22 Feb 2021

மன்னிக்க தெரிஞ்சிட்டா ஞாயம் தேவையில்ல!

மன்னிக்க தெரிஞ்சிட்டா ஞாயம் தேவையில்ல!

செய்யு - 725

            பொழுது விடியத் தொடங்குற நேரத்துல பயணத்தெ கெளப்புறதுல நெறைய செளகரியங்க இருக்குது. ரோட்டுல அநேகமாக வாகனங்க அந்த நேரத்துல அதிகமா இருக்காது. நாம்ம மட்டுமே போறதுக்குன்னே ரோட்டைப் போட்டிருக்கிறது போல இருக்கும். காத்தால அடிக்கிற அந்தக் காத்துல போறது ரொம்ப உற்சாகமா இருக்கும். வேகமா ஊரு குருவியாட்டம் ரோட்டுல வண்டியில சிறகு மொளைச்சாப்புல பறக்கலாம். அஞ்சே முக்கால் வாக்குல வூட்டுலேந்து டிவியெஸ் பிப்டியில கும்பகோணத்துக்குக் கெளம்புன விகடு எட்டே காலுக்கெல்லாம் பாலக்கரையில இருக்குற வக்கீலோட ஆபீஸூக்குப் போயிட்டாம். ஆபீஸ் மூடிக் கெடந்துச்சு. அந்த ஆபீஸ் படிகட்டுலயே கொஞ்ச நேரம் உக்காந்திருந்தாம். ஆபீஸ்ஸ தொறந்து விடுங்கன்னு பக்கத்துல இருக்குற வூட்டுல அழைப்பு மணிய அடிச்சுக் கேட்டா அவுங்க வந்து சித்தெ நேரம் கழிச்சு வான்னு சொல்லிப்புட்டா சங்கடமா போயிடுமுன்னு அப்பிடியே உக்காந்தபடியே இருந்துட்டாம் தவக்கோலத்துல உக்காந்திருக்குற செலையாட்டம். அவுங்க வந்து ஆபீஸ்ஸ தொறக்குறதுக்குள்ளார சாப்பாட்ட முடிச்சிடுவேம்ன்னு நெனைப்பு வந்ததும், கொஞ்ச தூரத்துல ஆபீஸூக்கு எதுத்தாப்புல இருந்த ஒரு சாப்பாட்டுக் கடையில நாலு இட்டிலியைச் சாப்புட்டு முடிச்சாம். திரும்பவும் வந்து ஆபீஸ் படிகட்டுலயே எடம் மாறாத செலையாட்டம் உக்காந்தாம்.

            பாலக்கரை ரோட்டுல கொஞ்சம் கொஞ்சமா வாகனங்களோட எண்ணிக்கை அதிகமாயிட்டே இருந்துச்சு. பள்ளியோடத்துக்குப் போறவங்க, வேலைக்குப் போறவங்கன்னு வாகனங்கள் அது பாட்டுக்கு அவுங்கள சொமந்துகிட்டெ போயிட்டே இருந்துச்சு. இத்தனெ காலத்துல மனுஷங்கள விட வாகனங்கள் ரொம்ப அதிகமாயிடுச்சு. மனுஷங்களுக்காச்சும் மக்கள் தொகை கட்டுபாடுன்னு ஒண்ணு இருக்குது. வாகனங்களுக்கு அப்பிடி என்னத்தெ இருக்க முடியும்? அது பாட்டுக்கு குட்டி மேல குட்டி போட்டதெ போல அங்கயும் இங்கயும் அலைஞ்சிக்கிட்டு இருக்குது. வயித்துப் பசிக்குன்னு கடனக் கேட்டா பாங்கியில கொடுக்க மாட்டாம், ஆன்னா வாகனக் கடனெ கேட்டா மொத வேலையா அதெ கொடுத்துட்டுத்தாம் மறுவேல பாப்பாம். வாகனங்க இல்லாம மனுஷங்க இல்லன்னு ஆயிப் போச்சுது. சர்வ சக்தியுள்ளதா சொல்லப்படுற சாமிக்கே கூட ஏதோ ஒரு வாகனம் தேவைப்படுறப்போ, மனுஷனுக்குத் தேவைப்படதா என்ன? அந்த வாகனங்க ஒவ்வொரு மனுஷங்களையும் ரோட்டுல இயக்கிக்கிட்டெ இருந்துச்சு.

