பணத்தெ கொடுத்துட்டுக் கையெழுத்தப்
போடு!
செய்யு - 723
சுப்பு வாத்தியார்ர பிடிச்ச நல்ல நேரமோ
என்னவோ காய்ச்சல் வந்து செலவில்லாமலேயே கொணம் கண்டுட்டாரு. அதுல வேடிக்கெ என்னான்னா
கொணம் பண்ணணும்ன்னு என்னென்னவோ டெஸ்ட்டு எடுத்து செலவு பண்ணப்பல்லாம் கொணம் காணாதவரு,
ஊருக்கு வந்து பைசா காசு செலவில்லாம கொல்லையில கெடந்த நெலவேம்பு, மலெ வேம்பு, வேப்ப
மரத்துப் பட்டையில கொதிதண்ணி வெச்சிக் கொடுத்ததுலயே கொணம் கண்டுட்டாருங்றதுதாம்.
இப்போ என்னான்னா ஊரெல்லாம் இதெ பேச்சா கெடந்துச்சு. நோப்பாடு கண்டவர்ரே ஏம் இங்கக்
கொண்டாந்தாம்ங்ற பேச்சு மாறிடுச்சு. விகடுவுக்கு ஒரு விசயம் புரிஞ்சிச்சு. டவுன்ல இருந்தா
சிலவெ பண்ணித்தாம் வெயாதி கொணம் பண்ண முடியும் போலன்னும், கெராமத்துல இருந்தா சிலவெ
யில்லாம வெயாதிய கொணம் பண்ண முடியும்ன்னும். ஒரு வகையில கிராமத்துல இருந்தாவே டவுன்ல
வர்ற பல வெயாதிக வர்றப் போறதில்ல. அப்பிடி வராத வெயாதிகளுக்காக சிலவெ பண்ணணுங்ற அவசியமும்
வந்திடப் போறதில்ல. வெயாதி கண்ட நாள்லயே வந்திருந்தா டவுன்ல சிலவெ பண்டியிருந்த அத்தனெ
காசும் மிச்சந்தாம். வக்கீலு கேட்டபடிக்கு அவரு கேட்ட நாள்லயே கொடுத்தும் கூட இருந்திருக்கலாம்.
என்னத்தெ பண்டுறது? சீப்புக் கையில வர்றப்போ தலையில ஒத்த முடி கூட இருக்காதுன்னுல்லா
கெராமத்துல சொல்லுவாக.
அந்த மாசத்துச் சம்பளம் வந்த ஒடனேயே விகடு
எட்டாயிரத்து எரநூத்துப் பணத்தெ எடுத்துக்கிட்டு, தங்காச்சியையும் அழைச்சிக்கிட்டுக்
கும்பகோணத்து வக்கீலு ஆபீஸூக்குப் போயிட்டு வந்துடறதுன்னு முடிவெ பண்ணாம். சுப்பு
வாத்தியாரு இருக்குற நெலையில அவர்ர அலைய வுடக் கூடாதுன்னு இப்படி ஒரு முடிவு. ஆன்னா
விகடு பள்ளியோடத்துக்கு லீவப் போட்டுட்டு வர்றாப்புல இருந்ததால செய்யு யோகிபாயி
பொண்ண அழைச்சுக்கிட்டுப் போயிட்டு வந்துடுறேம்ன்னு அவ்வே ஒரு முடிவே சொன்னா. ஏகப்பட்ட
லீவுகளப் போட்டதுல இனுமே எந்த லீவ போடுறதுன்னு புரியாம நின்னவேம் இதுவும் செரித்தான்னு
பணத்தெ கொடுத்து வுட்டு ரண்டு பேத்தையும் எட்டாம் நம்பரு பஸ்ல ஏத்தி விட்டாம் விகடு.
