ஊர் என்பது ஒரு வகை மருந்து!
செய்யு - 722
சரியா மூணரை மாசம் தாராசுரத்துல செய்யுவ
வெச்சிக்கிட்டுச் சுப்பு வாத்தியாரும், வெங்குவும் இருந்திருப்பாங்க. எல்லாம் ஒரு வெதத்துல
நல்லாத்தாம் போயிக்கிட்டு இருந்துச்சு. நல்லா போயிட்டு இருக்குறப்பத்தாம் நடுவழியில
முள்ளு குத்தும்ங்றாப்புல சுப்பு வாத்தியாருக்கு டெங்குக் காய்ச்சலா, சிக்கன்குன்யா
காய்ச்சலா, வைரஸ் காய்ச்சாலான்னு புரியாத காய்ச்சல் வந்து ஒடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு.
ஒடம்பெல்லாம் தாங்க முடியாத வலியில அவதிப்பட ஆரம்பிச்சாரு. சரியா அந்த நேரத்துலத்தாம்
வக்கீல் செந்தில்குமாரு கும்பகோணத்துக்கு வந்துட்டதாவும், பணத்தெ கொண்டாந்து கொடுத்துட்டுக்
கையெழுத்துப் போட்டுட்டுப் போங்கன்னும் சொன்னாரு. சுப்பு வாத்தியாரு இருந்த நெலையில
அவர்ர அழைச்சிட்டும் போவ முடியாம, வுட்டுட்டும் போவ முடியாம நெலமெ ரொம்ப நெருக்கடியா
இருந்துச்சு செய்யுவுக்கு. கும்பகோணத்துல ரண்டு மூணு டாக்கடர்கள்கிட்டெ காட்டியும்
அவருக்குக் கொணங் காணல. தாய்மண் முன்னேற்ற கழகத்து ஆளுங்கத்தான் ஆட்டோவுல அழைச்சுக்கிட்டு
கூட மாட தொணையா வூட்டுக்கும் ஆஸ்பத்திரிக்கும் அலையுற அத்தனெ அலைச்சல்களையும் அலைஞ்சாங்க.
அவுங்களுக்குத் தெரிஞ்ச வரைக்கும் எவ்வளவோ பெரிய டாக்கடருக்கிட்டல்லாம் காட்டி ஆனுச்சு.
சுப்பு வாத்தியாருக்கு நாளுக்கு நாளு ஒடம்பு
ரொம்ப மெலிஞ்சிக்கிட்டெ போயிட்டு இருந்துச்சு. சுத்தமாவே அவருக்குச் சாப்பாடு கொள்ளல.
ஆளுப் பாக்க ஒடம்புல ஒட்டுச் சதையில்லாம எலும்புக் கூட்டப் போல மாற ஆரம்பிச்சிட்டாரு
பஞ்சத்துல அடிபட்ட பராரியப் போல. அப்பாருக்கு ஒடம்புக்குச் சரியில்லன்னு விகடு ரண்டு
மூணு மொறை ஊருலேந்து பாத்துட்டுப் பாத்துட்டு வந்தாம். எப்பிடியும் ஒடம்பு சரியாயிடுங்ற
நம்பிக்கையில பாத்துட்டுப் பாத்துட்டு ஊருக்குத் திரும்பி வந்துட்டு இருந்தாம். கட்சிக்கார
ஆளுங்க ரொம்ப தொணையா பல நேரங்கள்ல பக்கத்துலயே இருந்துப் பாத்துக்கிட்டாங்க. அந்த ஒரு
தெம்புலத்தாம் பக்கத்துல வேற தொணை இல்லாட்டியும், தன்னோட தொணை இல்லாட்டியும் பள்ளியோடத்துக்கு
லீவ்வ அடிக்காம சாயுங்காலம் கௌம்பிப் பாத்துட்டுக் காலங்காத்தால திரும்புறதுமா இருந்தாம்.
பணங்காசியப் பாக்காம பெரிய பெரிய டாக்கடர்கள்கிட்டெ காட்டி மருந்தெல்லாம் வாங்கிக்
கொடுத்துப் பாத்தும் சுப்பு வாத்தியாரோட நெலமெ நாளுக்கு நாள் மோசமாயிகிட்டெ இருந்துச்சு.
வக்கீலுக்குக் கொடுக்குறதுக்கு, குடும்ப சிலவுக்குன்னு கையில இருந்த காசும் டாக்கடர்
பீஸ்ஸூ, மருந்து மாத்திரைன்னு கரைய ஆரம்பிச்சிக்கிட்டு இருந்துச்சு.
