23 Feb 2021

மீண்டும் வக்கீலைத் தேடி...

மீண்டும் வக்கீலைத் தேடி...

செய்யு - 726

            விகடு கும்பகோணத்துலேந்து கேஸ் கட்டுகள வாங்கியாந்ததும் அதெ பாக்கக் கூட விரும்பல சுப்பு வாத்தியாரு. தூக்கி அப்பிடியே ஓரமா போடுன்னுட்டார். வழக்குங்ற வார்த்தையே கேக்குறப்பவே அவருக்கு எரிச்சலா இருந்துச்சு என்னவோ கேக்கக் கூடாத கெட்ட வார்த்தைய கேக்குறாப்புல.

            "கட்டுகள வாங்கியாந்தது அப்பிடியே போடுறதுக்கில்லப்பா. யாராச்சும் ஒரு வக்கீலப் பாத்துக் கொடுத்துதாம் ஆவணும். வேணும்ன்னா கொஞ்ச நாளு அவகாசம் எடுத்துக்கிடலாம். அதுக்காவ அப்பிடியே போட்டுட முடியுமா?"ன்னாம் விகடு மார்கழி மாசத்துல பரங்கியும் சொரையும் தின்னு மொகத்துல அடிச்சிட்டதுங்றதால கொஞ்ச நாளு கழிச்சாச்சும் அதெ திங்குறதில்லையாங்றாப்புல.

            "வக்கீல்கிட்டெ கொண்டு போயிக் கொடுத்தாலும் அத்து அப்பிடியேத்தாம் வக்கீலோட ஆபீஸ்ல கெடக்கப் போவுது. அதுக்கு நம்ம வூட்டுலயே கெடக்குறதுல ஒண்ணும் கொறைஞ்சிப் போயிடப் போறதில்ல! அதென்னடாம்பீ! நாம்ம எந்த வக்கீல்கிட்டெ கொண்டுப் போயி கொடுத்தாலும் நம்ம நெல இந்த மாதிரி ஆவுதே!"ன்னாரு சுப்பு வாத்தியாரு காலை வைக்குற எடமெல்லாம் கண்ணி வெடியா இருக்குங்றாப்புல.

            "அதுக்கென்னப்பா பண்டிட முடியும்? நாம்மப் போயி வழக்காடிட முடியாது. வக்காலத்துப் போட்டு வக்கீல வெச்சித்தாம் ஆவணும்! வேற வழியில்லப்பா!"ன்னாம் விகடு பேசத் தெரியுதுங்றதால எல்லாரும் மேடையேறி பேசிட முடியாதுங்றாப்புல. அது புரிஞ்சதுப் போல ஒரு தலையாட்ட ஆட்டுனாரு சுப்பு வாத்தியாரு. கொஞ்ச நேரம் பலமா யோசிச்சாரு. பெறவு பேசுனாரு, "போன மொறெ போல ஆயிடக் கூடாதுடாம்பீ! ந்நல்லா நமக்குத் தெரிஞ்ச நாலு பேத்துக்கிட்டெ விசாரிஜித்தாம் கொடுக்கணும். இதுக்கு மேல வக்கீல மாத்துறாப்புல இருக்கக் கூடாது பாத்துக்கோ!"ன்னு எந்திரம் பழுதாவுதுன்னு அதெ கழட்டி மாட்டுறதே வேலையா இருக்கக் கூடாதுங்றாப்புல.

            "அத்துச் சரிதாம்பா! ஆர்குடி கோர்ட்டுல நடக்குற வழக்குகள அஞ்ஞ இருக்குற வக்கீலப் பாத்துதாம் கொடுக்கணும். அவருகிட்டெயே திருவாரூரு கோர்ட்டுல நடக்குற கேஸ் கட்டையும் கொடுத்துடக் கூடாது. திருவாரூரு கோர்ட்டுல நடக்குற வழக்குக்குத் திருவாரூரு வக்கீலப் பாத்துதாம் கொடுக்கணும்!"ன்னாம் விகடு டீத்தண்ணிய உறிஞ்சிக் குடிக்கணும், ஆட்டுக்கால்ல கடிச்சித்தாம் திங்கணும்ங்றாப்புல.

