15 Feb 2021

மலைபிடுங்கி மகாதேவன்கள்!

மலைபிடுங்கி மகாதேவன்கள்!

செய்யு - 718

            வக்கீல்மார்க கேட்டபடிக்குப் பணத்தெ கொடுத்து முடிஞ்ச அடுத்த இருவதாவது நாளு ஹெச்செம்ஓப்பி வழக்குல பாலாமணியக் குறுக்கு விசாரணை பண்ணுறதுக்குச் செந்தில்குமார் வக்கீல் கார்லயே கும்பகோணத்துலேந்து ஆர்குடி சப்கோர்ட்டுக்கு வந்தாரு. செய்யு போனப் போட்டுச் சொல்லிருப்பா போல, அந்தத் தேதிக்கு மூலங்கட்டளெ கோவிந்து, கூத்தனூரு மகேந்திரன் இவுங்களோட பெத்தநாயகமும் செய்யுவுக்குத் தெகிரியமா இருக்கட்டுமேன்னு வந்திருந்தாங்க. தாராசுரத்துலேந்து வந்து எறங்குன செய்யுவையும், சுப்பு வாத்தியாரையும் ஆர்குடி பஸ் ஸ்டாண்டுலேந்து தங்களோட யமஹா கிரக்ஸ் வண்டியிலயே அழைச்சாந்து அவுங்க பக்கத்துலயே மூணு பேரும் நின்னுகிட்டாங்க. தனியா வர்ற போற ஆளுங்களா அவுங்க? அவுங்கப் பக்கத்துலயும் பின்னாடியும் ஏழெட்டுப் பேரு சுத்தி வளைச்சாப்புல நின்னுகிட்டு இருந்தாங்க சங்கிலி கோத்தாப்புல.

            பதினோரு மணிக்கெல்லாம் ஹெச்செம்ஓப்பி வழக்கோட குறுக்கு விசாரணை ஆரம்பமானுச்சு. கோர்ட்டுக்குள்ளார கும்பலா நொழைய முடியாதுங்றதால செய்யுவோட சுப்பு வாத்தியாரு, கோவிந்து, மகேந்திரன், பெத்தநாயகம் மட்டும் தொணையா உள்ளாரப் போயி நின்னாங்க. திருநீலகண்டன் வக்கீல் இருக்கிறப்போ பாலாமணி பண்ணுற அலம்பல்கள் எதுவும் இப்போ யில்ல. கங்காதரன் வக்கீலும் ரொம்ப பதிவிசப் போல இருந்தாரு ஓட்டுக்குள்ளார சுருக்கிக்கிட்டெ நத்தையப் போல. என்னடா இத்து ஒலகமே நெலைபொரண்டு சுத்துதான்னு நெனைக்குறாப்புல இருந்துச்சு, பாலாமணியும், கங்காதரனும் பேச்சடங்கி, மூச்சடங்கி நின்ன நெலையப் பாத்தப்போ.

செந்தில்குமாரு வக்கீலு வந்தச் சொவடும் போன சொவடும் தெரியாதப் போல ரொம்ப கண்ணியமா அதே நேரத்துல ரொம்ப பெலமா அந்த குறுக்கு விசாரணையச் செஞ்சு முடிச்சாரு. வழக்குல கொடுத்திருந்த மனுவத் தாண்டி அந்தாண்ட இந்தாண்ட ஒரு கேள்வியக் கூட கேக்கல. அதுக்குள்ளயே ஊமைக்குத்தா வெச்சு என்னத்தெ குத்தணுமோ அத்தனையையும் குத்தி வுட்டாரு. "என்னோட கட்சிக்காரரிடம் தாங்கள் ஒரு ஆணாக நடந்து கொள்வதில்லங்றது உண்மையா?"ன்னு வக்கீல் செந்தில்குமார் கேட்டப்போ, திருநீலகண்டன் வக்கீல்கிட்ட பாயுறதப் போல பாயாம ரொம்ப அமைதியா அப்படியெல்லாம் இல்லன்னு வெட்கத்துல மண்ணப் பாக்குற பொண்ணப் போல தலைய குனிஞ்சிக்கிட்டெ பதிலச் சொல்றதோட நிறுத்திக்கிட்டாம் பாலாமணி. ரொம்ப கனகச்சிதமா இருவது நிமிஷத்துல குறுக்கு விசாரணைய நடத்தி முடிச்சிட்டுச் செந்தில்குமாரு வக்கீலு ஒடனே கோர்ட்ட வுட்டு வெளியில வந்துட்டாரு. செய்யுவும், சுப்பு வாத்தியாரும் கூடவே வெளியில வந்தாங்க. பின்னாடியே கோவிந்து, மகேந்திரன், பெத்தநாயகம் மூணு பேத்தும் வெளியில வந்தாங்க. அவுங்க கூட்டிட்டு வந்த மித்த ஆளுங்க எல்லாம் கோர்ட்டுக்கு வெளியில உள்ளேயிருந்து வர்றவங்கள ஆவலாதியாப் பாத்துக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்தாங்க.  

