பணத்தைக் கொடுக்க முடியாமல் வந்த சோதனை!
செய்யு - 721
சுப்பு வாத்தியாரு வக்கீலு வர்ற சொன்ன
மூணாவது நாளு சொன்னபடிக்குப் பாலக்கரையில இருக்குற வக்கீலோட ஆபீஸ்ல மவளோட இருந்தாரு.
ஆபீஸ்ல வக்கீலுங்க யாருமே யில்ல. வக்கீலோட டிரைவர்ரா இருக்குற பையன் ஒருத்தரு மட்டுந்தாம்
ஆபீஸ்ஸ தொறந்து வெச்சிக்கிட்டு இருந்தாம். அந்தப் பையன்கிட்டெ பணத்தெ கொடுக்குறதா
வேண்டாமாங்ற சந்தேகத்துல சுப்பு வாத்தியாரு விகடுகிட்டெ போன அடிச்சித் தகவலச் சொன்னாரு.
விகடு ஒடனே வக்கீல் செந்தில்குமாருக்குப் போன அடிச்சாம். அவரு பழனிக்குத் திடீர்ன்னு
ஏற்பாடு பண்ண ஆன்மீக சுற்றலாவுல குடும்பத்தோட கெளம்பி வந்துட்டதா சொன்னாரு. இத்தென்னடா
ஆன்மீகத்தால் வந்த சோதனைன்னு, அவருகிட்டெ விகடு இந்த மாதிரிக்கிப் பணத்தோட சுப்பு
வாத்தியாரு உக்காந்திருக்கிற தகவலச் சொல்லி பணத்தெ டிரைவரு பையன்கிட்டெ கொடுத்திடலாமான்னு
கேட்டாம்.
அதுக்குச் செந்தில்குமாரு, "அவ்வேம்கிட்டெ
அவ்ளோ பணத்தெ கொடுத்துடாதீங்க சார்! ஆபீஸ்ஸ விட்டெ பணத்தோட ஓடுனாலும் ஓடிடுவாம்!
அப்புறம் பணத்தெ நீங்க கொடுத்து அத்து நம்ம கைக்கு வர்றாமப் போனதாப் போயிடும்!"ன்னாரு
பாலைப் பாத்துட்ட பூனை எலியப் பிடிக்காம ஓடிடும்ங்றாப்புல.
"நீஞ்ஞ சொன்னீங்கன்னுத்தாம் இன்னிக்கு
யப்பா, தங்காச்சி ரண்டு பேத்தையும் ஆபீஸூக்கு வர்றச் சொன்னேம். ஒஞ்ஞகிட்டெ கொடுக்காட்டியும்
பரவாயில்ல. ஆனந்தகுமாரு அய்யா அஞ்ஞ பக்கத்துலத்தானே இருப்பாங்க. போன பண்ணிச் சொன்னா
வந்து வாங்கிக்கிட மாட்டாங்களாய்யா?"ன்னாம் விகடு கொண்டாந்த பண்டத்தெ எப்படியாச்சும்
கொள்முதல் பண்டிக்குங்கங்றாப்புல.
"நீங்க சரியாத்தாம் இருக்குறீங்க.
சரியாத்தாம் கேக்கவும் செய்யுறீங்க. வீட்டுல ரொம்ப நாளா பழனிக்குப் போவணும்ன்னு சொல்லிட்டே
இருந்தாங்க. பல நாளா திட்டம் போட்டும் தள்ளிக்கிட்டே போனுச்சு. நேத்திக்கு திடீர்ன்னு
எங்க வக்கீலு குரூப்லேந்து நாலைஞ்சு பேரு குடும்பத்தோட பஸ்ஸப் பிடிச்சிக் கெளம்புறதா
திடீர்ன்னு முடிவாயிடுச்சு. பல நாளு திட்டம் போட்டு நடக்காத ஒண்ணும் இப்பிடி திடீர்ன்னு
கூடி வருதேன்னு நாமளும் இத்து தெய்வ சங்கல்பம்ன்னு எந்த யோசனையும் பண்ணாம குடும்பத்தோட
கெளம்பிட்டேம்! குடும்பத்தோட கெளம்புனதால வீட்டுலயும் யாரும் இருக்க மாட்டாங்க. வீடும்
பூட்டித்தாம் இருக்கும். யாராச்சும் வருவாங்கன்னு ஆபீஸ் மட்டுந்தாம் தொறந்து இருக்கும்."ன்னாரு
செந்தில்குமாரு கடல பருப்பு கடையில இருக்கான்னு கேட்டாக்கா துவரம் பருப்புத்தாம் இருக்குன்னு
சொல்றாப்புல.