            வக்கீல் செந்தில்குமாரு வூட்டுலேந்தும் பள்ளியோடத்துக்குக் கெளம்புற புள்ளைங்க ஒம்போது மணி வாக்குல வந்து பள்ளியோடத்து வேன்ல ஏறுனுச்சுங்க. ஒரு அம்மா வந்து ஹாரன் சத்தம் கேட்டதும் கதவெ தொறந்துக்கிட்டு புள்ளைகள ஏத்தி விட்டுட்டுத் திரும்பவும் கதவெ மூடிட்டு உள்ளாரப் போயிட்டாங்க. ஆபீஸ் வாசல்ல உக்காந்திருக்கிற விகடுவெப் பத்தி அவுங்க எதுவும் கண்டுக்கிடல. அவங்களுக்கு இது மாதிரி பல பேரு வந்து உக்காந்துப் பாத்து அலுத்துப் போயிருக்கும். மணி ஒம்பதே கால், ஒம்பதரைன்னு ஆயிக்கிட்டு இருந்துச்சு.

            ஒம்போதெ முக்கால் வாக்குல நந்தகுமாரு பழைய ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளண்டர்ல வந்து வேக வேகமா ஆபீஸ் மின்னாடி நிறுத்துனாரு. அவர்ரப் பாத்ததும் விகடு எழுந்திரிச்சாம். ஒடனே அவரு செந்தில்குமாரு வூட்டோட அழைப்பு மணிய அடிச்சதும், புள்ளீயோள ஏத்தி வுட வந்த அம்மா, சாவிக் கொத்தெ கொடுக்க கதவத் தொறந்துட்டு, அதெ கொடுத்ததும் மூடிக்கிட்டு உள்ளாரப் போயிட்டாங்க.

            வேகமா கதவத் தொறந்துகிட்டு உள்ளாரப் போனவரு, "சாரி சார்! நேத்திக்கே சொன்னாங்க. கட்டெ வாங்கப் போறதா. நாம்ம வர்ற கொஞ்சம் லேட்டாயிடுச்சு. வேற எந்த வக்கீல சார் பாத்திருக்கீங்க?"ன்னாரு நந்தகுமாரு வெரட்டுறதுக்கு மின்னாடி வெரண்டு ஓடுற தெசைய தெரிஞ்சிக்கிடலாம்ங்றாப்புல.

            "இன்னும் யாரையும் பாக்கல. கட்டெ வாங்கிட்டுத்தாம் போயிப் பாக்கணும்!"ன்னாம் விகடு போவப் போவத்தாம் பாதை தெரியும்ங்றாப்புல.

            "இவனுங்க இப்பிடித்தாம் சார்! காசு காசுன்னே இது மாதிரி நெறைய பேரை ஓட அடிச்சிருக்கானுவோ. நமக்கு இவனுங்கள வுட்டா வேற வழியில்லன்னு ஒட்டிக்கிட்டுக் கெடக்குறேம். நல்ல வேள சார்! இவுனுங்கள வுட்டு வெலகுனது!"ன்னாரு நந்தகுமாரு தப்பிச்ச வரைக்கும் அதிர்ஷ்டந்தாம், மாட்டிக்கிடா துரதிர்ஷ்டந்தாம்ங்றாப்புல. அவரு இன்னும் கேஸ் கட்டுகளத் தேடிக்கிட்டு இருந்தாரு. அப்பத்தாம் வேக வேகமா செந்தில்குமாரு வக்கீலோட கார் டிரைவரு பையன் வந்து நொழைஞ்சாம். 

            "ஏம்ப்பா கொஞ்சம் வேகமா வந்து ஆபீஸ்ஸத் தொறந்தா ன்னா? வந்து வெளியில உக்காந்திருக்காங்க!"ன்னாரு நந்தகுமாரு விடியுறதுக்கு மின்னாடியே கம்மாக்கரை சோலிய முடிச்சிடணும்ங்றாப்புல.

            "கேஸ் கேஸ்ன்னு அலைய வுடுவீங்க. காச மட்டும் ஒழுங்கா கொடுக்க மாட்டீங்க. இதுக்கு சீக்கிரமாவே வந்து ஆபீஸ்ஸத் தொறக்கணுமாக்கும்!"ன்னு அந்தப் பையன் முணுமுணுத்தான் பிடிச்ச மீனுக்குத்தாம் கால நேரமெல்லாம், காய்ஞ்ச கருவாட்ட எப்போ வாணாலும் சந்தைக்குக் கொண்டுட்டுப் போவலாம்ங்றாப்புல.

            "சத்தம் போடாதடா! செய்யுவோட வழக்குக் கட்டுகளப் பாத்தீயா? ரண்டு கட்டுகள எடுத்துட்டேம். ஒண்ணுத்தெ காணும்!"ன்னாரு நந்தகுமாரு வக்கனையா பேசுறதெ வுட்டுப்புட்டு வகையா காரியத்துல கவனத்தெ காட்டுங்றாப்புல.