            சுப்பு வாத்தியாரு ஒப்புக்கிட்டபடி அய்யாயிரம் ரூவாயோடு ரண்டாயிரம் ரூவாயப் போட்டு ஏழாயிரம் ரூவாய ஒரு கவர்லப் போட்டுக் கொடுத்தாரு. அதெ வாங்கிப் பாத்த செந்தில்குமார், "எவ்ளோ இருக்கு?"ன்னாரு வாக்குமூலமா சொல்றதெ வெச்சி உறுதிப் பண்டிக்கிறாப்புல. சுப்பு வாத்தியாரு ஏழாயிரம்ன்னதும் அதெ கவர்ரப் பிரிச்சி எண்ணிப் பார்த்தவரு, "சரியா இருக்கு!"ன்னாரு ஒத்த ரூவாயி ரொட்டி நாலு ரூவாயிக்கு நாலுதாம்ங்றாப்புல. ஒடனே அவரோட கார் டிரைவரு ஓடியாந்து அவரோட காதுல கிசுகிசுத்தாரு. செந்தில்குமார் வக்கீல் சுப்பு வாத்தியார்ரப் பாத்து, "டிரைவருக்கு ஒரு ஆயிரம் ரூவா கொடுத்திடுங்க!"ன்னாரு ராசாவுக்குக் கப்பம் கட்டுறப்போ அடிபொடிகளுக்கும் சேத்துதாம் கட்டணும்ங்றாப்புல.

            இந்தக் கூடுதலா கேக்குற ஆயிரம் ரூவாயி விசயத்தப் பத்தி ஆனந்தகுமாரு வக்கீல் ஒண்ணுமே சொல்லலையேன்னு நெனைச்சவரு, அதெ பத்தி எதுவும் சொல்லாம பையில வெச்சிருந்த ஆயிரத்தெ எடுத்துக் கொடுத்தாரு. மிச்சம் அவரு பையில இன்னொரு ஆயிரம் ரூவாத்தாம் இருந்துச்சு.

            "இந்த வழக்குல பெரிசா குறுக்கு விசாரணையப் பண்ணலன்னு நெனைக்க வேணாம். இந்த வழக்குல அப்பிடி ஒண்ணும் பெரிசா இல்ல. ஒங்க விசயத்துல இந்த குறுக்கு விசாரணையப் பண்ணாம விட்டா கெளரவக் கொறைச்சால போயிடுமேங்றதுக்காகத்தாம் நாமளே இதுல வந்து ஆஜரானேம். இல்லன்னா ஆனந்தகுமாரை விட்டே கூட முடிச்சிருக்க சொல்லிருப்பேம். செய்யு வேற செருப்பால அடிச்சப் பெறவு இதெ பண்ணாம விட்டா சரிபட்டு வாராது பாருங்க. நீங்க என்னவோ குறுக்கு விசாரணைன்னா அந்தப் பயெ அந்தத் துள்ளு துள்ளுவான்னு சொன்னீங்களே? நார்மலத்தானே இருந்தாம். வக்கீலு நாங்க மொறையா நடந்துக்கிட்டா அப்பிடித்தாம் சார் இருப்பாங்க. ஒங்க விசயத்துல எங்க ஆளுங்களே நெறைய தப்ப பண்ணிருக்காங்க. இனுமே எந்தப் பிரச்சனையும் இருக்காது. இந்த கேஸ்ஸ இப்பிடியே முடிக்கிறேம். இதுக்கு மேல இதெ தொடர வாணாம். அதுக்கு ஒடனே விவகாரத்து வழக்கப் போட்டாவணும்!"ன்னாரு செந்தில்குமாரு சோறாக்கி முடிச்சிட்டா சோத்துப் பானையத் தூக்கி அந்தாண்ட வெச்சிட்டுக் கொழம்புச் சட்டிய தூக்கி அடுப்புலப் போடணும்ங்றாப்புல.

