17 Feb 2021

சில்லுண்டிப் பஞ்சாயத்து!

 சில்லுண்டிப் பஞ்சாயத்து!

செய்யு - 720

            இருந்த புள்ளையோட நகெ வரை அடவு வெச்சி அதுல கெடைச்ச இருவத்து எட்டாயிரம் பணத்தெ எடுத்துக்கிட்டு விகடு தாராசுரம் போயிக் கொடுத்துட்டு வந்தாம். அவ்வளவு பணத்தெப் பாத்ததும் சுப்பு வாத்தியாரு மொத கேள்வியா, "ஏதுடா இம்மாம் பணம்?"ங்ற கேள்வியத்தாம் கேட்டாரு ஒத்த ரூவா லாட்டரிச் சீட்டுக்கு ஒரு லட்ச ரூவா பரிசு விழுந்தாப்புல. பேத்தியாளோட நகெயெ அடவு வெச்சதா சொன்னா திட்டுவாரோன்னு நெனைச்சிக்கிட்டு சிநேகதிதன் ஒருத்தங்கிட்டெ கைமாத்தா வாங்குனதா சொல்லிச் சமாளிச்சிட்டு வந்தாம். அந்தப் பணத்தெ கொடுத்துட்டு வந்தப் பெறவுதாம் அவ்வேம் மனசுல ஒரு பாரம் எறங்குனாப்புல இருந்துச்சு. ஆறு மாசத்துக்கு வக்கீலு பீஸ்ஸப் பத்தின கவலெ இனுமே இருக்காதுன்னு நெனைச்சாம் கொம்பூதுறவனோட கொரவளையக் கடிச்சிப்புட்டா அதுக்கு மேல களத்துல நிக்குறவேம் உசுப்பேறாம கெடப்பாம்ங்றாப்புல. 

            கடமெ ஒண்ணு முடிஞ்சதுன்னு நிம்மதியா விகடு வூடு வந்து சேர்றதுக்குள்ள வக்கீல் செந்தில்குமாரு போன் அடிச்சாரு. "ஏன் சார் ஆர்குடி, திருவாரூர் கோர்ட்டுல எங்க ஆளுங்க ஆஜராவுறப்போ பணத்தெ கொடுத்து விடுறீங்களா இல்லையா? அவனுவோ பாட்டுக்கு என்னைப் போட்டு பணம் பணம்ன்னு நச்சரிக்கிறானுங்கோ! இத்து மாதிரி சில்லித்தனமான பிரச்சனைகளையெல்லாம் இழுத்து விடாதீங்க சார்! எங்களுக்கு இருக்குற பிரச்சனைகள்ல இந்த மாதிரி சில்லுண்டிப் பஞ்சாயத்தையெல்லாம் பண்ண விடாதீங்க."ன்னாரு செந்தில்குமாரு சென்னாகுன்னியாட்டம் சலம்பல் பண்ணிட்டு அலம்பல் பண்ணக் கூடாதுங்றாப்புல.

            "மன்னிச்சுக்கணும்ங்கய்யா! எஞ்ஞளால வழக்கு நடக்குறப்போ வந்து ஆஜராவ முடியலங்க்யயா. நாம்ம பள்ளியோடத்துல லீவப் போட முடியாத காரணத்தால வர்ற முடியலங்கய்யா. அவ்வே தங்காச்சி பிஹெச்டி என்ட்ரன்ஸூக்குப் படிச்சிட்டு இருக்குறதால அவளோட முழு கவனமும் அதுல இருக்குறதால அவளாலயும் வர்ற முடியலங்கய்யா. அவளெ என்ட்ரன்ஸ், கோச்சிங்க்ன்னு யப்பாவும் அலைச்சிக்கிட்டு அலைஞ்சிட்டு இருக்கிறதால யாரும் வர்ற முடியாத சூழ்நெலைங்கய்யா!"ன்னாம் விகடு ஆத்துல ஒரு காலும் சேத்துல ஒரு காலும் வெச்சிட்டதால அதுக்கு இடையில வைக்க மூணாவது ஒரு காலு இல்லங்றாப்புல.