ஒரு கட்டத்துக்கு மேல வெங்குவுக்கும் செய்யுவுக்கும்
பயம் வந்துடுச்சு. அப்பைக்கப்போ சுப்பு வாத்தியாரு மயக்க நெலைக்குப் போயிப் பொலம்ப
ஆரம்பிச்சிருந்தாரு. "எஞ்ஞ அப்பங் காலத்துலேந்தே கும்பகோணம் நமக்குச் சுத்தப்பட்டு
வாராதே. இஞ்ஞ வந்து இருக்குறாப்புல ஆயிடுச்சே! எந் தங்காச்சியையும் கும்பகோணத்துல
கட்டிக் கொடுத்துதாம் அதோட வாழ்க்கையும் சரியில்லாமப் போச்சே!"ன்னு அவரு பாட்டுக்கு
ஒடம்போட பலகீனத்தெ தாங்க முடியாம தன்னோட பழங்காலத்தெ நெனைச்சபடிக்கு மொணகிக்கிட்டே,
பொலம்பிக்கிட்டே இருக்க ஆரம்பிச்சாரு.
செய்யுவோட மனநெலைக்காகவும், படிப்புக்காகவும்
தாராசுரம் வந்து இப்போ இருக்குற நெலையில தொடந்தாப்புல அங்கயே இருக்குறதா, சுப்பு
வாத்தியாரு பொலம்புறப் பொலம்பலப் பாத்து திரும்ப ஊருக்கே வந்துடுறதான்னு ஒரே யோசனையா
இருந்துச்சு வெங்குவுக்கு. சுப்பு வாத்தியாரோட நெலமெ நாளுக்கு நாளு மோசமாயி அவர்ர
எழுப்பி உக்கார வைக்கவே, ஒண்ணுக்கு ரண்டுக்குப் போவவே ஒரு ஆளு பக்கத்துல நின்னு தோளப்
பிடிச்சிக்கிட்டு கைத்தாங்கலா அழைச்சிட்டுப் போறாப்புல ஆனுச்சு. அதுக்கு மேல வெங்குவால
சுப்பு வாத்தியார்ர அந்த நெலமையிலப் பாக்க முடியல. என்ன ஆனாலும் பரவாயில்ல ஊருக்குப்
போயிடலாம்ன்னு அதுவும் பொலம்ப ஆரம்பிச்சிடுச்சு. செய்யுவுக்கும் அப்பார்ர அந்த நெலையிலப்
பாத்துப் பயம் கண்டுப் போச்சுது. ஊருக்கு வந்தாலாச்சும் கொணம் காணுமோங்ற மாதிரிக்கி
அவளும் யோசிக்க ஆரம்பிச்சா. எப்பிடியோ தன்ன கொண்டுப் போயி ஊர்லப் போட்டுடுங்கன்னு
சுப்பு வாத்தியாரும் பொலம்ப ஆரம்பிச்சிருந்தாரு. கட்சிக்கார ஆளுங்களும் இதுக்கு மேல
இந்த நோய்ப்பாட பாக்குறதுக்கு ஒலகத்துல மருந்துமில்ல, டாக்கடருமில்லன்னு அடிச்சுச்
சொல்லி ஊருக்கு ஒரு எட்டெ வாத்தியாரு விருப்பப்படியே கொண்டு போயி வெச்சுப் பாத்துட்டுத்தாம்
வாங்களேம், அப்படியாச்சும் கொணம் காணுதான்னு பாப்பேம்ன்னு ஒரு யோஜனையெ சொல்லிப் பாத்தாங்க.
டாக்கடருங்க கைய வெச்சு கொணம் காணாததா ஊருக்குப் போயிக் கொணம் காணும்ன்னு ஒரு சந்தேவந்தாம்
வெங்குவுக்கும் செய்யுவுக்கும். மருந்துக்குக் கட்டுப்படாத வெயாதியா ஊருக்குப் போயிக்
கட்டுப்படும்ன்னு அது வேற ஒரு புது கொழப்பம் ரண்டு பேத்துக்கும். அத்தோட இப்படிப் பண்டுறதா,
அப்படிப் பண்டுறதா, எப்படிப் பண்டுறதுன்னு பலவெதமா யோசிச்சு தேங்கி நின்னாவோ ரண்டு
பேத்தும். அத்துவானக் காட்டுக்குள்ள எந்தப் பக்கம் போறதுன்னு கண்ணு கட்டி விட்ட நெல.
ஆன்னா ஏதோ ஒரு பக்கம் போயித்தானே ஆவணும் வேற வழியில்ல.
செய்யுத்தாம் விகடுவுக்குப் போன அடிச்சா.
"யண்ணே! யப்போவோட நெலமையப் பாக்க முடியலண்ணே! நீயி கார்ர எடுத்துட்டு தாராசுரத்து
வந்துடுண்ணே. யப்பாவ அழைச்சிட்டு ஊருக்கு வந்துடுவேம். யப்பாவக் கொணம் பண்ணிட்டு என்னத்தெ
வேணும்ன்னாலும் பண்ணிக்கிடலாம்ண்ணே!"ன்னா செய்யு என்னவோ திட்டை கெராமத்துல வெளிநாட்டு
ஆஸ்ப்பிட்டலு எல்லாம் இருக்குறாப்புல. ஊருப்பக்கம் தலைவெச்சுப் படுக்க மாட்டேம்ன்னு
தரையில அடிச்சிச் சத்தியம் பண்டாத கொறையா சொன்ன அவளே அப்பிடிச் சொன்னதுக்குப் பெறவு
சுப்பு வாத்தியார்ர ஊருக்கு அழைச்சிட்டு வந்துடுறதுதாங் சரின்னு வாடகை கார்ர எடுத்துக்கிட்டு
தாராசுரத்துக்குப் போனாம் விகடு சொந்த ஊர்ல சர்வரோக நிவாரணிய வெச்சிருக்குறாப்புல.
