந்த வக்கீலு என்னவோ கேஸ்ஸ எடுக்குறதுக்கே இம்மாம் யோசிக்கிறாம். நாம்ம என்னவோ பண்ணக் கூடாத கொலக் குத்தத்தெப் பண்ணதெப் போல அவ்வேங்கிட்டெப் போயி நின்னு கேஸ்ஸ எடுத்துக்கன்னு கால்ல வுழுவ வேணும் போலருக்கு. இதெல்லாம் நம்ம குடும்பத்தால தாங்க முடியுமாடாம்பீ? எம் வயசுக்கு இனுமே இதெ தாங்கி முடிக்க முடியுமாடாம்பீ? வயசு ஆச்சு. வூட்டோட கெடந்து கடெசீக் காலத்தெ ஓட்டிட்டுப் போறதெ வுட்டுப்புட்டு, யின்னும் யிப்பிடி ஓடிட்டெ கெடக்கணும்ன்னா எப்பிடிடாம்பீ? பேரன் பேத்தியப் பாத்துக்கிட்டு கொழந்தைகளோட கொழந்தைகளா கெடக்க வேண்டிய வயசுல கோர்ட்டு கேஸ்ன்னு அலையுறதுக்கு யாருக்குடாம்பீ பெராணம் இருக்கு சொல்லுடாம்பீ?"ன்னு கிட்டதட்ட பொலம்புற மனநெலைக்கே வந்துட்டாரு சுப்பு வாத்தியாரு கரைய ஒடைக்குற வெள்ளத்துக்கு மண்சொவத்தெ ஒடைக்குறதுக்கு எம்மாம் நேரம் ஆவும்ங்றாப்புல. அவரெ எப்பிடித் தேத்துறதுன்னு புரியாம தடுமாறுனப்படியே வண்டிய ஓட்டுனாம் விகடு, மனசு தளந்துப் போவுறப்போ பெரியவங்கத்தாம் சின்னவங்கள தேத்தணும், இப்போ பெரியவங்களே மனசு தளந்துட்டா அதெ எப்பிடித் தேத்த முடியும்ங்றாப்புல.

            "அதுல பாருடாம்பீ! நம்ம வக்கீலும் நமக்கு இந்தக் கதியாயிருக்கேன்னு ஒரு நாளு கூட பேருக்குக் கூட வந்து பாக்கல பாருடாம்பீ! அதெ நெனைக்கிறப்பத்தாம் நெஞ்சு வேகுறாப்புல இருக்குது. அவ்வேம் கேட்ட காசியெல்லாம்தானடாம்பீ கொடுத்தேம். காசிய இல்லங்றப்பயும் எப்பிடியோ தேத்தித்தானே கொடுத்தேம். ஒரு நல்ல விசயத்துக்காக அம்மாம் செருமப்பட்டு காசியச் சேகரம் பண்ணலாம்டாம்பீ! ஆன்னா இந்த மாதிரி வெவகாரத்துக்கு அப்பிடில்லாம் செருமப்பட்டு காசியச் சேகரம் பண்ணணும்ன்னு தலெயெழுத்தாடாம்பீ? அதெல்லாம் ஒந் தங்காச்சி ஒணர்ந்துப் பாக்கணும்டாம்பீ! என்னவோ தன்னோட கோவந்தாம் பெரிசுங்ற மாதிரிக்கி வக்கீல செருப்ப கழட்டி அடிச்சிட்டாப் போச்சா? இப்போ இதெயெல்லாம் யாரு எதிர்கொள்ளுறது? நமக்கென்னவோ பயமா இருக்குடாம்பீ! இதுக்கு மேல இத்து எப்பிடில்லாம் போவப் போவுதோன்னு? நம்ம வக்கீலும் கூப்புட கூப்புட வந்துப் பாக்க மாட்டேங்றாம். போயிப் பாக்குற வக்கீலும் என்னவோ பெரிய மேனா மினிக்கிக் கணக்கா பிகு பண்ணுறாம். இந்தக் கேஸ்ஸூ என்ன கதியாப் போவுதோ? ஆஸ்பிட்டல்ல கெடக்கற இவ்வே கதி என்னவாகப் போவுதோ? நாம்ம எத்தனெ நாளுக்குடாம்பீ யிப்பிடி நாயா பேயா அலைய முடியும்?"ன்னாரு சுப்பு வாத்தியாரு வயசான காலத்துல வாலிபத்துல அலைஞ்சதெ போல அலைய முடியுமாங்கிறாப்புல.