            "ரொம்ப சந்தோஷம்ங்கய்யா. வழக்கமா இந்த மாதிரி வழக்கு முடிஞ்சா அந்தப் பயலுவோ கிட்டெ வந்து வம்புக்கு இழுப்பானுவோ. இன்னிக்குத்தாம் வழக்கு முடிஞ்ச ஒடனே அவனுவோ பாட்டுக்கு இருந்த எடம் தெரியாம கெளம்பிப் போயிருக்கானுங்க. அந்த வகையில எஞ்ஞளுக்கு ரொம்பவே சந்தோஷங்கய்யா. நீஞ்ஞ சொல்றாப்புல விவகாரத்து வழக்கெப் போட்டு முடிச்சிப்புடுங்கய்யா!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சாப்புட்டு முடிஞ்ச பெறவு எலையத் தூக்கி அந்தாண்டத்தாம் போடணும்ங்றாப்புல.

            "வெல்! அந்த வழக்குக்கு ஒரு பத்தாயிரத்த ஆபீஸ்ல கொண்டாந்து கொடுத்துடுங்க. நம்ம ஆளுங்க அதுக்கான பெட்டிஷன தயார் பண்ணிடுவாங்க. ரொம்ப லேட் பண்ண வேண்டாம். ஏன்னா நீங்க பணத்தெ கொண்டாந்து கொடுத்தப் பெறவுதாம் நாம்ம பெட்டிஷனையே தயார் பண்ணச் சொல்வேம்! அது வரைக்கும் இந்த வழக்குலத்தாம் வாய்தா மேல வாய்தா வாங்கிட்டு ஓடிட்டு இருக்கச் சொல்வேம். புரிஞ்சிதா ஒங்களுக்கு?"ன்னு செந்தில்குமாரு சொல்ல சுப்பு வாத்தியாரு மொகத்துல ஈயாடல. எடையக் காட்டுற மெஷினு காசியப் போட்டாத்தாம் எடையக் காட்டுமாங்றாப்புலல்ல மாதிரில்லா இருக்குன்னு சுப்பு வாத்தியாரு அதெ கேட்டதும் அலுத்துப் போனாரு. அதெப் பத்தியெல்லாம் எதையும் கண்டுக்கிடாம வழக்கப் பத்தியும், மேக்கொண்டு செய்ய வேண்டியதப் பத்தியும் பத்து நிமிஷம் அவரு பாட்டுக்குப் பேசிக்கிட்டெ இருந்தாரு செந்தில்குமாரு வக்கீலு. அய்யோடா சாமி, இவனுவோ மலையப் புடுங்கி உள்ளாரப் போடற மகாதேவனுங்களா இருப்பானுங்க போலருக்கே, இவனுககிட்டெ வந்து மாட்டிக்கிட்டேம்ன்னு ஒரு நொடி அப்பிடியே தெகைச்சிப் போயி அதெப் பத்தி நெனைச்சாரு சுப்பு வாத்தியாரு.