செந்தில்குமாரு வக்கீலு தன்னெப் பத்தி மட்டும் சொல்லி, ஆனந்தகுமாரு வர்றதப்
பத்தி ஒண்ணும் சொல்லாம வுட்டதுல கேட்ட கேள்வி ஒண்ணாவும், வர்ற பதிலு வேறொண்ணாவும் இருக்கேன்னு
நெனைச்சாம் விகடு. இத்து ஒரு செருமம், பெரிய ஆளுங்ககிட்டெ பேசுறப்போ அவுங்க போக்குலயே
கேட்டுக்கிடணும் காட்டாத்து வெள்ளத்தெ அது போக்குலயே வுட்டுப்புடணும்ங்றாப்புல. இன்னிய
பொழுதுல கொடுக்க வேண்டிய பணத்தெ கொடுக்காம அதால கணக்குல வேறெந்த கோளாறும் வந்துப்புடக்
கூடாதுங்ற யோசிச்சவேம், "ஆனந்தகுமாரு அய்யாவால வர முடியாட்டியும் பரவாயில்ல. அவரோட
விலாசம் சொன்னீயன்னா அஞ்ஞப் போயாச்சாவது யப்பாகிட்டெ கொடுக்கச் சொல்றேம்!"ன்னாம்
விகடு ஒண்ணுக்கு மூணா வழியிருக்கிறப்போ எதாச்சும் ஒண்ணுல போயிடலாம்ங்றாப்புல.
"ஆனந்தகுமாரு அம்மாவுக்கு ஒடம்பு
சரியில்ல. தஞ்சாவூர்ல ரோகியிணில சேத்து அங்க முடியாம திருச்சி அப்போல்லோவுல வெச்சிருக்காங்க.
அதால அவரு அங்க இருப்பாரு! வேற நந்தகுமார்ர வர்றச் சொல்லணும்ன்னா அவரு திருவையாறு.
அவரும் இந்த ஒரு வார காலத்துக்கு நாமளும் ஆனந்தகுமாரும் இல்லாததால பல எடங்களுக்கு வழக்குக்கு
அலைய வேண்டிக் கெடக்கும். அவரு வந்து அவுங்க காத்துக் கெடந்து இப்போ அதெல்லாம் வேணாம்.
நீங்க அப்பாவையும், தங்கச்சியையும் கெளம்பச் சொல்லுங்க. கெளம்புறப்ப மூவாயிரத்த மட்டும்
அந்த டிரைவரு பையன்கிட்டெ கொடுத்துட்டுப் போவச் சொல்லுங்க. மறந்துடாதீங்க. மூவாயிரத்துக்கு
மேல கொடுத்துட வேண்டாம். ஏற்கனவே அவ்வேம் இது மாதிரி பணத்தெ வாங்கிட்டு கம்பி நீட்டிருக்காம்.
அப்புறம் அவனெ பிடிச்சிக் கொண்டாந்து பணத்தெ வாங்கி வெச்சிருக்கேம். டிரைவருக்கு ஆளு
கெடைக்க மாட்டேங்றான்னு இவனெ வெச்சிருக்கேம். இவ்வேம் டிரைவராவும் இருப்பாம், குமாஸ்தாவும்
இருப்பாம். அதால இவனெ இப்போ விட முடியல. வேற ஒரு நல்ல ஆளு கெடைச்சா இவனெ மொதல்ல கழட்டி
வுடணும். நாம்ம அவ்வேங்கிட்டெ போன பண்ணிச் சொல்லிடுறேம். மறந்துட வேணாம். மூவாயிரத்த
மட்டும் அப்பாகிட்டெ போன்ன பண்ணிக் கொடுக்கச் சொல்லுங்க. மிச்சத்த எப்போ கொடுக்கணும்
என்னாங்றதெ நாம்ம பழனி டூர்ர முடிச்சி வந்துட்டுச் சொல்றேம். பணத்தோட வந்துட்டீங்க.
ஆன்னா வாங்க முடியாத சூழ்நெலை. அதெ வாங்கிக்கலாம் வாங்க! கும்பகோணத்துக்கு வந்துட்டுத்
தகவலச் சொல்றேம். வர்லாம் வாங்க!"ன்னாரு செந்தில்குமாரு ஒழுவுற பானையில தயிர
ஊத்தி உறியில தொங்க வுட்டுப்புடாதீங்கங்றாப்புல. அவ்வளவுதாம் டீத்தண்ணிய குடிச்ச லோட்டாவ
பட்டுன்னு வைக்குறாப்புல போன வெச்சிப்புட்டாரு செந்தில்குமாரு.