            "எல்லா கெட்டதும் கொஞ்ச நாளுக்காகத்தாம் இருக்கும்பா! பாத்துக்கிடலாம் வாஞ்ஞ!"ன்னாம் விகடு கால முழுசுக்குமா புயலும் காத்து அடிச்சிக்கிட்டு இருக்குமாங்றாப்புல.

            "கோவிந்து சொல்றது செரித்தாம். இனுமே நம்ம வக்கீல்கிட்டெ கேஸ் கட்டு இருக்கக் கூடாதுடாம்பீ! அதெ வாங்கி ஒண்ணுமே தெரியாத ஆளுகிட்டு கொடுத்துக் கூட வழக்க நடத்தலாம். ஆன்னா அவ்வேங்கிட்டெ கொடுக்கக் கூடாது. அதெ மொதல்ல வாங்கியார்ர வழியப் பாக்கணும்டாம்பீ! வாங்கியாந்து வேற ஆளுகிட்டெ கொடுத்தாத்தாம் சரிபட்டு வாரும்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பல்லில்லாட்டியும் பரவாயில்ல, விருப்பமா கேக்குறவேம்க்கிட்ட பக்கோடாவா கொடுக்கணும்ங்றாப்புல.

            "மொதல்ல தங்காச்சியக் கொணம் பண்ணிப்பேம்ப்பா! அவ்வே கொணமானதும் அதெ பாத்துக்கிடலாம்ப்பா!"ன்னாம் விகடு பழுதெ சரிபண்ணிப்புட்டா பழுதில்லாம வண்டியில பயணம் போவலாம்ங்றாப்புல.

            "அதென்ன கொணம் பண்ணுறதுக்கு? நாற்காலியில உருட்டித் தள்ளி வுட்டதுக்கு நாலு நாளுக்கு வலிச்சித்தாம் நிக்கும்."ன்னாரு சுப்பு வாத்தியாரு பொண்ணு அடிப்பட்டதெ வுட பொண்ணால தாம் வாழ்க்கையில பட்ட அடி பெரிசுங்றாப்புல.

            "அதென்னப்பா இம்மாம் சாதாரணமா சொல்லுதீயளேப்பா?"ன்னாம் விகடு அடிப்பட்டவேமுக்கு வலிக்குறதெ விட அதெ வேடிக்கெ பாக்குறவனுக்கா அதிகம் வலிக்குமாங்றாப்புல.

            "வெறென்னத்தடாம்பீ பண்ணச் சொல்றே? நடக்குற கதெயெப் பாக்குறப்போ எல்லாமே சாதாரணமாப் போச்சுடாம்பீ! இனுமே இப்பிடித்தாம் நடக்கும் போலருக்கு. இதெ ஒண்ணுத்தையும் தடுக்க முடியும்ங்றாப்புல நமக்குத் தெரியல. அருணா கயித்துன்னு நெனைச்சு பாம்ப அள்ளி கட்டிட்ட கதெயா இருக்க நம்ம கதெ. கட்டுன்ன பாம்பு கடிக்காம வுடாதுங்றதெ வுட, கட்டுன்ன பாம்பெ அவுத்து எப்பிடி எறியுறதுன்னு புரியல பாரு. நெனைக்க நெனைக்க நெஞ்சு வேகுதுடாப்பா! அதெ நெனைச்சா கதெ ஆவுமா சொல்லு! ஏதோ நம்மால சரிபண்ண முடியுறதெ மட்டுமாச்சும் சரிபண்ணித்தாம் ஆவணும். அதுல ஒண்ணு இந்த வக்கீல மொதல்ல மாத்துறது. ஏன்னா இப்போ அவ்வேம் மேல சந்தேகம் வந்தாச்சு. சந்தேகத்தோட இவனெ வெச்சிக்கிட முடியாது. இவனெ தொடந்தாப்புல வெச்சிக்கிட்டு பின்னாடி ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிட்டா அப்பவே சந்தேகப்பட்டோமேங்ற நெனைப்பு வேற வாட்டி வதைக்கும். அதால இதுல இனுமே யோசிக்க ஒண்ணுமில்ல. மொதல்ல அவ்வேங்கிட்டெ இருக்குற கட்டுகள வாங்கிட்டு மறுவேலப் பாத்தாத்தாம் சரிபட்டு வரும். இனுமே இந்த வழக்கு என்ன கதிக்குப் போனா ன்னா? அதெ பாக்கக் கூடாது அத்தனெ அசிங்கத்தையும் பாத்தாச்சு. நம்மாள என்ன பண்ண முடிஞ்சது சொல்லு! நம்மாள ஒண்ணும் பண்ணவும் முடியாது. எதாச்சும் பண்ணணும்ன்னு எறங்குனா நாமளும் ஒரு ரெளடியாத்தாம், போக்கிரியாத்தாம் போயாவணும். அப்பிடிப் போவ போவ சிக்கலு இடியாப்பச் சிக்கலப் போல பெரிசாயிட்டெ இருக்குமே தவுர கொறையாது. இந்த எடத்தோட நின்னுக்கிடணும். நம்மால முடிஞ்சது அவ்ளோத்தாம். அதெத் தாண்டிப் போவக் கூடாது. நம்மாள ஆவ வேண்டியதெ செஞ்சாச்சு. அதுக்கு மேல எதெயும் பண்ணிடக் கூடாது. அப்பிடிப் பண்ண நெனைச்சா அத்து அராஜகத்தோட எல்லையிலத்தாம் போயி நிக்கும். நாம்ம அப்பிடி எறங்கிடக் கூடாது பாத்துக்கோ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கொலைகாரனெ மாத்துறேன்னு போயி நாம்ம கொலைகாரனா ஆயிடக் கூடாதுங்றாப்புல.

