21 Feb 2021

குட் பை மிஸ்டர் விகடபாரதி!


 குட் பை மிஸ்டர் விகடபாரதி!

செய்யு - 724

            ஒரு வாரம் கழிஞ்சிருக்கும். வக்கீல் செந்தில்குமாரு ஒரு ராத்திரி நேரத்துல போன விகடுவுக்குப் போன அடிச்சார்.

            "இங்க ஒங்களுக்கு விவாகரத்து வழக்குக்கான காகிதத்தயெல்லாம் தயார் பண்ணியாச்சு. நீங்க ஒரு நாலு நாள்ல பணத்தோட வர்ற வாய்ப்பு இருக்குன்னு ஒங்க தங்கச்சிப் போன அடிச்சிருந்தாங்க. அதெ நம்பி நாங்க தயாரு பண்ண வேண்டியதெ பண்ணிட்டோம். நாளு பாட்டுக்குத் தள்ளிக்கிட்டெ போவுது. எப்போ பணத்தெ கொண்டு வர்றீங்க?"ன்னாரு செந்தில்குமாரு வெட்டுறதுக்கு அருவா தயாரா இருக்குறப்போ பலி கொடுக்குறதுக்கான ஆட்டெ காணும்ங்றாப்புல.

            "கொஞ்சம் பணத்தெ பொரட்டுறதுல தாமசம் ஆயிட்டு இருக்குங்கய்யா. கூடிய சீக்கிரமே பொரட்டிட்டுத் தகவலச் சொல்றேம்ங்கய்யா!"ன்னாம் விகடு பணங்காய்ச்சி மரமொண்ணும் பக்கத்துல இல்லங்றாப்புல.

            "என்னாங்க இப்பிடிப் பண்றீங்க? நாங்க வேற அவசர அவசரமா காகிதங்கள தயாரு பண்ணா, நீங்க பாட்டுக்கு இப்பிடிச் சொல்றீங்க? இங்க எவ்ளோ வழக்குக இருக்குத் தெரியுங்களா? அதெயெல்லாம் அப்பிடியே போட்டுட்டுத்தாம் அதெ  தயாரு பண்ணது!"ன்னாரு செந்தில்குமாரு கடனுக்கு வாங்க நிக்குறவேமுக்கு எதுக்கு மொத நாளே பண்டத்தெ எடுத்து வெச்சு தயாரு பண்டணும்ங்றாப்புல.

            "எப்படியும் இன்னும் ரண்டு மூணு நாள்ல பணம் கெடைச்சிடும்ன்னு நெனைக்கிறேம்ங்கய்யா! இன்னும் ஒரு நாலு வாய்தாவுக்கான பணத்தெ வேற தர்ற வேண்டி இருக்குல்லா. எல்லாத்தையும் சேத்து மொத்தமா கொடுத்துப்புடலாம்ன்னுத்தாம் கொஞ்சம் தள்ளிப் போனாலும் பரவால்லன்னு இருக்கேம்!"ன்னாம் விகடு வானத்தெ பாத்துட்டே வெதைச்சிக்கிறேம்ங்றாப்புல.

            "நீஞ்ஞ கொடுத்த பணத்தெயெல்லாம் நாம்ம பழைய வாய்தாவுக்கான பணமா வெச்சிக்கிறேம்! நீஞ்ஞ பத்தாயிரத்தெ தயாரு பண்ணிட்டு வர்ற திங்க கிழமெ ஆர்குடி சப் கோர்ட்டுக்கு வந்துடுங்க!"ன்னாரு செந்தில்குமாரு ரிசர்வ் பேங்குக்குப் போயாச்சி பணத்தெ அச்சடிச்சிட்டு எடுத்துப்புட்டு வந்துப்புடுங்கங்றாப்புல.

            "நமக்கு நீஞ்ஞ சொல்ற கணக்கெப் புரியலங்கய்யா!"ன்னாம் விகடு மொறைகெட்ட தனமா போடுறதுக்குப் பேரெல்லாம் கணக்கில்ல, பிணக்குங்றாப்புல.