பெருமாளப் பாக்கணும்ன்னு நாம்ம நெனைச்சாலும்
பெருமாளு நெனைக்காட்டி நாம்ம போற நேரமெல்லாம் கோயிலு பூட்டித்தாம் கெடக்கும்ங்றாப்புல
பணத்தெ கொடுக்க நெனைச்சாலும் அத்துப் போயி சேர விதியில்லன்னா அத்து அப்பிடியேத்தாம்
கெடக்கும்ங்றாப்புல அன்னிக்கு முழுசா காரியம் ஆவாம வக்கீல்ட்டேயிருந்து வாங்கி விகடு
சொன்னதெ கேட்டுக்கிட்டு மூவாயிரத்தெ மட்டும் டிரைவரு பையேம்கிட்டெ கொடுத்துட்டுச் சுப்பு
வாத்தியாரும் செய்யுவும் திரும்பி வந்தாங்க.
ஒரு மூணு நாள் கழிச்சித் திரும்ப செந்தில்குமாரு
போனடிச்சப்போ பழனியிலேந்து அப்பிடியே அறுபடை வீட்டையும் சுத்திப் பாக்குறதுன்னு முடிவு
பண்ணிப் போயிட்டு இருக்கறதால ஒரு வாரம் ஆவும் வீடு திரும்பனாரு. அவரு அப்போ காசியில
குறியா இருக்குறவேம் ஓசியில போறதெப் பத்தியே நெனைச்சிட்டு இருப்பாம்ங்றாப்புல இன்னொரு
யோசனையா தன்னோட அக்கெளண்ட் நம்பர்ர தர்றதாவும் அதுல பதிமூணாயிரத்து எரநூத்து ரூவாய
நெப்ட் டிரான்ஸ்பர் பண்ணிடுங்ன்னாரு. அதெ கேட்டதும் விகடு சொன்னாம், "அய்யா அவுங்களுக்கு
அந்த அளவுக்குல்லாம் வெவரம் பத்தாதுங்கய்யா! அந்தக் காலத்து ஆளுங்கய்யா. ஏடியெம்ல பணத்தெ
எடுக்கணும்ன்னா கூட ஒண்ணு நாம்ம தொணைக்குப் போவணும், யில்லன்னா தங்காச்சி தொணைக்குப்
போவணும். இந்தக் காலத்துலயும் செல்லான் பில் பண்ணித்தாம் பேங்க்ல பணத்தெ எடுக்குற
ஆளுங்கய்யா! நீஞ்ஞ வர்றதுக்குக் கொஞ்சம் நாளு ஆனாலும் பரவாயில்லங்கய்யா. நேராவே ஒஞ்ஞளப்
பாத்துக் கொடுத்துடச் சொல்றேம்ங்கய்யா! அவுங்களப் பொருத்த வரைக்கும் நாமளே பணத்தெ
நேர்ல கொண்டாந்துதாம் கொடுத்துட்டுப் போறேம்ங்கய்யா! அக்கெளண்ட்ல போட்டு வுட்டு
ஏடியெம்ல எடுங்கன்னு சொல்றதில்லங்கய்யா!" மாடியேற முடியாதவங்கள மலையேறச் சொல்லிச்
சங்கடம் பண்டக் கூடாதுங்றாப்புல.
"என்னா சார் ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியரா
இருந்துகிட்டு அப்பாவுக்கு ஒண்ணும் தெரியலன்னு சொல்லிட்டு? காலம் எப்பிடி போயிக்கிட்டு
இருக்கு? இன்னும் ஏடியெம்ல பணம் எடுக்கத் தெரியாது, நெப்ட் டிரான்ஸ்பர் பண்ணத் தெரியாதுன்னு
சொன்னா என்னா அர்த்தம்? ரொம்ப சிம்பிள் சார். பேங்க்ல பணத்தெ கொடுத்து பார்ம் பில்
பண்ணிக் கொடுத்தா போதும் சார். ரண்டு மணி நேரத்துல மூணு மணி நேரத்துல டிரான்ஸ்பர்
ஆயிடும்ன்னு சொல்லிடுவாங்க. வேல முடிஞ்சிடும். இதுக்காக பணத்த கொடுக்கணும்ன்னு அலைஞ்சிட்டு
இருக்க வேணாம். விவாகரத்துக் கேஸ்ஸூக்குக் கையெழுத்துப் போட ஒங்க தங்கச்சி மட்டும்
வந்தா கூட போதும்!"ன்னாரு செந்தில்குமாரு ஏரோ ப்ளான்ல பறந்துப் போயிட்டு இருக்குற
காலத்துல இன்னும் கால்நடையப் போல நடந்துப் போறதெப் பத்தியே பேசிட்டு இருக்கீயளேங்றாப்புல.
"என்னங்கய்யா பண்ணச் சொல்றீயே? பழைய
மொறையிலத்தாம் இன்னும் பாங்கிய அணுகுறாங்க. அப்பிடியே பழகிட்டாங்க. மாத்திக்கங்கன்னு
சொன்னா மனச்சங்கடம் படுறாங்க. செரிய்யா அக்கெளண்ட வெவரங்கள எஸ்ஸெம்மஸ் பண்ணி வுடுங்கய்யா.