            "நடக்கப் போற எதெயும் நம்மாள தீர்மானிக்க முடியலங்றப்போ நாம்ம போவுறப் போக்குலத்தாம் போயாவணும்ப்பா!"ன்னாம் விகடு ஆத்துல போற படகுக்கு ஆத்தெ வுட்டா வேற புது வழி எங்க இருக்குங்றாப்புல.

            "வேறென்ன வழியிருக்கு? இனுமே கடவுள் காட்டுற வழித்தாம். நாம்ம சொல்லி யாரும் கேக்குறாப்பலயோ, நடக்குறாப்புலயே ல்லங்றப்போ போவுற வழியில்ல போயிட்டுத்தாம் இருக்கணும். நடக்குற எதுவும் நம்ம கையில இல்லங்றப்போ நாமென்ன பண்டிட முடியும்? ஆன்னா நீயி வண்டியப் பாத்து மெதுவா ஓட்டுடாம்பீ! அத்து ஒங் கையிலத்தாம் இருக்கு. ஒலையா கெடக்குற எடம் வந்துடுச்சு பாரு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நடக்காததுக்கும் நடந்துக்கிட்டு இருக்குறதுக்கும் ஊடால ஒரு முடிச்சு இருக்குங்றாப்புல. அப்போ வண்டி கோரையாத்தாங்கரையத் தாண்டி போயிட்டு இருந்துச்சு. எல்லா எடத்துலயும் கரண்டு இல்லாம கும்மிருட்டா இருந்துச்சு. வண்டி வெளிச்சம் பத்தாமத்தாம் இருந்துச்சு. சேறும் சகதியுமா இருந்த ரோட்டுல வண்டிகப் போயிப் போயி சேறும் சகதியும் ஒரு பக்கமா ஒதுங்கியும் தெரண்டும் கெடந்துச்சு தயிரு கடையிற பானையில வெண்ணெயெல்லாம் ஒரு பக்கமா தெரளுறாப்புல. தெரண்டு கெடந்த சகதியோட ஒலை ஒரு சில எடங்கள்ல அத்து வண்டிய லேசா திருப்புனாப்புல இழுத்துச்சு.

            "பாத்துடாம்பீ! மொல்லமா போ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தலைக்கேத்தாப்புல வாலு திரும்புங்றதெ வண்டியில பின்னால உக்காந்துக்கிட்டு இருந்ததுல உணர்ந்தபடிக்கு.

            "இதுக்கு மேல மெல்லமா போவ முடியாதுப்பா! வண்டி அம்மாம் மெதுவா போவுது!"ன்னாம் விகடு போறதெ மொல்லமாங்றாப்புல அதுக்கு மேல வேறெப்படி போவுறதுங்றாப்புல.