            "அதாம்டாம்பீ! அத்துதாம் சரிதாம்டாம்பீ! நீயே வெசாரி ஒமக்குத் தெரிஞ்ச வாத்தியாருமார்கள வுட்டு! நமக்கு அலுத்துச் சலிச்சாப்புல ஆயிடுச்சு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அதிகமா சாப்புட்ட பொங்கச்சோறு தெகட்டுறாப்புல. கட்டெ தூக்கி அந்தாண்ட போடுன்னு சொன்ன சுப்பு வாத்தியாரு இந்த அளவுக்கு எறங்கி வந்தாரேன்னு அன்னிலேந்து வக்கீலுங்களப் பத்தி தனக்குத் தெரிஞ்ச வாத்தியார்மார்கள வெச்சி வெசாரிச்சிக்க ஆரம்பிச்சாம் விகடு. ஏற்கனவே கோவிந்து ஆர்குடியில சொல்லி வுட்ட சிவபாதம் வக்கீல ஆரம்பத்துலயே வேணாம்ன்னு சொல்லிட்டாரு சுப்பு வாத்தியாரு. ஏற்கனவே பீஸ்ஸூ கொடுத்து மாள முடியாமாத்தாம் கும்பகோணத்து வக்கீலையே வேணாம்ன்னு சொல்லியாச்சு. இதுல மறுக்கா அது போல பீஸ்ஸூ கேக்குற இன்னொரு வக்கீலுகிட்டெ மாட்டிக்கிட கூடாதுங்றதுல சுப்பு வாத்தியாரு தெளிவா நின்னாரு.

கோர்ட் படியேறலன்னா தூக்கம் பிடிக்காதவரு

            பள்ளியோடம் வுட்டு வந்ததும் விகடுவுக்கு வக்கீலுங்களப் பத்தி வெசாரிச்சிக்கிட்டு அலையுறதுதாம் வேல விடிஞ்சதும் வயக்காட்டெ பாக்க ஓடுற சம்சாரியப் போல. ஒரு நாளு ஆர்குடிப் பக்கம் டிவியெஸ் பிப்டிய எடுத்துட்டுப் போனா, மறுநாளு திருவாரூருப் பக்கம் டிவியெஸ் பிப்டிய எடுத்துட்டுக் கெளம்பிடுவாம். ஆர்குடி ஒன்றியத்துல இருந்த வாத்தியார்மார்க பெரும்பாலும் வக்கீல்கள அவுங்க வெளியில வெச்சிருக்கிற போர்ட் பாத்து பேர்ரு படிச்சவங்களாத்தாம் இருந்தாங்க. யாருக்கும் வக்கீலுங்க குறித்த அறிமுகம் பெரிசா இல்ல. எல்லாம் அவுங்க உண்டு, அவுங்க வேல உண்டுன்னு பள்ளியோடத்துக்கும் வூட்டுக்கும் போயிக்கிட்டு வந்துட்டு இருக்குற ஆளுங்களாலத்தாம் இருந்தாங்க. திருவாரூர்ல அவனுக்குத் தெரிஞ்ச வாத்தியார்மார்களோட நெலமெயும் கிட்டத்தட்ட இப்பிடித்தாம் இருந்துச்சு. ஒரு வார காலத்துக்கு இப்பிடி அலைஞ்ச பெற்பாடு பொதுவா எல்லா வாத்தியார்மார்களும் திரிசோடா வாத்தியார்ரப் பத்தி சொன்னாங்க விகடுகிட்டெ. அவர்ர்ப பிடிச்சா இங்க வழக்கு நடத்துறதுல ஒங்களுக்குத் தோதான வக்கீலு யாருங்றதெ கண்டுபிடிச்சிடலாம்ன்னு அடிச்சிச் சொன்னாங்க. அவரு பக்கத்து நீடாமங்கலத்து யூனியன்ல வாத்தியார்ரா வேலப் பாத்துட்டு இருந்தாரு. கோர்ட்டு வழக்குன்னு அசராம அலையுற ஆளுல அவரு ஒருத்தரு.

            விகடு திரிசோடா வாத்தியாரு நம்பர்ர எப்பிடியோ வெசாரிச்சு வாங்கி அவருக்குப் போன அடிச்சி தன்னப் பத்தி அறிமுகம் பண்ணிக்கிட்டாம். அவரு இவனெப் பத்திக் கேட்டுக்கிட்டு வூட்டு வெலாசம் சொல்லி வரச் சொன்னாரு. "கொஞ்ச நேரம் வூட்டுல வெச்சி ஒங்க கதெயே நேர்ல கேட்டுக்கிட்டு அதுக்கு எந்த வக்கீலு தோது பட்டு வருவாருன்னு பாத்து ஒடனே அழைச்சிட்டுப் போயி ஒஞ்ஞளக் கோத்து வுட்டுடுறேம்!"ன்னு கொல்லு வேல செய்யுறவேம் பாக்காத உலையாங்றாப்புல அவரு உறுதியாச் சொன்னதால, விகடு சுப்பு வாத்தியாரையும் அழைச்சிக்கிட்டு அவரோட வூட்டப் பாக்கக் கெளம்புனாம். அவரோட வூடு ஆர்குடியில புதிய வூட்டு வசதி குடியிருப்புக்குப் பக்கத்துல இருந்த அய்யனாரப்பரு சந்துல இருந்துச்சு.

