சட்டப்பூர்வமா எதிர் கொள்ளலாம்!
செய்யு - 719
ஆனந்தகுமாரு விகடுவுக்குப் போன் அடிச்சிப்
பேசுனாரு. "பாலாமணிகிட்டெப் பேசுனதுல அவ்வேம் எதுவா இருந்தாலும் வக்கீல்கிட்டெ
பேசிக்குங்கன்னுட்டாம். வக்கீல் கங்காதரன்கிட்டெ பேசுனதுல அவ்வேம் சமாதானத்துக்கு ஒத்து
வர்ற மாட்டேங்றாம். அதால வேற வழியில்ல. நாம்ம கேஸ்ஸ நடத்துறாப்புலத்தாம் சுட்சுவேஷன்
இருக்கு. நாம்ம வன்கொடுமெ வழக்க மேற்கொண்டு போறதுல தடங்கல இருக்குற டிரான்ஸ்பர்
ஓப்பி கேஸ்ஸ வித்டிரா பண்ணிடுவோம். அத்தோட ஹெச்செம்ஓப்பி கேஸூக்குப் போட்டிருக்கிற
டிரான்ஸ்பர் ஓப்பியும் வித்டிரா பண்ணிடுவோம். அந்த கேஸ்ஸப் பொருத்த வரையில ஹெச்செம்ஓப்பிய
மேல எடுக்காத வழிக்கு விவகாரத்தெ வழக்கப் போட்டா அந்த வழக்கால ஒங்களுக்கு எந்தப் பிரச்சனையும்
இல்ல. திருவாரூரு சம்பந்தப்பட்ட கேஸ்களுக்கு நந்தகுமாரு ஆஜராயிட்டு இருக்கிறார். ஜீவனாம்ச
அப்பீலுக்கும் அவருதாம் ஆஜராயிட்டு இருக்கார். இப்போ பிரச்சனை என்னான்னா ஒங்க தங்கச்சி
வக்கீல் கங்காதரன செருப்பால அடிச்சது ஆர்குடி டவுன் போலீஸ் ஸ்டேசன்லேந்து எப்.ஐ.ஆர்.
போட்டு அது மூலமா கோர்ட்டுல கேஸ்ஸா ஆவப் போவுது! அதுக்கு என்னா பண்ணுறது? அதெ சமாதானமா
முடிக்கிறதா? வழக்க நடத்துறதா?"ன்னாரு ஆனந்தகுமாரு கண்ணுல பட்ட பாம்பெ அடிக்கிறதா,
கண்டுக்கிடாம வுட்டுப்புடுறதாங்றாப்புல.
"எப்பிடி செஞ்சா சரியா இருக்கும்?"ன்னு
கேட்டாம் விகடு ஒவ்வொரு பாம்பெயும் அடிக்கிறதுக்கு வெவ்வேறு மொறை இருக்காங்றாப்புல.
"வக்கீல் கங்காதரன்கிட்டெ நாம்ம மொத
மொதலா ஆர்குடி சப் கோர்ட்டுக்கு வக்காலத்து போட போனப்பவே பேசுனேம். அவனோட பேச்சே
சரியில்ல. அவ்வேம் ஒத்து வர்ற ஆளு மாதிரி தெரியல. சமாதானமா கேஸ்ஸ முடிச்சிபோம்ன்னு
சொன்னதுக்கு, அவ்வேம் ரொம்ப பாதிக்கப்பட்டவேம் மாதிரி பேசுனாம். ஒரு வழக்குல பெட்டிஷனர்,
ரெஸ்பாண்டண்ட்டுன்னு ரண்டு பேர்ல ஒருத்தருதாம் பாதிக்கபபட்டவங்களா இருப்பாங்க. ஒரு
வக்கீல் பாதிக்கப்பட்டதா சொல்றதெ கேக்குறது நமக்கே இந்த வழக்குல புதுசாம். அவ்வேம்
ஒங்க தங்கச்சி செருப்பால அடிச்சதுல ரொம்ப காண்டா இருக்காம். இந்த வழக்க அவ்வேம் பாலாமணியோட
வழக்காவேப் பாக்கல. அவ்வேம் பேசுனதெ வெச்சி சொல்றேம், இந்த வழக்குக அத்தனையையும் தன்னோட
வழக்குகளப் போல பேசுறாம். இப்பிடி ஒரு வழக்குல எந்த வக்கீலும் கரைஞ்சிப் போக மாட்டாங்க.