            "இதுல நமக்கு ரொம்ப அனுபவம்டாம்பீ! வழுக்கி வுட்டு அது பாட்டுக்கு இழுத்துக்கிட்டுப் போயிடும். வர்றப்பவே பாத்தீல்லா பஸ்ஸூ ஒண்ணே எப்பிடி இழுத்துக்கிட்டெ போச்சுது. பஸ்க்கு நாலு பக்கமும் சக்கரம் அணைப்பு. சட்டுன்னு கவுந்துப்புடாது. ரண்டு சக்கர வண்டிக்கு அப்பிடிக் கெடையாது. நல்லா போறப்பயும் கவுறதுக்குக் காரணம் வேண்டியதில்லா. சட்டுன்னு சாய்ச்சிப்புடும்டாம்பீ! வண்டியில வேற நெறைய பேரு வுழுந்துட்டதா பேசிக்கிட்டாங்கில்லா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு நாலு காலு பெராணிய வுட ரண்டு காலு பெராணியான மனுஷனுக்குத் தடுக்கி வுழுவுறதுக்கு காரணம் தேவையில்லங்றாப்புல. புல்லு தடுக்கி வுழுந்தவேம் கதெ வரைக்கும் நாட்டுல இருக்கத்தானே செய்யுது.

            "நாம்ம கால்ல ரண்டு பக்கமும் அணைச்சாப்புலத்தாம் ஓட்டிட்டு இருக்குறேம்!"ன்னாம் விகடு காலிரண்டுல கவனம் இருந்தா கம்பு சுத்துறவேம் கவுந்துட மாட்டாம்ங்றாப்புல.

            "வேணும்ன்னா கூட எறங்கி வண்டியத் தள்ளிட்டுப் போயிடலாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பெலாக்கணம் வைக்கிறவேம்ங்கிட்டெ புத்தி சொல்லிப் பிரயோஜனம் இல்லங்றாப்புல.

            "இந்த வண்டிய எறங்கித் தள்ளிட்டுப் போறதுக்கு ஏறிப் போறதுதாம் சுலுவு!"ன்னாம் விகடு சேத்துல வண்டியோட்டி சாம்பியன் பட்டம் வாங்கியிருக்கிறாப்புல.

            "செரி பாத்துப் போ!"ன்னு சுப்பு வாத்தியாரு சொல்லி முடிச்சிருக்க மாட்டாரு வண்டி பாட்டுக்கு ஒரு ஓரமா இழுத்துட்டுப் போயி ரண்டு பேருமே சறுக்கிட்டு வுழுவுறாப்புல ஆயிடுச்சு. வாழ்க்கையில ரொம்ப நம்பிக்கையான தருணம்ந்தாம் ஆபத்தான தருணம் போலருக்கு. நல்லா இருக்கேம்ன்னு நெனைக்கிறப்பத்தாம் ஒடம்பு நோய்ப்பாட்டுல வுழுவுது. எப்பிடியும் பொழைச்சிடலாம்ன்னு நெனைக்கிறப்பத்தாம் உசுரு பிரிஞ்சிப் போவுது. எப்பிடியும் நெலமைய சமாளிச்சிப்புடலாம்ன்னு நெனைக்கிறப்பத்தாம் சமாளிக்க முடியாம போயிடுது.