            விகடு வர்றத எதிர்பார்த்துக்கிட்டு திரிசோட வாத்தியாரு வூட்டுக்கு மின்னாடி இருந்த போர்ட்டிகோவுல போன்ல பேசிக்கிட்டும் அப்பிடியும் இப்பிடியுமா நடந்துகிட்டும் இருந்தாரு. ஆளு நல்ல வெடுவெடுன்னு ஒசரமா இருந்தாரு. தலையில எம்ஜியாரு குல்லா ஒண்ணு போட்டிருந்தாரு. அதெத்தாம் அவர்ரப் பத்தி அறிமுகம் பண்ணுன வாத்தியாருமாருக அவரோட டிரேட்மார்க் அடையாளம்ன்னு சொல்லி வெச்சிருந்தாங்க.

            விகடு அவரு வூட்டுக்கு மின்னாடி டிவியெஸ் பிப்டிய நிப்பாட்டுனதும் போன்ல பேசிக்கிட்டு இருந்தவரு அதெ நிப்பாட்டிட்டு வெளியில வந்து, "விகடபாரதி?"ன்னு கேட்டாரு மொட்டைத் தலையன பாத்தவுடனே தெரியாதாங்றாப்புல. சரிதாம்ங்ற மாதிரி தலையாட்டுன விகடு, "எப்பிடி கண்டுபிடிச்சீங்க?"ன்னாம் விகடு மின்ன பின்ன காங்காமலேயே அடையாளம் கண்டுப்புட்டீங்களேங்றாப்புல.

            "நீஞ்ஞ போன அடிச்ச பெற்பாடு ஒஞ்ஞளப் பத்தி நமக்குத் தெரிஞ்ச வாத்தியாருங்ககிட்டெ வெசாரிச்சேம். சைக்கிள்லயே போற ஆளு எப்பவாச்சும் ஒரு பழைய டிவியெஸ் பிப்டியில வர்ற ஆளுன்னாங்க. இந்தக் காலத்துல யாரு சார் யிப்பிடி வண்டியெல்லாம் வெச்சி ஓட்டிக்கிட்டு இருக்குறது? அதெ கேள்விப்பட்ட ஒடனே ஒஞ்ஞளுக்கு எப்பிடியும் ஒதவிப் பண்டணும்ன்னு முடிவெ பண்ணிட்டேம். வாஞ்ஞ உள்ளார வாஞ்ஞ. ஒரு காப்பியக் குடிச்சிட்டு அப்பிடியே ஒஞ்ஞ கதெயக் கேட்டுட்டு எந்த வக்கீலப் பாக்கலாம்ன்னு முடிவெ பண்டலாம்!"ன்னாரு திரிசோடா இந்தக் காலத்துல பெல் பாட்டம் பேண்ட்டுப் போட்டுட்டுத் திரியுறவனே சுலுவா கண்டுபிடிச்சிப்புடலாம்ங்றாப்புல.

            விகடுவும், சுப்பு வாத்தியாரும் வூட்டுக்குள்ளாரப் போனாங்க. ஹால் நல்லா பெரிசா சோபா போட்டு அட்டகாசமா இருந்துச்சு. ஹாலுக்கு மின்னாடி பெரிய அளவுல எல்யீடி டிவியில செய்திக ஓடிட்டு இருந்துச்சு. ரிமோட்ட எடுத்து சத்தத்தெ இல்லாம ஆக்கிட்டுப் பேச ஆரம்பிச்சாரு திரிசோடா.

            "யாரு அப்பாங்களா?"ன்னாரு திரிசோடா சுப்பு வாத்தியார்ரப் பாத்து விகடுகிட்டெ அனுமானிச்சது சரியாங்றாப்புல. ஆமாங்ற மாதிரி விகடு தலையாட்டுனதும், திரிசோடாவும் சுப்பு வாத்தியாரை அப்பான்னே கூப்புட ஆரம்பிச்சிட்டாரு நீயெமக்கு சகோதரன்னா நாமளும் ஒமக்குச் சகோதரன்தாம்ங்றாப்புல.

