2 Feb 2021

பாவம் பண்ணவன்கிட்டெயிருந்து எவ்வளவுன்னாலும் பிடுங்கலாம்!

பாவம் பண்ணவன்கிட்டெயிருந்து எவ்வளவுன்னாலும் பிடுங்கலாம்!

செய்யு - 705

            வக்கீல் சிவபாதம் ஆபீஸ்ல அவரு உக்காந்திருந்த நாற்காலிக்கு மேல வரிசையா அவுங்க தாத்தா காலத்துலேந்து வக்கீலா இருந்த அவுங்க குடும்ப வகையில இருந்த அத்தனெ முன்னோரோட படங்க வரிசையா இருந்துச்சு. அவரோட நாற்காலி பிரமாண்டமா சுத்துற நாற்காலியா இருந்துச்சு. அதுல இருந்தபடியே அரைச்சுத்துக்கு அப்பிடியும் இப்பிடியுமா அடிக்கடி சுத்திக்கிட்டெ கண்ணாடியே வெலக்கிக்கிட்டே கேட்டாரு. கண்ணாடி தங்க பிரேம் போட்டதா இருக்கணும். பளபளன்னு மின்னுச்சு. ஒரு வெதமா விகடு செய்யுவுக்குக் கலியாணம் பண்ணிக் கொடுத்ததுலேந்து இன்னிக்கு அவரோட ஆபீஸ்ல வந்து உக்காந்திருக்கிறது வரைக்கும் சொல்லி முடிச்சாம் வண்டியில போற முடிச்சவிந்த மூட்டை அது பாட்டுக்கு வண்டியிலேந்து கொட்டிக்கிட்டுப் போறதெப் போல.

            "பெறத்தியாரு யாரையாச்சும் அடிச்சிருந்தா அதுல வக்கீலுங்க நாங்க ஆஜராவலாம். இதோ இருக்காரே கோவிந்து தாசில்தார்ரையே அடிச்சவரு. போலீஸ்ஸ அடிச்ச கேஸ்லல்லாம் கூட ஆஜராயிருக்கேம். கொல கேஸ்ல கூட ஆஜராயி பண்ண கொலையே இல்லன்னு நிரூபிச்சி வெளியில கொண்டாந்திருக்கேம். நீங்க என்னான்னா எங்க வக்கீலு ஆளையே அடிச்சிட்டு கேஸ்ஸ எடுத்து நடத்துங்கன்னு வந்து நின்னா எப்பிடி? ஏம் தம்பீ நீங்க என்ன பண்ணுறீங்க?"ன்னாரு சிவபாதம் காத்தடிச்சு காத்து வெலகுனாலும் நீரடிச்சு நீர் வெலகாதுங்றாப்புல.

            "ஆசிரியரா இருக்கேம்ய்யா!"ன்னாம் விகடு தணிவான கொரல்ல புள்ளைங்களக் கூட வாய் தவறி ஒரு வார்த்தெ சொல்றது கெடையாது, கைய நீட்டி லேசா ஒரு தட்டுக் கூட தட்டுறது கெடையாதுங்றாப்புல.

            "ஒங்க வாத்தியாருங்கள ஒருத்தர்ர அடிச்சா நீங்க அடிச்சவருக்குச் சாதகமா இருப்பீயளோ? அதாவது அடிச்சவரு எவ்வளவுதாம் ஞாயமான காரணத்துக்கா அடிச்சிருந்தாலும்...?"ன்னு இழுத்தாரு சிவபாதம் மித்த மிருகங்களெ வேட்டையாடுற மிருகங்க கூட தன்னோட இனத்தெ வேட்டையாடாதுங்றாப்புல. அதுவும் செரித்தாம் எந்தக் காட்டுல சிங்கம் சிங்கத்தெ வேட்டையாடுது? புலி இன்னோரு புலிய வேட்டையாடுது? சிவபாதம் அப்பிடிச் சொன்னதுக்கு விகடு அதுக்கு எந்தப் பதிலையும் சொல்லாம அப்பிடியே உக்காந்திருந்தாம்.