            "எட்டாயிரத்து எரநூறு ரூவாயக் கொடுத்திருக்காங்க ஒங்க தங்கச்சி. அதெ இதுவரைக்குமான வாய்தா பணத்துக்கு எடுத்துக்கிட்டு, இன்னும் ரண்டு மூணு வாய்தா வரும் இல்லீங்க இல்லையா! அதுக்குச் சேத்து வெச்சிக்கிறேம். ஏன்னா பெறவு ஒஞ்ஞகிட்டெ பழைய வாய்தாவுக்கான பணத்தெ வாங்குறதுக்குள்ளாரப் போதும் போதும்ன்னு ஆயிடும். வரப் போற வாய்தாவுக்கு அந்த பணம் சரியான ஒடனே ஒங்களுக்குப் போன அடிச்சித் தகவலச் சொல்லிடுறேம். இப்போ விவாகரத்து வழக்குக்குக் கொடுக்க வேண்டிய பணம் பத்தாயிரத்து எடுத்துட்டு வந்துட்டீங்கன்னா நாம்ம வழக்க பைல் பண்ணி முடிச்சிடலாம்! எப்பிடியும் கேஸ்ஸ ஒரு ஆறு மாசத்துல முடிச்சிடுவேம்!"ன்னாரு செந்தில்குமாரு கொடுத்த காசியெல்லாம் வட்டிக்கே சரியாச்சு அசலெ எடுத்து வையின்னு சொல்ற கடம் கொடுத்தவனெப் போல.

            "நாம்ம அய்யாயிரம் பணந்தான்னே நெனைச்சிக்கிட்டு, அதெ மட்டுந்தாம் சொல்லி வெச்சிருந்தேம். இப்போ திடீர்ன்னு பத்தாயிரம்ன்னா நம்மாள அதெ பெரட்டுறதுக்கு முடியுமான்னு தெரியலைங்களே!"ன்னாம் விகடு ஆத்துலயா வருது பணம் அதெ அள்ளிட்டு வாரதுக்குங்றாப்புல.

            "இந்தப் பாருங்க சார்! இது ஒங்க வழக்கு. பணத்தெ கொடுத்தா வழக்கப் போடப் போறேம். இல்லன்னா எங்களுக்கு என்னான்னு ஒங்களோட பழைய வக்கீல் ஆஜர் ஆவாம இருந்ததப் போல ஆஜராவாம இருக்கப் போறேம். நாங்க கும்பகோணத்து வக்கீலுங்க சார். எங்களுக்கு இங்கயே நடத்த முடியாத அளவுக்கு கேஸ்ஸூங்க குவிஞ்சிக்கிட்டுக் கெடக்குது. இதுல ஆர்குடி, திருவாரூருன்னு அலைஞ்சி கேஸ் நடத்தணும்ங்ற அவசியமில்லாம் இல்ல. புரிஞ்சுக்கோங்க சார். எப்ப நாங்க எதெ சொன்னாலும் நீங்களா ஒண்ணுத்தெ சொல்றீங்களே தவுர நாங்க சொல்றதுக்கு ஒத்து வாரலன்னா என்ன அர்த்தம்ன்னே புரியல! இப்பிடில்லாம் இருந்தா கேஸ் நடத்த முடியாது. நீங்க வேணும்ன்னா கேஸ் கட்டுகள வாங்கிட்டுப் போயி ஒங்களுக்குப் பிடிச்ச வக்கீல்கிட்டெ நடத்துங்க!"ன்னாரு செந்தில்குமாரு காசிருக்கிறவனுக்குக் கடவுளெ காட்டு, இல்லாதவனுக்கு நடையச் சாத்துங்றாப்புல.