சுப்பு வாத்தியார்ரப் பாத்துக்கிட்டெ, "யப்பா! நம்மள எல்லாரும் ஒரு மாதிரியான வாத்தியாரும்பாங்க. அதெப் பத்தி நாம்ம கவலெப்படுறதில்ல. எந்தப் பிரச்சன்னனாலும் கோர்ட்டுக்குப் போயிடுவேம். நமக்கு நீதி கெடைக்குதோ இல்லியோ கோர்ட்டுக்குப் போறேன்னா பயப்படுறானுவோங்றதால அப்பிடி. இப்ப கூட பாருங்க புரோமோஷன்ல நம்மள வுட ஒரு ஜூனியர்ரப் போட்டுட்டாங்க. ஆபீஸ்ல சங்கத்த வெச்சிப் பேசுனாலே தீந்துடுற பெரச்சனதாம். நமக்குத்தாம் அந்தக் கொணமே கெடையாதுல்ல. மதுரை ஹைகோர்ட்டு பிராஞ்ச் இருக்கு பாருங்க. அங்க வெச்சி கேஸ்ஸப் போட்டு வுட்டுருக்கேம். யிப்போ வந்து அங்கயிங்கன்னு சமாதானம் பேசிக்கிட்டு இருக்காங்க. கொஞ்ச நாளு பேசிக்கிட்டுக் கெடக்கட்டும். பெறவு வாபஸ் வாங்குவேம்ன்னு நெனைச்சிருக்கேம்!"ன்னு அவர்ரப் பத்தி கொஞ்சம் சொன்னாரு கோர்ட்டுப் பக்கம் எட்டிப் பாக்கலன்னா அன்னிக்குத் தூக்கம் பிடிக்காதுங்றாப்புல. அதுக்குள்ள அவரோட வூட்டக்காரம்மா கப்புல சுடச் சுட காப்பியும், தட்டுல பிஸ்கோத்தும் வெச்சிக் கொண்டாந்தாங்க. அதெ வாங்கி எல்லாருக்கும் கொடுத்துட்டு அவரும் எடுத்துக் குடிக்க ஆரம்பிச்சாரு. குடிச்சிக்கிட்டெ, "யப்பா! நீஞ்ஞ ஒஞ்ஞ கதெயச் சொல்லுங்க. அதெ கேட்டுட்டு எந்த வக்கீலப் பாக்கலாம்ன்னு முடிவெ பண்டலாம்!"ன்னாரு திரிசோடா கதைக்கேத்தாப்புலத்தாம் கிளைமாக்ஸ்ஸ கொண்டார முடியும்ங்றாப்புல.

            சுப்பு வாத்தியாரு மவளக்குக் கலியாணத்துப் பண்ணி பஞ்சாயத்து வரைக்கும் போயி நின்ன கதெயெ சொன்னாரு சினிமா படத்தோட இன்டர்வெல்லு வரைக்கும் சொல்றாப்புல. பஞ்சாயத்துலேந்து ஆரம்பிச்சி கோர்ட்டு வரைப் போயி ரண்டு வக்கீலு வரைக்கும் மாறுன கதெயெ விகடு சொல்லி முடிச்சாம் இன்டர்வெல்ல ஆரம்பிச்சு மிச்ச கதையெ சொல்லுறாப்புல. அது எல்லாத்தையும் நல்லா கவனமா கேட்டுக்கிட்டாரு திரிசோடா. கேட்டு முடிச்சிக்கிட்டு அவரு பேச ஆரம்பிச்சாரு.