            "என்னப்பா இது? வாத்தியார்ன்னா அவுங்கத்தாம் கேள்விக் கேக்கணுமா? நாங்க கேள்விக் கேட்டா பதிலு வராதோ?"ன்னு சொல்லிக்கிட்டு அவரா சிரிச்சிக்கிட்டாரு சிவபாதம் தன்னோட சிரிப்பாணிக்கெல்லாம் மருந்துக்குக் கூட யாரும் சிரிச்சிட முடியாதுங்றாப்புல. அதெ கேட்டு யாருக்கும் எந்தச் சிரிப்பும் வாரல. மாறா எல்லாத்துக்கும் தர்மசங்கடமா இருந்துச்சு அவரு கேட்ட கேள்வி. ஒரு நிமிஷம் அப்பிடியே ஆபீஸூ மெளனமாயி நிசப்தம் ஆனாப்புல இருந்துச்சு. அதெ ஒடைக்குறாப்புல கோவிந்துதாம் பேசுனாப்புல, "ஒஞ்ஞள நம்பி வந்துட்டேம். நீஞ்ஞத்தாம் பாத்துச் செய்யணும். எஞ்ஞளுக்கு வேற யாரும் தொணை கெடையாது. ஒங்ஞள நம்பி வந்தா எப்பிடியும் காப்பாத்திடுவியேன்னுத்தாம் அழைச்சாந்திருக்கேம்!"ன்னு அதாச்சி கெணத்துல விழுந்தவேம் யாராச்சும் காப்பாத்துவாங்கன்னு நம்பியா வுழுவாம்ங்றாப்புல.

            "ஒரு கிரிமினல் லாயர்கிட்டெ சிவில் கேஸ்ஸ கிரிமினல் கேஸ்ஸா மாத்தி எடுத்துக் கொண்டாந்திருக்கீங்கோ! செரி வந்தது வந்தீங்க! கேஸ் கட்டு இல்லாம வந்தா எப்பிடி? கேஸ் கட்டப் பாத்தாத்தாம் எப்பிடிப் பண்ணிருக்காரு அந்த வக்கீலு? இந்தக் கேஸ்ஸூ தேறுமா தேறாதாங்றது தெரியும்! தோத்துப் போற மாதிரியான கேஸ்ஸூன்னா சத்தியமா நாம்ம எடுக்க மாட்டேம்! அது தெரியும்தானே?"ன்னாரு சிவபாதம் எல்லா பாடத்துலயும் செண்டம் எடுக்குற புள்ளியோளைத்தாம் தம்மால பாஸ் பண்ண வைக்க முடியும்ன்னு கறாரா சொல்ற வாத்தியார்ரப் போல.

            "ஓரளவுக்கு என்னென்ன கேஸ்க இருக்குன்னு நம்மாள சொல்ல முடியும்!"ன்னாம் விகடு உத்தேசமா எதையாச்சும் சொல்லி கேஸ்ஸ எடுக்க வைக்குற அளவுக்குத் தெசை திருப்பிப்புடலாம்ன்னு.