            சுப்பு வாத்தியாரு செல போல நிக்குறதப் பாக்காம செந்தில்குமாரு கார்ர கெளப்பிட்டு வாரச் சொல்லி அதுல ஏறிக் கெளம்பிப் போயிக்கிட்டெ இருந்தாரு. அவரு கெளம்பி அந்தாண்ட போனதும் கோவிந்து சுப்பு வாத்தியாரு பக்கத்துல வந்து, "இன்னிக்கு அந்தப் பயலுவோ நாஞ்ஞ வந்ததெப் பாத்துட்டு கமுக்கமா கெளம்பிட்டானுவோ. நாஞ்ஞளும் நாஞ்ஞளா வம்பிழுத்து மெரட்டலாம்ன்னுத்தாம் பாத்தேம். அதுக்குள்ள கால்ல வெந்நிய ஊத்திக்கிட்டப் பயலுவோ போல கெளம்பிப் போயிட்டானுவோ. பாக்கலாம் அடுத்த மொறெ. எப்பிடியும் இஞ்ஞ வந்துத்தானே ஆவணும். ரண்டு வழக்கு இருக்குல்லா. அப்ப அவனுங்கள வம்புக்கு இழுத்து ஒரு மெரட்டி மெரட்டித்தாம் விடுவேம்!"ன்னாரு கழுவுற மீனுல்ல நழுவுற மீனா கழண்டதையெல்லாம் அடுத்த மொறை அமுக்கிப் பிடிச்சி நசுக்கிப்புடுவேம்ங்றாப்புல.

            இப்போ சுப்பு வாத்தியாருக்கு பாலாமணியோ, கங்காதரன் வக்கீலோ மெரட்டுனாப்புல பரிகாசம் பண்ணிட்டுப் போறது பெரிசா தெரியல. மவளுக்காக வெச்ச வக்கீலு அடுத்ததா பணத்துக்காகச் சொல்லிட்டுப் போனதுதாம் பெரிசா தெரிஞ்சிச்சு. அந்தப் பணத்தெ என்னிக்குக் கொடுக்குறது, எப்பிடிக் கொடுக்குறதுன்னு புரியாம நெலகொழைஞ்சாப்புல ஆயிருந்தாரு. மவ்வேன் விகடு இன்னிக்கு கோர்ட்டுக்கு வர்றாப்புலத்தாம் இருந்துச்சு. திடுதிப்புன்னு அவ்வேம் பள்ளியோடத்துக்கு ஸ்டேட் லெவல் விசிட்டுன்னு தகவல் வந்ததால லீவ எடுத்திருந்தும் அன்னிக்கு லீவ எடுக்க முடியாம பள்ளியோடம் போறாப்புல ஆயிடுச்சு.

            மவ்வேம் வேற பள்ளியோடத்துல விசிட் பண்ணுற அதிகாரிங்களுக்கு எடையில இருக்குறதால சுப்பு வாத்தியாரு இந்த விசயத்தெ ஒடனே போன் பண்ணி விகடுகிட்டெ சொல்லல. அவரு யோஜனெ மேல யோஜனெ பண்ணிக்கிட்டு மெதுவாவே இந்த விசயத்தப் பத்திச் சொல்லிக்குவோம்ன்னு அதெ விட்டுட்டு கோவிந்து, மகேந்திரன், பெத்தநாயகத்தோட கூட இருந்த ஆளுக அத்தனெ பேத்தையும் அழைச்சிக்கிட்டு ஓட்டல் ஆரியாஸ்ல மத்தியானச் சாப்பாட்ட பண்ணாரு. அவுங்க வந்ததுக்கு ரொம்ப நன்றியச் சொல்லி கோவிந்து, மகேந்திரன், பெத்தநாயகத்துக்கு மட்டும் ஆளுக்கு அரை கிலோ அளவுக்கு இனிப்பையும், காரத்தையும் வாங்கிக் கையில கொடுத்து அனுப்பி வெச்சாரு. அவுங்கள அனுப்பி வெச்சிட்டு பையில இருந்த காசிய எடுத்து எண்ணிப் பாத்தாரு. கால்சட்டெ, கைப்பையில இருந்த காசின்னு அங்கயிங்க இருந்த காசிகளையும் ஒண்ணும் வுடாம தொடைச்சி எடுத்து மொத்தமா எம்மாம் இருக்குன்னு சின்னப்புள்ளைங்க சில்லரைய எண்ணிப் பாக்குறாப்புல எண்ணிப் பாத்தாரு. எரநூத்துக்கும் கம்மியாத்தாம் பணம் இருந்துச்சு. இந்தப் பணத்தெ‍ வெச்சிக்கிட்டு எப்பிடி வர்றப் போற நாளே ஓட்டுறதுங்ற கவலெ அவர்ர அரிக்க ஆரம்பிச்சிடுச்சு. உள்ளூர்ன்னாலும் யாருகிட்டயாவது போயி கடன ஒடன வாங்கலாம். தாராசுரத்துல யார்ரப் பாத்து கடனெ வாங்குறது? அதுவும் குடி போயி ஒரு மாசம் கூட ஆவதப்போ, யாரு இவர்ர நம்பிக் காசியக் கொடுப்பாங்கன்னு பல வெதமா யோசிச்சிக்கிட்டெ மவளெ அழைச்சிக்கிட்டுப் பஸ்ல ஏறுனாரு.