வழக்க தங்களுக்கு வெளியில வெச்சிப் பாத்தாத்தாம் ஒரு வழக்குல ஒரு வக்கீலால சரியா முடிவெடுத்து
வாதாட முடியும். வழக்குக்குள்ள தன்னையும் ஒரு ஆளப் போல பாவிக்க ஆரம்பிச்சா வக்கீலோட
வாதத்துல வாதமே இருக்காது, வெறித்தனம்தாம் இருக்கும். அப்பிடி ஒரு வெறித்தனத்தெத்தாம்
கங்காதரனோட பேச்சுல பாக்குறேம்! இப்போ நாம்ம என்ன சொல்ல வர்றேங்றது ஒங்களுக்கு ஓரளவுக்குப்
புரியும்ன்னு நெனைக்கிறேம்!"ன்னாரு ஆனந்தகுமாரு சினிமா படத்துல காட்டுறதெப் போல
அடிபட்ட பாம்பு பழி வாங்க வர்றாம இருக்காதுங்றாப்புல.
"இப்போ இதுக்கு என்னங்கய்யா பண்ணுறது?"ன்னாம்
விகடு பரிகார பூசெ எதாச்சும் பண்ணி சரி பண்டிப்புடலாமாங்றாப்புல.
"இதெ அப்பிடியே விட்டா கேஸ் கோர்ட்டுல
பைலாயி ஒங்களுக்கு சம்மன் வரும். அந்த கேஸ்ஸூ ரண்டு மூணு வருசம் இழுத்தடிக்கும். சாதாரண
பெட்டிக் கேஸ்தாம். அதெ விட்டுட்டு அவ்வேங்கிட்டெ சமாதானம் பேசுனம்ன்னா அவ்வேம் கொஞ்சம்
எகிறத்தாம் செய்வாம்! இதெ சட்டப்பூர்வமா சந்திக்கிறதுன்னாலும் சந்திக்கலாம். இல்லன்னா
அவ்வேம் கால்ல விழுந்துத்தாம் இதெ சந்திக்கிற மாதிரி இருக்க முடியும். அப்பிடிங்றப்போ
அவ்வேம் சொல்ற மாதிரி நாம்ம செய்யுறப்பால இருக்கும்!"ன்னாரு ஆனந்தகுமாரு நாமளா
போயி சமாதானம் பேசுனா கோவணத்தெ அவுத்துத்தாம் சமாதானக் கொடி காட்டணும்ங்றாப்புல.
"இந்த வெவகாரம் சம்பந்தமா தங்காச்சிய
ஸ்டேசன் அழைச்சிகிட்டுப் போனப்போ வக்கீல் சங்கத்துல வந்துப் பேசுனதாலத்தாம் இப்பிடிக்
கொஞ்சம் மொரட்டுத் தனமா வெசாரிக்கிறதாவும், இத்தோட இந்த வெவகாரத்தெ முடிச்சிக்கிடலாம்ங்ற
மாதிரிக்கித்தாம்யா சொன்னாங்க!"ன்னாம் விகடு தண்ணிய ஊத்தி அணைச்ச நெருப்பு எப்பிடி
இப்போ பெட்ரோல்ல ஊத்தி அணைச்சதெப் போல பத்திக்குதுங்றாப்புல.
"மொதல்ல ஒரு விசயத்தெப் புரிஞ்சிக்குங்க.
இந்த விசயத்துல வக்கீல் சங்கம்லாம் தலையிடாது. இது ஒரு தனிப்பட்ட வக்கீலோட பிரச்சனை.
அதுவும் அவரா உண்டாக்கிக்கிட்ட பிரச்சனை. இதுல தலையிட்டு எங்க சங்கம்லாம் தங்கள அசிங்கம்
பண்ணிக்காது. நடந்ததெ ஒங்ககிட்டெ ஆளாளுக்குத் திரிச்சிச் சொல்லிருக்காங்க. இந்தப்
பிரச்சனையப் பத்தி தஞ்சாவூரு பார் கெளன்சில், ஆர்குடி பார் கெளன்சில்ல பேசுனதுல்லாம்
உண்மைதாங்க. அப்பிடித்தாம் எங்களுக்கே இந்த விசயத்தப் பத்தித் தெரிஞ்சது. ஆனா இந்த
பிரச்சனையோட சம்பந்தப்பட்ட வழக்கு எங்க கைக்கு வரும்ன்னு அப்போ எங்களுக்கே தெரியாது.