            "கேஸ்ஸ சொல்லி என்ன பிரயோஜனம்? வாத்தியார்ரே நீங்க சொல்லுற மாதிரி கோர்ட்டுல ஒவ்வொண்ணுலயும் ஆயிரத்துக்கு மேல நடக்குது. அத்தனையிலயுமா எல்லாரும் ஜெயிச்சிடுறாங்கன்னு நெனைக்குறீங்க? அந்தக் கேஸ்ல நாம்ம கொடுக்குற கன்டென்டல்லத்தாம் மேட்டரே இருக்கு. நாம்ம காகிதத்தெ எழுதிட்டா அது சுப்ரீம் கோர்ட்டே போனாலும் அதெ மாத்த முடியாது. தீர்ப்ப அந்தக் காயிதத்துக்குக் கட்டுப்பட்டுத்தாம் கொடுத்தாவணும். நாம்ம கொடுக்குற காயிதத்துலயே கிட்டத்தட்ட கேஸ் முடிஞ்சாப்புலத்தாம். அப்பிடி நட்செல்லா நச்சுன்னு கொடுப்பேம். அதெ வெச்சி அப்பயே ஜட்ஜ் தீர்ப்ப எழுதிடலாம். அந்த அளவுக்கு இருக்கும்ன்னா பாருங்களேம். இப்போ வர்ற வக்கீலுங்க எல்லாம் எங்க அந்த மாதிரி காயிதத்தெ தயாரிக்கிறாங்க? எல்லாம் முன்னாடி தயாரா இருந்த காயிதத்தப் பாத்து உல்டா அடிக்கிற வேலத்தாம் நடக்குது. அதெ எழுதிக் கொடுத்துட்டு அதுல ஆயிரமோ, ரண்டாயிரமோ வந்தா போதுங்ற அளவுக்கு கோர்ட்டுல வழக்குக நடக்க ஆரம்பிச்சிடுச்சு. எங்க ஆளுங்களப் பத்தி நாமளே கொறை சொல்றதா நெனைக்க வேணாம். உண்மெ அதுதாம். இப்போ வக்கீலா இருக்குற பல பேருக்கு கிராஸ் பண்ணவும் தெரிய மாட்டேங்குது. ஆர்கியூமெண்ட் பண்ணவும் தெரிய மாட்டேங்குது. எங்கள மாதிரி சீனியர்ஸ்ல்லாம் அதெ சகிச்சிக்கிட்டு கோர்ட்டுல உக்கார முடியாம எழுந்திரிச்சி வர்றதுதாம் நடக்குது. இதுல ஒங்க ஆளு, அதாங் ஒங்க வக்கீலு எப்பிடின்னு நமக்குத் தெரியலல்ல. நாம்ம கேள்விப்பட்ட வரைக்கும் கிராஸ்ஸ பண்ணாம தள்ளி வெச்சி அதுக்காக அபராதம் கட்ட சொல்லிட்டார் ஜட்ஜூங்றது சங்கதி. சில முக்கியமான விநோதமான கேஸ்ங்களப் பத்தி வக்கீலுங்க நாங்க டிஸ்கஸ் பண்ணுவேம். அதுல ஒண்ணுத்தாம் ஒங்க தங்கச்சி கேஸ்ஸூ. காயிதங்களும், அதுல இருக்குற விசயங்களும் இடியாப்பத்தெ வுட மோசமா இருக்குறதா கேள்விப்பட்டேம். அந்த இடியாப்பா சிக்கல நாம்ம அவுத்து அதெ சரிபண்ணி நடத்துறதுக்குள்ளார... நெனைக்குறப்பவே கட்டெ பாத்துதாம் முடிவெ பண்ணணும். கட்டுல கன்டெண்ட் சரியில்லன்னா தூக்கிக் கையில கொடுத்துடுவேம். பின்னாடி நம்ம மேல வருத்தப்படக் கூடாது. இதெ முன்கூட்டியே சொல்லிடுறேம். அதுக்குச் சம்மதம்ன்னா அடுத்த மொறை மே பீ வெள்ளிக் கெழமெ அன்னிக்கு நைட் இதே நேரத்துல வந்துப் பாருங்க. யில்ல நாம்மப் பேசுறது ஒத்து வராதுங்றது மாதிரி தோணுன்னா இத்தோட போயிடலாம். திரும்ப வந்துப் பாக்க வேணாம். நம்மளப் பொருத்த மட்டுல வெட்டு ஒண்ணு, துண்டு ரண்டுதாம். வளவள கொழகொழன்னு பேசுறது பிடிக்காது. என்னா சொல்றீங்க?"ன்னாரு சிவபாதம் கம்பெ எடுத்துட்டா எந்தப் பாம்பெ அடிக்கப் போறோமே அந்தப் பாம்பெ வந்து அடிய வாங்கிட்டுப் போயிடணும்ங்றாப்புல.

            "நீஞ்ஞ சொல்ற தேதியில கட்டோட வந்து நிக்குறேம்!"ன்னாப்புல கோவிந்து வக்கீலு சொல்றதுதாம் வாதிக்கு வேதவாக்குங்றாப்புல.

            "கட்டோட நோ அப்ஜெக்சன் பண்ணி யாரு அந்த வக்கீலு, ஆங் அந்த வக்கீலோட சைன் பண்ணி வாங்கியாரணும். அப்பத்தாம் நாம்ம வக்காலத்துப் போட்டு கேஸ்ல ஆஜராவ முடியும். புரியதுல்ல!"ன்னாரு சிவபாதம் சொத்தெழுதிக் கொடுக்குறவேம் கையெழுத்துப் போடாம பத்திரத்தெ கொடுக்க முடியாதுங்றாப்புல.

            "ன்னா பெரிய கேஸ் கட்டு? நீஞ்ஞளாவே ஒரு கட்ட உருவாக்கி நடத்துனாலும் செரித்தாம்!"ன்னாப்புல கோவிந்து தெறமையான ஆட்டக்காரேம் வாத்தியம் இல்லாமலும் ஆடுவாம்ங்றாப்புல.