            சாயுங்காலமா நாலரை மணிக்கு மேல விகடு சுப்பு வாத்தியாருக்குப் போன அடிச்சி கோர்ட்டுல நடந்ததெப் பத்தின தகவலக் கேட்டாம். சுப்பு வாத்தியாரு ஒடனே பள்ளியோடத்துல நடந்த விசிட்டப் பத்திக் கேட்டாரு. "அதெல்லாம் முடிஞ்சிடுப்பா. ஜேடி விசிட்ப்பா. கொஞ்சம் கெடுபிடித்தாம். இருந்தாலும் பள்ளியோடம் பிடிச்சிப் போச்சுப்பா அவுங்களுக்கு. புள்ளீயோளும் பரவாயில்ல நல்ல வெதமா பதிலச் சொன்னதுல நாள் பூரா நம்ம பள்ளியோடத்துலயே இருந்துட்டாங்கப்பா!"ன்னாம் விகடு அங்க எல்லாம் சௌக்கியமான்னு கடுதாசி வந்ததுக்கு இங்க எல்லாம் சௌக்கியந்தாம்ன்னு பதிலுக் கடுதாசிய எழுதுறாப்புல.

            "ந்நல்லதுடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு பாரம் ஒண்ணு எறங்குனாப்புல.

            "கோர்ட்டுல குறுக்கு வெசாரணைல்லாம் எப்பிடிப்பா போச்சு?"ன்னாம் விகடு வெச்ச பொறியில எலி வந்துச் சிக்குனாச்சாங்றாப்புல.

            "கும்பகோணத்து வக்கீலு ரொம்ப மொறையா கண்ணியமாவே பண்ணிட்டாருடாம்பீ! நல்ல வெதமாவே அத்து முடிஞ்சிடுச்சு. நம்மப் பக்கத்துலயும் கேக்க வேண்டிய கேள்விக எதுவும் விடுபடல. அத்தோட அவனையும் ரொம்பவும் காயம் பண்ணாம ரொம்ப டீசன்டாவே கேட்டுப்புட்டாரு. அத்தோட அவ்வேம் பட்டாமணி வூட்டுல வாடகைக்கு இருக்குறதா தாக்கல் பண்ணிருக்கிற பத்திரங்க எல்லாம் போலியானதுங்றதெ அவ்வேம் வாயாலயே கொண்டாந்துட்டாருடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒசத்தியா வாங்கிட்டு வந்தப் பொருளுல தரத்துக்கொண்ணும் கொறைச்சலு இல்லங்றாப்புல.

            "அத்து எப்பிடிப்பா?"ன்னாம் விகடு கஞ்சப் பயெ கையிலேந்து காசிய எப்பிடிப் பிடுங்க முடியும்ங்றாப்புல.