செய்யுவும் யோகிபாயி பொண்ணு நிரஞ்சினியும்
போனப்போ வக்கீலோட ஆபீஸூ சாத்தியிருந்திருக்கு. ஆபீஸோடயே ஒட்டியிருந்த வக்கீல் செந்தில்குமாரு
வூட்டு அழைப்பு மணிய அழுத்தியிருக்காங்க. வெளியில வந்த செந்தில்குமாரு அவுங்க ரண்டு
பேத்தையும் பாத்துட்டுப் பாக்கக் கூடாதவங்ளப் பாத்தது போல, "கொஞ்சம் ரண்டு பேரும்
அரை மணி நேரத்துக்கு எதாச்சும் கடையில போயி டீயோ, காப்பியோ சாப்புட்டு வாங்க. ஆபீஸத்
தொறக்குறதுக்குக் கொஞ்சம் லேட்டாவும்!"ன்னு சொல்லியிருக்காரு. அதுல நிரஞ்சினிக்குக்
கோவம் பொத்துக்கிட்டு வந்துடுச்சு. மொதல்ல பாக்குறப்போ மொகத்தெ முறிச்சாப்புல கோவப்படக்
கூடாதுன்னு தும்மல்ல அடக்கிக்குறாப்புல ஒண்ணும் பேசாம கட்டுப்படுத்திக்கிட்டு நின்னிருக்கு
நிரஞ்சினி பொண்ணு. பெறவு ரண்டு பேரும் அந்த எடத்தை வுட்டு வெளியில வந்து உக்காந்து
சாப்புடறாப்பல ஒரு டீக்கடையத் தேடுனா எல்லாம் நின்னுகிட்டு சாப்புடற டீக்கடையா இருந்திருக்கு.
கொஞ்சம் தூரம் நடந்ததுக்குப் பெறவு ஒரு பேக்கரி உக்காந்துச் சாப்புடுறாப்புல வந்திருக்கு.
அங்க கொஞ்சம் நேரம் உக்காந்து கேக்கும் காப்பியும் வாங்கிச் சாப்புட்டுருக்குங்க.
"என்னப்பா இந்த வக்கீலு இவ்ளோ மோசமான
ஆளா இருக்காம். நாம்ம இந்த ஊருக்குப் புதுசு. கிராமத்துலேந்து வந்திருக்கேம். நம்மள
என்னவோ ஆம்பளைப் பசங்களப் போல நெனைச்சிக்கிட்டு எதாச்சும் கடையில நின்னுட்டு அரை
மணி நேரம் கழிச்சி வாரச் சொல்றாம். நாம்ம கடெ கடெயா நின்னு பெறுக்கித் திங்குற பொம்பளகன்னு
நெனைச்சிட்டாம்ன்னா? ஏம் சித்தெ அந்த வூட்டுத் திண்ணையிலத்தாம் ஒரு சோபா கெடக்குதே.
அதுல சித்த நேரம் ஆபீஸ்ஸூ தொறக்குற நேரம் வரைக்கும் உக்காரச் சொன்னா கொறைஞ்சாப்
போயிடுவாம்?"ன்னிருக்கு நிரஞ்சினி வேண்டாத விருந்தாளிய படியத் தாண்டாதேன்னு வெரட்டுறாப்புல
வெரட்டுறாம்ங்களேன்னு.
"ஆபீஸூம் அவரோட ஆபீஸ்தாம்டி நிரஞ்சினி.
சாவி கூட அவருகிட்டெத்தாம் இருக்கும். தொறந்து வுட்டு கூட நம்மள ஆபீஸ்ல உக்காரச் சொல்லிருக்கலாம்டி.
என்னவோ நம்மள அரை மணி நேரம் கழிச்சி வாரச் சொல்றாரு. ஏம்ன்னெ புரியலடி. அவரு ரொம்ப
நாளா பணத்தெ கேட்டுக்கிட்டு இருக்கார்டி. நாஞ்ஞ பணம் கொடுக்க வர்ற நேரத்துல அவரு இல்ல.
அவரு இருந்தப்போ யப்பாவுக்கு ஒடம்புக்கு முடியாம போனதால கொண்டாந்து கொடுக்க தோதுபடல.
எஞ்ஞ யப்பா யிருந்த நெலத்தாம் ஒமக்குத் தெரியுமே. பொழைச்சது மறு பொழப்புடி. ஊருக்கு
வந்தாத்தாம் போச்சுன்னு அடம் பண்ணி ஊருக்கு வந்தாங்கடி. என்னவோ அத்து ஆச்சரியந்தாம்.
வூட்டுக்கு வந்ததுன்னு தெரிஞ்சதுமே ஒடம்புல ஒரு தெம்பு உண்டாயிடுச்சு. கொணம் கண்டுப்
போயிடுச்சு. அந்த நெனைப்புலயே கெடந்ததால வந்துப் பாக்க முடியலடி!"ன்னா செய்யு
நம்ம நேரம் கெட்ட நேரமா இருக்குறப்போ நல்லது நடக்கும்ன்னு எப்பிடி எதிர்பார்க்க முடியும்ங்றாப்புல.