            "அதெ நீ பாரு! நாம்ம ஒரு வாய்தாவுக்குப் போயாவணும். நாம்ம கெளம்புறேம்!"ன்னு சொல்லிட்டு அந்தப் பையன் ஒரு கட்டெ எடுத்துட்டு வெளியில கெளம்புனாம் ஈறு எடுக்குறது ஈறுகுளியோட வேல, பேன எடுக்குறது பேனு சீப்போட வேலங்றாப்புல. ஆனந்தகுமாரு அப்பத்தாம் வேக வேகமா உள்ளார நொழைஞ்சாரு. விகடுவெப் பாத்ததும் மென்மையா சிரிச்சாரு. நந்தகுமார்ரப் பாத்து, "நீயி ரண்டு கேஸ்ல ஆஜராவ வேண்டிருக்குல்லா. கட்ட எடுத்துட்டுக் கெளம்பு. நாம்ம சாருக்குப் பாத்துக் கட்டெ எடுத்துக் கொடுக்கிறேம்!"ன்னாரு பந்திக்குப் பறக்கிறவேம் பரிமாறிக்கிட்டு நிக்கக் கூடாதுங்றாப்புல. அதெ கேட்டுக்கிட்டு அவருக்குள்ள கட்டெ எடுத்துக்கிட்டு நந்தகுமாரு கெளம்புனாரு. ஆனந்தகுமாரு ‍பெரிய சொழல் நாற்காலிக்குப் பக்கத்துல இருக்குற சின்ன சொழல் நாற்காலியல உக்காந்தாரு.

            "அப்புறம் சார்! சொல்லுங்க!"ன்னாரு வெவரம் அறியாதவேம் வெசாரிச்சுத் தெரிஞ்சுக்கிறாப்புல.

            "கட்டுகள கொடுத்தா வாங்கிட்டுக் கெளம்பிடுவேம்!"ன்னாம் விகடு ஆட்டம் முடிஞ்சா படுதா காலியாயிடும்ங்றாப்புல.

            "ஏம் சார் திடீர்ன்னு இந்த முடிவு?"ன்னாரு ஆனந்தகுமாரு குட்ட குட்ட குனியுறவேம் திடுதிப்புன்னு நிமுறக் கூடாதுங்றாப்புல.

            "நாஞ்ஞ பணத்தெ கொடுக்காம ஏமாத்துறதா மூத்தவரு நெனைக்கிறாரு. எஞ்ஞளாளயும் நீஞ்ஞ எதிர்பாக்குற அளவுக்குப் பணத்தெ இனுமே கொடுக்க முடியுங்ற நெலையில யில்ல. அதாங் மொகம் முறிஞ்சிப் போயி வெலகிக்கிறதுக்கு நாசுக்கா கட்டெ வாங்கிட்டு வெலகிக்கிடலாம்ன்னு!"ன்னாம் விகடு ஒடம்பு வலிச்சா பொறுத்துக்கிடலாம், மனசு வலிச்சா பொறுத்துக்கிட முடியாதுங்றாப்புல.

            "நீங்கத்தாம் பணத்தெ சரியா கொடுத்துட்டு இருக்கீங்களே! ஒரு சின்ன தப்பு நடந்துப் போச்சு. ஆக்சுவலா அது என்னோட மிஸ்டேக். ஒங்க அப்பா நம்மகிட்டெ இடையில ஒரு மொறை ஆர்குடி கோர்ட்டுல ஆஜரானப்போ அவுங்களும் வந்தாங்க. அப்போ விடுபட்டுப் போன வாய்தாவுக்கான பணத்தெயெல்லாம் கொடுத்திருக்காங்க. அதெ நாம்ம வேல அலமலப்புல இங்க ஆபீஸ்ல சொல்லாம விட்டதுல ஒரு சின்ன கன்ப்யூசன் ஆயிருக்கு. ஆக்சுவலா அந்த நேரத்துல எங்கம்மாவுக்குக் கொஞ்சம் ஒடம்புக்கு முடியல. அதெ நெனைப்புல வர்றதும் போறதுமா இருந்ததால நெறைய விசயங்கள சொல்ல மறந்துட்டேம். நேத்திக்கு நீங்க அண்ணங்கிட்டெ போன் பண்ணி கேஸ் கட்டுகள கொடுங்கன்னு சொன்னதுமே, அண்ணன் நம்மளப் போன் போட்டு இங்க வர்றச் சொல்லிட்டாங்க. நேத்தி ராத்திரி ரொம்ப நேரம் இதெப் பத்திதாம் பேசிக்கிட்டு இருந்தேம் சார்!"ன்னாரு ஆனந்தகுமாரு தெரியாத்தனமா அடிச்சதெ புரியாத்தனமா எடுத்துக்கிட வாணாங்றாப்புல.