பொதுவா மீட்டிங்ல இது மாதிரி அசம்பாவிதமா நடக்குற சம்பவங்களப் பத்தி கவனத்துக்குக்
கொண்டு வந்து பேசுறதுங்றது வழக்கம். அதுவும் இந்த மாதிரி நடக்குற சம்பவங்களப் பத்திச்
சொல்லவே வேணாம். தனக்குத் தானே இந்தச் சம்பவங்க பப்ளிசிட்டிப் பண்ணிக்கிற மாதிரி தீயப்
போல பரவும். மொத்தத்துல இந்த விசயத்தெ கங்காதரன் பார் கெளன்சிலோட கவனத்துக்குக்
கொண்டு வர்றாம இருந்திருந்தா இந்த விசயம் ஆர்குடியோட அடங்கி அப்பிடியே இருந்திருக்கும்.
அவ்வேம் எந்த அளவுக்கு முட்டா பயங்றதுக்கும், மோடுமுட்டிப் பயங்றதுக்கும் இதுதாம்
உதாரணம். அவனே அவனெ பத்தி அசிங்கம் பண்ணிக்கிறாப்புல இந்த விசயத்த அவ்வேம் வாயாலயே
எடுத்து விட்டுட்டாம். அவ்வேம் நெனைச்சது அநேகமா இந்தச் சம்பவத்தால அவ்வேம் மேல பரிதாபம்
உண்டாவும்ன்னு. நடந்தது நேர்மாறாப் போச்சுது. அவனெ யிப்போ பொம்பள கையால செருப்படி
வாங்குனவேம்ங்ற மாதிரிக்கி முன்னாடி விட்டுட்டுப் பின்னாடி சிரிக்கிறாங்க. அதுல அவ்வேம்
ரொம்ப டென்ஷன் ஆயி இருக்காம்!"ன்னாரு ஆனந்தகுமாரு காவாளிக் கூத்துல எல்லாம் ஊருப்
பெரிசுங்க அதிகம் தலையிடாதுங்றாப்புல.
"சமாதானம்ன்னு போறோம்ன்னே வெச்சிக்கிங்குங்களேம்.
அந்த வக்கீலு என்னத்தெ டிமாண்ட் வைப்பாக?"ன்னாம் விகடு குட்ட குட்ட குனிஞ்சா என்னாகும்ங்றாப்புல.
"அதெப் பத்தி சரியா நமக்குச் சொல்லத்
தெரியல. ஆன்னா எப்படியெல்லாம் டிமாண்ட் பண்ண வாய்ப்பு இருக்குன்னா, எல்லாருக்கும் முன்னாடி
மன்னிப்புக் கேக்க சொல்லலாம், பத்தாயிரம் இருவதாயிரம்ன்னு பணத்தெ கொடுங்கன்னு கேக்கலாம்,
கால்ல வுழுவணும்ன்னு கூட சொல்லலாம், பதிலுக்கு நானும் ஒரு மொறை செருப்பால அடிச்சிக்கிறேம்ன்னும்
சொல்லலாம். என்னால ரொம்ப துல்லியமா இப்பிடித்தாம் டிமாண்ட் பண்ணுவான்னு சொல்ல முடியல.
இதெ ஏம் சொல்றேம்ன்னா அவ்வேங்கிட்ட வழக்க சமாதானமா முடிச்சிக்கிடலாமான்னு கேட்டா,
நாம்ம ரொம்ப பாதிக்கப்பட்டிருக்கேம்ங்றதெத்தாம் திரும்பத் திரும்ப சொல்றாம். இதுல
ஒன்னோட கிளையண்டும், என்னோட கிளையண்டும் பாதிக்கப்படுறாங்களேன்னு கேக்குறதுக்கு,
அதெல்லாம் ரண்டாவது விசயம் நாம்ம பாதிக்கப்பட்டதுதாங் மொத விசயங்றாம். இப்பிடி கேஸ்ல
இன்வால்வ் ஆகிறேன்னு அவனே ஒரு கேஸ்ஸா மாறியிருப்பான்னு நாம்ம எதிர்பாக்கல."ன்னாரு
ஆனந்தகுமாரு கால்ல வுழுவுறதுன்னு முடிவெடுத்துட்டா பூட்ஸ்ஸ நக்கி நக்கியே சுத்தம் பண்டித்தாம்
ஆவணும்ங்றாப்புல.