            "அப்பிடில்லாம் மொறை தவறிப் போக மாட்டாம் இந்தச் சிவபாதம் கோவிந்து. சிவபாதம்ன்னா மொறைதாம். மொறைன்னா மொறைத்தாம். கம்ப்ளீட்டா இருக்கணும் நமக்கு. நாம்ம கோர்ட்டுல ஆஜராவுறேம்ன்னா அந்த நேரத்தெ வெச்சி கோர்ட்டுல ஓடுற கடியாரத்தச் சரி பண்ணிக்கிடலாம். ஜட்ஜூக்கே தெரியும். சிவபாதம் ஒரு கேஸ்ல ஆஜராயிடுச்சுன்னா எதுலயும் நேரம் கூடவும் இருக்காது, கம்மியாவும் இருக்காது. கட் அன்ட் ரைட்டா கரெக்டா சரியா இருக்கும். அப்போலேந்தே அப்பிடி. ஏன்னா எங்க அப்பாரு இருக்காரு. அவரு யாருகிட்டெயும் ஜூனியரா இருக்கல. எங்க தாத்தாகிட்டேத்தாம் ஜூனியரா இருந்தாரு. நம்மள எடுத்துக்கிட்டாலும் நாமளும் யாரருகிட்டெயும் ஜூனியரு கெடையாது. எங்க அப்பாகிட்டெ ஜூனியரா இருந்த ஆளுத்தாம். இங்க தொழில்ல அதெ கேப்பாங்க. யாருகிட்டெ ஜூனியரா இருந்தேன்னு. இன்ன ஆளுகிட்டெ ஜூனியரா இருந்ததா சொல்லிட்டா போதும் நீ ஆஜராவுற எந்தக் கேஸ்ஸா இருந்தாலும் பாஸ். கோர்ட்டுல ஒரு வழக்குல ஆஜராவுறதுக்கான குவாலிபிகேஷன் இங்க படிச்சி வாங்குற பியெல்லு பட்டம் கெடையாது கோவிந்து. யாருகிட்டெ ஜூனியரா இருக்காங்கங்றதுதாம். ஒண்ணு சொல்லட்டுமா ஒனக்கு? எங்கிட்டெ இருக்குற குமாஸ்தாவுக்குத் தெரியுற லா நம்பர்ஸூம், பாய்ண்ட்ஸூம் இன்னிக்குப் பேமஸா இருக்குற பல வக்கீலுங்களுக்குத் தெரியாது. நம்புறீயா நீ?"ன்னாரு சிவபாதம் கம்பன் வூட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்ங்றது போல தன்னோட வூட்டோட சிறுதுரும்பும் லா பாயிண்ட் பேசும்ங்றாப்புல.

            "அதெல்லாம் நீஞ்ஞ சொல்லணுமா? எல்லாம் தெரிஞ்சித்தானே ஒஞ்ஞகிட்டெ ஓடியாந்திருக்கேம். எஞ்ஞளுக்குக் கேஸ்ஸப் பத்தில்லாம் எதுவும் தெரியாது. ஒஞ்ஞகிட்டெ ஒப்படைச்சிட்டதா நெனைச்சிக்குங்க. நம்ம வழக்கெ எடுத்து நடத்துனீயே. என்னிக்காவது நாம்ம எதாவது கேட்டிருப்பமா ன்னா?"ன்னாப்புல கோவிந்து முழுசா சரணடைஞ்ச பெற்பாடு எதெப் பத்தி எதெ கேக்க அதிகாரம் இருக்குங்றாப்புல.

            "இந்தா கோவிந்து! நீ கேக்குறாப்புல நாம்ம கேஸ்ஸ நடத்த மாட்டேங்றது ஒண்ணு. எந்தக் கேஸ்ஸா இருந்தாலும் அதெ நாம்ம எடுக்கணுமாங்றதெ முடிவு பண்ணுறது ரண்டு."ன்னாரு சிவபாதம் தாம் கேஸ்கள எடுக்குறதா வாணாமாங்றதுலயும் சட்ட திட்டங்க இருக்குங்றாப்புல. அவரு இந்தத் தொழில்ல ஜூனியரா இருக்குறதப் பத்தி சொன்னதெ கேட்டதும், விகடுவுக்கு திருநீலகண்டன் வக்கீலு யாருகிட்டெ அப்பிடி ஜூனியரா இருந்துருப்பாங்ற சந்தேகம் தட்டுனுச்சு. அந்த நேரத்துல அதெ சிவபாதம் வக்கீலுகிட்டெ தெரிஞ்சிக்கணுங்ற அளவுக்கு அவசியமில்லாத சந்தேகந்தாம் அது. இருந்தாலும் ஆவலாதிய அடக்க முடியாம திடீர்ன்னு பொறப்பட்டுடுற தும்மலெப் போல விகடு சிவபாதத்துக்கிட்டெ கேட்டாம், "அய்யா! திருநீலகண்டன் வக்கீல் யாருகிட்டெய்யா ஜூனியரா பிராக்டீஸ் பண்ணாராம்?"ன்னு.