"பணத்தெ அவரு கேட்ட நேரத்துல கொண்டாந்து
கொடுக்கலன்னுத்தாம் யிப்பிடி ஆபீஸ்ஸ சாத்தி வெச்சி உள்ளார வுடாம பண்ணுறாரோ? இந்த
வக்கீலு எப்பிடிப்பா ஒன்னோட கேஸ்ஸ நல்ல வெதமா நடத்துவாரு? நமக்கென்னவோ சந்தேகம்மாத்தாம்
இருக்கு."ன்னுருக்கு நிரஞ்சினி மாராப்பு வெலகுதான்னா ஒத்தக் கண்ணால பாக்குறவனெ
ஒட்டு மொத்தத்துல எப்பிடி நல்லவன்னு சொல்ல முடியும்ங்றாப்புல.
"ஆன்னா ரொம்பத் தெறமையான வக்கீலுங்கடி.
நாஞ்ஞ இவுங்ககிட்டெ மிங்கூட்டியே வந்திருந்தா கோர்ட்டுல அடியெடுத்து வைக்காமல கூட
முடிச்சிருக்கலாம். நாஞ்ஞ கேஸ்லாம் ஓடுனப் பெறவு கொண்டாந்ததால அவுங்களால எதுவும் பண்ண
முடியல. நாம்ம வேற கங்காதரன் வக்கீல செருப்பால அடிச்சிட்டேமா. அதால அவுங்களால சமாதானமும்
பேச முடியல. ஆன்னா இந்த வக்கீலுங்கிட்டெ வந்தப் பெறவு நாம்ம ரொம்ப கோர்ட்டுக்குன்னு
அலையலடி. அதெயும் சொல்லணும்லா!"ன்னா செய்யு கெட்டத்தனத்துலயும் இருக்குற நல்லத்தனத்தெ
சொல்லணும்ங்றாப்புல.
"கோர்ட்டுக்கு அலையல செரி! எல்லாத்துக்கும்
சேத்து யிப்பிடி அலைய வுடுறானுவோளே? நம்மள வெசாரிச்சிக்கிட்டுப் பணத்தெ வாங்கி வுட்டுருந்தா
இந்நேரத்துக்கு பஸ்ல ஏறி நாச்சியார்கோயில்ட்ட போயிட்டு இருக்க மாட்டேம்?"ன்னிருக்கு
நிரஞ்சினி நல்ல சாப்பாடு ஏம் நடு ராத்திரியில பேதியக் கௌப்பி வுடுதுங்றாப்புல.
"நீஞ் சொல்றதும் செரித்தாம். நமக்குத்தாம்
எதுவும் செரியா நடக்காதே. எல்லாத்திலயும் அலைச்சலா இருக்கும். நேரடியா நடக்குறது சுத்தி
வளைச்சித்தாம் நடக்கும். சமயத்துல நடக்காமலயும் போவும். என்னத்தெ சொல்றது? எல்லாம்
எந் நேரம். எந் தலையெழுத்து!"ன்னு சலிச்சிக்கிட்டா செய்யு செக்கு சுத்துற மாடு
ஊருப் போயி சேரலன்னு கவலெப்பட முடியுமாங்றாப்புல.
"சாரிப்பா! நீயி அப்பிடி வர்றீயா?
இதுல ஒம் மேல ன்னா தப்பு இருக்கு? ஒன்ன நீயேப் போட்டே நொந்துக்கிறீயே? அவனுங்க அனுப்பி
வுட்டதும் நல்லதுதாம் போ. யில்லன்னா யிப்பிடி ஒரு பேக்கரியில இவ்ளோ டேஸ்டா ஒரு கேக்கும்,
ஒரு காப்பியும் சாப்புட முடியுமா சொல்லு?"ன்னிருக்கு நிரஞ்சினி மலையில வுழுவுறவேம்
வாயில பட்ட தேன் துளிய ரசிச்சுச் சொவைக்குறாப்புல.
"நீயி நம்மளத் திருப்திப் பண்ணுறதுக்காகத்தாம்
சொல்றே!"ன்னிருக்கா செய்யு வௌக்கெண்ணெய்ய குடிச்சிக்கிட்டு வெல்லம் போல இனிக்குதுன்னு
சொல்றாப்புல சொல்லுதுயேங்றாப்புல.