சுப்பு வாத்தியார்ர மாடியிலேந்து எறக்கி கீழே கொண்டு வர்ற முடியல. காரு
டிரைவரும், விகடுவுந்தாம் கையக் கொத்துக்கிட்டு அவர்ரே அதுல குந்துனாப்புல கொண்டாந்து
கார்ல உக்கார வெச்சாங்க. தொட்டுத் தூக்குனப்போ சுப்பு வாத்தியாரு உடம்புலேந்து பரவுன
சூடு அனலடிக்குற அடுப்புக்குப் பக்கத்துல இருக்குறாப்புல இருந்துச்சு. அவருக்குப் போட்டு
வுட்டுருந்த சட்டெ கொடாங் கொடாங்ன்னு இருந்துச்சு. காய்ச்சல்ல இப்பிடி ஒரு மனுஷன்
எளைச்சிப் போவாங்களான்னு அதெப் பாக்க பாக்க விகடுவுக்கு ஆச்சரியமாவும், அதிசயமாவும்
இருந்துச்சு. ஒடம்புக்கு முடியாம இருந்தாலும் சுப்பு வாத்தியாருக்கு ஊருக்குக் கெளம்புறோங்ற
நெனைப்புல ஒரு தெம்பு வந்தாப்புலத்தாம் அவரோட மொகம் இருந்துச்சு.
காரு கௌம்புறப்போ கட்சிக்கார ஆளுங்க எல்லாம் சீக்கிரமா கொணமாயித் திரும்பிடுங்கன்னு
உருகுனாப்புல சொன்னாங்க. இவுங்கள எல்லாத்தையும் வுட்டுப்புட்டா கொணங் காணணும்ன்னு நெனைச்சு
ஊருக்குப் போறேம்ன்னு சுப்பு வாத்தியாரு கண்ணுல லேசா தண்ணி எட்டிப் பாத்துச்சு. ஒரு
நிமிஷம் கௌம்புவமா, வாணாமாங்ற தயக்கம் வந்துச்சு அவருக்கு. “நல்லபடியா திரும்பி வாங்க!”ன்னு
அவுங்க சொன்னதும் கண்ண மூடி தலைய அசைச்சாரு சுப்பு வாத்தியாரு. காரு கௌம்புனுச்சு.
வீடு திரும்புதல்
கார்ல வெச்சி ஊருக்குக் கொண்டாந்தா ஊர்ல
ஒரு சனம் பாக்கியில்லாம வந்து சுப்பு வாத்தியார்ரப் பாத்துட்டு விகடுவெ திட்டிக்கிட்டுப்
போவுதுங்க. "சரியான அறிவுகெட்டப் பயலா இருப்பாம் போலருக்கு. ஒடம்புக்கு முடியலன்னா
இஞ்ஞயிருந்து கார்ல வெச்சி டவுனுக்குக் கொண்டுப் போயி கொணம் பண்ணிட்டுக் கொண்டு
வருவான்னு பாத்தா, ஒடம்புக்கு முடியாத ஆளெ டவுன்லேந்து கார்ர வெச்சி இஞ்ஞ ஊருக்குக்
கொண்டாந்திருக்கான்னே? ஏம்டா வெகடு! இப்பிடித்தாம் வாத்திப் பயலுங்க எல்லாம் அறிவுக்கெட்ட
பயலுங்களா இருப்பீயாளா?"ன்னு ஆளாளுக்கு விகடுவெ திட்ட ஆரம்பிச்சிட்டுங்க பேதிக்கு
வவுறு வலிக்குறவேங்றவேம் காட்டுக்கு ஓடுவானா நட வூட்டுக்கு ஓடுவானாங்றாப்புல.
"ஏம்டா அறிவு கெட்டவனே! தங்காச்சிய
ஆஸ்பிட்டலேந்து வூட்டுக்குக் கொண்டு வர்றாம, நேரடியா தாராசுரத்துக் கொண்டு போயி
இருக்கீயே? அப்பிடிச் செய்யலாமாடா? தாராசுரத்துக்குப் போறதுன்னாலும் இஞ்ஞ ஒரு நாளு
தங்காச்சிய ஆஸ்பிட்டலேந்து கொண்டாந்து வெச்சில்லடா மறுநாளு கொண்டுப் போவணும். நேரா
ஆஸ்பத்திரிலேந்து வூட்டுக்கு வர்றாம கொண்டுட்டுப் போனதுதாம்டா காரணம் இப்பிடி திரும்ப
ஆஸ்பத்திரியில கொண்டுப் போயி வைக்குறாப்புல ஆயிருக்கு!"ன்னு அம்மாசிக் கெழவியும்
விகடுவெப் பிடிச்சித் திட்டுன்னுச்சு வெளைஞ்ச நெல்லு வூடு வர்றாம நேரடியா யேவாரிக்கிட்டெ
போவக் கூடாதுங்றாப்புல.