            "ஒரு வாய்தா ரண்டு வாய்தாவுக்கு வர்ற முடியலன்னா பராவயில்ல சார்! ஏகப்பட்ட வாய்தாவுக்கு நீங்க யாருமே வாரல. நாங்க அனுப்புற ஆளுங்களும் கும்பகோணத்துலேந்து பெட்ரோல் போட்டுக்கிட்டுதானே சார் வண்டியில வர்றாங்க. அந்த பெட்ரோலுக்குக் கூட காசு கொடுக்கலன்னா நெனைச்சிப் பாருங்க? நீங்க ஒரு வாத்தியர்தானே சார்! அதெயெல்லாம் கொஞ்சம் கூட யோசிச்சுப் பாக்க மாட்டீங்களா? கொஞ்சமாச்சும் காமன் சென்ஸ் வேணும் சார்! என்னவோ வழக்குக்கும் ஒங்களுக்கும் சம்பந்தமே இல்லாததப் போல நடந்துக்குறீங்களே சார்! இந்த வழக்கு நீங்க போட்டது. அதெ நாங்க நடத்தித்தாம் கொடுக்குறோம். அப்பப்போ வந்து பாக்கணும் சார் நீங்க! கட்டுகள ஒப்படைச்சதிலேந்து ஒங்களுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாததப் போல நடந்துக்குறீங்களே சார்? நமக்கு ஒண்ணும் புரியவே மாட்டேங்குது ஏம் இப்பிடி நடந்துக்குறீங்கன்னு?"ன்னாரு செந்தில்குமாரு கட்டண கழிவறைக்குள்ளப் போயிட்டுக் காசு கொடுக்காம வெளிக்கிப் போறீங்களேங்றாப்புல.

            "அய்யா ஒஞ்ஞகிட்டெ மன்னிப்பத் தவுர வேற எதையும் நம்மாள கேக்க முடிலங்கய்யா! சூழ்நெல அப்பிடி அமைஞ்சிப் போச்சுச்சுங்க. எஞ்ஞளால யாரும் செருமப்படுறதே ஏத்துக்கிட முடியாது. இப்பத்தாம் நாம்ம தாராசுரத்துல இருக்குற யப்பாகிட்டெ பணத்தெ கொடுத்துட்டு வந்தேம். நாஞ்ஞ அப்போதைக்கப்போ வந்து கொடுக்கலன்னாலும் மொத்தமா சேத்துக் கொடுத்துப்புடுவேம்கய்யா! நாம்ம யப்பாவ ஆபீஸ்ல வந்துப் பாக்கச் சொல்றேம்ங்கய்யா. பணத்தொட அவுங்க வந்து இதுவரைக்கும் கொடுக்க வேண்டிய பணத்தெ அத்தனையும் ஒஞ்ஞளுக்கு ஒரே மொறையில கொடுத்துத் தீத்துப்புடுவாங்கய்யா!"ன்னாம் விகடு சின்ன சின்னதா செய்வினை செய்யுறதா நெனைச்சிப்புட வாணாம், கலியாணத்துல சேத்து வெச்சு மொத்தமா செஞ்சிப்புடுவேம்ங்றாப்புல.

            "பணத்துக்காக அடிக்கிறேம்ன்னு நெனைச்சுக்காதீங்க சார்! நாம்ம சில விசயங்கள்ல ரொம்ப சரியா இருப்பேம். எங்கிட்ட வேலை பாக்குற டிரைவர்ன்னாலும் செரித்தாம், குமாஸ்தான்னாலும் செரித்தாம் மாசம் பொறந்துச்சுன்னா பணத்தெ தூக்கி எறிஞ்சிட்டுத்தாம் வேலைப் பார்ப்பேம். அதனால யாரும் எங்கிட்டெ பணம்ன்னு வந்து இதுவரைக்கும் இந்த நாள் வரைக்கும் நின்னதில்ல. திடுதிப்புன்னு நாலஞ்சு நாளா அவனுங்கப் பாட்டுக்கு வந்து நின்னுகிட்டு பணம் பணம்ன்னதுல டென்சன் ஆயிட்டேன். அந்த டென்சன்லத்தாம் ஒங்களுக்குப் போனப் போட்டுப் பேசுறாப்புல ஆயிடுச்சு!"ன்னாரு செந்தில்குமாரு வேலை செய்யுறவனுக்குக் கூலியக் கொடுத்துட்டா அவ்வேம் ஏம் காலைத் தூக்கிட்டு ஒதைக்க வர்றாம்ங்றாப்புல.