            "யப்பாவும் சொன்னாங்கய்யா! பணத்தெ கொடுத்துட்டதாவும் ஒஞ்ஞ மூத்தவரு கேக்கற அளவுக்குப் பணம் வர்றாதுன்னும். நாம்மத்தாம் அவுங்க ஒரு கணக்குச் சொல்றப்போ, நாம்ம அதெ அப்படி இல்லன்னு சொல்றது சரிபட்டு வாராதுன்னு பணத்தெ கொடுத்து விட்டேம். அப்போ பாத்தீங்கன்னா யாருமே இந்த ஆபீஸ்ல யில்ல. டிரைவரு பையங்கிட்டெ கொஞ்சம் பணத்தெ கொடுத்துட்டுப் போவச் சொன்னதுல அவுங்க சொன்னபடிக்கே கொடுத்துட்டுப் போயிருக்காங்கய்யா. பெறவு பேங்குல நெப்ட் டிரான்ஸ்பர் பண்ணச் சொன்னதுல ஒஞ்ஞ கணக்குக்குப் பணம் போயிச் சேர்றாம போயிருக்கு. அதெ கூட ஒஞ்ஞ மூத்தவரு நம்புறாப்புல யில்ல. நாஞ்ஞ என்னவோ பணத்தெ கொடுக்காம ஏமாத்த நெனைக்கிறதா நெனைச்சிட்டாரு. இனுமே நாஞ்ஞ யார்ர ஏமாத்தப் போறேம் சொல்லுங்க? நாஞ்ஞத்தானேய்யா ஏமாந்துப் போயி நிக்குறேம். ஒஞ்ஞ யம்மாவுக்கு ஒடம்பு சரியில்லன்னதும் எப்பிடி ஒஞ்ஞ கவனமெல்லாம் செதறிப் போச்சுன்னு நீஞ்ஞ சொல்றீயளோ, அதெ மாதிரித்தாங்கய்யா எஞ்ஞ யப்பாவுக்கு ஒடம்புக்கு முடியாமப் போயி எஞ்ஞளாலயும் சில நாட்களா எதுலயும் கவனமெ கொடுக்க முடியாமப் போயிடுச்சு!"ன்னாம் விகடு அடிச்சவேம் அடிபட்டா அவனுக்கும் வலிக்கும்தாம்ங்றாப்புல.

            "சத்தியமா நீங்க பண விசயத்துல யாரையும் ஏமாத்தல சார்! நாங்க போட்டு வெச்சிருக்கோமே டிரைவர்ன்னு ஒருத்தனெ அவ்வேம் பண்ணுன வேல சார்! அவ்வேங்கிட்டெயும் ஒங்க அப்பா வாய்தா தவறாம பணத்தெ கொடுத்திருக்காங்க. அவ்வேம் அத்தனையையும் மறைச்சிருக்காம். நேத்தி ஆபீஸ்ல வெச்சி மெரட்டிக் கேட்டதும்தாம் உண்மைய ஒத்துக்கிட்டாம். எங்களுக்கு ரொம்பவே சங்கடமாப் போயிடுச்சு சார். இப்போ பாருங்க அவனே ஆபீஸ்லயே எங்க கண்ணுல படாம ஓடுறாம். நெறைய கேஸ்கள இழுத்துப் போட்டுக்கிறதுல அங்கங்கப் போயி ஆஜராவுறதுக்கு எங்களுக்கு ஆளும் கெடைக்க மாட்டேங்குது. நாங்களே எத்தனையில போயி ஆஜராவுறது சொல்லுங்க. அதால பெரும்பாலும் டிரையலுக்கு வர்றப்பத்தாம் போறது!"ன்னாரு ஆனந்தகுமாரு உதவிக்குன்னு வெச்சவேம் பண்டுற உபத்திரவத்தெ பெரிசு பண்டிடக் கூடாதுங்றாப்புல.

            "நாஞ்ஞளும் பணத்தெ கொடுத்த ஒவ்வொரு தவாவும் ஒஞ்ஞ மூத்தவருக்குப் போன அடிச்சிச் சொல்லிருக்கணும். எல்லாம் ஒரு ஆபீஸ்லத்தானே இருக்கீயே. அந்த வெவரத்த பகிர்ந்தீப்பீயேன்னு நெனைச்சி இருந்துட்டேம். இஞ்ஞ வந்துப் பாக்குறப்பத்தாம் தெரியுது ஒஞ்ஞளுக்கு ஒருத்தொருக்கொருத்தரு பேசுறதுக்கே நேரமில்லங்றது!"ன்னாம் விகடு பாதையப் பாக்காம நடந்தா நடக்குறவனுக்குத்தாம் சேதாரம்ங்றாப்புல.

            "அதெ விடுங்க சார்! நடந்தது நடந்துப் போச்சு. விவாகரத்து வழக்குக்கு நீங்க சொன்னபடி அய்யாயிரம் கூட இல்ல, மூவாயிரம் கொடுத்தாலே போதும். நான்தான் நடந்ததெ சொல்லிட்டேனே, நாங்க கேஸ்ஸ எடுத்து நடத்துறோம். இப்போ என்னா சொல்றீங்க? கேஸ்ஸ நாங்க நடத்துட்டுமா என்னா?"ன்னாரு ஆனந்தகுமாரு ஒடைஞ்ச கண்ணாடிய பெரமாதமா ஒட்ட வெச்சிப்புடலாம்ங்றாப்புல.