            "இந்தாருங்கய்யா! வெச்சிக்கிட்டு ஒஞ்ஞளுக்கு ஒண்ணும் நாஞ்ஞ வஞ்சனையெ பண்ணல. நாஞ்ஞளே இருந்த பணங்காசி, நகெ நட்டு அத்தனையையும் தங்காச்சிக்குக் கலியாணத்தப் பண்ணுனோங்ற பேர்ல எழந்துட்டு நிக்குறேம். அதுக்கான வட்டிய இன்னிய தேதி வரைக்கும் தலைய அடமானம் வெச்சாவது கட்டிக்கிட்டு இருக்கிறேம். நாஞ்ஞ வாங்குற சம்பளம் அத்தனையும் வட்டிக்கேத்தாம் போயிட்டு இருக்குது. ஒஞ்ஞளுக்குத் தெரியுமாங்கய்யா, நாஞ்ஞ நல்ல சாப்பாடு சாப்புட்டே நாளாவுது. அதுல கூட காசிய எப்பிடி மிச்சம் பண்ணலாம்ன்னு பாத்து மிச்சம் பண்ணிட்டுக் கெடக்குறேம். எஞ்ஞளுக்கு ஜீவனாம்ச வழக்குல அய்யாயிரம் வாரணுங்றது ஒஞ்ஞளுக்கு நல்லாவே தெரியும். அதெ வாங்கிக் கொடுத்தாலாச்சும் அதெ அப்பிடியே எஞ்ஞளுக்கு வேணாம்ன்னு வழக்கு நடத்துற ஒஞ்ஞளுக்கே கொடுத்திடுவேம். அந்த அப்பீல்லயும் நீஞ்ஞ ஆஜராயி நாலு மாசத்துக்கு மேல ஆவப் போவுது. அதுவும் வாய்தா பாட்டுக்கு வாய்தாவே போவுதே தவுர எந்த மின்னேத்தமும் யில்ல. ஆன்னா நாஞ்ஞ வழக்கு நடத்துறதுக்குன்னே மாசத்துக்கு அய்யாயிரம், ஆறாயிரம்ன்னு கொடுத்துட்டு அல்லாடிக்கிட்டு இருக்கேம்!"ன்னாம் விகடு உருப்படியா ஒரு வேலையும் பாக்காம வெட்டி வேலை பாக்குறவனுக்கு எதுக்கு பாக்கும் வெத்தலையும் வெச்சுக் கூப்புடணும்ங்றாப்புல.

            "ஏம் சார்! என்ன‍ நெனைச்சிக்கிட்டு பேசுறீங்க? நாங்க என்ன வேலையில்லாம வழக்குக் கெடைக்காம ஓசிக்கு வழக்கு நடத்திக்கிட்டு இருக்குற பாடாவதி வக்கீல்கன்னு நெனைச்சிக்கிட்டு இருக்கீங்களா? கும்பகோணத்துல லீடிங் லாயர்ஸ் சார் நாங்க. எங்ககிட்டெ வழக்கெ கொடுக்குறதுக்கு எத்தனெ பேரு வந்து ஆபீஸ்ல நிக்குறாம்ன்னு பாருங்க. வழக்கு முடிக்கலங்ற மாதிரியில்ல பேசுறீங்க. இந்த வழக்கப் பத்தி என்னிக்காவது கட்டெ கொடுத்த பிற்பாடு நீங்க நேர்ல வந்து பேசியிருக்கீங்களா? வழக்கு எந்த நெலையில போயிட்டு இருக்குன்னாவது ஒங்களுக்குத் தெரியுமா சார்? என்னவோ வழக்கு நடத்தத் தெரியாத வக்கீல்கிட்டெ பேசுறதெப் போல பேசுறீங்க? பேசுறதெ ஒழுங்கு மரியாதையா பேசுங்க? அப்பிடி இல்லன்னா இப்பவே வாங்க கட்டெ தூக்கிக் கையில கொடுக்குறேம். இந்த மாதிரி நீங்க பேசுற பேச்சைக் கேட்டுக்கிட்டெல்லாம் வழக்க நடத்தணுங்ற அவசியம் எங்களுக்கு இல்லைங்க சார்!"ன்னாரு செந்தில்குமாரு ஆச்சா போச்சா கம்முன்னு கெடக்குறதெ வுட்டுப்புட்டுக் கும்முன்னு கௌம்பாதேங்றாப்புல.

            "எப்போ கட்டெ கொடுக்கணுங்ற வார்த்தை ஒஞ்ஞ வாயால வந்துடுச்சுசோ, தயவு பண்ணி நீஞ்ஞ கட்டெ கொடுத்துடுங்க. நாளைக்கு நாம்ம ஆபீஸ்க்கு வர்றேம்."ன்னாம் விகடு வேண்டாத விருந்தாடிய வலியக்கத் தேடிக் கூப்புட வாண்டாம்ங்றாப்புல.