            "தப்பு நடந்ததுக்கு மறுக்கா மறுக்கா மன்னிக்கணும்ங்கய்யா. எஞ்ஞளுக்கும் இடையில கொஞ்சம் பணக் கஷ்டமாப் போயிடுச்சு. நேத்திக்குத்தாம் பணத்தெ தெரட்ட முடிஞ்சிது. அதெ தெரட்டிக் கொண்டாந்து கொடுத்துப்புட்டுத்தாம் யிப்போ வூடு திரும்பிக்கிட்டு இருக்கேம். இன்னிக்கு ஒரு நாளு பொறுத்துக்குங்க. ராத்திரியாயிடுச்சு. நாம்ம யப்பாவுக்கு போன் பண்ணி தகவலச் சொல்லி ஒஞ்ஞள எப்பிடியும் நாளைக்கு வந்து ஆபீஸ்லயே நேர்ல பாக்கச் சொல்றேம்!"ன்னாம் விகடு தண்ணி வத்துற காலமா பாத்து கோடைக்காலமும் வந்துட்டுங்றாப்புல.

            "அந்த பழைய வக்கீல் இருந்தப்பல்லாம் வழக்குல ஒங்க தங்கச்சி ரொம்ப சரியா ஆஜரானதாவும், நாங்க இந்த வழக்குல வந்தப் பெறவுதாம் சரியா ஆஜராவுறது இல்லேங்ற மாதிரியும் கோர்ட்டுல பேசிக்கிறதா நம்ம ஆளுங்க வந்து சொல்றாங்களே சார்! என்னத்தத்தாம் வாய்தா மேல வாய்தாவா ஆனாலும் நாம்ம ஆஜர் ஆவுறது முக்கியம். அப்பிடி ஆஜர் ஆயி பேசிட்டாவே போதும், அதாவது இந்த மொறை பணம் இல்ல, அடுத்த மொறை கொடுத்துறேன்னு சொல்லிட்டா விசயம் முடிஞ்சிடுச்சு இல்லீங்களா? நாமளும் பாத்தீங்கன்னா இப்பிடி ஒங்ககிட்டெப் போனப் போட்டு பேச வேண்டிய அவசியம் இல்ல பாருங்க!"ன்னாரு செந்தில்குமாரு ஓட்டுறவேம் சரியா ஓட்டுனா குதிரெ ஏம் சண்டித்தனம் பண்டப் போறதுங்றாப்புல.

            "நீஞ்ஞ பேசுனதெ ஒண்ணுத்தையும் நாம்ம தப்பா நெனைச்சுக்கலங்கய்யா! ஒஞ்ஞ ஒழைப்புக்கேத்த கூலியக் கேக்குறீயே! அதெ சரியான நேரத்துல நாஞ்ஞ கொடுக்க வேண்டியது எஞ்ஞ கடமெ!"ன்னாம் விகடு எடுத்துக் கட்டி வேலையப் பாத்தவேம் கொடுங்கய்யா காசியன்னு கேக்குறதுல்ல தப்பில்லங்றாப்புல.