"செரி கெளம்புவேம். மணி முக்கா மணி
நேரத்துக்கு மேல ஆயிருக்கும். வா இப்பவாச்சும் ஆபீஸூ தொறந்திருக்கான்னு பாப்பேம்!"ன்னிருக்கு
நிரஞ்சினி இப்போ போனாலாச்சும் நடை தொறந்து தரிசனம் கெடைக்குமாங்றாப்புல. ரெண்டு பேருமா
கெளம்பி வக்கீலு ஆபீஸூக்கு வந்தப்போ அது தொறந்திருந்துச்சு. உள்ளார புலி பொம்மெ
மேல இருக்குற அட்டகாசமான நாற்காலியில உக்காந்திருந்தாரு செந்தில்குமார். "வாங்கம்மா!
வாங்க! பணத்தெ கொண்டாந்திருக்கீங்களா?"ன்னாரு செந்தில்குமாரு ஆக்சிடெண்டுல அடிப்பட்டு
உசுருக்குப் போராடிக்கிட்டு வந்தவேம்கிட்டெ ஆபரேஷன் பண்ட கையில காசிருக்கான்னு கேக்குறாப்புல.
சாவு வர்றப் போறதுன்னு தெரிஞ்சவேம் பாடைச் சிலவுக்கான பணத்தெ தலைமாட்டுல
வெச்சிருக்கிறதெப் போல, "யண்ணேம் கொடுத்து விட்டுருக்காங்க!"ன்னு செய்யு
பணத்தெ கொடுத்து வுட்ட கவர்ர கொடுத்திருக்கா. அதெ வாங்கி எண்ணிப் பாத்த செந்தில்குமாரு
விவாகாரத்து வழக்குக்கு பத்தாயிரம்லா கேட்டிருந்தேம்ன்னிருக்காரு.
"அய்யாயிரத்தெ மொத தவணையா தந்துட்டு
இன்னும் கொஞ்ச நாள்ல மிச்சத்தெ தந்துடுறதா சொல்லச் சொன்னாங்கய்யா!"ன்னா செய்யு
போற உசுரு பாதி போனாலும் பரவாயில்லன்னு பாதி உசுருல மிச்சம் பிடிச்ச காசியிங்றாப்புல.
"மிச்ச மூவாயிரத்து எரநூறு கேஸூக்கு
ஆஜர் ஆனதுக்கா. அதுக்குப் பிறகு மூணு வாய்தா ஓடியிருக்கே. இன்னிக்குக் கூட ஆர்குடிக்கு
ஒரு வாய்தாவுக்கு ஆளுங்கப் போயிருக்காங்க. மொத்தம் அது ஒரு நாலு வாய்தா ஆவுமே!"ன்னாரு
செந்தில்குமார் நாப்பது தோசையக் கட்டிக்கிட்டு முப்பதுக்குக் கணக்குச் சொல்லப்படாதுங்றாப்புல.
"யப்பாவுக்குக் கொஞ்சம் ஒடம்புக்கு
முடியாமப் போனதுல எஞ்ஞளால எதெப் பத்தியும் நெனைக்க முடியலங்கய்யா! அதுல ஒஞ்ஞளுக்குக்
கொடுக்க வெச்சிருந்த காசி எல்லாம் செலவாயிடுச்சுங்கய்யா! யிப்போ நாஞ்ஞ தாராசுரத்துலயும்
இல்லீங்கய்யா. கிராமத்துக்கேப் போயிட்டேம்ங்கய்யா!"ன்னா செய்யு பாம்பு கடிச்சு
ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போறப்போ நாயி கடிச்சதெப் பத்தி யோசிக்க முடியாதுங்றாப்புல.
"அது என்னவோ ஒங்க அண்ணன் போன் பண்ணிச்
சொன்ன சமயத்துல நாம்ம வெளியில டூர்ல இருக்குறாப்புல ஆயிடுச்சு. ஆனந்தகுமாரையாச்சும்
வாங்கிக்கிடான்னு சொல்லலாம்ன்னு பாத்தா அவனும் அவுங்க அம்மாவுக்கு ஒடம்புக்கு முடியலன்னு
திருச்சிக்கும் கும்பகோணத்துக்குமா அலைஞ்சிட்டுக் கெடந்தாம். இப்பவும் அலைஞ்சிட்டுத்தாம்
கெடக்கிறாம். இன்னும் அவுங்க அம்மாவுக்கு முழுசா கொணம் காணல!"ன்னாரு செந்தில்குமாரு
ரயிலு வண்டியப் போல நெருக்கடிங்க ஒண்ணுக்குப் பின்னால வந்துட்டுதுங்றாப்புல.