"ஊர்ல யாராச்சையும் கலந்துக்கிறானா?
அவ்வேம் பாட்டுக்கு இஷ்டத்துக்குச் செஞ்சிட்டு அலையுறாம். இப்போ ஒரு கஷ்டம்னனா யாரு
என்னத்தெ பண்டுறது? அனுபவிக்கிட்டும் அப்பத்தாம் சரிபெட்டு வருவாம்!"ன்னு வந்து
பாத்துட்டுப் போன சொட்டெ கண்ணுராசு மத்தியஸ்தர்கள மதிக்காம மனம் போன போக்குல போறவேம்ல்லாம்
மானங் கெட்டுப் போறாப்பலத்தாம் பேச்ச வாங்கி கட்டுக்கிடுவாம்ங்றாப்புல ஊருக்குள்ளப்
பேசிக்கிட்டுத் திரியுறதா அதுவும் விகடுவோட காதுக்கு வந்துச்சு.
தம்மேந்தி ஆத்தா ஒண்ணுத்தாம் ஆறுதால சொன்னிச்சு.
"நல்ல வேளடாம்பீ! ஒடம்புக்கு முடியலன்னு டவுன்லயே வெச்சி வைத்தியம் பாக்காமப்
போனீயே! அது வரைக்கும் நல்லதுடாம்பீ! நாட்டுல சாவுறவேம் டவுனு ஆஸ்பத்திரிக்கிப் போவாததால
சாவுறதில்லடா. அஞ்ஞப் போறதாலத்தாம் சாவுறாம். சாவக் கெடக்குறவேம் கூட டவுன்னு ஆஸ்பத்திரிக்கிப்
போவாம கெராமத்துலயே கெடந்தாம்ன்னா பொழைச்சிடுவாம். ஊர்ல சொல்றதப் பத்தில்லாம் கவலெப்படாதே.
எதுத்தக் கொல்லையில தென்னண்டை மூலையில நெலவேம்புக் கெடக்குப் பாரு. அதெ எலையப் பறிச்சாந்து
ரண்டு தம்பளர்ரு தண்ணிய ஊத்தி அரை டம்பளர்ரா சுண்டிப் போற அளவுக்குக் காய்ச்சிக் கொடுடாம்பி.
எந்தக் காய்ச்சலா இருந்தா ன்னா ஓடிப் போயிடும்!"ன்னு சொல்லி தம்மேந்தி ஆத்தாவே
வேப்பெலை அடிச்சாவே ஓடாத பேயே ஓடிடும்ங்றப்போ, அதெ கரைச்சுக் குடிச்சா கொணம் காணாத
நோயும் கொணம் கண்டுப்புடும்ங்றாப்புல அதெ காய்ச்சிக் கொடுக்க வெச்சது.
அத்தோட விடல தம்மேந்தி ஆத்தா, வேப்ப மரத்து
பட்டைய வெட்டி சின்ன சின்ன துண்டுகளா நறுக்கிப் போட்டு கருப்பட்டிய வாங்கியாரச் சொல்லி,
அத்தோட சீரகம், மெளகு, சுக்கு, திப்பிலிய எல்லாம் போட்டு அதுல கசாயம் செஞ்சிக் கொடுத்து
அதெயும் குடிக்க வெச்சது. அத்தோட மலைவேம்பு எலையையும் பறிச்சாந்து அதுலயும் கசாயம்
பண்ணிக் கொடுத்துக் குடிக்க வெச்சது.
காலங்காத்தாலயே நெலவேம்புல காய்ச்சுன தண்ணி, பதினோரு மணி வாக்குல வேப்ப
மரப் பட்டையில கசாயம், மூணு மணி வாக்குல மலவேம்புல காய்ச்சுன தண்ணி, ராத்திரிப் படுக்கப்
போறதுக்கு மின்னாடி பனங்கற்கண்டு, சுக்கு, மெளகு, சீரகம் போட்டுக் காய்ச்சுன்னா தண்ணின்னு
கொடுக்க ஆரம்பிக்க மூணு நாள்ல சுப்பு வாத்தியாரோட காய்ச்சல் கொறைய ஆரம்பிச்சது.
கொஞ்சம் கொஞ்சமா கஞ்சிச் சாப்பாடும் கூடுதலா எடுக்க ஆரம்பிச்சது. இந்த மூணு நாளும்
வெங்கு மாரியம்மன் கோயிலும் வூடுமா கெடந்துச்சு. வூட்டுச் சாப்பாடே கஞ்சியா மாறியிருந்துச்சு.