நாம்ம அதெ அப்பிடியே அவுங்களுக்கு எஸ்ஸெம்மஸ் பண்ணி வுட்டு தங்காச்சிய யப்பாவுக்குத்
தொணையா போவச் சொல்லியாவது அதெ பண்ணச் சொல்றேம்!"ன்னாம் விகடு நாயி வேஷம் போடுறதுன்னு
எறங்கிட்ட பெறவு கம்பத்தெ கண்டா கால தூக்கிட்டு நிக்க முடியாதுன்னுல்லாம் சொல்ல முடியாதுங்றாப்புல.
"பழக்கப்படுத்துங்க சார்! நாட்டுல
எவ்வளவோ இம்ப்ரூவ்மெண்டு ஆயிட்டு இருக்கு. மாறிக்கணும் சார்! அப்பத்தாம் சர்வைவல்
பண்ணிக்கிட முடியும். இனி வர்ற காலத்துக்கு எல்லாமே அப்படி அட்வான்ஸாத்தாம் போவப்
போவுது. நீங்களும் அப்பைக்கப்போ பணத்தெ இந்த மொறையில அனுப்பிட்டெ இருக்கலாம். ஏம்
பணம் வர்லன்னு ஒங்கள கேக்க வேண்டிய அவசியமே இல்ல பாருங்க!"ன்னாரு செந்தில்குமாரு
பணத்துக்கு ஏத்தாப்புல மாறிட்டெ இருக்குறதுதாம் ஒலகத்துல மாறாத தத்துவம்ங்றாப்புல.
அதுக்கு மேல என்னத்தெ பண்டுறது செரித்தாம்ன்னு
அவரு சொன்னபடியே செய்யுவுக்குப் போன அடிச்சி, அவுங்ககிட்டெ இருக்குற பணத்துல பதிமூணாயிரத்து
எரநூத்த மட்டும் வக்கீல் செந்தில்குமாரோட அக்கெளண்ட் நம்பருக்கு நெப்ட் டிரான்ஸ்பர்
பண்ணச் சொல்லி, அவரு அனுப்பியிருந்த அக்கெளண்ட் வெவரத்த அப்பிடியே எஸ்ஸெம்மஸ் பண்ணி
வுட்டாம். வேணாம்ன்னு சொல்றதெ வாயிக்குள்ள திணிச்சி தின்னுன்னு சொல்றீயேங்றாப்புல வேற
வழி புரியாம அதுபடியே செய்யு சுப்பு வாத்தியார்ரக் கூட்டிட்டுப் போயி நெப்ட் டிரான்ஸ்பர்
பண்ணி வுட மூணு நாளா முயற்சிப் பண்ணியும் காரியம் ஆவல. பணம் அந்த அக்கெளண்டுக்குப்
போயிச் சேரவே மாட்டேங்குது, போயிச் சேராம பணம் திரும்ப வந்துக்கிட்டெ இருந்துச்சுது
மாயா ஜாலப் பாதைக்குள்ள போனவேம் போன வழியில திரும்ப திரும்ப திரும்பி வந்துக்கிட்டு
இருக்கிறவேம் போல.
இந்தத் தகவலப் போன் பண்ணி செந்தில்குமார்கிட்டெ
சொன்னா அதெ அவரு நம்பாம சலிச்சிக்கிட்டாப்புல ஒரு மாதிரியா கோவப்பட்டாரு. "என்னா
சார்! இந்தக் காலத்துலயும் ஒரு பேங்க் டிரான்ஸ்பர் பண்ணி பணத்தெ அனுப்பத் தெரியாம அதுக்கு
ஒரு காரணத்தெ சொல்றீங்க?"ன்னாரு செக்கு மாடு சுத்தாதுக்கு மக்குப் புண்ணாக்குத்தாம்
காரணம்ங்றாப்புல.
"தயவுபண்ணி தப்பா நெனைச்சிக்கிட வாணாம்கய்யா!
நீஞ்ஞ டூர்ல இருக்கீயே! ஆனந்தகுமாரு அய்யா அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லன்னு திருச்சிக்கு
அலைஞ்சிட்டு இருக்காங்க. நந்தகுமாரு அய்யாவயும் பாக்க முடியாதுங்றீயே. நாஞ்ஞ நீஞ்ஞ
வர்ற வரைக்கும் கொஞ்சம் காத்திருக்கேம். வந்த ஒடனே போன அடிங்க. மொத வேலையா கொண்டாந்து
கொடுத்துடச் சொல்லிடுறேம்!"ன்னாம் விகடு ஆயிரந்தாம் மெய்நிகரு சந்திப்புல பேசுனாலும்
நேர்ல பேசுறதெ போல ஆவுமாங்றாப்புல. ஆயிரம் அடி ஆழப் போயும் தண்ணி கெடைக்கலன்னா ஒரு
வெறுப்பு கலந்த கோவம் வரும்ல்லா அப்பிடி ஒரு கோவந்தாம் இந்தச் சம்பவத்தால செந்தில்குமாருக்கு.