            "மந்திரி கேஸ்ஸ எடுத்து அதுல காக்கா உக்கார்ர பனம்பழம் வுழுந்த கதையா ஜெயிச்சு பேமஸ் ஆனவேம் வாத்தியாரு தம்பி அவ்வேம். நாமளே கூட அப்போ அவனெ திரும்பிப் பாத்தேம்ன்னா பாத்துக்குங்களேம். அப்ப வெசாரிச்சப்பத்தாம் தெரிஞ்சிது. அவ்வேம்லாம் ஜூனியரா முழுசா பிராக்டீஸ் பண்ணாத ஆளுங்க வாத்தியாரு தம்பீ! அவ்வேம் ஒரு சுயம்பு. அவனா சித்தன் போக்கு, சிவன் போக்குன்னு கேஸ்ஸ நடத்துறவேம். அவ்வேமோட ஒரு கேஸ்ஸ கூட நாம்ம ரெபரன்ஸூக்கு யாருக்கும் சொல்ல மாட்டேம்ன்னா பாத்துக்குங்களேம். அவ்வேம் பாட்டுக்கு படிச்சாம்ன்னா முடிச்சாம்ன்னா நேரா வக்கீலா வந்து வாதாட வந்துட்டாம். இப்போ இருக்குற சட்டதிட்டங்க அந்த மாதிரிக்கு இருக்குது. என்னத்தெ சொல்ல? இந்த புரபஸன்ங்றது ரொம்ப அருமையான புரபஸன்ங்க. ஒரு வக்கீலோட வாதத்தால, வாதத் தெறமையால ஒரு வழக்க எப்பிடி வேணும்ன்னாலும் கொண்டு போவலாம் வாத்தியாரு தம்பீ! அம்பேத்கருக்குக் கிடைச்ச மரியாதையே இந்த புரபஷன் மூலமா கெடைச்ச மாரியாதைன்னுத்தாம் நாம்ம சொல்லுவேம்! நீங்க ரொம்ப பெரிய பெரிய ஆளுகள எடுத்துப் பாருங்க. இந்தப் புரபஷன் வழியாத்தாம் பெரிய ஆளா ஆயிருப்பாங்க!"ன்னாரு சிவபாதம் வக்கீலா இருக்குறவங்க கைக்குள்ள ஒலகமே வந்துடும்ங்றாப்புலயும் அவுங்க சொல்பேச்ச கேட்டபடிக்கத்தாம் ஒலகமே சொழலும்ங்றாப்புலயும்.

            அதெ தொடந்தாப்புல, "ரொம்ப பேசிட்டேம். அடுத்ததா யாருக்காவது டயம் கொடுத்திருப்பீயே! யப்போ நாஞ்ஞ உத்தரவு வாங்கிக்கிறேம்!"ன்னாப்புல கோவிந்து ஒரு சின்ன சிரிப்பெ சிரிச்சுக்கிட்டு வந்த வேல முடிஞ்ச பெறவு மூட்டெ முடிச்செ கட்டிட்டுக் கௌம்புறோம்ங்றாப்புல.