            "அவனெ நீஞ்ஞ எஞ்ஞ இருக்குதீயேன்னு கேட்டாரு. அவ்வேம் சென்னையிலன்னாம். ஒஞ்ஞ யப்பாரு எஞ்ஞ இருக்காருன்னு கேட்டாரு. அவ்வேம் பாக்குக்கோட்டையிலன்னாம். வாரத்துல எத்தனெ நாளு சென்னையில இருப்பீயே, எத்தனெ நாளு பாக்குக்கோட்டையில இருப்பீயேன்னு கேட்டதும் அவ்வேம் திங்கக் கெழமெயிலேந்து வெள்ளிக் கெழமெ வரைக்கும் சென்னைப் பட்டணத்துலயும், சனி ஞாயித்துக் கெழமையில பாக்குக்கோட்டையில இருப்பேம்ன்னாம்! ஒடனே நம்ம வக்கீலு பிடிச்சிக்கிட்டாரு, யப்போ திட்டையில பட்டாமணிங்றவரு வூட்டெ வாடவைக்குப் பிடிச்சிருக்கிறதா பத்திரம் தாக்கல் பண்ணிருக்கீயளே, அந்த வாடவெ வூட்டுல எப்ப இருப்பீயேன்னு கேட்டதும் பயெ திருதிருன்னு முழிச்சாம். அதெ சொல்லி அத்தெ பொய்யானதுங்றதெ சொன்னாரு. ஒடனே அவ்வேம் மாசத்துல ஒரு நாளு அஞ்ஞயும் போயி இருப்பேம்ன்னாம். நம்ம வக்கீலு சென்னையில இருக்கற வூடு, பாக்குக்கோட்டையில இருக்குற வூடு எல்லாம் சொந்த வூடான்னாதும், அவ்வேம் வாடவெ வூடுன்னாம். அதுக்கு யாரு வாடவெ கொடுக்கறதுன்னு கேட்டதும் அதுக்கும் தாந்தாம் கொடுக்குறதா சொன்னாம். நம்ம வக்கீலு அதுக்கு ஒரே ஆளு மூணு எடத்துல தங்குறதுக்கு வாடவைக்கு வூட்டெ எடுத்திருப்பதாவும், அதுக்கு அவரே வாடவெ கொடுக்குறதாவும் சொல்றதெ நம்புற மாதிரிக்கி இல்லன்னும், அந்த மூணு வூடுகளும் ஒண்ணுக்கொண்ணு பல கிலோ மீட்டரு தூரத்துல இருக்கிறதால அந்த மூணு வூட்டுலயும் இருக்கணும்ன்னு நெனைச்சா அந்த மூணு வூட்டுக்கு எடையில பயணம் பண்ணி அலைஞ்சிக்கிட்டேத்தாம் இருக்க முடியுமே தவுர அந்த வூடுகள்ல இருக்க முடியாதுன்னு ரொம்ப பெரமாதாமாவே பண்ணிட்டாருடாம்பீ! எல்லாம் இருவதே நிமிஷந்தாம். அவனெ யோசிக்கவே வுடாம அடுத்தடுத்ததா கேட்டு அவனெ அவ்வேம் வாயாலயே வசமா மடக்கி வெச்சிருக்காரு. இந்த கேஸ்ஸூ இப்பிடியே போனாக்கா கூட அவ்வேம் மாட்டிப்பாம். ஆன்னா வக்கீலு இந்த கேஸ்ஸ இத்தோட முடிச்சிக்கிட்டு விவாகரத்துக்குப் போவலாம்ன்னு சொல்லிட்டாருடாம்பீ! இந்த வழக்குல நாம்ம சில குறிப்பிட்ட நிபந்தனைகளோடு சேர்ந்து வாழ்றதா சொல்லிருக்கிறதால, அவனெ விட்டு பிரிஞ்சி வர்ற நெனைக்கிற நமக்கு இத்து நல்லதில்லன்னு அவரு சொல்லிட்டாருடாம்பீ. அதால்ல இதுல பிரிஞ்சி வர்றதுக்கான விவாகரத்து வழக்கப் போடுறதுதாம் நல்லதுன்னு சொல்லிட்டாருடாம்பீ!"ன்னு சொல்லி முடிச்சாரு சுப்பு வாத்தியாரு கஞ்சப் பயலோட பெட்டின்னாலும் திருடன் கண்ணுல பட்டுட்டா அம்போத்தாம்ங்றாப்புல.