            விகடு சட்டுன்னு இப்பிடி பொட்டுன்னு போடுற பாம்பெ போல பேசுவாம்ன்னு எதிர்பாக்கல செந்தில்குமாரு வக்கீலு. ஒடனே, "சார்! வழக்க நடத்துறதுல எங்களப் போல ஆள நீங்கப் பாக்க முடியாது. அதெ புரிஞ்சிக்காம பேசுறீங்களே?"ன்னாரு செந்தில்குமாரு மிஞ்சுனா கெஞ்சி வர்றதப் போல.

            "நீஞ்ஞ தெறமையான வக்கீலா இருக்கலாம். எடுத்த கேஸ்ஸல்லாம் ஜெயிக்கிற வக்கீலாவும் இருக்கலாம். எப்ப கட்டெ வாங்கிக்கோன்னு ரண்டு மொறைக்கு மேல சொல்லிட்டீங்களோ, அதுக்கு மேல கட்டெ வாங்காம யிருந்தா அத்து எஞ்ஞளுக்கு அசிங்கம்!"ன்னாம் விகடு போடா வெளியிலன்னு சொன்ன பெற்பாடும் போவாம மானங்கெட்டு நிக்க முடியாதுங்றாப்புல.

            "இப்பிடி நீங்க பாட்டுக்கு வக்கீல் மேல வக்கீலா மாத்திக்கிட்டு இருந்தீங்கன்னா ஒங்க வழக்கு ரொம்ப பலவீனமாயிடும். வழக்க எடுக்குற நீதிபதி அதெ பாப்பாங்க. இப்படி வக்கீலையே மாத்திட்டு இருக்குறவங்க அதெ போல ஏம் புருஷனையும் மாத்திக்க மாட்டாங்கன்னு நெனைப்பாங்க சார்! ஒங்கப் பக்கம் ரொம்ப வீக்கா போயிடும் சார்! அதெ புரிஞ்சிக்கோங்க."ன்னாரு செந்தில்குமாரு அடிக்கடி ஆள மாத்திக்கிட்டு இருந்தா எந்த வேலையும் உருப்படியா நடக்காதுங்றாப்புல.

            "எஞ்ஞளப் பொருத்த மட்டில இந்த வழக்குல ஜெயிக்கவே வேண்டியதில்லங்ற முடிவுக்கு நாஞ்ஞ எப்பவோ வந்தாச்சு. ஒரு கெளரவத்துக்காகத்தாம் இந்த வழக்குகள நடத்தி முடிக்கணும்ன்னு பாக்குறேம். மித்தபடி இந்த வழக்குகள்ல எத்து ஆனாலும் அதெப் பத்தி எஞ்ஞளுக்குக் கவலெயில்ல. நிச்சயமா எந் தங்காச்சி அவ்வேம் கூட வாழப் போறதில்ல. அவ்வேம் வாங்குன நகெ நட்டெ, பணங்காசியக் கொடுப்பாங்றே நம்பிக்கெயும் எஞ்ஞளுக்கு யில்ல. நாஞ்ஞ ரொம்ப பலவீனமா ஆயிட்டதால, எஞ்ஞ வழக்கும் ஒஞ்ஞ வார்த்தெபடி ரொம்ப பலவீனமா ஆயிட்டதால எந்த வக்கீலாலயும் அவ்வேம்கிட்டெயிருந்து எஞ்ஞளுக்குச் சேர்றப் போற பணத்தெ வாங்கிக் கொடுக்க முடியும்ங்ற நம்பிக்கெயும் எஞ்ஞளுக்கு யில்ல. நம்மளப் பொருத்த மட்டில இந்த வழக்க நடத்துறது மொத்தத்துல ஆவாத காரியத்துக்கு ஆத்தெ கட்டி எறைக்கிற வேலைங்ற முடிவுக்கு எப்பவோ வந்தாச்சு. அப்பிடிப்பட்ட வழக்கெ யாரு எடுத்து நடத்துனா ன்னாங்கய்யா? எஞ்ஞ வழக்கு எந்தத் திக்குல போனா ன்னா? எந்தத் தெசயில போனா ன்னா? அதெப் பத்தின கவலைய வுட்டு நாஞ்ஞ நாளாச்சு! நீஞ்ஞ கட்டுகள எடுத்து தயாரா ‍வைக்குற வழியப் பாருங்கய்யா! நாம்ம நாளைக்கு காலையில பள்ளியோடத்துக்கு லீவ அடிச்சிட்டு காத்தாலயே ஒஞ்ஞ ஆபீஸ்ல இருப்பேம்!"ன்னாம் விகடு கரையேத்தாத கட்டுமரத்துல போனாத்தாம் ன்னா போவாட்டியும்தாம் ன்னாங்றாப்புல.