            "கட்டெ கொடுங்கன்னு சொல்லிட்டேம்ங்கய்யா!"ன்னாம் விகடு பானையில விரிசல் வுழுந்தா வுழுந்ததுதாம்ங்றாப்புல.

            "ஒரு ஆத்திர அவசரத்துல கம்யூனிகேசன் கேப்புல அன்டர்ஸ்டாண்டிங் மிஸ்ஸாயி அப்பிடில்லாம் பேசிடறதுதாம். நேத்தி நடந்ததெ முழுசா தெரிஞ்ச பெற்பாடு அண்ணங் கூட நெனைச்சி வருத்தப்பட்டாரு. நாம்மத்தாம் அவுங்கள சமாதானம் பண்ணி நாளைக்கு நீங்க வர்றப்ப பேசுறதா சொன்னேம். அதாம் பாத்தீங்கன்னா ஒங்களப் பாக்குறதுக்கு யோசிச்சுக்கிட்டு அண்ணன் உள்ளாரயே இருக்காரு."ன்னாரு ஆனந்தகுமாரு ஒரு வேகத்துல பேசுறதையெல்லாம் கோவத்துல பேசுறதா எடுத்துக்கிடக் கூடாதுங்றாப்புல.

            "அய்யா இத்து ஒங்களோட ஆபீஸூ. நாஞ்ஞ வழக்குக்காக வர்றவங்க. வழக்கு முடிஞ்சா போறவங்க. இதுல அவுங்க இங்க உள்ளார வர்றதுக்கு யோசிக்கிறதுல ன்னா இருக்கு? நீஞ்ஞ சொல்றாப்புல ஒருத்தருக்கொருத்தரு கலந்துக்கிறதுல பெரிய இடைவெளியே வுழுந்திருக்கு. அதெ நாம்ம ஒத்துக்கிறேம். நாம்ம கட்டெ‍ கொடுங்கன்னு சொன்னதுக்காக மட்டும் கட்டெ வாங்கல. எஞ்ஞளால இனுமே இந்த வழக்குல எதாச்சிம் ஒண்ணுன்னா எம்பது கிலோமீட்டர்ரத் தாண்டி இஞ்ஞ வந்துக்கிட்டுப் போயிக்கிட்டு இருக்க முடியாதுங்றதுக்காகவும்தாம் வாங்குறேம். பணம் கொடுக்குற விசயத்தெ எடுத்துக்குங்களேம் கொஞ்சம் முன்ன பின்ன ஆவலாம். ஏன்னா யிப்போ எஞ்ஞளோட பொருளாதார நெல அப்பிடி இருக்கு. ஒண்ணும் சொல்ல முடியல. காலையில நாலு மணிக்கே எழுந்திரிச்சி ஒரு தம்பளர்ரு பச்சத் தண்ணிய மட்டும் குடிச்சிட்டு இஞ்ஞ ஒஞ்ஞ ஆபீஸ்ஸூ படிகட்டுலயே உக்காந்ததுமே பசி தாங்க முடியல. கொஞ்சம் தள்ளிருக்குற எதுத்தாப்புல ஓட்டல்ல நாலு இட்டிலித்தாம் சாப்பிட்டேம். அப்பவும் பசி அடங்கல. இன்னும் ரண்டு சாப்புட்டா தேவலாம்ன்னு தோணுச்சு. அந்த ரண்டு இட்டிலியச் சாப்புட்டா அதுக்கு அஞ்சு ரூவா கூடுதலா கொடுக்கணும்ன்னு பசிய அடக்கிக்கிட்டு அதுவே போதும்ன்னு வந்து உக்காந்திருக்கேம். எஞ்ஞ நெலமெ யிப்போ அப்பிடி இருக்கு! மத்தியானத்துக்குள்ளார வூட்டுக்குப் போயிட்டா வழியில எஞ்ஞயாச்சும் ஓட்டல்ல சாப்புடுற சிலவு மிச்சமாவும்ன்னு யோசிக்கிற நெலையில நாம்ம இருக்கேம்ங்க்யயா! சத்தியமா சொல்றேம் இனுமே நீஞ்ஞ கேக்குற அளவுக்குப் பீஸ்ஸ எஞ்ஞளால கொடுக்க முடியாது. வட்டிக்கு மேல வட்டி பணத்தெ கட்டி முழிப் பிதுங்குதுங்கய்யா! இதுல கோர்ட்டுச் சிலவையும் தாங்கவே முடியல. சோத்துல உப்பையும், மோரையும் போட்டுப் போட்டுச் சாப்புட்டுக்கிட்டுக் கெடக்குறேம். ஒடம்புல கொழம்போட காரம் சேரமா வெடவெடத்துப் போயிக் கெடக்கு. மாசத்துக்கு ஒரு தடவயோ, ரண்டு தடவயோ இட்டிலிக்கோ, தோசைக்கோ போட்டா பெரிசு. ரொம்ப நாளுக்குப் பெறவு இப்பத்தாம் ஓட்டல் கடையில இட்டிலிய வாங்கிச் சாப்புடுறேம். இந்த கோர்ட்டுச் சிலவு ல்லன்னா நாஞ்ஞ கொஞ்சம் நல்ல வெதமாச்சும் சாப்புடுவேம். நாஞ்ஞ இத்தனெ நாளா ஒஞ்ஞளுக்குப் பீஸ்ஸா கொடுத்ததெல்லாம் நாஞ்ஞ நல்ல வெதமா சாப்புட வேண்டிய சாப்பாடு. அதெ கொடுக்குறதயும் கொடுத்துட்டு, ஏமாத்துற ஆளுங்கங்ற பழியச் சொமக்கணும்ன்னு தலயெழுத்தா சொல்லுங்கய்யா?"ன்னாம் விகடு வயிறு ஒட்டிக் கெடக்குறவேம் ஒடம்புல கொழுத்த சதை இருக்குதுன்னு சொல்லக் கூடாதுங்றாப்புல.