            "யப்பா! நமக்கும் ஆரம்பத்துல கோர்ட்டு கேஸ்ன்னா பயந்தாம். யப்போ நாம்ம நம்ம கிராமத்துல பூவஞ்சேரியில இருந்தேம். வாத்தியாரு வேலைல்லாம‍ கெடைச்ச வேலைக்குப் போயிட்டு இருந்தேம். வய வேலையும் இருக்குறப்போ பாக்குறது உண்டு. கூட்டுக்குடும்பம். அண்ணன் தம்பின்னு நம்மளயும் சேத்து அஞ்சு பேரு. ஊர்ல பெருங்கையி. நெலம்ன்னா பாத்தீங்கன்னா ரண்டரை வேலி. பெறவு காலப்போக்குல நாம்ம வாத்தியாரு வேலைக்கு வந்துட்டதால ரொம்ப வய வேலையெல்லாம் பாக்குறதில்ல. பள்ளியோடம் வுட்டு வந்தா என்னிக்காவது நெனைச்சிக்கிட்டா வயப்பக்கம் எட்டிப் பாக்குறது. அதுவும் ச்சும்மா பொழுது போகலன்னு வேடிக்கெ பாக்குறதுன்னு வெச்சிக்கிக்குங்களேம். அப்பிடித்தாம் நம்ம பொழுது. பள்ளியோடம் வுட்டா வாத்தியார்மார்களோட சுத்துறது, அரட்டெ அடிக்கிறதுன்னு வூட்டுக்கு வர்றதேப் பாத்தீங்கன்னா ராத்திரி எட்டு மணி, ஒம்போது மணியாயிடும். கலியாணம் ஆயி கொழந்த குட்டிப் பொறந்து இஞ்ஞ ஆர்குடிக்கு வர்ற வரைக்குமே அப்பிடித்தாம்ன்னு வெச்சிக்குங்களேம். என்னாச்சுன்னா பூவஞ்சேரியில நம்மளப் போல சித்தப்பாரும் பெருங்கையி. அவருக்கும் எஞ்ஞ குடும்பத்தப் போல அஞ்சு பேரு புள்ளீயோ. கிராமத்துலயே இதெ ரொம்ப விசித்திரமா பேசிப்பாங்கன்னு வெச்சுக்குங்களேம். எஞ்ஞ வகையில நாம்ம மட்டுந்தாம் வாத்தியாரு. மித்த எல்லாரும் வெவசாயந்தாம். அவரு சித்தப்பாரு வகையில புள்ளீயோளும் எல்லாரும் வெவசாயந்தாம். வெவசாயம்ன்னா முப்போகமும் சாகுபடி. வயல்லத்தாம் குடியா கெடக்குறதுன்னு வெச்சிக்குங்களேம். எஞ்ஞ வயலுங்களும், சித்தப்பாரு புள்ளீயோ வயலுங்களும் பக்கத்துப் பக்கத்துலத்தாம். எல்லாம் எஞ்ஞ தாத்தா‍வோட சொத்துதானே. பாகம் பிரிச்சதுல அப்பிடித்தானே பக்கத்துப் பக்கத்துல வரும். அதுல பாத்தீங்கன்னா வரப்பு பெரச்சனெ வர்றதம நாளே இருக்காது. நாம்ம பொய்யிச் சொல்ல விரும்பல. எஞ்ஞ அண்ணன் தம்பி வகையிலயும் மோடு முட்டிங்கத்தாம். அவரு சித்தப்பாரு புள்ளீயோ வகையிலயும் மோடு முட்டிங்கத்தாம். வரப்புப் பெரச்சனன்னு வந்தா வயல்லயே அடிச்சிக்கிட்டுப் பொரளுறதும், அதுக்குப் பஞ்சாயத்து நடக்குறதும் நாள்தோறும் நடக்குற கதெ. நமக்கு அதாலயே பெரும்பாலும் வயப்பக்கம் போறதெ பிடிக்காது. என்னிக்காச்சும் தப்பிப் தவறி வேடிக்கெ பாக்கறதுக்குப் போறதோட செரி. நம்ம வாத்தியாருமாருக யாராச்சும் வூட்டுப்பக்கம் வந்தா அழைச்சிட்டுப் போயி வயக்காட்டெ காட்டுறது உண்டு. அவ்வளவுதாம் வயலுக்கும் நமக்கும் உள்ள சம்பந்தம். குளிக்கிறதுன்னா கூட வயக்காட்டுல இருக்குற போர்ப்பக்கம் போறது கெடையாது. வூட்டுலயே பைப்பத் தொறந்து வுட்டுக் குளிக்கிறதுதாம்ன்னு வெச்சக்கிங்குளேம். ஒரு நாளு என்னாச்சுன்னா வரப்புப் பெரச்சனையில சண்டென்னா சண்டெ பெருஞ் சண்டையா ஆயிப் போச்சுது. அடிதடின்னா ரண்டுப் பக்கமும் ரத்தக் களறியா ஆயிப் போச்சு. அன்னிக்கே ராத்திரியே ஊருப் பஞ்சாயத்து வெச்சி மொறையாப் பேசி, ரண்டு பக்கத்து வயலுங்களயும் பெரியவஙகள வெச்சி போஸ்ட்ட போட்டு வெலி வெச்சி பிரிச்சிடுறது, இனுமே இந்தப் பெரச்சனெ தொடரக் கூடாதுன்னும் முடிவும் ஆயிடுச்சுங்க. சித்தப்பாரு மெவனுங்க அத்தோட இருக்கணுமா இல்லியா. அவனுங்க ன்னா பண்ணிட்டாங்கன்னா ஸ்டேசன்ல ஒரு