            "நீஞ்ஞ அவசரப்படுறீங்க. ரொம்ப விரக்தியா பேசுறீங்க. பேசுறப்போ ரண்டு வார்த்தெ கூடப் போறது உண்டுதாம். அதுக்காக இப்பிடிக் கோவப்பட்டா என்னத்தெ பேசுறது சார்? இப்பிடியே இருந்தீங்கன்னா நீங்க வக்கீல் மேல வக்கீலா மாத்திக்கிட்டு இருப்பீங்களே தவிர ஒங்க கேஸ்ல இம்ப்ரூவ்மெண்டெ இருக்கப் போறதில்ல!"ன்னாரு செந்தில்குமாரு அடிக்கடி டியூசன் மாறிக்கிட்டெ இருக்குறவேம் பாஸாக மாட்டாம்ங்றாப்புல.

            "நாம்ம வழக்குல நடத்தியே ஆவப் போறது ஒண்ணுமில்லங்றேம். நீஞ்ஞ என்னவோ வழக்குல இம்ப்ரூவ்மெண்டு அத்து இத்துன்னு பேசிக்கிட்டு. நாம்ம எவ்வளவோ பாத்துட்டேம். கட்டெ வாங்குறப்போ நீஞ்ஞ கரிசனமா பேசுனதோட செரி. அதுக்குப் பெறவு எஞ்ஞள மதிச்சாப்புல என்னிக்கும் நீஞ்ஞ பேசுனதேயில்ல. எப்பப் பாத்தாலும் பணம் பணம்ன்னு பேசிக்கிட்டு இருந்துருக்கீங்களே தவுர, இத்தனெ மாசத்துல கேஸ் இந்த அளவுக்கு மின்னேறி வந்திருக்குன்னு நீஞ்ஞ பேசுனதேயில்ல. ஒஞ்ஞ ஆபீஸூக்கு கையெழுத்துப் போட வந்த எந் தங்காச்சியக் கூட வெளியில நிப்பாட்டிட்டுத்தாம் அரை மணி நேரம் கழிச்சி உள்ளார வாரச் சொல்லிருக்கீங்க. நாஞ்ஞ ன்னா ஒஞ்ஞ ஆபீஸ்ல பூந்து எதாச்சிம் திருடிட்டுப் போவப் போறமா ன்னா? வந்தவங்கள கூப்புட்டு உள்ளார வைக்கக் கூட தெரியாத பண்பாடு தெரியாத ஆளுங்ககிட்டெல்லாம் எஞ்ஞ வழக்குக் கட்டுக இருக்கணுங்ற அவசியமே யில்ல!"ன்னாம் விகடு எட்டி ஒதைக்கிறவேம் தர்ற பலாப்பழத்தெ வுட விருப்பமா கொடுக்குறவேம் தர்ற எட்டிக்காயி மேலுங்றாப்புல.

            "அதுக்கு மேல ஒங்க இஷ்டம்! எங்ககிட்டெ வழக்குக் கட்டுகள கேட்டுட்டா பெறவு அவுங்கள நாங்க திரும்பிப் பாக்குறதே இல்ல!"ன்னாரு செந்தில்குமாரு வேண்டாம்ன்னு சொல்லிட்ட எலைக்குல்லாம் பாயாசம் ஊத்துறதில்லைங்றாப்புல.

            "இத்தன நாளு மட்டும் ன்னா திரும்பியா பாத்தீங்க? பணம் பணம்ன்னு பணத்தெதாம் பாத்தீயே! கிட்டதட்ட பணம்ன்னு நாஞ்ஞ கொடுத்தது அம்பதாயிரத்தெ நெருங்கும். கேஸ் என்ன நெலையில இருக்கோ அதெ நெலையிலத்தாம் இருக்கு. ஒஞ்ஞள இந்த வழக்குல போடாம இருந்திருந்தா கூட கேஸ் அந்த நெலையிலத்தாம் இருந்திருக்கும். அதுக்கு வூட்டுல இருக்குற அத்தனெ நகெயையும் அடவு வெச்சி, அஞ்ஞ இஞ்ஞன்னு கடனெ ஒடனெ வாங்கி அல்லல் பட்டதுதாம் மிச்சம். நீஞ்ஞ ன்னா கொல கேஸ்ஸையா நடத்துறீங்க? யிப்படி எஞ்ஞகிட்டெ பணத்தெ புடுங்கிட்டு இருக்கீங்களேய்யா?"ன்னாம் விகடு பொணத்துல இருக்குற நகைய உருவுன வரைக்கும் ஆதாயம்ங்றாப்புல.