"அந்த வக்கீலும் தப்பாத்தாம் பேசியிருக்காக.
கோர்ட்டுல வழக்கெ முடிச்சிட்டு அவரு பாட்டுக்குப் போறதெ வுட்டுப்புட்டு, ஆப்போசிட்
சைட்ல பேசுறதுக்கு அவருக்கென்ன வேல? அவரு வேல முடிஞ்சா அவரு பாட்டுக்குப் போவ வேண்டித்தானே.
அப்பிடிப் போவாம வர்றப்ப, போறப்பல்லாம் மெரட்டிக்கிட்டும், நக்கல் பண்ணிக்கிட்டும்
இருந்ததோட உச்சமாத்தாம் இந்தச் சம்பவமே நடந்திருக்கு. ஒங்க சட்டப்படியே குற்றம் செஞ்சவங்கள
வுட, குற்றம் செய்ய தூண்டுறவங்களுக்குத்தானே அதிக தண்டனெ. அப்பிடிப் பாத்தா இந்தத்
தப்ப திட்டமிட்டு தூண்டுறாப்புல பண்ணி செய்ய வெச்சதே அந்த வக்கீலுதாம்ங்கய்யா!"ன்னாம்
விகடு வெதைப்பாடு இல்லாம மொளைப்பாடு இருக்காதுங்றாப்புல.
"நீங்க சொல்றது நமக்குப் புரியுது.
ஆன்னா அவ்வேம் என்னத்தெ சொல்வாம்ங்றீங்க சார்? நாம்ம அப்பிடில்லாம் பேசலன்னு சத்திய
வாக்குமூலம் கொடுப்பாம். ஹெச்செம்ஓப்பி வழக்குல அபராதம் ஆனது பொறுக்க முடியாம, அதுக்குக்
காரணம் தாம்ங்ற கோபத்துலத்தாம் அந்தப் பொண்ணு அடிச்சதும்பாம். அதுக்கு என்னத்தெ சொல்லுவீயே?
அப்பிடித்தாம் இது சிக்கலாவுது."ன்னாரு ஆனந்தகுமாரு இடியாப்பத்தெ எப்பிடிப் பிழிஞ்சாலும்
சிக்கலாவும்ங்றாப்புல.
"அவரும் அநாகரிகமா பேசுனாரு. அந்தப்
பேச்சுக்கு நாஞ்ஞ எல்லாமே சேந்து அவரெ செருப்பால அடிச்சிருக்கணும். நாஞ்ஞ அதெ செய்யல.
தங்காச்சி செஞ்சுட்டா. எப்படிப் பாத்தாலும் அவரு தப்பா பேச, தப்பா ஒண்ணு நடத்துட்டு.
அவருக்கு எஞ்ஞ மேலயோ, எஞ்ஞ தங்காச்சி மேலயோ ஆத்திரப்படவோ, கோவப்படவோ எந்த முகாந்திரமே
கெடையாதுங்கய்யா!"ன்னாம் விகடு மேல எறிஞ்ச கல்லு தம் தலையில ஏம் வுழுவுதுன்னு
கேக்கக் கூடாதுங்றாப்புல.
"ஆத்திரமோ, கோவமோ கெடையாது சார்!
அவ்வேங்கிட்டெ பேசுனதெ வெச்சிச் சொல்றேம். அவ்வேம் பழிவாங்கணும்ன்னு நிக்குறாம். அதெயும்
நாம்ம கேட்டேம். அந்தப் பொண்ண பழிவாங்கணும்ன்னு நெனைச்சா வா வழக்க நடத்தியேப் பாத்துப்பேம்ன்னுத்தாம்
சவால் விட்டுட்டு வந்திருக்கேம். ஏன்னா இந்த வழக்குல அவ்வேம் எப்பிடி வாதாடுனாலும்
செரித்தாம் அவனோட கிளையண்ட்ட அவனால காப்பாத்த முடியாது. ஏன்னா ஒங்க தங்காச்சி இந்த
அத்தனெ வழக்குகள்லயும் ஒரு வலுவான சாட்சியம். அதெ அவனால ஒடைக்கவே முடியாது. ஆன்னா என்னா
ஒரு விசயம்ன்னா நீதிங்றது ஒடனே கெடைச்சிடாது. அப்பிடியே கெடைச்சாலும் அவ்வேம் பாட்டுக்கு
மேல் முறையீடு, மெல் முறையீடுன்னு போயிட்டெ இருப்பாம். அதெ நம்மாள தடுக்க முடியாது.