            "நாங்க வக்கீலுங்க எல்லா தேதியும் வந்து ஆஜராயிட்டு இருக்க மாட்டோம். கேஸ் டிரையலுக்கு வர்றப்பத்தாம் வருவோம். மித்த நேரங்கள்ல எங்களுக்குக் கிடைக்குற ஆளுங்களைத்தாம் தேதி குறிச்சிட்டு வர்ற அனுப்புவோம். நாங்க வந்தா கூட பணம் கொடுக்காததப் பத்தி பெரிசா கண்டுக்கிட மாட்டோம்ன்னு வெச்சுக்குங்களேம். நாங்க அனுப்புற ஆளுங்க அப்பப்போ பணத்தெ வாங்கி குடும்பம் நடத்துற ஆளுங்க. அவனுங்க அப்பிடித்தாம் காத சொரிஞ்சிக்கிட்டு வந்து நிப்பானுங்க!"ன்னாரு செந்தில்குமாரு சாமியக் கும்புடுறதுக்கு மின்னாடி பூசாரிய கும்புட்டுக்கோங்றாப்புல.

            "நமக்குப் புரியுதுங்கய்யா!"ன்னாம் விகடு பரிவாரங்கள கவனிக்காம பரிவட்டம் கட்டிக்க முடியாதுங்றாப்புல.

            "அப்புறம் பாத்தீங்கன்னா... தேதி வாரியா..."ன்னு ஒவ்வொரு தேதியா சொல்லி எந்தெந்த தேதியில எந்தெந்த கோர்ட்டுல அவரோட ஆளுங்க ஆஜராயிருக்கிறாங்கற சேதியச் சொல்லி பணத்துக்குக் கூட்டுப் புள்ளிப் போட்டு ஆறராயிரத்து முந்நூத்து ரூவாய்க்குக் கணக்குச் சொன்னாரு ஊரான் வூட்டு மளிகெ சாமானுக்குப் பட்டியல் போடுறப்போ தன்னோட வூட்டுக்கும் சேத்து நாலணா சூடத்துக்கும் எட்டணா சாம்புராணிக்கும் ஒண்ணு விடாம கணக்குப் போடுறாப்புல.

            "அய்யா ஒஞ்ஞள நம்பாம யில்ல. நீஞ்ஞ தொகைய மட்டும் சொன்னா போதும் நாஞ்ஞ கொண்டாந்து கொடுத்துடுவேம்ங்கய்யா!"ன்னாம் விகடு ஓலையெழுதிச் சொன்னாத்தாம் மாமன்கார்ரேம் சடங்கு சுத்த வருவோளாங்றாப்புல.

            "அதெல்லாம் மொறை கெடையாது. கணக்குன்னா கணக்குதாம் சரியா இருக்கணும்."ன்னாரு செந்தில்குமாரு ரண்டையும் ரண்டையும் கூட்டி எட்டுன்னு போட முடியாதுங்றாப்புல.

            "அய்யா அந்த ஆறாயிரத்து முந்நூத்தோட விவாகரத்து வழக்குக்கான பத்தாயிரத்து ரூவாயயும் கொண்டாந்து யப்பாகிட்டெ கொடுத்துடச் சொல்றேம். அதெயும் சீக்கிரமா போட்டு வுட்டுட்டீங்கன்னா ரொம்ப ஒதவியா போவும்ங்கய்யா!"ன்னாம் விகடு வழுக்கிட்டுப் போறவனுக்கு ஒரு கையி கொடுத்தா ஆயிரம் கையி கொடுத்ததுக்குச் சமம்ங்றாப்புல.