            "இந்தாருங்க சார்! பிடிக்கலன்னா கட்டெ வாங்கிட்டுப் போங்க. அதுக்கு என்னவோ கேஸ் நடத்தத் தெரியாததப் போல பேசிக்கிட்டு இருக்காதீங்க. நாளைக்கு ஒம்போது மணிக்குள்ளார வந்து கட்டெ வாங்கிட்டுப் போவணும் ஆமாம். நாங்க கோர்ட்டுக்குக் கெளம்பிக்கிட்டு வழக்குக்குத் தயாரு ஆயிட்டு இருக்குற நேரமா பாத்துத் தொல்ல பண்ணக் கூடாது. அப்பிடி தொல்ல பண்ணுற மாதிரி இருக்கும்ன்னா சாயுங்காலத்துக்கு மேல வாங்க. என்னா சொல்றது புரியுதா?"ன்னாரு செந்தில்குமாரு கழுத்தப் பிடிச்சி வெளியில தள்ளுனாலும் திமிராம கொள்ளாம பணிஞ்சி பயந்தாப்புல வெளியில போவணும்ங்றாப்புல.

            "நாம்ம செரியா எட்டரைக்கெல்லாம் ஒஞ்ஞ ஆபீஸூக்கு மின்னாடி நிப்பேம். நீஞ்ஞளும் கட்டெ எடுக்கணும் அப்பிடி யிப்படின்னு நேரத்த வளத்திட்டு இருக்காதீயே. நாம்ம கட்டெ வாங்கிட்‍டு வந்தேம்ன்னா மத்தியானம் கூட பள்ளியோடத்துக்குப் போயிடுவேம். அரை நாளு லீவோட போயிடும்! பெறவுங்கய்யா நாம்ம எந் தங்காச்சிக்கிட்டெ ஒஞ்ஞகிட்டெயிருந்து கட்டுகள வாங்கிட்டதா காயிதத்துல எழுதி கையெழுத்து எதாச்சும் வாங்கிட்டு வாரணுமா ன்னா? ஏம் கேக்குறேம்ன்னா அஞ்ஞ வந்து நின்ன பெறவு அந்த மாதிரி காயிதம் வேணும்ன்னு திருப்பி அனுப்புனா நாம்ம திரும்பி வந்து வாங்கிட்டு வாரதுக்கு கும்பகோணம் ஒண்ணும் எஞ்ஞ ஊருக்குப் பக்கத்துல யில்ல. எம்பது கிலோ மீட்டரு போயித் திரும்பி வாரணும்!"ன்னாம் விகடு துறவியா போறவேம்ங்கிட்டெ போயி அதுக்கு லைசென்ஸ் வாங்கிருக்கீயான்னு கேக்காதீயேங்றாப்புல. 

            "அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல. எப்போ ஒங்க கட்டுக வேணும்ன்னுட்டீங்களோ அதெ தூக்கிக் கொடுக்குறதுதாம் எங்களோட மொத வேலையே! எந்தக் காயிததும், கையெழுத்தும் இல்லாம நீங்க வாங்கிக்கிடலாம்!"ன்னாரு செந்தில்குமாரு ஒடைப்புல அள்ளி எறியறதுக்கெல்லாம் எதுக்கு கணக்கு வெச்சிக்கிடணும்ங்றாப்புல.

            "நோ அப்ஜெக்சனும் ஒடனே கொடுத்துடுவீங்க இல்லியா?"ன்னாம் விகடு வெளியில போடான்னு வெரட்டிப்புட்டு அவ்வேம் சாமஞ்செட்டுகள கொடுக்க மாட்டேன்னு சொல்ல மாட்டீயளேங்றாப்புல.