"என்னப் பண்ணுதுங்கய்யா அவுங்க யம்மாவுக்கு?"ன்னா
செய்யு ஒடம்புக்கு முடியலன்னதும் மனசுக்கு அது பொறுக்காம சட்டுன்னு அனிச்சையா வெள்ளந்தியா
கேக்குறாப்புல.
"காய்ச்சலு, அத்தோட யிப்போ மூச்சுத்
திணறலும் இருக்கிறதா சொன்னாம். எடையில நாம்ம ஒரு மொறைப் போயிட்டுப் பாத்துட்டு வந்ததுதாம்.
அதுக்கு மேல போவ முடியல. இங்க வேற வழக்குக அதிகமா கெடக்குது!"ன்னாரு செந்தில்குமாரு
நடுவுல மாட்டிக்கிட்டவேம் மின்னாடி போறதா, பின்னாடி போறதான்னு புரியாம கொழம்பி நிக்குறாப்புல.
அவரு இப்பிடிச் சொன்னதும் மேக்கொண்டு என்னத்தெ சொல்றதுன்னு புரியாம ஒரு நிமிஷம் யோசிச்சு
நின்னா செய்யு. எச்சில முழுங்கிட்டெ வந்தக் காரியத்தெ பத்தி நெனைச்சதும் அடுத்து பேச
வேண்டியதெ பேசுனா.
"யண்ணேம் விவாகரத்து வழக்குப் போடுறதுக்கான
காயிதத்துல கையெழுத்துப் போட்டுட்டு வர்றச் சொன்னிச்சுங்கய்யா!"ன்னா செய்யு
தூரத்துலேந்து பாரம் சொமந்து வந்தவேம் அதெ எறக்கி வைக்க நெனைக்குறாப்புல.
"நாம்ம இங்க இன்னும் அதுக்கான காகிதத்தெ
தயார் பண்ணல. அது ஒரு பெரிய விசயம் இல்ல. ஒண்ணுப் பண்ணுங்கம்மா. ஒங்க அண்ணன்கிட்டெ
சொல்லி என்னிக்கு மிச்சப் பணம் தயாராவும்ன்னு நமக்குப் போன பண்ணிச் சொல்ல சொல்லு.
மறுநாளே நாம்ம இங்க யாராச்சும் விட்டு ஆர்குடி சப்கோர்ட்டுக்கு காகிதங்களோட வர்றச்
சொல்லிடுறேம். அப்பிடியே சப் கோர்ட்டுல வெச்சே நீ கையெழுத்தப் போட்டுக் கொடுத்துட்டீன்னா
அப்பிடியே சப்மிட் பண்ணிடலாம். நீயி வேற கெராமத்துக்குப் போயிட்டதால இன்னொரு தவா கையெழுத்தப்
போடணும்ன்னு இவ்ளோ தூரம் நீ கிராமத்துலேந்து அலைய வேண்டியதில்ல பாரு!"ன்னாரு
செந்தில்குமாரு காசிப்பணம் வர்றாம காரியம் நடக்காதுங்றதெ நைச்சியமா எடுத்துச் சொல்றாப்புல.
செய்யு மேக்கொண்டு என்ன சொல்றதுன்னு புரியாம
உக்காந்திருந்திருக்கா. அதுவரைக்கும் எல்லாத்தையும் அமைதியா பாத்துட்டு இருந்த நிரஞ்சினித்தாம்
மனசு பொறுக்காம கேட்டிருக்கா செந்தில்குமாரு வக்கீலப் பாத்து, "ஏம் வக்கீல் சார்!
இன்னும் அய்யாயிரம் கொடுக்க பாக்கியிருக்குன்னுத்தாம் அந்தப் பணத்தெ கொடுத்ததும் நீஞ்ஞ
கையெழுத்த அங்க கோர்ட்டுல வெச்சிப் போட்டுக்குலாம்ங்றீயளா? அப்பிடி என்னங்க வக்கீல்
சார் நாஞ்ஞ பணத்தெ கொடுக்காமப் போயிடப் போறேம்?"ன்னு உப்பு வாங்குற காசிய தப்பாம
கொடுத்துப்புடுவேம்ங்றாப்புல.