கம்ப்ளெய்ண்ட பண்ணி கோர்ட்டுலயும் கொண்டுப் போயி வக்கீல வெச்சி கேஸ்ஸக் கொடுத்துப்புட்டானுவோ. செரி கேஸ் கொடுத்தவனுவோ என்ன பண்டணும்? யாரோட சண்டெ போட்டானுவோளோ அவனுங்க பேர்ர வெச்சித்தானே கொடுக்கணும். அதுலப் பாருங்க பெரியப்பாரு மவ்வேம் படிச்சி கவர்மெண்டு வேலையில இருக்காம்ன்னு அவ்வேம் வேலையப் பிடுங்கனும்ன்னு நம்ம பேர்ரயும் கொடுத்துட்டானுவோ. அந்தச் சண்டெ நடந்து நேரத்துல நாம்ம ஸ்பாட்டுலயே யில்ல. நாம்ம பள்ளியோடத்துல பாடம் நடத்திக்கிட்டு இருக்கேம். நம்ம குடும்பத்துல இருக்குற அத்தனெ பேரையும் போலீஸூ தேடுது. எஞ்ஞ அண்ணன், தம்பி உட்பட ஆளாளுக்கு ஒரு எடத்துக்கு எஸ்கேப்பு. நாம்மளும் எஸ்கேப்பு. நம்மள அரஸ்ட் பண்ணி ஒரு நாளு உள்ளார வெச்சாலும் வேலையிலேந்து சஸ்பெண்ட் பண்ணிப்புடுவாங்களே. நம்ம மாமனாரு ஆர்குடியில தாய்மண் முன்னேற்ற கழகத்துல பெரிய போஸ்டிங்க்ல இருந்தவரு. அவருதாம் நம்மள கொண்டுப் போயி பாண்டுரங்கஹரிங்ற வக்கீலு வூட்டுல வுடுறாரு. எஞ்ஞ அண்ணன்லாம் அவரு மூலமா கோர்ட்டுல சரணடைஞ்சாங்க. பாண்டுரங்கஹரி என்னா பண்ணாருன்னா நம்மள மட்டும் கோர்ட்டுக்குப் போவ வுடாம அவரோட வூட்டுலயே வெச்சி இந்தக் கேஸ்ஸ எடுத்து நடத்துனாரு. இந்தச் சம்பவம் நடந்த நேரத்துல நாம்ம பள்ளியோடத்துல இருந்தேம்ங்றதுக்கு பள்ளியோடத்துக்குப் போயி மாஸ்டர்ஸ்ஸ ஆதாரம் காட்டி, ஹெச்செம்கிட்டெ காயிதத்துல எழுதி வாங்கியாந்து நம்மள காப்பாத்தி வுட்டாரு. ஒடனே எஞ்ஞ அண்ணன் தம்பி அத்தனெ பேரையும் ஜாமீன்லயும் எடுத்துட்டாரு. ஆன்னா இந்த கேஸ்ஸூ பாத்தீங்கன்னா ரண்டு வருஷம் நடந்திருக்கு. கடெசீயில கேஸ்ஸூ நம்மப் பக்கந்தாம் சாதவமா மாறுது. அப்பப் பாத்து சித்தப்பாரு பயலுங்க வந்து பாண்டுரங்கஹரிகிட்டெ சமாதானம் பேசுறானுவோ. அவரு போடா மயிரானுங்கன்னுட்டாரு. ஊருப் பஞ்சாயத்தெ மீறி அவனுங்கப் பாட்டுக்கு ஸ்டேசன்னு, கோர்ட்டுன்னு போனதுல ஊருல எவனும் அவனுகளுக்குச் சாதவமா சாட்சி சொல்லல. அத்து ஒரு ப்ளஸ்பாய்ண்டு எஞ்ஞளுக்கு. கடெசியில கேஸ்ல ஜெயிச்சேம்ன்னு வெச்சுக்குங்களேம். இன்னிக்கு எஞ்ஞ கிராமத்துல எஞ்ஞ யண்ணம் தம்பி அத்தனெ பேரும் வெவசாயம் பண்ணிட்டு இருக்காங்க. எஞ்ஞ சித்தப்பாரு மவனுங்க ஒருத்தன் கூட கெடையாது. எல்லா பயலும் ஒரு கட்டத்துக்கு மேல சென்னைப் பட்டணம் போறேம், பெங்களூரு போறேம்ன்னும் போயி அத்தனெ பேரும் ஒழிஞ்சானுவோ. பொய்க் கேஸ்ஸூ கொடுக்கக் கூடாது பாருங்க. இன்னியத் தேதிக்கும் இதெ எஞ்ஞ கிராமத்துலப் பேசிட்டு இருப்பாங்க. நமக்கு அன்னிலேந்த அறிமுகம் ஆனவருதாம் பாண்டுரங்கஹரி. நமக்கு என்னப் பெரச்சனல்லாம் அவருகிட்டெ போயி நின்னுடுவேம். அவருதாம் நமக்கு எல்லா டேரக்சனும். அவரால முடியாட்டியும் செய்யுறேம்ன்னு நிக்க மாட்டாரு, அதுக்கேத்தாப்புல ஒரு வக்கீல கையக் காட்டி வுடுவாருங்க. அதுதாங்க அவரோட கொணங்றது. ஆர்குடியில நீஞ்ஞ எந்த வக்கீலும் எந்த வக்கீலையும் பெரமாதாம சொல்ல மாட்டாம். ஆன்னா நீஞ்ஞ எந்த வக்கீல்கிட்டெ பாண்டுரங்கஹரிய வக்கீலப் பத்தி மட்டும் கேட்டீங்கன்னா பேர்ர சொன்ன ஒடனேயே எழுந்திரிச்சி நின்னுவாடுங்க. அப்பிடி ஒரு மருவாதி அவருக்கு. ரொம்ப நல்ல மனுஷனுங்க யப்பா அவரு!"ன்னாரு திரிசோடா வூட்டுக்கொரு பாரதக் கதெ இருக்குங்றாப்புல.