வேவாத சொத்த வேற வழியில்லாம பொறுத்துக்கிட்டுத் திங்குறாப்புல இதெப் பத்தி நெனைச்சு
மேக்கொண்டு வேற ஒண்ணும் சொல்ல முடியாம மனசுக்குள்ள பொருமிக்கிட்டாரு செந்தில்குமாரு.
அத்தோட பணத்தெ அனுப்புற வெவகாரம் முடிஞ்சது. சுப்பு வாத்தியாருக்கும்
அதுல கொஞ்சம் மனகிலேசந்தாம். பணத்தெ கையில வெச்சிக்கிட்டு விவாகரத்தப் போடலாம்ன்னா
போட முடியாம இப்பிடி தவிக்குறாப்புல ஆவுதுன்னு. நடப்பதெல்லாம் நன்மைக்கேன்னு நெனைக்குறதெ
விட இதுல வேறென்ன நெனைக்குறதுன்னு விகடு எல்லாரையும் ஆறுதல் பண்ணிட்டு இருந்தாம் கோணைக்கா
மாணைக்கான்னு தத்தைக்கா பித்தைக்கான்னு நடக்குறவேம் அதெ ஸ்டெயின்னு சொல்லிக்கிடுறாப்புல.
விரக்திக்குப் பஞ்சமில்ல!
செய்யு பிஹெச்டி என்ட்ரன்ஸ்ல எழுதி எழுதி
தேர்வாவாத விரக்தியில இருந்தா. அவளோட பேச்சுல அடிக்கடி ஒரு விரக்திய உணர முடிஞ்சது.
விகடுகிட்டெ போன அடிச்சி அவ்வே பல நேரங்கள்ல இதால பொலம்ப ஆரம்பிச்சா.
"யண்ணே நாம்ம ஒரு தப்பான முடிவெடுத்துப்புட்டதா
தோணுதுண்ணே! ஒழுங்கா சியார்ஐ அகாடமியிலயே படிச்சி டியென்பிஸ்ஸியோ, பேங்கிங் எக்சாமோ
எழுதி ஒரு வேலைக்குப் போயிருக்கலாம் போலருக்குண்ணே. இதுல எழுதி எழுதி செலக்ட் ஆவ
மாட்டேங்றேண்ணே. நம்மள வுட வெவரம் கம்மியா இருக்குறவங்கல்லாம் கூட எழுதி எப்பிடியோ
செலக்ட் ஆயிடுறாங்கண்ணே! நமக்குத் தெரிஞ்ச யாராச்சும் கெய்ட்டு இருந்தா அவுங்க மூலமா
கூட இதுலப் பிடிச்சி பிஹெச்டி ஆயிடலாம்ங்றாங்கண்ணே!"ன்னா செய்யு உழவுக்கு மாடில்லன்னா
ஆட்டெ கட்டி உழவு பண்டுங்றாப்புல.
"நமக்கு ஆன்னா ஆவன்னா சொல்லிக் கொடுக்குற
இஞ்ஞ இருக்குற வாத்தியாருமாருகள விட்டா வேற யார்ரத் தெரியும்ங்றே? ஒம் பெரச்சனையிலயேப்
பாத்தீல்லா? ஒன்னயப் போலீஸ் ஸ்டேசன்ல வெச்சிருந்தும் நம்மாள என்னத்தெ பண்ண முடிஞ்சிது?
ஒரு பேப்பர்ல கூட அந்த சேதிய வர்ற செய்ய முடியலையே! நமக்கு நடந்தது அநியாம்ன்னு தெரிஞ்சிம்
அதுக்காகப் பொங்கக் கூட முடியலையே! நம்ம அளவு அம்புட்டுத்தாம். ஏத்தோ நம்ம பொழப்பு
யிப்பிடி ஓடிட்டு இருக்கு. ஒன்னால முடிஞ்ச வரைக்கும் எழுதிப் பாரு. கெடைச்சா கெடைக்கட்டும்.
கெடைக்காட்டியும் போவட்டும். நாட்டுல பொழைக்குறவங்க எல்லாம் பிஹெச்டி முடிச்சவங்கதானா
ன்னா? பிஹெச்டி முடிச்சிட்டும் பொழைக்க முடியாம நெறையப் பேரு இருக்காங்கத்தானே?"ன்னாம்
விகடு கடலு தண்ணிய நெனைச்சு கொளத்துத் தண்ணி அலமலக்கக் கூடாதுங்றாப்புல.
"நீயி சொல்றதெல்லாம் புரியுதுண்ணே!