            "அப்பிடியா! பணத்தெ ஒண்ணா கொண்டு வர்றீங்கன்னு சொல்றீங்களா? அப்பிடின்னா அதுக்கான காகிதங்கள நாங்க தயாரு பண்ணியாவணும். ஒங்க தங்கச்சி வேற முக்கியமான பரீட்சைக்குப் படிச்சிட்டு இருக்குறதா சொல்றீங்க இல்லையா? அவுங்க வேற வந்து கையெழுத்துப் போடணும். எல்லாத்தையும் ஒண்ணா சேத்து வெச்சிக்கிடலாம். நீங்க ஒண்ணு பண்ணுங்க. நாளைக்கு வர்றச் சொல்ல வேணாம். இன்னிலேந்து மூணு நாளு தள்ளி அப்பாவையும், தங்கச்சியையும் சேர்த்தே வரச் சொல்லுங்க. அப்பிடி வந்தாங்கன்னா பணத்தையும் கொடுத்துட்டுக் காகிதத்துல கையெழுத்தையும் போட்டுட்டு ஒரே வேலையா முடிச்சிட்டுப் போயிடலாம்!"ன்னாரு செந்தில்குமாரு பணம்ன்னு சொன்னா போதும் மனுஷனோட கொணம் கொரங்கப் போல தாவும்ங்றாப்புல.

            "அதுவும் சரிதாங்கய்யா! அப்பிடியே நாம்ம போன அடிச்சிச் சொல்லிடுறேம். ரொம்ப எஞ்ஞள அலைய வுடாம நீஞ்ஞ பண்ணுற இந்த ஒதவிக்கு ரொம்ப நன்றிங்கய்யா!"ன்னாம் விகடு கனாவுல கண்டதெப் போல நெனைவுலயும் தங்கக்காசு கெடைச்சாப்புல.

            "இதுல என்ன சார் இருக்கு? நீங்க ஒங்களோட சூழ்நிலையச் சொல்றீங்க. ஏத்துக்கிறாப்புலத்தாம் இருக்கு. அதுக்குத் தகுந்தாப்புல கொஞ்சம் தோது பண்ணி விடுறேம். சரியா மூணாவது நாள் வரச் சொல்லிடுங்க. இங்க ஆபீஸ்ல எல்லாம் தயாரா இருக்கும்."ன்னாரு செந்தில்குமாரு கையில காசோட போனா பையில பண்டம் தயாரா இருக்கும்ங்றாப்புல.

            "பெறவு இன்னொரு விசயம்ங்கய்யா! நாஞ்ஞ கோர்ட்டுக்கு ஆஜராயி கொடுக்க வேண்டிய பணத்தெ கொடுக்கலன்னா தப்பா நெனைச்சிக்கிட வேணாம். நீஞ்ஞ தேதியக் குறிச்சி வெச்சுக்குங்க. நாஞ்ஞ மாசத்துக்கொரு தவா போன் பண்ணிக் கேட்டுக்கிட்டு மொத்தமாவே கொண்டாந்து கொடுத்துப்புடுறேம்!"ன்னாம் விகடு விருந்துல சாப்புடாம வுட்டதையெல்லாம் சமைச்சிக் கொண்டாந்து வூடு தேடிக் கொண்டாந்து கொடுத்துப்புடுறேம்ங்றாப்புல.

            "அதனால ஒண்ணுமில்லங்க சார்! நீங்க எப்படி வேணாலும் பணத்தெ கொடுக்கலாம். அந்த மொறையப் பத்தி எங்ககிட்டெ கலந்துக்கிட்டு இருந்தீங்கன்னா எந்தப் பிரச்சனையும் வந்திருக்கப் போறதில்ல!"ன்னாரு செந்தில்குமாரு மொறைப்பாட்டெ தெரிஞ்சுக்கிட்டா கொறைப்பாடு வரப் போறதில்லங்றாப்புல.

            "நாஞ்ஞ இந்த மொறையிலயே கொடுத்திடுறேம்!"ன்னாம் விகடு போறப்போ வண்டி மாட்டுக்கு வழியக் காட்ட வேண்டியதில்லங்றாப்புல.

            "சரி! நீங்க சொன்னபடி அப்பாவையும், தங்கச்சியையும் அனுப்பி வையுங்க. பாத்துக்கிடலாம்!"ன்னு சொல்லிட்டுப் போன வெச்சாரு செந்தில்குமாரு தவணை தப்புன்னா அதுக்கும் சேத்து வட்டியக் கட்டுறேம்ன்னு சொல்றவங்கிட்டெ வேறெதெயும் கேக்கக் கூடாதுங்றாப்புல.