கடெசீயா நீதி வர்றப்போ நாம்மளே சோர்ந்துப் போயிருப்பேம்! இங்க ஒரு வழக்குலப் போயி
ஜெயிக்கிறதுங்றது கடைசியில அப்பிடித்தாம் முடியும். அதாலத்தாம் நாங்க பல வழக்குகள நடக்க
விடாமலேயே பேசி முடிச்சிடுறது. வழக்குன்னுப் போனா அது பாட்டுக்கே முடிவில்லாமத்தாம்
அனுமாரு வாலப் போல நீண்டுகிட்டெ இருக்கும். இந்த விசயங்கள அத்தனையையும் எடுத்துச்
சொல்லி, அதுக்குப் பெறவு வழக்க நடத்தணும்ன்னு சொல்றவங்களுக்கு மட்டுந்தாம் நாங்க
வழக்கையே நடத்திக் கொடுக்குறது! அதெ ஒரு பாலிசியாவே வெச்சிருக்கேம். ஆன்னா ஒங்க விசயத்துல
இந்த வக்கீலு பழி வாங்கணும்ன்னு நிக்குற காரணத்தால எங்களால சமாதானங்ற எடத்தெ நெருங்க
முடியல. அதெ விட அந்த மாதிரி ஒரு கிறுக்கன்கிட்டயெல்லாம் எங்களாலயும் சமாதானத்தெப்
பேசி முடிச்சிட முடியுங்ற நம்பிக்கை இல்ல."ன்னாரு ஆனந்தகுமாரு வெறிநாய்க்கிட்டெ
போயி விசாரம் பண்ணிட்டு இருக்க முடியாதுங்றாப்புல.
"வழக்குகள நடத்துறதப் பத்தி ஒண்ணுமில்லங்கய்யா.
நீஞ்ஞ நடத்துங்கய்யா. ஆன்னா அய்யா! இந்தச் செருப்படி வெவகாரம் வழக்காப் பதிவாயி நடக்குதுன்னு
வெச்சிப்போம். அப்பிடி நடந்து நமக்குப் பாதகமாவே தீர்ப்பாவுதுன்னே வெச்சிப்பேமே, அப்போ
தீர்ப்பு எப்பிடி இருக்கும்?"ன்னாம் விகடு வழியுற ரத்தத்தெ அது போக்குல வுட்டுப்புட்டா
அப்பிடியே வழிஞ்சுக்கிட்டெ இருக்குமா, யில்ல ஒரு கட்டத்துல ஒறைஞ்சுப் போயி அதுவாவே
நின்னுப்புடுமாங்றாப்புல.
"என்னா பெரிசா தீர்ப்பாவும்ன்னா ஐநூறு
ரூவா அபராதம் செலுத்துங்கன்னுத்தாம் தீர்ப்பாவும். அதுக்கு நீங்க வக்கீலுக்கு பத்தாயிரம்,
இருவதாயிரம் செலவு செஞ்சித்தாம் வழக்க நடத்தியாவணும்!"ன்னாரு ஆனந்தகுமாரு சீழ்
வெச்ச புண்ணுக்கு மருந்து வாங்குற காசியோட வைத்தியக் காசியையும் பண்டித்தாம் ஆவணும்ங்றாப்புல.
"அப்போ நாம்ம வழக்கோட சிலவப் பாக்காம
இதெ சட்டப்பூர்வமாவே எதிர்கொள்ளலாம்ங்கய்யா!"ன்னாம் விகடு எல்லாத்துக்கும் மருந்திருக்கிறப்போ
எப்பிடிக் காயம் பட்டாலும் காசழிச்சாவது மருந்தெ வெச்செ கொணம் பண்டிக்கிடலாம்ங்றாப்புல.
"அது ஒங்க முடிவுதாம். ஏன்னா நாங்க
ரண்டு பக்கமும் இருக்குற சாதக பாதகங்கள ரொம்பவே டீட்டெய்ல்டா ஒங்களுக்குச் சொல்லிட்டேம்.