அவ்வேம் ஒரு டாக்கடர்ன்னுத்தானே யிப்பிடி கொழுப்பெடுத்து ஆடுறாம். யாரையும் மதிக்காம
எதுக்கெடுத்தாலும் டாக்கடரு டாக்கடருன்ன பந்தா காட்டுறாம். அதுக்குத்தானே நாம்மளும்
அவனெப் போல வைத்தியம் பண்டுற டாக்கடரு ஆவ முடியாட்டியும் டாக்கடரேட் பண்ணி டாக்கடர்ரு
ஆவணும்ன்னு நெனைக்கிறேம். அதுக்காகத்தாம் நாம்ம வேற எந்த படிப்புலயும் மூக்கெ நொழைக்காம,
வேலைக்கான எந்தப் பரீட்சையும் எழுதாம இதுல
மட்டும் கவனத்தெ வெச்சிட்டுக் கெடக்குறேம்ண்ணே!"ன்னா மிதிக்குற யானைய திருப்பி
மிதிச்சாத்தாம் திருப்திங்றாப்புல.
"முடியுற வரைக்கும் முயற்சிப் பண்ணு.
முடியாட்டியும் அதுக்காகப் போயி மல்லுகட்டிக்கிட்டுக் கெடக்காதே. இருக்குறதெ வெச்சி
என்னத்தெ பண்ட முடியும்ன்னு பாரு!"ன்னாம் விகடு பாத்திரத்துக்கு ஏத்தாப்புல பாலை
வாங்கிக்கிடுங்றாப்புல.
"நீயி கவிதெ, கதெல்லாம் எழுதுறீயேண்ணே!
எந்நேரமும் எதாச்சும் படிச்சிக்கிட்டும், எழுதிக்கிட்டும் கெடக்குறீயே! அந்த வகையில
யாராச்சும் நம்மள பிஹெச்டி சேத்து வுடுறாப்புல தெரியாதா?"ன்னா செய்யு தெருக்கூத்துல
ராசா வேஷம் கட்டுனவேம் நெசத்துலயும் ராசாங்றதெப் போல நெனைச்சிக்கிறாப்புல.
"ஏம்டி தங்காச்சி! நாம்ம எழுதுறதப்
பத்தி நம்ம ஊர்லயே நாலு பேத்துக்குத் தெரியாது. குமுதத்துலயும், ஆனந்தவிடகன்லயும் நாலு
கவிதெ வந்துட்டுங்றதுக்காக நம்மள கூப்புட்டு ஆகா, ஓகோன்னு சொல்லி நம்ம கேக்குறதெ
செஞ்சிக் கொடுத்துடுவாங்களா? நாம்ம எழுதிப் பத்திரிகையில வந்த நாலு கவிதையெ நீயே படிச்சிருக்க
மாட்டே? பெறவு எப்பிடி நாட்டுல இருக்குற அத்தனெ பேரும் படிச்சிருப்பாங்களா? ஏதோ அதெ
நாப்பது பேரு படிச்சா பெரிசு. பத்திரிகெகாரவுங்க ஏதோ எடத்தெ நெரப்புறதுக்காக ரொம்ப
பெரிய மனசு பண்ணி அதெ போடுறாங்க. அந்த எடத்தெ நெரப்ப வேற சேதிக கெடைச்சா அதெயும் போட
மாட்டாக!"ன்னாம் விகடு கழுதெ காயிதம் திங்குதுங்றதுக்காக அதுக்கு அறிவு அதிகம்ன்னு
நெனைச்சிப்புடுறதாங்றாப்புல.
"எங்கண்ணே! பத்திரிகெ, கவிதெ படிக்கல்லாம்
நேரம் இருக்குங்றே? இருக்குற நேரம் அத்தனையையும் இந்தப் புத்தகங்களப் படிக்க நேரம்
ஒதுக்குனாத்தாம் என்ட்ரன்ஸ்ல கொஞ்சமாச்சும் பெர்பமான்ஸ் பண்ண முடியுது. அந்தப் பெர்பமான்சும்
பாத்தீன்னா பத்த மாட்டேங்குது! இதுல நீயி குமுதத்தெ படிக்கல, ஆனந்த விகடனெப் படிக்கலன்னா
நாம்ம என்னத்தெ சொல்றதுண்ணா?"ன்னா செய்யு சூத்தக் கழுவ நேரமில்லாதவேம்முக்கு
கையக் கழுவ நேரம் இருக்குமாங்றாப்புல.
"அதெத்தாம் சொல்றேம். நாட்டுல இருக்குறவங்க
அப்பிடித்தாம் அவுங்கவுங்க வேலைக்காக ஓடிட்டுக் கெடக்காங்க. இதுல நாம்ம எழுதுறதெ யாரு
படிப்பாங்கறே? என்னால எழுதாம இருக்க முடியாம நாம்ம பாட்டுக்கு எழுதிட்டுக் கெடக்குறேம்.