            "நாங்க ஒங்கள ரொம்பவே ஹர்ட் பண்ணிட்டேம்ன்னு நெனைக்கிறேம்!"ன்னாரு ஆனந்தகுமாரு கோமேதகம்ன்னு தெரியாம குப்பையில தூக்கி எறிஞ்சிட்டேம்ங்றாப்புல.

            "உண்மெதாங்கய்யா!"ன்னாம் விகடு அடிபட்டது பட்டதுதாம்ங்றாப்புல.

            "ஐயம் ரியல சாரி! இதுக்கு மேல நீங்கத்தாம் சொல்லணும்!"ன்னாரு ஆனந்தகுமாரு தப்ப பண்டிட்டு அதெ பண்ணவனே ஞாயம் பேசக் கூடாதுங்றாப்புல.

            "சரியோ தப்போ கட்டெ கேட்டாச்சு. கட்டெ கொடுத்திடுங்க! வேற எந்த ரூபத்துலயும் கட்டாயம் பண்ண வாண்டாம்!"ன்னாம் விகடு ரொம்ப உறுதியா வெட்டி வுட்ட கெளைய ஒட்ட வைக்க முடியாதுங்றாப்புல.

            "எங்க அண்ணன் மேல உள்ள கோவத்தால இந்த கட்டெ வாங்குறதா இருந்தா தயவுசெஞ்சு அப்பிடி ஒரு முடிவெ எடுக்காதீங்க. ஏன் சொல்றேன்னா நீங்க இந்த ஆபீஸூக்குப் பாக்க வந்தது என்னைய. ஒங்க வழக்க எடுத்துக்கிட்டது நாம்ம. இந்த வழக்குப் பூரா நீங்க எனக்குக் கொடுத்தது. எங்க ஆபீஸ்ல மூணு பேர்ரா இருக்குறதால ஒருத்தரு மாத்தி இருக்குற நேரத்துக்குத் தகுந்தாப்புல வழக்குல ஆஜராயிருப்பேம். இனுமே இந்த வழக்க நீங்க எங்கிட்டெ ஒப்படைச்சா ஒங்க வழக்கு முழுக்க முழுக்க என்னோட பொறுப்புத்தாம். அதுக்கான உத்திரவாதத்தெ நாம்ம ஒங்களுக்குத் தர்றேம். என்ன சொல்றீங்க?"ன்னாரு ஆனந்தகுமாரு முதுகுல குத்துறவேம் நெஞ்சுல மட்டும் குத்த மாட்டேம்ன்னு உத்திரவாதம் தர்றாப்புல.

            "தயவுசெஞ்சு நாம்ம வறட்டுப் பிடிவாதமா இருக்குறதா நம்மளப் பத்தி தப்பா நெனைக்காம நீங்க கட்டெ கொடுத்திடலாம்ங்கய்யா!"ன்னாம் விகடு கொலைக்கார்ரங்றவேம் ஒரு மொறை செஞ்சாலே கொலைகார்ரேம்தாம்ங்றதெ போல ஒரு மொறை சொல்லிபுட்டா பல முறை கேட்டாலும் அதேதாம்ங்றாப்புல.

            "என்னதாம் சார் ஒங்க பிரச்சனை? இவ்வளவு எறங்கி வந்து பேசுறேம்!"ன்னாரு ஆனந்தகுமாரு பதவியில ஒசந்தவேம் பணிஞ்சு வந்தா கீழே இருக்குறவேம் தெண்டனிட்டு அதெ ஏத்துக்கிடணும்ங்றாப்புல.