            விகடு அப்போ எருக்காட்டூருக்குப் பக்கத்துல டிவியெஸ் பிப்டியில போயிட்டு இருந்தாம். போன் வந்ததும் வண்டிய நிறுத்திப்புட்டு பேசிட்டு நின்னுட்டு இருந்தாம். பொழுது நல்லா இப்போ இருட்டி இருந்துச்சு. வூட்டுக்குப் போறதெ விட இந்த விசயத்தெ மொதல்ல சொல்றதுதாம் முக்கியம்ன்னு சுப்பு வாத்தியாருக்கு ஒடனே போன அடிச்சிச் சொன்னாம்.

            "இந்த ஒண்ணரை மாசத்துல நெறைய தேதிங்க ஆயிருக்குப்பா கோர்ட்டுல. அதுக்கு நெறைய ஆஜராயி பணம் கட்ட வேண்டியது இருக்குப் போலருக்கேப்பா! வக்கீலு அத்துச் சம்பந்தமா போன அடிச்சாரு!"ன்னாம் விகடு நாளு தப்புனா கடனெ கொடுத்தவேம் நடு வூட்டுக்கு வந்து நின்னு நடுரோட்டுக்குக் கேக்குறாப்புல சத்தம் போடுவாம்ங்றாப்புல.

            "அதெப்பிடிடாம்பீ இருக்க முடியும்? சிலதுக்கு ஒந் தங்காச்சிப் போவலன்னாலும் நாம்மப் போயி அவுங்க சொன்னபடிக்கு எழுநூத்து ரூவாய பென்சன் காசிலேந்து எடுத்துக் கொடுத்துட்டுத்தானேடா வந்தேம்! நீயிச் சொல்ற அளவுக்கு பணம்லாம் நெறைய கொடுக்குறாப்புல இருக்காதேடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு கட்ட கட்ட கடன் கூடுறதெ கேக்குறப்போ ஆச்சரியமா இருக்குங்றாப்புல.

            "என்னவோப்பா வக்கீலு போன அடிச்சித் தேதி வாரியா சொல்லி ஆறாயிரத்து முந்நூத்து ரூவான்னாருப்பா! நாம்மத்தாம் அந்தப் பணத்தோட வெவகாரத்து வழக்குக்கு உண்டான பத்தாயிரத்தையும் சேத்து நாளைக்கே கொண்டு வர்றச் சொல்றேம்ன்னு சொன்னேம்ப்பா! அதுக்குக் கூட அவுங்க நாளைக்கு வாணாம். மூணாவது நாளு வந்தா போதும்ன்னாங்கப்பா!"ன்னாம் விகடு அடிச்சிட்டுப் போற வெள்ளத்தெ அளந்துப் பாத்துக்கிட்டு இருக்க முடியாதுங்றாப்புல.

            "ரண்டு தேதியோ மூணு தேதியோத்தாம் நாம்ம போவ முடியல. ஒந் தங்காச்சிக்கு திருச்சியில என்ட்ரன்ஸ்ன்னு சொன்னதால அவளெ அழைச்சிட்டுப் போவ வேண்டியதாப் போயிடுச்சு. மித்த எல்லா தேதிக்கும் நாம்ம போயிட்டுதாம் இருந்தேம். நமக்கென்ன இஞ்ஞ வேல? ஒந் தங்காச்சிய தஞ்சாவூரு, திருச்சின்னு அழைச்சிட்டுப் போனாத்தாம் வெளியில வேல. அப்போ அந்தச் சமயத்துலப் போவாம இருக்குறதுதாம். அப்பிடிப் போவாத தேதிக்கும் பெரும்பாலும் சேத்து பணத்தெ கொடுத்திருக்கேம்டாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சிரிச்சுக்கிட்டுத் தண்டம் கட்டுனதுக்கு இப்போ அழுதுகிட்டுத் தண்டம் கட்டணுமாங்றாப்புல. விகடுவுக்கு இப்போ புதுக் கொழப்பமா போயிடுச்சு. எத்தனெ தேதிக்கு அப்பங்காரரு போயிப் பணத்தெ கொடுத்திருக்காரு, எத்தனெ தேதிக்குப் போயி பணத்தெ கொடுக்காம இருந்திருக்காருங்றதெ எப்பிடிக் கண்டுபிடிக்கிறதுன்னு புரியல.