            "நாமளும் அவர்ரப் பத்திக் கேள்விப்பட்டிருக்கேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஆரூர்ல இருந்துக்கிட்டுத் ஆழித்தேர்ரத் தெரியாம இருக்க முடியுமாங்றாப்புல.

            "கேள்விப்பட்டுமா நம்மகிட்டெ வந்திருக்கீயே? நேர்ரா அவருகிட்டெயே போயிருக்கலாமே?"ன்னாரு திரிசோடா ஆழித்தேர்ர பாக்குறதுக்கு எதுக்கு வெலாசம் வெசாரிச்சுக்கிட்டுங்றாப்புல. சுப்பு வாத்தியாரு மூலங்கட்டளெ கோவிந்தோட சிவபாதம் வக்கீலப் பாக்கப் போனப்ப, சிவபாதம் வக்கீலு மூலமா பாண்டுரங்கஹரியப் பத்திக் கேள்விப்பட்டதெ சொன்னாரு.

            "சிவபாதமும் நல்ல வக்கீலுதாம். இன்னிக்கு ஆர்குடியில ரண்டு சீனியர் வக்கீல்ன்னா சிவபாதமும், பாண்டுரங்கஹரியும்தாம். என்ன ஒண்ணு சிவபாதம் நமக்குச் சரிபட்டு வார மாட்டாரு. பீஸ்ஸூங்ற பேர்ல பசு மாட்டெ மெஷின்ன வெச்சிப் பாலக் கறக்குறாப்புல கறந்து தள்ளிடுவாரு. மித்தபடி ரண்டு பேருமே ஈக்குவலான ஸ்ட்ரென்த், டேலன்ட் உள்ள ஆளுங்கத்தாம். இவுங்க ரண்டு பேத்துக்கிட்டெ கேஸ் கட்டு போயிடுச்சுன்னா எந்த வக்கீலா இருந்தாலும் மெராளுவாயிங்க. அதெ நாம்ம அடிச்சிச் சொல்லுவேம்!"ன்னாரு திரிசோடா ஏழை பாழைங்க குடிக்கிறதுக்குக் காப்பித் தண்ணிய வுட டீத்தண்ணித்தாம் ஏத்ததுங்றாப்புல.

            சுப்பு வாத்தியாரு ரண்டு வக்கீல்கிட்டெ பட்ட அடியச் சொல்லி, மேக்கொண்டு அடிபடாத அளவுக்கு இருக்கணும்ன்னு திரிசோடாகிட்டெ சொன்னப்போ, "ஒஞ்ஞ கதெய கேக்குறதுக்கு மின்னாடியே நாம்ம பாண்டுரங்கஹரிகிட்டெ ‍அழைச்சிட்டுப் போறதாத்தாம் முடிவு பண்ணிருந்தேம். ஒஞ்ஞ கதெயெ கேட்டதுக்குப் பெறவு அவருகிட்டெதாம் அழைச்சிட்டுப் போவணும்ன்னு முடிவே பண்ணிட்டேம். அவர்ரப் போயிப் பாத்தா அவரே எடுத்துப்பாராங்றதயும் சொல்லிடுவாரு. வேற வக்கீலப் பாக்கலாமாங்றதயும் சொல்லிடுவாரு. இந்த வயசுல அவரு கேஸ்ஸூ எடுத்து நடத்தணும்ங்ற அவசியமெல்லாம் கெடையாதுங்கப்பா. நம்மள மாதிரி ஆளுங்களுக்காக ஒரு சில வழக்குகள மட்டும் எடுத்து ஆஜராயிட்டு இருப்பாரு. பீஸ்ஸூன்னும் ரொம்பக் கேக்க மாட்டாரு. பீஸ்ஸூ கொடுக்காட்டியும் அதெ பெரிசு பண்ணிக்கிட மாட்டாரு. நம்மள மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் அவருதாம் செரிபட்டு வருவாருப்பா!"ன்னாரு திரிசோடா சீனி உருண்டெ போல இனிக்காட்டியும் கெட்டி உருண்டெ போல பெலம் தர்றது வேற இல்லங்றாப்புல.