மத்த ஒங்க தங்கச்சியோட வழக்கப் பொறுத்த வரையில சுருக்கமா சிலதெ சொல்லிடுறேம். விவாகரத்து
வழக்கப் போட்டு அதெ மொதல்ல முடிக்கிறேம். அத்தோட ஜீவனாம்சத்தை மாசா மாசம் வாங்குறதுக்கான
வேலையில எறங்குறேம். வன்கொடுமெ வழக்க ஸ்ட்ராங் பண்ணி நடத்துறேம்! செருப்படி கேஸ்ஸூ
கோர்ட்டுல பைலாயி அது வாரப்ப வாரட்டும். வாரப்ப அதெ பாத்துகலாம். மித்தபடி இந்த வழக்குகள்ல
ஒங்களுக்கு ஏதும் சந்தேகம் இருந்தா சொல்லுங்க. நாம்ம கிளியர் பண்ணிடுறேம்!"ன்னாரு
ஆனந்தகுமாரு கத்திய வைக்குறதுக்கு மின்னாடி அறுவை வைத்தியத்துக்குச் சம்மதம் கேக்குற
வைத்தியரப் போல.
"வேற ஒண்ணும் சந்தேகமில்லங்கய்யா.
விவாகாரத்து வழக்குக்கு பத்தாயிரம் பணத்தெ கொடுக்கணும்ன்னு மூத்தவங்க சொல்லிருக்காங்கய்யா!
அதெ ஒரே மொறையில கொடுக்குறதுன்னா கொஞ்சம் செருமந்தாம். அய்யாயிரம் அய்யாரமா ரண்டு
தவணையில கொடுக்கலாமாய்யா?"ன்னாம் விகடு ஒரு மடக்குல முடியாததெ ரண்டு மடக்குல
முழுங்கிக் காட்டுறேம்ங்றாப்புல.
"விவகாரத்து வழக்கு ஒண்ணும் அவசரமில்ல.
நீங்க ரண்டு தவணையா பணத்தெ கொடுத்து முடிங்க. பணத்தெ கொடுத்து முடிஞ்சி ரண்டு மாசத்துக்குப்
பெறவே நாம்ம போட்டு வுட்டுலாம். அதுவரைக்கும் ஹெச்செம்ஓப்பி வழக்கு ஓடிட்டு இருக்கட்டும்.
ஒங்க தங்கச்சிய கிராஸ் பண்ணாத அளவுக்கு நாங்க பாத்துக்கிடுறேம்!"ன்னாரு ஆனந்தகுமாரு
காசியக் கையில வெச்சாத்தாம் வாயில முழுங்க மருந்தெ எடுத்து வைப்பேம்ங்றாப்புல.
"செரிங்கய்யா!"ன்னாம் விகடு.
வக்கீலும் செரின்னுச் சொல்லிட்டுப் போனெ வெச்சிட்டாரு பணத்தெப் பாக்குறவங்களோட கொணம்
அதுதாங்றாப்புல. பணம் இருந்தாத்தாம் மேக்கொண்டு இதுல காரியம் ஆவுங்றது விகடுவுக்குத்
தெரிஞ்சது. அந்தப் பணத்தெதாம் எப்பிடி ஒடனடியா பொரட்டுறதுன்னு அவனுக்குப் புரியல.
ஒடனடியா பணத்தெப் பொரட்டிக் கொடுத்தா விவாகரத்து வழக்கப் போட்டு முடிச்சிட்டா கூட
தங்காச்சிக்கு வெளியில ஒரு எடத்துல எங்கேயாவது ஒரு பையனப் பாத்து கலியாணத்த முடிச்சி
வுட்டுப்புடலாம்ன்னு தோணுச்சு விகடுவுக்கு. வழக்குன்னு இப்போ ஆரம்பிச்சாலும் அது
முடிய ஆறு மாசமோ, ஒரு வருஷமோ ஆவலாங்றதால ஒடனே ஆரம்பிச்சிடுறதுதாம் நல்லதுன்னும் விகடுவுக்குப்
புரிஞ்சது. ஒடனே ஆரம்பிக்கிறதுக்கான பணந்தாம் இதெ ஆரம்பிக்க வுடாம இப்போ தடுக்குதுன்னு
அந்தப் பணத்தெப் பத்தி யோஜனெ பண்ண ஆரம்பிச்சாம் விகடு. அதெ பலத்த யோஜனையில இருந்தவனெப்
பாத்து ஏதோ சங்கடமான நெலையில புருஷங்கார்ரேம் இருக்காங்றதா புரிஞ்சிக்கிட்டா ஆயி.