"இங்க ஆபீஸ்ல ஆளுங்க யாருமில்லம்மா.
பாத்தீல்ல வந்தப்போ ஆபீஸ் கதவு சாத்திருந்தது. இது மாதிரி ஆபீஸ்ஸூ சாத்தியிருந்ததில்ல.
பணத்தெ முழுசா வாங்குன பல வழக்குகளுக்கே இன்னும் காயிதங்க தயாராவாம இருக்கு. பணத்தெ
கொடுத்துட்டா ஒங்க தரப்புலயும் ஒரு வேல முடிஞ்ச மாதிரி ஆயிடும். எங்க தரப்புலயும்
அதுக்கு ஒரு கணக்க வெச்சிக்கிட்டுக் கேக்கணும்ங்ற அவசியம் இல்லாமப் போயிடும் பாருங்க!"ன்னிருக்காரு
செந்தில்குமாரு அனுதாபமும் பரிதாபமும் பாக்குறவேம்ல்லாம் யேவாரியா இருக்க முடியாதுங்றாப்புல.
"வக்கீல் சார்! தப்பா நினைக்கலன்னா
நீங்க வேணும்ன்னா அந்த பேப்பர்ஸ்ஸ ரெடி பண்ணுங்களேம். நாங்க வேணும்ன்னா பேக்கிரி ஷாப்புல
இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணிட்டு வந்து கையெழுத்த போட்டுக் கொடுத்துட்டுப் போறேம்.
நாங்க மெயின்னா வந்ததே இதுக்குத்தாம். கையெழுத்து ஒரு பெரிய விசயமில்லன்னா அண்ணாவக்
கூட சாயுங்காலமா அனுப்பி வுட்டு பணத்தெ கொடுக்க சொல்லியிருப்பேம்!"ன்னிருக்கா
நிரஞ்சனி வந்தக் காரியம் ஆவலேன்னு நொந்த மனசுக்கு ஊரு திரும்பக் கூடாதுங்றாப்புல.
"அப்பிடில்லாம் பேப்பர்ஸ்ஸ சட்டுன்னு
எடுதேம் கவுத்தேம்ன்னு ரெடி பண்ண முடியாது. நீங்க நேரத்தோட கெளம்புங்க. பேப்பர்ஸ்
நாளைக்கே ரெடியாயி இருக்கும். பணத்தெ தயார் பண்ணிட்டு போன மட்டும் அடிங்க. நாளைக்கே
கூட கோர்ட்டுல பைல் பண்ணிடலாம். அதுக்கு நாம்ம கேரண்டி. நீங்க இன்னிக்கு கையெழுத்தப்
போட்டாலும் அதெ பைல் பண்ணுறப்போ கோர்ட்டுக்கு வந்துத்தாம் ஆவணும். அப்படி வர்றப்போ
ஒரே வேலையா முடிச்சிக்கிடலாம்!"ன்னிருக்காரு செந்தில்குமாரு கருமாதிக்குப் போறச்சே
எளவுக்கும் சேத்து வெசாரிச்சிக்கிடலாம்ங்றாப்புல.
"நாஞ்ஞ வந்ததுக்கு கையெழுத்துப் போட்டு
ஒரு காரியம் முடிஞ்சதா திருப்தியா போவேம்லா வக்கீல் சார்!"ன்னிருக்கா நிரஞ்சனியும்
வுடாம எறிஞ்ச கல்லுக்கு ஒத்த மாங்காவாச்சும் விழுந்துச்சேன்னு திருப்திப்பட்டுக்கிடலாம்ங்றாப்புல.