            "முன்னாடி மாதிரில்லாம் ரொம்ப கேஸ்ஸ ஒத்துக்கிறதில்ல. மத்த புரபஷன் மாதிரி இதுல ரிட்டையர்மெண்டெல்லாம் கெடையாது பாரு. சாவு ஒண்ணுத்தாம் இதுல ரிட்டையர்மெண்டு. சும்மா ஆபீஸ்லயே உக்காந்தா வேர் விட்டுப் போயிடும்ன்னு ஒரு சில வழக்குகள மட்டும் எடுத்துக்கிறது. அதுவும் நமக்குத் தெரிஞ்சவுங்க முடியாதவுங்கன்னு பாத்துக்கிறது. வயசு ஆவுதுல்ல. சிக்ஸ்டி டூ. ரொம்ப நேரம் கோர்ட்டுல நின்னு வாதாடவும் முடிய மாட்டேங்குது. நிக்க முடியல ரொம்ப நேரம். ஜட்ஜூ அதெ புரிஞ்சிக்கிட்டாப்புல உக்காந்து உக்காந்து நமக்கேத்தாப்புலத்தாம் கொண்டு போவாரு. அதுக்காக எல்லா கேஸ்ஸையும் இழுத்துப் போட்டுக்கிட்டுப் படுத்தக் கூடாது பாரு. அப்போ மன்னார்குடியில கேஸ்ன்னா எங்க பேமிலி ஒண்ணு. அதுல அப்போ நாம்ம. இன்னொன்னு நாலு ஆபீஸ்ஸூ தள்ளி இருக்குப் பாரு பாண்டுரங்கஹரியோட ஆபீஸூ. ரண்டு பேருதாம். அத்தனெ கொல கேஸூம் ஒண்ணு நாம்மளா இருக்கும், யில்ல பாண்டுரங்கஹரியா இருக்கும். நாம்ம பீஸ்ல ரொம்ப ஸ்ட்ரிக்ட்ங்றாதல பெருங்கைகளாத்தாம் நம்மகிட்டெ வரும். பாண்டுரங்கஹரி அதெ பாக்க மாட்டாம். எந்தக் கேஸ்ன்னாலும் எடுத்து வாதாடுவாம். பீஸ்ஸு கொடுத்தாலும் செரித்தாம், கொடுக்காட்டியும் செரித்தாம். அதெ பாக்க மாட்டாம். அதால பாத்தீன்னா அவ்வேம் ஆர்குடி தொகுதியில நின்னு அதெ வெச்சே எம்மெல்யே ஆனாம். நாம்ம கடைசி வரைக்கும் லாயர்தாம். அவனே ரொம்ப பெரிய கேஸ்ன்னா நம்மகிட்டெ சொல்லி அனுப்பிடுவாம். அப்போ தொழில் போட்டின்னா எங்க ரண்டு பேத்துக்கு இடையிலத்தாம். இருந்தாலும் மனசுல எந்த பொறாமையும் கெடையாது ரண்டு பேத்துக்குமே. ரொம்ப பிரண்ட்ஷிப்பா பழகுவோம். பல கேஸ்ல அவனும் நாமளும் ஆப்போசிட் சைட்ல இருந்தாலும் மோதுறதெல்லாம் கோர்ட்டோ சரி. வெளியில வந்துட்டா அப்படி ஒரு ரிலேஷன்சிப். இன்னிக்கு வக்கீலுங்கள்ல யாரு அப்பிடி இருக்கா? நீங்களேத்தாம் சொல்றீங்களே! ஒரு வக்கீல செருப்பால அடிங்றேம்ன்னு சொல்லிட்டு வேடிக்கெ பாக்குறாம், இன்னொரு வக்கீலு அடி வாங்குறாம்ன்னு. காலம் எப்பிடி மாறிடுச்சுப் பாருங்கோ? இன்னிக்கு தாலுக்கா ஆபீஸ் ரோட்டுல விரல் விட்டு எண்ண முடியாது, அவ்ளோ வக்கீலுங்க வந்தாச்சு. ஆன்னா ஒருத்தம் பேரைக் கூட விரல் விட்டு சொல்ல முடியாது. என்னவோ எங்க ஆத்துக்காரனும் கச்சேரிக்குப் போறாருன்னு கேள்விப்பட்டிருப்பீயளே அப்பிடித்தாம் நடக்குது இங்க தொழில். நாங்கல்லாம் பழங்காலத்து ஆளுகளா ஆயிட்டேம். இருந்தாலும் ஏதோ கத்துக்கிட்ட தொழில்ல மறந்துடக் கூடாதுன்னு தொழில் பண்ணிக்கிட்டுக் கெடக்கேம்!"ன்னு சிரிச்சாரு சிவபாதம் அந்தக் காலம் போலெல்லாம் இந்தக் காலம்ல்லாம் வாராதுங்றாப்புல. அதுவும் செரித்தாம் ஓடுற காலம் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு வகைத்தாம். ஆத்துல ஓடுற தண்ணியும் ஒவ்வொரு தவா கால்ல நனைக்குறப்போ வேற வேற தண்ணிங்றப்போ காலத்தெ பத்தி என்னத்தெ சொல்றது? தண்ணிக்கு தண்ணி ஆவியாவுறதும் மேகமாவுறதும் மழையாவுறதும் தண்ணியாவுறதும்ன்னு ஒரு சுழற்சி இருக்கு. காலத்துக்கு ஏது இந்த மாதிரியான சொழற்சி? அது ஒரு தெசையாவே ஓடிட்டு இருக்குற நதி. மின்ன பின்ன திரும்பிப் பாக்காது.