அதெப் பத்தி அவ்வே விகடுகிட்டெ கேட்டு கேட்டு நச்சரிச்ச பெற்பாடுதாம் அரையும் கொறையுமா
சொன்னாம் விகடு மொகத்துல வந்த பருவெ முக்காடு போட்டு மறைக்க முடியாதுங்றாப்புல.
"ஆமாங்க! ஏம் இந்த வழக்க சம்பந்தமில்லாம
நடத்திக்கிட்டு? அதுக்குப் பதிலா விவாகரத்து வழக்கப் போட்டு முடிச்சிடுறதுதாங் செரி.
அதுக்கும் வயசாயிட்டே போவுதில்ல. எத்தனெ நாளு நாம்ம இன்னொரு கலியாணத்த பண்ணி வுடாம
நம்ம வூட்டுலயே வெச்சிக்கிட முடியும். இப்பத்தாம் சரியான முடிவுக்கு இத்து வந்திருக்கு.
இதுல யோசனெ பண்ணுறதுக்கு ஒண்ணுமில்ல. சட்டுன்னு காரியத்துல எறங்கிட வேண்டித்தாம்!"ன்னா
ஆயி வெனையிலயும் தீயிலயும் மிச்சம் வைக்கக் கூடாதுங்றாப்புல.
"காரியத்துல எறங்குறதுன்னா பணம் ன்னா
நம்ம வூட்டுக் கொய்யா மரத்துலயா காய்க்குது?"ன்னாம் விகடு தோணியிருந்தா கரையக்
கடக்காமலா இருப்பேம்ங்றாப்புல.
"அதெப் பத்தி ஏம் கவலப்படுறீங்க?
யிப்போ பணத்துக்கு ஏற்பாட்டப் பண்டுறேம் பாருங்க!"ன்னு அவளோட பீரோல தொறந்து
சின்ன சின்னதா நகைப் பெட்டிக நெறைய எடுத்து வந்தா, நாலு மரத்தெ சேத்து வெச்சா கட்டுமரம்
உண்டாயிடும்ங்றாப்புல.
"நமக்கும் தெரியாம ஏது புதுசா நகெ
வாங்கி வெச்சிருக்கே போலருக்கே?"ன்னாம் விகடு கையில பட்ட புண்ணு கண்ணுக்குத்
தெரியாம எப்படிப் போனுச்சுங்றாப்புல.
"ஆம்மா ஒஞ்ஞளுக்குத் தெரியாம வெச்சிருப்பாங்களாக்கும்?
இதெப் பாருங்க!"ன்னா ஆயி மாசமான பொண்ணு மறைக்க நெனைச்சாலும் வவுறு காட்டிக் கொடுத்துப்புடாதாங்றாப்புல.
பாத்தாம் விகடு. பவ்வுப் பாப்பாவுக்கு பதினாறு அப்போ ஒறவுக்காரவுங்க பாப்பாவுக்குச்
செஞ்சிப் போட்டிருந்த சின்ன சின்ன மோதிரங்க, செயினுங்க, காப்புங்க அதுல இருந்துச்சு.
"இதெயுமா அடவு வைக்கணும்?"ன்னாம்
விகடு வூட்டுல இருக்குற பொட்டுத் தங்கமும் அடவு வைக்குறதுக்குத்தானாங்றாப்புல.
"இதெ இனுமே பாப்பா போட்டுக்கிட முடியுமா?
இதெ வெச்சிக்கிட்டு என்னத்தெ பண்ணப் போறேம்?"ன்னாம் ஆயி பதினாறு கொண்டாடுறப்போ
எடுத்த சட்டையெ பதினாறு வயசுல போட்டுக்கிட முடியுமாங்றாப்புல. அவ்வே அப்பிடிச் சொன்னாலும்
வளந்துக்கிட்டு இருக்குற பொண்ணுக்கு நாளைக்குக் கல்யாணம் காட்சி விஷேசம்ன்னா அதுக்காச்சிக்
கொஞ்சம் நகெ நட்டு வேணுமேங்ற நெனைப்ப வேறு திக்குல அந்த நகைங்களப் பாத்தது விகடுக்கு
உண்டு பண்ணுச்சு. நாம்ம சம்பாதிச்சு நாலு நகெ வாங்க முடியாட்டியும் இருக்குற இது போல
நகெயெ வெச்சிருந்தா அதெ மாத்தியோ வித்தோ ஏதோ ஒண்ணுத்தெ செஞ்சிப் போடலாம்ன்னாலும் அதெயும்
அடவு வைக்குறாப்புல நெலமெ உண்டாயிடுச்சேன்னு அதெ நெனைச்சப்போ கொஞ்சம் ஒடைஞ்சுப் போனாம்
அவ்வேம். இந்த மாதிரிக்கு நெனைப்புப் போனதும், "இதெல்லாம் ஒரு ஞாபவமா இருக்கட்டுமே!"ன்னாம்
விகடு நகெயெ வுட்டுப்புட்டு தலைய அடவு வெச்சாவது வேற வெதத்துல பணத்தெ பொரட்டிப்புடுவேம்ங்றாப்புல.