"கையெழுத்துதானேம்மா. போடுறதுக்கு
ஒரு நிமிஷம் கூட ஆவாது. கோர்ட்டுலய வெச்சிப் போட்டுக்கிடலாம். நீங்க கெளம்புங்க!"ன்னு
கறாரா சொல்றாப்புல சொல்லிருக்காரு செந்தில்குமாரு மொகத்தெ சுளிச்சுத் திருப்பிக்கிட்டு
ஒத்த தடவெ சொல்றதுலயே மொத்த விசயமும் அடங்கிட்டுங்றாப்புல. அதுக்கு மேல அங்க நிக்கவோ
உக்காரவோ முடியாதுன்னு புரிஞ்சிப் போயிடுச்சு ரண்டு பேத்துக்கும். அவ்வளவுதாம் ரண்டு
பேரும் கெளம்பி பாலக்கரையில பஸ்ஸப் பிடிச்சி கும்பகோணம் பஸ் ஸ்டாண்டுல பஸ்ஸூ ஏறி மத்தியானச்
சாப்பாட்ட திருவாரூர்ல கூட சாப்புடாம கொள்ளாம, பாலக்கரை பேக்கரியில சாப்புட்டதே போதும்ன்னு,
அவுங்க வந்த நேரத்துக்குத் தயாரா கெடந்த எட்டாம் நம்பரு பஸ்ஸப் பிடிச்சி ஊருக்கு வந்து
சேந்துச்சுங்க.
வூடு வந்து சேந்ததிலேந்தே செய்யு ரொம்ப
கலக்கமா இருந்தா. என்னான்னு கேட்டும் ரொம்ப நேரத்துக்குச் சொல்லாம இருந்தவெ, திரும்ப
திரும்ப கேட்டுத்தாம் பொங்கி வெடிச்சாப்புல சொன்னா, "யண்ணே! செரியான பணத்தாசப்
பிடிச்சி வக்கீல்ட்டெ போயாச்சுண்ணே! யின்னும் பணம் அய்யாயிரம் கொடுக்க வேண்டிருக்குன்னு
கையெழுத்தப் போட வுடலண்ணே! அவுங்க அதுக்கான காயிதத்தெ தயாரு பண்ணித்தாம் வெச்சிருப்பாங்க
போலண்ணே. பணத்தெ எண்ணிப் பாத்துட்டு மிச்சம் கொடுக்க வேண்டிருக்குன்னு கோர்ட்டுல
பைல் பண்ணுறப்போ பாத்துக்கிடலாம் கெளம்புன்னு சொல்லிட்டாவோண்ணே. அத்து கூட பரவாயில்லண்ணே.
நாம்ம பணம் கொடுக்க வேண்டிருக்கு, கையெழுத்தப் போடாம அனுப்பிச்சது. நாம்ம யாருண்ணே?
அவுங்க கிளையண்ட்தானே? கதவச் சாத்திருக்குற ஆபீஸ்ஸ கூட தொறந்து வுடாம, ஆபீஸ்ஸத் தொறக்குற
வரைக்கும் அரை மணி நேரத்துக்குப் போயி எங்கயாச்சும் டீக்கடையில உக்காந்துட்டு வாஞ்ஞ்ன்னு
அனுப்புறாவோண்ணே! பாவண்ணே நம்மளோட வந்த நிரஞ்சினியும். ரண்டு பேருமா போயி ஒரு பேக்கரி
ஷாப்புல முக்கா மணி நேரத்துக்கு மேல உக்காந்துட்டு வந்தேம்."ன்னு. அதெ சொல்லி
முடிக்கிறப்போ அவளோட கண்ணு தண்ணித் தண்ணியா ஊத்துனுச்சு மொகம் தெரிஞ்சவங்களக் கூட
மொகம் தெரியாதவங்களப் போல பாக்குறதுதாம் டவுனோட கலாச்சாரம்ங்றாப்புல.
"இதுக்குப் போயா அழுவாங்க யாராச்சும்?
அவுக பணத்தெ வாங்கிட்டுத் தொழில் பண்ணுற வக்கீலு. நாம்ம பணத்தெ முழுசா கொடுத்திருந்தா
எதாச்சும் ஏற்பாட்ட பண்ணிருப்பாங்க. நம்மட நெலமெ சரியில்லாம இருக்கு. பணம் இருந்தப்போ
கொடுக்க முடியல. கொடுக்கணும்ன்னு நெனைக்குறப்போ பணம் கொறைச்சலா இருக்கு. நாம்ம
நம்ம சிநேகிதருங்க ரண்டு பேத்துக்கிட்ட கேட்டிருக்கேம். எப்பிடியும் நாலைஞ்சு நாளுக்குள்ள
பணத்தெ பெரட்டிடுறேம். நீயி பணத்தோட போயி நேரா கோர்ட்டுலயே கையெழுத்தப் போட்டுட்டு
வந்துப்புடலாம்! செரிதான்னே? இதுக்குப் போயா அழுவாங்க!"ன்னாம் விகடு வித்தெ காட்டாத
கொரங்குக்குக் கொரங்காட்டி என்னத்தெ வாங்கிப் போடுவாம்ங்றாப்புல.