வூட்டுல இருந்த அத்தனெ பேரோட நெனைப்பும் மனசும் எப்பிடியாச்சும் சுப்பு வாத்தியார்ர
கொணம் பண்ணிப்புடுணுங்ற நெனைப்போடயே ஓடிட்டு இருந்துச்சு.
அஞ்சாறு நாள்லயே சுப்பு வாத்தியாரு அவராவே
எழும்பி உக்கார ஆரம்பிச்சாரு. அவராவே எழும்பி கொல்லப் பக்கம் ஒண்ணுக்குப் போவ ஆரம்பிச்சாரு.
ஒடம்பு மட்டும் ஒட்டடக் குச்சியப் போலத்தாம் இருந்துச்சு. அவரு நடமாட ஆரம்பிச்சதே
வூட்டுல எல்லாத்துக்கும் சந்தோஷமா இருந்துச்சு.
"கடெசீ காலத்துல மனுஷன் ஆஸ்பத்திரியில
கெடக்குறதாலத்தாம்டாம்பீ சாவுறாம். சாவுற ஒடம்ப கூட வூட்டுல கொண்டாந்துப் போட்டா
பொழைச்சுக்கும்டாம்பீ. எந்த வூடும் அதுல குடியிருக்குற மனுஷரோட உசுர்ர அவ்ளோ சீக்கிரமா
வுட வுடாது. எவ்வளவு இழுத்துப் பிடிக்கணுமோ அவ்வளவு இழுத்துப் பிடிக்கும். வூடு இப்பிடி
இழுத்துக் கொடுத்துக் கொஞ்சம் தேத்தி வுட்டுப்புட்டா அதுக்குப் பெறவு ஒடம்பு வுடாதுடாம்பீ.
இழுத்துக் கோத்துப் பிடிச்சிக்கிடும்டாம்பீ!"ன்னுச்சு தம்மேந்தி யாத்தா நடுவூட்டுல
கொண்டாந்து போட்டுட்டா நடுவுல போறேன்னு அந்தரத்துல நிக்குற உசுரும் மந்திரத்துக்குக்
கட்டுப்பட்டது போல போவாம நிக்கும்ங்றாப்புல.
தம்மேந்தி யாத்தா சொன்னதெக் கேக்குறப்போ
சுப்பு வாத்தியாருக்குக் கொடுத்த மருந்தால கொணம் கண்டுச்சா, ஊருக்குச் சுப்பு வாத்தியார்ரக்
கொண்டு வந்ததால கொணம் கண்டுச்சான்னு கொஞ்சம் கொழப்பமாத்தாம் இருந்துச்சு. ஆன்னா
ஒண்ணு மனுஷனுக்கு இதுதாம் தன்னோட ஊருன்னு மனசு நெலைகுத்தி நிக்குற ஊர்ல கொண்டாந்துப்
போட்டுட்டா அதுலயே பாதிக் கொணம் கண்டுப்புடும். அதுக்கு மேல குடும்பத்துல இருக்குறவங்க
அனுசரணையா இருந்துட்டா முழுசும் கொணம் கண்டும்ங்றது புரிஞ்சிது. எல்லாத்துக்கும் மேல
தாராசுரத்துல இருந்த கொசுக்கடி, இஞ்ஞ திட்டையில கெடையாது. அது கூடவும் ஒரு காரணமா
இருந்திருக்கலாமோ என்னவோ. அதையெல்லாம் யோசிச்சுப் பாக்குற நெலமையில யில்லாம சுப்பு
வாத்தியாரு கொணம் கண்டதுல எல்லாருக்கும் சந்தோஷம் உண்டாயிருந்துச்சு. வெங்கு தாம்
கும்புடுற மாரியம்மாவும், உஞ்சினி அய்யனாரும் தன்னெ கைவுடலன்னு சொல்லிக்கிட்டு இருந்துச்சு.
ஆக மொத்தத்துல ஏதோ ஒண்ணால கொணம் கண்டிருக்கு! அத்து ஊரா, வீடா, மருந்தா, தெய்வமாங்றதுதாம்
சரியாப் புரியல. ஒருவேள இந்த நாலாலயும் கூட கொணமாயிருக்கலாம். ஊர்லத்தாம் வூடும்,
தெய்வமும் இருக்கு. வூட்டச் சுத்தி மருந்திருக்கு. அவுங்கவுங்க ஊருத்தாம் அவுங்கவுங்கள
கொணப்படுத்துது.