            "நீங்க மட்டுமே இந்த வழக்க எடுத்து நடத்துறதுல ரொம்ப சந்தோஷந்தாம். எங்கிட்டெதாம் கொடுக்குறதுக்குப் பணமில்ல."ன்னாம் விகடு கையில டப்பு இல்லாம நகெக் கடைக்குள்ள நொழைய முடியாதுங்றாப்புல.

            "நீங்க இனுமே பணமே கொடுக்க வேண்டாம் சார். பணம் இந்த வழக்குல ஒரு பிரச்சனையே இல்ல சார். நாம்ம இந்த வழக்க முடிச்சி எதிர்தரப்புலேந்து பொருட்களையும் பணத்தையும் வாங்கிக் கொடுக்குறப்போ அதுலேந்து பர்சென்டெஜ் பேஸிக்ல எடுத்துக்கிறேம். ஒங்க சிஸ்டர் பிரண்ட்ஸோட கேஸ்கள கூட அப்பிடித்தாம் முடிச்சிக் கொடுத்தேம். அதுல எதுவுமே கோர்ட்டுக்குப் போவாதது. நாமளே அலைஞ்சி முடிச்சி விவாகரத்துக்கு மட்டுந்தாம் அவுங்க கோர்ட்டுக்கு பேருக்கு வர்றாப்புல இருந்துச்சு. ஒங்க சம்பந்தமான வழக்கு டோட்டலி டிபரண்ட். ரொம்ப கோர்ட்டுக்குள்ளார விட்டுட்டீங்க!"ன்னாரு ஆனந்தகுமாரு வித்துக் கொடுத்த பெற்பாடு மொதல கொடுக்கலாம்ங்றாப்புல.

            "எஞ்ஞளுக்கும் அவ்வேம்கிட்டெ பொருட்களையோ, பணத்தையோ வாங்கணும்ங்ற நெனைப்புப் போயிடுச்சுங்கய்யா! ஏதோ விவாகரத்து வழக்கெப் போட்டு முடிச்சிட்டாப் போதுங்ற மனநெலைக்கு வந்துட்டேம்ய்யா! பணங்காசி எதுவும் வாணாம், விவாகரத்தெ மட்டும் கொடுன்னா அவனுவோ ரொம்ப சந்தோஷமா கொடுத்துடுவானுங்கய்யா! ஏம் மொதல வாயில மாட்டுனதெ மீக்கணும்ன்னு நெனை்ச்சி நாம்ம நொம்பலப்பட்டு சாவணும் சொல்லுங்க. மொதல வாயிக்குப் போனது போனதாவே இருக்கட்டும். நாஞ்ஞ எழந்தது எழந்ததாவே இருக்கட்டும். ஏதோ போன பெறவியில அவனுவோகிட்டெ கடன்பட்டுப் போயிட்டேம். அதெ இந்தப் பெறவியில அடைச்சிட்டேம்ன்னு நெனைச்சிக்கிறேம்!"ன்னாம் விகடு வுட்ட கொறை தொட்ட கொறை அத்தோட முடியட்டும்ங்றாப்புல.

            "ரொம்ப நொந்துப் போயிப் பேசுறீங்க சார்! இந்த அளவுக்கு ஒங்கள விட்டிருக்கக் கூடாது சார்! ஆன்னா என்னோட சிச்சுவேஷன் என்னோட அம்மாவுக்கு ஒடம்பு முடியாமப் போனதால இந்த வழக்குச் சம்பந்தமா நம்மாள மெனக்கெட முடியாம போயிடுச்சு."ன்னாரு ஆனந்தகுமாரு ரொம்ப வருத்தப்பட்டுக் கீழே தடுமாறி வுழுந்துட்டவனெ தூக்கி வுடாம இருக்கக் கூடாதுங்றாப்புல.         

            "இந்த வழக்கப் பொருத்த மட்டில எஞ்ஞளுக்கு ஞாயம் கெடைக்கணும்ன்னா நாஞ்ஞ அதுக்காக எஞ்ஞளோட வாழ்நாளையே அடமானம் வைக்கணுங்றது புரிதுங்குய்யா. அதுக்கு அந்த ஞாயத்தை அடமானம் வெச்சிப்புட்டதா நெனைச்சிக்கிட்டு, அதுக்கு எஞ்ஞளோட நகெ நட்டு பணங்காசி அத்தனையையும் அதுக்கு வட்டியா கட்டி முடிச்சிப்புடலாம்ன்னு நெனைக்கிறேம்ங்கய்யா. ஞாயம் யாருக்குய்யா வேணும்? அதெ வெச்சிக்கிட்டு என்னத்தெ பண்ட முடியும் சொல்லுங்க? எல்லார் பண்ணு தப்பையும் மன்னிக்கிற மனசு வந்துட்டா எந்த ஞாயமும் நமக்குத் தேவையுமில்ல, அதுக்காக போராடணும்ங்ற அவசியமும் யில்ல! ஒரு சம்சாரியால அம்புட்டுத்தாம் முடியும். சம்சாரிங்றவேம் ஒரு சவுங்கப் பயெய்யா, கோழைங்கய்யா! எல்லாத்தையும் மன்னிச்சாச்சுப் போங்க. வழக்கு முடிஞ்சிது. எஞ்ஞள பொருத்த மட்டில தீர்ப்பும் ஆயிடுச்சு. அவ்வளவுதாங்!"ன்னாம் விகடு வக்கத்தவேம் ஆசப்பட்டோ, திக்கத்தவேம் ரோஷப்பட்டோ புண்ணியம் இல்லங்றாப்புல.