            "நாம்ம சொன்னேம்லடா! யிப்பிடிப் பண்ணிட்டியே!"ன்னு சுப்பு வாத்தியாரோட கொரலு கேட்டுச்சு. வண்டி சறுக்கிக்கிட்டு வலதுப் பக்கமா இழுத்ததுல அந்தப் பக்கத்துல கண்ணாடி ஒடைஞ்சிருந்துச்சு. சிம்னி வௌக்க போல வண்டியில மின்னாடி எரிஞ்சிக்கிட்டு இருந்த வெளக்கு நின்னுப் போச்சுது. விகடு அழுத்திக் கைய ஊனுனதுல அவ்வேம் கையெல்லாம் சதெ பேந்துப் போயி ரத்தம் கொப்புளிச்சிது. தொடெ, காலு அங்கங்கே தோலும் சதையும் சிராய்ச்சி ரத்தமா இருந்துச்சு. முட்டிகிட்டெ பேண்ட்டு தேய்ஞ்சிக் கிழிஞ்சிப் போயிருந்துச்சு. சட்டுன்னு எழுந்தவேம் அப்பாரு நெனைப்பு வந்ததும், "யப்பா!"ன்னு நடுங்குன கொரலோட பின்னாடி பாத்தாம். சுப்பு வாத்தியாரும் அப்பிடியே வுழுந்து கெடந்தாரு. அவரோட வேட்டியெல்லாம் சேறு அப்பியிருந்துச்சு. அவரோட மொழங்கையி, காலு எல்லாம் சிராய்ச்சி தேய்ஞ்சிருந்துச்சு. அதுல வெளிவந்த ரத்தம் வேட்டிய நனைச்சிருந்தது அந்த கும்மிருட்டுலயும் கண்ணுக்குப் புரிஞ்சிது. அப்பிடி ஒரு கும்மிருட்டுல கண்ணு எப்படி ரத்தத்தெ மட்டும் சரியா பாக்குதுன்னு ஆச்சரியமா இருந்துச்சு. விகடு மொல்லமா எழுந்து சுப்பு வாத்தியார்ர எழுப்பி வுட்டாம். அவரால நிக்க முடியல. ஒடம்பெல்லாம் நடுங்குனுச்சு. "அப்பவே சொன்னேம்லடா!"ங்ற வார்த்தைய அவரு திரும்ப திரும்பச் சொல்லிட்டு இருந்தாரு தப்பு பண்ணிப்புட்டீயேடா மவனேங்றாப்புல. வண்டிய தூக்கி நிறுத்துனாம். அவனுக்கு ஒடம்புல இருந்த பலம் அத்தனையும் போனாப்புல இருந்துச்சு. இந்த வண்டிய தள்ளிக்கிட்டுப் போவ முடியுமாங்றதெ சந்தேகமா இருந்துச்சு. ரோட்டுல இருட்டெ தவுர வேற தொணை எதுவும் இல்ல. மழெ வேற நெலமெ புரியாம தூத்தலப் போட ஆரம்பிச்சிது. வண்டியிலேந்து வந்துட்டு இருந்த வெளிச்சம் சுத்தமா ல்லன்னாலும் அந்த இருட்டுக்குக் கண்ணு நல்லாவே பழக்கப்பட்டுப் போயிருந்துச்சு.

            வண்டியத் தள்ளிக்கிட்டு விகடு போவ சுப்பு வாத்தியாரு பின்னாடி நடந்தாரு. இள வயசா இருக்குற தனக்கே ன்னா வலி வலிச்சா, வயசான காலத்துல அப்பாருக்கு வலிக்கும்ன்னு நெனைப்போ விகடுவுக்கு அது வேற மனசுல ரொம்ப வலியா இருந்துச்சு. வண்டியில மின்னாடி போறவேம்மே வுட பின்னாடி உக்காந்து போறவுகளுக்குத்தாம் பொதுவா அடி நெரம்பப் படும் போறவேம் சரியில்லன்னா பின்னாடி போறவேம்முக்கு எதுவும் சரியா இருக்காதுங்றாப்புல. இப்பிடிக் கொண்டாந்து அப்பாரு எச்சரிச்ச எச்சரிக்கையும் பொருட்படுத்தாம வுட்டுப்புட்டேமேங்ற குற்ற உணர்ச்சி வேற அவனெ வாட்டுச்சு. லட்சுமாங்குடி பாலத்தெ நெருங்குற வரைக்கும் எங்கயும் எந்த வெளிச்சமும் யில்ல. பாலத்துக்கு மின்னாடி ஒரு மெக்கானிக் கடெ இருந்துச்சு காண்டா வௌக்குல எரியுற வெளிச்சத்தோட கலங்கரை வௌக்கத்தெப் போல.

            "இஞ்ஞ வண்டியக் கொடுத்து மொதல்ல லைட்ட சரிபண்ணடாம்பீ!"ன்னாரு வலியோடயும் முணகலோடயும் சுப்பு வாத்தியாரு நம்மள பெறவு பாத்துக்கிடலாம், வண்டியப் பாரு மொதலங்றாப்புல.