ஆயிர ஆயிரமா செலவழிச்சு கொணப்பாடு காணாத நோப்பாடு கருப்பட்டிக்குச் செலவான
காசிய கழிச்சுப்புட்டா பைசா காசில்லாமல்லா கொணம் கண்டிருக்கு. நாட்டுல நாட்டு வைத்தியம்
உசுரோட இருந்தா காசு செலவு பண்ணிக் கொணப்பாடு செய்யுற வைத்தியம் செத்துப் போயிடும்ன்னுத்தாம்
நாட்டு வைத்தியத்தெ சாவடிச்சிப்புட்டு, மனுஷன வெத வெதமா சாவடிக்கணும்ன்னே, காசு கொடுத்து
வாங்குற புதுப்புது மருந்துகளெ கண்டுபிடிக்கிறாவோ போல. ஒரு காலத்துல காசு கொடுத்து
வாங்குற மருந்தால ஒலகமே சாவுறப்போ காசில்லாத நாட்டு மருந்துதாம் ஒலகத்தையே காப்பத்துனாலும்
காப்பத்தலாம். அதுக்கு அது வரைக்கும் நாட்டு வைத்தியம் உசுரோட இருக்கணும். அதுக்கு
நாட்டு வைத்தியத்தால மட்டுந்தாம் கொணம் காணுங்ற ஒரு வெயாதி இந்த ஒலகத்தெ பிடிச்சாத்தாம்
உண்டு. அத்துச் செரி நாட்டு வைத்தியத்தால கொணம் காணாத வெயாதின்னு ஒண்ணு இந்த ஒலகத்துல
இருக்கா என்ன? அத்து அந்த இயற்கைக்குத்தாம் தெரியும்.
இப்போ இந்த நோய்லேந்து கொணப்பாடு கண்டதும்
சுப்பு வாத்தியார்ர தாராசுரத்துக்கு ஒடனடியா அனுப்பி வைக்கவும் யோசனையா இருந்துச்சு.
இப்பத்தாம் கொணம் கண்டிருக்கிறது, அவரெ அனுப்பி வெச்சி மறுக்கா காய்ச்சல் கண்டா ஒடம்பத்
தேத்துறது செருமம்ன்னு கொஞ்ச நாளு அப்பிடியே ஓடட்டும்ன்னு வுட்டாச்சு. செய்யுவுக்கும்
கொஞ்ச நாள்ல ஊர்ல தன்னப் பத்தி என்ன நெனைப்பாங்கற எண்ணம் மாறிப் போயிருந்துச்சு.
அவளோட நெனைப்புப் பூரா தன்னாலத்தாம் குடும்பமே இந்த அளவுக்குக் கஷ்டப்படுதுங்ற எண்ணமா
நெறைஞ்சிருந்துச்சு. தன்னோட பிடிவாதத்தாலத்தாம் அப்பங்காரரு தாராசுரம் வந்து அவருக்குச்
சொரம் கண்டு ஒடம்பு இப்பிடி ஆயி உசுருக்குப் போராடுறாப்புல ஆயிடுச்சுங்ற குத்த உணர்ச்சி
வேற அவளுக்கு உண்டாயிடுச்சு. மனசோட நெனைப்பு அப்படி. ஊர்ல ஒரு பயெ நம்மளப் பத்தி நெனைக்க
மாட்டாம், ஆன்னா ஊரே நம்மளப் பத்தி நெனைக்கிறதா நெனைச்சுக்கும். யாராச்சும் ஏதாச்சும்
ஒண்ண நம்மளப் பத்தி எதார்த்தமா பேசுனா, நம்மளப் பத்தித்தாம் ஊருக்குள்ள பேசிட்டுக்
கெடக்குறானுவோன்னு அதுவா ஏதேதோ புரிஞ்சுக்கும். நம்மளப் பத்தின பேச்சு நாலு நாளைக்கு
இல்லன்னா ஒரு பயெ ஊருல நம்மள கண்டுக்கிட மாட்டேங்றானுவோளேன்னு அதுவா ஏதேதோ நெனைச்சு
மருகிக்கும். எல்லாம் மனசு பண்டுற கோளாறுங்றதெ புரிஞ்சிக்க ஒரு மனுஷனுக்கு நாளாவும்.
அந்த நாளு என்னிக்கோ ஒரு நாளு வந்துத்தாம் தீரும். செய்யுவுக்கு அந்த நாளு சுப்பு வாத்தியாரு வெயாதியில வுழுந்து கொணம்
கண்ட பெற்பாடுத்தாம் வந்துச்சு. ஆயிரந்தாம் குத்தம் கொறை சொன்னாலும் சொந்த ஊருக்கு
அடக்கம் ஒலகத்துல எந்த ஊரும் இல்லங்றதெ அவ்வே உணர்ந்துக்க ஆரம்பிச்சா. இனுமே என்னா
ஆனாலும் பரவாயில்ல, யாரு என்னத்தெ பேசுனாலும் செரித்தாம் திட்டை கெராமத்தெ வுட்டு அந்தாண்ட
இந்தாண்ட போவணும்ன்னு நெனைக்கவே கூடாதுன்னு நெனைச்சிக்கிட்டா. வேத்து மண்ணுல வேரு பிடிச்சித்தாம்
சாதிக்கணும்ன்னு யில்ல, சொந்த மண்ணுல வேரு பலமா இருந்தா வேத்து ஊருலயும் கெளை பரப்பலாம்ங்ற
மாதிரிக்கு அவளா யோசிக்கிறதும் அதெப் பத்திப் பேசுறதாவும் கெடந்தா.