            "சரியான வக்கீலப் போட்டா இந்த வழக்கு என்னிக்கோ முடிஞ்சிருக்க வேண்டியதுப்பா! காசி கூட போனாலும் இந்த மாதிரி வக்கீல வெச்சித்தாம் வழக்க நடத்தணும்ப்பா! போதும்ப்பா. இந்த வழக்குல அவனுவோள இந்த அளவுக்கு கூண்டுல வெச்சி வெலாசுனதே போதும்ப்பா! இதெ பாக்குறப்போ கொடுத்தக் காசி ஒண்ணும் பெரிசா தெரியல!"ன்னாம் விகடு வூட்டு நாய்ய வளத்தா வூட்டுக்குத்தாம் காவலு, வேட்டை நாய வளத்தாத்தாம் பட்டிக்கும் காவலுங்றதோட வேராச ஓடுற மொசக்குட்டியையும் வெரட்டிப் பிடிக்கலாம்ங்றாப்புல.

            "அடுத்ததா வெவாகரத்து வழக்கெ போடணும்ன்னா பத்தாயிரம் காசியக் கேட்டிருக்காருடாம்பீ! அதனாலத்தாம்டாம்பீ வழக்கு முடிஞ்சியும் நாம்ம ஒமக்குப் போன பண்ணல. நீ வேற பள்ளியோடம் விசிட்டுல இருக்குறதா சொன்னீயா. எதெயும் சொல்ல வேணாம்ன்னு இருந்துட்டேம். நாஞ்ஞ வழக்கு சீக்கிரமா முடிஞ்சி மத்தியானச் சாப்பாட்டையும் முடிச்சிக்கிட்டு, மூணரை மணிக்கெல்லாம் வூடு வந்துச் சேந்துட்டோம்டாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு அடங்கா பசியில இருக்குறவனுக்குத் தட்டை ஒடைச்சு தின்னாலும் பசி ஆறாதுங்றாப்புல.

            "அதுக்கென்னப்பா பத்தாயிரந்தானே! பழைய வக்கீல்கிட்டெ கொடுத்ததெப் போல மாசத்துக்கு அய்யாயிரம் அய்யாயிரமா கொடுத்துப்புடுவோமான்னு கேட்டுப் பாப்பேம். அதுக்கு சம்மதம் சொன்னா அப்பிடியே கொடுப்பேம். ஒரே தவணையாத்தாம் கொடுக்கணும்ன்னா அப்பிடியே வேணும்ன்னாலும் கொடுத்துப்புடுவேம். எவ்ளோ சிலவெ பண்ணியாச்சு. பத்தாயிரத்துலயா கொறைஞ்சிப் போயிடப் போறேம்?"ன்னாம் விகடு தவணை தவணையா தவலையில தண்ணிய பிடிச்சு எரியுற நெருப்ப அணைச்சிப்புடலாம்ங்றாப்புல.

            "அத்தில்லடாம்பீ! அடுத்த வாரத்துல வேற ரண்டு நாளு திருவாரூரு கோர்ட்டுக்கு வாரணும்ன்னு சொல்லிருக்காங்கடாம்பீ! கையில கொடுக்குறதுக்கு நம்மகிட்டெ காசியே யில்ல. கெளம்புறப்போ வக்கீலு வேற டிரைவரக்கு ஆயிரத்தெ கொடுங்கன்னு சொன்னதுல அதெ கொடுத்துப்புட்டுச் சிலவெல்லாம் முடிஞ்சிப் பாத்தா கையில எரநூத்துக்குக் கம்மியாத்தாம்டாம்பீ இருக்கு!"ன்னாரு சுப்பு வாத்தியாரு ஒழுவுற பானையில தண்ணியெடுத்தா ஓட்டாஞ்சில்லு அளவுக்குத்தாம் தண்ணி தங்கும்ங்றாப்புல.