            அடிபட்டு நின்ன ரண்டு பேரையும் பாத்ததும் மெக்கானிக்கு கடைக்குள்ளார யிருந்து பஞ்சையும் டிஞ்சரையும் கொண்டாந்து கொடுத்து அதெ வெச்சித் தேய்சிக்கச் சொன்னாரு வண்டிக்கு ரிப்பேரு பாக்குறதுக்கு மின்னாடி மனுஷருக்கு வைத்தியம் பாக்கணும்ங்றாப்புல. "லைட்டு எரிய மாட்டேங்குது!"ன்னாம் விகடு தங்களோட வாழ்க்கெ பாதை உட்பட எல்லாம் ஒளியிழந்து போயிட்டாப்புல. அவரு அதெப் பிரிச்சிப் பாத்துட்டு உள்ளார என்னத்தையோ ரண்டு தட்டு தட்டுனாரு. அடிக்கிறவேம் அடிச்சா எல்லாம் வேலை செய்யும்ங்றாப்புல லைட்டு எரிஞ்சிது. கடெசீயில எல்லாத்துக்கும் வன்மொறைத்தாம் வழியா இருக்கும் போலருக்குன்னு அதெ பாத்ததும் நெனைச்சிக்கிட்டாம் விகடு. கீழ வுழுந்த அதிர்ச்சியில ஸ்டக் ஆயி நின்னுருக்கிறதா மெக்கானிக் சொன்னாரு. வண்டியில அங்க யிங்க இருந்த சேத்தையும் அவரு வழிச்சி வுட்டு வண்டிய எப்பிடியோ ஓடுறாப்புல சரிபண்ணி வுட்டாரு. வண்டிய எடுத்துக்கிட்டு போற வழியில இருக்குற கவர்மெண்டு ஆஸ்பிட்டல்ல காட்டிட்டுப் போவச் சொன்னாரு மெக்கானிக்கு.

            விகடு வண்டிய ஸ்டார்ட் பண்ணி, பின்னாடி சுப்பு வாத்தியாரை உக்கார வெச்சிக்கிட்டு மெதுவா ஓட்ட ஆரம்பிச்சாம். அவரால வலியோட மொணகல கட்டுப்படுத்த முடியல. யப்பாடி யம்மாடின்னு மொணகிக்கிட்டெ வந்தாரு. வண்டியில உக்காந்ததும் குண்டியில அடிபட்டவனெ நெருப்புல உக்கார வைக்குறாப்புலத்தாம் இருந்துச்சு விகடுவுக்கும் வலியும் எரிச்சலும் உசுருப் போறாப்புல. பாலத்தெ திரும்பி எரநூத்து, முந்நூத்து அடி தூரத்துல லட்சுமாங்குடி கவர்மெண்டு ஆஸ்பத்திரி வந்துச்சு. உள்ளார லைட்டு எரிஞ்சது நாட்டுல இங்க கொஞ்சம் வெளிச்சம் இருக்குங்றாப்புல. ரண்டு பேரும் வண்டிய வெளியில நிறுத்திட்டு உள்ளாரப் போனா யாரும் காங்கல. கொஞ்ச நேரம் வெளியில கெடந்த பெஞ்சுல உக்காந்துப் பாத்ததுல ஒரு நர்ஸ்ம்மா வெளியில வந்துச்சு. அந்த அம்மாகிட்டெ விகடு வண்டியிலேந்து வுழுந்து அடிபட்டதெ சொன்னாம். அதெ கேட்டுக்கிட்டு உள்ளார போன நர்ஸம்மா வெளியில வாரவே யில்ல. இருவது நிமிசத்துக்கு மேல உக்காந்து அலுத்துப் போன பெற்பாடு சுப்பு வாத்தியாரு சொன்னாரு, "இஞ்ஞ நம்மாள உக்கார முடியலடாம்பீ! எப்பிடியோ மொதல்ல வூடுப் போயிச் சேருவோம்!" இங்க வலிக்கி வைத்தியம் பாக்குறதெ வுட வலியோட வூட்டுல போயி வுழுந்து கெடக்குறது மேலுங்றாப்புல.

            "சித்தெ பொறுத்துப் பாப்பமே!"ன்னாம் விகடு பணத்தெ வுட்டாலும் பொறுமையெ வுடக் கூடாதுங்றாப்புல.