இப்போ பத்திரிகெக்கு அனுப்பி அனுப்பி அதுல வர்றதும் கொறைஞ்சிப் போச்சு. இப்போல்லாம்
சுத்தமாவே வாரது கெடையாது. நம்ம பேரையே எல்லாம் மறந்துப் போயிருப்பாக. ஏம் நமக்கே
நம்ம பேரு மறந்துப் போச்சுன்னாப் பாத்துக்கோயேம். நாம்மப் போயி யாருகிட்டெ சிபாரிச
கேக்கச் சொல்றே?"ன்னாம் விகடு காயிதத்துல எழுதுனது காயிலாங்கடைக்கு எடைக்குப்
போறப்போ பைசா காசுக்குப் பிரயோஜனப்படாதுங்றாப்புல.
"ல்ண்ணே! மனசு என்னவோ போல இருந்துச்சுண்ணே!
அதாங் கேட்டேம். ஒஞ் சூழ்நெல புரியுதுண்ணே!"ன்னா செய்யு கொஞ்சம் கலங்குனாப்புல,
ஒழுவுற குடிசையில இருக்குறவேம்ங்கிட்டெ போயி ஒரு மாளிகையக் கட்டித் தாரணும்ன்னா அவ்வேம்
என்னத்தெ பண்டுவாம்ங்ற மாதிரிக்கு.
"முடிஞ்ச வரைக்கும் முயற்சியப் பண்ணு.
இந்த முயற்சியில தோத்தாலும் அத்து ஜெயிச்சாப்புலத்தாம். சிறிசா முயற்சி பண்ணி அதெ
அடையுறதெ வுட, பெரிசா முயற்சிப் பண்ணி அதெ அடைய முடியாட்டிப் போனாலும் அத்து பெரமாதந்தாம்!
அப்பிடி ஒரு மனசா நீயி முயற்சிப் பண்ணணும்தானே செருமத்தப் பாக்காம தாராசுரத்துல கொண்டுப்
போயி குடி வெச்சிருக்கிறது. அந்த செருமத்தையெல்லாம் கொஞ்சம் நெனைச்சிப் பாரு. படிச்சி
ஜெயிக்கணும்ங்ற வெறி ஒன்னய அறியாமலே ஒனக்குள்ளு வாரும்!"ன்னாம் விகடு வெறி நாயி
தொரத்துறப்போ வேகமா ஓடாதவேம் யாருங்றாப்புல. இப்பிடிப் பேசி ஏதோ தன்னால முடிஞ்ச அளவுக்கு
அவ்வெ மனநெலையக் கொஞ்சம் சரி பண்ணி வுடப் பாத்தாம் விகடு. இருந்தாலும் அவனுக்கு மனசுல
அத்து ஒரு கொறையாத்தாம் இருந்துச்சு, தங்காச்சி கேட்டு அவ்வே ஆசைபட்டதெ செய்ய முடியலேன்னு.
முடிஞ்சவேம் மாறுதலப் பண்டிக் காட்டலாம், முடியாதவேம் ஆறுதலத்தாம் சொல்லிக் காட்ட முடியும்ங்றாப்புல
இருந்துச்சு அவ்வேம் நெலமெ.
மனசு முடிஞ்ச வரைக்கும் நெனைச்சதை அடைய
முயற்சிப் பண்ணிப் பாக்குது. அது முடியாத பட்சத்துல நெனைச்சதை முடிக்க யாராச்சும் ஒதவிக்கு
வர மாட்டாங்களான்னு ஏங்குது. யாராச்சும் ஒதவிக்கு வந்துட்டா இந்த ஒலகத்து மேல நம்பிக்கையா
இருக்குற மனசு, யாரும் ஒதவிக்கு வர்றதப்போ எல்லா நம்பிக்கையையும் இழந்துடுது, விரக்திய
அடைஞ்சிடுது. தங்காச்சிக்கு அப்பிடி ஒரு விரக்தி வந்துடக் கூடாதுங்ற கவலையும் விகடுவுக்கு
இருந்துச்சு. இந்த நேரத்துல வழக்கு முடிஞ்சி அதுலேந்து மீண்டு வந்தாலும் அவளுக்குப்
அத்து மனசுக்குப் பலமா இருக்கும். அப்பிடி இல்லாட்டி பிஹெச்டி அட்மிஷன் கிடைச்சாலும்
அத்து மனசுக்குப பலமா இருக்கும். வழக்கப் பொருத்த மட்டுல அத்து இப்போ முடியுறாப்புல
தெரியல. இழுத்துக்கிட்டேப் போயி எப்போ முடியும்ங்றதும் தெரியல.