            "அப்போ வழக்குக் கட்டெ வாங்குறதுல உறுதியா இருக்கீங்க?"ன்னாரு ஆனந்தகுமாரு ஆயிரத்தெட்டு மொறை சொன்னதையே சொன்னவேம் ஆயிரத்து ஒம்போதாவது மொறை அதெ மாத்திச் சொல்ல மாட்டானாங்றாப்புல.

            "கண்டிப்பா! எஞ்ஞளுக்கு வேற வழியில்ல! அத்து ஒண்ணுத்தாம் வழி!"ன்னாம் விகடு ஒழுங்கா படிச்சவேம் தூக்கத்துல எழுப்பிக் கேட்டாலும் வாய்பாட்ட மாத்திச் சொல்ல மாட்டாம்ங்றாப்புல. அதுக்கு மேல அவரு எதுவும் பேசல. அவரோட சமாதானம் பண்ணுற முயற்சிகள அந்த அளவோட நிறுத்திக்கிட்டாரு.

            நந்தகுமாரு தேடி மேசெ மேல எடுத்து வெச்சிருந்த கட்டுகளப் பொரட்டிப் பாத்து நோ அப்ஜெக்சனுக்காக கையெழுத்தப் போட ஆரம்பிச்சாரு ஆனந்தகுமாரு. அதுல ஒரு கட்டுக்கு செந்தில்குமார்கிட்டெ நொ ஆப்ஜெக்சன் வாங்குறதுக்காக வூட்டுக்குள்ள போனவரு கையெழுத்த வாங்கிட்டு வெளியில வந்தாரு. எல்லா கட்டுகளையும் விகடுகிட்டெ கொடுத்து கண்ணை மூடுனாரு. விகடு அந்தக் கட்டுகள வாங்கி பையில போட்டுக்கிட்டு அவர்ரப் பாத்துக் கையெடுத்துக் கும்புட்டுட்டுக் கெளம்புனாம்.

            அவ்வேம் கெளம்புறப்ப, "வழக்க நடத்தாம வுட வேண்டாம். எந்த வக்கீல் எடுத்து நடத்துனாலும் இந்த கேஸ் நிக்கும். ஏன்னா சட்டம்ங்றது பாதிக்கப்பட்டவங்க பக்கந்தாம். அதுவும் பெண்கள் பக்கந்தாம். வேற எதாவது ஒங்களுக்கு உதவின்னாலும் என்னோட நம்பருக்குக் கால் பண்ணுங்க! டிரை யுவர் லெவல் பெஸ்ட். அத மட்டும் விட்டுடாதீங்க சார்!"ன்னாரு ஆனந்தகுமாரு பாறையில இன்னும் நாலடி தோண்டுனா தண்ணி எட்டிப் பாத்துடும்ங்றாப்புல.

            "நல்லதுங்கய்யா! ரொம்ப நன்றிங்கய்யா!"ன்னு சொல்லிட்டு விகடு வெளியில வந்து டிவியெஸ் பிப்டியை எடுத்து ஸ்டார்ட் பண்ணுனாம். சில நேரங்கள்ல சில பேத்து வந்து ஒதவி பண்ணாமே இருக்குறதுதாம் பெரிய உதவின்னு அதுக்கு நன்றி சொல்லுறாப்புல ஆயிடுதுன்னு நெனைச்சாம் விகடு. வண்டி ஒதறிக்கிட்டெ கெளம்புனுச்சு. நம்மளோட நாயலைச்சல், பேயலைச்சல்ல இந்த வண்டிய மொதல்ல கொஞ்சமாச்சும் சர்வீஸ் பண்ணியிருக்கணும்ன்னு நெனைச்சிக்கிட்டாம் விகடு. அத்தோட நமக்காகவே ஒழைக்கிற இந்த வண்டிக்கு ஒரு நாளு கூட நன்றி சொல்ல தோணுணதில்லையேங்ற நெனைப்பு அவ்வேம் மனசுக்குள்ள வந்துப் போனுச்சு அப்போ குறுக்கால பாய்ஞ்சுப் போற பூனையப் போல.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...