"என்னத்தெ ஞாபவம் போங்க. இதெ வெச்சிட்டு
பணத்துக்கு ஏற்பாட்டப் பண்ணி அதெ சீக்கிரமா முடிக்கிற வழியப் பாருங்க. அடவுதான வைக்கப்
போறேம். மீட்காமலா போயிடப் போறேம்?"ன்னா ஆயி ஆகாயத்தெ நோக்கி எறிஞ்ச கல்லு
பூமிய நோக்கி வாராமலா போயிடும்ங்றாப்புல.
ஆயி பேச்சுல கொஞ்சம் தெளிவு கண்டு, அப்பிடின்னா
அதுவும் சரித்தாம்ங்றாப்புல, "எல்லாத்தையும் சேத்தாலும் ஒரு பவுனோ, ஒன்றரைப்
பவுனோ தாண்டுமா?"ன்னாம் விகடு அண்டாவ குண்டாவ அடவு வெச்சி கலியாணத்தெ முடிச்சிட
முடியுமாங்றாப்புல.
"தாரளமா ரண்டு பவுனுக்கு வரும். அளந்துப்
பாக்காம பேசாதீயே! முப்பாயிரத்து சொச்சம் கொடுப்பாவோ!"ன்னா ஆயி ஒவ்வொரு துளியா
வுழுவுறதால மழைத்துளி வெள்ளமாயிடாதுன்னு நெனைச்சுப்புடாதீயேங்றாப்புல.
"செரிடி! இருவதாயிரம் மட்டும் வாங்கிக்கிறேம்!"ன்னாம்
விகடு அள்ளுறதெ எப்பவும் கையி கொண்ட அளவோட நிறுத்திக்கிடணும்ங்றாப்புல.
"ஏம் மின்னாடி மாதிரி கொறைச்சலா
அடவு வெச்சிட்டு, பின்னாடி பணம் பத்தலன்னு நிக்கணுமா? அவ்வேம் கொடுக்குற காசியக் கேட்டு
வாங்கிட்டு வந்து அப்பிடியே மாமாகிட்டெ கொடுத்துடுங்க. ஒரு ஆறேழு மாசத்துக்கு வழக்குக்குன்னு
ஆவுற சிலவுக்கு மொத்தா இதெ வெச்சிக்குங்கன்னு சொல்லிட்டா வழக்கப் பத்தின கவலெ வாராது
பாருங்க!"ன்னா ஆயி பசி கொண்ட நேரத்துல நாலு கையி கூடுதலா சாப்புடுறதுல தப்பில்லங்ற
மாதிரிக்கு.
"அதுவும் செரித்தாம்! அதுக்குள்ள
எதாச்சும் சம்பளத்துல அரியர்ஸ் வரும். டியேவும் அதிகமாவும். பாத்துக்கிடலாம். நெலமைய
எப்படியாச்சும் சமாளிச்சிக்கிடலாம்!"ன்னாம் விகடு பசிக்க ஒத்த வவுறு, ஆன்னா அத்து
எம்மாம் தின்னாலும் அதுக்குச் சம்பாதிக்க ரண்டு கையில்லா இருக்குங்றாப்புல. அந்த நகெய
எல்லாம் ஒரு கர்ச்சிப்புல போட்டு கட்டி எடுத்துக்கிட்டுக் கெளம்புனாம் விகடு இருந்ததையெல்லாம்
வழிச்சு எடுத்துக்கிட்டுப் போறவனெப் போல. இப்பிடித்தாம் வூட்டுல கடைசியா இருந்த நகெயும்
அடவுக்குப் போனுச்சு.
*****
No comments:
Post a Comment