            "நீஞ்ஞ ஒண்ணும் கவலெப்பட வாணாம்ப்பா! வர்ற வாரத்துல வர்றப்போ நாம்ம திருவாரூரு கோர்ட்டுக்கு வந்து பணத்தெ எப்பிடியாச்சும் ஏற்பாடு பண்ணித் தர்றேம்ப்பா. இதெப் பத்தி எந்த நெனைப்பும் யில்லாம நீஞ்ஞ கெளம்பி வாங்கப்பா! பாத்துக்கிடலாம்!"ன்னாம் விகடு கையில அள்ளுன தண்ணி ஒழுவுனாலும் கொஞ்சம் கொஞ்சமா கொண்டாந்து ஊத்துனா அண்டாவும் நெரம்பிடும்ங்றாப்புல.

            "இந்த மாசத்துக்குக் கொடுக்க வேண்டிய வட்டிய எல்லாத்தியும் கட்டி முடிச்சிட்டியடாம்பீ!"ன்னாரு சுப்பு வாத்தியாரு சல்லடையில அள்ளுற தண்ணி எம்மாம் தேங்கி நிக்கும்ங்றாப்புல.

            "வூட்டுல சாப்பாட்டுக்கு வழியில்லாமப் போனாலும் பரவாயில்லன்னு மொதல்ல வட்டிப் பணத்தெ கொண்டுப் போயிக் கொடுத்துட்டு வந்துத்தாம்ப்பா மறுவேல பாத்தேம்!"ன்னாம் விகடு கையி கால அலம்பாம எந்தக் காலத்துல சாப்பிட்டிருக்கேம்ங்றாப்புல.

            "பெறவெப்படிடாம்பீ இந்த மாசத்தெ ஓட்டுவே?"ன்னாரு சுப்பு வாத்தியாரு பிச்சையெடுக்குறவேம் திருவோட்டை வித்துத் தின்னுப்புட்டா பெறவெப்படி பிச்சை எடுக்குறதுங்றாப்புல.

            "ஒரு வழி தெரியாமலாப் போயிடப் போவுது? நாளைக்குப் பொழுது விடியுறப்போ எதாச்சும் நல்லது நடக்குற மாதிரித்தாம் விடியும்ப்பா!"ன்னாம் விகடு நாளைக்கு மட்டும் சூரியன் கெழக்கால உதிக்காம வடக்கால உதிச்சுப்புடும்ங்றாப்புல. அதெ அவ்வேம் சொல்றப்போ அவ்வேம் சொன்னதுலயே அவனுக்கு நம்பிக்கெ யில்லன்னாலும் அப்பங்காரரு மனச தளர வுட்டுப்புடக் கூடாதுங்ற நெனைப்புலத்தாம் அப்பிடிச் சொன்னாம். மனசளவுல எப்பிடி பணத்தெ பொரட்டுறதுங்ற கவலெ அவனுக்கும் வந்திடுச்சு. இந்த வழக்குகள நடத்துறத்துக்காவே இன்னொரு சம்பாத்தியம் சம்பாதிக்கணும் போலருக்கேன்னு நெனைச்சாம் விகடு. கடெசீயா கோவிந்து, மகேந்திரன், பெத்தநாயகம் இவுங்க எல்லாம் வந்தாங்களாங்றதெ கேட்டப்போ, சுப்பு வாத்தியாரு ரொம்ப சந்தோஷமா சொன்னாரு, "அவுங்கல்லாம் வந்து பக்கத்துல நின்னதப் பாத்துப்புட்டு அந்தப் பயெ துண்டக் காணும், துணியக் காணும்ன்னு ஓடுனதப் பாக்கணுமே நீயி!"ன்னு சுப்பு வாத்தியாரு சொன்னதெ கேட்டு, இந்த ஒரு சந்தோஷம் போதும்ன்னு நெனைச்சிக்கிட்டு மனசுல வந்த கவலெயெ அப்பிடியே மறந்தாப்புலயும், மறந்தது அப்பிடியே மறைஞ்சாப்புலயும் உணர்ந்தாம் விகடு.

சூரியன் மேக்கால மறைஞ்சாலும் நெலவோ நட்சத்திரமோ வெளிச்சத்துக்குத் தொணையா இல்லாமலா போயிடுது? எல்லா இருட்டுக்குள்ளயும் ஏதோ ஒரு வெளிச்சப்புள்ளி இருக்கத்தாம் செய்யுது!

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...