            "நாளைக்கு கையோட எல்லாத்தையும் முடிச்சிக் கொடுத்து அனுப்பிடுவேம். அதுக்குப் பெறவு ஒங்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்ல. நீங்களும் எங்க ஆபீஸ் பக்கம் தலைவெச்சிப் படுக்கக் கூடாது. நாங்களும் ஒங்கள எந்த விதத்துலயும் தொடர்பு கொள்ள மாட்டோம்!"ன்னாரு செந்தில்குமாரு ஒயர்ர வெட்டிப்புட்டா அதுக்கு அப்புறம் கரண்டு எப்பிடி பாயும்ங்றாப்புல.

            "ரொம்ப நன்றிங்கய்யா! இத்தனெ நாளு வரைக்கும் வழக்க நடத்திக் கொடுத்ததுக்கு. அத்தோட நாளைக்கு எந்த வெதமான பெரச்சனையும் இல்லாம வழக்கோட கட்டுகள கொடுக்கப் போறதுக்கும்!"ன்னாம் விகடு தின்ன வெச்சதோட தின்னதெ வாந்தியெடுக்க வெச்சதுக்கும் நன்றிங்றாப்புல.

            "நாங்க அந்த மாதிரி வக்கீலுங்க கெடையாது மிஸ்டர் விகடபாரதி! ஒங்க பழைய வக்கீல் கொடுத்தாப்புல காகிதங்களையெல்லாம் கண்டமேனிக்கு வெச்சிக் கொடுக்க மாட்டேம். எல்லாம் மொறையா இருக்கும். இதெ கொண்டுப் போயி எந்த வக்கீல்கிட்டெ கொடுத்தாலும் அவங்களுக்கு இதுல இருக்குற காகிதங்க சம்பந்தமா எந்த வேலையும் இருக்காது. வழக்க அவுங்க பாட்டுக்கு எடுத்து அல்வா திங்குறாப்புல நடத்தலாம். குட் பை மிஸ்டர் விகடபாரதி சார்!"ன்னு சொன்னாரு செந்தில்குமாரு யோக்கியாம்சத்துல பத்துப் பொருத்தத்துக்கு ஒண்ணும் கொறைவில்லங்றாப்புல. அவ்வளவுதாம், அத்தோட போனயும் வெச்சிட்டாரு.

            விகடுவுக்கு அவருகிட்டெ பேசுன ஆத்திரத்துல கையெல்லாம் நடுங்குனுச்சு. கண்ணுல்லாம் செவந்துப் போயிருந்துச்சு. மொகமெல்லாம் மாறிப் போயிருந்துச்சு. நல்லா ஒடம்பு வேர்த்து சட்டையெல்லாம் நனைஞ்சிருந்துச்சு. நேரா சுப்பு வாத்தியார்கிட்டெ வந்தாம் விகடு. "யப்பா! அந்த கும்பகோணத்து வக்கீலுங்க வாண்டா. வேற வக்கீல ஆர்குடியிலயோ, திருவாரூர்லயோ பாத்து வெச்சிக்கிடலாம். நம்மள ரொம்ப அழிச்சாட்டியும் பண்ணுறாப்புல பேசுறாவோ!"ன்னாம் சுப்பு வாத்தியாரு என்னத்தெ சொல்லப் போறார்ங்ற பயத்துலயே கரும்புனாலும் பேய்க்கரும்பு கசக்குதுன்னு சொன்னா நம்ப மாட்டாவோளோங்ற நெனைப்புல.