            "வண்டியில போறச்சாவது வலி தெரியலடாம்பீ! உக்காந்த வலி உசுரு போறாப்புல இருக்குடாம்பீ! வூட்டுல கொண்டுப் போயி கட்டெயச் சாய்ச்சுட்டா எல்லா வலியும் பறந்துப் போயிடும். வூட்டுலக் கொண்டுப் போயி நம்மள சேருடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அடிபட்ட வலியெ வுட ஆஸ்பத்திரியில பண்டுற அலட்சியம் மனசெ ரொம்ப வலிக்க வைக்குறாப்புல. செரின்னுட்டு விகடு வெளியில வந்து வண்டிய எடுத்தாம். சுப்பு வாத்தியாரு பின்னாடி வந்து ஏறுனாரு. வண்டியக் கெளப்பிக்கிட்டு போறப்ப ஆஸ்பிட்டலு உள்ளார ஒரு பார்வையப் பாத்தாம் விகடு. உள்ளார யிருந்த நர்ஸ்ம்மா எட்டிப் பாத்துட்டு வெளியில வர்றாப்புல இருந்துச்சு. விகடுவுக்கு அந்த வலியிலயும் சிரிப்பா இருந்துச்சு. அவ்வேம் வண்டிய மெதுவா நகத்த ஆரம்பிச்சாம்.

போற வழியெங்கும் இருட்டாவே இருந்துச்சு. வெளிச்சமே காணா போனதெப் போல இருந்துச்சு. அந்த இருட்டுக்குக் கண்ணு நல்லா பழகிட்டதால வெளிச்சமே வேணாங்றதப் போலத்தாம் இருந்துச்சு விகடுவுக்கு. இருந்தாலும் டிவியெஸ் பிப்பிடி தன்னால முடிஞ்ச அளவுக்கு வெளிச்சத்தெ கக்கிக்கிட்டெ இருந்துச்சு. மழெயும் அப்பைக்கப்போ தூவானத்தப் போடுறதும், நிறுத்துறதுமா இருந்துச்சு. வடவாதி கடைத்தெரு வந்தப்போ ஒரு கடெயும் தொறந்தில்ல. எல்லாம் சாத்தியிருந்துச்சு. ராத்திரி பதினொண்ணரை பன்னெண்டுக்கு மேல எந்தக் கடெ தொறந்திருக்கும். வூடு வந்துச் சேந்தப்போ இவுங்கக் கோலத்தப் பாத்துட்டு ஆயி பதைச்சிப் போயிட்டா. ஊருலயும் கரண்டு யில்லாம்ம ஆயி சீமெண்ணெய் வெளக்கத்தாம் ஏத்தி வெச்சிருந்தா.

            வண்டியக் கொண்டாந்து திண்ணையிலப் போட்டாம் விகடு. ஸ்டாண்டு போடுறதுக்குத் தெராணியில்லாதவன் போல சொவத்தோட சொவரா அதெ சாத்தி வெச்சாம். சுப்பு வாத்தியாரு ஒரு சீமெண்ண வெளக்கத் தூக்கிட்டுப் போயி கொல்லைக்குப் போயி பைப்படியில குளிச்சி முடிச்சிட்டு வந்தாரு வலிச்சாலும் குளிக்காம இருக்க முடியாதுங்றாப்புல. பெறவு விகடுவும் போயி குளிச்சிட்டு வந்தாம். அவ்வேம் குளிச்சி முடிச்சிட்டு வந்தப்போ சுப்பு வாத்தியாரு காயத்துலயும் செராய்ப்புலயும் தேங்காண்ணெய்ய வெச்சிட்டு இருந்தாரு. விகடுவையும் வைக்கச் சொன்னாரு. அவனும் வெச்சாம். ஆயி ரண்டு பேத்தையும் சாப்புடச் சொன்னா. சுப்பு வாத்தியாரு தனக்கு வேணாம்ன்னு உக்காந்த நெலையிலயே சொவத்துக்கு முதுகெ கொடுத்தாப்புல படுத்தாரு. விகடுவுக்கும் அசதி தாங்கல. உக்காந்த எடத்துலயே அப்பிடியே படுத்தவந்தாம்.

            "யிப்பிடி அடிப்பட்டுச் செராய்ச்சிக் கெடக்குதே. இன்னிக்குக் காத்தால சுட்ட இட்டிலி ராத்திரி வரைக்கும் சாப்புடக் கூடாதுன்னு கெடக்குதே! ஒருத்தரும் சாப்புடாம நாம்ம மட்டும் சாப்புடலன்னா கொடலு ன்னா கோவிச்சிக்கவா போவுது?"ன்னு பொலம்பிக்கிட்டெ ஆயியும் படுத்தா. பவ்வுப் பாப்பா ரொம்ப நேரமா அப்பனயும் தாத்தனயும் எதிர்பாத்துட்டுக் கெடந்து நல்லா தூங்கியிருந்தா.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...