செய்யுவோட மனசு பலப்படணும்ன்ன்னா பிஹெச்டி
அட்மிஷன் கெடைக்குறதுதாம் ஒரே வழி. அதுக்கான ஆளுங்க யாருன்னு விகடுவுக்கு தெரியாதது
ஒரு கொறைன்னா, அப்பிடி ஆளுங்களத் தெரிஞ்சாலும் அவுங்களப் போயிப் பாக்குறதுக்கு நேரம்
கெடைக்குமாங்றது அடுத்தக் கொறையா இருந்துச்சு. அந்த அளவுக்குப் பல நேரங்கள்ல பணத்துக்காகவும்,
வழக்குக்காகவும் அலைஞ்சிக்கிட்டு, அத்தோட வேலையையும் பாத்துக்கிட்டு, குடும்பத்தைக்
கவனிச்சிக்கிறதுக்குமே விகடுவுக்கு நேரம் போதாம இருந்துச்சு. இதுல தாராசுரம் போயிட்டு
வந்தா அன்னிக்கு சுத்தமாவே மித்த வேலைகள் எதுவும் பாக்க முடியாம ரொம்ப நெருக்கடியாவும்
இருந்துச்சு. அப்பிடியே நேரம் கெடைக்கலன்னு லீவப் போட்டுட்டு சிபாரிசுக்கான ஆட்களப்
பாத்து, அவுங்க சிபாரிசு பண்ணுறதுக்குன்னு ஏதாச்சும் பணங்காசியக் கேட்டா அதெ கொடுக்க
முடியுமாங்ற கவலையும் விகடுவுக்கு இருந்துச்சு.
வாழ்க்கையில ஜெயிக்குறதெ வுட பெரிய விசயம்,
ஜெயிக்காம போற ஒவ்வொரு மொறையும் உண்டாவுற விரக்தியைக் கடந்து போறதுதாம்ன்னு ஒரு சில
நேரங்கள்ல நெனைச்சாம் விகடு. இந்த எல்லா விசயங்களையும் யோசனையில வெச்சிக்கிட்டு விகடு
முடிவா ஒரு நாளு தங்காச்சிக்கிட்டெ போன்ல சொன்னாம், "இப்போத்தானே ஒரு சில மாசமா
அஞ்ஞப் போயி எந்த மனக்கலக்கமும் யில்லாம படிக்க ஆரம்பிச்சிருக்கே. இன்னும் சில மாசங்க
படிச்சி எழுத வேண்டிய என்ட்ரன்ஸ்ஸ எழுதிப் பாத்துக்கிட்டெ இரு. இன்னும் படிக்க படிக்க,
நெறைய என்ட்ரன்ஸ்ஸ எழுதிப் பாக்க ஒனக்கே ஒரு அனுபவம் கெடைச்சிடும். என்ட்ரன்ஸூக்கு
எப்பிடிப் படிக்கணும், அதுல எப்பிடிப் பாஸாவணுங்ற நுட்பம் தெரிஞ்சிப் போயிடும். வுடாம
படி. வுடாம என்ட்ரன்ஸ் அத்தனையைும் எழுது. ஒரு சில மாசங்கள்லயே படிச்சி ஜெயிச்சிட முடியாது.
இன்னும் சில பல மாசங்க முயற்சிப் பண்ணா ஜெயிக்காமலும் இருக்க முடியாது!"ன்னாம்
விகடு முடிஞ்சவேம் தன்னம்பிக்கையைப் பத்தில்லாம் நெனைச்சுப் பாக்கிறதில்ல, முடியாதவேம்
தன்னம்பிக்கைய நெனைக்கிறதெத் தவுர வேற வழியில்லங்றாப்புல.
"அதுக்கத்தாண்ணே நாம்ம கோர்ட்டுப்
பக்கம் கூட போவாம படிச்சிட்டெ இருக்கேம். இஞ்ஞ தாராசுரத்துக்கு வந்தது எல்லாத்தையும்
மறந்து படிக்கிறதுக்கும் வசதியாத்தாம் இருக்குது. நீயிச் சொல்றாப்புல எப்பிடியும்
இன்னும் சில மாசங்கள்ல இஞ்ஞயே யிருந்தா நம்மாளப் படிச்சி முடிச்சி எதுலாச்சும் ஒண்ணுல
தேறிட முடியும்ன்னுத்தாம் நெனைக்கிறேம்!"ன்னா செய்யுவும் கைய வுட்டுப் போனதெல்லாம்
கையி நெறைய வந்துச் சேந்துடும்ங்றாப்புல. விகடுவுக்கு தங்காச்சியோட அந்தப் பதிலு அப்போ
கொஞ்சம் ஆறுதால இருந்துச்சு. பிஹெச்டி கெடைக்குதோ இல்லையோ இப்பிடி கொஞ்சம் நம்பிக்கையோட
இருக்குறதெ போதும்ன்னு நெனைச்சாம் பஞ்சக் காலத்துல கஞ்சித் தண்ணிக் கெடைக்குறதெ போதும்ங்றாப்புல.
*****
No comments:
Post a Comment