            "என்னடாம்பீ ஒண்ணுமே பேயாம இருக்கீயே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு நெசத்தெ சொன்னா நெலைகுத்தி நிக்குறீயேங்றாப்புல.

            "எஞ்ஞயோ தப்பு நடக்குதுப்பா! நமக்குப் புரியலப்பா! வழக்க நடத்துற வக்கீல்கிட்டெப் போயி அவரு ஒரு தொகையச் சொன்னப் பெறவு மறுக்கா கணக்கெ கேக்குறது நமக்கு உசிதமாப் படல. அவரு கேக்கறதெ இப்போதைக்குக் கொடுத்துட்டு நாம்ம ஒரு நோட்டப் போட்டு இனுமே குறிச்சிக்கிறதுதாங் செரி!"ன்னாம் விகடு ஏமாந்துப் போனதெ கணக்கெடுத்து ஆவப் போறது ஒண்ணுமில்லே, இனுமே ஏமாறாம இருக்க, இருக்குறதெ கணக்கெடுத்துக்கிடணும்ங்றாப்புல.

            "அதுக்காக ஆறாயிரத்து ரூவாயக் கணக்கு வழக்கில்லாம கொடுக்க முடியுமாடாம்பீ? நாம்ம ஒண்ணும் அவுங்கள ஏமாத்த வாணாம். நாம்ம ஏமாறாம இருக்கணுமா இல்லியா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒடைப்புல போவுதுங்றதுக்காக உள்ளதெ அள்ளி நாமளே போட்டுட முடியுமாங்றாப்புல.

            "அஞ்சு வழக்குளா இருக்கு. அதுல எந்த வழக்குக்கு எதுல ஆஜரானதப் பத்திச் சொல்றாங்கங்றது தெரியாம நாம்ம பேசிட முடியாதுப்பா. நீஞ்ஞ இந்த மொறை மட்டும் அவுங்க சொன்னபடிக்குக் கொடுத்துப்புடுங்க. நாம்ம இதுல கணக்கப் பாக்குறதெ வெச்சி வழக்குல அவுங்க எதாச்சும் வேற வெதமா கணக்குப் பாத்துடக் கூடாதுல்லப்பா. இப்பிடித்தாம் பழைய வக்கீலு பணம்லாம் செட்டில்மெண்டப்பன்னு சொல்லி இடை இடையில பணத்தையும் வாங்கிட்டு, அவுனுவோகிட்டோ வெல போயிட்டுக் கெடந்தாவோ. இந்த வக்கீலு நம்மகிட்டெயிந்து இம்மாம் பணம் வேணும்ன்னுத்தானே கேக்குறாவோ. அதுல கணக்குல கொஞ்சம் கொழப்பம் இருக்கு. அதெ பெரிசு பண்ண வாணாம். இனுமே கணக்கெ சரியா வைச்சிப்போம். அதாங் நல்லது!"ன்னாம் விகடு எரிஞ்சுப் போன பெறவு கரியக் கணக்குப் பண்ணி ஆவப் போறது என்னாங்றாப்புல.