வெங்குவுக்குத் தாராசுரமே பிடிக்கல. அங்கப் போயித்தாம் புருஷங்காரருக்கு
இப்பிடி ஆச்சுதுன்னு அதுக்குத் தாராசுரத்தெ நெனைச்சாலே வெறுப்பா இருந்துச்சு. இந்த
ஊர்ர வுட்டு எங்கயும் போவக் கூடாதுங்ற நெனைப்புத்தாம், அதுக்கு வந்து பெற்பாடு எல்லாருக்கும்
கடைசியில வந்திருந்துச்சு.
எப்போ கொடுப்பீங்க பணத்தெ?
இதுக்கு இடையில நாலு நாளுக்கு ஒரு தடவையாவது
வக்கீல் செந்தில்குமாரு பணத்தைக் கொண்டாந்து கொடுத்துட்டுப் போங்கன்னு போன அடிச்சிட்டு
இருந்தாரு கலவரத்துக்கு இடையிலயும் வௌம்பரத்துல காசியப் பாக்க நெனைக்குற டிவிக்காரனுங்களப்
போல.
விகடு குடும்பத்தோட நெலையச் சொல்லிக் கொஞ்சம் பொறுத்துக்குமாறு சொல்லிட்டெ
இருந்தாம். அதெ செந்தில்குமாரு ஒப்புக்கிறாப்புல இல்ல.
"ஒரு நாளு நீங்க பணத்தெ கொண்டாந்து கொடுத்துட்டுப் போறதுல என்ன
சிரமம்ன்னே புரியலங்களே சார்!"ன்னு சொல்லிக்கிட்டெ இருந்தாரு வாய்க்கரிசி பொடுறதெ
எடுத்து ஒலைக்கரிசியா போடுறதுல என்னா தப்புங்றாப்புல.
"ஒஞ்ஞ பணத்தெ கொடுக்காம எஞ்ஞயும் ஓடிட மாட்டேங்கய்யா! பணமும் யப்பாவோட
வைத்தியச் சிலவுக்குன்னு அஞ்ஞ தாராசுரத்துல வெச்சிருந்தப்பவே சிலவாயிடுச்சுங்கய்யா!
டாக்கடருமார்க என்னென்னவோ டெஸ்ட்டு எடுக்கணும்ன்னு சொன்னதுல யிருந்த பணமெல்லாம் காலியாயிடுச்சுங்கய்யா!"ன்னாம்
விகடு ஆஸ்பத்திரிக்கிப் போய்ட்டு வந்தவேம் கணக்குப் பாத்தா அடுத்த வேளச் சாப்பாட்டுக்கே
தேறாதுங்றாப்புல.
"வழக்க நாங்க சும்மாவும் நடத்த முடியாது!
டிரான்ஸ்பர் ஓப்பி ரண்டு கேஸையும் வித்ட்ரா பண்ணியாச்சு. நாங்க நெனைச்சிருந்தா அதெயும்
நடத்தி அதுக்கும் சேர்த்து பீஸ்ஸப் போட்டிருக்க முடியும். அப்பிடி நாங்க செய்ய மாட்டோம்.
எந்த அளவுக்குப் பீஸ்ஸ கொறைக்கணுமோ அந்த அளவுக்கு வழக்குகளக் கொறைச்சி விட்டிருக்கேம்.
எவ்ளோ சீக்கிரமா பணத்தெ கொடுக்க முடியுமோ அவ்ளோ சீக்கிரமா பணத்தெ கொடுக்கப் பாருங்க.
அப்பிடி முடியலன்னா நீங்க சொன்னீங்களாமே அது படிக்கு அய்யாயிரம் அய்யாயிரமாவது கொடுக்கப்
பாருங்க சார். எங்களுக்கும் குடும்பம் இருக்கு. புள்ளை குட்டிகள படிக்க வைக்கிறோம்.
கரண்ட் பில், பெட்ரோல் செலவுன்னு ஏகப்பட்ட செலவுங்க இருக்கு. தர்மத்துக்குல்லாம் வழக்க
நடத்த முடியாது பாருங்க சார்!"ன்னாரு செந்தில்குமாரு கொள்ளையடிச்சாத்தாம் குண்டான்ல
சோறு கொதிக்கும்ன்னு வழிப்பறி பண்டுறவேம் சொல்றாப்புல. என்னத்தெ பண்டுறது?