            சிவபாதம் பேசுறப்போ வக்கீலுங்களப் பத்தி மொதல்ல உயர்வா சொல்றது போல தோணி, கடைசியில வக்கீலுங்களப் பத்தி கொறை சொல்றாப்புல முடிக்கிறாரேன்னு நெனைச்சாம் விகடு. அவரு நெசமா எதெச் சொல்ல வர்றாங்ற கொழப்பமும் அவனுக்கு உண்டாயிடுச்சு.

            "செரி போதும்ன்னு நெனைக்கிறேம். யப்போ நாஞ்ஞ உத்தரவு வாங்கிக்கிறேம்!"ன்னாப்புல கோவிந்து நோய் கொணம் கண்ட பெற்பாடு ஆஸ்பத்திரியில நிக்கக் கூடாதுங்றதெ போல வந்தக் காரியம் முடிஞ்ச பெறவு எந்த எடத்துலயும் நிக்கக் கூடாதுங்றாப்புல.

            "செரி வாங்க!"ன்னு சொல்லிட்டு கடிகாரத்தப் பாத்தவரு, "இன்னும் பத்து நிமிஷத்துல சேர்மென் வந்துப் பாக்கறதா சொல்லிருக்காரு!"ன்னு சொல்லிச் சிரிச்சாரு சிவபாதம் கௌம்புறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல நேரத்துலயே கௌம்பிடணும்ங்றாப்புல. அவரு சிரிச்சி சிரிப்போட எல்லாருமா சேர்ந்து அவருக்கு வணக்கத்தெ போட்டுட்டு ஆபீஸ்ஸ வுட்டு வெளியில வந்தாங்க.

            "என்னாம்பீ! இவருப் பேசுறதெப் பாத்தா கேஸ்ஸ எடுப்பாரா? மாட்டாராங்றா மாதிரிக்கிக் கொழப்பமால்ல இருக்கு?"ன்னாரு சுப்பு வாத்தியாரு பழம் நழுவி வாயில வுழுவுதா, வாய்க்கால்ல வுழுவுதான்னு புரியாம கொழப்பமா இருக்குங்றாப்புல.

            "ஆரம்பத்துல அப்பிடித்தாம் பேசுவாரு. கேஸ் கட்டெ கொண்டாந்து அவரு காலடியிலப் போட்டுட்டு நீஞ்ஞளே கதின்னா போதும். பாத்துப்பாரு. ரொம்ப தெறமெக்காரரு. அந்த கிர்வம் கொஞ்சம் இருக்கத்தானே செய்யும். இவருகிட்டெ கேஸ்ஸ ஒப்படைச்சிட்டா நாம்ம பாலோ பண்ணவே வேண்டியதில்லா. அவரே பாத்துப்பாரு. அதுக்குத்தாம் பாத்தேம்."ன்னாப்புல கோவிந்து பெரிய ஆளுங்கல்லாம் பிடி கொடுத்தாப்புல பேச மாட்டாங்கங்றாப்புல.

            "இவரு ஆர்குடியில்லல்லா இருக்காரு. அஞ்ஞ திருவாரூருக்கு யாரு ஆஜராவா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு வூட்டுல இருக்குற புள்ளீயோளுக்குப் பள்ளியோடத்துல எப்பிடி ஆஜர் போட முடியும்ங்றாப்புல.

            "அதெல்லாம் அவுங்க ஆளுங்க அஞ்ஞ இருப்பாங்க. அவுங்கள ஒருத்தர்ர வெச்சிப் பாத்துப்பாரு. முக்கியமான ஆர்கியூமெண்டுன்னா வந்து ஆர்கியூ பண்ணுவாரு. அன்னிக்கு மட்டும் அவரு கார்ல வந்துட்டப் போற காச நாம்ம எடுத்து வெச்சாவணும். அவ்வளவுதாம்! பீஸ்ஸல்லாம் கேஸ்ஸூ முடிஞ்சி தீர்ப்பான பெறவு பாத்துக்கிடலாம். ஒண்ணும் சொல்ல மாட்டாரு. நாம்ம சொல்லி வுடுறேம்!"ன்னாப்புல கோவிந்து சாமியக் கும்புடணும்ன்னு முடிவெ பண்ணிட்டெ பெறவு வூட்டுல இருந்து கும்புட்டா ன்னா, கோயிலுக்குப் போயி கும்புட்டா ன்னாங்றாப்புல.