"யண்ணே! அந்த அய்யாயிரம் பணத்தோட
இன்னும் நாலு வாய்தாவுக்கு ஆயிருக்குற காசியையும் சேத்துக் கொடுக்கணும்மாம்!"ன்னா
செய்யு வார்த்தைய முழுங்குன படிக்கு பயணங்கள் முடிவதில்லைங்றாப்புல கோர்ட்டுன்னு படியேறிட்டா
வாயிதாவுக்கான சிலவும் முடிவதில்லைங்றாப்புல.
"அத்துச் செரி யப்பாவுக்கு ஒடம்புக்கு
முடியாமப் போனப்போ சில வாய்தாக்க ஆயிருக்கும். அதுக்கும் சேத்து கொடுத்துதாம் ஆவணும்.
நீயி ஒண்ணு பண்ணு. இனுமே வாய்தா தேதிகள சரியா குறிச்சி வெச்சிக்கோ. யப்பா கூட அவுங்க
சொல்ற கணக்குல தப்பு இருக்குறதா சொன்னாக. தப்பு எப்பிடிங்றதெ நாம்ம குறிச்சி வைக்காம
போனதால சரியா சொல்ல முடியல. அதால இனுமே அந்த விசயத்துல நாம்ம கொஞ்சம் உஷாரா இருக்கணும்.
நாம்ம பத்தாயிரம் பணத்தெ தெரட்டித் தர்றேம். ஒண்ணும் கவலப்படாம யிரு!"ன்னாம் விகடு
புல்லை நீட்டிக்கிட்டெ போனா வெள்ளாடு பின்னாடியே வாரும்ங்றாப்புல.
"சிலவு மேல சிலவா ஆயிட்டு இருக்குண்ணே!"ன்னா
செய்யு ஒண்ணா ரண்டா எத்தினின்னு கணக்குப் பாக்க முடியாத அளவுக்குங்றாப்புல.
"கொஞ்ச காலத்துக்கு அப்பிடித்தாம்
இருக்கும். எதுவும் சில காலந்தாம். பாத்துட்டே யிரு!"ன்னாம் விகடு ஆத்துல ஒடைப்பெடுத்த
எடத்துல தண்ணி ஓடித்தாம் நிக்கும்ங்றாப்புல.
"சிலவு ஆவுறதப் பத்தியில்லண்ணே! எதாச்சும்
காரியம் ஆனா சிலவு ஆவுறதப் பத்தி பெரிசா தெரியாதுல்ல!"ன்னா செய்யு ஆதாயமில்லாம
ஆக்கினைய பண்டிட்டுக் கெடக்கக் கூடாதுங்றாப்புல.
"எல்லாம் ஆவும். கூடிய சீக்கிரம்
நீயி பரீட்சைய எழுதி பிஹெச்டியில சேரு. எல்லா காரியமும் ஆனது போலத்தாம்!"ன்னாம்
விகடு காத்து அசைக்கிறதெப் பத்தி நெனைக்காம கண்ணு மரமா வளந்து நிக்கணும்ங்றாப்புல.
"அதுக்குத்தாம்ண்ணே நாம்ம தலை கீழா
நின்னு தண்ணிக் குடிச்சிட்டு இருக்கேம்!"ன்னா செய்யு மலைய மயித்துல கட்டி இழுக்குறாப்புல.
"யிப்போ அந்தக் கவனத்துல மட்டும்
இரு. இந்த வழக்குகளப் பத்தியோ, அதுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தெ பத்தியோ நெனைச்சிக்கிட்டுக்
கெடக்காதே. திரும்பவும் பழைய நெனைப்பெல்லாம் வந்து படிப்புல கவனம் பண்ண முடியாமப் போயிடப்
போவுது. அதையெல்லாம் எஞ்ஞ தலையில போட்டுக்கோ. படிப்ப மட்டும் ஒம்மட தலையிலப் போட்டுக்கோ!"ன்னாம்
விகடு வண்டியில போறப்போ பாரத்தெ தலையில சொமக்க வேண்டியதில்லங்றாப்புல. செரிதாங்ற மாதிரிக்கி
தலையாட்டுனா செய்யு திட்டை கெராமத்துல செஞ்சு வெச்ச தலையாட்டி பொம்மையப் போல.
*****
No comments:
Post a Comment