            "நமக்கு ஆர்குடியில மட்டுமில்ல. திருவாரூர்லயும் வழக்கு இருக்கு. அஞ்ஞ வேற வக்கீலத்தாம் வெச்சாவணும். ஏன்னா நாஞ்ஞ ஒரே வக்கீலேயே ரண்டு எடத்துலயும் வெச்சி மோசமான அனுபவத்தெ நெறைய அனுபவிச்சிட்டெம்!"ன்னாம் விகடு பாலையும் மோரையும் வேற வேற பாத்திரத்துல வைக்கணும்ங்றாப்புல.

            "பாண்டுரங்கஹரிக்கு திருவாரூர்லயே நெறைய கான்டாக்ட் இருக்கும். அஞ்ஞ இருக்குற வழக்குக்கு அவரே வக்கீலப் பாத்துச் சொல்லிடுவாரு. நாம்ம அஞ்ஞ தனியாவே அவரு சொல்ற வக்கீலப் போயிப் பாத்துக்கிடலாம். அவர்ர வந்துப் பாத்துப் பேசுனீங்கன்னா ஒஞ்ஞளோட அத்தனெ கொழப்பமும் தீந்துப் போயிடும். அவர்ரப் பாக்காத வரைக்கும் கேள்வி மேல‍ கேள்வியாத்தாம் எழும்பிக்கிட்டு இருக்கும். நீஞ்ஞ வர்றதா சொன்ன ஒடனே அவருகிட்டெ பேசிட்டேம். ஏழு மணிக்கு மேல வர்றச் சொல்லிட்டாரு. நேரம் ஏழு மணிய நெருங்கப் போவுது. போயி அவர்ரப் பாத்துடுவேம். பிடிச்சா சொல்லுங்க. யில்லன்னா வேற வக்கீலுங்களயும் நமக்கு ஆர்குடியிலயும் தெரியும். திருவாரூர்லயும் தெரியும். அழைச்சிட்டுப் போயிக் காட்டுறேம். ஆர்குடியப் பொருத்த வரைக்கும் நமக்குத் தெரிஞ்ச வரைக்கும் பாண்டுரங்கஹரிதாம் பெஸ்ட்டுப்பா!"ன்னாரு திரிசோடா நாட்டு மாட்டுப் பால்ல காய்ச்சாம கூட கண்ண மூடிட்டுக் குடிக்கலாம்ங்றாப்புல.

            "செரி அப்பிடின்னா அனுபவப்பட்டவங்க நீஞ்ஞ சொல்றப்ப போயிப் பாத்துடுவேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு மாடு நிக்குற தோரணையிலயே மேக்கொண்டு பல்ல பிடிச்சிப் பாக்கணுங்ற அவசியம் இல்லங்றாப்புல.

            "கட்டுகள கொண்டு வந்திருக்கீயளா?"ன்னாரு திரிசோடா வரன் பாக்கப் போறதுக்கு மின்னாடி சாதவத்தெ கொண்டு வந்தீயளாங்றாப்புல.

            "பாத்துப் பேசிட்டு திருப்திப்பட்டா கட்டுகள எடுத்துட்டு வாரலாம்ன்னு இருந்துட்டேம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வரனெப் போயிப் பாத்துப்புட்டு சாதவப் பொருத்தத்தெ பாத்துக்கிடலாம்ங்றாப்புல.

            "செரி பரவாயில்ல. வாஞ்ஞப் போயிப் பேசுவேம்!"ன்னு திரிசோடா பாண்டுரங்கஹரியோட வக்கீல் ஆபீசுக்கு அழைச்சிக்கிட்டுப் போனாரு வரனெப் பாத்துத் திருப்திப்பட்டா மேக்கொண்டு பேச வேண்டியதெ பேசி நிச்சயம் பண்டிக்கிடலாம்ங்றாப்புல.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...