            "செரிடாம்பீ! பண விசயத்துல கொஞ்சம் சரியாத்தாம் இருந்தாவணும் போலருக்கு. நாமளும் இனுமே என்னென்ன தேதிக்குப் பணத்தெ கொடுத்தேம்ங்றதெ குறிச்சி வெச்சிக்கிடணும். அப்பத்தாம் பேசுறப்ப அதெச் சொல்லி பேச முடியும். நாம்மத்தாம் அப்பப்போ பணத்தெ கொடுத்து முடியுதேன்னு எதையும் குறிச்சி வெச்சிக்காம இருந்துட்டேம்! நாம்ம நீயி சொல்றபடி தங்காச்சிய அழைச்சிக்கிட்டுப் போயிப் பாத்து பணத்தெ‍ கொடுத்துட்டு வந்திடுறேம். நாம்ம அத்துச் சம்மந்தமா மேக்கொண்டு எந்தக் கணக்கையும் கேக்கல. இனுமே எந்தெந்த தேதியில வர்றதுங்றதெ அப்போகைப்போ அவுங்க ஆபீசுக்குப் போயாச்சும் பாத்து வெசாரிச்சி பணத்தெ ஒடனுக்குடன் கொடுத்துடுறேம்டாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சூட்டோட சூடா வளைச்சிப்புட்டா மல்லுகட்டிக்கிட்டு நிக்க வாணாங்றாப்புல.

            "நாம்ம கூட மாசத்துக்கு ஒரு தவா வந்துப் பாத்து பணத்தெ கொடுத்துப்புடுறதா சொன்னேம்ப்பா!"ன்னாம் விகடு மொறை வெச்சு கணக்குப் பாத்து கதெய முடிச்சா அம்புட்டுச் சுலுவா ஏமாத்திப்புட முடியாதுங்றாப்புல.

            "அந்தக் கதெயே வாணாம். எப்போ இந்தக் கதிக்கு வந்துச்சோ இனுமே அப்பைக்கப்போ பணத்தெ கொடுத்து முடிச்சிடணும்! மாச கணக்கெல்லாம் வெச்சு வளத்த கூடாது. செரிடாம்பீ! நீயி வூட்டுக்குப் போயிட்டியா?"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒத்த அடியில அடிக்க வேண்டிய பாம்பெ ஒம்போது அடியில அடிச்சு வுட்டுப்புடக் கூடாதுங்றாப்புல. 

            "யில்லப்பா! எருக்காட்டூர்கிட்டெ வந்துட்டு இருந்தேம். வக்கீலு போன அடிச்சார்ன்னு நின்னு பேசுனேம்ப்பா! அப்பிடியே ஒஞ்ஞளுக்கு அடிச்சித் தகவலச் சொன்னேம்ப்பா! இனுமே கெளம்பித்தாம் வூட்டுக்குப் போவணும்ப்பா!"ன்னாம் விகடு ஓடி வர்றத் தண்ணி பள்ளத்தெ கண்டா தங்கித்தாம் மேலெழும்பிப் போவ முடியும்ங்றாப்புல.

            "மொதல்ல வூட்டுக்குப் போடாம்பீ! இதெ வூட்டுக்கு வந்து கூட சொல்லிருக்கலாம். அப்பிடி ன்னாடா தலப் போவுற சமாச்சாரமா இத்து? அவ்வேம் கேட்டாம்ன்னுத்தாம் பணத்தெ கொட்டிக் கொட்டிக் கொடுத்துட்டு அழுதுட்டு இருக்கேமே? நாம்ம ன்னா கொடுக்கமாலயா போயிடப் போறேம்? அஞ்ஞ வேற பொண்டுவ என்னவோ ஏதுவோன்னு நெனைச்சிக்கிட்டுக் காத்திட்டு இருக்கும்டாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு தப்பு பண்டவேம்ல்லாம் நெஞ்செ நிமுத்தி நடக்கிறப்போ தப்பு பண்ணாதவேம் ஏம் தலைகுனிஞ்சு நடக்கணும்ங்றாப்புல. விகடு வேக வேகமா வண்டிய திரும்ப ஸ்டார்ட் பண்ணிக்கிட்டு மங்கலா எரிஞ்சிட்டு இருந்த லைட் வெளிச்சத்துல வூட்ட நோக்கிப் போயிக்கிட்டு இருந்தாம் வூட்டுப்பேறுங்றது எப்பவும் கொஞ்சம் இழுத்துக்கிட்டுத்தாம் போவும்ங்றாப்புல.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...