வக்கீலு அவரோட நெலைய சொன்னாலும் விகடுவோட நெனைப்புல்லாம் வேற வெதமா போனுச்சு,
அதாச்சி, நாட்டுல அரிப்பெடுத்தவேம் சொரிஞ்சிக்கிடாம இருந்தாத்தாம் அதிசயம்ங்றாப்புல
படிச்சவேம் ஈவு பாவம் பாத்து பணங்காசிய கேக்காம இருந்தாத்தாம் அத்து எட்டாவது அதிசயம்ங்றாப்புல
ஆயிடுச்சுன்னு நெனைச்சாம் விகடு. ஒலகத்துல இருக்குற ஏழு அதிசயத்தெ காசு சிலவு பண்ணிப்
பாத்தாலும் இந்த எட்டாவது அதிசயத்தெ கோடி ரூவா சிலவெ பண்டுனாலும் பாத்துட முடியாது
போல. படிச்சிப் பாவம் பண்டுறதுக்குன்னே உண்டான மக்காத்தாம் ஒலகத்துல அதிகெம் போல இது
வரையில பூமியில பொறந்த மனுஷங்க, சீவராசிகள வுட. அதுக்குத்தாம் என்னத்தெ பண்டித் தொலையுறது
பாவம் பண்டுறவேமுக்குத்தாம் பணங்காசியும் சொத்துப் பத்தும் சேருது. பாவத்தெ பண்டாம
நாலு பேத்தோட வவுத்தெரிச்சல கொட்டிக்கிடாம அதெ சேக்குறதும் கஷ்டந்தாம் போல உண்டியலை
ஒடைக்காம திருடுறவேம் காசியை எடுக்க முடியாதுங்றாப்புல. பணத்தெ கொடுக்காத வரைக்கும்
இனுமே வழக்கெ தொடர முடியாதுங்றாப்புலத்தாம் அதுக்கு அழுத்தம் கொடுத்து அடிச்சிப் பேசிட்டு
இருந்தாரு செந்தில்குமாரு வக்கீலு சாத்தானப் போல சொல்றதெ கடவுளு வேஷத்துல மறைச்சுக்கிட்டு.
இப்பிடித்தாம் அந்த வக்கீலு பேசப் பேச விகடு ரொம்ப வெறுப்பா அவர்ரப் பத்தி நெனைக்க
ஆரம்பிச்சாம்.
வேற வழியில்லாம "வர்ற வாரத்துல நிச்சயமா
ஒரு நாளு கொஞ்சம் பணத்தோட வந்துப் பாக்குறேம்ங்கய்யா!"ன்னாம் விகடு கொஞ்ச நாளு
தள்ளுனா நாலு காசு கையில பொரளும் எப்பிடியும் கொடுத்துப்புடலாம்ங்றாப்புல.
"சீக்கிரமா செய்யுங்க! பணத்தெ கொடுத்தாத்தாம்
வழக்கு விறுவிறுன்னு ஆவும். இல்லன்னா வழக்கு தொய்வடைஞ்சுப் போறதுக்கு நாங்க பொறுப்பில்லப்
பாத்துக்குங்க! நாங்களும் நாலு வாய்தாவுக்குப் போவாம அப்பிடியே போட்டா வழக்கு அப்பிடியே
கெடந்துடும் பாருங்க. வாய்தாவுக்கும் ஒங்க தங்கச்சிய வந்து ஆஜராவச் சொல்லுங்க! நீங்க
பாட்டுக்கு வாய்தாவுக்கும் வரதில்ல, வழக்குக்கான பணத்தையும் தரதில்லன்னா என்ன நெனைச்சிட்டு
இருக்கீங்கன்னே புரியல! இப்பிடியெல்லாம் இருந்தா என்ன பண்ணுறது? இதுல நீங்க ஒரு ஆசிரியரா
வேற இருக்கீங்க? புள்ளைங்களுக்கு என்னத்தெ பாடத்தைச் சொல்லிக் கொடுப்பீங்கன்னே புரியல!"ன்னு
சொல்லிட்டு அப்போ போன வெச்சாரு செந்தில்குமாரு வக்கத்துப் போயிட்டு ஏம்டா வாத்தியாரா
இருக்கீயேங்றாப்புல.
செந்தில்குமாரு வக்கீலப் பத்தின நெனைப்பு விகடுவோட மனசுல ரொம்ப மோசமா
போவ ஆரம்பிச்சது. பணத்தெ பாக்குறவேம் கொணத்தப் பாக்க மாட்டாம், கொணத்தெ பாக்குறவேம்
பணத்தெ பாக்க மாட்டாம்ன்னு கெராமத்துல சொல்லுவாங்க பணம் கொணம்ன்னு மனுஷனுக்கு ரண்டு
கண்ணு வேணும்ன்னாலும் ரண்டு கண்ணும் ரண்டு திக்குல பாக்காது ஒத்த திக்குலத்தாம் பாக்கும்ங்றாப்புல.
வக்கீலு பேசுனதே வெச்சிக் கூட்டிக் கழிச்சுப் பாத்தப்போ ஒட்டுமொத்தமா இதுக்கு மேல காசியக்
கொடுக்காம இனுமே காரியம் ஆவாதுங்றது புரிஞ்சது விகடுவுக்கு பாவத்தெ பண்டுறவேம்ங்கிட்டெ
பணத்தெ கொடுக்காமப் பாவத்தெ தீத்துக்கிட முடியாதுங்றாப்புல.
*****
No comments:
Post a Comment