            "கொல கேஸ்ல ஆஜராவார்ன்னு சொன்னீயளே? அதுக்கும் இப்பிடித்தான்னா? தீர்ப்பு ஆனதுக்குப் பெறவுத்தாம் பீஸ்ஸா?"ன்னாம் விகடு மேய்க்குற மாட்டுல கொம்பு மாடு, மொட்டெ மாடுன்னு எல்லா மாடும் ஒண்ணாங்றாப்புல.

            "அதுக்கு மட்டும் அப்பிடிக் கெடையாது வாத்தியார்ரே! நாலு லட்சத்தெ எடுத்து வெச்சத்தாம் கேஸ்லயே ஆஜராவாரு. அதுக்குப் பெறவு ஒவ்வொரு தவா கேஸ்ஸூ டிரையலுக்கு வர்றப்பல்லாம் இருவதாயிரம், முப்பதாயிரம்ன்னு கறந்துக்கிட்டெ இருப்பாரு."ன்னாப்புல கோவிந்து கறவெ மாட்டுல சேப்பு மாடென்ன, கருப்பு மாடென்னாங்றாப்புல.

            "அதுக்கு மட்டும் ஏம் அப்பிடி?"ன்னாம் விகடு கறக்குறதுல மரப்படி மாட்டுக்கும் சீமெ மாட்டுக்கும் வித்தியாசம் என்னான்னு கேக்குறாப்புல.

            "அதா! அத்து வந்து ஏன்னா சிவபாத வக்கீலப் பொருத்த வரெ கொல பண்ணுறதுங்றது பாவமாம். பாவம் பண்ணவேம்ங்கிட்டேயிருந்து பாவத்தெ கழிக்க, பரிகாரம் பண்ண எம்மாம் வேணும்ன்னாலும் புடுங்கலாம்பாரு அவரு!"ன்னாப்புல கோவிந்து கறவெ மாட்டோட காம்பெ கறக்காம வுட்டா மடி கட்டிக்கும்ங்றாப்புல.

            "யிப்பிடியே பேசிட்டு இருந்தா விடிஞ்சிடும்!"ன்னாப்புல மகேந்திரன் கறந்த பால வெச்சிக்கிட்டுப் பேசிட்டெ இருந்தா பாலு திரிஞ்சி தயிரா ஆயிடும்ங்றாப்புல.

            "செரி கேளம்புவமப்பா! வாத்தியார்ரே கேஸ்ஸூ கட்டு முக்கியம். எவ்வளவு சீக்கிரமா வாங்கியறீயளோ அவ்வளவு சீக்கிரமா பேசி வுட்டுடுவேம். அவரே டேட் சொல்லிட்டாரு வெள்ளிக் கெழமென்னு. அதுக்குள்ள வாங்கியாந்திடுறீயளா?"ன்னாப்புல கோவிந்து தயிர்ர கையில வெச்சிக்கிட்டு வெண்ணெய்ய எடுக்க ஏம் அலையணும்ங்றாப்புல. விகடு தலைய ஆட்டுனாம் பூம்பூம் மாட்டோட பால குடிச்சவேம் போல.

            "இதுக்கு மேல யாரும் பேயக் கூடாது. ஓட்டல்ல சாப்புட்டு எல்லாம் பேயாம கெளம்புறேம். இனுமே சாப்புடுறதுக்கு மட்டுந்தாம் வாயத் தொறக்கணும்!"ன்னாப்புல பெத்தநாயகம் வாய்ங்றது பேசுறதுக்கு மட்டுமில்ல சாப்புடுறதுக்கும்தாங்றாப்புல.

விகடுவும், சுப்பு வாத்தியாரும் காலையிலயே வூட்டுல சுட்டுக் கெடக்குற இட்டிலிகளப் பத்திச் சொல்லி அவுங்க எல்லாரையும் சாப்புட வெச்சிட்டு இவுங்க ரண்டு பேரும் ஊர்ரப் பாக்கக் கெளம்புனாங்க. பேச்சு மழெ ஓய்ஞ்சாப்புல இருந்துச்சு அந்த எடம் இப்போ.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...