            "நாம்ம மின்னாடியே நெனைச்சேம்டாம்பீ! ஒந் தங்காச்சித்தாம் என்னவோ தெறமையான வக்கீலு, ஒலகத்துலயே காணக் கெடைக்காத வக்கீல்ன்னுட்டு சொல்லிட்டுக் கெடந்தா. செரிதாம் அவ்வேம் திருப்திக்கு ஆவட்டுமேன்னு நாம்மப் போயிப் பாத்தப்ப நமக்கும் திருப்தியாத்தாம் இருந்துச்சு. போவப் போவத்தாம் அவனுகளோட புத்தியே தெரிய வந்துச்சு. அவனுவோ ன்னடாம்பீ வாங்குன காசியையே வாங்கலன்னு சொல்லி மறுக்கா மறுக்கா கறக்கறானுவோ. நாமளும் வக்கீலா இருக்காவோளே செரியா இருப்பாவோன்னு நெனைச்சி அதெயெல்லாம் ஏம் குறிச்சி வெச்சிக்கிட்டுன்னு நெனைச்சா, அன்னிக்கே நம்மாள ஒண்ணும் சொல்ல முடியல. நீயிப் போயி அவ்வேகிட்டெ கட்டெ வாங்கிட்டு வா. நம்மாளயும் இனுமே கும்பகோணத்துக்கு வழக்குக்குன்னு அலைஞ்சிட்டுக் கெடக்க மிடியாது. இஞ்ஞ ஒரு சாதாரண வக்கீலப் பாத்தெ வெச்சிடுவேம். ன்னா பெரிய வழக்கு? ஒண்ணுத்துக்கும் ஆவாத வழக்கு. ஒரு விவாகரத்து வழக்கெப் போட்டுப்புட்டா எல்லாம் முடிஞ்சாப்புலத்தாம்!"ன்னாரு சுப்பு வாத்தியாரு வேண்டாத முள்ளு மரத்தெ வெட்டிக் களைஞ்சிப்புடணும்ங்றாப்புல. இதெ பக்கத்துல கொஞ்சம் தூரமா நின்னுகிட்டு இருந்த செய்யுவும் லேசு பாவா கேட்டிருப்பா போல. தாங் கேட்டதெ கேட்ட அளவுக்கு நெனைச்சபடிக்கு ரொம்ப யோசிச்சுக்கிட்டெ கிட்டாப்புல நெருங்கி கிட்டன்ஸ்ல வந்தா.

            "ஆமாண்ணே! மொதல்லப் போயி கட்டுகள வாங்கிட்டு வாண்ணே! அவனுவோளே நமக்குப் பிடிக்கவே யில்லண்ணே! பழைய வக்கீலு சரியில்லன்னாலும் நம்மள மதிக்காம யிருந்ததில்ல. ஆன்னா இந்த வக்கீலுங்க சரியா இருக்குறதப் போலக் காட்டிக்கிட்டு நம்மள கொஞ்சம் கூட மதிக்கிறதெ யில்ல. நாம்ம இஞ்ஞ ஏதோ ஒரு வக்கீல்கிட்‍டெ கட்டுகளக் கொடுத்து நடத்த வைப்பேம்!"ன்னா செய்யு பிடிக்காத பண்டத்த எடுத்து பல்லுல கடிச்சு நாக்குல சொவைச்சுப் பாக்க வாண்டாம்ங்றாப்புல.

            "நாளைக்கு காத்தாலயே பள்ளியோடத்துக்கு அரை நாளு லீவப் போட்டுட்டுக் கெளம்புறேம்."ன்னாம் விகடு பழுத்த பழத்தெ மரத்துல வுட்டு வைக்கக் கூடாதுங்றாப்புல.

            "கட்டெயும் ஒடனே வாங்கிப்புடுறதா இந்த முடிவெ எப்போ எடுத்தே?"ன்னா செய்யு கல்யாணம் பண்டுறதுன்னு முடிவெடுத்த அடுத்த நாளே சோடியத் தேடிக் கண்டுபுடிச்சிட முடியுமாங்றாப்புல.

            "யிப்போத்தாம். அந்த செந்தில்குமாரு வக்கீலு போனப் போட்டு நம்மள பணத்தெ கொடுக்காம ஏமாத்துற ஆளுங்களப் போல பேசுனதிலேந்துதாம்!"ன்னாம் விகடு கரண்டு வேல பாக்குறப்போ பீஸ்ஸ புடுங்கறதுன்னு முடிவு பண்ணிட்டா ஒடனே புடுங்கிப்புடணும்ங்றாப்புல.

            "அப்பிடி வேற பேசுறாவோளடாம்பீ நம்மள! அப்போ இப்பவே ஒடனேப் போயி கட்டுகள வாங்கிட்டு வாடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சாயுங்காலம் எடுக்குற பசிக்குக் காத்தால வரைக்கும் ஏம் காத்திருக்கணும்ங்றாப்புல.

            "காத்தால அஞ்சரைக்கெல்லாம் கெளம்பிடுறேம்ப்பா!"ன்னாம் விகடு விடிஞ்சா எல்லாம் அதுவா விடிஞ்சிடும்ங்றாப்புல.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...